Showing posts with label உலக சினிமா. Show all posts
Showing posts with label உலக சினிமா. Show all posts

Monday, June 29, 2015

The Wayward Cloud (2005)



படம் பார்ப்பதற்கான மனநிலை என்பது என்னிடம் எப்போதும் வாய்த்திருப்பதில்லை. ஓரிரு நாட்களுக்கு முன்னர் தோன்றியபோது, எந்தத் தீர்மானங்களுமின்றிக் கணணியில் சேமித்து வைத்திருந்த படங்களில் ஒன்றை எழுந்தமானமாகத் தெரிவு செய்தேன். அது The Wayward Cloud ஆக இருந்தது.

படத்தின் ஆரம்பம் மிக நீளமான ஷொட். ஒரு கட்டத்தினுள்ளே நான்கு கொரிடோர்கள் சந்திக்கும் இடமாக இருக்கவேண்டும். இரண்டு நீண்ட கொரிடோரை பார்த்தவாறு கமெரா நிலையாக அப்படியே இருக்கிறது. சிறிது நேரத்தில் இரு புறமும் தூரத்திலிருந்து இரண்டு பெண்கள் நடந்து வருகிறார்கள். ஒருவரையொருவர் தாண்டிச் செல்கிறார்கள். மிக நீளமான இந்தக் காட்சியைப் பார்த்ததும், உடனடியாக இயக்குனர் மிஷ்கின் ஞாபகத்தில் வந்தார். தொடர்ந்து பார்க்கையில் படத்தில் காட்டப்படும் தனிமை, ஆரம்பத்திலேயே அது மனதளவில் பார்வையாளனைத் தயார்படுத்தும் உணர்வு, எனக்கு The Hole (1998)  படத்தை நினைவுபடுத்தியது. ஒரு பாடல்வேறு இடம்பெற்றிருந்தது. உடனேயே தேடிப்பார்த்தேன். எதிர்பார்த்தது போலவே அது இயக்குனர் Tsai Ming-liang இன் படம்தான்.

நாயகி வோட்டர் மெலன் பழத்துண்டுகளைச் சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாள். தொலைக்காட்சியில் வோட்டர் மெலன் பற்றிய பரிந்துரைகள் இடம்பெறுகின்றன. மினரல் தண்ணீர்ப் போத்தல்களை விட ஒரு வோட்டர் மெலன் ஜூஸ் விலைகுறைந்தது என்கிறார்கள். ஒரூ பெண் பழங்களின் அளவை வைத்துக்கொண்டு பெண்களின் குணாதிசயங்களுடன் ஒப்பிடுகிறாள். பழ விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரம், லாபம் குறித்துப் பேசுகிறார்கள். வோட்டர் மெலன் பழங்கள் சாப்பிடும் போட்டி ஒளிபரப்பப் படுகிறது. நீருக்குப் பதிலீடாக வோட்டர் மெலன் பழங்கள் உண்ணப் பரிந்துரைக்கப்படுகிறது. இதெல்லாம் எதற்காக? இன்னொரு செய்தி காட்டப்படுகிறது. அதில் தாய்வானின் நீர்வழங்கலுக்கான பிரதான நீர்நிலை வறண்டு போய்விட்டது. சில நாட்களுக்குத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்துகிறார்கள். நாயகியின் வீட்டுக் குளியலறை முழுவதும் ஏராளமான மினரல் தண்ணீப் போத்தல்கள் நிரம்பியிருக்கின்றன. நீர்க்குழாயில் சுத்தமாகத் தண்ணீர் வருவது நின்றுபோயிருக்கிறது.

நாயகி தனது சூட்கேசை திறக்க முயற்சிக்கிறாள். முடியவில்லை. சலிப்புடன் திறப்பை வீசுகிறாள். அது யன்னலூடு வெளியே விழுந்துவிடுகிறது. கீழே வருகிறாள். வீதியைச் செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சில தொழிலாளிகள். தேடுகிறாள். 'திறப்பு ஒன்றும் இங்கே இல்லை, வேலை செய்யும்போது இங்கே நிற்பது ஆபத்து' என்று சொல்கிறார்கள் அவர்கள். மறுநாள் காலை கீழே வந்து பார்க்கிறாள். இரவு செப்பனிடப்பட்ட வீதியில் தாரில் பதிந்து போயிருக்கிறது அவளது சூட்கேஸ் திறப்பு. அதை இன்னொரு திறப்பால் எடுக்க முயற்சிக்கிறாள், முடியவில்லை. அப்படியே வீதியில் நடந்து செல்கிறாள். ஒரு பையில் வெற்றுப்போத்தல்களை வைத்திருக்கிறாள். நீர் சேகரிக்க வேண்டும். வீதியின் அருகாக ஓடும் பெரியதொரு கழிவுநீர் கால்வாயில் ஏராளம் வோட்டர் மெலன் பழங்கள் மிதந்து செல்வதைக் காண்கிறாள். 

நாயகன் வீதியோரமுள்ள பூங்காவொன்றில் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனருகே வோட்டர் மெலன் பழம் ஒன்றுடன் வரும் நாயகி, அவனருகே இருக்கும் தண்ணீர்ப் போத்தலை எடுத்துப்  பழத்தைக் கழுவித் துடைக்கிறாள். போத்தலை இருந்த இடத்தில் வைத்துவிட்டுச் செல்கிறாள். சற்று நேரத்தில் மீண்டும் சென்றவழியே வருகிறாள். நாயகன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவனெதிரே இருக்கையில் அமர்ந்திருக்கிறாள். அவனைத் தேடித்தான் வந்திருக்கிறாள். அவனிடம் பேச வேண்டும் என்கிற முடிவில் தூங்கும் அவனை எழுப்பலாமா வேண்டாமா என்கிற குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அப்படியே தூங்கியும் விடுகிறாள்.

தூக்கத்திலிருந்து எழும் நாயகன் அவளைப் பார்க்கிறான். அவளும் விழித்துக் கொள்கிறாள். சற்றுக் கண்களைச் சுருக்கிப் பார்த்துவிட்டு அவள் பேச ஆரம்பிக்கட்டுமென்று  காத்திருக்கிறான்.  இருவரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள். அவனுக்கும் பார்த்த பரிச்சயம் இருக்கிறது. இதுவரை பேசிக்கொண்டதில்லை. அவள் ஆரம்பிக்கிறாள், "நீ இன்னும் கைக்கடிகாரங்கள் விற்கிறாயா?". ஆக, அவனைப்பற்றி அவளுக்கு மேலதிகமாக இன்னொரு விடயமும் தெரிந்திருக்கிறது. சிறுபுன்னகையுடன் இல்லை என்பதாய்த் தலையசைக்கிறான். வேறெதுவும் சொல்லவில்லை. அவன் ஒரு தொழில்முறை நீலப்படநடிகனாக இருக்கிறான். அவனது வேலைநேரம் இரவு. பகலில் தூக்கமும் தனிமையுமாகப் பொழுதைக் கழிப்பவன். நாயகிக்கு அவன்மீது அந்தச் சந்திப்பிலேயே காதல் வந்துவிட்டது எனச் சொல்கிறது தொடர்ந்து வரும் பாடல். 

நாயகன் தாரில் பதிந்து கிடக்கும் அவளது சூட்கேஸ் திறப்பைக் கிளறியெடுத்துக் கொடுக்கிறான். அவளது வீட்டில் சூட்கேசைத் திறக்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டிருக்க, நாயகி, வோட்டர் மெலன் ஜூஸ் தயாரித்து வந்து கொடுக்கிறாள். அவனுக்கு வோட்டர் மெலன் ஜூஸ் இப்போது குடிக்கும் மனநிலையிலை. முந்தையநாள் இரவின் படப்பிடிப்பில் வோட்டர் மெலன் பழமொன்று பிரதான பங்கேற்றிருந்தது. அவன் மிகக் கவனமாக அவள் கவனிக்காதவண்ணம் யன்னலைத் திறந்து வெளியே கொட்டிவிட்டு அவளிடம் புன்னகையுடன் கண்ணாடிக் குடுவையைக் கொடுக்கிறான். அவள் மீண்டும் ஜூஸ் நிரப்பிக் கொண்டுவந்து கொடுக்கிறாள். அவள் எதிரிலேயே நின்று கொண்டிருப்பதால், வேறுவழியில்லாமல் குடிக்கிறான். இருவருக்கும் சேர்த்து அவன் உணவு தயாரிக்கிறான். மகிழ்ச்சியான அந்தத்தருணத்தை இருவரும் மிகவும் ரசிக்கிறார்கள். 

மின்தூக்கியில் கூடவே வந்து அவனை வழியனுப்புகிறாள். கதவு மூடிக்கொள்கிறது. தனது தளத்துக்குச் செல்லவேண்டிய எண்ணை அழுத்த மறந்து கனவு காண்பவள் போல லயித்து நிற்கிறாள். சிறிது நேரத்தில் கதவு திறக்கிறது. எதிரே நாயகன். சுய உணர்வு பெறுகிறாள். இருவரும் சிரிக்கிறார்கள். அவள் தளத்தின் எண்ணை அவனே அழுத்திவிட்டு விடைபெறுகிறான். அவள் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்குத் தயாராகவே இருக்கிறாள். தனது உடல்மொழியில் சற்று வெளிப்படுத்துகிறாள். அவன் கவனிக்கவில்லை, அல்லது தவிர்த்துவிடுகிறான். ஆயினும் அவள் மிக உற்சாகமாக ஒரு பாடலை முணுமுணுத்துகொண்டு செல்கிறாள்.    

இன்னொருமுறை இருவரும் சந்திக்கும்போது வீட்டில் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகி விடுகிறார்கள். அவள் முழுவதும் தயாராகும்போது அவன் அவள் காலைக் கட்டிக் கொண்டு தூங்கி விடுகிறான். அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அன்றைய இரவில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நாயகி, குளிர்சாதனப்  பெட்டியைத் திறந்து, அதன்முன்னே அமர்ந்து உள்ளேயிருக்கும் முழுதான வோட்டர் மெலன் பழம் ஒன்றை உணர்ச்சிப் பெருக்குடன் முத்தமிடுகிறாள். அதே நேரத்தில் இன்னோர் தளத்தில் நீலப்பட படப்பிடிப்பு முடிந்து, நடிகை தனிமையில் குளியலறையிலிருந்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறாள். அதனை மறைந்து நின்று பார்த்தபடியே நாயகனும்! 

அந்த இரவில் மூன்று பேருமே தமது உடல்வேட்கையைத் தனிமையில் தீர்த்துக் கொள்கிறார்கள். நாயகிக்கு ஆண் துணை தேவை, கிடைக்கவில்லை. தேவையான மற்றைய இருவருக்கும் துணை ஒருபிரச்சினையில்லை. மேலும் அவர்கள் இருவரும் நீண்ட உடலுறவில் ஈடுபட்டுவிட்டுத்தான் இருக்கிறார்கள். அது தொழில். அவர்களின் சொந்த உடல் சார்ந்த தேவை தீரவில்லை. ஒருவேளை அவனுக்கு பெண்ணுடல் அலுத்துப்போய் இருந்திருக்கலாம். பெண்ணுடன் உறவு கொள்வதென்பது தொழில் என்பதாகிவிட்ட மனநிலையில் அவன் வாழ்ந்துகொண்டிருக்கலாம். படப்பிடிப்பில் எப்போதும் நான்குபேர் அருகிலிருக்க இயந்திரத்தனமாய் இயங்கிமுடித்துவிட்டுத் தனிமையில் குளியலறையில் அரைகுறை அடையணிந்த பெண்களின் புகைப்படங்களடங்கிய சஞ்சிசிகைகளை வைத்துக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபடுவதுதான் அவனது சொந்தத் தேவைக்கான தீர்வாக இருக்கிறது.

நாயகியின் யாருமற்ற தனிமை அவளை மிகவும் வாட்டுகிறது. நள்ளிரவு நேரங்களில் அவளின் உலகம் வேறானதாக இருக்கிறது. வோட்டர் மெலன் பழம் ஒன்றை தனது ஆடைக்குள் வயிற்றுப் பகுதியில் குழந்தை போல வைத்துக்கொண்டு, கர்ப்பிணிப் பெண்போல தடவிக் கொடுக்கிறாள். அப்படியே பாவனை செய்கிறாள். ஆயாசமாக இடுப்புக்கு ஒரு கையைக் கொடுத்துக்கொண்டு  கொண்டு நடக்கிறாள். மாடிப்படிகளில் மிகுந்த சிரமத்துடன் மூச்சு வாங்கிக்கொண்டு, கால்களை அகட்டி வைத்து ஏறி இறங்குகிறாள். ஒருமுறை பிரசவ வலி கண்டு அப்படியே படியில் உட்கார்ந்து வழியில் முனகி குழந்தை பெறுகிறாள். அப்படியோருமுறை மாடிப்படியில் அவள் நடந்துகொண்டு வரும்போது, அங்கே நாயகன் வேலைநேரம் முடிந்து வந்து நிற்கிறான். நாயகி பார்வையில் பட்டுவிடாமல் ஒளிந்துகொள்கிறான்.

