Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Wednesday, December 11, 2013

தேடிச்சோறு சுட்டகதை - உட்கார்ந்து யோசிச்சது!

"தேடிச்சோறு நிதந்தின்று.."

வீழ்ந்து விடுவோமோ? என்று சிறு சந்தேகம் வரும்போதெல்லாம் சன்னமான குரலில் எனக்கு மட்டுமே கேட்கும் வகையில் சொல்லும்போது ஒரு உத்வேகம் வந்துவிடுகிறது. 'வீழ்வேனென்று நினைத்தாயோ?' இந்த வரிகளுக்கு மட்டும்  சந்தர்ப்பங்கள் தாராளமாக வாய்த்து விடுகின்றன. எதையாவது சாதிக்கத் திட்டம் இருக்கிறதோ இல்லையோ, முயற்சி செய்கிறோமா இல்லையோ என்பதெல்லாம் வேறு பிரச்சினை. சமயங்களில் துவண்டு போய்விடாமல் இருப்பதற்கேனும் கூடவே துணையிருக்கிறது!

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, என் அறையில் மேசைக்கு மேலாக சுவரில் அழகான கையெழுத்தில் எழுதி ஒட்டி வைத்திருந்தேன். அடிக்கடி பார்வையில் படவேண்டும் என இந்த ஏற்பாடு. ஆனால் பாருங்கள், படிக்கிற மேசைப்பக்கம் நாம் எந்தக்காலதில போயிருக்கிறோம்? அவ்வப்போது அகால வேளைகளிலெல்லாம் வெறியேற்றிக் கொள்வதாக நினைத்து கவிதையை முறைத்துப் பார்த்து இம்சை கொடுப்பது வழக்கம்.

கொழும்பு வந்தபின்னர், எந்தக் கடையில் கிடைக்கும் நல்ல சாப்பாடு என்று 'தேடிச் சோறு தின்றபோது' தோன்றியது அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லைடா தம்பி! இப்போது இணையத்தில், ஃபேஸ்புக்கிலும் சின்னஞ்சிறு கதைகள் பேசிக் கொண்டிருக்கிறேன்.எதையும் கிழித்துவிடவில்லை எனினும், நம்பிக்கையுடன் இதே கவிதை, என் கூடவே எப்போதும்!

பாரதி படப்பாடல்களில் 'நிற்பதுவே நடப்பதுவே' வெளியான காலத்திலேயே பிடித்துக் கொண்டது. சிலவருடங்களுக்கு முன்னர்தான் படம் பார்த்தேன். படத்தைத் மீண்டும் பலதடவை பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்போது மிகப்பிடித்துக் கொண்டது, 'எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ' பாடல்தான் - அதுவரை நான் கேட்டதேயில்லை! நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று,  எனக்கு மிகப்பிடித்த பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


அதுபோலவே நல்லதோர் வீணை செய்தே' பாடலும்!

வாத்தியார் சுஜாதா என்ன செய்தார்? ஏன் செய்யவில்லை? என்ற கேள்விகளுக்கப்பால் அவர் செய்த மிக நல்லதும், அவசியமானதுமான  முயற்சிகளில் ஒன்று 'பாரதி' படம் உருவாவதற்குக் காரணமாயிருந்தது. படத்திற்கு அவரும் ஓர் தயாரிப்பாளர். நஷ்டமடைந்திருக்கலாம்!


லுவலகத்தில் வந்திருந்தபோதே வாழ்க்கையில் எதையாவது கிழித்துவிட வேண்டும் என்ற உத்வேகம் மனதில்! என் அறையில் அப்படியே சுற்றுமுற்றும் பார்த்ததில் காலண்டர் நவம்பர் மாதத்தைக் காட்டியது. யாரும் கவனிக்கவில்லை. அருகில் சென்று சற்று உயரத்தில் இருந்த கலண்டரை இருகைகளாலும் பிடித்து கிழிக்க, என்ன நடந்ததென்று தெரிவில்லை. நவம்பர் அப்படியே இருக்க, டிசெம்பர் கையோடு வந்திருந்தது. கரெக்டா அந்த நேரம் வந்த, அஃபீஸ் எய்ட் ஒருமாதிரிப் பார்த்துட்டுப் போறான். தொட்டதெல்லாம் துலங்கும்னு இதைத்தான் சொல்வார்கள் போலும்.


சுட்ட கதை!

DVD கடையில் தற்செயலாகப் பார்த்து, ஏதோ ஒரு நம்பிக்கையில் வாங்கினேன். ஏனோ படம் பிடித்திருந்தது. எந்த இடத்திலும் இரிட்டேட் பண்ணாமல் கதை நகர்ந்ததாலோ, நகைச்சுவை செய்கிறோம் என்று சாவடிக்காததாலோ, இல்லை நான் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்பதோ காரணமாயிருக்கலாம். என்வரையில், நகைச்சுவைக்காட்சி என்பது வாய்விட்டுச் சிரிக்க வைக்கவேண்டும் என்பதில்லை. மொக்கைக் காமெடிப் படம்தான்!



