Showing posts with label தமிழ்சினிமா. Show all posts
Showing posts with label தமிழ்சினிமா. Show all posts

Wednesday, January 11, 2017

காதலும், நம் சமூகமும் மற்றும் இயக்குனர் விக்கிரமன் படங்களும்!



Horror sentiment Family Drama
பாணியிலான திரைப்படங்கள் முன்னொரு காலத்திலே தமிழில் சரமாரியாக வெளிவந்து கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்தவரையில் தொண்ணூறு ஆறு தொடக்கம் இரண்டாயிரம் வரையிலான காலப்பகுதி அவ்வகைத் திரைப்படங்களின் பின்னைய பொற்காலம் எனலாம்.

ஆரம்பகாலத்தில் தமிழ் சினிமா கேட்சி ஊடகமாக இருந்தது. பின்னர்தான் காட்சி ஊடகமாக மாறியது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பார்க்காமலேயே கேட்டுணரும் பாணியிலானவை அவை. ஊரின் சிறுவயது ஞாபகம் உங்களுக்கும் இப்போதும் இருக்கக் கூடும். "இஷைத்தமிழ் நீ ஷெய்த அரும் ஷாதனை.." பாடல் முடிந்ததும் "டிர்ர்ர்ர்ர்ர்..றி...ய்ங்.." என்கிற இசையில் திருவிளையாடல் படத்தின் காட்சி மாறிவிட்டதை நாம் கோவில் திருவிழா குழாய் ஸ்பீக்கரில் கேட்டே அறிந்துகொண்டோமல்லவா?

பின்னைய காலத்தில் தமிழ்சினிமாவும் காட்சி ஊடகமானாலும் மறுபடியும் அவ்வப்போது யாராவது வந்து பழையபடி கையைப் பிடித்து இழுத்துச் செல்வதுண்டு. ஹொரர்  செண்டிமெண்ட் ஃபாமிலி டிராமா அநேகமாக அந்தப் பணியைச் செய்தவை.

யாழ்ப்பாணத்தின், வன்னியின் மின்சாரமில்லா காலங்கள், வவுனியாவின் 96,97 களின் இடம்பெயர் இடநெருக்கடிக் காலங்கள், யாழ்ப்பாணத்தின் 97 களுக்குப் பின்னைய 2000 வரையான மின்சாரப் பற்றாக்குறை காலகட்டங்களில் படம் பார்ப்பது என்பது ஒரு சடங்கு. அது போலவே படம் கேட்பது என்பது அதனோடு இணைந்த ஒரு சம்பிரதாயம். ஒருவீட்டில் படம் ஓட்டுவித்தால் சுற்றுச் சூழலில் ஆறேழு வீடுகளுக்கு படம் கேட்கும். அந்தப் படங்களில்  படங்கள் இப்படங்கள் முக்கியமானவை. இப்போது இந்தப் படங்களின் இசை குறித்த முக்கியத்துவம் புரிந்திருக்கும்

.தமிழின் ஹொரர் செண்டிமெண்ட் ஃபாமிலி டிராமா பாணியிலான திரைப்படம் உங்கள் அயல் வீடுகளில் ஒளிபரப்பிய காலத்தைச் சற்று நினைவு கூருங்கள். ஓரிரு குரல்கள் தொடர்ச்சியாக இடைவிடாமல் பேசுகின்றன. வெவ்வேறு மாடுலேஷனில், ஏற்ற இறக்கங்களோடு, மூக்கை உறிஞ்சிக் கொண்டு, அழுதுகொண்டு, அரற்றிக் கொண்டு ..மொத்தத்தில் பேசிக்கொண்டே...யிருப்பார்கள். சிறிது இடைவெளி கிடைக்கும்போது இசையமைப்பாளர் 'லாலா லாலால லாலா லாலால' இசைக்கோர்வையை ஒலிக்க விடுவார். இப்போது நாம் புரிந்துகொண்டிருப்போம், அவை இயக்குனரின் விக்கிரமனின் படங்கள் என்பதை!

