'கப்பலேறிப் போயாச்சு' பாடலின் ஆரம்பத்தில் உச்சஸ்தாயியில் ஒலிக்கும் புல்லாங்குழலும் தொடரும் கோரஸ் இசையும் இப்போதும்கூட புதிதாகச் சுதந்திரத்தைப் பெற்றுவிட்ட புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அடிமைத் தழையிலிருந்து விடுதலை பெறுவதை இசையூடாக உணரச் செய்த பாடல். முதன்முதலாக படம் பார்த்தபோது, அந்தப் பாடல் ஒருவித புல்லரிப்பை, சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அப்போது கொடுத்த மனவெழுச்சியை இப்போது கேட்கும்போதும் உணரமுடிகிறது.
அது ஏனோ தெரியவில்லை சுதந்திரம் என்பதை இந்திய சுதந்திரத்தோடு மட்டுமே பொருந்திப்பார்க்க முடிகிறது. முதன்முதலாக எதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் மனநிலையில், வயதில் 'இந்தியன்' படத்தைப் பார்த்ததால் அப்படியா? இந்தியன் படத்தில் மட்டுமே சுதந்திரம் பற்றிய முழுமையான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதாலும் இருக்கலாம். அப்படியானால் சுதந்திரம் என்பதையே படம் பார்த்து உணரவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோமா? சரியாகச் சொல்ல முடியவில்லை.
எப்படியோ இந்திய சுதந்திரத்துக்கும் இலங்கையின் சுதந்திரத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. சுதந்திரப் போராட்டம் என்ற ஒன்று இலங்கையில் நடந்ததாக எமக்கு யாரும் சொன்னதில்லை. இந்தியா இனித் தேவையில்லை என்று வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்தபோது, இனி இலங்கை தேவையில்லை என்பதால் விட்டுச் சென்றுவிட்டார்கள் என்பதாகவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
பள்ளி நாட்களில், வரலாற்றுப் பாடத்தில் 'இலங்கையின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள்' என்று ஏராளமானோரின் பெயர்கள் கூறபட்டிருந்தன. பரீட்சையில் புள்ளிகளைப் பெறுவதற்காகத் தேவைப்படும் என்பதைத் தவிர்த்து யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுவும் தவிர வரலாற்றுப் பாடத்தில் யாருக்கும் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏதோ கதை சொல்கிறார்கள் என்ற வகையில் கேட்டுக் கொள்வதில் தடையேதுமிருக்கவில்லை. ஆனால் அதிலிருந்து கேள்விகள் கேட்டது மட்டுமே கடுமையான உபாதையாக இருந்தது.
சுதந்திரதினம் என்பது பள்ளிவிடுமுறை நாள் என்பதைத் தவிர வேறெந்த முக்கியத்துவமும் இல்லாதிருந்தது. கடந்த சில வருடங்களில் கடுப்பேற்றும் நாள் என்பதாகவும் மாறியிருந்தது. தொண்ணூற்று எட்டாம் ஆண்டின் சுதந்திர தினம் என்று நினைவு. வவுனியாவில் இருந்தபோது அப்போது பரீட்சார்த்த ஒலிபரப்பிலிருந்தது 'வானம்பாடி' என்றொரு வானொலிச் சேவை. அதில் சுதந்திரதின விசேட உரை அல்லது வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பலர். அவர்கள் எல்லோரும் இலங்கையின் சுதந்திரத்துக்க்காகப் போராடிய தலைவர்கள், தியாகிகள் பற்றி நினைவுகூர, நன்றி தெரிவிக்கவும் தவறவில்லை.
மறைந்த அமைச்சர் ஒருவர். அவர் பேச்சைக் கேட்பதே மிகவும் சுவாரசியமானது. என் நண்பர்கள் பலரைப்போலவே எனக்கும் மிகப்பிடித்த பேச்சாளர், தமிழ் ஆளுமை. அதிரடியாகப்பேச்சை ஆரம்பித்தார். இங்கே பலரும் என்னமோ பல தியாகிகள் போராடிச் சுதந்திரத்தைப் பெற்றதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியெலாம் எதுவுமில்லை. இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தபோது துரதிருஷ்டவசமாக இலங்கைக்கும் கொடுத்துவிட்டார்கள் என்றார். அன்றிலிருந்து அவர்மேல் மேலும் மரியாதை அதிகரித்திருந்தது.