ஒரு சோம்பேறித்தனமான ஊரின் போலீஸ் ஸ்டேசனில் கொன்ஸ்டபிளாக சேர்கிறார்கள் ஹீரோக்கள் இருவர். பெயர் ராம்கி, சங்கிலி! பக்கத்திலுள்ள ஆதிவாசிக் கிராமத்தின் தலைவர் 'ஒட்டகம்' (எம்.எஸ் பாஸ்கர்). அவர் மகளான 'சிலந்தி'யை இருவரும் ஒருதலையாக லவ்வுகிறார்கள். திடீரெனத் தலைவர் கொலையாக, துப்புத் துலக்கச் செல்கிறார்கள் இருவரும்.

படத்தின் காட்சிகளும் காமிக்ஸ் போலவே தோன்றியது. ஆங்காங்கே சின்ன சின்ன அடடே! சிபாரிசுக் கடிதத்தில் கைநாட்டு வைத்திருக்கும் கல்வித்துறை மந்திரி 'அறிவழகன்', தேநீர்க்கடைக்குப் பெயர் பரடைஸ் டீ ஸ்டால். ஆங்கிலத்தில் PARADESI TEA  STALL! போலவே போலீசார் முதல் குற்றவாளிகள் வரை விரும்பிப்படிக்கும் சாம்பசிவம் காமிக்ஸ் விளம்பரம் வேறு இடையிடையே வருகிறது. காமிக்ஸ் படித்தே குற்றம் செய்ய ஐடியாவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஐடியாவும் பெற்றுக் கொள்கிறார்கள் சாம்பசிவம் காமிக்ஸ் ரசிகர்கள் எனத்தெரிந்ததும் நட்பாகிறார்கள் ராம்கியும் சங்கிலியும்! போலீஸ் அதிகாரி நாசர் புதிதாகச் சேரும் சங்கிலியைப் பார்த்து,"மூக்கைப் பார்த்தா பய நம்ம ஜாதி மாதிரியிருக்கே!" சங்கிலியின் பிரச்சினைக்கான காரணத்தை ஊர்மக்கள் டீ.வி கருத்துக் கணிப்புப் போல பேசுவது, ஒருவர் டிஸ்கவரி சானல் ஸ்டைல் தமிழில் பிளந்துகட்டுவது புன்னகைக்க வைக்கிறது. சிலந்தி ஓர் இசைக்கருவியைத் தனிமையில் அமர்ந்து இசைக்கும் ஒரு காட்சி அட்டகாசம். அந்தக்காட்சி ஏதோ ஹொலிவூட் படம் பார்ப்பது போல இருந்தது.

படத்தின் நாயகி சிலந்தி ஏனோ எனக்கு ரஜினி மகள் சௌந்தர்யாவை ஞாபகப்படுத்தினார். அவளுக்காகவே இருவரும் உயிரைப் பணயம் வைத்து சாகசம் செய்கிறார்கள். கடைசியில் எந்த வேலையும் செய்யாத, எப்போதும் தின்றுகொண்டேயிருக்கும்  உருப்படாத இன்னொரு போலீசுக்கு செட்டாகிவிடுகிறாள் சிலந்தி. அந்தவகையில் சமகால யதார்த்தையும் படம் பேசுகிறது. படம் 1.40 மணி நேரம்தான். காமிக்ஸ் ரசிகர்களுக்குப் பிடிக்கலாம்.

Saturday, October 19, 2013

சுஜாதா, திரைக்கதை எழுதுவது இப்படி!


கடந்த மாதம் யாழிலிருந்து வந்திருந்த நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். பேச்சு தலைவர் சுஜாதாவுக்குச் சென்றது. அவன் தீவிர சுஜாதா ரசிகன்.

"திரைக்கதை எழுதுவது எப்படி? இங்க வந்ததா?எங்கயுமே கிடைக்கேல்ல" - நண்பன் கேட்டான்.

"மச்சி நானும் ஒரு ஆர்வத்தில 2005ல யாழ்ப்பாணத்தில தேடி, கொழும்பு வந்து தேடிப்பார்த்து எங்கயுமே கிடைக்கல. வந்தது, முடிஞ்சுதுன்னு சொன்னாங்க"

"யாழ்ப்பாணத்தில 'புக்லாப்'ல மட்டும் 'திரைக்கதைப் பயிற்சிப் புத்தகம்'னு ஒண்ணு வச்சிருந்தாங்க. அது கதை ரெடியானப்புறம் என்னென்ன பண்ணனும்னு ஒரு கைடன்ஸ் மாதிரி நாமளே ஃபில் அப் பண்ணி யூஸ் பண்றது. நமக்குத் தேவையில்லாதது. அப்புறம் எனக்கும் இண்டரஸ்ட் இருக்கல. ஆனா இப்ப திரும்பவும் ஆர்வமா இருக்கேன். ஏன்னா வர்ற வருஷம் இன்னொரு புத்தகம் வந்திடும். 'திரைக்கதை எழுதுவது இப்படி'ன்னு அது இன்னும் நல்லாருக்கும்"

" எப்பிடி? யார் எழுதினது?"
"ராஜேஷ்ன்னு ஒருத்தர் கருந்தேள் கண்ணாயிரம் என்கிற பேர்ல ஒரிஜினலா எழுதின Syd Field கிட்ட கொப்பி ரைட்ஸ் வாங்கி எழுதுறார். அவர் ஒழுங்கா எழுதியிருந்தா போன வருஷமே எழுதி முடிச்சிருக்கணும். செய்யல. ஆனா அதுவும் நல்லதுதான். இப்போ வித்தியாசமான படங்கள் வர்றதால அது பற்றியெல்லாம் இருக்கும்."