பின்னர் மீண்டும் பேச்சு. சில இடங்களில் பேச்சு சற்றுக் குறைவாக இசை அவ்வப்போது "டுடுடிய்ங்.." சற்று நேரம் கழித்து இன்னொரு "டுடுடிய்ங்.." - இது நகைச்சுவைக் காட்சி என்பதை நாம் நாலு வீடு தள்ளியிருந்தே புரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு வகை இசைக்கோர்வைகள் இந்தப் படங்களின் இசையின் அடிநாதம். எஸ். ஏ. ராஜ்குமார் என்பவர் இதில் சிறந்து விளங்கினார். இரண்டு இசைக் கோர்வைகள், ஐந்து பாடல்கள் மட்டுமே வைத்துக் கொண்டு பத்து வருடங்களுக்கு மேலாக, பலபடங்களுக்கு இசையமைத்த அவர் திறமை அசாத்தியமானது என இப்போதும்கூட பலரும் வெகுவாகச் சிலாகிப்பதை நாம் பார்க்கிறோம்.

விக்கிரமன் சார்  படங்களின் மையக்கருவை 'உழைத்தால் நிச்சயம் உயர்வுண்டாகும்', 'நல்லவனுக்கு நல்லதே நடக்கும் கெட்டவன் அழிந்துபோவான்', 'ஒருவருக்குத் தீங்கு செய்தால் அவனைக் கடவுள் தண்டிப்பார்' என்கிற சிறுவர் நீதிக் கதைகளின் பெரியதிரை வடிவமாகக் கூடக் கொள்ளலாம். பார்ப்பவர்கள் யாரின் மனநிலைக்கும் தீங்கு விளைவிக்காத இவ்வகைத் திரைப்படங்கள் வெளிவந்தபோது டீவி சீரியல்களின் ஆதிக்கம் இப்போது போலில்லை. உண்மையில் பழக்கமில்லாமல் சடுதியாகப் பார்ப்பவர்களை மிக மோசமாக பாதிக்கும் இந்த வகை டீவி சீரியல்களை எப்போதாவது பார்க்க நேரிடுகையில் விக்கிரமன் சாரை  நன்றியுடன் நினைத்துக்கொள்வதுண்டு.

நேர்மறைச் சிந்தனையை வளர்ப்பதில் அவர் படங்கள் பெரும்பங்காற்றியிருக்கின்றன. உதாரணமாக, புளியம்பட்டி டூ பொள்ளாச்சி தினமும் பேரூந்தில் ஏற்றிச் செல்லும் அவ்வளவு பிரயாணிகளுக்கும் மாதமுடிவில் பெரிய சில்வர்குடம் பரிசளிக்க முடியுமா? என்றால் முடியும். அந்தப் பழைய பேரூந்தை வந்தவிலைக்கு விற்றுவிட்டால் முடியும். ஆனால் பேருந்தையும் விற்காமல், சில்வர்குடமும் பரிசளித்து, பணக்காரராகவும் ஆகிவிடுவது எப்படிச் சாத்தியம்? (சூர்ய வம்சம்) இங்கேதான் இயக்குனரின் நேர்மறை அணுகுமுறையை உணர்ந்துகொள்ளலாம். அந்த நம்பிக்கைதான் விக்கிரமன் சார் படங்கள்!

அதனை விட விக்கிரமன் சாரின் படங்கள் நம் சமூகத்தில் தாக்கம் செலுத்தியது நம் அழுகுணிக் குமார்களின் அணுகுமுறையில் என்றால் அது மிகையல்ல!

நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் அழுகுணிக் குமார்களை நாமறிவோம். காலத்துக்குகேற்ப அவர்களின் அணுகுமுறைகள் மாறிக்கொன்டே இருந்தாலும் கொள்கையளவில் அவர்கள் எப்போதும் ஒரேமாதிரியானவர்கள்தான். 'இந்தப் பெண்களே இப்படித்தான்' என்பதே அவர்களின் ஏகோபித்த தாரக மந்திரம். 'பெண்கள் ஏமாற்றுப்பேர்வழிகள்' எனும் பொருள்பட ஃபேஸ்புக் உள்ளிடட சமூகவலைத்தளங்களையும் கண்ணீரும் கம்பலையுமாக பதிவிட்டு வரும் அவர்களின் அன்றைய காலத்து ஒரே ஆறுதலாக விக்கிரமன் சார் படங்கள்தான்  விளங்கின என்றே சொல்லலாம்.

அழுகுணிக் குமார்கள் காதலில் விழுந்துவிட்டதாக, அல்லது அப்படி அவர்களே நம்பத் தொடங்கும்போது, அவர்தம் கூட இருக்கும் நண்பர்களுக்கு ஏழரை ஆரம்பமாகிவிடும். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தம் நிலையைச் சொல்ல எதுவித முயற்சிகளும் எடுக்காமல் ஒருவகையினர். இவர்கள் இதயம் முரளியாகத் தங்களை பாவித்துக் கொள்பவர்கள். இன்னொருவகை காதலைச் சொல்லி செருப்படி வாங்காத குறையாக அல்லது நண்பர்களாக இருப்போம் என்கிற பதிலைப் பெற்றவர்கள். இது செருப்படியை விட வீரியமானது (அதாவது பிஞ்ச செருப்பை சாணியில் முக்கி அடித்ததுபோல) எனினும் குமார்கள் அதனைப் புரிந்துகொள்ளும் அறிவோடு இருப்பதில்லை. ஒரு கௌரவமாகவே கருதிக் கொள்வர். நண்பர்களும் அப்படியே விட்டு விடுவார்கள்.

அதெப்படி சம்பந்தமேயில்லாமல் ஒருவர் காதலைச் சொன்னவுடன் நண்பனாகி விடுவார்? குமார்களின் (இனி அழுகுணிக் குமார்களைக் குமார்கள் என்றே அழைப்போம்) தொண தொண தொல்லையிலிருந்து தப்பிக்க பெண்கள் கைக்கொண்ட ராஜதந்திர ரீதியான உத்தி அது! சமயங்களில் ஒரு விசுவாசமான வேலைக்காரனாகவும், சிறந்த எடுபிடியாகவும் அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவகையில் குமார்களின் நண்பர்களுக்கும் இந்த ஏற்பாடு ஆசுவாசத்தைக் கொடுத்தது என்பதே உண்மை.

இவ்வாறான குமார்களைப் புத்துணர்ச்சி கொள்ள வைத்தது விக்கிரமன் சாரின் 'பூவே உனக்காக' திரைப்படம். படம் வந்ததிலிருந்து குமார்களின் தோரணையே மாறிவிட்டது. தங்களைத் தியாகிகளாகவே நினைக்கத் தலைப்பட்டார்கள். ஆளாளுக்கு 'காதல்ங்கிறது ஒரு செடியில் பூத்த ரோஜா மாதிரி..அது ஒருமுறைதான்' என்று பேசிக் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவுக்கு அணுக்கமான இன்னொரு நண்பர் குழுவிலிருந்த குமார் ஒருவர், தனது பதினெட்டாவது காதல் முயற்சி தோற்றபோதும் ‘காதல்ங்கிறது ஒருமுறைதான்’ வசனத்தை சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தார்.

இது ஒருவிதமான புரட்சியையே ஏற்படுத்தியது. குமார்கள் தாங்கள் தியாகம் செய்ததாக நம்பிக் கொண்டதில் அவர்களுக்கு ஒருவித பெருமிதத்தையும், நண்பர்களுக்கு நிம்மதியையும் ஒருங்கே கொடுத்தன என்றால் அது மிகையாகாது.