இலங்கைக்கு துரதிருஷ்டவசமாக சுதந்திரம் கிடைத்தது பற்றி எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் இருக்கவில்லை. யாழ்ப்பணத்தில் 2002 இல் சமாதான உடன்படிக்கை ஏற்படும் வரையில் ஊரடங்கு இரவு எட்டரை மணிக்கு அமல் படுத்தப்படும் காலப்பகுதி. ஆகவே, இரவு எட்டு மணிவரை நீடிக்கும் எங்கள் வீதியோர அரட்டைப் பேச்சுக்களில் சுதந்திரம் குறித்தும் பேசியிருக்கிறோம்.
சுதந்திரம் மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால்..? என்பது பற்றிய கனவு அது.
'மச்சி நாங்களெல்லாம் இங்க்லீஷ் மீடியத்திலேயே படிச்சிருப்போம். வெள்ளைக்காரன் புண்ணியத்தில இங்க்லீஷ் மீடியத்தில படிச்சுட்டு, ஓட்டை உடைசல் இங்க்லீஷ் பேசிக்கொண்டு, கணக்குப் பாடத்தில் கூட கிராமர் மிஸ்டேக் கண்டுபிடிக்கும் இந்த அப்பன்காரன்களை ஸ்டைலா இங்க்லீஷ் கதைச்சு தெறிச்சோட வைக்கலாம்'
'ஓமடா பேப்பர்ல எழுதினத அப்பிடியே வாசிக்கிறமாதிரி ஒரு இங்க்லீஷ். இதில படிச்சவங்களாம் எண்டொரு பெருமை'.
'எங்கள் எல்லாரிட்டையும் சைக்கிளுக்குப் பதிலா ஆளுக்கொரு கார் இருக்கும். இந்த நேரத்தில இப்பிடியெல்லாம் வெட்டியா நிக்காம டிஸ்கோ, நைட்கிளப் என்று பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடலாம்'
இப்படியாகப் பல 'காத்திரமான' கருத்துக்கள் முன்வைக்கப்படும்.
அதைவிட மிக முக்கியமான ஒரு விஷயமிருந்தது. எங்களுக்கெல்லாம் குறைந்தபட்சம் ஆளுக்கொரு கேர்ள் ஃபிரண்ட் இருப்பார்கள் என்பதுதான் அது.
எங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக அதையே கருதினோம். எங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட் கிடைக்காமல் போனதற்கான ஒரே காரணம் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்ததுதான் என்று தீவிரமாக நம்பிக் கொண்டிருந்த காலம் அது. இதே நம்பிக்கையுடன் பலரும் இருந்ததாகத் தெரிகிறது.

கடந்த முறை யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது சந்தித்த நண்பன் ராகுல், அடிக்கடி செல்பேசியில், 'இப்ப வெளிக்கிட்டு வந்துட்டிருக்கேன்', 'இப்ப அங்கதான் போயிட்டிருக்கேன்', 'அரைமணித்தியாலத்தில வீட்ட நிப்பன்'
- மனைவியிடம் ரன்னிங் கமெண்டரி கொடுத்துக் கொண்டிருந்தான்.
கட் செய்ததும் கொஞ்சம் ஆசுவாசமாக தலையை அசைத்தவன் (அது என் பிரமையாக இருக்கலாம்)
- மனைவியிடம் ரன்னிங் கமெண்டரி கொடுத்துக் கொண்டிருந்தான்.
கட் செய்ததும் கொஞ்சம் ஆசுவாசமாக தலையை அசைத்தவன் (அது என் பிரமையாக இருக்கலாம்)
"என்ன மச்சான் பாக்கிற?" என்றான்.
"இல்ல மச்சி அந்தக்காலத்தில இரவு பத்துமணி வரைக்கும் ரோட்ல சுத்திட்டிருந்த பயபுள்ள... அப்பல்லாம் வீட்டில ஒருவார்த்த சொல்லியிருப்பியா? இப்ப ஆறுமணிக்கே.."
