Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, June 29, 2015

The Wayward Cloud (2005)



படம் பார்ப்பதற்கான மனநிலை என்பது என்னிடம் எப்போதும் வாய்த்திருப்பதில்லை. ஓரிரு நாட்களுக்கு முன்னர் தோன்றியபோது, எந்தத் தீர்மானங்களுமின்றிக் கணணியில் சேமித்து வைத்திருந்த படங்களில் ஒன்றை எழுந்தமானமாகத் தெரிவு செய்தேன். அது The Wayward Cloud ஆக இருந்தது.

படத்தின் ஆரம்பம் மிக நீளமான ஷொட். ஒரு கட்டத்தினுள்ளே நான்கு கொரிடோர்கள் சந்திக்கும் இடமாக இருக்கவேண்டும். இரண்டு நீண்ட கொரிடோரை பார்த்தவாறு கமெரா நிலையாக அப்படியே இருக்கிறது. சிறிது நேரத்தில் இரு புறமும் தூரத்திலிருந்து இரண்டு பெண்கள் நடந்து வருகிறார்கள். ஒருவரையொருவர் தாண்டிச் செல்கிறார்கள். மிக நீளமான இந்தக் காட்சியைப் பார்த்ததும், உடனடியாக இயக்குனர் மிஷ்கின் ஞாபகத்தில் வந்தார். தொடர்ந்து பார்க்கையில் படத்தில் காட்டப்படும் தனிமை, ஆரம்பத்திலேயே அது மனதளவில் பார்வையாளனைத் தயார்படுத்தும் உணர்வு, எனக்கு The Hole (1998)  படத்தை நினைவுபடுத்தியது. ஒரு பாடல்வேறு இடம்பெற்றிருந்தது. உடனேயே தேடிப்பார்த்தேன். எதிர்பார்த்தது போலவே அது இயக்குனர் Tsai Ming-liang இன் படம்தான்.

நாயகி வோட்டர் மெலன் பழத்துண்டுகளைச் சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாள். தொலைக்காட்சியில் வோட்டர் மெலன் பற்றிய பரிந்துரைகள் இடம்பெறுகின்றன. மினரல் தண்ணீர்ப் போத்தல்களை விட ஒரு வோட்டர் மெலன் ஜூஸ் விலைகுறைந்தது என்கிறார்கள். ஒரூ பெண் பழங்களின் அளவை வைத்துக்கொண்டு பெண்களின் குணாதிசயங்களுடன் ஒப்பிடுகிறாள். பழ விற்பனையாளர்கள் தங்கள் வியாபாரம், லாபம் குறித்துப் பேசுகிறார்கள். வோட்டர் மெலன் பழங்கள் சாப்பிடும் போட்டி ஒளிபரப்பப் படுகிறது. நீருக்குப் பதிலீடாக வோட்டர் மெலன் பழங்கள் உண்ணப் பரிந்துரைக்கப்படுகிறது. இதெல்லாம் எதற்காக? இன்னொரு செய்தி காட்டப்படுகிறது. அதில் தாய்வானின் நீர்வழங்கலுக்கான பிரதான நீர்நிலை வறண்டு போய்விட்டது. சில நாட்களுக்குத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்துகிறார்கள். நாயகியின் வீட்டுக் குளியலறை முழுவதும் ஏராளமான மினரல் தண்ணீப் போத்தல்கள் நிரம்பியிருக்கின்றன. நீர்க்குழாயில் சுத்தமாகத் தண்ணீர் வருவது நின்றுபோயிருக்கிறது.

நாயகி தனது சூட்கேசை திறக்க முயற்சிக்கிறாள். முடியவில்லை. சலிப்புடன் திறப்பை வீசுகிறாள். அது யன்னலூடு வெளியே விழுந்துவிடுகிறது. கீழே வருகிறாள். வீதியைச் செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சில தொழிலாளிகள். தேடுகிறாள். 'திறப்பு ஒன்றும் இங்கே இல்லை, வேலை செய்யும்போது இங்கே நிற்பது ஆபத்து' என்று சொல்கிறார்கள் அவர்கள். மறுநாள் காலை கீழே வந்து பார்க்கிறாள். இரவு செப்பனிடப்பட்ட வீதியில் தாரில் பதிந்து போயிருக்கிறது அவளது சூட்கேஸ் திறப்பு. அதை இன்னொரு திறப்பால் எடுக்க முயற்சிக்கிறாள், முடியவில்லை. அப்படியே வீதியில் நடந்து செல்கிறாள். ஒரு பையில் வெற்றுப்போத்தல்களை வைத்திருக்கிறாள். நீர் சேகரிக்க வேண்டும். வீதியின் அருகாக ஓடும் பெரியதொரு கழிவுநீர் கால்வாயில் ஏராளம் வோட்டர் மெலன் பழங்கள் மிதந்து செல்வதைக் காண்கிறாள். 

நாயகன் வீதியோரமுள்ள பூங்காவொன்றில் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனருகே வோட்டர் மெலன் பழம் ஒன்றுடன் வரும் நாயகி, அவனருகே இருக்கும் தண்ணீர்ப் போத்தலை எடுத்துப்  பழத்தைக் கழுவித் துடைக்கிறாள். போத்தலை இருந்த இடத்தில் வைத்துவிட்டுச் செல்கிறாள். சற்று நேரத்தில் மீண்டும் சென்றவழியே வருகிறாள். நாயகன் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவனெதிரே இருக்கையில் அமர்ந்திருக்கிறாள். அவனைத் தேடித்தான் வந்திருக்கிறாள். அவனிடம் பேச வேண்டும் என்கிற முடிவில் தூங்கும் அவனை எழுப்பலாமா வேண்டாமா என்கிற குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அப்படியே தூங்கியும் விடுகிறாள்.

தூக்கத்திலிருந்து எழும் நாயகன் அவளைப் பார்க்கிறான். அவளும் விழித்துக் கொள்கிறாள். சற்றுக் கண்களைச் சுருக்கிப் பார்த்துவிட்டு அவள் பேச ஆரம்பிக்கட்டுமென்று  காத்திருக்கிறான்.  இருவரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள். அவனுக்கும் பார்த்த பரிச்சயம் இருக்கிறது. இதுவரை பேசிக்கொண்டதில்லை. அவள் ஆரம்பிக்கிறாள், "நீ இன்னும் கைக்கடிகாரங்கள் விற்கிறாயா?". ஆக, அவனைப்பற்றி அவளுக்கு மேலதிகமாக இன்னொரு விடயமும் தெரிந்திருக்கிறது. சிறுபுன்னகையுடன் இல்லை என்பதாய்த் தலையசைக்கிறான். வேறெதுவும் சொல்லவில்லை. அவன் ஒரு தொழில்முறை நீலப்படநடிகனாக இருக்கிறான். அவனது வேலைநேரம் இரவு. பகலில் தூக்கமும் தனிமையுமாகப் பொழுதைக் கழிப்பவன். நாயகிக்கு அவன்மீது அந்தச் சந்திப்பிலேயே காதல் வந்துவிட்டது எனச் சொல்கிறது தொடர்ந்து வரும் பாடல். 

நாயகன் தாரில் பதிந்து கிடக்கும் அவளது சூட்கேஸ் திறப்பைக் கிளறியெடுத்துக் கொடுக்கிறான். அவளது வீட்டில் சூட்கேசைத் திறக்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டிருக்க, நாயகி, வோட்டர் மெலன் ஜூஸ் தயாரித்து வந்து கொடுக்கிறாள். அவனுக்கு வோட்டர் மெலன் ஜூஸ் இப்போது குடிக்கும் மனநிலையிலை. முந்தையநாள் இரவின் படப்பிடிப்பில் வோட்டர் மெலன் பழமொன்று பிரதான பங்கேற்றிருந்தது. அவன் மிகக் கவனமாக அவள் கவனிக்காதவண்ணம் யன்னலைத் திறந்து வெளியே கொட்டிவிட்டு அவளிடம் புன்னகையுடன் கண்ணாடிக் குடுவையைக் கொடுக்கிறான். அவள் மீண்டும் ஜூஸ் நிரப்பிக் கொண்டுவந்து கொடுக்கிறாள். அவள் எதிரிலேயே நின்று கொண்டிருப்பதால், வேறுவழியில்லாமல் குடிக்கிறான். இருவருக்கும் சேர்த்து அவன் உணவு தயாரிக்கிறான். மகிழ்ச்சியான அந்தத்தருணத்தை இருவரும் மிகவும் ரசிக்கிறார்கள். 

மின்தூக்கியில் கூடவே வந்து அவனை வழியனுப்புகிறாள். கதவு மூடிக்கொள்கிறது. தனது தளத்துக்குச் செல்லவேண்டிய எண்ணை அழுத்த மறந்து கனவு காண்பவள் போல லயித்து நிற்கிறாள். சிறிது நேரத்தில் கதவு திறக்கிறது. எதிரே நாயகன். சுய உணர்வு பெறுகிறாள். இருவரும் சிரிக்கிறார்கள். அவள் தளத்தின் எண்ணை அவனே அழுத்திவிட்டு விடைபெறுகிறான். அவள் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்குத் தயாராகவே இருக்கிறாள். தனது உடல்மொழியில் சற்று வெளிப்படுத்துகிறாள். அவன் கவனிக்கவில்லை, அல்லது தவிர்த்துவிடுகிறான். ஆயினும் அவள் மிக உற்சாகமாக ஒரு பாடலை முணுமுணுத்துகொண்டு செல்கிறாள்.    

இன்னொருமுறை இருவரும் சந்திக்கும்போது வீட்டில் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகி விடுகிறார்கள். அவள் முழுவதும் தயாராகும்போது அவன் அவள் காலைக் கட்டிக் கொண்டு தூங்கி விடுகிறான். அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அன்றைய இரவில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நாயகி, குளிர்சாதனப்  பெட்டியைத் திறந்து, அதன்முன்னே அமர்ந்து உள்ளேயிருக்கும் முழுதான வோட்டர் மெலன் பழம் ஒன்றை உணர்ச்சிப் பெருக்குடன் முத்தமிடுகிறாள். அதே நேரத்தில் இன்னோர் தளத்தில் நீலப்பட படப்பிடிப்பு முடிந்து, நடிகை தனிமையில் குளியலறையிலிருந்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறாள். அதனை மறைந்து நின்று பார்த்தபடியே நாயகனும்! 

அந்த இரவில் மூன்று பேருமே தமது உடல்வேட்கையைத் தனிமையில் தீர்த்துக் கொள்கிறார்கள். நாயகிக்கு ஆண் துணை தேவை, கிடைக்கவில்லை. தேவையான மற்றைய இருவருக்கும் துணை ஒருபிரச்சினையில்லை. மேலும் அவர்கள் இருவரும் நீண்ட உடலுறவில் ஈடுபட்டுவிட்டுத்தான் இருக்கிறார்கள். அது தொழில். அவர்களின் சொந்த உடல் சார்ந்த தேவை தீரவில்லை. ஒருவேளை அவனுக்கு பெண்ணுடல் அலுத்துப்போய் இருந்திருக்கலாம். பெண்ணுடன் உறவு கொள்வதென்பது தொழில் என்பதாகிவிட்ட மனநிலையில் அவன் வாழ்ந்துகொண்டிருக்கலாம். படப்பிடிப்பில் எப்போதும் நான்குபேர் அருகிலிருக்க இயந்திரத்தனமாய் இயங்கிமுடித்துவிட்டுத் தனிமையில் குளியலறையில் அரைகுறை அடையணிந்த பெண்களின் புகைப்படங்களடங்கிய சஞ்சிசிகைகளை வைத்துக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபடுவதுதான் அவனது சொந்தத் தேவைக்கான தீர்வாக இருக்கிறது.

நாயகியின் யாருமற்ற தனிமை அவளை மிகவும் வாட்டுகிறது. நள்ளிரவு நேரங்களில் அவளின் உலகம் வேறானதாக இருக்கிறது. வோட்டர் மெலன் பழம் ஒன்றை தனது ஆடைக்குள் வயிற்றுப் பகுதியில் குழந்தை போல வைத்துக்கொண்டு, கர்ப்பிணிப் பெண்போல தடவிக் கொடுக்கிறாள். அப்படியே பாவனை செய்கிறாள். ஆயாசமாக இடுப்புக்கு ஒரு கையைக் கொடுத்துக்கொண்டு  கொண்டு நடக்கிறாள். மாடிப்படிகளில் மிகுந்த சிரமத்துடன் மூச்சு வாங்கிக்கொண்டு, கால்களை அகட்டி வைத்து ஏறி இறங்குகிறாள். ஒருமுறை பிரசவ வலி கண்டு அப்படியே படியில் உட்கார்ந்து வழியில் முனகி குழந்தை பெறுகிறாள். அப்படியோருமுறை மாடிப்படியில் அவள் நடந்துகொண்டு வரும்போது, அங்கே நாயகன் வேலைநேரம் முடிந்து வந்து நிற்கிறான். நாயகி பார்வையில் பட்டுவிடாமல் ஒளிந்துகொள்கிறான்.

ஒருநாள் நீலப்பட நடிகை போதை மயக்கத்தில் மின்தூக்கியில் சரிந்துகிடக்கிறாள். அவளைத் தன்வீட்டுக்குக்கொண்டு வருகிறாள் நாயகி. தன்னிடமுள்ள நீலப்பட டிவிடிக்களில் அவள்நடித்த படமும் இருப்பது கண்டு டிவியில் பார்க்கிறாள். பார்ப்பவள் அதிர்ச்சியடைகிறாள். அங்கே நாயகனைப் பார்த்துவிடுகிறாள். அவன் பற்றித்தெரிந்து கொண்டுவிடுகிறாள். படத்தயாரிப்பாளருடன் அவளும் சேர்ந்து அந்த நடியையைத் தூக்கிச் செல்கிறாள். அங்கே அவனையும் காண்கிறாள். அன்றைய படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கிறாள். இறுதிக்காட்சியில் அவரவருக்கான தீர்வைக் கண்டுகொண்டார்களா? என்பதுதான் சொல்லப்படுகிறது என நம்புகிறேன். இந்தக்காட்சி அருவருப்படையவும் செய்யலாம். படத்தில் நாயகன், நாயகிக்கிடையில் வரும் ஒரே வசனம் அவள் அவனிடம் கேட்கும், 'நீ இன்னும் கைக்கடிகாரங்கள் விற்கிறாயா?' என்பதுதான்!

நாயகியின் உலகம் முழுக்க முழுக்கத் தனிமையாலானது. அது அவள் விரும்பாத, அவளாகத் தேர்ந்தெடுக்காத அப்படியே அமைந்துவிட்ட, நிர்ப்பந்திக்கப்பட்ட தனிமையாக இருக்கலாம். அது வாழ்வில் வெறுமையையும், சில சமயங்களில் ஒருவித இனம்புரியாத பயத்தையும் கொடுத்துவிடுகிறது. அப்படியே அது ஓர் அதீத எச்சரிக்கையுணர்வையும் எப்போதும் கொடுத்துக்கொண்டிருக்கும். ஒருமுறை டிவிடி லைப்ரரியில் படங்கள் தெரிந்தெடுக்கிறாள். அங்கே அநேகமானவை நீலப்படங்கள். அங்கே வரும் ஒருமனிதனைக் கண்டு சற்றுப் பதற்றமடைந்துவிடுகிறாள். தன் வீட்டுக்கு திரும்ப லிஃப்ட்டுக்குள் நிற்கிறாள். கதவு மூடும் சமயத்தில் திடீரென ஒரு கை கதவைத் தடுக்கிறது. அதே மனிதன் இப்போது அவளுடன் லிஃப்ட்டுக்குள். அவன் அவளைப்பின்தொடர்வது போலவே படுகிறது. ஒருகணம் மிகுந்த பயம், பதற்றத்துடன் பார்க்கிறாள். தனது தளம் வந்ததும் மிக அவசரமாக வெளியேறுகிறாள். அவன் அவளைச் சட்டை செய்யவில்லை. மேலே தான் செல்ல வேண்டிய இடத்துக்குப் போகிறான். மின்தூக்கியின் கதவுகள் மறுபடி மூடிக்கொண்டதும், நாயகி திரும்ப வந்து மறைந்து நின்று கவனிக்கிறாள். அதீத எச்சரிக்கையா? அல்லது அதனுடன் கூடிய எதிர்பார்ப்பா என்பது அவளுக்கும் சரியாகப் புரியாத குழப்பத்துடன் பார்க்கிறாள்.

நாயகிக்கு இயல்பான ஒரு வாழ்க்கை வேண்டும். ஆண்துணை, குழந்தைகள் பற்றிய கனவுகள் அவளிடம் எப்போதுமுண்டு. அவளுக்கு இயல்பாக எழும் பாலியல் இச்சை நாயகனால் தீர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். அதுதான் அவள் தேவை, ஒருவகையில் வறட்சி. நாயகனுக்கு பெண்ணுடல் எப்போதும் கிடைக்கிறது. துரதிருஷ்டவசமாக அதனால் தேவை தீர்வதில்லை. வடிகாலாகவுமில்லை. அவனது வாழ்வும் யாருமற்ற தனிமையும் வெறுமையும் நிரம்பியதாய் இருக்கிறது. காதலில்லாத, காமமும் உறவும் கொடுக்கும் ஒருவகையான வறட்சி எப்போதும் அவனிடம் இருக்கிறது. அவன் எதிர்பார்க்கும் ஏதோ ஒன்று  நாயகியிடம் கிடைக்கிறது. உடல்சார்ந்த தேவையைத் தவிர்த்து, ஒரு அர்த்தபூர்வமான மகிழ்ச்சியை அவளுடன் பழகும்போது உணர்கிறான்.

இந்தப்படம் பார்ப்பதற்கான மனநிலையை ஏற்படுத்திக் கொடுத்தது இயக்குனரின் The Hole படம்தான். அதுதான் இயக்குனரின் காட்சியமைப்பைப் பொறுமையையாகப் பார்ப்பதற்கு, திரைமொழியை உள்வாங்குவதற்கு தயார்படுத்தியது. The Hole படத்தில் வருவது போலவே இதிலும் தனிமை என்பதுதான் பிரதானமாக சொல்லப்பட்டிருகிறது. ஆட்கள் அதிகமில்லாத அடுக்குமாடிக் குடியிருப்பு. எப்போதும் படம் முழுவதும் கூடவே இருக்கும் ஈரம். The Hole படம் முழுவதும் மழை பெய்துகொண்டே இருக்கும். பார்க்கும்போதும், படம் முடிந்தபின்னரும் எங்களுக்கு வெளியே மழை பெய்வது போன்ற உணர்வே இருக்கும். இந்தப்படத்தில் வறட்சி! எனினும் இதிலும் ஒரு ஈரம் பரவியிருப்பதையே உணரமுடியும். நீளமான காட்சியமைப்புகள். மிகக்குறைந்த அளவிலான வசனங்கள். இயக்குனரின் படங்களில் ஆச்சரியமளிப்பது பாடல்கள். தமிழ் சினிமா போலல்லாது கனவுப் பாடல்கள் கதாபாத்திரங்களின் மனநிலையை ஏக்கங்களைச் சொல்வது போல, படத்தின் கதையை நகர்த்துவதுபோன்ற அமைந்திருக்கும். இந்தப்படத்தில் முதலாவதாக நாயகன் பாடும் பாடலில் நிலவு, தனிமை, நிறைவேறாத கனவுகள் பற்றிய வரிகளைக்  கொண்ட பாடல் பற்றிய அவனது வாழ்க்கை பற்றிச் சொல்வதாகவே இருக்கிறது.   