இன்னும் சில குமார்களை நேரடியாக ‘எடுபிடி’ அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து வைத்திருப்பார்கள் பெண்கள். இந்தவகைக் குமார்கள் தம்மை ஒரு லட்சியக் காதலானாகவே கருதிக் கொண்டு ரகசியமாகக் காதல் செய்து வருவார்கள். காதலை தெரிவிக்க சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். தம் காதலியினதும்(?!) தமக்குமான ரசனைகள் ஒத்துப் போவதையும், போகாவிட்டாலும் வலுக் கட்டாயமாகப் போகவைத்தும் அவருக்குப் பிடித்ததெல்லாம் தனக்கும் பிடிப்பதான பிரமையிலும் -  அரிதாக உண்மையாகவும், அடிக்கடி இருவர் விருப்பங்களைச் சோதித்துப் பார்த்து, திருப்திப்பட்டு காதல் வளருவதான பிரமையுடன் - மொத்தத்தில் பிரமை பிடித்து வாழ்ந்து வருவார்கள்.

ஏதோ ஒரு துணிச்சல் பெற்ற, சுபயோக சுபதினத்தில் காதலைச் சொல்லி அசிங்கப்பட்டு வரும் குமார்கள் காட்டும் சோகத்தைவிட நண்பர்கள் காட்டும் அறச்சீற்றம் அளவிடமுடியாதது. அது ஏற்கனவே எங்கேயோ பட்டு உணர்ந்ததன் வெளிப்பாடாக இருக்ககூடும். இந்த வகையான சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு பாடல் வெளிவந்தது. அது  'யுத்' படத்தின் 'சர்க்கரை நிலவே' என்பதாகும். பாடல் ‘உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய்?’ என்கிற அறிவு பூர்வமான, காத்திரமான கேள்வியை முன்வைத்தது. குமார்கள் இந்தவரிகளை உறுதியாகப் பற்றிக் கொண்டார்கள். இதுவரை காலமும் ஆண்வர்க்கத்திற்கு நேர்ந்த அவலநிலையை தட்டிக் கேட்டதாக அப்போது கன்சல்டன்ட்ஸ் ஆகியிருந்த முன்னாள் குமார்களும் உவகையடைந்தார்கள். அந்த வரிகளை எழுதிய பிரகிருதி யாரெனத் தெரியவில்லை. என்னவொரு சிந்தனை பாருங்கள்! சாதாரணமாக இப்படி யோசிக்க முடியுமா? அபத்தமான இந்த வரிகளை மேற்கோள் காட்டியே குமார்கள் ஆக்ரோசமாக கேள்வி எழுப்பினார்கள். அதானே? ஏன்னா நியாம்பா இது? நியாயப்படி பிடிச்சுத்தானே ஆகணும்?

ஆனாலும் சமூக ரீதியில், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் இந்தப்பாடல் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என குமார்கள் விசனமடைந்திருந்தார்கள். வழக்கம்போல ‘பெண்களே இப்படித்தான்’ என அதற்கும் நண்பர்களையே வதைத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான சூழ்நிலையில் விக்கிரமன் சாரின் படங்கள் குமார்களின் காயங்களுக்கு ஒருவித ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தன என்றால் மிகையல்ல. சமயங்களில் சில பெண்களும் சேர்ந்து குமார்களை ஆதரவளித்து உற்சாகப்படுத்தினர் என்பதுதான் இங்கே உச்சகட்ட நகைச்சுவை!