"அது சுஜாதா புத்தகத்தைவிட நல்லாருக்குமா?"
"நிச்சயமா நல்லாருக்கும். நான் சுஜாதா புத்தகம் பார்க்கல. ஆனா தலைவர் சில விஷயத்தை '.......இப்படிச் சொல்கிறார் Syd Field'ன்னுதானே எழுதியிருப்பார். ராஜேஷ் டீப்பா எல்லாருக்கும் புரியிறமாதிரி அலசி ஆராய்ஞ்சு சரியான ஹாலிவுட், சரியான தமிழ்ப்படங்களோட உதாரணம் சொல்லியிருப்பார்.

"ஏன்.. சுஜாதா அப்பிடிச் செய்திருக்கமட்டாரா?"

"செய்திருப்பார் மச்சி.. ஆனா தலைவர்கிட்ட சிலநேரங்கள்ல பிடிக்காத விஷயம் அதுதான். ஸ்க்ரீன் பிளே டெக்னிக், What If? இதுக்கெல்லாம் ஷங்கர், மணிரத்னம், ராஜீவ்மேனன் படத்தில இருந்துதான் அப்பப்ப எக்சாம்பிள் காட்டுவார். இதுல ஷங்கர் படம் படம் தவிர, மற்றதெல்லாம் படுமொக்கையான உதாரணமாத்தான் இருக்கும். தலைவர் தான் வேலைசெய்த படத்த மட்டும் சொல்லியிருக்கலாம். வேற சின்னப் படங்களை கண்டுக்காம இருந்தாரா இல்ல வேற நல்ல படம் அவருக்கு சொல்றதுக்கு கிடைக்கலையான்னு தெரியல. கணையாழியின் கடைசிப்பக்கங்கள்ல தமிழ்சினிமா பற்றி எழுதின வாத்தியாருக்கும் ரெண்டாயிரம்கள்ல இருந்தவருக்கும் எவ்வளவு வித்தியாசம். எக்கச்சக்கமா காம்ப்ரமைஸ் ஆகிட்டார். ஒருவேளை சலிப்படைஞ்சு போயிருக்கலாம்"

'திரைக்கதை எழுதுவது இப்படி' நிச்சயமா தலைவரோட புத்தகத்தைவிட ரீச் ஆகும். ஆகவேணும். நிறையப்பேர் அடிச்சுப்பிடிச்சு வாங்குவாங்கன்னு நம்புறேன். இப்பவே ராஜேசைக் கவனிக்கத் தொடங்கியாச்சு. சூது கவ்வும் படத்தில கொஞ்சமா அவரோட பங்கிருக்கு..இனி தலைவரோட புத்தகம் யாருக்கும் தேவைப்படாதுன்னு நான் நம்புறேன்"

"அப்பிடியா?" - இதைக் கேட்கும்போது அவன் முகத்தில் அப்பட்டமாக ஒரு ஏமாற்றம், கவலை தெரிந்தது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது.

"ஏன் மச்சி அதுக்கு இவ்ளோ ஃபீல் பண்றே? தலைவர விட ஒருத்தர் டீப்பா சொன்னா நல்ல விஷயம்தானே! ராஜேஷ்க்கும்கூட அவர் வாத்தியார்தான்.... வாத்யாரே இப்ப இருந்தா சந்தோஷப்படுவார்"

சுஜாதா இப்போது இருந்தால்....? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் எல்லோருக்குமே தோன்றுவதுதான்... இந்த ஃபேஸ்புக் யுகத்தில் சுஜாதா இல்லாமல்போனது நிச்சயமாக பெரிய இழப்புத்தான். பிரபலங்களுக்கும், சாமானியர்களுக்குமான இடைவெளியை சமூக வலைத்தளங்கள் இல்லாமல் செய்து விட்டது பிரபலங்கள் பலருக்கும் ஃபேஸ்புக் மீது ஒவ்வாமையைக் கொடுத்திருப்பது உண்மைதான். இங்கே தலைவர் இருந்திருந்தால் அடித்து அடியிருப்பார். என்ன தலைவரைக் கேள்வி கேட்டு திணறடிப்பார்கள் என்பது ஒருபுறமிருக்க, இன்னும் நிறையக் கற்றுக் கொடுத்திருப்பார். அச்சு ஊடகத்தில் அவர் அறிமுகப்படுத்தியதை தேடுவதைவிட நேரடி சுட்டிகளாகப் பகிரப்பட்டிருக்கும். நிறைய வாசிக்கப்படும். ஓவராகச் சலம்புபவர்கள் அடங்கியிருப்பார்கள்.ஏராளமான திறமையான புதியவர்கள் அறிமுகப் படுத்தப்பட்டிருப்பார்கள்.

புதியவர்களை இனங்காண்பது, அறிமுகப்படுத்தி பரவலாகக் கொண்டுசேர்ப்பது குறித்து சுஜாதா அளவுக்கு யாருக்கும் பொறுப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியான தளங்களில் இயங்குவதுமில்லை.