வறட்சி அல்லது தாகம் இன்னொரு விதத்தில் தேவை என்றுகூடச் சொல்லலாம் - படம் ஒருவிதமான தேவைகளும் அதற்கான தீர்வுகள், பிரதியீடுகள் பற்றியே பேசுகிறது என நம்புகிறேன். நம் எப்போதும் தேவைகளுக்கான தீர்வுகளைக் கொடுக்கிறோமா அல்லது தீர்வுகளுக்கான பிரதியீடுகளை வழங்கிக் கொள்கிறோமா? என்றுகூட யோசிக்கலாம். பிரதியீடுகள் எப்போதுமே நம் தேவைகளுக்கான சரியான தீர்வாக இருப்பதில்லை. நீர், வோட்டர்மெலன் என்பவை குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நாயகியின் அந்த சூட்கேஸ்கூட அப்படியாக இருக்ககூடும். அவ்வப்போது நாயகன் திறக்க முயற்சிக்கிறான், இறுதிவரை திறக்கப்படவில்லை.

இப்படியெல்லாம் இருக்கலாம் என்றுதான் சொல்ல முடிகிறது. திட்டவட்டமாகச் சொல்ல முடியாமைக்குக் காரணம் இருக்கிறது. அதை இயக்குனரே ஒரு சந்தர்ப்பத்தில் இப்படிச் சொல்கிறார்,

"எனக்கு வசனங்களிலோ, கதை 'சொல்வதிலோ' ஆர்வமில்லை. படங்களில் தெளிவான ஒரு செய்தியைச் சொல்ல முயற்சிப்பதில்லை. ஒவ்வொரு தருணமும் உடல் மொழி, உடற்செயற்பாடுகள் அவை என்ன சொல்ல வருகின்றன என்பது பற்றியே. அவை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதவை என உணர்கிறேன். படம் என்ன சொல்ல வருகிறது என்பது முக்கியமல்ல. நீங்க என்ன உணர்கிறீர்கள் என்பதுதான் முக்கியமானது. நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்று சிந்தியுங்கள்!"

(பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதியது)

Thursday, April 30, 2015

The Star Maker (1995)



சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருக்கும் நண்பன் ஒருவன் இருக்கிறான். சினிமா, டீவி சீரியல் நடிகர்கள், கலைஞர்கள் அதிகமாக நிறைந்திருக்கும் பகுதி. அவனிடம் எப்போதும் ஏராளமான கதைகள் இருக்கும். சில ஆச்சரியகரமானவை, சில அதிர்ச்சியானவை. ஆனால் பேசுவதற்கு சந்தர்ப்பம்தான் வாய்ப்பதில்லை. ஒருமுறை கொழும்புவந்தபோது பேசிக்கொண்டிருக்கையில் சொன்னான். பக்கத்து வீட்டிலிருந்த நண்பர்கள் ஒருமுறை அவனை அழைத்திருந்தார்கள். ‘இப்போது நீயொரு தயாரிப்பாளர். வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறாய். உன் தமிழில் பேசு’. இதெல்லாம் எதற்காக என்றால், நடிகையாக ஆசைப்படும் ஒரு பெண்ணை அழைத்து வருகிறார்கள். நண்பன் பழிபாவங்களுக்கு அஞ்சுபவன் என்பதால் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டான். அதனால் என்ன, இன்னொரு தயாரிப்பாளர் அங்கே வந்திருப்பார், அவ்வளவுதான்!

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அதிசயம். சிறுவர், பெரியோர், ஏழை, பணக்காரன், வர்க்க, மத பேதமின்றி எல்லோரையும் சென்றடைந்த, கவர்ந்த,  ரசிக்கப்படுகின்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பு - சினிமா! அதற்கிருக்கும் கவர்ச்சி, அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும், புகழ் பெறவேண்டும் என்ற ஆசையில் எல்லாவற்றையும் உதறிவிட்டு வந்தோர், வருவோர் எத்தனையாயிரம் பேர். 'ஹீரோ' ‘ஹீரோயின்'களாக தமது பெயரை டைட்டிலில் பார்க்க ஆசைப்பட்டு 'மற்றும் பலர்' இல் இடம் பிடித்தவர்களே இங்கு ஏராளம். அப்படியிருந்தும் அதற்கான கவர்ச்சி எப்போதும் குறைந்ததில்லை.

அப்படி வருபவர்களின் ஆசையையே மூலதனமாக்கி அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் சுரண்டுவதற்காக காத்திருக்கும் 'உப்புமா' கம்பனிகளையும், போலி ஆசாமிகளையும்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு போலி ஆசாமியைப் பற்றிய படம் தான் The star maker.

ஜோ மொரெல்லி அவன் பெயர். சிறிய ட்ரக் வண்டியொன்றில் அந்தக் கிராமத்துக்கு வருகிறான். வீதிகளில் வண்டியைச் செலுத்திக்கொண்டே ஒலிபெருக்கியில் பேசுகிறான். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயோதிபர் அனைவருக்கும் வேறுபாடின்றிய அழைப்பு அது. அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக்கும் அருமையான வாய்ப்பு என்கிறான். ரோமிலிருக்கும் universal studios என்கிற சினிமா கம்பனி ஊடாக வருவதாகக்கூறி, அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறான். சினிமாவில் புதுமுக நடிகர்களுக்கான தேர்வு அது! 

கிராமத்தில் கூடாரமடித்துத் தங்கிக் கொள்கிறான். காமெரா உள்ளிட்ட ஒளிப்பதிவு சாதனங்களுடன் ஊர் ஊராகச் சென்று தான் சினிமாவில் நடிப்பதற்கு புது முகங்களை தேர்வு செய்வது அவன் வேலை என்றும், இன்று யாரென்றே தெரியாமலிருக்கும் நீங்கள், தேர்வு செய்யப்படும் உங்களிலொருவர் நாளை உலகம் முழுவதும் அறிந்த புகழ்பெற்ற நடிகர்களாகி விடலாம் என அறிவிக்கிறான். மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஆர்வமுடையவர்கள் அதற்கான கட்டணம் 1500 lire  செலுத்தி தேர்வில் கலந்து கொள்ளலாம் எனக்கூறுகிறான். தவிர, தான் சந்திக்கும் ஒவ்வொருவரையும் உற்றுப்பார்த்து, 'அருமையான முகம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது' என சபலத்தை உண்டுபண்ணிவிடுகிறான். அன்று அந்தக் கிராமம் முழுவதும் எல்லா வீடுகளிலும் இதுபற்றிய பேச்சாகவேயிருக்கிறது. 

மறுநாள் அவன் தங்கியிருக்குமிடத்தில் குழுமி நிற்கும் மக்களில் ஒவ்வொருவராக அழைத்து வசனம் பேச வைத்து, சற்றே மேக்கப் சரிசெய்து கூடாரத்தினுள் அழைத்துப் பேசவைத்து ஒளிப்பதிவு செய்கிறான். என்ன வசனம் பேசுவது என்கிற குழப்பத்தைத் தவிர்க்க ஆண்களுக்கு நீலநிறத்திலும், பெண்களுக்கு ரோஸ் நிறத்திலும் வசனம் அச்சிட்ட சிறு தாள்களைக் கொடுக்கிறான். கிராமம் முழுவதும் அந்த தாள்களைக் கையில் வைத்துக்கொண்டு வசனத்தை மனப்பாடம் செய்து, ஏற்ற இறக்கங்களுடன் பேசிக்கொண்டே அலைகிறார்கள்.

ஒளிப்பதிவு முடிந்ததும் பணத்தைப் பெற்றுக் கொண்டு, 'நான் எந்த நம்பிக்கையும் கொடுக்க முடியாது. எனது வேலை ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து, தயாரிப்பர்களிடம் கொடுப்பது மட்டுமே. இந்தப்பணம் படப்பிடிப்பு செலவுக்கானது. நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் ரோமில் இருந்து உங்களுக்கு சினிமாவில் நடிப்பதற்கான அழைப்பு வரும்' என்கிறான். முடிந்தளவு ஊரிலுள்ள எல்லாரையும் பங்கெடுக்க வைத்து, பணம் சம்பாதித்தபின் அங்கிருந்து வெளியேறி, இன்னொரு ஊர், புதிய ' புதுமுகங்கள்'.

பெயாதாவுக்கு பெற்றோர், உறவினர்கள் என்று யாருமில்லை. யார் வீட்டிலாவது சிறு வேலைகள் செய்து சம்பாதித்து வாழ்கிறாள். ஊரிலுள்ள கன்னியாஸ்திரி மடத்தில் தங்கியிருக்கிறாள். அவள் கிராமத்தில் சினிமா நடிகர்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்புக் கேட்கிறது. எப்படியாவது கலந்துகொண்டு நடிகையாகிவிட்டால் அவள் துன்பமெல்லாம் நீங்கிவிடும். தேர்வுக்கு வருகிறாள். அவளிடமிருப்பாது 300 lire க்கள் மட்டுமே. ஜோ அவளைத் துரத்திவிடுகிறான். குழுமி நிற்கும் ஊரவர்கள் வழக்கம்போல அவளைக் கிண்டல் செய்கிறார்கள்.

பணம் புரட்டவேண்டும் என யோசிக்கும் பெயாதா தான் வழமையாக வேலை செய்யும் ஒரு கனவான் வீட்டுக்குச் செல்கிறாள். தனது பணத்தேவையைச் சொல்கிறாள். அதற்கென ஒரு யோசனையைத் தெரிவிக்கிறார் அந்தக் கனவான். அவளது நிர்வாண உடலைப் பார்க்க அனுமதிக்கும் பட்சத்தில் அவள் கேட்கும் பணம் கிடைக்கும் என்பதுதான் அது. முதலில் மறுத்துத் திருப்பிச் செல்ல முனைகிறாள் பெயாதா. தூரத்தில் நாளைதான் கடைசிநாள் என்பதாக ஒலிபெருக்கி அறிவிப்புக் கேட்கிறது. உடனடியாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு திரும்புகிறாள்.

மீண்டும் ஜோவிடம் வருகிறாள் பெயாதா. கமெரா முன் அமர்ந்திருக்கும் அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான் ஜோ. அவளைப் பற்றிக் கேட்கிறான். அப்பாவித்தனமும், நேரிடையான பேச்சும், மன உறுதியுடனும் பேசுகிறாள் அவள். எங்கிருந்து பணம் கிடைத்தது என்பதையும் சர்வசாதாரணமாக விவரிக்கிறாள். அவள் வேலை செய்யுமிடங்களில் பணம் கொடுக்கும்போது, அவள் மார்பையும், கால்களையும் சமயங்களில் முழு உடலையும் பார்ப்பதற்கு அனுமதி கேட்பது சாதாரணமாக நிகழ்வது, அவர்களைக் கை தொடமட்டும் அனுமதிப்பதில்லை எனக்கூறுகிறாள்.

ஜோ இதுவரை சந்தித்த மனிதர்களிடமிருந்து அவளைப் பார்க்கும் பார்வை சற்றே மாறுகிறது. இறுக வாரிக்கட்டிய மிக அடர்த்தியான அவள் கூந்தலை அவிழ்த்துவிடுகிறான். புருவங்களைத் திருத்துகிறான். மீண்டும் கமெராவில் பார்க்கும்போது மிக மிக அழகானவளாகத் தெரிகிறாள் அவள். 'நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்' எனத் தனக்குள் கேட்டுக் கொள்கிறான் ஜோ. அவள் பணம் கொடுக்கும்போது தேவையில்லை என்கிறான். 'நான் பொருத்தமாக இல்லையா' எனக்கேட்கிறாள் அவள். அருமையாக இருப்பதாகக் கூறுகிறான். மீண்டும் அவள் பணம் கொடுக்க முயல, கோபத்துடன் மறுக்கிறான். கூடாரத்தைவிட்டு வெளியேறும் பெயாதாவை எல்லோரும் அதிசயமாகப் பார்க்கிறார்கள். அவள் மிக அழகாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அவள் மிகவும் அழகானவள் என்று ஊராரும் ஏன், அவளுமே உணர்ந்து கொள்கிறார்கள்.

அந்த ஊரில் தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு கிளம்புகிறான் ஜோ. வழியில் டிரக்கினுள்ளே சத்தம்வர இறங்கிப்பார்க்கிறான். உள்ளே பெயாதா திருட்டுத்தனமாகத் தன்னுடன் வருவது தெரிகிறது. அவனுடனேயே தங்கி, அவனுக்குப் பணிவிடைகள் செய்வதாகவும் தன்னை அனுமதிக்குமாறு கோருகிறாள். அதற்காக எதையும் செய்கிறேன் என்கிறாள். ரோமிலிருந்து உனக்கு அழைப்பு வரும்வரையில் காத்திருக்கச் சொல்லி அவளை மீண்டும் கிராமத்துக்குக் கொண்டுவிடுகிறான் ஜோ.

வரும் வழியில் ஜோவின் டிரக் பழுதாகி நின்றுவிடுகிறது. மிடுக்காக உடையணிந்த பெண்ணொருத்தி அவனுக்கு உதவுவதாகச் சொல்லி அழைத்துச் செல்கிறாள். அது சனநடமாட்டமற்ற பாழடைந்த நகரம். அங்கே தனியாக அமர்ந்திருக்கும் ஒருவர் இந்த நகரத்தின் இளவரசர் என்றும் அந்தப்பெண் ராணி என்றும் அறிந்துகொள்கிறான் ஜோ. அவர்களுடன் இரவு உணவு விருந்தில் கலந்துகொள்கிறான். காலையில் கண்விழிக்கும்போது அங்கே யாரும் இல்லை. ஜோவின் டிரக், அவனது பணம் உட்பட எதுவுமில்லை. முதன்முறையாக ஜோவிடமே கைவரிசையைக் காட்டிவிட்டார்கள் இருவர். சத்தமாகப் புலம்பிக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வருகிறான்.

போலீஸ் மீட்டு வைத்திருக்கும் ஜோவின் காரை அவனிடம் கொடுக்கும்போது, 'அவர்களிருவரும் தேர்ந்த திருடர்கள்! உங்கள் பொருட்கள் பத்திரமாக மீட்கப்பட்டன, உங்கள் காதலியின் உதவியினால்' என்கிறது. ஜோ புரியாமல் திகைத்து நிற்கும்போது அங்கே வருகிறாள் ‘காதலி’ பெயாதா. சினிமாக்காரனுடன் சென்ற அவளை கன்னியாஸ்திரிகள் தம்மிடத்தில் தங்க அனுமதிக்காததால் ஜோவைத் தேடி வந்ததைச் சொல்கிறாள். முதலில் அவளிடத்தில் கடுமையாக நடந்துகொள்ளும் ஜோவுக்கும் இப்போது அவளிடம் காதல் வர, உறவு கொள்கிறான். இருவரும் சேர்ந்து புதிய இடத்தில் நடிகர் தேர்வுக்குத் தயார் செய்கிறார்கள்.

அங்கே திடீரென வரும் போலீஸ் அதிகாரி, ஜோ செய்த குற்றங்களைச் சத்தமாக வாசித்துக்காட்டி, அவனைக் கைது செய்து அழைத்துச் செல்கிறார். அதிர்ச்சியாகி நிற்கிறாள் பெயாதா. அவளைப்பொறுத்தவரை ஜோ நல்லவன். அவனையே முழுமையாக நம்புகிறாள். போலீஸ் எடுத்துச் செல்லும் ஜோவின் டிரக்கில் தானும் மறைந்து தொற்றிக்கொண்டு செல்கிறாள். அந்தப் போலீஸ் அதிகாரியும் ஜோவிடம் வாய்ப்புக்கேட்டு நடித்தவர்தான் என்பது அவன் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. சிறைச்சாலை செல்லும் வழியில் வேறொரு குழுவிடம் ஜோவை ஒப்படைக்கிறார். அவர்கள் சரமாரியாகத் தாக்கத்தைத் தொடங்குகிறார்கள். பெயாதா அழுதுகொண்டே ஓடிவந்து தடுக்க முயல்கிறாள். செய்வதறியாது மண்ணில் புரண்டு கதறுகிறாள். குற்றுயிராக சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்படுகிறான் ஜோ.

இரண்டு வருடத்தண்டனை முடிந்து, ஜோ சிறையிலிருந்து வெளிவருகிறான். அவனது டிரக் பின்புறம் திறந்து பார்ப்பவன் யாரோ பயன்படுத்தியது தெரிந்து காவலாளிகளிடம் வினவுகிறான். ஒரு பெண் தங்கியிருந்ததைச் சொல்கிறார்கள். பெயாதாவின் கிராமத்துக்கு வருகிறான். அவள் முன்பு தங்கியிருந்த கன்னியாஸ்திரிகள் மடம் இப்போது வாகனங்கள் திருத்துமிடமாகிவிட்டது. அநேகமாக எல்லோரும் ஜோவை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பெயாதா பற்றி யாரும் அவனிடம் எதுவும் கூற மறுக்கிறார்கள். ஒரு பெண் ரகசியமாக ஜோ அருகில் வந்து, பெயாதா மனநோய்க் காப்பகத்தில் இருப்பதாகச் சொல்கிறாள்.

மனநோயாளர் காப்பகத்தில் பெயாதா ஓட்ட வெட்டப்பட்ட தலைமுடியுடன் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கிறாள். ஜோவை அவளால் அடையாளம் காண முடியவில்லை. ஜோ இறந்துவிட்டதாகச் சொல்கிறாள்.
'அது உண்மையில்லை. நான்தான் ஜோ உன்னை ரோமிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்'. 
'நான் ரோமில் இருந்திருக்கிறேன். ஸ்விம்மிங் பூல், அமெரிக்கன் கார் என்று நான் பணக்காரியாக இருந்த பொழுது, ஜோவுடன் உலகம் முழுதும் சுற்றியிருக்கிறேன். அவர்கள் எங்களிருவரையும் பிரித்தபோது ஜோ இறந்துவிட்டான்' என்கிறாள் பெயாதா.