விக்கிரமன் சார் படங்களின் 'சோப்ளாங்கி' ஹீரோக்களாக (உதாரணமாக உன்னை நினைத்து) தங்களை நினைத்துக் கொண்டனர். தான் காதலிக்கும் பெண் வேறொருவரைக் காதலிப்பதாகத் தெரிந்த பின்னரும் அந்தக் குடும்பத்து உதவுவது போல குமார்கள் தம் காதலிகளுக்கு உற்ற நண்பனாக இருப்பர்கள். ஒருகட்டத்தில் நல்ல மனம்கொண்ட 'சோப்ளாங்கி' ஹீரோவை விட்டு மோசமான நபரைக் காதலித்துவிட்டதை எண்ணி காதலி மனம் வருந்துவார் என்பது குமார்களின் ஆழ்ந்த நம்பிக்கை. அத்தகைய சந்தர்ப்பத்தில் தாம் பெருந்தன்மையாக, ஒரு கனவானாக நடந்துகொள்ளவேண்டும் கூறி நட்பை மெய்ப்பிக்க வேண்டும். இதற்காகவே, நம் குமார்கள் தமது காதலிகளின் காதல் எப்போது ஊற்றிக் கொள்ளும் என உள்ளூர எதிர்பார்ப்புடன் எடுபிடியாகத் தமது பணியினை மேற்கொள்வர்.

ஆனால் நடைமுறை சினிமாவுக்கு சம்பந்தமில்லாதது. குமார்களின் எதிர்பார்ப்பின்படியே காதலிகளின் காதல்கள் ஊற்றிக் கொண்டாலும் அவர்கள் குமார்களைப் பொருட்படுத்துவதில்லை. விவரமாக வேறொரு காதலனோ, வெளிநாட்டு மாப்பிள்ளையோ கிடைத்து அவர்கள் பாட்டுக்குச் சென்றுகொண்டாயிருப்பார்கள். குமார்களும் அதே ஏக்கப் பார்வையுடன் அலைந்துகொண்டிருந்தார்கள். ஆனாலும் உள்ளூர குமார்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும். அதனை விக்கிரமன் சாரின் 'சூர்யவம்சம்' போன்ற படங்கள் கொடுத்திருந்தன.

காதலனைக் கைவிட்டுச் செல்லும் காதலிகள் என்றோ ஒருநாள் அதற்கான தண்டனையைப் பெறுவார்கள். வருந்துவார்கள். அப்போது தாம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என அடுத்தகட்டத் தயார்படுத்தலில் இருப்பார்கள். எஞ்சினியரான அவள் புருஷனுக்கு வேலை போனால் உங்களைத் காண வருவாள். அவனுக்கு உங்கள் பஸ் கம்பனியில் டிகக்ட் கிழிக்கும் வேலை வேண்டி! உண்மையில், அவனுக்கு வேலை போனால் அவன் இன்னொரு கம்பெனியில் என்ஜினியராக வேலை தேடிக்கொள்வான். டிக்கட் கிழிக்க வரமாட்டான் என்பதுதான் யதார்த்தமாக இருந்தாலும், காதல்வயப்பட ஆரம்பத்திலிருந்து தமது மூளையை ஒருவித கொழுப்புப் பதார்த்தமாகவே பேணிக் கொள்வதால் குமார்கள் இதனை உணர்ந்துகொள்வதில்லை.

சமயங்களில் பெண்கள் மிகத் தெளிவானவர்கள். உண்மையில் ஒருபெண் பட்டுணர்ந்து தான் காதலிப்பவனை விட்டு விலகும்போதே அவள் வாழ்க்கை நன்றாகச் செல்ல ஆரம்பித்துவிடுகிறது என்பதே நாம் அனுபவத்தில் கண்டது. அதனைக் குமார்கள் அன்றும் இன்றும் என்றும் புரிந்துகொண்டதேயில்லை.