"விடுறா விடுறா"
"என்ன ஆட்டமடா போட்டீங்க...இந்தச் சந்தீல ஒருமணித்தியாலம் நிப்பாங்களாம்.. அப்பிடியே வீட்ட போறமாதிரியே வெளிக்கிட்டு அந்தச் சந்தீல போய் ரெண்டு மணித்தியாலம் நிப்பாங்களாம்.. வெளீல கொட்டிட்டு சாமத்தில வீட்ட போய் பாவம் மினக்கெட்டு அம்மா சமைச்சு வச்சத சாப்பிடாமலே படுப்பாங்களாம் என்னா அராஜகம்.."
"கதைப்பீங்கடா கதைங்க"
"இல்ல மச்சி அப்பிடிப்பாத்த உன்ன, இப்ப இப்பிடி....மனசுக்கு ரொம்பக்க்க் கஷ்டமாயிருக்குடா"
"சரி சரி விடு காணும்"
"மச்சி எப்பவாவது சுதந்திரத்த இழந்துட்டம்னு ஃபீல் பண்ணியிருக்கியா?"
"அப்பிடியெல்லாம் இல்லடா... முதல்ல வெளிலருந்து யோசிச்சா அப்பிடித்தானிருக்கும் ஆனா அப்பிடியில அது ஒரு சுதந்திரம் இதுவுமொரு சுதந்திரம்தான்... நல்லாருக்கு"
"அத ஏண்டா அழுறமாதிரியே சொல்றே"
புதிதாகத் திருமணமான நண்பன் சில நாட்களோ, மாதங்களோ எதையோ பறிகொடுத்த மாதிரி கண்களுடன், சோகமாக இருப்பதுபோலத் தோன்றுவதெல்லாம் - உண்மையில் அவன் அப்படி இருக்கிறானா, இல்லை நாங்கள் அப்படி ஒரு கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்க்கிறோமா என்பது சரியாகத் தெரிவதில்லை. திருமணமானால் சுதந்திரம் அவ்வளவுதான் என்றொரு நம்பிக்கை நம்மிடையே எப்போதுமுண்டு. நினைத்த நேரத்தில் ஊர்சுற்ற முடியாது என்பதுதான் பிரதான கவலை. நண்பர்களிடமிருந்து தவிர்க்க முடியாமல் விலக நேரிடும். ஏதோ ஒரு மாட்டிக்கொண்ட உணர்வு வந்துவிடும்.
நண்பன் ஜோதி கொழும்பு வரும்போதெல்லாம் நாங்கள் தங்கியிருந்த பெரிய வீட்டில் வந்து தங்குவான். வேலைக்குப் போய்விட்டு வந்து இரவு கட்டாக்காலிகள் போல கேட்பாரின்றிச் சுற்றிக் கொண்டிருந்த எங்களை ஏதோ விசித்திர ஜந்துகளைப் பார்ப்பது போலவே பார்த்துக் கொண்டிருப்பான்.
கொழும்பில் பாதுகாப்புக் கெடுபிடிகள் நிலவிய காலகட்டம். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். பார்ட்டி, குடி, வீதியில் அரட்டை என ஒன்பது, பத்து, பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நாள் தவறாமல் 'நைட் கிளப்' சென்று அதிகாலை மூன்று மணிக்கு வீடு திரும்புவான் இன்னொருத்தன். யாருக்காவது பிறந்தநாள் வந்துவிட்டால் வீடே அமர்க்களப்படும். ஷைல் தனக்குத் தெரிந்த சாப்பாட்டுக்கடை நண்பனிடம் சொல்லி பெருமெடுப்பில் கோழிகள் பொரித்து, முட்டைகள் அவித்து (அது சைவக்கடை என்பது முக்கியமானது) இன்னும் என்னென்ன முடியுமோ அதெல்லாம் செய்வித்து, இரவு ஏழுமணிக்கு த்ரீவீலரில் கொண்டுவந்து இறக்கும்போது, சயந்தன் இன்னொரு த்ரீவீலரில் போத்தல்களைக் கொண்டுவந்திருப்பான். கௌரி, வெள்ளை, சங்கர், எனக்கெல்லாம் ஆளாளுக்கு ஒருவேலை பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும். எல்லாம் கச்சிதமாக ஆரம்பித்தால் விடிகாலைவரை திருவிழாதான்! யாரும் கேள்வி கேட்க இல்லாத கொண்டாட்டம் அது!