'ஆம் ஜோ இறந்துவிட்டான், நான் அவனது நண்பன். அவன் இறக்கும்போது உன்னை நன்றாகக் கவனித்துக்  கொள்ளச்சொன்னான். உனக்கு ஒன்று தெரியுமா? ஜோ இந்த உலகத்திலேயே உண்மையாகக் காதலித்த ஒரே பெண் நீ மட்டும்தான். நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது அதை அவன் உணரவில்லை. அவன் தாமதாகவே புரிந்துகொண்டான், துரதிருஷ்டசாலி'

‘நான் வேலை தேடிச்செல்கிறேன். கொஞ்சம் பணம் சம்பாதித்தபின் உன்னை வந்து அழைத்துச் செல்கிறேன். இருவரும் ஒன்றாகவே இனி இருப்போம். உன்னைக் கவனமாகப்  பார்த்துக் கொள்வேன்’ எனக்கூறி அவளிடம் விடைபெறுகிறான் ஜோ. கனத்த மனதுடன் புதிய மனிதனாகத் திரும்பும் ஜோ தனது ஒலிப்பதிவுக் கருவியை இயங்கச் செய்கிறான். அவன் சந்தித்த மனிதர்கள் படப்பிடிப்பின்போது பேசிய வார்த்தைகள் ஒலிக்க, அந்தக் காட்சிகள் அவன் மனத்திரையில் விரிகின்றன. இறுதியாக பெயாதாவின் காட்சிகளுடன் படம் நிறைவடைகிறது.

ஆரம்பத்தில் பெயாதாவிடம் பேசும்போதே ஜோவுக்கு அவளிடம் ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது. அவள் அவனிடம் காதல் கொள்ளும்போதும் ஜோ தன்னிலையுணர்ந்து விலகிச் செல்கிறான். அவளை மட்டும் அவன் ஏமாற்ற விரும்பவில்லை. பணம் வாங்கவில்லை. இது அவன் இயல்புக்கு முற்றிலும் மாறானது. வேறு யாராக இருந்தாலும் தனது 'தொழில்தர்ம'த்தைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் ஜோ அவளிடம் மட்டுமே மனச்சாட்சிப்படி நடந்துகொள்கிறான். வழக்கமாக 'தொழில்' நிமித்தமாக தங்குமிடங்களில் வலிய வரும் பெண்களை உபயோகித்துக் கொள்ளும் அவன், பெயாதா தயாராக இருந்தும் கண்ணியமாக இருக்கிறான்.

இறுதி சில காட்சிகளைத் தவிர படம் முழுவதும் மிகவும் நகைச்சுவை இழையோடியபடியே நகர்கிறது. ஏதோ பரீட்சைக்குத் தயார் செய்வது போல் கிராமத்தின் சின்னஞ்சிறிசுகள் முதல் இன்றோ, நாளையோ எனக்காத்திருக்கும் பெரியவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் என எல்லோருமே வசனங்களை மிகுந்த சிரத்தையுடன் மனனம் செய்து, குழுவாகத் தமது நண்பர்களுடன் அமர்ந்து ஒத்திகை பார்க்கிறார்கள். கொலைகாரக் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொள்ளும்போது அவர்களுக்கும் சினிமா ஆசைகாட்டி, அவர்களிடமே 'கைவரிசை' காட்டுதல். ஓர் இறுதிச் சடங்கைப் படமெடுக்கும் காட்சி எனச் சுவாரசியங்கள் ஏராளம்.

சிறுவன் ஒருவனை அவன் தாத்தா ஜோவிடம் அழைத்து வருவார். தன் காதலியை நினைத்து சுய இன்பத்திலீடுபட்டவாறே பேசுவதுபோல நடிக்கவேண்டும். சிறுவன் தயங்க, தாத்தா கையை அசைத்துக்காட்டி, அவனுக்கு உற்சாகமூட்டுகிறார். அவன் நடிக்கும்பொது அவன் திறமைகண்டு, உணர்ச்சி வசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுகிறார் தாத்தா.

சினிமா ஒரு போதைபோல, சிறிது சபலத்தை ஏற்படுத்தியதுமே  எல்லோரையும் முழுவதும் ஆட்கொண்டுவிடுகிறது. மகளை நடிகையாக்க விரும்பும் தாய் தன்னிடம் பணம் இல்லையென்பதால் தன்னை ஜோவிடம் கொடுக்கிறாள். சிறுவயதில் தான் நடிக்க ஆசைப்பட்டதையும், தன்னை என்ன வேண்டுமானலும் செய்துகொள் மகளை நடிகையக்கிவிடு என்று புணரும்போது  இடைவிடாமல் பேசிக்கொண்டேயிருக்கிறாள்.

கமெரா முன்னால் பேசுவது பலரையும் வழக்கம்போலப் பதற்றமாக்குகிறது. அதேபோலப் பலரை முதன்முறையாக மனம்விட்டுப் பேசவைக்கிறது. மனதில் பொத்திவைத்த யாரிடமும் பகிர்ந்திராத ரகசியங்களை, மனக்குமுறல்களைக் கொட்ட வைக்கிறது. ஊரிலிருந்து ஒதுங்கி காட்டில் திரியும் ஆட்டிடையன் வானம்,  நட்சத்திரங்கள் பற்றிக் கவிதைத்தனமாகப் பேசுவது, ஊராரினால் ஒதுக்கப்பட்ட பெண் தனது கதையைச் சொல்வது, நீண்ட காலமாக வாய் பேசாதிருக்கும் இராணுவத்திலிருந்த பெரியவர் பேச ஆரம்பிப்பது என்பன  நெகிழ்வான காட்சிகள் ஏராளம். எனக்கு மிகப்பிடித்த படமான 'சினிமா பரடைசோ', மற்றும் 'மெலினா' படங்களின் இயக்குனரான Giuseppe Tornatore இயக்கத்தில் 1995 இல் வெளியான இந்த இத்தாலியப்படம் இது!

(பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதியது)

Wednesday, March 25, 2015

திரைக்கதை எழுதலாம் வாங்க - ராஜேஷ்



ராஜேஷின் 'திரைக்கதை எழுதலாம் வாங்க' புத்தகம் கடந்தமாதத்தின் காலைப்பொழுதொன்றில் கைகளில் கிடைத்ததில், அது இந்த ஆண்டின் மிக மகிழ்ச்சியான நாளானது. இதில் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் எதுவுமில்லை. சமீப காலத்தில் இல்லை என் வாழ்க்கையிலேயே ஒரு புத்தகத்திற்காக நீண்டநாட்களாய் இவ்வளவு எதிர்பார்ப்புடன் காத்திருந்தது கிடையாது. ஆச்சரியமாக இருந்தது. 

அதற்காக நான் திரைக்கதை எழுதப்போகிறேன் என்று யாரும் பயந்துவிடாதீர்கள். சினிமா பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறது.  ஆனால் துரதிருஷ்டவசமாக நான் சிறுவயதில் அவ்வளவாக சினிமா பார்த்ததோ, தற்போதும் நிறைய சினிமா பார்ப்பதோ கிடையாது. கருந்தேள் தனது வலைத்தளத்தில் எழுதத் தொடங்கியபோதே எதிர்பார்த்திருந்தேன். உண்மையில் பத்துவருடமாகக் காத்திருந்தேன் என்றுகூடச் சொல்லலாம். டெக்னிக்கலாகத் தமிழில் சினிமா பற்றி எழுதியதைப் படிக்கவேண்டும் என்கிற ஆவலில் சுஜாதாவின் 'திரைக்கதை எழுதுவது எப்படி' புத்தகத்தை 2005 இல் யாழ்ப்பாணத்தில் தேடி, பின்னர் கொழும்புவந்து தேடியும் கிடைக்கவில்லை. ராஜேஷ் எழுதிய இந்தப்புத்தகம் சுஜாதா எழுதியதைவிடவும் விரிவாக, தெளிவாக இருக்கும் என நம்பினேன்.

ஏனெனில் சுஜாதா சினிமா டெக்னிக் பற்றிப் பேசும்போதெல்லாம் ஷங்கர், மணிரத்னம், ராஜீவ்மேனன் படங்களில் இருந்துதான் உதாரணம் காட்டுவார். அவற்றில் ஷங்கர் படம் தவிர, மற்றதெல்லாம் படுமொக்கையான உதாரணமாகத்தான் இருக்கும். தமிழின் ஏனைய சிறந்த திரைக்கதையமைப்புள்ள படங்கள் பற்றியெல்லாம் பேசியதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் தமிழ்சினிமா உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கும் இந்தப்புத்தகம் நிச்சயம் புதிதாகவே இருக்கும். சுஜாதா இருந்திருந்தால்,  இந்தப்புத்தகம் குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பார்.

இந்தப்புத்தகத்தைப் பெற்றுக்கொடுத்த தோழிகளுக்கு நன்றி. தேர்தல், நாட்டுநிலைமை தபால்துறையின் தாமதங்களால் ஒருமாதம் காத்திருந்து, பார்சலைப் பிரித்துப் புத்தகத்தைப் பார்த்தபோது முதலில் ஏமாற்றமாக இருந்தது, 'என்னடா புத்தகம் சின்னதா இருக்கே?' என்று தோன்றியது.  ஆனால் வாசிக்கத் தொடங்கியதும் அப்படித் தோன்றவில்லை.

சினிமாவிற்கான கதை என்பது சினிமாத்துறை சார்ந்தவர்களிடமிருந்து மட்டும் வரவேண்டியதில்லை. அது சாதாரணமாக என்னிடமிருந்தோ, உங்களிடமிருந்தோ, யாரிடமிருந்தும் வரலாம். நாம் எதிர்கொள்ளும் அனுபவங்கள், சாதாரணமாக நாம் பார்க்கும் சம்பவங்களிருந்தோ ஒரு சிறந்த கதை உருவாகலாம். நம்மைச்சுற்றி ஏராளம் கதைகள் இருக்கின்றன. அவற்றை நல்ல திரைக்கதையாக மாற்ற முடிந்தால் நாங்களும் திரைக்கதை ஆசிரியர்களே. அப்படித்தான் 'சூது கவ்வும்' பட இயக்குனர் நலன் குமாராசாமி எழுதியிருக்கும் சிறப்புரையும் சொல்கிறது. 'ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேளுங்கள்' என்ற தலைப்பில் திரைக்கதை எழுதுவதிலுள்ள சிக்கல்களையும், ஒரு திரைக்கதையாசிரியருக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வு பற்றியும் சொல்கிறார்.

சிட் ஃபீல்டிடம் முறையாக அனுமதி பெற்று, அவரது ‘Screenplay: The Foundations of Screenwriting’ என்ற புத்தகத்தை மையக்கருத்துக்களை எடுத்துக்கொண்டு, புத்தகத்திலுள்ள 55 அத்தியாயங்களும் ஸிட் ஃபீல்டின் திரைக்கதை கோட்பாட்டை விளக்கியும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட தமிழ் சினிமா காட்சியமைப்பை விவரிக்கிறார். தவிர்க்கமுடியாத, தெளிவான காட்சியமைப்புகளுக்காக மட்டும் ஹொலிவூட். 312 பக்கங்களில் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களுடன் (வண்ணப் படங்களெனில் இன்னும் நன்றாக இருந்திருக்கும்)  அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாசிக்கக்கூடிய வகையில் தெளிவாக அச்சிடப்பட்டிருந்தாலும் சில பக்கங்கள் அநியாயத்துக்கு நெருக்கமாக இருப்பதாக எண்ணவைக்கிறது. பொருளடக்கம் இல்லாதது சிறுகுறையே, அடுத்தபதிப்பில் சரிசெய்யப்படலாம்.

புத்தகம் சிட் ஃபீல்டின் 3 Act Structure முறையிலமைந்த திரைக்கதையமைப்பை அடிப்படையாகக் கொண்டது. முதல் அத்தியாயத்தில்  Setup, Confrontation, Resolution பற்றியும் திரைக்கதையை ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு நகர்த்தும் இரண்டு Plot point கள் பற்றியும் சுருக்கமாக கூறிவிட்டு, 'ஆரண்ய காண்டம்' படத்தின் காட்சிகளூடாக விவரிக்கப்படுகிறது.  ஷொட், ஸீன், சீக்வென்ஸ், சப்ஜெக்ட், சப்ஜெக்டின் இரண்டு அம்சங்களான கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் போன்ற அடிப்படை விஷயங்களைப்பேசி - பின்னர் கதாபாத்திரந்தின் இயல்புகளைக் கட்டமைத்தல், பிரதான கதாபாத்திரத்தின் குறிக்கோளை இனங்காணுதல், குறிக்கோளை அடைவதற்கான இடையூறுகளை உருவாக்குதல் பற்றி விரிவாக உதாரணங்களுடன் விவரித்துவிட்டு, ஆசிரியர் நம்மிடம் கேட்டுக்கொள்வது - திரைக்கதை ஆர்வமுள்ளவர்கள் படம் பார்க்கும்போது இந்த அடிப்படை விதிகள் எப்படிப் பயன்படுத்தப்படிருக்கின்றன, அவற்றை இனங்கண்டு கொள்ளுங்கள், கவனியுங்கள் என்கிறார்.

திரைப்படமொன்றைப் பார்க்கும்போதே, அதன் திரைக்கதை கட்டமைக்கப்பட்டிருக்கும் முறையையும் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் நண்பர்கள் எனக்கும் இருக்கிறார்கள். என்னால் அப்படி முடிந்ததில்லை. படம் பார்க்க ஆரம்பிக்கும்போது ‘தெளிவாக’ இருந்தாலும் ஓரிரு காட்சிகளில் அப்படியே ஒன்றிப்போய் விடுவேன். உண்மையில் ஒரு நல்ல படம் அப்படித்தான் இருக்கவேண்டும். பார்வையாளனைத் தன்னுள் ஈர்த்துக் கொள்வதாக! திரைக்கதை அமைப்பு பற்றிப்படித்து தெரிந்து கொள்வதைவிட, நிறையப்படங்கள் பார்த்து அதன்மூலம் கட்டமைப்பைப் புரிந்துகொண்டு அதன்பின்னர் கோட்பாடுகள் பற்றி ஆராய்வது நல்லது. ஆசிரியர் ராஜேஷ் அப்படித்தான். 

அண்ணன் செங்கோவியும் அப்படியே! அவர் எழுதிக்கொண்டிருக்கும் திரைக்கதை சூத்திரங்கள் தொடரில் சொல்கிறார். "ஒரு படத்தை முதல் இரண்டுமுறை பார்க்கும்போது, கதையில் இன்வால்வ் ஆகிவிடுவோம். அதன்பிறகு பார்க்கும்போதே, அதில் உள்ள விஷயங்கள் பிடிபடத்துவங்கும்" இந்தத் தொடரும் புத்தகமாக வெளிவந்தால் மகிழ்ச்சி. தமிழில் சினிமா தொடர்பான புத்தகங்களின் தேவை இருக்கிறது.

ஆனால் அதற்கு முயற்சிக்காத, அல்லது வாய்ப்புகள் அமையாத என்போன்றவர்களுக்கு ஒரு படத்தை அதன் கட்டமைப்பு தொடர்பில் எப்படி அணுக வேண்டும் எனச்சொல்கிறது இந்தப்புத்தகம்.

எல்லாவற்றையும் விவரித்துவிட்டு இறுதியில், திரைக்கதை எழுதும்போது உண்டாகும் சோர்வு மன உளைச்சல் பற்றிச் சொல்கிறார். ஒருகட்டத்தில் சிக்கி, முற்றிலும் தடைபட்டுப்போய் நமக்கு இதெல்லாம் சரிப்படாது என்கிற நிலை வரும் - அது இயல்பாக எல்லோருக்கும் நேர்வதுதான், அதையெல்லாம் கடந்து வாருங்கள் என்கிறார்.

என்வரையில், இது வழமையாக நாம் சொல்லிக் கொள்வதுபோல ஒரே மூச்சில் வாசிப்பதுபோன்ற புத்தகமல்ல. சில பக்கங்கள் கடந்து போவது அவ்வளவு கடினமானது. ஆசிரியர் உதாரணங்காட்டும்தமிழ்சினிமாக் காட்சிகளை, கட்டமைப்புகளை நாமும் யோசித்துப் பார்க்கபோய் அப்படியே ஒரு சுற்று போய்வர.... சவாலாகவே இருந்தது. திரைக்கதை எழுத, கட்டமைப்பைப் புரிந்துகொள்ள ஆர்வமுள்ளோருக்கு நல்லதோர் தோழனாக இருக்கும்.  

Go Write your  Screenplay எனக்கூறி முடிக்கும் ராஜேஷ், திரைக்கதை எழுத விரும்பும் ஒருவருக்கேனும் இந்தப்புத்தகம் உபயோகப்பட்டால எழுதப்பட்ட லட்சியம் ஈடேறிவிட்டது என்கிறார். இப்படியொரு புத்தகத்தை எழுதியதற்காக மகிழ்ச்சியுடன் நாமும் அவர் பாணியில் சொல்லிக் கொள்ளலாம்..... Cheers!

Saturday, March 14, 2015

மச்சி இருக்கிறியாடா?

"மச்சி இருக்கிறியாடா?"

நீண்ட நாட்களின் பின்னரான சஞ்சய்க்கும் எனக்குமான செல்பேசி உரையாடல் இப்படித்தான் ஆரம்பிக்கும்.

அதென்னவோ தெரியவில்லை. உரையாடலின் ஆரம்பத்தில் இருவருக்குமே நாம் உயிருடன் இருக்கிறோமா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. நண்பர்களுக்கிடையே தொடர்புகளைப் பேணிக் கொள்வதில் நான் மிகுந்த சோம்பேறி. நம் நண்பர்களும் அப்படியே இருப்பதால் பிரச்சினையேயில்லை. மிக நெருக்கமான நண்பர்களாயிருந்தாலும் அடிக்கடி என்றில்லை, அவ்வப்போதுகூடப் பேசுவதில்லை. நேரில் சந்திக்கும்போது பத்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தாலும் விட்ட இடத்திலிருந்து அதே பழைய தொனியில் பேசிக் கொள்வோம்.