ஒருநாள் நீலப்பட நடிகை போதை மயக்கத்தில் மின்தூக்கியில் சரிந்துகிடக்கிறாள். அவளைத் தன்வீட்டுக்குக்கொண்டு வருகிறாள் நாயகி. தன்னிடமுள்ள நீலப்பட டிவிடிக்களில் அவள்நடித்த படமும் இருப்பது கண்டு டிவியில் பார்க்கிறாள். பார்ப்பவள் அதிர்ச்சியடைகிறாள். அங்கே நாயகனைப் பார்த்துவிடுகிறாள். அவன் பற்றித்தெரிந்து கொண்டுவிடுகிறாள். படத்தயாரிப்பாளருடன் அவளும் சேர்ந்து அந்த நடியையைத் தூக்கிச் செல்கிறாள். அங்கே அவனையும் காண்கிறாள். அன்றைய படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கிறாள். இறுதிக்காட்சியில் அவரவருக்கான தீர்வைக் கண்டுகொண்டார்களா? என்பதுதான் சொல்லப்படுகிறது என நம்புகிறேன். இந்தக்காட்சி அருவருப்படையவும் செய்யலாம். படத்தில் நாயகன், நாயகிக்கிடையில் வரும் ஒரே வசனம் அவள் அவனிடம் கேட்கும், 'நீ இன்னும் கைக்கடிகாரங்கள் விற்கிறாயா?' என்பதுதான்!

நாயகியின் உலகம் முழுக்க முழுக்கத் தனிமையாலானது. அது அவள் விரும்பாத, அவளாகத் தேர்ந்தெடுக்காத அப்படியே அமைந்துவிட்ட, நிர்ப்பந்திக்கப்பட்ட தனிமையாக இருக்கலாம். அது வாழ்வில் வெறுமையையும், சில சமயங்களில் ஒருவித இனம்புரியாத பயத்தையும் கொடுத்துவிடுகிறது. அப்படியே அது ஓர் அதீத எச்சரிக்கையுணர்வையும் எப்போதும் கொடுத்துக்கொண்டிருக்கும். ஒருமுறை டிவிடி லைப்ரரியில் படங்கள் தெரிந்தெடுக்கிறாள். அங்கே அநேகமானவை நீலப்படங்கள். அங்கே வரும் ஒருமனிதனைக் கண்டு சற்றுப் பதற்றமடைந்துவிடுகிறாள். தன் வீட்டுக்கு திரும்ப லிஃப்ட்டுக்குள் நிற்கிறாள். கதவு மூடும் சமயத்தில் திடீரென ஒரு கை கதவைத் தடுக்கிறது. அதே மனிதன் இப்போது அவளுடன் லிஃப்ட்டுக்குள். அவன் அவளைப்பின்தொடர்வது போலவே படுகிறது. ஒருகணம் மிகுந்த பயம், பதற்றத்துடன் பார்க்கிறாள். தனது தளம் வந்ததும் மிக அவசரமாக வெளியேறுகிறாள். அவன் அவளைச் சட்டை செய்யவில்லை. மேலே தான் செல்ல வேண்டிய இடத்துக்குப் போகிறான். மின்தூக்கியின் கதவுகள் மறுபடி மூடிக்கொண்டதும், நாயகி திரும்ப வந்து மறைந்து நின்று கவனிக்கிறாள். அதீத எச்சரிக்கையா? அல்லது அதனுடன் கூடிய எதிர்பார்ப்பா என்பது அவளுக்கும் சரியாகப் புரியாத குழப்பத்துடன் பார்க்கிறாள்.

நாயகிக்கு இயல்பான ஒரு வாழ்க்கை வேண்டும். ஆண்துணை, குழந்தைகள் பற்றிய கனவுகள் அவளிடம் எப்போதுமுண்டு. அவளுக்கு இயல்பாக எழும் பாலியல் இச்சை நாயகனால் தீர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். அதுதான் அவள் தேவை, ஒருவகையில் வறட்சி. நாயகனுக்கு பெண்ணுடல் எப்போதும் கிடைக்கிறது. துரதிருஷ்டவசமாக அதனால் தேவை தீர்வதில்லை. வடிகாலாகவுமில்லை. அவனது வாழ்வும் யாருமற்ற தனிமையும் வெறுமையும் நிரம்பியதாய் இருக்கிறது. காதலில்லாத, காமமும் உறவும் கொடுக்கும் ஒருவகையான வறட்சி எப்போதும் அவனிடம் இருக்கிறது. அவன் எதிர்பார்க்கும் ஏதோ ஒன்று  நாயகியிடம் கிடைக்கிறது. உடல்சார்ந்த தேவையைத் தவிர்த்து, ஒரு அர்த்தபூர்வமான மகிழ்ச்சியை அவளுடன் பழகும்போது உணர்கிறான்.

இந்தப்படம் பார்ப்பதற்கான மனநிலையை ஏற்படுத்திக் கொடுத்தது இயக்குனரின் The Hole படம்தான். அதுதான் இயக்குனரின் காட்சியமைப்பைப் பொறுமையையாகப் பார்ப்பதற்கு, திரைமொழியை உள்வாங்குவதற்கு தயார்படுத்தியது. The Hole படத்தில் வருவது போலவே இதிலும் தனிமை என்பதுதான் பிரதானமாக சொல்லப்பட்டிருகிறது. ஆட்கள் அதிகமில்லாத அடுக்குமாடிக் குடியிருப்பு. எப்போதும் படம் முழுவதும் கூடவே இருக்கும் ஈரம். The Hole படம் முழுவதும் மழை பெய்துகொண்டே இருக்கும். பார்க்கும்போதும், படம் முடிந்தபின்னரும் எங்களுக்கு வெளியே மழை பெய்வது போன்ற உணர்வே இருக்கும். இந்தப்படத்தில் வறட்சி! எனினும் இதிலும் ஒரு ஈரம் பரவியிருப்பதையே உணரமுடியும். நீளமான காட்சியமைப்புகள். மிகக்குறைந்த அளவிலான வசனங்கள். இயக்குனரின் படங்களில் ஆச்சரியமளிப்பது பாடல்கள். தமிழ் சினிமா போலல்லாது கனவுப் பாடல்கள் கதாபாத்திரங்களின் மனநிலையை ஏக்கங்களைச் சொல்வது போல, படத்தின் கதையை நகர்த்துவதுபோன்ற அமைந்திருக்கும். இந்தப்படத்தில் முதலாவதாக நாயகன் பாடும் பாடலில் நிலவு, தனிமை, நிறைவேறாத கனவுகள் பற்றிய வரிகளைக்  கொண்ட பாடல் பற்றிய அவனது வாழ்க்கை பற்றிச் சொல்வதாகவே இருக்கிறது.   

வறட்சி அல்லது தாகம் இன்னொரு விதத்தில் தேவை என்றுகூடச் சொல்லலாம் - படம் ஒருவிதமான தேவைகளும் அதற்கான தீர்வுகள், பிரதியீடுகள் பற்றியே பேசுகிறது என நம்புகிறேன். நம் எப்போதும் தேவைகளுக்கான தீர்வுகளைக் கொடுக்கிறோமா அல்லது தீர்வுகளுக்கான பிரதியீடுகளை வழங்கிக் கொள்கிறோமா? என்றுகூட யோசிக்கலாம். பிரதியீடுகள் எப்போதுமே நம் தேவைகளுக்கான சரியான தீர்வாக இருப்பதில்லை. நீர், வோட்டர்மெலன் என்பவை குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நாயகியின் அந்த சூட்கேஸ்கூட அப்படியாக இருக்ககூடும். அவ்வப்போது நாயகன் திறக்க முயற்சிக்கிறான், இறுதிவரை திறக்கப்படவில்லை.

இப்படியெல்லாம் இருக்கலாம் என்றுதான் சொல்ல முடிகிறது. திட்டவட்டமாகச் சொல்ல முடியாமைக்குக் காரணம் இருக்கிறது. அதை இயக்குனரே ஒரு சந்தர்ப்பத்தில் இப்படிச் சொல்கிறார்,

"எனக்கு வசனங்களிலோ, கதை 'சொல்வதிலோ' ஆர்வமில்லை. படங்களில் தெளிவான ஒரு செய்தியைச் சொல்ல முயற்சிப்பதில்லை. ஒவ்வொரு தருணமும் உடல் மொழி, உடற்செயற்பாடுகள் அவை என்ன சொல்ல வருகின்றன என்பது பற்றியே. அவை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதவை என உணர்கிறேன். படம் என்ன சொல்ல வருகிறது என்பது முக்கியமல்ல. நீங்க என்ன உணர்கிறீர்கள் என்பதுதான் முக்கியமானது. நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்!"

(பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதியது)

Thursday, April 30, 2015

The Star Maker (1995)



சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருக்கும் நண்பன் ஒருவன் இருக்கிறான். சினிமா, டீவி சீரியல் நடிகர்கள், கலைஞர்கள் அதிகமாக நிறைந்திருக்கும் பகுதி. அவனிடம் எப்போதும் ஏராளமான கதைகள் இருக்கும். சில ஆச்சரியகரமானவை, சில அதிர்ச்சியானவை. ஆனால் பேசுவதற்கு சந்தர்ப்பம்தான் வாய்ப்பதில்லை. ஒருமுறை கொழும்புவந்தபோது பேசிக்கொண்டிருக்கையில் சொன்னான். பக்கத்து வீட்டிலிருந்த நண்பர்கள் ஒருமுறை அவனை அழைத்திருந்தார்கள். ‘இப்போது நீயொரு தயாரிப்பாளர். வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறாய். உன் தமிழில் பேசு’. இதெல்லாம் எதற்காக என்றால், நடிகையாக ஆசைப்படும் ஒரு பெண்ணை அழைத்து வருகிறார்கள். நண்பன் பழிபாவங்களுக்கு அஞ்சுபவன் என்பதால் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டான். அதனால் என்ன, இன்னொரு தயாரிப்பாளர் அங்கே வந்திருப்பார், அவ்வளவுதான்!

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அதிசயம். சிறுவர், பெரியோர், ஏழை, பணக்காரன், வர்க்க, மத பேதமின்றி எல்லோரையும் சென்றடைந்த, கவர்ந்த,  ரசிக்கப்படுகின்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பு - சினிமா! அதற்கிருக்கும் கவர்ச்சி, அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும், புகழ் பெறவேண்டும் என்ற ஆசையில் எல்லாவற்றையும் உதறிவிட்டு வந்தோர், வருவோர் எத்தனையாயிரம் பேர். 'ஹீரோ' ‘ஹீரோயின்'களாக தமது பெயரை டைட்டிலில் பார்க்க ஆசைப்பட்டு 'மற்றும் பலர்' இல் இடம் பிடித்தவர்களே இங்கு ஏராளம். அப்படியிருந்தும் அதற்கான கவர்ச்சி எப்போதும் குறைந்ததில்லை.

அப்படி வருபவர்களின் ஆசையையே மூலதனமாக்கி அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் சுரண்டுவதற்காக காத்திருக்கும் 'உப்புமா' கம்பனிகளையும், போலி ஆசாமிகளையும்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு போலி ஆசாமியைப் பற்றிய படம் தான் The star maker.

ஜோ மொரெல்லி அவன் பெயர். சிறிய ட்ரக் வண்டியொன்றில் அந்தக் கிராமத்துக்கு வருகிறான். வீதிகளில் வண்டியைச் செலுத்திக்கொண்டே ஒலிபெருக்கியில் பேசுகிறான். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயோதிபர் அனைவருக்கும் வேறுபாடின்றிய அழைப்பு அது. அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக்கும் அருமையான வாய்ப்பு என்கிறான். ரோமிலிருக்கும் universal studios என்கிற சினிமா கம்பனி ஊடாக வருவதாகக்கூறி, அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறான். சினிமாவில் புதுமுக நடிகர்களுக்கான தேர்வு அது! 

கிராமத்தில் கூடாரமடித்துத் தங்கிக் கொள்கிறான். காமெரா உள்ளிட்ட ஒளிப்பதிவு சாதனங்களுடன் ஊர் ஊராகச் சென்று தான் சினிமாவில் நடிப்பதற்கு புது முகங்களை தேர்வு செய்வது அவன் வேலை என்றும், இன்று யாரென்றே தெரியாமலிருக்கும் நீங்கள், தேர்வு செய்யப்படும் உங்களிலொருவர் நாளை உலகம் முழுவதும் அறிந்த புகழ்பெற்ற நடிகர்களாகி விடலாம் என அறிவிக்கிறான். மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஆர்வமுடையவர்கள் அதற்கான கட்டணம் 1500 lire  செலுத்தி தேர்வில் கலந்து கொள்ளலாம் எனக்கூறுகிறான். தவிர, தான் சந்திக்கும் ஒவ்வொருவரையும் உற்றுப்பார்த்து, 'அருமையான முகம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது' என சபலத்தை உண்டுபண்ணிவிடுகிறான். அன்று அந்தக் கிராமம் முழுவதும் எல்லா வீடுகளிலும் இதுபற்றிய பேச்சாகவேயிருக்கிறது. 

மறுநாள் அவன் தங்கியிருக்குமிடத்தில் குழுமி நிற்கும் மக்களில் ஒவ்வொருவராக அழைத்து வசனம் பேச வைத்து, சற்றே மேக்கப் சரிசெய்து கூடாரத்தினுள் அழைத்துப் பேசவைத்து ஒளிப்பதிவு செய்கிறான். என்ன வசனம் பேசுவது என்கிற குழப்பத்தைத் தவிர்க்க ஆண்களுக்கு நீலநிறத்திலும், பெண்களுக்கு ரோஸ் நிறத்திலும் வசனம் அச்சிட்ட சிறு தாள்களைக் கொடுக்கிறான். கிராமம் முழுவதும் அந்த தாள்களைக் கையில் வைத்துக்கொண்டு வசனத்தை மனப்பாடம் செய்து, ஏற்ற இறக்கங்களுடன் பேசிக்கொண்டே அலைகிறார்கள்.