ஏதோ ஒருகட்டத்தில் எல்லாக் குமார்களும் ஒரு புள்ளியில் இணைந்துகொண்டுவிடுவார்கள். உண்மையில் காதலில் இருந்து ஒருகட்டத்தில் காதலிகள் சுதாகரித்து கழற்றிவிடப்படட குமார்கள், எடுபிடிகளாக நியமிக்கப்பட்டு தமக்குள்ள காதலை வளர்த்து கவிதை வரைந்து காவியக் காதலில் ஈடுபட்ட குமார்கள், காதல் விண்ணப்பப் படிவங்களை திரும்பத் திரும்ப அனுப்பிய குமார்கள் எல்லோருமே காதலியால் ஏமாற்றப்பட்ட பட்டியலில் விரும்பி இணைந்துகொள்வார்கள். இதில் இன்னொரு விசித்திர வகைக் குமார்களும் அடக்கம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே தெரியாமல் ஐம்பது மீட்டர் தூரத்தில் சைக்கிளில் துரத்திய குமார்கள்கூடாத் தாங்களும் ஏமாற்றப்பட்டதாக ஏதோ ஒரு புரியாத தர்க்கத்தின் அடிப்படையில் தாங்களும் வஞ்சிக்கப்பட்டதாக அவர்களே நம்பிக்கொண்டிருப்பார்கள். அவர்களும் இந்தப்புள்ளியில் இணைவதுதான் உச்சகட்ட அவலம் எனலாம்.

இவர்களுக்காகவே ஒருபாடல் உருவாக்கி வெளியிட்டார் விக்கிரமன் சார். பட்டி தொட்டியெங்கும் குமார்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. குமார்கள் புத்துணர்ச்சியுடன், முக மலர்ச்சியுடன் பாடித் திரிந்தார்கள். அது, 'பொம்பிளைங்க காதலைத்தான் நம்பி விடாதே!'. குமார்களின் தேசிய கீதமாகவே ஆகிப்போனது. அப்போதே பெரிய சந்தேகம் ஒன்றிருந்தது. பெண்களை நம்பாமல் வேறு யார் காதலை நம்புவது? ஒரு ஆண் பெண்ணின் காதலைத்தானே நம்ப வேண்டும்? என்ன அபத்தம் இது? கொஞ்சம் ஆழமாக யோசித்தால் வில்லங்கமாக அல்லவா வருகிறது? உண்மையில் அப்படி இருந்தால் குமார்கள்தான் எவ்வளவு பாவப்பட்டவர்கள்? ஆண் ஓரினச் சேர்க்கையாளருக்காக உருவாக்கப்பட்ட பாடலை குமார்கள் தமக்கான தேசிய கீதமாக வரித்துக்கொண்டதுதான் இந்த நூற்றாண்டின் மகத்தான சோகம் எனலாம்.

எது எப்படியோ இன்றைய  காலகட்டத்தில் டீவி சீரியல்கள் வரவேற்பறைகளை ஆக்கிரமிக்க, வன்மமும் குரோதமும் வஞ்சகமும் அதிர்வலைகளாக உருவாகி நிறைந்துள்ளதாகப் பலரும் அஞ்சுகிறார்கள். உண்மையில் நம் சமூகத்தில் அன்பும், நம்பிக்கையும் பாசமும் பெருக்கெடுக்க, ஒன்றாகக் குழுமியிருந்து படம் பார்த்துக் களித்த காலமொன்று உண்டெனில் அது இயக்குனர் விக்கிரமன் படங்கள் வெளிவந்த காலம் எனலாம். அதற்காகவே நாம் என்றென்றும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்

Friday, June 8, 2012

இசைராஜா!



ளையராஜாவின் ஒரு ஆச்சரியத்தை முழுமையாக சந்திக்க நேர்ந்தது, மூன்று மாதங்களுக்கு முன்னர், தற்செயலாக! இவ்வளவு நாட்கள் எப்படித் தவற விட்டேன்? அதற்கு முன்னர்பாடலின் ஆரம்பம் மட்டுமே ஓரிரு தடவை கேட்டதுண்டு.

Wednesday, May 2, 2012

பில்லா 3 - கதை ரெடி!


இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், அஜித் நடித்து பெரு வெற்றியடைந்த  பில்லா படத்தைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான பில்லா 2 படத்திலும் இதே கூட்டணி இணைவதாக இருந்தது. சில காரணங்களால் இணைய முடியாத இக்கூட்டணி மீண்டும் இணைந்து பில்லா 3 படத்தை உருவாக்குவது குறித்து பேச்சு...