‘மச்சி இருக்கிறியாடா?’ என்பது பின்னர், ‘மச்சி வேலையை விட்டுட்டியாடா?’ என்பதாக மாறிவிட்டது. பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை சடுதியாக விட்டுவிடுவது, வேறு வேலைக்குத் தாவுவது என்பதெல்லாம் இப்போது அவ்வளவு அதிர்ச்சி கொடுக்கும் விஷயங்கள் எனில், நீங்கள் முப்பது வருஷம் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்ந்த அரசாங்க உத்தியோகத்தர் அல்லது ஒரே வேலையில் உறுதியாக நின்று வாழ்ந்துவிட முடிவெடுத்துவிட்ட இலட்சிய இளைஞர். சடுதியாக வேலையை உதறிவிடும் சாகசங்களை இருவரும் மாறி மாறி நிகழ்த்திக் கொண்டிருந்ததால் மச்சி வேலையை விட்டுட்டியா? அதே வேலையா? என்பதெல்லாம் சாதாரண விசாரிப்புகள் மட்டுமே!

சில நாட்களுக்குமுன் அவனுடன் எப்படியும் பேசிவிடவேண்டும் என நினைத்தேன்.  அது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. அவன் பெயரில் குறைந்தது நான்கு தொலைபேசி எண்கள் என் செல்பேசியில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அதைவிட ஆறு இலக்கங்களை அவன் மாற்றியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முயன்று பார்த்தேன். முடியவில்லை. நாங்கள் இருவரும் பேசி மூன்று வருடங்களாகியிருந்தது. இது மிகப்பெரிய இடைவெளிதான். 

திருகோணமலையில் அலுவலகத்தில் நான் மட்டுமே தனியாக இருந்த இனிய காலைப் பொழுது. சுழல் இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து அருகிலிருந்த இன்னோர் இருக்கையில் கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, கைகளைத் தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தேன். ரிசர்சன் காரணமாக வேலையிழந்து, வழமைபோல பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்ததில் நீண்ட இடைவெளியாகி, வாழ்க்கையில் அடிபட்டு நொந்து நூடுல்ஸாகி பிறகு கிடைத்திருந்தது வேலை.

இனியொருதரம் அப்படி ஒரு சம்பாவிதம் நிகழ அனுமதிக்கக் கூடாது என நினைத்துக் கொண்டேன். விளையாட்டுத்தனம் இல்லாமல் இந்த ப்ராஜெக்ட் முடியும்போது இன்னொன்றில் இணைந்துவிட வேண்டும். இந்த நினைப்பும் கடையில் சாப்பிட்ட முட்டை பரோட்டாவும் அந்தக் காலை வேளையில் மிகுந்த உற்சாகத்தையும் ஒருவித மமதையையும், கிறக்கத்தையும் ஒருங்கே கொடுத்தது. அப்படியே தலையை நன்கு பின்னுக்குச் சாய்த்து வலது பக்கமாக முப்பது டிகிரி கோணத்தில் சரித்து மேலே சீலிங்கைப் பார்க்கையில், மனதில் பறவைகள் கிரீச்சிட்டன. ஒரு கிட்டார் ஒலிக்க, தொடர்ந்து வயலின்கள் ரட்ரட்ரா ரட்ரட்ரா .. 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலின் ஆரம்ப இசை தொடங்கவும் என் செல்பேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது. சஞ்சய் காலையிலேயே அழைத்தான்.
"---" 
"மச்சி வேலைய விட்டுட்டியா?"
"டாய்.... ^%@&#%^&#** ^$%#&#^@#$&&" 

சின்ன வயதில் முத்திரை சேகரித்தது, ஸ்டிக்கர் சேகரித்ததுபோல தொலைபேசி இலக்கங்களைச் சேகரிக்கும் வினோதமான பழக்கம் ஏற்பட்டிருக்குமோ எனச்சந்தேகிக்கும் வகையில் சஞ்சய், அவ்வப்போது நடந்துகொள்வான்.

வெள்ளவத்தையில் ஐபிசி ரோட்டைக் கடந்து வருகிற நண்பனை, இங்கே கொமர்ஷல் வங்கிக்கு அருகே நின்று தூரப்பார்வையிலேயே கண்டுபிடித்து, உற்சாகமாகக் கையசைத்து இடையில் நடந்துசெல்லும் ஏராளமானோரைக் குழப்பி, சடுதியாக வீதியின் குறுக்காக ஓடிக்கடந்து கார்கில்ஸ்க்கு முன்னால் வழிமறித்து...உஸ்ஸ் மூச்சு வாங்கி.... "மச்சி உன்ர நம்பரை மிஸ் பண்ணிட்டன்டா ஒருக்கா சொல்லு!" என்பான்.

இரவு ஏழு மணிக்கு, தூரத்தில காட்டி கேட்பான்.
"மச்சான் அவன தெரியுமாடா? எங்கயோ பாத்த மாதிரி இருக்கு"
"கேர்ள் ஃபிரண்டோட வர்றாண்டா எப்பிடிறா எங்களுக்குத் தெரிஞ்சவனா இருப்பான்?" 
சொல்லி முடிக்கமுதலே வந்தவனை வழிமறித்து, "மச்சான் நீ மணில படிச்சனிதானே?"
யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலம். இரவு. திடீரென ரோட்டில் ஒருத்தன் கருப்பு சட்டை போட்டுக் கொண்டு வழிமறித்து சம்பந்தமில்லாமப் பேசுறானே என அவன் பீதியாகி முழிச்சிட்டிருப்பான்.

சஞ்சய் கன்டினியூ பண்ணுவான், "ஏழாம் ஆண்டில... மணி டியூஷன்.... விடிய ஆறு மணி.... வேலாயுதத்திட்ட மத்ஸ்.. சிவப்புக் கலர் முக்காச் சைக்கிள்ள நீ வருவ இல்ல.."
"ஆமால்ல"

இப்போ அவனுக்குள்ளயும் ஒரு லாலாலா மியூசிக் கேட்டு, வளையம் வளையமா ஃபிளாஷ்பாக் ஒப்பினாகி சீனுக்குள்ள போயிருப்பான். தொடர்ந்து ஃபீலிங்க்ஸ்லயே பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஐந்துநிமிடங்கள் கடக்கும். அதுவரைக்கும் இன்முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காதலியின் பார்வை இப்போது வன்முகமாக மாறுவது போலிருக்கும். ஆனால் சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் கண்டுக்காமலே, 'மச்சி கார்த்திக் இப்ப எங்க?', 'டேய் ரமணன் அப்பவே போயிட்டான்ல?' பசங்களின் வழக்கப்படி லிங்க் பண்ணி லிங்க் பண்ணி பேசிக்கொண்டே போவார்கள். திடீரென்று ஓரிடத்தில ஸ்ட்ரக் ஆகி இப்போ எதுக்கு இந்தக் கதை வந்திச்சுன்னு யோசிக்கிறவரைக்கும்.

இப்போது காதலி கணிசமான அளவு கடுப்பாகியிருப்பார். தனியாகப் போனதும் காதலனுக்கு கண்டபடி திட்டு விழலாம். குட்டுக் கூட விழலாம். அது அவன் பிரச்சினை. ஆனால் இப்போ? லைட்டா எங்களப் பார்க்கிற பார்வையிலேயே அப்பிடியே மைண்ட் வொயிஸ் கிளியராக் கேட்கும்.

‘யார்ரா நீங்கெல்லாம்? எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க? இருந்திருந்து எப்பவாவது இப்பிடி ஒண்ணாச் சேர்ந்து வெளிக்கிட்டா சந்திக்குச் சந்தி நிண்டு தொலைக்கிறீங்க... உங்களுக்கெல்லாம் வாழ்க்கைல கேர்ள் ஃபிரண்டே கிடைக்க மாட்டாடா....காலம் முழுக்க மொட்டப் பசங்களாவே சந்தில நிப்பீங்கடா!’. நாங்களும் பழைய பாரதிராஜா படங்களில் வருவதுபோல, சின்னப்பையன் அறிவுபூர்வமாகக் கேள்விகேட்டதும் ஞானம் பிறந்து, மானசீகமாக கன்னத்தில் சப் சப்பென்று அறை வாங்கும் ஊர்ப்பெருசு போல போஸ் கொடுப்போம்.

இது எதையுமே கவனிக்காம பேசிட்டிருந்த நம்மாளுங்க ஒரு மாதிரியா நிகழ்காலத்துக்கு வந்து, 'மச்சி உன் நம்பர சொல்லுறா' சின்சியராக பரிமாறிக் கொள்வார்கள். அப்பதான் ஒரு சந்தேகம் வரும். உண்மையிலேயே சஞ்சய் அவனுக்கு ஃபோன் பண்ணுவானா? இல்ல அவன்தான் இவன் நம்பர வச்சிருப்பானா? கொஞ்ச தூரம் போனதும் அவன் காதலியே அந்த நம்பர கடுப்பில டிலீட் பண்ணிடுவாளா? ஆனா ஒண்ணு நம்மாளு புதுசா ஒரு நம்பர கலக்சன்ல சேர்த்துட்டான். அங்கதான் நிக்கிறான்.

ஆனால் சஞ்சய் தொலைபேசி இலக்கங்களை அப்படியே வைத்திருப்பான் என்பது நேற்றுத்தான் தெரிந்தது. அவன் ஒன்றரை வருடங்களாக லண்டனில் இருக்கிறானம். விடுமுறையில் வந்திருக்கிறான். இந்தமுறை வித்தியாசமாக பேசினான்,
"மச்சி எங்க இருக்கே?"

Tuesday, February 10, 2015

Good Bye, Lenin! (2003)



தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அது தொண்ணூற்று ஏழாம் ஆண்டு. இந்திய அணி களத்தடுப்பிலிருந்தது. எங்கள் எண்பது வயதுப் பாட்டியம்மாவும் கண்களைச் சுருக்கியவாறு பார்த்துகொண்டிருந்தார். திடீரென்று அசுவாரசியமாகச் சொன்னார், "என்ன பழைய ஆக்கள் ஒருத்தரையும் காணேல்ல". நான் உட்பட கூடி இருந்து பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் சிரித்தோம். பாட்டியம்மா கிரிக்கெட் பற்றிப்பேசியதுதான் பலருக்கும் புதினமாகத் தெரிந்தது. சற்று யோசித்துப் பார்த்ததில் பாட்டியம்மா கடைசியாக ஒரு கிரிக்கெட் போட்டியைச் சாவகாசமாக அமர்ந்து பார்த்தது யாழ்ப்பாணத்தில் எண்பத்தேழு, அதற்குமுதல். ஆக, அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. 

ஆனால் சிலவேளைகளில் மிக அநியாயமாகவும் அவர் பேசுவதுண்டு. இரண்டாயிரத்து மூன்றாமாண்டு அவர் வீட்டிற்கு எதிரே ஒரு பெரிய மூன்று மாடி வீடொன்று கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. வீட்டு கேற்றடியில் என்னுடன் வந்து நின்றவர், இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு கண்களால் அளவெடுப்பதுபோன்ற தோரணையுடன் பார்த்துச் சடுதியில் ஒரு ‘எஸ்டிமேட்’ போட்டிருந்தார். கொஞ்சம் அதிர்ச்சியடைந்தவர்போலப் பேசினார். ‘எவ்வளவு பெரிய வீடு, கட்டி முடிக்க எவ்வளவு காசு செலவளியும்! ம்ம்ம்… எப்பிடியும் ஒரு லட்சம் தாண்டும்’ என்றாரே பார்க்கலாம். மயக்கம் போடாத குறையாக அப்படியே வெலவெலத்துப் போய்ப் பார்த்தேன். அவர் சீரியசாகத்தான் பேசினார். 

அவர் போட்ட கணக்கு எத்தனையாம் ஆண்டிற்கானது என்பது புரியவில்லை. அந்த ஆண்டின் நாணயப் பெறுமதியைத் தாண்டி அவர் வரவில்லை, அங்கேயே தேங்கிவிட்டார் போலும். வயதானவர்களுக்கான பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கவேண்டும். காலையில் என்ன சாப்பிட்டார்கள் என்பது நினைவிருக்காது. இருபத்திரண்டு வயதில் நடந்த கதையை அவ்வளவு துல்லியமாக நினைவு வைத்துச் சொல்வார்கள். அவரிடம் போய் இன்றைய நிலவரத்தைச் சொல்வது அவசியமில்லை. இன்னும் சில ஆண்டுகளோ மாதங்களோ வாழப்போகும் பெரியவர்களிடம் போய் அவர்கள் ஆழமாக நம்பும் ஒரு விடயத்தை எதற்குக் குழப்ப வேண்டும்? இறுதிக்காலத்தில் ஏன் வீணான மன உளைச்சலை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்?

ஓர் உண்மையைச் சொல்லாது விடுவது அப்படியொன்றும் கடினமானதல்ல. ஆனால் நாம் வாழும் சூழலில், கண்ணெதிரே நிகழும் சடுதியான மாற்றத்தை நம் அன்புக்குரிய ஒருவரிடம் மறைப்பதற்காகப் பொய் சொல்லவேண்டி நேர்ந்தால் அது எவ்வளவு சவாலானதாக இருக்கும்? அலெக்ஸுக்கு அப்படியொரு சிக்கல்தான். கொள்கைவாதியான, தேசத்தை மிகவும் நேசிக்கும் ஒருவருக்கு தாய்நாட்டில் சடுதியாக ஏற்படும் அரசியல் மாற்றங்கள், வாழ்நாளில் கற்பனை செய்தேயிராத காட்சிகளை எதிர்கொள்வது தீராத மன உளைச்சலையே கொடுத்துவிடும். சிறு அதிர்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாத மோசமான உடல்நிலையிலுள்ள தன் தாயாரிடமிருந்து நாட்டில் நிகழும் முக்கியமான மாற்றங்களை மறைக்க வேண்டிய சூழ்நிலை அலெக்ஸுக்கு.

1978 சிறுவயது அலெக்ஸ் தனது அக்காவுடன் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறான். கிழக்கு ஜெர்மன் உலகளாவிய ரீதியில் பெருமைப்படும் விதத்தில் அவர்கள் நாட்டு வீரர் Sigmund Jahn விண்வெளிக்குப் போவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் வீட்டில் அந்த அதிர்ச்சியான சம்பவம் தெரியவருகிறது. அலெக்ஸின் அப்பா, அவன் அம்மாவைப் பிரிந்து மேற்கு ஜெர்மனியிலுள்ள பெண்ணுடன் சென்றுவிட்டார். அம்மா உடைந்துவிடுகிறாள். சிலநாட்கள யாருடனும் பேசுவதில்லை. பிரமை பிடித்தவள்போல இருக்கிறாள். பின்பு மிகத் தெளிந்துவிடுகிறாள். சோஷலிச கருத்தாளராகவும், ஆளும்கட்சியின் ஆதரவாளராகவும் மாறி நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துச்சேவை செய்கிறாள். சிறந்த மக்கள் சேவைக்கான உயர்ந்த விருது பெறுகிறாள். தனது சோஷலிச நாட்டையே மணந்துகொண்டவள் போல மாறிவிடுகிறாள்.

பத்து வருடங்கள் சென்றபின்பு, இளைஞனான அலெக்ஸ் அரசாங்க எதிர்ப்புக் கொள்கைகளோடு வளர்கிறான். அம்மாவின் சோஷலிச கொள்கைகளை, அரசாங்கச் செய்திகளைச் சலிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். கிழக்கு ஜெர்மானியக் குடியரசின் நாற்பதாவது ஆண்டுவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றுமாலையே நூற்றுக்கணக்கானவர்கள் சோஷலிச அரசாங்கத்திற்கு எதிராக ஊர்வலம் செல்கிறார்கள். எமக்குப் பத்திரிகைச் சுதந்திரம் வேண்டுமென்று கோஷமிடுகிறார்கள். காரில் வந்துகொண்டிருக்கும் அம்மா சோஷலிசத்துக்கு எதிரான அந்தக்கூட்ட்டத்தை அதிர்ச்சியுடன் பார்க்கிறாள். அந்தக்கூட்டத்தில அலெக்ஸ் இருப்பதையும், அவனை போலீசார் இழுத்துச் செல்வதையும் பார்த்த அதிர்ச்சியில் மயங்கிவிழுகிறாள்.

மருத்துவமனையில் சோகமாக நிற்கிறான் அலெக்ஸ். ஹார்ட் அட்டாக் வந்து அம்மா கோமாவில் இருக்கிறாள். அவளுக்கு நினைவு திரும்புமா, மீண்டும் இயல்புக்கு வருவாளா என்பது பற்றி எதுவும் கூற முடியவில்லை என்கிறார் மருத்துவர். அரசாங்க எதிர்ப்பு ஊர்வலத்தில் தன்னைக் கவர்ந்த அழகிய பெண் லாரா, அந்த மருத்துவமனையில் தாதியாகக் கடமையாற்றுவது தெரிகிறது. இருவரும் நெருங்கிவிடுகிறார்கள்.

எட்டு மாதங்களின் பின்னர் அம்மாவுக்கு நினைவு திரும்புகிறது. எல்லோருடனும் பழையபடி பேசுகிறாள். அதுகுறித்து ஆச்சரியம் தெரிவிக்கும் மருத்துவர் அம்மாவின் மூளை பாதிப்படைந்திருப்பதால் ஒரு சிறு அதிர்ச்சியும் அவளது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என எச்சரிக்கிறார். அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவதுதான் பாதுகாப்பானது எனமுடிவுசெய்கிறான் அலெக்ஸ். அக்கா அது சரியான முடிவல்ல என்கிறாள். அலெக்ஸ் பிடிவாதமாக இருக்கிறான். இபோதுள்ள நாட்டின் நிலைமை அம்மாவுக்குத் தெரிந்துவிடவே கூடாது என அதற்கேற்ப ஒவ்வொன்றையும் திட்டமிடுகிறான். அது ஒன்றும் அவ்வளவு இலகுவானதாக இல்லை.

அம்மா சுயநினைவின்றியிருந்த நாட்களில் அப்படி என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து முடிந்திருகின்றன? கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் உடைக்கப்பட்டுவிட்டது. இருநாடுகளும் ஒன்றிணைந்துவிட்டன. சடுதியாக எல்லாமே மாறிவிட்டன. கொக்காகோலா முதலில் வந்துவிடுகிறது. மதுவிடுதிகள் வந்துவிட்டன. நீலப்பட கஃபேக்கள், நைட் கிளப்கள் வந்துவிட்டன. வீதியில், வாகனங்களில் சத்தமாகக் கடவுள் வாழ்த்துச் சொல்லிக் கோஷமிட்டுச் செல்லும் இளைஞர்கள். பொதுத்தேர்தல் நடைபெற்றிருக்கிறது. மேற்கத்தியப் பொருட்கள், துரித உணவுக்கடைகள் அறிமுகமாகிவிட்டன. அலெக்ஸின் அக்கா, கல்லூரிப்படிப்பை நிறுத்திவிட்டு, 'பேகர் கிங்' இல் வேலை செய்கிறாள். அவளுக்கு ஒரு மேற்குக்காதலன் இருக்கிறான். சாதாரண மக்கள் பலர் தங்கள் வேலையை இழக்கிறார்கள். அலெக்ஸ் டிஷ் அண்டெனா விற்கும் கடையில் வேலை செய்கிறான். வீட்டில் யன்னல் திரைச்சீலை முதற்கொண்டு மேற்கத்தைய, நவீன பாணிக்கு மாறிவிட்டது. 