அப்படியே சமூகத்தளங்களில் முழுநேரமும் இயங்கும் 'எப்போதோ இலக்கியம் படைத்த' ஓரிரு இலக்கியப் பெருசுகளும் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதோடும், அடுத்தவனில் குறை கண்டுபிடிப்பதிலும், கிண்டல் பண்ணுவதிலுமே காலங்கடத்துகிறார்கள். தொலையட்டும் என்று யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் எவனும் சிக்கவில்லை எனில், சுஜாதாவையும், அவரை ரசிப்பவர்களையும் கிண்டலடிப்பதுதான் கொடுமை. அடுத்தவனைக் கழுவியூற்றுவதிலேயே காலம்தள்ளும் இவர்களுக்கு தம்மீதான சிறு விமர்சனத்தைக்கூடத் தாங்க முடிவதில்லை. சமயங்களில் தாம் எழுதியது நல்ல கதை என்று நிரூபிப்பதற்கும் சுஜாதாதான் தேவைப்படுகிறார். நான் சொன்னதைவிட அவர் எதை அப்படி சொல்லிவிட்டார்? என சுஜாதாவையே துணைக்கழைப்பதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

சுஜாதா இப்போது இருந்தால்....?
மிக முக்கியமாக இணையத்தில் இயங்குபவர்களை மொண்ணைகள் என்று கூறியிருக்கமாட்டார். ஏனெனில் வாசகன் புத்திசாலி என எப்போதும் நம்பியவர் சுஜாதா!

Monday, February 27, 2012

சுஜாதா! சுஜாதா!



விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, எந்தவித கேள்விக்கும் உள்ளாக்காமல் மிகச்சிலரை மட்டுமே ரசிக்க, நேசிக்க முடிகிறது. அப்படி எந்த சமரசமும் செய்துகொள்ள விரும்பாமல் நான் ரசிக்கும் ஒருவர் சுஜாதா! ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது தன்னை நினைவு படுத்திப் போகிறார். என்னைப் போல பலருக்கும் இப்படியிருக்கலாம். 

Tuesday, December 28, 2010

சுஜாதா = கணேஷ் + வசந்த்?


சுஜாதாவின் வாசகர்களால் என்றும் மறக்கமுடியாத, தவிர்க்கமுடியாத இரு கதா பாத்திரங்கள் கணேஷ்-வசந்த்.

அனால் சுஜாதா என்றதுமே சிலபேருக்கு கணேஷ்-வசந்த் தான் ஞாபகத்துக்கு வருவார்கள். இது ஒரு துரதிருஷ்ட வசமான கவலைக்குரிய விஷயம்!  இது அவர் பெயரைக் கேட்டாலே அலர்ஜியாகிற இலக்கியவாதிகளின்(?!) நிலை!


பொதுவாக இரண்டு வெவ்வேறுபட்ட குண இயல்புகளை, நடத்தைகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் இணைந்து வரும்போது, அதிக வரவேற்பைப் பெறுகின்றன.

கணேஷ் - பொறுப்பான, அதிகம் பேசாத, கண்ணியமான, பெண்கள் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொல்லாத, கொஞ்சம் கண்டிப்பான ஆசாமி.
வசந்த் - கிண்டல், கேலி, விளையாட்டுத்தனம், வாய் அதிகம், எவ்வளவு பிசியிலும் பெண்களை கொஞ்சம் 'சைட்' அடித்தவாறு, ஜாலியான ஆசாமி.

தனது இரு வேறுபட்ட மனநிலைகளுக்கு கொடுத்த பாத்திர வடிவங்களா கணேஷ்-வசந்த்? ஒருவேளை பொறியியலாளர் ரங்கராஜன் 'கணேஷ்' ஆகவும், எழுத்தாளர் சுஜாதா 'வசந்த்' ஆகவும் இருந்தார்களா?

கணேஷின் அறிமுகம் நைலான் கயிறு நாவலில். அப்போது கணேஷ் டெல்லியில் இருந்ததாக ஞாபகம். ஒரு துணைக் கதாபாத்திரமாக வந்தார். வசந்த் அப்போது இல்லை.
பாதி ராஜ்ஜியம், அனிதா-இளம் மனைவி கதையிலும் கணேஷ் மட்டுமே.

கணேஷ் தனியாக வந்த கதைகளில் கணேஷிடம், வசந்தின் சில இயல்புகளைக் (அதே கிண்டல்,கேலி, பெண்கள்) காண முடிந்தது. ஏதோ ஒரு கதையில் நீரஜா என்ற பெண் உதவியாளர் இருந்தார். பிரியாவில் ( அல்லது காயத்ரி? ) தான் வசந்த் அறிமுகம் என்று நினைக்கிறேன்.

'காயத்ரி'யைத் திருட்டுத் தனமாக வீட்டில் வைத்து வாசித்த ஞாபகம் இருக்கிறது. அந்தவயதில் அது 'அடல்ஸ் ஒன்லி' ஆகவும், நான் கேள்விப்பட்டேயிராத சில விஷயங்களையும் உள்ளடக்கியிருந்தது!

பிரியா, காயத்ரி திரைப்படங்களாக வெளிவந்தனவாம். நான் பார்க்கவில்லை.

'எதையும் ஒரு வழி' பண்ணிவிடும் மணிரத்னம் குடும்பம் கணேஷ்-வசந்த் தொலைக்காட்சித் தொடராக்கியது. அந்தக் 'கொடுமையை' ஓரிரு முறை அனுபவித்திருக்கிறேன். 
இதையெல்லாம் சுஜாதா ஏன்தான் அனுமதித்தாரோ?