ஒளிப்பதிவு முடிந்ததும் பணத்தைப் பெற்றுக் கொண்டு, 'நான் எந்த நம்பிக்கையும் கொடுக்க முடியாது. எனது வேலை ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து, தயாரிப்பர்களிடம் கொடுப்பது மட்டுமே. இந்தப்பணம் படப்பிடிப்பு செலவுக்கானது. நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் ரோமில் இருந்து உங்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கான அழைப்பு வரும்' என்கிறான். முடிந்தளவு ஊரிலுள்ள எல்லாரையும் பங்கெடுக்க வைத்து, பணம் சம்பாதித்தபின் அங்கிருந்து வெளியேறி, இன்னொரு ஊர், புதிய ' புதுமுகங்கள்'.

பெயாதாவுக்கு பெற்றோர், உறவினர்கள் என்று யாருமில்லை. யார் வீட்டிலாவது சிறு வேலைகள் செய்து சம்பாதித்து வாழ்கிறாள். ஊரிலுள்ள கன்னியாஸ்திரி மடத்தில் தங்கியிருக்கிறாள். அவள் கிராமத்தில் சினிமா நடிகர்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்புக் கேட்கிறது. எப்படியாவது கலந்துகொண்டு நடிகையாகிவிட்டால் அவள் துன்பமெல்லாம் நீங்கிவிடும். தேர்வுக்கு வருகிறாள். அவளிடமிருப்பாது 300 lire க்கள் மட்டுமே. ஜோ அவளைத் துரத்திவிடுகிறான். குழுமி நிற்கும் ஊரவர்கள் வழக்கம்போல அவளைக் கிண்டல் செய்கிறார்கள்.

பணம் புரட்டவேண்டும் என யோசிக்கும் பெயாதா தான் வழமையாக வேலை செய்யும் ஒரு கனவான் வீட்டுக்குச் செல்கிறாள். தனது பணத்தேவையைச் சொல்கிறாள். அதற்கென ஒரு யோசனையைத் தெரிவிக்கிறார் அந்தக் கனவான். அவளது நிர்வாண உடலைப் பார்க்க அனுமதிக்கும் பட்சத்தில் அவள் கேட்கும் பணம் கிடைக்கும் என்பதுதான் அது. முதலில் மறுத்துத் திருப்பிச் செல்ல முனைகிறாள் பெயாதா. தூரத்தில் நாளைதான் கடைசிநாள் என்பதாக ஒலிபெருக்கி அறிவிப்புக் கேட்கிறது. உடனடியாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்புகிறாள்.

மீண்டும் ஜோவிடம் வருகிறாள் பெயாதா. கமெரா முன் அமர்ந்திருக்கும் அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான் ஜோ. அவளைப் பற்றிக் கேட்கிறான். அப்பாவித்தனமும், நேரிடையான பேச்சும், மன உறுதியுடனும் பேசுகிறாள் அவள். எங்கிருந்து பணம் கிடைத்தது என்பதையும் சர்வசாதாரணமாக விவரிக்கிறாள். அவள் வேலை செய்யுமிடங்களில் பணம் கொடுக்கும்போது, அவள் மார்பையும், கால்களையும் சமயங்களில் முழு உடலையும் பார்ப்பதற்கு அனுமதி கேட்பது சாதாரணமாக நிகழ்வது, அவர்களைக் கை தொடமட்டும் அனுமதிப்பதில்லை எனக்கூறுகிறாள்.

ஜோ இதுவரை சந்தித்த மனிதர்களிடமிருந்து அவளைப் பார்க்கும் பார்வை சற்றே மாறுகிறது. இறுக வாரிக்கட்டிய மிக அடர்த்தியான அவள் கூந்தலை அவிழ்த்துவிடுகிறான். புருவங்களைத் திருத்துகிறான். மீண்டும் கமெராவில் பார்க்கும்போது மிக மிக அழகானவளாகத் தெரிகிறாள் அவள். 'நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்' எனத் தனக்குள் கேட்டுக் கொள்கிறான் ஜோ. அவள் பணம் கொடுக்கும்போது தேவையில்லை என்கிறான். 'நான் பொருத்தமாக இல்லையா' எனக்கேட்கிறாள் அவள். அருமையாக இருப்பதாகக் கூறுகிறான். மீண்டும் அவள் பணம் கொடுக்க முயல, கோபத்துடன் மறுக்கிறான். கூடாரத்தைவிட்டு வெளியேறும் பெயாதாவை எல்லோரும் அதிசயமாகப் பார்க்கிறார்கள். அவள் மிக அழகாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அவள் மிகவும் அழகானவள் என்று ஊராரும் ஏன், அவளுமே உணர்ந்து கொள்கிறார்கள்.

அந்த ஊரில் தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு கிளம்புகிறான் ஜோ. வழியில் டிரக்கினுள்ளே சத்தம்வர இறங்கிப்பார்க்கிறான். உள்ளே பெயாதா திருட்டுத்தனமாகத் தன்னுடன் வருவது தெரிகிறது. அவனுடனேயே தங்கி, அவனுக்குப் பணிவிடைகள் செய்வதாகவும் தன்னை அனுமதிக்குமாறு கோருகிறாள். அதற்காக எதையும் செய்கிறேன் என்கிறாள். ரோமிலிருந்து உனக்கு அழைப்பு வரும்வரையில் காத்திருக்கச் சொல்லி அவளை மீண்டும் கிராமத்துக்குக் கொண்டுவிடுகிறான் ஜோ.

வரும் வழியில் ஜோவின் டிரக் பழுதாகி நின்றுவிடுகிறது. மிடுக்காக உடையணிந்த பெண்ணொருத்தி அவனுக்கு உதவுவதாகச் சொல்லி அழைத்துச் செல்கிறாள். அது சனநடமாட்டமற்ற பாழடைந்த நகரம். அங்கே தனியாக அமர்ந்திருக்கும் ஒருவர் இந்த நகரத்தின் இளவரசர் என்றும் அந்தப்பெண் ராணி என்றும் அறிந்துகொள்கிறான் ஜோ. அவர்களுடன் இரவு உணவு விருந்தில் கலந்துகொள்கிறான். காலையில் கண்விழிக்கும்போது அங்கே யாரும் இல்லை. ஜோவின் டிரக், அவனது பணம் உட்பட எதுவுமில்லை. முதன்முறையாக ஜோவிடமே கைவரிசையைக் காட்டிவிட்டார்கள் இருவர். சத்தமாகப் புலம்பிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வருகிறான்.

போலீஸ் மீட்டு வைத்திருக்கும் ஜோவின் காரை அவனிடம் கொடுக்கும்போது, 'அவர்களிருவரும் தேர்ந்த திருடர்கள்! உங்கள் பொருட்கள் பத்திரமாக மீட்கப்பட்டன, உங்கள் காதலியின் உதவியினால்' என்கிறது. ஜோ புரியாமல் திகைத்து நிற்கும்போது அங்கே வருகிறாள் ‘காதலி’ பெயாதா. சினிமாக்காரனுடன் சென்ற அவளை கன்னியாஸ்திரிகள் தம்மிடத்தில் தங்க அனுமதிக்காததால் ஜோவைத் தேடி வந்ததைச் சொல்கிறாள். முதலில் அவளிடத்தில் கடுமையாக நடந்துகொள்ளும் ஜோவுக்கும் இப்போது அவளிடம் காதல் வர, உறவு கொள்கிறான். இருவரும் சேர்ந்து புதிய இடத்தில் நடிகர் தேர்வுக்குத் தயார் செய்கிறார்கள்.

அங்கே திடீரென வரும் போலீஸ் அதிகாரி, ஜோ செய்த குற்றங்களைச் சத்தமாக வாசித்துக்காட்டி, அவனைக் கைது செய்து அழைத்துச் செல்கிறார். அதிர்ச்சியாகி நிற்கிறாள் பெயாதா. அவளைப்பொறுத்தவரை ஜோ நல்லவன். அவனையே முழுமையாக நம்புகிறாள். போலீஸ் எடுத்துச் செல்லும் ஜோவின் டிரக்கில் தானும் மறைந்து தொற்றிக்கொண்டு செல்கிறாள். அந்தப் போலீஸ் அதிகாரியும் ஜோவிடம் வாய்ப்புக்கேட்டு நடித்தவர்தான் என்பது அவன் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. சிறைச்சாலை செல்லும் வழியில் வேறொரு குழுவிடம் ஜோவை ஒப்படைக்கிறார். அவர்கள் சரமாரியாகத் தாக்கத்தைத் தொடங்குகிறார்கள். பெயாதா அழுதுகொண்டே ஓடிவந்து தடுக்க முயல்கிறாள். செய்வதறியாது மண்ணில் புரண்டு கதறுகிறாள். குற்றுயிராக சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்படுகிறான் ஜோ.

இரண்டு வருடத்தண்டனை முடிந்து, ஜோ சிறையிலிருந்து வெளிவருகிறான். அவனது டிரக் பின்புறம் திறந்து பார்ப்பவன் யாரோ பயன்படுத்தியது தெரிந்து காவலாளிகளிடம் வினவுகிறான். ஒரு பெண் தங்கியிருந்ததைச் சொல்கிறார்கள். பெயாதாவின் கிராமத்துக்கு வருகிறான். அவள் முன்பு தங்கியிருந்த கன்னியாஸ்திரிகள் மடம் இப்போது வாகனங்கள் திருத்துமிடமாகிவிட்டது. அநேகமாக எல்லோரும் ஜோவை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பெயாதா பற்றி யாரும் அவனிடம் எதுவும் கூற மறுக்கிறார்கள். ஒரு பெண் ரகசியமாக ஜோ அருகில் வந்து, பெயாதா மனநோய்க் காப்பகத்தில் இருப்பதாகச் சொல்கிறாள்.

மனநோயாளர் காப்பகத்தில் பெயாதா ஓட்ட வெட்டப்பட்ட தலைமுடியுடன் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கிறாள். ஜோவை அவளால் அடையாளம் காண முடியவில்லை. ஜோ இறந்துவிட்டதாகச் சொல்கிறாள்.
'அது உண்மையில்லை. நான்தான் ஜோ உன்னை ரோமிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்'. 
'நான் ரோமில் இருந்திருக்கிறேன். ஸ்விம்மிங் பூல், அமெரிக்கன் கார் என்று நான் பணக்காரியாக இருந்த பொழுது, ஜோவுடன் உலகம் முழுதும் சுற்றியிருக்கிறேன். அவர்கள் எங்களிருவரையும் பிரித்தபோது ஜோ இறந்துவிட்டான்' என்கிறாள் பெயாதா.

'ஆம் ஜோ இறந்துவிட்டான், நான் அவனது நண்பன். அவன் இறக்கும்போது உன்னை நன்றாகக் கவனித்துக்  கொள்ளச்சொன்னான். உனக்கு ஒன்று தெரியுமா? ஜோ இந்த உலகத்திலேயே உண்மையாகக் காதலித்த ஒரே பெண் நீ மட்டும்தான். நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது அதை அவன் உணரவில்லை. அவன் தாமதாகவே புரிந்துகொண்டான், துரதிருஷ்டசாலி'

‘நான் வேலை தேடிச்செல்கிறேன். கொஞ்சம் பணம் சம்பாதித்தபின் உன்னை வந்து அழைத்துச் செல்கிறேன். இருவரும் ஒன்றாகவே இனி இருப்போம். உன்னைக் கவனமாகப்  பார்த்துக் கொள்வேன்’ எனக்கூறி அவளிடம் விடைபெறுகிறான் ஜோ. கனத்த மனதுடன் புதிய மனிதனாகத் திரும்பும் ஜோ தனது ஒலிப்பதிவுக் கருவியை இயங்கச் செய்கிறான். அவன் சந்தித்த மனிதர்கள் படப்பிடிப்பின்போது பேசிய வார்த்தைகள் ஒலிக்க, அந்தக் காட்சிகள் அவன் மனத்திரையில் விரிகின்றன. இறுதியாக பெயாதாவின் காட்சிகளுடன் படம் நிறைவடைகிறது.

ஆரம்பத்தில் பெயாதாவிடம் பேசும்போதே ஜோவுக்கு அவளிடம் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது. அவள் அவனிடம் காதல் கொள்ளும்போதும் ஜோ தன்னிலையுணர்ந்து விலகிச் செல்கிறான். அவளை மட்டும் அவன் ஏமாற்ற விரும்பவில்லை. பணம் வாங்கவில்லை. இது அவன் இயல்புக்கு முற்றிலும் மாறானது. வேறு யாராக இருந்தாலும் தனது 'தொழில்தர்ம'த்தைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் ஜோ அவளிடம் மட்டுமே மனச்சாட்சிப்படி நடந்துகொள்கிறான். வழக்கமாக 'தொழில்' நிமித்தமாக தங்குமிடங்களில் வலிய வரும் பெண்களை உபயோகித்துக் கொள்ளும் அவன், பெயாதா தயாராக இருந்தும் கண்ணியமாக இருக்கிறான்.

இறுதி சில காட்சிகளைத் தவிர படம் முழுவதும் மிகவும் நகைச்சுவை இழையோடியபடியே நகர்கிறது. ஏதோ பரீட்சைக்குத் தயார் செய்வது போல் கிராமத்தின் சின்னஞ்சிறிசுகள் முதல் இன்றோ, நாளையோ எனக்காத்திருக்கும் பெரியவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் என எல்லோருமே வசனங்களை மிகுந்த சிரத்தையுடன் மனனம் செய்து, குழுவாகத் தமது நண்பர்களுடன் அமர்ந்து ஒத்திகை பார்க்கிறார்கள். கொலைகாரக் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொள்ளும்போது அவர்களுக்கும் சினிமா ஆசைகாட்டி, அவர்களிடமே 'கைவரிசை' காட்டுதல். ஓர் இறுதிச் சடங்கைப் படமெடுக்கும் காட்சி எனச் சுவாரசியங்கள் ஏராளம்.