இப்போது மீண்டும் அம்மாவின் அறையைப் பழையபடி, எட்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே நண்பனின் உதவியுடன் மாற்றுகிறான் அலெக்ஸ். காதலி லாராவின் உதவியுடன் அம்புலன்சில் அம்மாவை வீட்டுக்கு அழைத்துவருகிறான். வரும் வழியில் வானொலிச் செய்தி அறிவிக்கிறது, 'கிழக்கு ஜெர்மனிப் பணம் இன்னும் இரண்டு வாரங்களுக்குமேல் செல்லாது உடனே மாற்றிக் கொள்ளுங்கள்'. செய்தி அம்மாவுக்குக் கேட்டுவிடாமல் ஒலியைக் குறைக்கச் சொல்கிறான். அக்கம்பக்கத்தில் யாரும் அம்மாவுடன் பேசவிடாதபடி பாதுகாப்பாக அறைக்குக் கொண்டுவந்துவிடுகிறான். படுக்கையிலிருக்கும் அம்மாவை மாறி மாறிக் கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறார்கள் அலெக்ஸும் அவன் சகோதரியும். 'அறையில் ஒரு டீவி இருந்தால் பார்த்துக் கொண்டிருக்கலாம்' என்கிறாள் அம்மா. நண்பன் உதவியுடன் நாடு இணைவதற்கு முன்னரான பழைய செய்திகளடங்கிய காசெட்டுகளைப் பக்கத்து அறையில் இருந்து அம்மாவின் டீவியில் தெரியச்செய்கிறான்.

அம்மாவின் பிறந்தநாள் வருகிறது. அம்மாவின், வயதான இயக்கத் தோழர்களைச் சந்தித்து நாட்டின் மாற்றங்கள் எதுவும் அம்மாவுக்குத் தெரியவேண்டாம் எனச் சொல்லிப் பிறந்தநாளுக்கு அழைக்கிறான். அந்தக் குடியிருப்பில் இருக்கும் சிறுவர்களுக்கு அம்மா சொல்லிக் கொடுத்த நாட்டுப்பற்றுப் பாடல்களைப் பாடவேண்டும் என பணம் கொடுத்துக்கேட்டுக் கொள்கிறான். எல்லாம் திட்டமிட்டபடியே நடக்கிறது. எல்லோரும் அலெக்ஸ் சொல்லிக் கொடுத்தபடியே மிகுந்த படபடப்புடன் கஷ்டப்பட்டுப் பொய் சொல்கிறார்கள். அம்மா மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். எல்லோரும் ஆசுவசமடைந்து கொள்ள. அலெக்ஸ் இறுதியாகப் பேசுகிறான். ஆனால் அம்மாவின் பார்வை மாறுகிறது. குழப்பத்துடன் அலெக்ஸை அழைக்கிறாள். 'என்ன அது?' என்கிறாள். எல்லோரும் அவள் பார்த்த திசையில் யன்னலூடு பார்கிறார்கள். அங்கே சற்றுத் தொலைவிலுள்ள கட்டடத்தின் சுவரில் பிரமாண்டமாகக் கோக்காகோலாவின் பானர் கட்டித் தொங்கவிடப்படுகிறது. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கும் என அப்போதைக்கு அம்மாவைச் சமாதானம் செய்கிறான். பின்பு, அதற்கும் நண்பன் உதவியுடன் ஒரு கதையைத் தயாரித்துச் சமாளிக்கிறான் அலெக்ஸ்.

ஒருமுறை அலெக்ஸ் கதிரையில் அமர்ந்தவாறே தூங்கிக்கொண்டிருக்கிறான். அம்மா மெதுவாகக் கட்டிலை விட்டிறங்குகிறாள். தன்னால் நடக்கமுடிகிறது என்கிற மகிழ்ச்சியுடன் நிதானமாக, மெதுவாக வீட்டிலிருந்து விதிக்கு இறங்குகிறாள். அங்கே அவள் பார்க்கும் காட்சிகள் அதுவரை அவள் காணாதவையாக இருக்கின்றன. கீழே புதிதாகக் குடிபுகும் குடும்பமொன்றின் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு இயேசு படம் இருக்கிறது. அவர்கள் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் எனத்தெரிந்து குழப்பமடைகிறாள். பெரிய அளவிலான பிரேசியர் விளம்பரத்தட்டி, புதிய கார்கள் எல்லாவற்றையும் காண்கிறாள். உச்சகட்டமாக ஒரு ஹெலிகொப்டரில் கட்டித் தூக்கிச்செல்லப்படும் லெனின் சிலை. அதேநேரம் அவளைத்தேடி வரும் அலெக்ஸ் மீண்டும் வீட்டுக்குக் கூட்டிச்செல்கிறான்.



மறுநாள் அலெக்ஸின் ஏற்பாட்டில், அவன் நண்பன் வாசிக்கும் டீவி செய்தியில் புதிய தகவல்கள் வெளிவருகின்றன. அதாவது, மேற்கு ஜெர்மனியில் முதலாளித்துவத்தை எதிர்க்கும் ஏராளம் மக்கள் கிழக்குக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டியது நமது கடமை என்கிறது செய்தி. அம்மா நம்பி விடுகிறாள். அப்படியே வெளியில் பார்க்கிறாள். ஏராளமான புதியரக கார்கள் வீதியில் செல்கின்றன. ‘இவ்வளவு அகதிகளா? அவர்களுக்கு நாம் உதவவேண்டும்’ என்கிறாள். 

அம்மாவை ஊரில் பழைய வீட்டுக்குக்குக் கூட்டிச் செல்ல முடிவு செய்கிறான் அலெக்ஸ். ஆனால், வீதியில் செல்லும்போது மாற்றங்கள் தெரிந்துவிடும். எனவே 'சஸ்பென்ஸ்' என்று கண்களைக் கட்டிப் புதிதாக வாங்கிய காரில் குடும்பமாக அழைத்துச் செல்கிறார்கள். அங்கே தன் கணவனுடன் வாழ்ந்த நாட்களை நினைவு கூர்கிறாள். அவர் தனக்கும் பிள்ளைகளுக்கும் எழுதிய கடிதங்களை மறைத்துவிட்டதைச் சொல்கிறாள். பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்கிறாள். ஒருமுறை தன் கணவரைப் பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். அன்று அவள் உடல்நிலை மோசமடைகிறது. இம்முறை உயிர் பிழைப்பது கடினம் என்கிறார் மருத்துவர். அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற அப்பாவை அழைத்து வருகிறான் அலெக்ஸ். அவரிடமும் நாடு பற்றி எதுவும் சொல்லிவிட வேண்டாம் எனக்கேட்டுக் கொள்கிறான்.

இரு நாடுகளும் ஒன்றிணைந்த நாளின் கொண்டாட்டம் நிகழவிருக்கிறது. அதற்கு ஓரிரு நாட்கள் கழித்துத்தான் பழைய சோஷலிசக் குடியரசுதினம். ஆக, இந்தக் கொண்டாட்டத்தை குடியரசுதினக் கொண்டாட்டமாக மாற்றிவிடலாம் என முடிவுசெய்யும் அலெக்ஸ் முதற்கட்டமாக அம்மா தூங்கும்போது நாட்காட்டியில் சில தாள்களைக் கிழிக்கிறான். நண்பனுடன் இணைந்து ஒரு செய்திப்படம் தயாரிக்கிறான். அவர்கள் தயாரித்த மிகச்சிறந்த படம் இதுதான் என்கிறான் நண்பன்.

அம்மாவுடன், அலெக்ஸ், அக்கா, லாரா எல்லோரும் அமர்ந்து டீவி பார்க்கிறார்கள். விசேட செய்தி விவரணங்களுடன் ஒளிபரப்பாகிறது. கிழக்கு ஜெர்மன் தலைவர் பதவி விலகுகிறார். ஸ்டேட் கவுன்சில் சேர்மனான முன்னாள் விண்வெளி வீரர் சிக்மண்ட் ஜான் உரையாற்ற வருகிறார். ‘ஜான்?’ அம்மா ஆச்சரியத்துடன் கேட்கிறாள். ஆமாம் ஜானாக மாறியிருக்கும், அலெக்ஸ் சந்தித்த வாடகைக்கார்ச்சாரதி உரையாற்றுகிறார். அந்த உரையில் முக்கியமாக, தாங்கள் எதிரிகளாகக் கருதிய மேற்கு ஜெர்மன்காரர்கள் ஆயிரக்கணக்கில் சென்ற வருடம் தமது நாட்டில் வாழ விரும்பி வந்ததைக் குறிப்பிடுகிறார். ‘சோஷலிசம் என்பது எங்களைச் சுற்றிச் சுவர் எழுப்பிக் கொள்வதல்ல. எல்லோரோடும் இணைந்து வாழ்வதே, கனவு மட்டும் காண்பதல்ல, அதைச் செயற்படுத்துவதே, அதனால் பெர்லின் எல்லையைத் திறக்க முடிவு செய்தேன்’ என்கிறார். தொடர்ந்து பெர்லின் சுவர் உடைக்கப்படுவதையும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடுவதும் காண்பிக்கப்படுகிறது.

அலெக்ஸ் இடையிடையே அம்மாவைத் திரும்பிப் பார்க்கிறான். புன்னகைக்கிறான், அம்மாவும். அம்மா இம்முறை செய்திகளைக் கவனிப்பதைவிடவும் ஆர்வமாக அலெக்ஸை அவனறியாமல் பார்க்கிறாள், அர்த்தம் பொதிந்த அழகான புன்னகையுடன்! அவை பொய்யான செய்திகள் என்பது அவளுக்குத் தெரியும். எனினும் அலெக்ஸுக்காகப் பார்வையில் ஆச்சரியம் காட்டுகிறாள். அம்மாவுக்கு அன்று காலையிலேயே நாடுகள் ஒன்றிணைந்துவிட்ட செய்தியைச் சொல்லிவிடுகிறாள் லாரா. செய்திப்படம் முடிந்ததும் அலெக்ஸை மகிழ்ச்சியுடன் பார்த்துப் புன்னகைக்கிறாள். வாணவேடிக்கைகள் ஆரம்பமாகின்றன. இரவு முழுவதும் தொடர்கின்றன. சிறுபுன்னகையுடன், மனநிறைவுடன் கண்களை மூடுகிறாள் அம்மா.

அம்மாவின் ஆசை அவளது சாம்பல் சுதந்திர சோஷலிச நாட்டின் காற்றில் கலக்க வேண்டுமென்பது. அதன்படி சாம்பலை ஒரு வாணவேடிக்கை ரொக்கட்டில் வைத்து வானத்தில் வெடிக்கவைக்கிறான் அலெக்ஸ். அப்பா, குடும்பத்துடன் அக்கா, லாரா, அம்மாவின் பழைய தோழர்கள் எல்லோரும் உடனிருக்கிறார்கள். 'அம்மாவின் இறுதி மூச்சுவரை நம்நாடு அவள் நம்பியபடியே இருப்பதாக நாம் பார்த்துக் கொண்டோம். அப்படி இனி ஒருபோதும் ஆகிவிடாது என்கிறபோதிலும், அம்மாவின் நினைவுகளில் நாடும் அப்படியே இருக்கும்' என்கிற அலெக்ஸின் குரலுடன் படம் முடிகிறது.

ஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரக் கொள்கை மாற்றம் எப்படியெல்லாம் அன்றாடவாழ்வில் சடுதியாகப் பிரதிபலிக்கிறது? அம்மா வருடக்கணக்காக உழைத்துச் சம்பாதித்த பழைய பணத்தை வங்கிக்குக் கொண்டு செல்கிறான் அலெக்ஸ். காலக்கெடு இரண்டு நாளுக்குமுன் முடிந்துவிட்டதால் வங்கியில் மாற்றிக்கொடுக்க மறுக்கிறார்கள். விரக்தியுடன் அவ்வளவு பணத்தையும் கிழித்து எறிகிறான் அலெக்ஸ்.

அம்மா கேட்கும், அவள் விரும்பும் ஊறுகாய்ப் போத்தல்கூட எங்கும் கிடைக்கவில்லை. பல்பொருள் அங்காடியில் இருப்பவை ஹொலண்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்கிறார்கள். இறுதியில் அலெக்ஸ் குப்பைத் தொட்டியிலிருந்து வெற்றுப்போத்தலை எடுத்து, சுடுநீரில் அவித்து, அதற்குள் புதியதைக் கொட்டி, லேபில் ஒட்டிக் கொடுக்கிறான். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் மினக்கெடுகிறான்.

அம்மாவுக்காகத் தயாரிக்கப்படும் செய்திப்படங்களுக்கான பின்னணியும், அவற்றின் பின்னாலுள்ள செய்திகளும், சோகமும் ஆழமானவை. அம்மா வீதியில் இறங்கிச்செல்லும்போது அங்கிருந்து அகற்றிச் செல்லப்படும் லெனின் சிலையின் கை தன் தோழரை நோக்கி நீளுவது போலவே அம்மாவை நோக்கி வரும் காட்சி மென்சோகத்துடன் கூடிய அழகு. Wolfgang Becker இயக்கத்தில் 2003 இல் வெளியான ஜெர்மானியப்படம் ஏராளமான விருதுகளைப் பெற்றிருந்தது.

அம்மா இறுதிச்செய்திப்படத்தைப் பார்க்கும் காட்சி மிக நெகிழ்ச்சியானது. அதுவரை தான் நம்பிக் கொண்டிருந்த கொள்கைகள், சித்தாந்தங்களின் மதிப்பீடுகள் சரிந்து போனது தெரிந்தும் புன்னகையுடன் கடந்துவிடும் அம்மாவின் மௌனம் அர்த்தபூர்வமானது. சிறுகுழந்தை சொல்லும் சாகசக்கதைகளைப் பொய்யென்று தெரிந்தே ரசிக்கும் தாயின் அன்பு மட்டுமல்ல அது. தன் அன்புக்குரியவளின் நம்பிக்கை எத்தருணத்திலும் தகர்ந்துபோய்விடக்கூடாது, என்கிற அலெக்ஸின் அர்ப்பணிப்பை முழுமையாகப் புரிந்துகொண்ட மனநிலையும்கூட. சிறுபுன்னகையுடன் லாரா பார்க்கும் பார்வையும் அதைத்தான் சொல்கிறது.

(பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதியது)

Tuesday, January 27, 2015

பேசும் கலை!


ழகாக, சுவாரசியமாகப் பேசுவது ஒரு கலை. அப்படிப்பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசுவது அதைவிடப் பெரிய கலை. சிலர் பேசும்போதே 'நான் சுவாரசியமாகப் பேசக் கூடியவன்' என்று குறிப்பிடுவார்கள். அங்கே இங்கே பராக்குப் பார்த்தவர்கள் எல்லோரும் உடனே சீரியசாகக் கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். நீங்கள் கவனித்திருக்கக்கூடும். ஆனால் அந்தப் பெண் பேசியது உண்மையிலேயே கேட்க நன்றாக இருந்தது.

"ஒரு டிக்கட் எடுத்தால் போதுமானது.. உங்கள் கேர்ள் ஃபிரண்டையும் அழைத்துச் செல்லலாம்" 

கடந்த புதுவருடத்திற்கு நான்கைந்து நாட்கள் முன்பாக, நடைபாதையில்.
கடற்கரை உணவுச்சாலை ஒன்றின் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கான டிக்கட்களை  வைத்திருந்தார்.

அந்தப்பெண்மணி 'பேரழகி'யாக இருந்தார். நீங்கள் சாருநிவேதிதாவை வாசிப்பவர்களாக இருந்தால் இந்த இடத்தில் குபீரென்று சிரித்துவிடலாம். அது உங்கள் தவறல்ல. ஆனால் இது ஒன்றும் அவர் சொல்வது போலல்ல. உண்மையிலேயே அந்தப் பெண் உண்மையிலேயே அழகி. 

அதைவிட அழகு, அந்தப்பெண் என்மீது வைத்திருந்த நம்பிக்கை. நான் கேர்ள் ஃபிரண்டை அழைத்துக் கொண்டு வருவேன் என்று நம்புகிறாரே! அந்த நம்பிக்கை எவ்வளவு பெரிய விஷயம்? அவரிடம் நான் ஓரிரு வார்த்தைகள் பேசுவதுதானே மரியாதை? பேசினேன்.

"சரி டிக்கட் நான் எடுக்கிறேன் அந்த கேர்ள் ஃபிரண்ட் எப்பிடி? நீங்கள் அரேஞ்ச் பண்ணுவீங்களா?" 

அவ்வளவுதான் நான் ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டதுபோல முறைத்துக்கொண்டே விலகிச் சென்றுவிட்டார்.


ன்னதான் நாம் அமைதியாக இருந்தாலும் சமயங்களில் எங்களையும் மீறி நம் பேச்சுத்திறன் காரணமாக வோன்டட்டாக வடைச்சட்டிக்குள் வாயை வைத்துவிடுவோம்.   

எனது ஆரம்பகால அலுவலகம். என் இரு பக்கத்திலும் இரண்டு அழகான பெண்கள் ஒருவர் கருப்பாக மெல்லிய உடல்வாகுடன் இருந்தார். மற்றையவர் மிக வெள்ளையாக முதலாமவருடன் ஒப்பிடுகையில் சற்றுப் பருமனான இருந்தார். தீவிரமாக ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.

"நீ நல்ல ஸ்லிம்மா இருக்கே"
"உன்னோட பொடி செம்ம ஷேப்பா இருக்கு"
"இல்லடி உன்னோட ஹிப் கேவ்ஸ் எல்லாம் நல்லா இருக்கு ஜிம் போறமாதிரி"
"எனக்கு உன்னோட.."

"டாய்ய்ய்...! என்ன நடக்குதிங்க.. நடுவில ஒருத்தன் இருக்கான்னு பாக்காம கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லாம மாத்தி மாத்தி புளுகிட்டு.."  - தீர்ப்பைக் கூறிவிடலாம் என்கிற யோசனையுடன் ஆரம்பித்தேன்.

சரி சரி இப்ப என்ன... ரெண்டு பேரும் கொக்காகோலா போத்திலும், ஹோர்லிக்ஸ் போத்திலும் மாதிரி இருக்கிறீங்க போதுமா?"

