Monday, August 25, 2014

பரோட்டாவும் சமகாலவாழ்வும்!



மா பரோட்டாவாகிறதா இல்லை சமோசா ஆகிறதா என்பது மாவுக்குத் தெரிவதில்லை. மாறாக பிசையும் மாஸ்டருக்கே தெரியும். ஆனால் எந்தப் பரோட்டாவை யார் சாப்பிடப் போகிறார்கள் என்பது அந்த மாஸ்டருக்கே... தெரிவதில்லை. உலக மயமாக்கலில் கடைக்கோடி ஏழைக்கும் சாத்தியமான ஒரே நுகர்பொருள் பரோட்டாதான் என்பதில் உண்மையில்லாமலில்லை. ஏதோ ஒரு தருணத்தில் பரோட்டா மாஸ்டர் அய்யாச்சாமிகூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாகத்தான் தெரிகிறாராம் என்பார் தோழர் பொன்னுஸ்க்கி என்கிற பொன்னுச்சாமி

இந்த வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. வெட்டிவைத்த முட்டை பரோட்டா போல கச்சிதமான வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு வெந்தும் வேகாமலும் அமைகிறது. பலருக்கு காய்ந்து காலாவதியாகிவிடுகிறது. இன்னும் சிலருக்கோ ஓவர் குழம்பு ஊற்றிய கொத்துப்பரோட்டா போல கொழ கொழவென்று கலவரமாகிவிடுகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்கிற உண்மையை மெக்கானிக் திருமலை அண்ணனுக்கு முதலே கண்டறிந்து சொன்னவர் எங்களூர் பரோட்டா மாஸ்டர் ஐன்ஸ்டீன்தான் என்பதில் எங்களுக்கு எப்போதும் பெருமை.

'நாபியிலிருந்து கிளம்பும் அமிலச்சுனையொன்று நெஞ்சை அடைத்துக் கண்டம்வரை எரிந்து சாமம்கடந்தும் ஓயாத ஏப்பங்களாக ஒரு பரோட்டா மாஸ்டரின் கைவண்ணத்தைப் பேசியபடி காற்றில் கரைகிறது' - 'பரோட்டா உண்ட ராவுகள்'  தொகுப்பில் கவிஞ்ஞர் சங்கூவின் கவிவரிகள் நினைவுக்கு வருகின்றன.ஒரு பரோட்டா என்பது வெறும்பரோட்டா மட்டுமல்ல....வாழ்க்கையின் தத்துவமே... சரிவிடுங்கள், வெறும் பரோட்டா மட்டுமே வெறும்பரோட்டா! மற்றபடி, சேர்க்கையைப் பொறுத்து முட்டைப்பரோட்டா, கொத்துப்பரோட்டா, ஆளுப் பரோட்டா...

பரிசாரகர் வந்து ஈ மற்றும் சிந்தனையைக் கலைத்தார்.
"சொல்லுங்க"
"பரோட்டா"

வெளிப்பார்வைக்கு சாதுவாக, அழகாக மனதைப் பரபரப்படைய வைக்கும் பரோட்டாக்கள் உண்ணும்போது, அவ்வாறிருப்பதில்லை. தாடைகளின், பற்களின் கடும் உழைப்பைக் கோருபவையாகவும், சமயங்களில் கன்னத்தின் உட்தசைகளைப் பதம் பார்ப்பவையாகவும் அமைந்துவிடுநின்றன. ஒரு பரோட்டாவைப் போல வாழ்வியலைச் சொல்லிக் கொடுப்பது...

'டொக்' பரிசாரகரின் அன்பும், தண்ணீரும் ஏக காலத்தில் தெறித்தன.
ஆரம்பிக்க வேண்டியதுதான்.

வெளியே பதமாக இருந்தது, உள்ளே பசையாகப் பற்றிப் பிடித்துக் கொண்டது. பற்களிலும், மேலண்ணத்திலும் (கீழண்ணம் என்று இருக்கிறதா?) வெகுவாக ஒட்டிக் கொண்டது. இனி, கோக்காகோலா போட்டுத்தான் கழற்றியெடுக்க வேண்டும். நிச்சயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிதான். இதையெல்லாம் வெளியே சொல்ல முடியுமா? அப்படியே முயன்றாலும் ஒட்டிக்கொண்ட பரோட்டாதான் அனுமதிக்குமா? மூடிக் கொண்டே சாப்பிட வேண்டியதுதான். அப்படியே கேட்டாலும் நீதி கிடைத்துவிடுமா? மேலதிகமாக இரண்டு பரோட்டாக்கள் கிடைக்கலாம். நல்ல பரோட்டா தருகிறேன் என்று சொல்லிக் கொடுப்பார்கள். அதையும் நாங்கள் அல்லவா காசு கொடுத்துத் தின்று தொலைக்கவேண்டும்?

ஏதோ நம்மால் முடிந்தது. பல்லுக் குத்திக் கொண்டே ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடலாம். யாரேனும் ஆறுதல் சொல்லலாம். அந்தப் பரோட்டக் கடைக்காரனின் சொந்தக்காரன்போல யாராவது வந்து கமெண்டில் விளக்கம் சொல்லக்கூடும்.
'சூடா இருந்திருக்கில்ல அதான் தலைவா!'
'பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிடவேண்டிய பரோட்டாவ அவசரப்பட்டு முழுங்கிட்டீங்க பாஸ்!'