சிறுவன் ஒருவனை அவன் தாத்தா ஜோவிடம் அழைத்து வருவார். தன் காதலியை நினைத்து சுய இன்பத்திலீடுபட்டவாறே பேசுவதுபோல நடிக்கவேண்டும். சிறுவன் தயங்க, தாத்தா கையை அசைத்துக்காட்டி, அவனுக்கு உற்சாகமூட்டுகிறார். அவன் நடிக்கும்பொது அவன் திறமைகண்டு, உணர்ச்சி வசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுகிறார் தாத்தா.

சினிமா ஒரு போதைபோல, சிறிது சபலத்தை ஏற்படுத்தியதுமே  எல்லோரையும் முழுவதும் ஆட்கொண்டுவிடுகிறது. மகளை நடிகையாக்க விரும்பும் தாய் தன்னிடம் பணம் இல்லையென்பதால் தன்னை ஜோவிடம் கொடுக்கிறாள். சிறுவயதில் தான் நடிக்க ஆசைப்பட்டதையும், தன்னை என்ன வேண்டுமானலும் செய்துகொள் மகளை நடிகையக்கிவிடு என்று புணரும்போது  இடைவிடாமல் பேசிக்கொண்டேயிருக்கிறாள்.

கமெரா முன்னால் பேசுவது பலரையும் வழக்கம்போலப் பதற்றமாக்குகிறது. அதேபோலப் பலரை முதன்முறையாக மனம்விட்டுப் பேசவைக்கிறது. மனதில் பொத்திவைத்த யாரிடமும் பகிர்ந்திராத ரகசியங்களை, மனக்குமுறல்களைக் கொட்ட வைக்கிறது. ஊரிலிருந்து ஒதுங்கி காட்டில் திரியும் ஆட்டிடையன் வானம்,  நட்சத்திரங்கள் பற்றிக் கவிதைத்தனமாகப் பேசுவது, ஊராரினால் ஒதுக்கப்பட்ட பெண் தனது கதையைச் சொல்வது, நீண்ட காலமாக வாய் பேசாதிருக்கும் இராணுவத்திலிருந்த பெரியவர் பேச ஆரம்பிப்பது என்பன  நெகிழ்வான காட்சிகள் ஏராளம். எனக்கு மிகப்பிடித்த படமான 'சினிமா பரடைசோ', மற்றும் 'மெலினா' படங்களின் இயக்குனரான Giuseppe Tornatore இயக்கத்தில் 1995 இல் வெளியான இந்த இத்தாலியப்படம் இது!

(பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதியது)

Friday, December 19, 2014

மச்சான் (2008)



ஜெர்மனியின் Bavaria நகரில் நடைபெறும் 2004 ஆம் ஆண்டுக்கான Hand Ball Tournament இல் ஜேர்மனியும் இலங்கையும் மோதிக் கொள்ளும் போட்டி ஆரம்பமாகிறது. முற்றிலும் வித்தியாசமான போட்டி அது. இலங்கை அணி புதிதாகத் திகைத்து நின்று வேடிக்கை மட்டும் பார்த்துகொண்டிருக்க, ஜெர்மனி விளையாடி வென்றுவிடுகிறது. ஏதோ சந்தேகம் தோன்ற, ஜெர்மன் போட்டி அமைப்பாளர்கள், இலங்கை ஒலிம்பிக் கமிட்டியிடம் விசாரிக்கிறார்கள். கமிட்டியின் பதில், இலங்கையில் Hand Ball டீம் என்ற ஒன்றே கிடையாது. தவிர, Hand Ball விளையாட்டுக்கென்று ஒரு கழகம் கூட நம்நாட்டில் கிடையாது'.

இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இத்தாலிய இயக்குனர் Uberto Pasolini இயக்கிய படம் சிங்களத் திரைப்படம் 'மச்சான்'

அதிகாலைப்பொழுது. ஆளரவமற்ற கொழும்பு நகரப்பகுதி. மனோஜ், ஸ்டான்லி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அருகில் கட்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் இன்னொரு நண்பன் விஜித். அவன்மூலம் கிடைத்த பகுதிநேர வேலை அது. மனோஜ் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பரிசாரகனாக வேலை பார்க்கிறான். அவனை நம்பியிருக்கும் குடும்பம், படிக்கும் தம்பிகள், தங்கைகளுக்காக மேலதிகமாக இந்த வேலை. ஸ்டான்லி வீதியில் தோடம்பழம் விற்பது தொடக்கம் கிடைத்த வேலைகளையெல்லாம் செய்கிறான். கணவனைப் பிரிந்து பிள்ளைகளுடன் வந்திருக்கும் அக்கா, வயதான இரு பாட்டிகள், பள்ளிக்குப் போகாமல் சொல்பேச்சுக் கேட்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் சின்ன வயதுத்தம்பி என்று ஏராளம் பிரச்சினைகளுடன் வாழ்பவன். மேலதிகமாக படகில் வெளிநாடு செல்வதற்காக அக்காவின் கணவர் சுரேஷிடம் பணம்பெற்று முகவரிடம் மூன்றுலட்சம் கொடுத்துவிட்டு அவருக்கு ஒழித்துத் திரிகிறான்.

காலை ஜெர்மன் தூதரகத்திற்கு செல்வதுபற்றிப் பேசுகிறார்கள். வேலைக்காக ஜெர்மனி செல்வதற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள் மனோஜ், ஸ்டான்லி. விஜித்திற்கு அந்த யோசனையில் உடன்பாடில்லை. அது சாத்தியமில்லை என்கிறான். "வெளிநாட்டவருக்கு நம் நாட்டிலிருந்து மருத்துவர்கள், தாதிகள்தான் வேண்டும். எங்களைப் போன்றவர்களல்ல" என்கிறான். மனோஜ் சொல்கிறான், "நல்ல நாடு, நல்ல மக்கள். வேலை வாய்ப்புகள் அதிகம். நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம்" என்கிறான்.

"என்ன இருந்தாலும் அங்கே நாங்கள் அங்கே இண்டாம்தரப் பிரஜைகள்தானே?" - விஜித்.
ஸ்டான்லி தன் அழுக்கான பழைய டி ஷர்ட், காற்சட்டையைக்காட்டி, "பார் இங்க மட்டும் நாங்கள் என்ன முதல் தரப் பிரஜைகளாகவா வாழ்கிறோம்?" - நண்பர்கள் மூவரும் சிரித்துக் கொள்கிறார்கள்.

ஜெர்மன் தூதரகத்தில் மனோஜும் ஸ்டான்லியும் அமர்ந்திருக்கிறார்கள். ஸ்டான்லியின் சட்டைப்பையிலிருந்த பேனா மை கசிந்து, இதற்காகவே அவன் வாங்கியிருந்த புதுச் சட்டையில் ஊறியிருப்பதைக் கவனிக்கிறார்கள். அதேநேரம் அவர்கள் பெயர் அழைக்கப்பட, அவசர அவசரமாக அங்கிருந்த ஒரு பேப்பரால் துடைத்து விடுகிறான் மனோஜ்.

அதிகாரி கேட்கிறார், "நீங்கள் அரசியல் ஜெர்மனியில் தஞ்சம் கோருகிறீர்களா?"
"இல்லை நாங்கள் உங்கள் கருணையை எதிர்பார்க்கவில்லை. அங்கு சென்று உழைக்கவே விரும்புகிறோம்"
விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. ஆயாசமாக வெளியே செல்லும்போது மனோஜ் இயலாமையுடன், ஏமாற்றமுமாக "எங்களைப் போன்றோருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துதவ மாட்டீர்களா?" என்கிறான்.
வீடு வரும் ஸ்டான்லியைப் பார்த்துவிட்டு அவன் அக்கா கேட்கிறாள், "இப்போ இருக்கிற நிலைமையில் உனக்குப் புதுச்சட்டை அவசியம்தானா?"

மாலைநேரம். கடற்கரையில் மனோஜும், ஸ்டான்லியும் அமர்ந்திருக்கிறார்கள். ஸ்டான்லிக்கு சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தேடும் மனோஜ், காற்சட்டைப் பையிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துப் போடுகிறான். அப்போது ஜெர்மன் தூதரகத்தில் ஸ்டான்லியின் சட்டை மைக்கறையைத் துடைத்த பேப்பர் இருக்கிறது. எடுத்துப் பார்க்கிறான் ஸ்டான்லி. அது ஒரு விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பு அறிவித்தல். Handball tournament 2004 - Bavaria என்றிருக்கிறது.



Handball அது என்ன விளையாட்டு? அப்படியொன்றை அவர்கள் அதுவரை கேள்விப்பட்டிருக்கவில்லை. சற்றுத் தொலைவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கும் தெரியவில்லை. புதிதாக இருக்கிறது.

ஸ்டான்லி கேட்கிறான், "நாங்கள் போலியாக ஒரு handball டீம் அமைத்து ஏன் ஜெர்மனி செல்லக் கூடாது?"
"ஆனால் எங்களுக்கு அப்படி ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாதே!". வெளிநாட்டு நண்பிகள் அதிகம் கொண்ட இன்னொரு நண்பனான பியலிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடிவு செய்கிறார்கள். அவன் மனோஜ் பணிபுரியும் ஹோட்டலிலேயே கிகிளோவாக இருப்பவன்.

ஸ்டான்லி, மனோஜ், பியல், விஜித் நால்வரும் கடற்கரையில் அமர்ந்திருக்கிறார்கள். ஸ்டான்லி சொல்கிறான், "சிம்பிள் நாங்கள் ஜெர்மன் விளையாட்டுத்துறைக்கு கடிதம் அனுப்புகிறோம். அவர்கள் அழைப்புக் கடிதம் அனுப்புவார்கள். விசா கிடைத்துவிடும்". விஜித் மட்டும் அதெல்லாம் சாத்தியமில்லை என்பதுபோல் சிரித்துக் கொண்டே மறுக்கிறான்.

சரி விளையாட்டுக் குழுவிற்கு என்ன பெயர் வைப்பது? "மட்டக்குளி எருமைகள்' (mattakkuli  Buffaloes) என்று வைக்கலாமா?" என்கிறான் ஸ்டான்லி. "இலங்கையில்தான் handball என்பதே கிடையாதே. Srilanka National Hand Ball Team என்று வைத்துவிடலாம்" மனோஜ் சொல்ல, அப்படியே முடிவாகிறது.

ஜெர்மன் விளையாட்டுத்துறையிடமிருந்து பியலுக்குத் தொலை பேசி அழைப்பு வருகிறது. சீருடையுடன், முகாமையாளர், மருத்துவர் உள்ளிட்ட 'டீம்' புகைப்படம் அனுப்புச் சொல்கிறார்கள். பரபரப்பாகிறார்கள் நண்பர்கள். ஸ்டான்லி தனது தம்பியுன் உதவியுடன் பேரம்பேசி, வீதியோர நடைபாதைக் கடையொன்றில் இலங்கை கிரிக்கட் சீருடையை ஒத்த டி ஷர்ட்டுகள் தெரிவுசெய்து வாங்குகிறான். Srilanka National Hand Ball Team எனப் பெயர் பொறித்து சீருடைகள் இப்போது தயார்.

ஸ்டான்லி தனது பணத்தேவைக்காக முகவர் றுவானிடம் சென்று தனது பணத்திலிருந்து கொஞ்சம் பெற்றுக் கொள்கிறான். வெளிநாட்டுக்குச் செல்ல முகவர்களிடம் பணம்கட்டி ஏமாந்த பலரது கதை நமக்குத் தெரிந்திருக்கும். அப்படியொரு ஏமாற்றுப் பேர்வழி முகவர்தான் றுவான். ஸ்டான்லி போலவே, அவனிடம் ஆஃகானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் பிரயாணிகள் படகில் செல்வதற்குபோ பணம்கட்டிவிட்டு அலைந்துகொண்டிருக்கிறார்கள். 'இதோ படகு வந்துகொண்டிருக்கிறது', 'வழியில் மூழ்கிவிட்டது' என்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறான். உபரியாக அறிவுரை வேறு வழங்குகிறான், 'இங்கே வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்காதீர்கள், போலீஸ் கைதுசெய்துவிடலாம்!'

மிக இரகசியமாக இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என முடிவு செய்திருந்தும், ஸ்டான்லி குழுவினர் ஜெர்மனி செல்லும் விடயம் மெல்ல வெளியே கசிந்து புதிது புதிதாக ஆட்கள் வந்து அவர்களுடன் சேர்கிறார்கள். ஸ்டான்லிக்கு வெளிநாடு செல்ல பணம் கடன் வாங்கி ஏற்பாடு செய்த, அவன் அக்காவின் கணவன் சுரேஷ் மிகவும் சிரமப்படுகிறான். 'இந்தவட்டியே எங்களைத் தின்றுவிடும்' எனக்கூறும் அவன்மனைவி மத்தியகிழக்கு நாடொன்றுக்குச் செல்ல தயாராகிறாள். சுரேஷ் அதை விரும்பவில்லையெனினும் வேறு வழியில்லை. இந்நிலையில் சுரேஷும் 'டீமில்' இணைந்து கொள்கிறான். ஜெர்மனுக்கு விண்ணப்படிவத்தை அனுப்பும்போது தபால் நிலையத்தில் சந்திக்கும் முஸ்லிம் பெண்ணொருவர் "என்ன ஸ்டான்லி ஜெர்மனிக்குக் கடிதமா?" எனக் கேட்க, ஸ்டான்லி பந்தாவாக "கடிதம் மட்டுமில்லை, ஜெர்மனிக்கே போகப் போகிறேன்" என்கிறான். அந்தப்பெண்மணி தன் கணவனிடம் இதுபற்றிக் கூறுகிறாள். அவள் கணவனும் அவர்களுடன் இணைந்துகொள்ள வருகிறார். 