ஏராளமான பெண் ரசிகைகளைக் கொண்டிருந்தான் வசந்த். ஒரு கதையில் வசந்துக்கு திருமணம் செய்வதாக சுஜாதா முடிவு செய்ய, பலத்த எதிர்ப்புக் கிளம்பியதாம் பெண்கள் தரப்பிலிருந்து. அநேகமாக, பெண்களைக் கவர்ந்த கற்பனை ஹீரோக்களுக்கு திருமணம் நடைபெறுவதில்லை/கூடாது  என்பது ஒரு பொதுவான நியதி.

(சில ஜேம்ஸ்பாண்டு படங்களில் அவருக்குத் திருமணம் நடைபெறும். ஆனால் அப்போதே எங்களுக்குத் தெரிந்துவிடும் அடுத்தடுத்த காட்சிகளில் பாவம் அந்தப் பெண் எதிரிகளால் கொல்லப்பட்டு விடுவாரென்று!)

நான் ரசித்த சில கணேஷ்-வசந்த் கதைகள்.
நிர்வாண நகரம், ஆ, எதையும் ஒருமுறை, கொலையுதிர்காலம், வசந்த் வசந்த், மறுபடியும் கணேஷ், காயத்ரி, பிரியா, மேற்கே ஒரு குற்றம், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு (நாடகம்), சில்வியா, மெரீனா, யவனிகா, ஐந்தாவது அத்தியாயம், விதி, கொலையரங்கம், விபரீதக் கோட்பாடு, ஆயிரத்தில் இருவர்

சுஜாதா எழுதிய சரித்திர நாவலான 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை'யில் வரும் பாத்திரங்களான 'கணேச'ப்பட்டர், 'வசந்த'குமாரன் இருவரும் கணேஷ்-வசந்தாகவே தோன்றுகின்றனர் எனக்கு.

எண்பதுகளில் கணேஷ்- வசந்த் எந்த அளவுக்கு பிரபலமடைந்து இருந்தார்கள் என்பதை சுஜாதாவே சொல்கிறார்,

......கணேஷ் வந்து “நைலான் கயிறு” ல்ல வந்தான் ’68ல்ல. வசந்த் வந்து “பிரியா” ல்ல தான் அறிமுகமானது. கணேஷ் முதல்லே “Solo”வா இருந்தான். ஆனா கதை எழுதறபோது Structureல கஷ்டமா இருந்தது. கணேஷ் வந்து மனசில, நினைச்சுகிட்டு இருந்ததை சொல்ல Counterpoint character தேவையாய் இருந்தது. கணேஷ் வந்து matured; வசந்த் immatured childish ஆக இருக்கான். கூட்டங்களுக்கெல்லாம் போனா “வசந்தை” ஏன் அழைச்சிட்டு வரல்லேன்னு கேக்கறாங்க. பஸ்லே பார்த்தேன்னு… சொல்றாங்க. பெண்கள் நிறைய பேர் வசந்துக்கு கல்யாணம் பண்ணி வைக்காதீங்கன்னு எழுதறாங்க.. psychologicalஆ அது ரொம்ப Interestஆ இருந்தது. கல்யாணத்தை கலைச்சிடுங்க, வேண்டான்னு சொல்றாங்க. They feel they will lose something charming அது மட்டுமல்ல… One reader sent a telegram நான் அவனுக்கு வந்து என் bloodஐ கொடுக்க தயாரா இருக்கேன்னு” They believe that Vasanth exists. எல்லோருக்கும் அவன் character பிடித்து இருக்கு. அந்த மாதிரி இருக்க ஆசைப்படறாங்க....

திரைப்பட இயக்குனர் வசந்த், சுஜாதாவின் வசந்த் பாத்திரத்தின் பாதிப்பிலேயே தனது பெயரை 'வசந்த்' ஆக மாற்றியதாகச் சொல்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு பெண் தனது பிரியமான நாய்க்குட்டிக்கு 'வசந்த்' எனப் பெயரிட்டு அழைத்தார்.

சில சிக்கலான விஷயங்களை கணேஷ்-வசந்த் கதைகளில் போகிற போக்கில் கூறிச் செல்வார் சுஜாதா!

ஒரு கதையில் போகிற போக்கில் வசந்த், 'நீட்ஷே' பற்றிக் கூறிச் சென்றதால் தான் நீட்ஷே யைத் தேடி வாசித்ததாக சாரு கூறியிருந்தார்.
(சாரு கூறியதன் பின்னர் தற்செயலாக வீட்டில் ஒரு 'நீட்ஷே' பற்றிய சிறு புத்தகம் கையில் சிக்க வாசித்தேன்)

இறுதியாக வந்த சில்வியா தொடரில், கவிஞர் சில்வியா பிளாத் பற்றிய தகவல்கள் கதையின் போக்கினூடே சொல்லப்பட்டது. கதையின் நாயகியான சில்வியாவுக்கும் அதே மனப்பிறழ்வு நோய் (Silvia Plath - Pulitzer Prize பெற்ற அமெரிக்க பெண் கவிஞர், எழுத்தாளர். தனது முப்பதாவது வயதில் 1963 இல் லண்டனில் தற்கொலை செய்து கொண்டார்)

இதையே சீரியஸாக சில்வியா பிளாத்தும், இருவேறுபட்ட மனநிலைகளின் பிறழ்வு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையாக எழுதினால் நானெல்லாம் எஸ்கேப்.