எனக்குப் புரிவதே இல்லை. பரோட்டான்னா சுட்டு, உடனே சுடச்சுட சாப்பிடவேண்டும். அதற்காகத்தானே கடைக்குப் போகிறோம்? அதென்னய்யா அது.. 'பத்து நிமிஷம் கழிச்சு'? வித்தியாசமான ரெசிப்பியோ? தனக்குப் பிடிச்சவன் அரைகுறையாச் சமைச்சத பிடிச்சு சாப்பிட்டவன் எவனைப் பாத்தாலும் 'பத்து நிமிஷம் கழிச்சு சாப்பிடவேண்டிய பரோட்டா', 'பத்து மணித்தியாலம் கழிச்சு சுட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்', 'பார்சல் கட்டி பத்து நாளைக்கு அப்புறம் சாப்பிட்டிருந்தா கலக்கியிருக்கும் ' என்கிறார்கள்.

அதுகூடப் பரவாயில்லை. யாரோ ஒருவர் வந்து 'தமிழர்களின் நாக்கு இன்னும் சரியா வளரலைய்யா' என்று ஒட்டுமொத்தமாக அசிங்கப்படுத்தி விடுகிறார்கள். என்னய்யா கதை விடுறீங்க? இப்ப கேவலமா இருக்கிறது பத்து நாளைக்கு அப்புறம் நல்லாயிருமா? இன்னும் கேவலமாயிடாதா? என்ன, இப்ப கழுவி ஊத்துறவன்..அப்ப ஊத்தி ஊத்திக் கழுவ மாட்டானா?

இதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த மார்க்கின் கைங்கரியத்தைப் பாருங்கள். ஒரேயொரு ஃபேஸ்புக்! அப்பப்பா! ஊரில் உள்ள அத்தனை பேரையும் நல்லவர்களாக்கி விட்டதைப் பாருங்கள். இந்த உலகமே அன்பால், மனித நேயத்தால், நிறைந்து மலர்ந்து கிடப்பதைப் பாருங்கள். எங்கும் ஏராளமான புத்தன், யேசுகள் எல்லாரும் கையில் லேப்டாப், செல்பேசிகள் சகிதம் ஸ்டேட்டஸ் மூலம் அன்பைப் போதிக்கும் சமகாலத்தில், ஒரு பரோட்டா குறித்து கண்டபடி சமூகப் பிரக்ஞையற்றுப் பேசிவிட முடியுமா?

'ஒரு பரோட்டாக்குப் பின்னால இருக்கிற உழைப்பைப் பற்றி உங்களுக்கு என்னய்யா தெரியும்? எத்தனை பேரோட வியர்வை, உணர்வு கலந்திருக்கு தெரியுமா? ஒரு பரோட்டா மாஸ்டர் காலைல அஞ்சு மணிலருந்து இரவு பதினோரு மணிவரைக்கும் அடுப்புக்கு முன்னால நின்னுட்டே இருக்கிறத கூட இருந்து பாத்திருக்கியா? ஒவ்வொரு பரோட்டாலயும் அசுர உழைப்பு கொட்டிக் கிடக்கு தெரியுமாய்யா? அந்த உழைப்பைப் பாருங்கைய்யா' என்கிறார்கள்.

“ஆ... ஊ... என்றாலே உழைப்பைப் பாருங்கள் என்கிறார்கள். பிறகு இன்னொன்று வைத்திருக்கிறார்கள். என்னாது... ஆங்க்.. மனசைப்பாருங்கள். செண்டிமெண்டல் பிளாக்மெயில்!

'அந்தா பாருங்க மாவைத் தொட்ட கையால நெஞ்சைச் சொறிஞ்சுக்கிட்டே நிக்கிற பரோட்டா மாஸ்டரைப் பாருங்க. அவர் சொறியிற நெஞ்சைப் பாருங்க.. அதில வளர்ந்திருக்கிற முடிதாண்டி, தோல் தாண்டி, நாடி நரம்பு தாண்டி உள்ள ஒரு மனசு இருக்கு! அந்த மனசைப்பாருங்க! அந்த மனசுக்குள்ளயும் ஒரு உணர்வு' அப்பிடி இப்பிடீன்னு ஆரம்பித்துவிடுவார்கள். மனிதாபிமானம் இல்லாத பயல் என்று முத்திரை குத்திவிடுவார்கள். நமக்கெதற்கு வம்பு?

ஆனால் ஒன்று மட்டும் புரியவேயில்லை. பசியில் காசு கொடுத்துச் சாப்பிட போகிறவன் பரோட்டா நன்றாக இருக்கிறதா என்றுதானே பார்ப்பான்? அதுதானே அவன் தேவை? பரோட்டா மாஸ்டரின் உழைப்பையோ, மனதையோ பார்ப்பதற்காக யாரும் சாப்பாட்டுக் கடைக்குப் போகிறார்களா என்ன!

3 comments:

  1. வணக்கம்,உமா ஜீ!நலமா?///சிரித்து வயிறே புண்ணாகி விட்டது!(ஒரு புரோட்டா/பரோட்டா கிடைக்குமா?)

    ReplyDelete
  2. நாளை சரித்திரம் நாம் வாழும் காலத்தை பரோட்டாயுகம் என்றே சொல்லு போலிருக்கே உமா ஜி !
    த ம 1

    ReplyDelete
  3. அட! அட! ஒரு பரோட்டாவுக்கு பின்னால் இவ்வளவு சமாச்சாரம் இருக்கா? ஒரு பரோட்டா மாஸ்டருக்கே புதிய தகவல்கள் தரும் அற்புதமான சிந்தனை. அமெரிக்க மாவில உப்பையும், எண்ணையையும், தண்ணீரையும் மட்டுமல்லாமல் கொஞ்சம் ஏகாதிபத்திய அரசியலையும் கலந்தது, அசத்தல்! அட! அட! ......

    ReplyDelete