"வெளியே விஷயம் தெரிகிறது ஆட்கள் அதிகரிக்கிறார்கள்" என மனோஜ் அலுத்துக் கொள்கிறான். ஒரு சிறிய மைதானத்தில் அனைவரும் கூடி நிற்கும்போது திடீரெனப் புதிதாக ஒருவன் வர, "யாரது?" பியல் சொல்கிறான் "என்னுடைய மச்சான்". "வேறு யாருக்கும் சொல்லவில்லைத்தானே" இல்லையென்கிறான். தூரத்தில் இன்னொருவன் சைக்கிளில் வருகிறான். "அது யார்?" இப்போது பியலின் மச்சான் சொல்கிறான் "அவன் என்னுடைய மச்சான்".

அப்போது, திடீரென ஒரு போலீஸ் ஜீப் அங்கே வருகிறது. 'டீமில்' சிலர் அங்கிருந்து கலைந்து ஓட முயல, யாரும் ஓடக்கூடாது என்கிறார் போலீஸ் அதிகாரி. டீம் உறுப்பினர்கள் அனைவரதும் விண்ணப்படிவங்கள் அடங்கிய ஃபைலை வாங்கிப் பார்க்கிறார். ஒவ்வொருவர் முகங்களையும் கவனித்துப் பார்க்க, 'அவ்வளவுதான் மாட்டிக் கொண்டோம்' என்ற மனநிலையில் சிலர் மறைத்து கொள்ள முனைகிறார்கள். போலீஸ் அதிகாரி நிதானமாகத் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு நிரப்பிய விண்ணப்படிவத்தை எடுக்கிறார், கூடவே வந்த கொன்ஸ்டபிளினதும். இப்போது அவர்களும் டீமில்!

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பித்துவிட்டு நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். நிராகரிக்கப்படுகிறது. ஸ்டான்லி மிகவும் சோர்வடைந்து விடுகிறான். சில நாட்களில் ஸ்டான்லியும் நண்பர்களும் சந்தித்து மது அருந்திக் கொண்டிருக்கும்போது அங்கே அவனது வெளிநாட்டு முகவர் றுவானும் இணைந்திருக்கக் காண்கிறான். மனோஜ் சொல்கிறான் "இவர் உதவியுடன் இன்னொருமுறை முயற்சி செய்யலாம்" என. முகவர் றுவான் தான் உள்ளிட்ட தனது பிரயாணிகளையும் டீமில் சேர்க்க வேண்டும் என்கிறான். இரண்டாம் முறை முயற்சிக்கிறார்கள். றுவான் தனது வெளிநாட்டுப் பிரயாணிகளிடம் சொல்கிறான், "எனக்கு இன்னும் கொஞ்சம் பணம் தரவேண்டும். படகு அல்ல விமானத்தில் உங்களை அழைத்துச் செல்கிறேன். தவிர, முதலில் உங்களுக்கு முதலில் ஸ்ரீலங்கன் பாஸ்போர்ட் தயார் செய்ய வேண்டும்". "வெளிநாட்டுக்காரரை நம்முடன் அழைத்துச் செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தாதா அவர்களுக்கு?" என்ற ஸ்டான்லியின் கேள்விக்கு, "இல்லை அவர்களுக்கு நாம் எல்லோருமே கறுப்பர்கள்தான்" என்கிறான் றுவான்.

அனுமதி மறுக்கபட்டமைக்கான காரணத்தை ஆராய்கிறார்கள். இலங்கை விளையாட்டுக் கமிட்டியின் கடிதம் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் தேவை, முக்கியமாக இலச்சினைகளுடன். முகவர் றுவான் தனது அனுபவத்தின் மூலம் சரியான ஆட்களை இனங்கண்டு முக்கியமான கடிதங்கள், அரசாங்க இலச்சினைகளை பிரதியெடுத்து போலிகள் தயாரித்து இம்முறை மிகக் கச்சிதமாக திட்டமிடுகிறார்கள். இடையில் Handball விளையாடிப் பழகுவது என்றோர் திட்டமும். பந்தை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு மாதிரி விளையாடுகிறார்கள். அப்போது, முகவரின் பிரயாணிகளுடன் பிரச்சினையாகி அடிதடியாகிவிடுகிறது. றுவான் சொல்கிறான், "நாம் எதற்கு இப்படி விளையாடிப் பிரச்சினைப்பட வேண்டும்? நாம்தான் அங்கே சென்றவுடனேயே தப்பியோடி விடுவோமே?" அவன் யோசனை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இம்முறை கனகச்சிதமாகத் திட்டமிட்டு, மிகச்சரியாக ஏமாற்றியதால், விசா கிடைத்துவிடுகிறது.

நண்பர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். இறுதி நேரத்தில் மனோஜ் மனம் மாறிவிடுகிறான். குடும்பத்தைவிட்டுப் பிரிய மனமின்றி இங்கேயே தங்கிவிடுகிறான். புறப்படும் நேரம்வரை அவனை எதிர்ப்பார்த்து விமான நிலையத்தில் காத்திருக்கும் ஸ்டான்லியுடன் விஜித் இணைந்துகொள்ள, டீம் ஜெர்மனிக்குச் செல்கிறது. குடிவரவு அதிகாரிகளின்முன் கலவரத்துடன் வரிசையில் காத்திருக்கிறார்கள். பிரச்சினையின்றி அனுமதித்தும் எல்லோரும் நிம்மதியுடன், நம்பிக்கையுடன் கடவுச்சீட்டைக் கொடுக்கிறார்கள். தனக்கான உள்நுழையும் அனுமதி கிடைத்ததும் முகவர் றுவான் குடிவரவு அதிகாரியிடம் நன்றி சொல்லும் பாணியில் சிங்களத்தில் 'Fuck You' எனக்கூற, அதிகாரியும் அமர்த்தலாக அந்த நன்றியை ஏற்றுக் கொள்கிறார்.




இலங்கை அணியை வரவேற்று அழைத்துச் செல்கிறார்கள் ஜெர்மன் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள். தனது பிரயாணிகளுடன் முகவர் றுவான் விமான நிலையத்திலிருந்தே தனியாக தப்பியோட முனையும் திட்டம் தோல்வியில் முடிந்துவிட வேறு வழியின்றி அவர்களும், டீமுடன் பிரத்தியேக பேரூந்தில் செல்கிறார்கள். 'நாளைதான் உங்களுக்கான போட்டி. இன்று ஒய்வெடுத்துச் சுற்றிப் பாருங்கள்' என்கிறார்கள். காலை உணவு உட்கொண்டதும் போலி முகவர் கையில் ரயில் டிக்கட்டுகளுடன் வருகிறார். 'ஐந்து யூரோ இப்போதே புறப்படுங்கள்' என்கிறான். சரியாக அதே நேரத்தில் உள்ளே வரும் ஏற்பாட்டாளர் ஒருவர், "சிறு மாற்றம் செய்ய நேர்ந்துவிட்டது. இன்று உங்களுக்கான போட்டி, விளையாடிவிட்டு நாளை ஓய்வெடுங்கள்" என்கிறான்.

வேறுவழியின்றி நண்பர்கள் விளையாடத் தயாராகிறார்கள். அதுவரை பார்த்தேயிராத விளையாட்டு. என்ன செய்வதென்றே தெரியாதநிலையில் தயங்கியவாறு நிற்கிறார்கள். எதுவாகினும் எதிர்கொள்ளலாம் எனச்சிலர் களத்தில் இறங்க, ஜேர்மனி 59 - 0 இல் வென்றுவிடுகிறது. ஒருநாள் கழித்து இன்னுமொரு போட்டி. இம்முறை இலங்கை அணி ஏதோ விளையாட முயற்சிக்கிறார்கள். கடுமையாகப் போராடி ஒரு கோல் போடுகிறார்கள். மிகுந்த ஆரவாரமிடுகிரார்கள். மிகக்கடினமான ஒரு விக்கெட்டை எடுத்ததுபோன்ற கிரிக்கெட் அணிபோல உற்சாகத்தில் கூச்சலிட, பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். எதிரணியினரும் சேர்ந்து இவர்களை உற்சாகப்படுத்தி கைதட்ட, அன்றைய ஆட்டம் 57-1 என்ற கணக்கில் முடிகிறது.

அன்றிரவு விடுதியில் நண்பர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்கள் ஒன்றாக இணைந்து பயணித்த அவர்கள், விடைபெற்றுக் கொள்ளும் தொனியில், இனிமேல் சந்திக்க முடியுமா? இல்லையா என்பது தெரியாமல் மகிழ்ச்சி, துயரம், புதிய நம்பிக்கை எனக் கலவையான உணர்வுகளுடன் ஒவ்வொருவரும் ஸ்டான்லிக்கு நன்றி சொல்கிறார்கள். ஸ்டான்லி எதுவும் பேசாமல் நெகிழ்ச்சியுடன் இருக்கிறான். அனைவரும் இரவு வணக்கம் சொல்லி, விடைபெற்றுத் தங்கள் அறைகளுக்குத் தூங்கச் செல்கிறார்கள். 

சிறிது நேரத்தில் அங்கே போலீஸ் வருகிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்கள் தங்கியிருக்கும் நான்கு அறைகளின் கதவுகளையும் ஒரே நேரத்தில் சடுதியாகத் திறக்கிறார்கள். அங்கே யாரும் இல்லை!

டீம் நண்பர்கள் ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நாடுகளுக்குத் தப்பிச் செல்கிறார்கள். இறுதியில் ஸ்டான்லி, சுரேஷ், விஜித், றுவான் நால்வரும் இங்கிலாந்து செல்ல முடிவெடுக்கிறார்கள். ஜெர்மானிய அரசாங்கம் 'டீம்' நண்பர்களைப் பிடிக்க ஆணை பிறப்பிக்கிறது. ஆனால், இன்றுவரை (படம் வெளியாகும்வரை) அவர்கள் யாரும் இனங்காணப்படவில்லை என்கிறது படம்.

போலீஸ் அறைக்குள் சென்றபோது, அங்கே இருந்த காகிதத்தில் எழுதியிருந்தது, 'We love Germany thanks for  everything'. ஜெர்மன் விளையாட்டுத் திட்ட ஒருங்கமைப்பாளர் நொந்துபோய்க் கூறியது, "இதுவே இறுதித் தடவையாக இருக்கும். இலங்கையிலிருந்து இனி எந்த டீமையும் அழைப்பதாகத் என்னிடம் திட்டம் இல்லை" 'அவர்கள் அழுக்கு உடைகளை அப்படியே விட்டுச் சென்றுவிட்டார்கள்' என மேலதிகமாகக் கவலை தெரிவித்திருந்தாராம். அவர்கள் ஃபிரான்ஸ் சென்றிருக்கலாம் என ஜெர்மன் தெரிவித்தது.

முதலில் படம் பார்க்க ஆரம்பிக்கையில் என்ன இது? ஒளிப்பதிவு ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது, எனத் தோன்றியது. பின்னர் யோசித்தால், அதிகாலை நேரத்தின் கொழும்பு புறக்கோட்டை, மருதானை பகுதியின் ஒப்பனையில்லாத நிறம் அதுதான். ஒரு சேரிப்பகுதியின் இயல்பான, மழைநாளின் ஈரலிப்பும், இருண்மையும் அப்படியே இயல்பாகப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவு.

கதை மாந்தர்கள் யாவரும் சேரிப்பகுதியைச் சேர்ந்தவர்கள். மிகுந்த நெருக்கடிகளுக்கிடையில் வாழும் அவர்களின் அவல வாழ்வை அப்படியே இயல்பாகச் சொல்கிறது படம். ஒவ்வொருவருக்கும் பிரச்சினை. ஆனாலும் நண்பர்கள் இணைந்திருக்கும்போது அதையெல்லாம் மறந்து அதையும் இலகுவாகவே எடுத்துக் கொள்கிறார்கள். பார்வையாளர் நாமும் அப்படியே! கொண்டாட்டமாகவே அணுக வைக்கிறது காட்சிகள் ஒவ்வொன்றும். பின்னணி இசையும் அப்படியே. சட்டவிரோதமாக அவர்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையிலும், நாங்களும் சேர்ந்து பங்கு பெறுவது போலவே உணர்கிறோம். அடிப்படையில் நம் நாட்டைவிட்டு, நல்லதோர் நாட்டிற்குச் சென்றுவிடவேண்டும் எனும் எண்ணம் நம்மையறியாமலே அடிமனதிலிருக்கிறது போலும்.

இலங்கை - ஐரோப்பியக் கூட்டுத் தயாரிப்பான இப்படத்தை இயக்கியவர் இத்தாலிய இயக்குனர் உபர்ட்டோ பசோலினி. தயாரிப்பாளர்களில் ஒருவர் பிரசன்ன விதானகே. படத்தின் உருவாக்கத்தில் அவரே அதிகம் பங்காற்றியிருப்பார் என நம்புகிறேன். படம் தயாரிப்பில் இருக்கும்போது பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக உண்மையில் பிரசன்ன விதானகேயின் படமாகவே அறிமுகமானது மச்சான். அதுவே பார்க்க வேண்டிய ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரசன்ன விதானகேயின் 'புரஹந்த களுவர' (1997) (Death on a Full Moon Day) பார்த்ததனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு.