இதெல்லாம் அவனுக்குப் புதிதாக, பிரமிப்பாக இருந்திருக்க வேண்டும். பாவம், அவன் பள்ளியில் படித்து, உயர்கல்வி முடித்து வேலையில் சேர்ந்து முதல் மாதச் சம்பளம் வாங்கும்போதே வீட்டில் அவனுக்கு மனைவி! நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருந்தது. இதுகுறித்து ஒருநாள் மிகவும் கவலைப்பட்டு, தீவிர சோகத்தில் ஆழ்ந்து அதை மறக்க ஒரு சோகப் பார்ட்டி வேறு!
"டேய் முப்பது வயதுக்கு மேலதான் கட்டவேணும் என்னடா?"
ஒருமுறை மிகுந்த ஏக்கத்தோடு கேட்டான். என்ன சொல்வதென்று தெரியவில்லை.
வாழ்க்கையில் சுதந்திரத்தையே அனுபவிக்காத ஒரு அபலை(?) ஆணின் அத்தனை சோகமும் அவன் கண்களில் தெரிந்தது.
வாழ்க்கையில் சுதந்திரத்தையே அனுபவிக்காத ஒரு அபலை(?) ஆணின் அத்தனை சோகமும் அவன் கண்களில் தெரிந்தது.
உண்மையில் இந்த சுதந்திரம் என்பது கூட ஒரு கற்பிதமாக இருக்கலாம். அல்லது அதுவும் ஒரு நம்பிக்கைதான் நான் சுதந்திரமாக இருக்கிறேன் என உணர்வதுதான் சுதந்திரம். பத்துவருடம் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்கிற நிர்ப்பந்தம் இருக்கும்போது சுதந்திரம் பறிக்கப்பட்டதாய் உணர்வோம். ஆனால் பத்து வருடமாக ஒரேநாட்டிலேயே எங்கும் போகாமல் இருப்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை. நாம் எப்போதும் எந்தநாட்டுக்கும், ஏன் எந்தக் கிரகத்துக்கும் போகலாம், வரலாம் என்கிற மனநிலைதான் சுதந்திரமாய் இருக்கிறது.
கடுமையான கெடுபிடிகள் இருந்த யுத்த காலம். அலுவலகத்தில் உடன் வேலைபார்த்த இரண்டு நண்பர்களைப் போலீஸ் தவறான தகவலின் அடிப்படையில் கைது செய்துவிட்டது. உடனடியாகத் தகவல் தெரிந்து அலுவலகமே பரபரப்பானது. உயர்மட்டத்தில் செல்வாக்குள்ள நிர்வாகி இரண்டே நாட்களில் நேரில் சென்று அவர்களை அதிரடியாக விடுவித்து அலுவலகம் அழைத்து வந்தார். நடந்ததை அவர்களால் நம்பவே முடியவில்லை.
கைது செய்யப்பட்ட விதத்தைப் பார்த்தபோது மீண்டும் வெளியில் வருவோம் என்றே நம்பவில்லையாம். இரவு முழுவதும் தூங்காமல் ஒருவரியோருவர் பார்த்து அழுதுகொண்டிருந்திருக்கிறார்கள். அன்று அவர்கள் உணர்ந்ததுதான் உண்மையான் சுதந்திரம் என்று தோன்றுகிறது. அப்படியொரு மலர்ச்சியை அவர்கள் முகத்தில் என்றும் பார்த்ததில்லை. அதே காலப்பகுதியில் ஒருவித பயத்துடன் கொழும்பிலிருந்த நண்பர்கள் சிலர் இந்தியா சென்றிருந்தார்கள். அவர்கள் பின்பு இங்கு வந்தபின் சொல்வது தாம் தமிழனாக சுதந்திரமாக, எந்தவித பயமுமின்றி உணர்ந்தது சென்னையில்தான் என்பார்கள்.

எங்களுக்கே எந்த அளவிற்குச் சுதந்திரம் இருக்கிறது என்கிற கேள்வி ஏதுமில்லாமலே, யாருக்காவது சுதந்திரம் வழங்கிவிடும் ஆர்வம் மட்டும் எல்லோருக்குமிருக்கிறது. அது ஓர் போதை. நாங்களும் வழங்கியிருந்தோம். எங்களால் வெள்ளைக்காரன் மாதிரி நாட்டுக்கா வழங்கமுடியும். ஒரு வீட்டுக்குச் சுதந்திரம் வழங்கியிருந்தோம்.