நகைச்சுவை உணர்வும், சகிப்புத் தன்மையுமே ஒரு சமூகத்தின் நாகரீகத்துக்கு அளவுகோலாக உள்ளன என்கிறார் சுஜாதா.

நமக்குள் இருக்கும் நகைச்சுவை, வாழ்வின் ரசிப்புத் தன்மை கலந்த ஒரு கொண்டாட்டமான மனநிலை எப்பொழுது எம்மை நீங்கிச் செல்கிறதோ அப்போதே நாம் மனதளவில் வயது போனவர்களாகிறோம் என்பது எனது கருத்து.

நம்மில் பலர் இளவயதிலேயே வயது போனவர்களாகவே இருக்கிறார்கள்!சில இலக்கியவாதிகளை(?!) வாசிக்கும்போது நமக்கும் நரைகூடிக் கிழப்பருவமெய்தின உணர்வைக் கொண்டு வந்துவிடுவார்கள்!

அந்தக் கொண்டாட்டமான மனநிலையை முதுமையிலும் தக்க வைத்திருப்பவர்கள் மனதளவில் இளமையானவர்களாகவே இருக்கிறார்கள்.

சுஜாதாவின் கொண்டாட்டமான மனநிலையே 'வசந்த்'! - இதுவும் எனது கருத்து. அவர் இறுதிவரை அப்படியே இருந்தார். அதனால் அவருடைய எழுத்துக்களும் என்றும் இளமையானவையாக இருக்கின்றன.

சுஜாதா படிக்கும் வயதில் நம்மில் பலரைப்போலவே பெண்களுடன் பேசிப் பழக சந்தர்ப்பங்களின்றி கூச்ச சுபாவமுள்ளவராகவே இருந்ததாகக் கூறியுள்ளார். அவருக்குள்ளிருந்த நகைச்சுவை உணர்வும், கிண்டலும், கேலியும் பின்னாளில் வசந்தாக வெளிப்பட்டிருக்கக்கூடும். எங்களுக்குள் இருக்கும் அதே உணர்வுகள் வசந்த்தை ரசிக்க, வரவேற்கச் செய்கின்றன.

எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு 'வசந்த்' இருக்கிறான் என்றே நான் நினைக்கிறேன். நாம்  வளர்ந்த, வாழும், பணிபுரியும்  இடங்களில்  எம்மால்  வெளிப்படுத்தப்படாத ஒருவனாக! எனக்குள்ளும், இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்குள்ளும் நிச்சயமாக ஒரு 'வசந்த்'! எந்த விகிதத்தில் கலந்திருக்கிறான் என்பதே ஆளாளுக்கு வித்தியாசம்!

அவரின் சில எழுத்துகளில் வரும் நகைச்சுவை வசந்த் எழுதியதைப் போலவே இருக்கும்.
ஸ்ரீரங்கத்துத் தேவதைகளில் 'மாமி, சேலை கட்டிய குதிரை போல நடந்து போனாள்!'.

இறுதியாக கற்றதும் பெற்றதும் தொடரில் இவ்வாறு தனது அனுபவத்தைக் கூறுகிறார்.
பார்க்கில் தனக்குப் பக்கத்தில் பெஞ்சில் அமர்ந்திருந்த தாத்தா!? தனது வயதைக் கண்டுபிடித்துச் சொல்லுமாறு கேட்க,

....நான் யோசித்து, 'கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கள்', 
'மத்த விரல்களை ரெக்கை மாதிரி அசையுங்கோ' , 
'ரெண்டு கையையும் ஏரோப்ளேன் மாதிரி வச்சுண்டு மெதுவா குதிங்கோ..பாத்து...பாத்து...'
அவர் அப்படியே எல்லாம் செய்ய, 

' உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!'
அவர் அசந்து போய், கை குடு எப்படிப்பா இவ்ளோ கரெக்டா சொன்னே?'
ஒரு ட்ரிக்கும் இல்லை, நேற்றுத்தான் இதே சமயம், இதே பெஞ்சில உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன்னிங்க, மறந்துட்டீங்க!'

தன்னுடைய எழுபது வயதில் வசந்த் இப்படித்தானே இருப்பான்(ர்)!

- பதிவர் ஜனாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தப்பதிவு!
- தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்!

Sunday, November 7, 2010

சுஜாதா இலக்கியவாதியே இல்லை!


சுஜாதா இலக்கியவாதி இல்லையாம், சொல்கிறார்கள் இலக்கியவாதிகள் என்று கூறப்படுகிற, கூறிக்கொள்கிற பலரும்.

இலக்கியத்திற்கென்று அவர் என்ன செய்தார்? அவர் என்னதான் சாதித்தார்? என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள் பலர்.

இதப் பற்றி நானும் உட்கார்ந்து யோசிச்சப்போ (!?) தான் ஒரு விஷயம் விளங்கிச்சு.

இலக்கியம்னா என்ன?
பள்ளியில் படிக்கும் போது தமிழ் இலக்கியம்னு ஒரு பாடம்.
அது அப்படி இருக்கும்?
தமிழ் நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நமக்கே ஒரு ஆசிரியரின் துணை இல்லாமல் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு பாடம்.

அப்பதான் புரிஞ்சுது இலக்கியம்னா விளங்கக்கூடாது!