உயிர் பிழைக்கவும், உழைக்க வேண்டியும் வேறுவழியின்றி, ஐரோப்பிய நாடொன்றுக்கோ, கனடாவுக்கோ செல்வதைக் கனவாகக் கொண்டு உயிரைப் பொருட்படுத்தாது சாகசப் பயணங்களை மேற்கொண்ட பலரின் கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். சந்தித்திருக்கிறோம். நிச்சயமாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொருவருடைய நெருங்கிய உறவினர்களிடம், நண்பர்களிடம் அப்படியொரு கதை இருக்கும். கடும் குளிரில் காடு மேடுகளில், நடந்து சென்றவர்கள்,படகுகளில்,பயணித்தவர்கள், கண்டெய்னர்களில் பதுங்கியிருந்து வெறும் கோக் மட்டும் அருந்தியவாறு நாட்களையும் எல்லையையும் கடந்தவர்கள், அந்த முயற்சியிலே அந்நிய மண்ணில் அடையாளம் இல்லாமலே தொலைந்து போனவர்கள் பலரது கதைகள் நம்மிடமுண்டு.

அவை இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.இதோ எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் யாரோ ஒருவர் தனது குடியுரிமை விண்ணப்பம் அனுமதிக்கப்படுமா நிராகரிக்கப்படுமா எனத் தவித்துக் கொண்டிருப்பார். யாரோ ஒருவர் முகவரால் ஏமாற்றப்பட்டிருக்கலாம். உயிரைப் பணயம் வைத்து ஒரு கடற்பிரயாணத்துக்குத் தயாராகியபடி ஒருவர், நடுவழியில் தவித்துக் கொண்டு ஒருவர் இருக்கக்கூடும். ஏன் இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடமும்கூட மறக்கமுடியாத ஒரு அனுபவம் இருக்கக்கூடும்.

பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதிய கட்டுரை இது!

Tuesday, April 16, 2013

The Hole (1998)



விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்ட தனிமை மிகுந்த சுதந்திர உணர்வையும், மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியது. அதுவே தனிமைப்படுத்தப்பட்டதாக, கைவிடப்பட்டதாக உணரும்போது, சுய பச்சாதாபத்தையும், இனம்புரியாத பயத்தையும் கொடுத்துவிடுகிறது.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வெறுமையாக, ஆள் நடமாட்டமின்றி இருக்கிறது. தனியாக இருக்கும் அவள், தன் வீட்டின் பின்புற பல்கனியில் நிற்கிறாள் . அயலில் ஒரு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. தொடர்ந்து ஒரு பெண்ணின் குரல் "தயவு செய்து போய்விடு எனக்கு மிகுந்த பயமாக இருக்கிறது மனிதத் தன்மையுடன் நடந்துகொள்" எனக் கெஞ்சுகிறது. சற்று நேரத்தில் அவள் வீட்டு அழைப்பு மணியும் ஒலிக்கிறது. அவளும் பயந்து, பின்னர் ஒரு முறை அவள் வெளியே வந்து பார்க்கிறாள்.  யாரும் அங்கே இல்லை. அதே நேரத்தில், இன்னொரு வீட்டின் அழைப்பு மணியை ஒரு சிறுவன் அழுத்துகிறான். உடனடியாகவே அங்கிருந்து தனது சிறிய சைக்கிளை ஒட்டிக் கொண்டு அதே மாடியிலுள்ள வேறு பகுதிக்குச் செல்கிறான். சற்று நேரத்தில் வேறொரு வீட்டின் அழைப்புமணி ஒலிக்கிறது. ஒரு சிறவனின் விளையாட்டே அவர்களுக்கு மிகுந்த பயங்கரமானதாக இருக்கிறது.

மில்லேனியம் பிறப்பதற்குச் சில தினங்கள் இருக்கின்றன. தாய்வானின் நகரப் பகுதியொன்றில் ஒரு புதுவிதமான நோய் பரவி வருகிறது. நோய் பரவி வரும் இடங்களைத் தனிமைப் படுத்தும் நடவடிக்கையாக அரசாங்கம் அங்கிருந்து மக்களை வெளியேறச் சொல்கிறது. தொடர்ந்து மழை பெய்வதால் கழிவு நீர் வடிகாலமைப்பும் சீர்குலைந்திருக்கிறது. அதனால் அங்கே நீர் வழங்கலும் இடம்பெறாது என செய்தி ஊடகங்களில் அறிவிக்கப்படுகிறது. வேறுவழியில்லை, அங்கே வாழ முடியாத சூழ்நிலையில் பெருமளவான மக்கள் வெளியேறி விடுகிறார்கள்.

ஒரு சிலர் அங்கேயே இருக்கிறார்கள். அவனும் அப்படித்தான். நகரத்தின் மார்க்கெட் தொகுதியில் பலசரக்குக் கடை வைத்திருப்பவன். அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் தனியாக வாழ்பவன். வாழ்க்கை பற்றிய பெரிதான ஈடுபாடோ, புகார்களோ இல்லாதவன்போல் அதன்போக்கில் வாழ்கிறான். முதல்நாள் இரவு சாப்பிட்ட உணவு, குடித்த பியர் எல்லாம் அப்படியே சிறிய மேசைமீது இருக்க, சோபாவில் தூங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது வரும் ஒரு பிளம்பர் அவன வீட்டில் நீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், அது கீழ் வீட்டில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுப்பதால், பரிசோதிக்க வேண்டும் என்கிறான்.

தரையைச் சோதிக்கும் அவன் நீர்க்குழாய் செல்லும் பாதைய இனங்கண்டு கொத்தி, அப்படியே விட்டுச் செல்கிறான். தரைத்தளத்தின்மீது புதிதாக ஒரு துளை. அவன் வீட்டையும், அதற்கு நேர் கீழே இருக்கும் அவள் வீட்டினையும் இணைப்பது போல அந்தத் துளை. அவள் வீடு நீர்க்கசிவினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில அறைகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. துணிகளை ஊறப்போட்டு பிழிந்து நீரை அகற்ற முனைகிறாள். ஏராளமான டாய்லெட் பேப்பர்களை வாங்கி வைத்திருக்கிறாள்.

காலையில் கடைக்குச் செல்கிறான் அவன். அந்தக் கடைத்தொகுதி முழுவதும் பூட்டப்பட்ட கடைகளுடன் காலியாக இருக்கிறது. தன கடையிலிருந்து ஒரு சிறிய தகரத்திலடைக்கப்பட்ட உணவு எடுத்துக் கொண்டு வந்து பூனை ஒன்றை அழைக்கிறான். அதற்கு சாப்பிடக்  கொடுக்கிறான். தானும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டே அருகில் அமர்ந்து, பூனையைத் தடவிக் கொடுக்கிறான். சுற்றிலும் ஏராளமான அதே போன்ற காலிக் கொள்கலன்கள் கிடக்கின்றன. அந்தப் பூனைக்கு உணவு கொடுப்பது அவனது அன்றாடக் கடமைகளில் ஒன்று.

ஒரூ பெரியவர் அவனது கடைக்குவந்து தனக்கு ஒரு பீன் சோர்ஸ் வேண்டுமெனக் கேட்கிறார். அவர் கையில் கொண்டுவந்திருந்த மாதிரியைப் பார்த்துவிட்டுச் சொல்கிறான். "இந்த பிராண்ட் இப்போது வருவதில்லை. நிறுத்தப்பட்டு விட்டது. வேறு நல்லது இருக்கு" அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்கிறார். அங்கேயே வேறு கடைகளில் கிடைக்குமா எனத் தேடி அலைகிறார். வேறு எந்தக் கடைகளும் திறந்திருக்கவில்லை. மீண்டும் சந்தைக் கட்டடத்தின் வாசலில் வந்து யோசனையுடன் நிற்கிறார். அவனும் அதைக் கவனிக்கிறான். நோயிலிருந்து பாதுகாக்க தன் ஊரை விட்டு நீங்க விருப்பமின்றி இருப்பவர் தனக்குப் பிடித்த, தன் வழக்கமான வகை உணவுப் பொருளிலிருந்து அவ்வளவு இலகுவில் மாறிவிட விரும்பவில்லை. இரவு மீண்டும் அநதப் பூனைக்கு அன்போடு உணவு கொடுத்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்புகிறான். போதையில் வரும் அவன் தன வீட்டின் வரவேற்பறையிலிருந்த அந்தத் துளையை பரிசொதிப்பவன் போல அருகில் செல்கிறான். அப்போது பார்த்து அவனுக்கு வாந்தி வருகிறது. 

இரவில் விழித்துக் கொள்ளும் அவள் எழுந்து செல்லும்போது தனது மேசையின் மீது கைவைக்க எதுவோ ஒட்டிக் கொள்கிறது. அண்ணாந்து மேலே பார்ப்பவள் அருவருப்பு, ஆத்திரம், அழுகையுமாக சுத்தம் செய்கிறாள்.  ஏற்கனவே இருந்த பிரச்சினைகளுடன் இப்போது அந்தத் துளையும் அவளுக்கு ஒரு பெரிய தொல்லையாகி விடுகிறது.

காலையில் தன் கடைக்கருகில் ஒரு மனிதன் விசித்திரமாக ஊர்ந்து கொண்டு செல்வதைப் பார்த்து, பேச முயற்சிசெய்கிறான். அவனோ சட்டை செய்யாமல் ஒரு கரப்பான் பூச்சி போல குப்பைக் குவியல், இருட்டான இடம் தேடி ஊர்ந்துகொண்டே செல்கிறான். பின்பு சிலரின் உதவியுடன் அவனை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்கின்றனர். இந்த நேரத்தில் தன் மேல்வீட்டுக்காரனைச் சந்திக்க வந்த அவளும் பார்த்து அதிர்ச்சியடைகிறாள். ஊர்ந்து சென்ற மனிதன் அந்த விசித்திர நோயால் பீடிக்கப்பட்டவன்.

அதுவரை அவர்கள் சந்தித்துக் கொண்டதில்லை. ஒருவரையொருவர் பொருட்படுத்தியதில்லை.
அவள் கேட்கிறாள்,"இன்று மதியம் இரண்டு மணிக்கு வீட்டில் இருப்பாயா? பிளம்பர் வருவான்"
"இருக்கக் கூடும்"
"நீ கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதனைத் திருத்த முடியாமலே போய்விடும்"

அன்றிரவு இனந்தெரியாத அந்த தொற்றுநோய் பற்றிய அறிவுறுத்தலைக் கேட்கிறாள். 'தாய்வான் வைரஸ்' எனப் பெயரிட்டு அழைக்கிறார்கள். கரப்பான் பூச்சி மூலம் பரவலாம் எனச் சந்தேகிக்கிறார்கள். ஆரம்பத்தில் காய்ச்சல் போன்று இருக்கும். பின்னர் வெளிச்சத்தைக் கண்டு பயப்படுவார்கள்.  பூச்சிகள் போலவே ஊர்ந்து கொண்டு இருளான இடம் தேடி ஒளிந்துகொள்வார்கள் எனச் சொல்லப்பட்டுகிறது. அச்சம் கொள்ளும் அவள் கரப்பான் பூச்சிகளை ஒழிக்க, ஏராளமாக ஸ்பிரே அடிக்கிறாள். வீடு முழுதும் மருந்து பரவி துளை வழியாக அவன் வீட்டிற்குள்ளும். இருவரும் உளே இருக்க முடியாமல் கதவு யன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு, வெளியே பல்கனியில் நிற்கிறார்கள். மௌனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.

தனிமையிலுள்ள இருவரையும் அந்தத்துளை ஏதோ ஒருவகையில் நெருங்கச் செய்கிறது. அவன் துளையைச் சிறிது சிறிதாகப் பெருப்பிக்கிறான். அடிக்கடி துளை வழியாக அவளைப் பார்க்கிறான். அவளுக்கும் அது தெரிந்தே இருக்கிறது. முதலில் தொல்லையாக நினைப்பவள் பின்னர் கண்டுகொள்வதில்லை. ஓர் ஆறுதலைக் கூடக் கொடுத்திருக்கலாம். தான் தனித்துவிடப்படவில்லை என்ற உணர்வையும்,.பாதுகாப்பையும் கொடுத்திருக்கலாம்.

ஓரிரவில்,அவள் இடைவிடாது தும்மிக் கொண்டு மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு தூங்குகிறாள். நள்ளிரவில் திடீரென விழித்துக் கொள்பவள் படுக்கையறைக்குள் தண்ணீர் வந்துவிட்டுப்பதைப் பார்த்து அழுகிறாள். அடுத்த காட்சியில் வரவேற்பறையில் ஏராளமான குவிந்து கிடக்கும் துணிகள், பேப்பர்களுக்கிடையே அவள் வேகமாக ஊர்ந்து சென்று ஒளிந்து கொள்வது அதிர வைக்கும். இதனை மேலே இருந்து பார்ப்பவன் ஆற்றாமையுடன் அழுகிறான். மூர்க்கமாக உடைத்து அந்தத் துளையைப் பெருப்பிக்கிறான்.

பெருப்பிக்கப்பட்ட துளை வழியாக காலை வெளிச்சம் பாய்கிறது. அவள் எழுந்து மூச்சு வாங்கியபடி வெளிச்சத்தில் துளையைப் பார்த்தவாறு சாய்ந்திருக்க மேலேயிருந்து நீர் பருகக் கொடுக்கிறான். நீர்க்குடுவையை வாங்குவதுபோல மீண்டும்  அவன் கையை நீட்ட, அவள் இருகைகளாலும் பற்றிக் கொள்கிறாள். அப்படியே தூக்குகிறான். இருவரும் புதிய ஆடைகளுடன் அணைத்தவாறு நிற்க, பாடலுடன் படம் நிறைவடைகிறது.