கொக்காகோலா சிரிக்க ஆரம்பித்தார். ஹோர்லிக்ஸ் முறைத்துக் கொண்டிருந்தார்.

"இல்ல..வெள்ளையா கோக்காகோலா இருக்காதா..எம்ப்டி கோக் போத்தில்னும் சொல்ல ஏலாது..ஒரு டைமிங்கா, ரைமிங்கா வந்திச்சா அதான்"


செல்பேசி உரையாடல்கள் நம் பேசும் கலையையை வளர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றுபவை. ஆனால் என்னதான் நாம் சுவாரசியமாகப் பேசினாலும் சமயங்களில் தோழிகள் சடுதியில் கட் செய்துவிடுகிறார்கள்.

செல்பேசியில் தோழி, "விண்ணைத்தாண்டி வருவாயா படம் பிடிக்குமா உனக்கு?"
"ம்ம்ம்...ஆங் ஒரு மாதிரியா... பிடிக்கும்.."
"அதில உனக்கு பிடிச்ச ஸீன் எது?"
"அது...வந்து..பொதுவா கவுதம் மேனன் படம்னா ஸீன் எல்லாமே..."
"உனக்கு ரொம்பப் பிடிச்ச ஸீன் எது?"
"ம்ம்ம்...அந்த கணேஷ், சிம்புகிட்ட சொல்லுவாரே ஒரு பிரச்சினைல இருக்கும்போது ஒரு பஸ் வரும். அது சரியான இடத்துக்கு கொண்டுபோகும்னு... அது ரெண்டுபேரையும் திரும்ப கொண்டுவந்து மாட்டிவிடும்ல அந்த ஸீன் பிடிக்கும்"
"ம்..."
"ஹலோ என்னாச்சு"
"ஒண்ணுமில்ல.. வேற எந்த ஸீன்?
"ஆங்..அந்த போலீஸ் ஸ்டேஷன்ல எவ்ளோ பொண்ணுங்க இருக்க ஏன் நீ இந்தப்பொண்ண லவ் பண்ணினேன்னு சிம்பு டயலாக்கையே கணேஷ் மாத்தி சொல்றது செம்மையா இருக்கும்ல"
"ம்"  
"அப்புறம் அந்த..."
"போதும்....அப்ப உனக்கு விண்ணைத்தாண்டி வருவாயால சிம்புவும் கணேஷும் வர ஸீன்ஸ்தான் பிடிச்சிருக்கு?"
"ம்ம்ம் ஆமா நல்லாருக்கும்ல"
"ம்"   
"ஏதும் தப்பா சொல்லிட்டனா?
"இல்ல..நான்தான் தப்பா கேட்டுட்டேன்"
"??"
"அப்புறம் நான் 'என்றென்றும் புன்னகை' பாத்தேன் நீ பாத்தியா?
"ஓ! அப்பவே பாத்திட்டேன்"
"அதில எந்த ஸீன் பிடிச்சிருந்துது?"
"அந்த..சந்தானம் தண்ணியடிச்சுட்டு வீட்ட வர்ற ஸீன் செமையா இருக்கும்ல ஹா ஹா ஹா... ஹலோ ஹல்லோ... ஹல்லல்லோ..."

Friday, October 24, 2014

கத்தி!



இந்த வருடம் 'நய்யாண்டி' சம்பவத்துக்குப் பிறகு, திரையரங்கில் பார்த்த ஒரே படம். முதலில் ஆர்வம் இருக்கவில்லை. திடீரென நண்பர் அழைத்ததில் சென்று பார்த்தேன். 

விஜய் - இந்தவருடம் இன்னும் நான்கு வயது குறைந்திருக்கிறது. அறிமுகப் பாடல் காட்சியில் பார்க்கும்போது இன்னும் இருபது வருடங்களுக்கு தமிழ்சினிமாவின் யுத் ஹீரோ விஜய்தான் எனத் தோன்றுகிறது. உறுதிப்படுத்தினார்கள் அந்நாளைய இளைஞர்களான பின்வரிசைச் சிறுவர்கள். நான் பார்த்த இன்றைய காட்சியில் ஐந்தாறு வயது வாண்டுகள் மட்டுமே பெரிதாகச் சத்தமிட்டார்கள், ரசித்துச் சிரித்தார்கள். என்வரையில் விஜய் பஞ்ச் டயலாக் பேசாமல் நடித்தாலே வித்தியாசமான நடிப்புத்தான். வெட்டி சவடால் பேச்சு, எரிச்சலூட்டும் தொனியில் இழுத்து இழுத்துப் பேசாமல் இயல்பாக இருக்கும் விஜயை யாருக்குத்தான் பிடிக்காது? இதில் கதிரேசன் வழக்கமான அதேசமயம் அலட்டலில்லாத கலகலப்பான விஜய். ஜீவானந்தம் நரைத் தாடி மின்ன அநியாயத்துக்கு அமைதியாக இருக்கிறார். நடிக்க வேண்டிய ஒரிருகாட்சிகளிலும் அப்படியே இருக்கிறார். ஏனென்று தெரியவில்லை. நிச்சயமாக விஜய் இதைவிட நன்றாக நடித்திருக்கக் கூடியவர்.

படத்திற்குச் சமந்தா தேவைப்படவில்லை.துரதிருஷ்டவசமாக அனிருத் இரைச்சலுடன் கூடிய சில பாடல்கள் போட்டிருந்ததால் சமந்தா கதைக்கு அவசியப்பட்டுவிட்டார். அறிமுகமாகும் காட்சியில் பக்கென்று அதிர்ச்சியளித்தார். பின்னர் பழகிவிட்டது.

'துப்பாக்கி' எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. 'கஜினி' படத்துப்பிறகு முருகதாஸ் படங்களில் ஏனோ ஒரு டீவி சீரியல் சாயல் இருப்பதாகத் தோன்றியது. துப்பாக்கியைவிடக் கத்தி நல்ல படமாகத் தெரிகிறது. கிராமத்து காட்சிகளை ஆவணப் படம்போல இல்லாமல் அதை இன்னும் ஆழமாகப் பதிய வைத்திருக்கலாம். ஏனெனில் அங்கேதான் கதை ஆரம்பிக்கிறது. பிரச்சினை சொல்லப்படுகிறது. அதன்பிறகுதான் படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. மொக்கைப் பாடல்கள் இல்லாமலே இருந்திருக்கலாம்.

படத்தில் சொல்லப்பட்டது மிக முக்கியமான சமூகப் பிரச்சினை. ஏற்கனவே சிட்டிசன், சாமுராய், ரமணா, தூள் போன்ற படங்கள் வந்திருக்கின்றன. சீரியஸாக சொல்ல முயற்சித்து இடையிடையே சிரிப்புக் காட்டி, சொதப்பலாகவே முடிந்தது சிட்டிசன். சாமுராய் சீரியசாகவே சொன்னாலும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை.

ஒரு பக்கா எண்டர்டெயினரில் சீரியசான பிரச்சினையைச் சொல்லியிருக்கிறார்கள். சொல்லப்பட்ட விஷயம் எவ்வளவு சீரியசானது என்பதுதான் முக்கியம். உண்மையைச் சொன்னால் எவ்வளவு திருத்தமாக,சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் கமர்ஷியல் சினிமாவுக்கும், பார்வையாளரான நமக்கும் தேவை. மற்றபடி நாங்கள் எந்தப் படம் பார்த்தும் இதுவரை திருந்தியதில்லையே. இனியும் திருந்துவதாகவும் இல்லையே. விஜய் 'கோக்' விளம்பரத்தில் நடித்துவிட்டு கோக் பற்றிய உணமையைப் பேசுவது எப்படி நியாயம்? என்று பலரும் பொங்குவது வேடிக்கையானது. நம்மில் பலரும் படத்தில் 'கோக்' செய்த அநியாயத்தைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட மனதை இடைவேளையின்போது 'கோக்' குடித்துத்தான் ஆசுவாசப்படுத்தியிருப்போம் என்பதுதானே உண்மை.

வெற்றிகரமான ஒரு கமர்ஷியல் படம், பார்வையாளனை படம் பார்த்துக் கொண்டிருக்கும்வரையில் தர்க்க ரீதியான கேள்விகளை யோசிக்கவிடாது உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது சிந்திப்பதற்கான அவகாசத்தைக் கொடுக்கக்கூடாது. அல்லது பெரிதாகக் கண்டுகொள்ள விடக்கூடாது. கத்தியும் அப்படியே!

படத்தின் ஆரம்பத்தில் 'லைக்கா' லோகோ தோன்றும்போது ஏனோ விசிலடிக்க வேண்டும்போல அவ்வளவு  உற்சாகமாக இருந்தது ஏனெனத் தெரியவில்லை. இந்த 'லோகோ' பிடிக்காமல்தான் பலரும் உணர்வுடன் போராடினார்கள் என்று கேள்வி.

'நண்பன்' படத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த விஜய் படம் 'கத்தி'. 

Friday, September 26, 2014

சந்தியாராகம்!


பாலுமகேந்திரா இறந்து போனபின்புதான் அவர் படங்களைப் பார்க்கவேண்டும் எனத் தோன்றுகிறது. என் வழக்கப்படி, நீண்டநாட்களாக கணினியில் சேமித்து வைத்திருந்த 'சந்தியாராகம்' படத்தைப் பார்த்தேன்.

கிராமத்தில் எந்தக் கவலைகளுமின்றி வாழ்வை அதன்போக்கில் ரசித்து வாழ்ந்துகொண்டிருந்த ஒரு முதியவர், சந்தர்ப்பவசத்தால் நகரத்தின் நெருக்கடி மிகுந்த, கீழ்நடுத்தரவர்க்கத்து பொருளாதாரச் சிக்கல் நிறைந்த வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள நேரிடுகிறது. அதன் பின்னர் சந்திக்கும் அனுபவங்ககள் என்னென்ன? எப்படி அவற்றை எதிர்கொள்கிறார் என்பது பற்றிப் பேசுகிறது படம்.

பெரியவர் சொக்கலிங்கம், மனைவி விசாலாட்சியுடன் கிராமத்தில் வாழ்கிறார். பிள்ளைகள் இல்லை. உறவென்று தம்பியின் மகன் மட்டுமே சென்னையில் இருக்கிறான். எந்தக் கவலைகளும் அவருக்கு இல்லை. மனைவி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். அப்பளம் போட்டு கடைகளுக்கு கொடுக்கிறார். அவரது தேவைகள் அதிகமில்லையாதலால் அவரளவில் சொகுசான வாழ்க்கை. இதெல்லாம் ஒரே நாளில் பெரியவருக்கு அர்த்தமற்றுப் போய் விடுகிறது. மனைவி இறந்துவிடுகிறார். தன் ஒரேயொரு உறவான தம்பி மகனிடம், சென்னைக்கு வருகிறார்.

பத்திரிகை அலுவலகத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்கிறார்கள் தம்பி மகனும், மனைவியும். பள்ளி செல்லும் சிறு பெண்குழந்தை, இரண்டாவது குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். திடீரென வந்து சேரும் பெரியவரை அன்பாகக் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனாலும் அவர் தொடர்ந்து அங்கேயே தங்கிவிடுவாரோ என்ன செய்வது என ஆரம்பத்தில் பயப்படுகிறாள் மருமகள். அன்று அவள் கவலைகொண்டபோதும் பின்னர் அவரைத் தம் குடும்பத்தில் ஒருவராகவே மகிழ்ச்சியுடன் கவனித்துக்கொள்ளும் மருமகள் ஒரு சிறு சம்பவத்தின் விளைவாக கோபத்தில் கடிந்துகொண்டு பாராமுகமாக இருப்பது பெரியவரைக் காயப்படுத்திவிடுகிறது. அங்கிருந்து சொல்லாமல் வெளியேறிவிடுகிறார். பின்னர் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல வரும் மருமகளிடம் பேசித் தன்முடிவை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் பெரியவர். எளிமையான இந்தக்கதைக்குள் மனிதர்களின் மெலிய உணர்வுகள், உளச்சிக்கல்கள், புரிந்துணர்வு என எந்தக் காலத்துக்கும் பொருந்தும், ஏராளமான விஷயங்களைச் சொல்லப்படுகிறது.

முதியவர்கள் என்றதுமே, பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாரிதாபத்துக்குரியவர்கள், அதனாலேற்பட்ட சுய கழிவிரக்கத்தில் வாழ்பவர்கள் அல்லது முரட்டுத்தனமான வரட்டுப் பிடிவாதக்காரர்கள் என்பதைத்தவிர்த்து, வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகும் முதியவர்களைப் பற்றிய படங்கள் தமிழில் பார்த்ததாக ஞாபகம் இல்லை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகும், முதுமையையும் அவ்வளவு உற்சாகமாக எதிர்கொள்ளும் மனிதர்களும் நம் நகர வாழ்வில் மிக அரிதாகவே இருப்பர்கள் போலும். கிராமங்களில், நம் ஊர்ப்புறங்களில் அட்டகாசம் பண்ணு 'பெருசுகளை' நாம் பார்த்திருப்போம். 'பரதேசி' படத்தில் கவிஞர் விக்கிரமாதித்யன் வருவாரே, படத்திலேயே அதுதான் எனக்கு மிகப்பிடித்தது. சிறிது நேரமே வந்தாலும், அதகளம் செய்திருப்பார்.

பெரியவர் சொக்கலிங்கத்தின் கிராமத்து வாழ்க்கை மிக அழகானது. ஆர்ப்பாட்டமில்லாமல் ரசனையோடு எதையும் பார்க்கும் குழந்தைத்தனமும், குறும்பும் கொண்ட மனிதர். காலையில் மனைவி விசாலாட்சி சுடச்சுட பெரிய டம்ளரில் கொடுக்கும் தேநீரை ரசித்துக் குடித்துவிட்டு, குளத்துப் பக்கம் செல்கிறார். சிறுவர்களைப் போல நீர்ப்பரப்பில் கல்லெறிந்து அது நீர்மேற்பரப்பில் தத்திச் செல்வதை ரசிக்கிறார். வரும் வழியில் யாரோ சிறுவர்கள் பொட்டுவைத்த கட்டத்தில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒற்றைக்காலில் தத்தி பாண்டி விளையாடுகிறார். ஆசைதீர ஆற்றுக்குளியல், வெள்ளிக்கிழமைகளில் பிள்ளையார் கோவிலில் ஒரு கும்பிடு, திரும்பும் வழியில் சிறுவர்களுடன் சேர்ந்து பம்பரம் விளையாடுகிறார். கொண்டாட்டமான ஓர் வாழ்க்கை அவருடையது.

பெரியவரின் கிராமத்து வாழ்க்கை, அங்குள்ள மனிதர்களின் அன்னியோன்யம், அக்கறை, அவரின் கௌரவத்தை, சின்னச் சின்ன ஆசைகளை,விளையாட்டுத்தனங்களை ஆரம்பக் காட்சிகள் சொல்கின்றன. இவற்றிற்கு முற்றும் மாறான நகரத்தை காலையில் வந்துசேரும்போதே எதிர்கொள்கிறார் சொக்கலிங்கம். புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களைக் கண்டு பதற்றமடைந்து விலகி நடக்கிறார். அதுவரை எல்லோராலும் 'பெரியய்யா' என அன்போடு அழைக்கப்பட்டவரை 'சாவுக் கிராக்கி' என திட்டுகிறான் அவர்மீது மோதிவிடுவதுபோல் வந்து நிற்கும் ஆட்டோ டிரைவர்.

அடுத்த அதிர்ச்சி வீட்டில். குளிப்பதற்கு வெந்நீர் போட்டு வைக்கிறாள் மருமகள். ஆற்று நீரில் நீராடிய பெரியவர் சில கணங்கள் அந்தச் சிறிய வாளியை அந்த யோசனையுடன் பார்த்துவிட்டு பக்கத்திலிருக்கும் நீர்க்குழாயைத் திறக்கிறார். அங்கே குடியிருக்கும் ஒருவன் சொல்கிறான் இன்று நீர் வராது, நாளைதான். அதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றிலும் மாறான புதிய அனுபவம் ஒரே நாளில் ஏற்படுகிறது. ஆனாலும் உடனடியாகவே அவற்றோடு இயைந்து வாழத் தயாராகி விடுகிறார் சொக்கலிங்கம்.

குழந்தையும் பெரியவரோடு சேர்ந்துவிடுகிறது. பெரியவரும் மருமகளுக்கு ஒத்தாசையாக கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொடுக்கிறார். குழந்தையும் அவருடன் இலகுவாக ஒட்டிக் கொள்கிறது. சாப்பாடு வேண்டாம் என அம்மாவிடம் மறுக்கும் குழந்தை தாத்தா ஊட்டிவிடுவதாகக் கேட்டதும் சம்மதிக்கிறது. குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். 'பெரியவர் இங்கேயே தங்கி விடுவாரோ?' - மருமகளுக்கு அன்றைய இரவில் தோன்றும் சந்தேகம். ஏற்கனவே இடநெருக்கடி, போதாத வருமானம், இதில் புதிதாக ஒருவர் குடும்பத்தில் இணைந்துகொள்வது மருமகளுக்குக் கலவரத்தை ஏற்படுத்துகிறது. கணவனிடம் கேட்கிறாள். என்னைவிட்டா அவருக்கு வேற யார் இருக்காங்க? எங்க போவார்? சமாளிக்க வேண்டியதுதான் எனபதாக அமைகிற அவனது பதில் பொறுப்பற்றதாக, கோபம் கொள்ள வைப்பதாக இருக்கிறது. தவிர்க்க முடியாத இந்தப்பேச்சு, உச்சகட்டத்தை எய்தி, பொறுமையிழந்து உரக்கப் பேசிவிடுகிறான் கணவன். தன பெரியப்பா வந்தது மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பதாகவே தொடர்ந்து அவன் நம்புகிறான். பின்னரும் அடிக்கடி சொல்லிக் காட்டுகிறான். கணவன், மனைவிக்கிடையான பேச்சு சொக்கலிங்கம் காதில் விழ, யோசனையில் ஆழ்கிறார். ஆனாலும் உடனடியாக உணர்ச்சிவசப்படவில்லை. அவர்களின் நிலையையும் தன் நிலையையும் புரிந்துகொள்கிறார் பெரியவர். முடிந்தவரை அவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என நினைக்கிறார். இதுதான் யதார்த்தம்.

ஒரு கீழ் நடுத்தரவர்க்க குடும்பத்தின் தன் குடும்பம் தவிர்த்து உறவுகள் மீது என்னதான் அன்பு, பாசம் இருந்தாலும், அதையெல்லாம் புறந்தள்ளி பொருளாதார நிலை சார்ந்த சிக்கல்கள் இயல்பாகவே முன்னிலைப் படுத்தபடுகிறது. நகர வாழ்வின் நெருக்கடிகளில், பொருளாதாரச் சிக்கல்களில் முதியவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றார்கள் சிலவேளைகளில் தவிர்க்கமுடியாமல் என்பதையும் ஓரிரு காட்சிகளில், அயல் வீட்டில் குடியிருக்கும் பெரியவரின் பேச்சு வாயிலாக சொல்லிவிடுகிறது.