சாதாரண ஆட்களுக்கு விளங்காத மாதிரி எழுதுறவன் தான் இலக்கியவாதி.
சுஜாதா தான் எல்லோருக்கும் விளங்கிறமாதிரி எழுதுவாரே!
விடலாமா?...அவனவன் உசுரைக்குடுத்து அடுத்தவனுக்கு விளங்காம எழுதுறான்!

சிலபேர் எழுதுவாங்க பாருங்க,  தமிழ் எழுத்துக்கள் தான் இருக்கும்... ஆனா வாசிச்சா எஸ்பஞோல்,ஹீப்ரு மாதிரி இருக்கும்.

எங்களுக்கே, எங்கள்மேல் சந்தேகம் வந்துவிடும் எங்களுக்கு தமிழ் தெரியுமா? நாங்கள் தமிழர்தானா? என்று.

எழுத்துக்கள் எப்பவுமே ஐம்பது வருஷம் பின்தங்கி இருக்கணும்.வாசிச்சா நமக்கும் நரை கூடி, கிழப்பருவம் எய்தின ஒரு உணர்வு வரணும். அதுதான் இலக்கிய எழுத்து!

ஆனா சுஜாதாவை பாருங்க, இந்தக்காலத்தில இளைஞர்கள் எப்படிக் கதைப்பார்கள், காதலிப்பார்கள்....அப்படியே எழுதினார்..என்றும் இளமையான எழுத்துக்கள்!

இலக்கியவாதின்னா ஒரு நூறு பேருக்கு மட்டும்தானே தெரிஞ்சிருக்கணும்? நிறையப் பேருக்கு தெரிஞ்சா அப்புறம் எப்பிடி?

இலக்கியவாதி எழுத்தை மட்டுமே தொழிலா கொண்டிருக்கணும்..அப்போ நிச்சயமா சோத்துக்கு சிங்கிதான்! நம்மவர்களின் வாசிப்பு பழக்கம்...தெரியுமே!
இவர் என்னடான்னா...எழுத்தை தனது ஆத்ம திருப்திக்காக....என்ன நியாயம் இது?

சரி, இதையெல்லாம் கூட போனா போகுதுன்னு விட்டுடலாம். ஆனா அவர் ஒண்ணு பண்ணினார் பாருங்க...

எத்தனை மேலை நாட்டு, உள்ளூர் இலக்கியவாதிகளையும், கவிஞர்களையும், சிந்தனையாளர்களையும் சும்மா போகிற போக்கில எங்களுக்கு அறிமுகம் செய்திருப்பார்? (சாதாரண கணேஷ்-வசந்த் கதைகளில் கூட, நீட்ஷே, சில்வியா பிளாத் போன்றவர்களை)

இதெல்லாம் ஒரு தமிழ் இலக்கியவாதி செய்கிற காரியங்களா? எந்த இலக்கியவாதியாவது செய்திருக்கிறார்களா? செய்யலாமா இப்படி?

இப்ப சொல்லுங்க.. சுஜாதா இலக்கியவாதி இல்லைத்தானே?

Friday, October 8, 2010

எந்திரனில் சுஜாதா?

'எந்திரன் படம் அமரர் சுஜாதாவிற்கு சமர்ப்பிக்கப் பட்டிருக்கலாம்'

'ஆகக் குறைந்தது 'டைட்டில்' போடும்போது அவரது படத்தைப் போட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கும்'

இப்படியெல்லாம் எந்திரன் அறிவிக்கப்பட்டபோதே எதிர்பார்த்தேன், வரும்வரை. (அதெல்லாம் அவரது பங்களிப்புகளுக்கு போதாது என்பது வேறு விஷயம்)
அப்படி எதுவும் நடக்கவில்லையாம்.

அதனாலேயே எனக்கும் படம் பார்க்கும் ஆவல் போய்விட்டது. இன்னும் பார்க்கவில்லை.
ஷங்கருமா இப்படி?...சுஜாதா சார் எனக்கு அப்பா மாதிரி..எந்த நேரத்திலையும் எனக்கு எந்தப்பிரச்சினைக்கும் தீர்வு சொல்வார்..இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இறுதியாக இரங்கல் கூட்டத்திலும் கூட.

யாரைத்தான் நம்புறதோ?
அதைவிடக் கொடுமை...
வசனம் -  சுஜாதா-ஷங்கர்-கார்க்கி
அதிலயும் பங்கு போட்டாச்சா?
அப்போ நிறைய சொதப்பல் வசனங்கள் இருக்குமோ?

எந்திரன் ஹாலிவுட் ஐத் தாண்டிவிட்டது! மிஞ்சி விட்டது!
ஹாலிவுட் க்கே சவால்! தமிழர் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டிவிட்டது!
தமிழன் சாதித்து விட்டான்! தலை நிமிர்ந்து விட்டான்!

-என்றெல்லாம் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்! கத்துகிறார்கள்! கூவுகிறார்கள்! கதறுகிறார்கள்! புளகாங்கிதம் அடைகிறார்கள்! ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்!
அவர்களுக்காக...

எந்திரனின் கிராபிக்ஸ்,அனிமேஷன் துறைகளைகளில் பணியாற்றியது,
ஹாலிவுட் இன் முன்னணி நிறுவனமான Stan Winston Studio. 