அவளுக்கு உண்மையிலேயே அந்த நோய்த்தொற்று ஏற்பட்டதா? அல்லது மிதமிஞ்சிய பயம், சுகவீனத்தாலேற்பட்ட பலவீனமான மனிநிலை காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் அவ்வாறு நடந்து கொண்டாளா? இறுதிக் காட்சியில் அவள் குறித்த நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் நடத்தைக்கு முரணாக வெளிச்சத்தை நோக்கியே வருகிறாள். அவன் தன்பால் ஈடுபாடு கொண்டிருப்பது அவளுக்குத் தெரியும். ஆனாலும் அவன் தயங்கி விலகியிருக்கிறான்., அவன் மனத்தடையை உடைத்துக்கொண்டு வெளிவருவதற்காக அப்படி நடந்துகொண்டாள் என்றே நம்புகிறேன். பாடல்களின் சில வரிகளிலும் அப்படியே வருகிறது.

படம் முழுவதும் மழை பெய்துகொண்டே இருக்கிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது உண்மையிலேயே மழை பெய்வது போன்ற உணர்வைக் கொடுத்தது. இப்படி என நண்பனும் கூறியிருந்தான்.

படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கும். மிகப் பழமையான இசை. 'ஓ கலிப்சோ' என்ற பாடல் 1959 இல் வெளிவந்த பாடல். அடுக்குமாடிக் குடியிருப்பின் எலிவேட்டர், பழைய படிக்கட்டு போன்ற இடங்களில் பாடல் படமாக்கப்பட்டிருக்கும். வெள்ளை, ஓரிரு வர்ண உடை, அதிகபட்சம் நான்கு பெண்கள், நான்கு ஆண்களை மட்டும் வைத்துக் கொண்டு பாடல் காட்சிகள் மிக அழகாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு கனவுப் பாடலை, பிரம்மாண்டமான அரங்கமைத்து நூறு பேரை ஆடவைத்து, எடுக்காமலே கொடுக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

இயக்கம் : Tsai Ming-Liang
இசை :    Grace Chang
நாடு : Taiwan
மொழி : Mandarin, Taiwanese

Thursday, October 18, 2012

In the Mood for Love


காதல் என்ற உணர்வு எப்படியெல்லாம் உருவாகிறது? அது உடல் சார்ந்த தேவைகளின் அடிப்படையாகக் கொண்டு மட்டும்தான் நிகழ வேண்டுமா? ஒருவர் மீது கொள்ளும் சிறு அக்கறையைக் காதல் என்று சொல்ல முடியாதா? அப்படியானால் அது திருமணமாகாதவர்களுக்கு இடையிலே மட்டும்தான் எழ வேண்டுமா?

Tuesday, July 17, 2012

The Willow Tree (2005)



கண்ணாடிச்சுவரில் தெரியும் தன் விம்பத்தைக் காணும் யூசுப் உற்சாகம் வடிந்து, அருகில் சென்று பார்க்கிறார். சிறுவயதில் பார்த்த தன் முகத்தை முப்பத்தெட்டு வருடங்களுக்குப் பின் பார்த்ததும், ஏமாற்றத்தில், அதிர்ச்சியில், அமைதியாகி விடுகிறார்.

Thursday, May 17, 2012

The Piano Teacher (2001)


சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறிய தவறுக்காக ஆசிரியை ஒருவரிடம் மிக மோசமாக அடிவாங்கி, கைகள் கன்றிப்போய், அடிப்பதற்குப் பயன்படுத்திய தடியில் சிறு முட்கள் போல இருந்தவை கீறி ரத்தம் கசிந்தபோது, அதிர்ச்சியாகப் பார்த்த ஆசிரியர் ஒருவர் சக ஆசிரியரிடம் கூறியது - 'பிஞ்சுக்கையை எப்பிடி அடிச்சிருக்கா பார்', 'கல்யாணம் ஆகாததுதான் அவவின்ர பிரச்சினை!'

Thursday, May 10, 2012

Chungking Express (1994)



ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத, சோகத்திலும் மெல்லிய நகைச்சுவை இழையோட இரண்டு கதைகள். இரண்டு கதைகளிலும் கதாநாயகன் போலீஸ் இளைஞர்கள் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. இருவருக்கும் காதல் தோல்வி!

Monday, April 16, 2012

A Separation (2011)


உயர் நடுத்தரவர்க்க தம்பதிகளான நடேர் (Nader),சிமின் (Simin) இருவரும் விவாகரத்து வழக்கிற்காக நீதிபதி முன் அமர்ந்திருக்கிறார்கள்.

Monday, March 5, 2012

The Artist (2011)


புகழின் உச்சியில் இருக்கும் ஒரு கலைஞன் தனது பெயர், அந்தஸ்து, பணம் எல்லாவற்றையும் இழந்து தனிமைப்படுத்தப் படும்போது அவனது உணர்வுகள் எப்படியிருக்கும்?

Tuesday, February 7, 2012

Samaritan Girl



சியோலிலுள்ள பள்ளி மாணவிகளான யோ-ஜின், ஜே-யோங் இருவரும் நெருங்கிய தோழிகள். ஐரோப்பாவைச் சுற்றிபார்க்க வேண்டுமென்ற ஆசை இருவருக்கும்! அதற்கு நிறையப் பணம் வேண்டுமே? என்ன செய்வது? உழைத்துச் சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார்கள். குறுகிய காலத்தில் பள்ளி மாணவிகளால் அப்படி என்ன தொழில் செய்து சம்பாதிக்க முடியும்? உலகின் புராதன தொழில்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்! ப்ராஸ்டிட்யூஷன்!

ஜே-யோங் பாலியல் தொழிலாளியாக, யோ-ஜின் அவளது ஏஜண்டாக செயற்பட, பணம் சேரத் தொடங்குகிறது! ஜே-யோங் தனது வாடிக்கையாளர் பற்றி, அவர்களுடனான உரையாடல்களை  விபரித்துக் கூறுவாள். இது யோ-ஜினுக்குப் பிடிப்பதில்லை. அவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்கிறாள் யோ-ஜின்!

தன்னை வசுமித்ரா என அழைக்குமாறு கூறுகிறாள் ஜே-யோங். வசுமித்ரா ஆதி காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த பெண் என்றும், அவளுடன் உறவுகொண்ட ஆண்கள் எல்லாரும் புத்தபிட்சுகளாக மாறிவிடுவார்கள் என்றும் அவளது அன்பு அவ்வாறு அவர்களை மாற்றிவிடுமாம் என்றும் கூறுகிறாள் ஜே-யோங்.



தனது வாடிக்கையாளர்களில் ஒரு இசைக்கலைஞனுடன் காதல் கொள்கிறாள் ஜே-யோங். இது தெரிந்ததும் யோ-ஜின் கோபப்படுகிறாள். அவன் யோ-ஜினிடம் வந்து டின்னருக்கு இருவரையும் அழைத்துச் செல்வதாகக் கூற, கடுமையாக திட்டி அனுப்பிவிடுகிறாள் யோ-ஜின். 

ஒருநாள் ஜே-யோங்கை ஒரு வாடிக்கையாளருடன் அனுப்பிவிட்டு அவளுக்காக அந்த மாடிக்கட்டடத்தின் கீழே யோ-ஜின் காத்திருக்கிறாள். திடீரென்று போலீஸ் சோதனைக்காக வர, ஜே-யோங் தான் இருந்த அறையின் யன்னலில் ஏறி கீழே குதிக்க ஆயத்தமாக நின்றுகொள்கிறாள். அறைக்குள் நுழைந்த போலீஸ் தங்களிடம் வரும்படியும் அவளைத் துன்புறுத்த மாட்டோமென்றும் கூற, கீழே ஜோவும் அவளைக் குதிக்க வேண்டாமென்று கூறி அலறுகிறாள்.

சிறிது நேரம் தடுமாறும் ஜே-யோங் எதையும் காதில்வாங்காமல் ஒரு புன்னகையுடன் கீழே குதித்துவிட, படுகாயமடையும் அவளை முதுகில் சுமந்து கொண்டு ஓடுகிறாள் யோ-ஜின்!


மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ஜே-யோங் அந்த இசைக்கலைஞனை ஒருமுறை பார்க்கவேண்டுமெனக் கூற யோ-ஜின் அவசரமாக அவனைத் தேடி ஓடுகிறாள். அவன் கொஞ்சமும் இரக்கமில்லாமல் யோ-ஜினைத் தன்னுடைய இச்சைக்கு இணங்கினால் மட்டுமே வருவேனெனக் கூறி, அவளுடைய சூழ்நிலையின் இயலாமையைச் சாதகமாக்கிக் கொள்கிறான். மிக நிதானமாக அவளது பொறுமையைச் சோதித்து ஒருவழியாக இருவரும் மருத்துவமனையை அடைய, அங்கே ஜே-யோங் இறந்து விட்டிருக்கிறாள்.

தோழியின் இறப்பினால் பெரும் துயரடைகிறாள் யோ-ஜின். இப்போது தன்னிடமுள்ள பணம் அவளுக்குத் தேவையில்லை. அதேபோல ஒருவித குற்றவுணர்வும் சேர்ந்து கொள்ள, ஜே-யோங்கின் பழைய நண்பர்களைத் தொடர்பு கொண்டு ஜே-யோங் போலவே அவர்களிடம் அன்பாக நடந்துகொண்டு அவரவர் பணத்தை உரியவர்களிடமே திருப்பிக் கொடுக்க முடிவு செய்கிறாள்.

இதன் மூலம் தோழியின் துயர் நிறைந்த நினைவுகளிலிருந்தும், குற்ற உணர்விலிருந்தும் விடுபட முடியுமென்று ஏதோ ஒரு அடிப்படையில் நம்பிக்கை கொள்கிறாள் யோ-ஜின்.


ஜே-யோங்கின் குறிப்புப் புத்தகத்தின் மூலம் ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு அவர்களுடன் தன்னைப் பகிர்ந்துகொண்டு, அவர்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்க, அனைவரும் ஆச்சரியப்பட்டு மறுக்க, யோ-ஜின் வற்புறுத்திக் கொடுக்கிறாள். 

ஒருநாள் தந்தை ஒரு கொலை தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணைக்குச் செல்லும் போலீஸ்காரரான யோ-ஜின்னின் தந்தை,எதிரிலுள்ள மாடிக்கட்டடத்தின் திறந்திருக்கும் யன்னல் வழியே, யோ-ஜின் ஒரு ஆணின் அணைப்பில் இருப்பதைப் பார்த்துவிடுகிறார். அதிர்ச்சியடையும் தந்தை இரவு யோ-ஜின் தூங்கியபின் அவள் வைத்திருக்கும் ஜே-யோங்கின் குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து தன மகள் பற்றிய கொடுமையான விஷயத்தைத் தெரிந்து கொள்கிறார்!

பின்பு அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின்தொடர்கிறார், தொடர்ந்து...? என்னவாகிறது?


தனக்குப்பின் தனது மகளின் வாழ்க்கைக்காக அவளுக்கு அவசியம் தேவையான விஷயங்களை கற்பிக்கும் ஒரு பொறுப்புள்ள தந்தையாக யோ-ஜினுக்கு கார் பழக்கும் காட்சி! 

வழக்கமான கிம் கி-டுக்கின் வழமையான படங்களின் கதாபாத்திரங்கள் போலல்லாமல், எல்லோரும் தேவையான அளவு பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இறுதிக்காட்சிகளில் மௌனமே கவிதைபோல!

ஒரு நடுத்தர வயது மனிதனின் செல்பேசியை தந்தை கையில் வைத்திருக்க, அது தெரியாத ஜோ வாடிக்கையாலரென நினைத்து தந்தையிடம் பேசும்போது அவர் சத்தம் செய்யாமல் அழும் மிகை நடிப்பில்லாத காட்சி!

கிம் கி-டுக்கின் படமாச்சே! ஏதாவது வில்லங்கம் வருமேன்னு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது வரும் அந்தக் கனவு, ஒருகணம் அதிரவைத்தது!

2004 இல் வெளியான இந்தப்படம் வழமைபோல சொந்தநாட்டில் தோல்வியைத் தழுவ, உலகத் திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது!

Berlin International Film Festival 2004 இல் இரண்டாம் இடமான வெள்ளிக்கரடி விருதைப் பெற்றது!

இயக்கம்: Kim Ki-duk
மொழி: Korean
நாடு: தென் கொரியா   

இயக்குனர் கிம் கி-டுக்கின் மற்றைய படங்களையும் பாருங்கள்! பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களியுங்கள்!

Spring, Summer, Fall, Winter... and Spring    



Monday, January 30, 2012

Tickets (2005)



தொலைதூரப்  பிரயாணங்கள் கொடுக்கும் அனுபங்கள் ஏராளம். பல்வேறுபட்ட மனிதர்களும், பல நேரங்களில் சுவாரஷ்யமாகவும், சில அவஸ்தையாகவும்! ஒரு ஐரோப்பிய நாடொன்றில் மேற்கொள்ளும் பிரயாணம் எப்படியிருக்கும்? நாடு, மொழி, கலாச்சாரத்தால் வேறுபட்ட பல மனிதர்களைச் சந்திப்பது நிச்சயம் புதுமையான அனுபவமாகவே....