எண்பதுகளில் நடைபெறுகின்ற கதை எனினும், இன்றைய காலகட்டத்திலும், எதிர்காலத்திலும் பலரும் எதிர்கொள்ளும், கொள்ளப்போகும் வாழ்க்கைதான். சொந்த ஊரில், அயலவர்களோடு அளவளாவிக் கொண்டு தம் போக்கில் வாழ்ந்துகொண்டிருந்த நம் தாத்தாக்கள், பாட்டிகள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எல்லா வசதிகளும் இருந்தும், நடைமுறையை ஏற்றுக் கொண்ட போதும், ஏதோ ஒரு தருணத்தில் இழந்துவிட்ட தம் இயல்பான வாழ்க்கையைக் குறித்த ஏக்கத்துடன் வாழ்வதைப் பார்க்கிறோம். வயதானவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் தனிமையுணர்வு, தாம் சரியாக மதிக்கப்படவில்லை எனும்போது அல்லது அப்படித் தோன்றும்போது ஏற்படும் அயர்ச்சி, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இடமாற்றம், அந்த மாற்றங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிக்கள், நகர்புற மத்தியத்தர வாழ்க்கை தரும் பொருளாதார அழுத்தங்கள், அதனாலேற்படும் ஏற்படும் உறவு சிக்கல்கள் இவை பற்றி பேசுவதற்கான தேவை எப்போதுமே இருக்கிறது.

சொக்கலிங்க பாகவதர். என்ன ஒரு நடிகன்! தமிழ்சினிமாவில் இப்படி ஒரு நடிகரைப் பார்ப்பதே எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது. மிகை நடிப்பு, தேவையே இல்லாமல் உரத்த குரலில் பேசுவது, நாடக பாணியில், குறிப்பாகத் தெருக்கூத்து வகையான நடிப்பையே சினிமாவிற்கும் வழங்கி அதையே நடிப்பு எனக் கொண்டாடி வரும் நமது பாரம்பரியத்தில் சொக்கலிங்க பாகவதர் போன்ற ஒருவர் தமிழ் திரையுலகத்தால் கண்டுகொள்ளப்படாததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இயக்குனர் பாலுமகேந்திராவைத் தவிர வேறு எவரும் அவரை இந்த அளவுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறார்களா?

பம்பரம் விடும்போது அவர் முகத்திலிருக்கும் குழந்தைத்தனமான ஆர்வம், ஒரு குறும்புச் சிரிப்பு, தன் மனைவியை அழைக்கும்போது குரலில் இருக்கும் காதல், (ஆம் அப்படித்தான் தோன்றுகிறது. அது பாலுமகேந்திராவின் எப்போதும் தீராத காதலின் தாக்கமாகவும் இருக்கக் கூடும்) குளித்துவிட்டு வரும் பாட்டியைப் பார்த்ததும், "ஏண்டி ஜுரமும் அதுவுமா குளத்துல குளிச்சிட்டு வர? வெந்நீர் போட்டிருக்கலாம்ல?" எனும்போது தெரியும் பரிவு, பாட்டி கொடுக்கும் தேநீரை ஒரு மிடறு குடித்துவிட்டு கொடுக்கும் எதிர்வினை ஒன்றே போதும். தன்மேல் கோபமுற்றிருக்கும் மருமகள் மருத்துவமனை வாசலில் சைக்கிள் ரிக்ஷாவில் வீடு திரும்பப் போகிறாள். தன்னையும் அழைப்பாளா எனத் தயங்கி நிற்கிறார். மருமகள் கூப்பிட்டதும் சிறு சிரிப்புடன் சின்ன குழந்தை போல் ஓடி வருவது, குழந்தை வள்ளியின் கால்களை தன் மடியில் போட்டு கொள்வது, அவ்வப்போது சிரித்துக் கொள்ளும் குழந்தைச் சிரிப்பு என சொக்கலிங்க பாகவதர் அசத்துகிறார். 

முதியோர் இல்லத்தில் சேரும்போது அவர் பார்த்த தொழில் என்ன என்கிறார்கள். நாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தேன் என்கிறார். வேற என்ன தொழில்? எனக்கேட்க ஒரு பண்ணையாரிடம் கணக்கெழுதிக் கொண்டிருந்ததாகச் சொல்கிறார். ஆயினும் தனது தொழிலை 'நடிகன்னே போட்டுக்க' எனச்சொல்லும்போது முகத்தில் அப்படியொரு பெருமை, சிரிப்பு! தொடர்ந்து தான் நடித்த நாடகத்தின் காட்சியொன்றை பாடி, நடித்துக் காட்டுகிறார். அதுவரை இருந்த சொக்கலிங்க பாகவதர் ஆளே மாறிப்போய் இளைஞனாகியதுபோல மிடுக்குடன் நிற்கும் காட்சி, பின்னர் தன்னை பார்க்க வரும் மருமகளை தன் சகாக்களிடம் அறிமுகப்படுத்தும்போது, ஒரு பாட்டிக்கு ரொம்பவே மறதி எனும்போது தனது வாயையும் பொக்கையாகச் செய்து காட்டுவது என அதகளம் செய்கிறார்.

அந்த முதியோர் இல்ல வாழ்க்கை அவருக்கு ஏராளமான நண்பர்களைப் பெற்றுக் கொடுக்கிறது. இழந்துவிட்ட பழைய கொண்டாட்டமான வாழ்க்கையை மீட்டுக் கொடுப்பதாக இருக்கிறது. சொக்கலிங்க பாகவதர் தன் மருமகளுக்கு முதியோர் இல்லத்தைச் சுற்றிக் காட்டும் காட்சியைக் கவனித்துப் பார்த்தால் புரியும். தன் சொந்த வீட்டைச் சுற்றிக் காட்டுவதுபோல ஒரு பெருமை, பூரிப்பு அவர் முகத்தில். சூழ்நிலை காரணமாக தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட அழகான வாழ்க்கை மீளக் கிடைத்துவிட்டதைப் போன்ற உற்சாகம்.

இப்போது சினிமா ஆர்வலர்களால் முக்கியமானதாகக் கவனிக்கப்படுகிற ஈரானிய சினிமா எப்போது உருவானது அல்லது எப்போது முதல் உலகின் பரவலான கவனத்தைப் பெறத் தொடங்கியது எனத் தெரியவில்லை. எனது நண்பன் யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது Baran படத்தைப் பார்த்துவிட்டு அதுபற்றிச் சொல்லியிருந்தான். நான் முதன்முதலில் பார்த்தது 2007ல் Children of Heaven திரைப்படம். வெளியாகிப் பத்து வருடங்களின் பின்னரே. இங்கே ஈரானிய சினிமா பற்றிப் பேசியது ஏனெனில், சந்தியாராகம் பார்க்கும்போது எனக்கு ஈரானியப் படங்கள் பார்ப்பது போன்ற ஒரு உணர்வே ஏற்பட்டது.

ஈரானியப் படங்கள் போல என்று சொன்னதற்கு இன்னுமோர் காரணம், படத்தில் எல்லோருமே நல்லவர்கள். அன்பு நிறைந்தவர்கள். அதை, வெளிப்படுத்தும் விதம் வேறுபடுகிறது. தவிர, சூழ்நிலை, இயலாமை காரணமாக அவ்வப்போது தமக்குள் முரண்பட்டுக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். இயக்குனர் பாலுமகேந்திராவுடன் பழகியவர்கள் கூறும் சம்பவங்கள் நினைவுகள் ஒவ்வொன்றும் அழகானவை. முழுக்க முழுக்க அன்பாலும், ரசனையாலும் நிரம்பிய வாழ்வைக் கொண்டாடிய கலைஞன். அவர் படைப்புகளிலும் அதையே பிரதிபலிக்கக் காண்கிறோம். அவற்றில் அன்பும், மெல்லிய உணர்வுகளும், உளச்சிக்கல்களும், தீராத காதலும் நிறைந்த அழகியல் விரவிக் கிடக்கின்றது.

தமிழ்சினிமாவில் பாலுமகேந்திரா சரியானபடி பேசப்படவில்லையோ, கொண்டாடப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. தமிழர்களின் வழமைபோல இறந்த பின்னர், சமீப காலமாகத்தான் அதிகம் பேசப்படுகிறார். ஒரு நல்ல படைப்பாளியின் உண்மையான வெற்றி என்பது அவர் உருவாக்கிச் சென்ற, தன் நீட்சியாக விட்டுச் சென்றிருக்கும் படைப்புகள் மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கான தன் வாரிசுகளும்தான். அவரின் சிஷ்யர்களே போதும் - அவர்கள்மீது எவ்வாறான விமர்சனங்கள் வைக்கப்ப்படும்போதிலு! பாலா, ராம், வெற்றிமாறன் போன்றோர் அவர்பற்றிக் கூறும்போதெல்லாம் பிரமிக்க வைக்கிறது, அன்பினால் கட்டமைக்கப்பட்ட அவர் சாம்ராஜ்யம்!

அதிகாலையில் கிராமத்தில், பெண்கள் நடந்து செல்லும் படத்தின் ஆரம்பக் காட்சி, குளத்தில் ஆரவாரமாக செல்லும் எருமைகள், சென்னையில் நடுத் தெருவில் மரங்களின் ஊடே விழும் சூரிய ஒளி போன்ற கட்சிகளைப் பார்த்தபோது வண்ணத்திரைப்படமாக எடுத்திருந்தால் இன்னும் நன்றாயிருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனாலும் கருப்பு - வெள்ளை காட்சிகளின் ஆழத்தை, தாக்கத்தை அதிகமாக்கும் என்பதால் அதுவே பாலுமகேந்திராவின் விருப்பமாகவும் இருந்ததாகச் சொல்கிறார்கள். நண்பர்கள் சிலர் அப்படியும் சொல்கிறார்கள் வண்ணத் திரைப்படமாகப் பார்த்ததாக. நான் யூ-டியூபில் தரவிறக்கியே பார்த்தேன். பாலுமகேந்திராவின் படங்களை அப்படித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது என்பது மிகுந்த கவலைக்குரியது. 

சந்தியாராகத்தை வண்ணத்திரைப்படமாகப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படக் இன்னுமோர் காரணம், 'அழியாத கோலங்கள்' படம்தான். ஆணுறையில் பலூன் செய்து விளையாடியபடி long shot இல் சிறுவர்கள் நடந்து வரும் காட்சி ஒன்றே போதும் ஒளிப்பதிவு பற்றிச் சொல்லிவிட. அவ்வளவு அழகானது. பாலுமகேந்திராவின் இளமைக்காலத்தின் பாதிப்பெனில், என்னமாதிரியான கொண்டாட்டமான வாழ்க்கை அது! என்னை மிகக்கவர்ந்த படம். அதையும் இந்த வருடம்தான் பார்த்தேன். விடலைப் பருவப் பையன்களின் உணர்வுகளை, வாழ்க்கையை தமிழில், வேறெந்தப் படமும் பதிவு செய்ததில்லையெனச் சொல்லப்படுகிற அற்புதமான, ரகளையான படைப்பு. மிக முக்கியமாக ஒளிப்பதிவு. அந்த வயதினருக்கே உரிய குறும்பும், விளையாட்டுத்தனங்களும், புதிதாக அறியும் எதையும் முயன்று பார்க்கும் ஆர்வமும் அப்படியே பதிவுசெய்யப்பட்டிருக்கும். சிகரெட் பிடிக்கும் காட்சியும் அப்படியே. ஓர் இளைஞன் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதைப் பார்த்துவிட்டு அதனால் கவரப்பட்டு, ஒருமுறையேனும் முயன்று பார்த்தவர்கள், ஊதுபத்திக் குச்சியைப் பேப்பரால் சுத்தி புகைத்தவர்கள், குறைந்தபட்சம் நினைக்காதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன!

அதேபோல, 'வீடு' - மத்தியதர வர்க்கத்தினரின் மிக முக்கியமான கனவு பற்றிய படம். இன்றும், எந்தக்காலத்திற்கும் பொருத்தமான படம். காலத்தால் அழியாத படைப்பு என்றுமட்டும் பாலுமகேந்திரா படங்களைச் சொல்ல முடியாது. ஏனெனில் அவரின் அநேகமான படங்களுக்கான பிரதிகள் அவரிடமே இல்லையென, அழிந்துபோய்விட்டதென வருத்தப்பட்டிருந்தார். எந்தக் கலைஞனுக்கும் நேரக்கூடாத சோகம் அது. உலக சினிமா விரும்பிகள் அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டிய படங்கள் 'சந்தியாராகம்', 'அழியாத கோலங்கள்', 'வீடு'. தமிழிலும் பல வருடங்களுக்கு முன்பே உலக சினிமா எடுத்த படைப்பாளி இருக்கிறான் எனக் கொண்டாடலாம்.

பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதிய கட்டுரை இது!

Monday, September 8, 2014

A Gun and a Ring : புதிய ஆரம்பம்!



ஆரம்பத்தில் அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கவில்லை. காரணம் நாம்தான். 'எம்மவர் படைப்பு' என்ற அடையாளம், மிகைப்படுத்தப்பட்ட பெருமைகளுடன் வெளியாகும் வஸ்துகள்- ஈழத்து முயற்சி என்று ஆரம்பித்தாலே தெறித்தோடும் நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. நேர்மையாகச் சொன்னால், சில நண்பர்களின் முயற்சிகள் தவிர, 'ஈழம்', 'இலங்கை' என்றாலே படமோ, பாட்டோ எதுவானாலும் நான் மறந்தும் 'கிளிக்' செய்வதில்லை.

A Gun and a Ring படம் குறித்துப் பேசப்பட்டபோதும் வழமை போலவே முதலில் நினைத்தேன். பின்பு வழமையான முயற்சிகளை விட நல்லதாக இருக்கலாம் என நம்பினேன். பார்த்தபோதுதான் தெரிந்தது நிச்சயமாக எம்மவரின் பெரியதொரு பாய்ச்சல். கொழும்பிலிருந்து கொண்டு படம் பார்க்க வராதவர்கள், ஒரு நல்ல அனுபவத்தைத் தவற விட்டுள்ளார்கள். நிச்சயமாக அவர்கள் மீது மட்டும் தவறல்ல. மேற்சொன்ன 'ஈழத்து, அனுபவம்தான் முக்கிய காரணம்!

எமது ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளை, புலம்பெயர் நாடொன்றில் பிறந்து வளரும் இளம் சமுதாயத்தின் உணர்வுகளை, அவர்களுக்கும் பாரம்பரிய சமூகக் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பெற்றோருக்குமிடையான முரண்பாடுகளை, பாதுகாப்பான நாடு என நாம் நம்பிக் கொண்டிருக்கும் வெளிநாடுகளில் துரதிருஷ்டவசமாக எதிர்கொள்ள நேரிடும் பிரச்சனைகளை, முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, எப்போதும் உடனிருந்து கொல்லும் உளவியல் பிரச்சனைகளை மிகை நடிப்போ, திணிக்கப்பட்ட வசனங்களோ இல்லாது மிக இயல்பாகப் பேசுகிறது படம்.

சமூக சேவகியான மனைவியைப் புரிந்து, இலங்கையில் விட்டுவிட்டு குழந்தையின் நலனுக்காக வெளிநாட்டுக்கு வந்த, பிறருக்கு உதவும் உறுதியான மனம் படைத்த நல்லவரான சொர்ணம் - ஆரம்பகால இந்திய பயிற்சி முகாமிலிருந்து வெளியேறி கனடா வந்த, எளிதில் பதற்றமடையும், பழைய நினைவுகளால் அலைக்கழிப்பால் எதையும் உருப்படியாகச் செய்ய முடியாத குழப்பவாதியான ஞானம் - போரினால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தில் தான் மட்டுமே எஞ்சிய, பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்யும் இலட்சியத்தில் ஒருவனால் வரவழைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்ட திடமான இளம்பெண் அபி - எப்போதும் நிதானமாக, உணர்ச்சி வசப்படாத, குற்ற உணர்ச்சியில்லாமல் பழைய வாழ்க்கையை வன்முறையை மறந்து விட்டு அல்லது உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்க அமைதியாக வாழும் அரியம் - தனது இரையைத் தேர்ந்தெடுத்துவிட்ட ஒரு சைக்கோ சீரியல் கொலைகாரனைக் கண்காணிக்க வரும் பொலிஸ் புலனாய்வாளன் ஜோன் - அப்பாவின் அறிவுரையைக் கேட்டு விலகிய தன்னால்தான் நண்பன் தற்கொலை செய்துகொண்டான் என நம்பும் ஓரினச் சேர்க்கையாளன் ஆதி - இவர்களைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு நகர்கிறது கதை.

இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேடிக்கொள்ளும் முடிவுகள் தனித்தனியான தலைப்புகளுடன் (அத்தியாயங்கள்?), அவை ஒன்றுடனொன்று எப்படிச் சம்பந்தப்படுகின்றன என்பதையும் தெளிவான திரைக்கதையூடாக இணைக்கப்பட்டிருக்கின்றது. (இந்த தலைப்புகள் போடுவதை பார்த்ததுமே மிகுந்த உற்சாகமானேன். படத்தின் இயக்குனர், டெரண்டினொவின் தீவிர ரசிகராக இருப்பாரோ என்று தோன்றியது)

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலும், இடையிலும் தொடர்ந்து சில கேள்விகள் எழ வைத்து, பின்னர் படிப்படியாக முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே செல்கிறது படம். ஒரு அத்தியாயத்தின் காட்சியில் பார்வையாளனுக்குத் தோன்றும் கேள்விக்கு, இன்னொரு அத்தியாயத்தின் முடிவில் பதில் கிடைக்கிறது. ஒரு சில காட்சிகள் நம்மை ஒன்று நினைக்க வைத்து அதற்கு மாறாக, சில சமயங்களில் அது ஒரு விஷயமாகவே இல்லாமல் ஆக்கிவிடுவது ரசிக்க வைக்கும் உத்தி.

கத்தியைக் கண்டு பதற்றமடைகிறது ஒரு பாத்திரம். அதற்குக் காரணம் கத்தி சார்ந்து ஒரு அதிர்ச்சிகரமான பழைய சம்பவம் இருக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால் அப்பிடியிருக்க எந்த அவசியமும் இல்லை. வாழ்க்கையில் சிலவிஷயங்களிற்குப் பதில் 'அது அப்படித்தான்' மட்டுமே!