நண்பன் ஒருவன் யாழ்ப்பாணத்தில் வந்து தங்கிப் படித்துகொண்டிருந்த வீடு அது. கடும் கண்டிப்பான உரிமையாளர் மனைவியுடன் கொழும்புசெல்ல, வீடு ஒருவாரம் எங்கள் கட்டுப்பாட்டில்! முதல்நாள் மாலையே ஒரு குறூப் டீவி, விசிடி பிளேயர் சகிதம் தரையிறங்கியது. இன்னொரு குறூப் அட்டைப் பெட்டிகள், நீலாம்பரி ஹோட்டல் அசைவ உணவு வகைகளுடன் முன்னிரவு நேரத்தில் களத்தில் இறங்கியது.
அயலவர்கள் இரண்டே நாட்களில் மிக்க மகிழ்ச்சி தெரிவித்தார்கள். "தம்பி இந்த வீடு இப்பதான் இவ்வளவு கலகலப்பா இருக்கு. எனக்குத் தெரிஞ்ச நாள் துவக்கம் ஒரு விறுத்தமில்லாமத்தான் இருந்திருக்கு" - உண்மையாகவே பாராட்டினார் பக்கத்து வீட்டு அங்கிள்.
பின்னர் தெரிந்தது - நீண்டநாள் பகையாம்!

அங்கேயொரு நாய் இருந்தது. அதை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை, பாவம். நண்பன் கேற்றை திறந்து வைத்தான். நாய் பொருட்படுத்தவில்லை. அதை வெளியே அழைத்துச் சென்றான். அடக்குமுறையிலேயே வளர்ந்ததில் வெளியே வந்தால் ஓடித் தப்பலாம் என்கிற பொது அறிவெல்லாம் அதற்கு இருக்கவில்லை. 'உச்சு வா' என்று கூட்டிக் கொண்டே நண்பன் ஓட, அதுவும் சேர்ந்து ஓடியது. அப்படியே ஓடிப்போனது, நாய்க்கும் சுதந்திரம்! ஏதோ எங்களால் முடிந்தது.
நம் மக்கள் எப்போதெல்லாம் சுதந்திரம் கிடைத்ததைப் போல மகிழ்ந்திருக்கிறார்கள் என்று யோசித்தால்?
எனக்குத் தெரிந்து 87 ஆம் ஆண்டில் ஒருமுறை. அப்படி ஒரு மகிழ்ச்சி எல்லோருக்கும். இந்திய அமைதிப்படை வந்தது அப்போது. பின்பு 94 ஆம் ஆண்டில். சந்திரிகா இலங்கையின் ஜனாதிபதியானார். துரதிருஷ்டவசமாக இந்த சுதந்திர மனநிலை எல்லாம் சில நாட்களுக்குத்தான் நீடித்தது. அதன்பின் தெளிந்துவிடார்கள். மற்றபடி, சுதந்திரம் என்கிற உணர்வை முழுமையாய் அனுபவித்தில்லை. அதற்கு அளவுமுறையும் கிடையாது. சமயங்களில் அடக்குமுறையின்போதுதான் நாம் அதுவரை அனுபவித்த சுதந்திரத்தை உணர்ந்துகொள்கிறோம்.

கடுமையாக நோயுற்று படுக்கையிலிருந்து எழுந்து வெளியே உலாவச் செல்லும் அந்த முதல் மாலைப்பொழுதில் முடிகலைத்து வீசுவதுதான் மீண்டெழுந்த ஒருவனின் சுதந்திரக் காற்று! நான் சமீபத்தில் உணர்ந்ததும் அதுதான். சமயங்களில் மனதிற்கு பிடிக்காமல் போய்விட்ட நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு வெளியே வரும்போது இருப்பதும்கூட ஒரு சுதந்திர உணர்வே! இன்னும்கூட சுதந்திரம் எப்படியிருக்கும்? என்றுகேட்டால் மறுபடியும் 'கப்பலேறிப் போயாச்சு' பாடலுக்குத்தான் போகவேண்டும்.