இவர்கள் பணியாற்றிய படங்கள் சில,
Avatar, Batman returns,Terminator I & II, Aliens, Predator, Jurassic Park

பணத்தைக் கொட்டிக்கொடுத்தால், நம்ம ஊர் சிங்களப் படங்களைக் கூட ஹாலிவுட் படம் மாதிரி எடுக்கலாம். கதை? பார்த்துவிட்டு எழுதுவேன்.

ஒரு ஹாலிவுட் நிறுவனம் கிராபிக்ஸ் செய்தா..அது ஹாலிவுட் படம் மாதிரிஇல்லாம? இராம.நாராயணன் படம் மாதிரியா இருக்கும்?
     

Sunday, August 15, 2010

தல, தலைவர், வாத்தியார்


வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயல்களிலும் ஏதோ ஒரு வகையில் தன்னை நினைவூட்டுகிறார். எனக்கு மட்டுமல்ல எத்தனையோ பேருக்கு.

ஒரு எழுத்தாளனால் ஒவ்வொரு வாசகர்களிலும் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

எங்களுக்கெல்லாம் 'தல' , 'தலைவர்', எல்லாமே அவர்தான்.

அவர்தான் 'வாத்தியார்'.
அவர் சொல்லிக் கொடுத்ததைப் போல் யாருமே எதையும் சொன்னதில்லை, சொல்லவும் முடியாது.

        எனக்கு பதின்மூன்று வயதில் அறிமுகமானார். ஒரு கணேஷ்-வசந்த் கதை மூலம். வீட்டில் ஏற்கனவே தெரிந்திருந்ததால், அவர் பெண்ணா என்ற குழப்பம் இருக்கவில்லை. நிறையப் பேருக்கு அப்படி ஒரு குழப்பம் வேறு.

(நிறைய பேர் சுஜாதா என்றாலே, சினிமா அம்மா சுஜாதா, பாடகி சுஜாதா என்று....ஒருத்தன் அந்நியன் வந்தபோது பாடகி சுஜாதாவா  வசனம் எழுதினது? ன்னு கேட்டு என்னைக் கலவரப் படுத்தினான். ம்ம்ம் நம்ம தமிழரின் வாசிப்புப் பழக்கம் அப்படி....
அதிலும் நம்ம பெரும்பான்மையான பெண்கள் வாசிப்பது, ரமணி சந்திரன் என்பவர் படைக்கும் மாபெரும் 'இலக்கியக் காவியங்களை').

சுஜாதா இலக்கியவாதியா இல்லையா என்ற குழப்பம் வேறு பலருக்கு.

        ஒரு உண்மையான இலக்கியவாதியாக  தான் வாழுகின்ற சூழ்நிலையை, சமகாலத்து நிகழ்வுகளை தனது எழுத்துக்களில் பிரதிபலித்தார், ஏனைய உலக இலக்கியங்களை, கருத்துக்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்தப் பணியை அவரைப் போல் யாரும் செம்மையாகச் செய்ததில்லை.

தன்னுடைய பொழுது போக்கு கதைகளான கணேஷ்-வசந்த் கதைகளினூடாக கூட சில்வியா பிளாத், நீட்ஷே போன்றவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்தார்.

'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்' அவர் தொடாத விஷயங்களே இல்லை. முப்பது வருஷம் கழித்து வந்த 'கற்றதும் பெற்றதும்' தொடரிலும் மீண்டும் அதே உற்சாகம், துள்ளல், இளமை.

திரைப்படத் துறையில் அவரின் பங்களிப்புகள் ஏராளம்.

அனாலும் 'சினிமா அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை' நடிகர் கமல்ஹாசன்.
அந்நியன் விமர்சனத்தில், 'multiple personality disorder (உபயம்- சுஜாதா) என்று விகடன் எழுதியது.

குறிப்பாக இயக்குனர் ஷங்கரின் படங்களில் அவரின் 'டச்' படத்தின் வசனங்களில் தெரியும்.
இந்தியன் - 'புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல'
முதல்வன் - முதல்வரின் நேர்காணல் வசனங்கள், அந்தப் பிரபலமான இறுதி வசனம் ' that was a great interview  '
அந்நியன் - 'அஞ்சு பைசா திருடினா தப்பா?' வசனங்கள்.

இலக்கியங்கள் காலங்களைக் கடந்தவை. ஆனால், தமிழ் இலக்கியவாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களின் எழுத்துக்கள் ஒரு கால வரையறைக்குட்பட்டவை. முப்பது வருடத்துக்கு முன் எழுதிய எழுத்து இபொழுது சூழ்நிலைக்கு பொருந்தாது, ஒரு வயது போன தன்மை தெரியும். வாசிக்க சோர்வு தட்டும். 

ஆனால் சுஜாதா முப்பது வருஷத்துக்கு முன் எழுதியது இப்பொழும் புதிதாகவே தோன்றுகிறது. இன்னும் முப்பது வருஷம் கழிந்தபின் வரும் இளைஞனுக்கும் புதிதாகவே இருக்கும்.

அவர் காலங்களைக் கடந்தவர், இறுதிவரை இளைஞனாகவே இருந்தார், அவர் எழுத்துக்களும் என்றும் இளமையானவை.

இறுதி நாட்களில் கூட 'கற்றதும் பெற்றதும்' தொடரில் எழுதினார் 'நான் வழமையாகச் செல்லும் பூங்காவில் ஒரு எழுபது வயதுத் தாத்தாவைப் பார்ப்பேன்'. அதுதான் சுஜாதா!