இருள் சூழ்ந்த அறையில் கையில், பச்சை குத்திய காதலியின் பெயரை அழிக்கமுயலும், கைத்துப்பாக்கியால் தற்கொலைக்கு முயற்சிக்கும் ஒரு பாத்திரம் போதைப்பொருள் கடத்துபவனாகவோ, சமூக விரோதியாகவோ, கோழையாகவோ இருக்க வேண்டிய அவசியமுமில்லை. நேர்மையான, மனச்சாட்சியுள்ள பொலிஸ் புலனாய்வாளனாகக் கூட இருக்கலாம்.

என்னை மிகக்கவர்ந்தது அரியம்- ஞானம் காட்சிகள்தான். "…ஏனண்ணே கொல்லுறதெண்டு முடிவெடுத்தா எத்தின வழி இருக்கு. கத்தி இருக்கு... ஏன் அடிச்சு..?" என்று கேட்கும்போது ஞானத்தின் முகத்தில் இயலாமை, விரக்தி, மன்றாட்டம் போன்ற உணர்ச்சிகள்! அப்படிக்கேட்கும்போது இலேசாக சிரிக்கக்கூடத் தோன்றியது எனக்கு மட்டும்தானா தெரியவில்லை. அதுபோல அரியம் திடீரென மாறும் பழைய இரும்பனாக திகைக்க வைக்கிறார்.

ஆரம்பத்தில் குழப்பவாதியாக அறிமுகமாகும் ஞானம், எப்போதும் அப்படியே இருக்கிறார். எதிலும் தெளிவில்லாதவர்கள் எளிதில் பதற்றமடைபவர்கள் தமக்கு மட்டுமன்றிக் கூட இருப்பவர்களுக்கும், சமயத்தில் எந்த சம்பந்தமில்லாதவர்களுக்கும் சேர்த்தே பிரச்சினையை ஏற்படுத்திவிடுகிறார்கள். எளிதில் பதற்றமடையாத சாதுவாக அறிமுகமாகும் அரியம், பின்பு காட்டும் சடுதியான மாற்றம் அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர் எப்போதும் அப்படியே இருக்கிறார். பதற்றமடையாமல் நிதானமாக நடந்துகொள்ளும் அவர் பெயர் வேறு இரும்பன். அட்டகாசமான சேஞ்ச் ஓவர்.

பக்கத்திலிருந்த நண்பன், 'இரும்பன்' தனது ஊர் என்றார். இன்னொரு நண்பன் இரும்பன் கதாபாத்திரம் யாரென்று இன்னொருவரைச் சொன்னார். இரும்பனின் தோற்றம் பார்த்தவுடனேயே ஒருவரை ஞாபகப்படுத்துகிறது. ஆக, ஒருகாலத்தில் நிறைய இரும்பன்கள் இருந்தது, இப்போதுமிருப்பது தெரிகிறது. படத்தில் யார் எந்த இயக்கம் என்று சொல்லாமலே அவரவர் ஊகத்திற்கு விட்டுவிடுவது மிகக் கவர்கிறது. அது மிகச்சரியான வழிமுறை. உண்மையில் எல்லா இயக்கத்துக்கும் சில பக்கங்கள் ஒரே மாதிரியானவைதான்!

முதலில் மிகக்கவர்ந்தது தமிழ். யாழ்ப்பாணத்துத் தமிழ் மிகச் சரியாகவே பயன்படுத்தபட்டிருப்பதாக நினைக்கிறேன். (நினைக்கும் அளவுக்குத்தான் எனக்குத் தெரியும்). படம் தொடங்கும்வரை நம்பிக்கையில்லாமல் இருந்தது படத்தின் பேச்சு மொழி குறித்துத்தான்! 'தெனாலி' உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் யாழ்ப்பாணத் தமிழ் பற்றிக் கவலைப்படும் நாங்கள் இலங்கை - புலம்பெயர் படைப்புகளின்(?!) கொடூரங்கள் பற்றிக் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக கதநாயகி எப்படிப் பேசுகிறார் என்பதைப் பார்க்கும் ஆவலிருந்தது. அவர்களுக்கென்றே தனிமொழி இங்கே இருப்பதாகத் தெரிகிறது. சந்தேகமிருந்தால் நம்மவரின் காணொளிகளைப் பார்க்கவும். பேச்சுமொழியைச் சிறப்பாகக் கொண்டுவந்ததற்கே இயக்குனர், நடிகர்களுக்கு விருது கொடுக்கலாம். உண்மையில் வெளிநாடுகளில்தான் எண்பதுகளில் வெளியேறிய நம்மவரிடம்தான் உண்மையான, முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் கேட்ட பேச்சு மொழி இன்னும் வழக்கில் இருப்பதாகத் தோன்றுகிறது.

எம்மவர்களின் படைப்புகளை ஊக்குவிக்கும் இணையத்தளங்கள் மிகக் கேவலமான குப்பைகளை மன்னிக்கவும் 'படைப்புகளை' எல்லாம் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுகின்றன. இதனால் உண்மையிலேயே நல்ல படங்கள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடும் அபாயம் எதிர்காலத்திலும் நிகழலாம். மிகக் குறைந்தபட்ச பொறுப்புடனாவது நடந்துகொள்வது அவசியம். ஏனெனில், படம் பார்க்க வந்தவர்களில் தமிழர்களை விட சிங்களவர்களே அதிகம் என்று தோன்றுகிறது. இலங்கையில் திரையிடச் சாத்தியமில்லாத, சென்சாரில் தப்ப முடியாத இந்தப்படத்தை சிங்களவர்களுடன் இணைந்து திரையரங்கில் பார்த்தது கூட ஒரு வித்தியாசமான அனுபவமே.

நம் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் கட்டாயமாகப் பார்க்க வழிசெய்வது நம் சமுதாயத்துக்கு மிகுந்த நன்மை பயக்கும். 'எங்கட பெடியள் ஏதோ செய்ய வெளிக்கிடுறாங்கள். எங்களால முடிஞ்சத செய்யவேணும்' - என்ற நல்ல மனதுடன் என்ன ஏது என்றே கேட்காமல் பணத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய அதிகார்வலர்கள், யாரோ ஒரு 'மங்களம் சாரி'ன் பணத்தில் எதுவுமே இல்லாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் கமெராவைத் தூக்கிக்கொண்டு படம் எடுக்கக் கிளம்புபவர்கள், கொலை வெறியுடன் சுற்றிக் கொண்டிருக்கும் கலையார்வலர்கள் 'படம் பார்க்கக்' கற்றுக்கொள்ளவும், பலர் இதையெல்லாம் கைவிட்டு, மனந்திருந்தி வாழவும் வாய்ப்பிருக்கிறது.

நடிகர்களின் தேர்வும் நடிப்பும் இயல்பாக, கவர்கிறது. பேச்சு மொழி அவ்வளவு அருமையாக உள்ளது முக்கியமாகக் கதாநாயகியைத் தனியாகவே பாராட்டலாம் - ஏனெனில் அவர்கள்தான் வழமையாக அதிகம் அச்சமூட்டுபவர்கள். இரும்பன், ஞானம் கதாபாத்திரங்களின் பாதிப்பு இரண்டு நாட்களுக்கு இருக்குமென நம்புகிறேன். காட்சிகளின் நீளம், சில தெளிவின்மை, ஒளிப்பதிவு என்பன பற்றி தேர்ந்த விமர்சகர்களுக்கு புகார்கள் இருக்கலாம். உலக சினிமா, ஹொலிவூட், தமிழ் சினிமா என்று ஒப்பிட்டு நம் திறமை சார்ந்து பேசிக் கொள்ளலாம். ஆனால், ஒரு சாதாரண பார்வையாளனான என்னை அப்படியே ஈர்த்துக் கொண்டது. எனக்கு படம் பார்க்கும் அந்த நேரத்தில் கிடைத்த அனுபவம், நான் எதிர்பார்த்ததற்கு மிக மிக அதிகமானது.

இது முழுக்க முழுக்க எம்மவர் அடையாளத்துடன் வந்திருக்கும் படம். இந்தத் திரைக்கதையமைப்பு தமிழ்ப்படங்களில் இதுவரை வந்ததாகத் தெரியவில்லை. தவிர, எடுத்தாளப்பட்டிருக்கும் பிரச்சினைகள், களம் முழுக்க எங்களின் வாழ்வும், ஒரு முழு நீளத்திரைப்படமாக முற்றிலும் புதிதானது என்றே நம்புகிறேன். நிச்சயமாக, மனப்பூர்வமாகவே எம்மவரின் சினிமா என்று பெருமை கொள்ளலாம்!

இயக்குனர் - லெனின் M. சிவம்
மொழி - தமிழ்
நாடு - கனடா

(4தமிழ்மீடியாவில் வெளியான என் கட்டுரை இது)

Monday, August 25, 2014

பரோட்டாவும் சமகாலவாழ்வும்!



மா பரோட்டாவாகிறதா இல்லை சமோசா ஆகிறதா என்பது மாவுக்குத் தெரிவதில்லை. மாறாக பிசையும் மாஸ்டருக்கே தெரியும். ஆனால் எந்தப் பரோட்டாவை யார் சாப்பிடப் போகிறார்கள் என்பது அந்த மாஸ்டருக்கே... தெரிவதில்லை. உலக மயமாக்கலில் கடைக்கோடி ஏழைக்கும் சாத்தியமான ஒரே நுகர்பொருள் பரோட்டாதான் என்பதில் உண்மையில்லாமலில்லை. ஏதோ ஒரு தருணத்தில் பரோட்டா மாஸ்டர் அய்யாச்சாமிகூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகத்தான் தெரிகிறாராம் என்பார் தோழர் பொன்னுஸ்க்கி என்கிற பொன்னுச்சாமி

இந்த வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. வெட்டிவைத்த முட்டை பரோட்டா போல கச்சிதமான வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு வெந்தும் வேகாமலும் அமைகிறது. பலருக்கு காய்ந்து காலாவதியாகிவிடுகிறது. இன்னும் சிலருக்கோ ஓவர் குழம்பு ஊற்றிய கொத்துப்பரோட்டா போல கொழ கொழவென்று கலவரமாகிவிடுகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்கிற உண்மையை மெக்கானிக் திருமலை அண்ணனுக்கு முதலே கண்டறிந்து சொன்னவர் எங்களூர் பரோட்டா மாஸ்டர் ஐன்ஸ்டீன்தான் என்பதில் எங்களுக்கு எப்போதும் பெருமை.

'நாபியிலிருந்து கிளம்பும் அமிலச்சுனையொன்று நெஞ்சை அடைத்துக் கண்டம்வரை எரிந்து சாமம்கடந்தும் ஓயாத ஏப்பங்களாக ஒரு பரோட்டா மாஸ்டரின் கைவண்ணத்தைப் பேசியபடி காற்றில் கரைகிறது' - 'பரோட்டா உண்ட ராவுகள்'  தொகுப்பில் கவிஞ்ஞர் சங்கூவின் கவிவரிகள் நினைவுக்கு வருகின்றன.ஒரு பரோட்டா என்பது வெறும்பரோட்டா மட்டுமல்ல....வாழ்க்கையின் தத்துவமே... சரிவிடுங்கள், வெறும் பரோட்டா மட்டுமே வெறும்பரோட்டா! மற்றபடி, சேர்க்கையைப் பொறுத்து முட்டைப்பரோட்டா, கொத்துப்பரோட்டா, ஆளுப் பரோட்டா...

பரிசாரகர் வந்து ஈ மற்றும் சிந்தனையைக் கலைத்தார்.
"சொல்லுங்க"
"பரோட்டா"

வெளிப்பார்வைக்கு சாதுவாக, அழகாக மனதைப் பரபரப்படைய வைக்கும் பரோட்டாக்கள் உண்ணும்போது, அவ்வாறிருப்பதில்லை. தாடைகளின், பற்களின் கடும் உழைப்பைக் கோருபவையாகவும், சமயங்களில் கன்னத்தின் உட்தசைகளைப் பதம் பார்ப்பவையாகவும் அமைந்துவிடுநின்றன. ஒரு பரோட்டாவைப் போல வாழ்வியலைச் சொல்லிக் கொடுப்பது...

'டொக்' பரிசாரகரின் அன்பும், தண்ணீரும் ஏக காலத்தில் தெறித்தன.
ஆரம்பிக்க வேண்டியதுதான்.

வெளியே பதமாக இருந்தது, உள்ளே பசையாகப் பற்றிப் பிடித்துக் கொண்டது. பற்களிலும், மேலண்ணத்திலும் (கீழண்ணம் என்று இருக்கிறதா?) வெகுவாக ஒட்டிக் கொண்டது. இனி, கோக்காகோலா போட்டுத்தான் கழற்றியெடுக்க வேண்டும். நிச்சயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிதான். இதையெல்லாம் வெளியே சொல்ல முடியுமா? அப்படியே முயன்றாலும் ஒட்டிக்கொண்ட பரோட்டாதான் அனுமதிக்குமா? மூடிக் கொண்டே சாப்பிட வேண்டியதுதான். அப்படியே கேட்டாலும் நீதி கிடைத்துவிடுமா? மேலதிகமாக இரண்டு பரோட்டாக்கள் கிடைக்கலாம். நல்ல பரோட்டா தருகிறேன் என்று சொல்லிக் கொடுப்பார்கள். அதையும் நாங்கள் அல்லவா காசு கொடுத்துத் தின்று தொலைக்கவேண்டும்?

ஏதோ நம்மால் முடிந்தது. பல்லுக் குத்திக் கொண்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடலாம். யாரேனும் ஆறுதல் சொல்லலாம். அந்தப் பரோட்டக் கடைக்காரனின் சொந்தக்காரன்போல யாராவது வந்து கமெண்டில் விளக்கம் சொல்லக்கூடும்.
'சூடா இருந்திருக்கில்ல அதான் தலைவா!'
'பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிடவேண்டிய பரோட்டாவ அவசரப்பட்டு முழுங்கிட்டீங்க பாஸ்!'

எனக்குப் புரிவதே இல்லை. பரோட்டான்னா சுட்டு, உடனே சுடச்சுட சாப்பிடவேண்டும். அதற்காகத்தானே கடைக்குப் போகிறோம்? அதென்னய்யா அது.. 'பத்து நிமிஷம் கழிச்சு'? வித்தியாசமான ரெசிப்பியோ? தனக்குப் பிடிச்சவன் அரைகுறையாச் சமைச்சத பிடிச்சு சாப்பிட்டவன் எவனைப் பாத்தாலும் 'பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிடவேண்டிய பரோட்டா', 'பத்து மணித்தியாலம் கழிச்சு சுட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்', 'பார்சல் கட்டி பத்து நாளைக்கு அப்புறம் சாப்பிட்டிருந்தா கலக்கியிருக்கும் ' என்கிறார்கள்.

அதுகூடப் பரவாயில்லை. யாரோ ஒருவர் வந்து 'தமிழர்களின் நாக்கு இன்னும் சரியா வளரலைய்யா' என்று ஒட்டுமொத்தமாக அசிங்கப்படுத்தி விடுகிறார்கள். என்னய்யா கதை விடுறீங்க? இப்ப கேவலமா இருக்கிறது பத்து நாளைக்கு அப்புறம் நல்லாயிருமா? இன்னும் கேவலமாயிடாதா? என்ன, இப்ப கழுவி ஊத்துறவன்..அப்ப ஊத்தி ஊத்திக் கழுவ மாட்டானா?

இதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த மார்க்கின் கைங்கரியத்தைப் பாருங்கள். ஒரேயொரு ஃபேஸ்புக்! அப்பப்பா! ஊரில் உள்ள அத்தனை பேரையும் நல்லவர்களாக்கி விட்டதைப் பாருங்கள். இந்த உலகமே அன்பால், மனித நேயத்தால், நிறைந்து மலர்ந்து கிடப்பதைப் பாருங்கள். எங்கும் ஏராளமான புத்தன், யேசுகள் எல்லாரும் கையில் லேப்டாப், செல்பேசிகள் சகிதம் ஸ்டேட்டஸ் மூலம் அன்பைப் போதிக்கும் சமகாலத்தில், ஒரு பரோட்டா குறித்து கண்டபடி சமூகப் பிரக்ஞையற்றுப் பேசிவிட முடியுமா?

'ஒரு பரோட்டாக்குப் பின்னால இருக்கிற உழைப்பைப் பற்றி உங்களுக்கு என்னய்யா தெரியும்? எத்தனை பேரோட வியர்வை, உணர்வு கலந்திருக்கு தெரியுமா? ஒரு பரோட்டா மாஸ்டர் காலைல அஞ்சு மணிலருந்து இரவு பதினோரு மணிவரைக்கும் அடுப்புக்கு முன்னால நின்னுட்டே இருக்கிறத கூட இருந்து பாத்திருக்கியா? ஒவ்வொரு பரோட்டாலயும் அசுர உழைப்பு கொட்டிக் கிடக்கு தெரியுமாய்யா? அந்த உழைப்பைப் பாருங்கைய்யா' என்கிறார்கள்.

“ஆ... ஊ... என்றாலே உழைப்பைப் பாருங்கள் என்கிறார்கள். பிறகு இன்னொன்று வைத்திருக்கிறார்கள். என்னாது... ஆங்க்.. மனசைப்பாருங்கள். செண்டிமெண்டல் பிளாக்மெயில்!

'அந்தா பாருங்க மாவைத் தொட்ட கையால நெஞ்சைச் சொறிஞ்சுக்கிட்டே நிக்கிற பரோட்டா மாஸ்டரைப் பாருங்க. அவர் சொறியிற நெஞ்சைப் பாருங்க.. அதில வளர்ந்திருக்கிற முடிதாண்டி, தோல் தாண்டி, நாடி நரம்பு தாண்டி உள்ள ஒரு மனசு இருக்கு! அந்த மனசைப்பாருங்க! அந்த மனசுக்குள்ளயும் ஒரு உணர்வு' அப்பிடி இப்பிடீன்னு ஆரம்பித்துவிடுவார்கள். மனிதாபிமானம் இல்லாத பயல் என்று முத்திரை குத்திவிடுவார்கள். நமக்கெதற்கு வம்பு?

ஆனால் ஒன்று மட்டும் புரியவேயில்லை. பசியில் காசு கொடுத்துச் சாப்பிட போகிறவன் பரோட்டா நன்றாக இருக்கிறதா என்றுதானே பார்ப்பான்? அதுதானே அவன் தேவை? பரோட்டா மாஸ்டரின் உழைப்பையோ, மனதையோ பார்ப்பதற்காக யாரும் சாப்பாட்டுக் கடைக்குப் போகிறார்களா என்ன!