Tuesday, December 27, 2011

The Postman (1994)



காதலிக்கும்போது பலர் கவிஞர்களாகி விடுவதைப் பார்த்திருக்கிறோம். கூடவே காதலில் உதவும் நண்பர்களையும்! ஆனால் மரியோவுக்கு? உலகம் கொண்டாடும் ஒரு பிரபல கவிஞரே காதலில் உதவும் நண்பராகவும்  வாய்த்துவிடுகிறார்.

Sunday, November 20, 2011

Water (2005)


கடந்த நூற்றாண்டில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு பெரும் கொடுமையைப் பற்றிச் சொல்கிறது படம்! இன்றும்கூட இந்தியாவின்/உலகின்  ஏதோ ஒரு மூலையில் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்துகொண்டிருக்குமோ எனத் தோன்றுகிறது!

Wednesday, September 7, 2011

The Grand Voyage


பிரான்சில் வாழும் இஸ்லாமியனான ரெடா, மத நம்பிக்கைகள் எதுவுமில்லாதவன். அப்பாவின் முன்னால் எதுவும் எதிர்த்துப்பேச முடியாமல் தலையாட்டிவிட்டு பின்னர் அம்மாவிடம் வந்து குமுறும் சராசரி டீன் ஏஜ் பையன்.

Wednesday, August 10, 2011

Don't Look Down (2008)



எலாய் - 19 வயது இளைஞன். சிமேட்ரியில் வைக்கப்படும் சிலைகள் வடிப்பவன். நீண்ட பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு நடக்கக் கூடியவன். அவ்வப்போது ஒரு bun போல மாறுவேடமணிந்து விளம்பரப் பிரசுரங்களை விநியோகிப்பவன். அவனது அப்பா இறந்தபின், அடிக்கடி அவர் தன்னோடு வந்து பேசுவதாக தன அண்ணனிடம் சொல்கிறான். மயானத்திற்கு வெளியே இறந்தவர்கள் எல்லோரும் வரிசையில் அமர்ந்திருப்பது போன்ற மாயத்தோற்றத்தையும் அவன் அடிக்கடி காண்கிறான்.

Thursday, August 4, 2011

Maria Full of Grace (2004)

நகரத்திலிருந்து நீங்கி, இயற்கை அழகு நிறைந்த மலைப்பதையூடகச் சென்று கொண்டிருக்கிறது அந்தப் பேருந்து! அதிகாலை நேரம் தூக்கக் கலக்கத்துடன் பயணிகள். வெறுமையும், மென்சோகமும் படர்ந்த முகத்துடன் ஒரு அழகிய இளம் பெண் - அவள் பெயர் மரியா!



Wednesday, May 18, 2011

Dancer in the Dark

சல்மாவின் முகத்தில் கறுப்புத் துணியைப் போர்த்தி, கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டுகிறார்கள். "என்னால் மூச்சுவிட முடியவில்லை நான் மூச்சு விடவேண்டும்" அலறுகிறாள் சல்மா. அருகில் நிற்கும் பெண் அதிகாரி முகத்துணியை அகற்ற, அது விதிமுறைகளுக்கு எதிரானது கத்துகிறான் இன்னோர் அதிகாரி. "அதற்கு அவசியமில்லை. அவள் பார்வையிழந்தவள்" என்கிறாள் அந்தப்பெண் அதிகாரி.

"ஜீன்...!" மகன் பெயரைக் கூப்பிட்டு சத்தமாக அழுகிறாள் சல்மா. கீழே அமர்ந்திருக்கும் தோழி ஓடிவந்து கட்டி அணைத்து "ஜீன் வெளியில் இருக்கிறான், இதை உன்னிடம் கொடுக்கச் சொன்னான்" அது அவனது மூக்குக் கண்ணாடி! "ஒப்பரேஷன் முடிந்துவிட்டதா? அவனால் இப்போது நன்றாகப் பார்க்க முடிகிறதா?"என மகிழ்ச்சியோடு கேட்கிறாள் சல்மா! கண்ணாடியைப் பற்றிக் கொண்டதும் அழுகை நின்று, அமைதியாகி, இப்போது அவள் சன்னமான குரலில் பாடத் தொடங்குகிறாள் சல்மா.

பாடல் திடீரென்று தடைபட்டு, பலகை உடையும் ஓசை....தரையில் விழுகிறது மூக்குக் கண்ணாடி.... ஆழ்ந்த அமைதி!


சல்மா - செக்கோஸ்லாவாக்கியாவிலிருந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து வாழ்பவள். ஈயத்தகடுகளை பாத்திரமாக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலை. பார்வைக்குறைவு காரணமாக அவள் செய்யும் தவறுகளால் அடிக்கடி இயந்திரங்கள் செயலிழக்கின்றன. அதனால் மருத்துவ சான்றிதழ் உதவியுடன் வேலையை உறுதி செய்துகொள்கிறாள்.

பார்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் சல்மா, தொழிற்சாலையில் இயங்கும் இயந்திரங்களின் ஒலிக்கேற்ப, அந்த ரிதத்தில் ஸ்டெப்ஸ் போட்டு ஆடுவதும், கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டும்  தனது மனதின் வெறுமையைப் போக்க முயற்சிக்கிறாள். சல்மாவின் மகன் ஜீன். அவனுக்கும் அதே பரம்பரை நோயான கண் பார்வைக் குறைவு இருக்கிறது! அவனுக்கு சத்திரசிகிச்சை செய்தால் குணமாகிவிடும். அதற்காக, தான் உழைக்கும் பணத்தையெல்லாம் ஒரு சாக்லேட் டப்பாவில் இட்டு, ரகசியமாக பீரோவில் வைத்து சேமித்து வருகிறாள்!

அவளிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரான போலீஸ்காரர் பில், அவரின் மனைவி இருவரும் சல்மாவிடம் அன்பாக நடந்து கொள்பவர்கள்! ஒருநாள் அவளது வீட்டிற்கு வரும் பில் தனது கவலைகளைக் கூறுகிறார். கடன் காரணமாக தனது வீட்டை வங்கியிடம் இழக்கப் போவதாய்க்கூறிக் கலங்க, அவருக்கு தைரியம் சொல்லும் சல்மா, அதுவரை மறைத்து வைத்திருக்கும் தனது ரகசியத்தைச் சொல்கிறாள். சிறிது நாளில் முற்றாகப் பார்வையை இழக்கப் போகும் தான், மகனின் சிகிச்சைக்காகவே அமெரிக்கா வந்து தங்கிருப்பதாய்க் கூற, ஆச்சரியப்படும் பில், அவளது மன உறுதியைப் பாராட்டுகிறார்.


ஒருநாள் காரில் அவளை அழைத்துவரும் பில் தனக்கு கடனாகப் பணம் தேவை எனவும், ஒருமாதத்தில் திருப்பித் தருவதாகவும் கூறுகிறான்.சல்மா தன்னிடமுள்ள பணம் ஜீனுக்கானது, அதைத்தர முடியாதென்று மறுக்கிறாள். தான் அதைக் கேட்கவில்லை எனக்கூறும் பில், தனக்கு சுட்டுக் கொண்டு தற்கொலை செய்யலாம் போலுள்ளது என்று கூற, அவருக்கு ஆறுதல் சொல்கிறாள் சல்மா.

ஒருநாள் சல்மா வீட்டிற்குவரும் பில், விடை பெற்றுச் செல்வது போல சென்று, வீட்டிற்குள் மறைந்து நின்று, அவள் பணம் மறைத்து வைப்பதைப் பார்த்து விடுகிறார். மறுநாள் சல்மா, அவளது தொடர் கவனயீனத்தைக் காரணம் காட்டி அவள் பணிபுரியும் தொழிற்சாலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்படுகிறாள். வீட்டிற்கு வரும் சல்மா, தனது சேமிப்புப் பணம் எதுவும் இல்லாத காலி டப்பாவைப் பார்த்து அதிர்ந்து, நேராக பில் வீட்டிற்கு வருகிறாள். அங்கே அவளது பணத்துடன் பில்!

சல்மா பணத்தை எடுக்க, கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் பில், தன்னைக் கொன்று விட்டு பணத்தை எடுத்துச் செல்லுமாறு கூறி சல்மா கையில் துப்பாக்கியைத் திணித்து, பணத்தைப் பறிக்கிறான்.இந்த இழுபறியில் தவறுதலாக துப்பாக்கி வெடிக்கிறது. படுகாயமடைந்த நிலையிலும் பில், பணத்தை விடாமல் பற்றிக் கொண்டு,தன்னைக் கொன்றுவிடுமாறு கெஞ்சுகிறார். மகனின் கண்பார்வை தவிர வேறு எதையுமே எப்போதும் சிந்திக்காத சல்மா, அருகிலிருந்த ஒரு மரப்பெட்டியை எடுத்து தலையில் அடிக்கிறாள்.

அங்கிருந்து நேராக நண்பர் ஒருவரின் உதவியுடன் கண் மருத்துவரிடம் தன் மகனின் சிகிச்சைக்காகப் பணம் கட்டுகிறாள். போலீசார் அவளைக் கைது செய்கிறார்கள். கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது.  



மிகவிரைவில் விதிக்கப்படும் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள். பார்வையையும் முற்றாக இழந்து, மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், ஆரம்பத்தில் சத்தமிட்டு அழும் சல்மா, மெல்ல மெல்ல அந்த சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டு, அங்கு கேட்கும் ஒலிகளை இசையாக்கி, மெல்லிய குரலில் பாடிக்கொண்டும், சிறிய ஸ்டெப்புகள் போட்டுக்கொண்டும் அதிலேயே லயித்திருக்கிறாள்.

சல்மாவின் தோழி அவளைத் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்ற, ஒரு வக்கீலை ஏற்பாடு செய்கிறாள். அதற்குச் சம்பளமாக தன் மகன் கண் சிகிச்சைக்காகச் சிறுகச் சிறுகச் சேமித்த பணம்தான் பயன்படப்போகிறது என்றதுமே சல்மா கோபமாகப் பேசுகிறாள். மறுத்து விடுகிறாள். அவள் தோழி கேட்கிறாள் "ஜீன்க்கு அவன் அம்மா உயிரோடிருப்பது முக்கியம் இல்லையா?" "எனக்கு அவன் கண்பார்வையுடன் இருப்பதுதான் முக்கியம்" என்கிறாள் சல்மா!  
சிறைக்கு தன்மகன் வந்து பார்ப்பதையும் அவள் விரும்பவில்லை. "அவன் இந்த நிலையில் என்னைப் பார்க்க வேண்டாம்"



சல்மாவின் இந்த 'கொடூரமான கொலைக்குற்றத்திற்கான'மரண தண்டனைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில்  சல்மாவுக்கெதிராக வழக்கறிஞர் முன்வைக்கும் வாதங்களில் ஒன்று, "இவள் மனிதகுலத்திற்கு சிறந்தது கம்யூனிசமே என்று கூறியிருக்கிறாள். நமது (அமெரிக்க) நாட்டின் கொள்கைகளை வெறுக்கிறாள்!"

தூக்குத் தண்டனையை நிறைவேற்றப் போகிறார்கள். மேடை இருக்கும் தளத்துக்குக் கீழே, சல்மாவின் தோழி உட்படப் பலர் அமர்ந்திருகிறார்கள். தூக்குக் கயிறை மாட்டும்முன் கறுப்புத் துணியால் முகத்தை மூட, பயத்தில் சல்மா அழுகிறாள். நிற்க முடியாமல் துவண்டு விழுந்து விடுகிறாள். ஒரு பலகையில் அவளைக் கிடத்தி நடுங்கும் கைகளைப் பிடித்து, கால்களையும் பலகையோடு பிணைத்துக்கட்டி, பின்னர் பலகையை நிமிர்த்தி அபப்டியே அவளை நிற்க வைத்து.... பின்னர் ஆரம்பத்தில் சொன்ன அந்தக்காட்சி!

- பார்த்து ஒருவாரத்திற்கு காட்சிகளின் பாதிப்பு தொடர்ந்து, பெரும் மன உளைச்சலைக் கொடுத்தது. ஏண்டா பார்த்தோம் என்று தோன்றியது!

2000 ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் இரண்டு Cannes Film Festival 2000 விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுக் கொண்டது.

இயக்கம் - Lars Von Trier
மொழி - English
நாடு - Denmark

தூக்குத்தண்டனை அவசியமா இல்லையா என்ற கேள்விகள், குற்றங்கள் குறைய கடுமையான தண்டனைகள் அவசியம் என்ற வாதங்கள் இவற்றைத் தாண்டி, குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையிலேயே நீதியான முறையில் தீர விசாரிக்கப் படுகின்றனவா? சட்டம் எந்த நாடாகிலும், எல்லாத்தரப்பு மக்களுக்கும் நியாயமாக இருக்கிறதா?

திட்டமிட்டு இன அழிப்பையோ, கொலைகளையோ செய்யும் பலர் சட்டத்தின் ஓட்டைகள், அதிகார பலங்கள் காரணமாக தப்பித்து வாழும்போது, சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாக ஆக்கப்பட்ட சல்மா போன்ற அப்பாவிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதை எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்? இதுவரை முறையான விசாரணை இன்றி செய்யாத குற்றத்திற்கு மரணதண்டனை பெற்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். பலவருட சிறைத்தண்டனையில் எத்தனைபேர்! நான் இதை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட உலகின் எங்கோ,ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் தான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை விதிக்கப்படலாம்!

டிஸ்கி: மூன்று வருஷத்துக்கு முதல் பார்த்தது! இப்போ எழுதுவற்காக 'லைட்'டா பார்க்கக்கூட முடியல! மன தைரியமுள்ளவர்கள் பார்க்கலாம். முக்கியமாக மரண தண்டைனையை ஆதரிப்பவர்கள் அவசியம் ஒருமுறை பாருங்கள்!