Wednesday, March 14, 2012

கர்ணன் - போராளி!



ர்ண கொடூரம் என்று சொல்வார்கள்தானே? எப்படி அந்தச் சொல் உருவாகியது? கர்ணனுக்கும் கொடூரத்துக்கும்  என்ன சம்பந்தம்? கர்ணன் அவளவு கொடூரமானவனா? அப்படித் தெரியவில்லை! கர்ணனை எல்லாரும் திட்டமிட்டு கொடூரமாக கொன்றதால் அப்படி ஒரு சொல் உருவாகியிருக்குமோ?

Monday, February 27, 2012

சுஜாதா! சுஜாதா!



விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, எந்தவித கேள்விக்கும் உள்ளாக்காமல் மிகச்சிலரை மட்டுமே ரசிக்க, நேசிக்க முடிகிறது. அப்படி எந்த சமரசமும் செய்துகொள்ள விரும்பாமல் நான் ரசிக்கும் ஒருவர் சுஜாதா! ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது தன்னை நினைவு படுத்திப் போகிறார். என்னைப் போல பலருக்கும் இப்படியிருக்கலாம். 

Sunday, January 15, 2012

நண்பன் - Hats off விஜய்!


நாம் மனதிற்குப் பிடித்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? ஆசைப்பட்டதைத்தான் படிக்கிறோமா? பார்க்கும் வேலை மனதிற்குப் பிடிக்கிறதா? ரசித்து செய்ய முடிகிறதா? வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் நம்மால்தான் எடுக்கப்பட்டவையா? அவை எல்லாமே நமக்கு முற்றிலும் சம்மதமானவையா?

Friday, January 21, 2011

வெற்றிமாறனின் அசத்தலான 'ஆடுகளம்!'


வெற்றிமாறனின் கதைக்களம், கதை சொல்லும் உத்தி, டீட்டெயிலிங், கதா பாத்திரங்களின் குணவியல்புகளின் சித்தரிப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தவை.

பொல்லாதவன் படம் இறுதிக்காட்சியில் தொடங்கும். தனுஷ் 'எல்லாம் இந்த பைக்கால தான்' என்று சொல்லும்போதே கதை குறித்த எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது, யோசிக்கவைத்தது! ஒரு புதிய களத்தில், நிழல் உலகம் பற்றி, ஒரு உலக சினிமா போன்ற லாவகத்துடன் பயணிக்கும் கதையில் தேவையில்லாத காதல் காட்சிகள், பாடல்கள் மற்றும் ஒற்றை ஆளாக தனுஷ் பலரைப் போட்டுப் புரட்டி எடுக்கும்போதே அது தமிழ் சினிமாவானது!

பொல்லாதவன் ஒரு வெற்றிப்படமாக இருந்தாலும், அதற்குரிய மரியாதை கிடைக்கவில்லை, ஒரு மசாலாப் படமாகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. நான் பொல்லாதவன் நல்ல படம் என்று சொன்னபோது சில நண்பர்கள் பார்த்த பார்வை அப்படியே தோன்றியது.    

ஆடுகளம் 
பொல்லாதவன் போலவே இறுதிக்காட்சியில் ஆரம்பித்து பிளாஷ்பேக்கில் கதை சொல்லப்படுகிறது!

-எப்போதும் அடிக்கிறாய்ங்க, கொல்றாய்ங்க என்று சண்டைக்கு ரெடியாக பொருளுடன் அலைவது.
-போவோர் வருவோரிடம் 'லந்து' கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு காரெக்டர்
-நாலைந்து பேர் ஒரே நேரத்தில் பேசுதல் அல்லது இடைவெளி விடாமல் பேசுதல்
என்ற வழமையான மதுரை டெம்ப்ளேட் படங்களில் இருந்து வேறுபட்டு, புதிய களத்தில்.

சேவற்சண்டையை ஒரு பொழுபோக்காக கொள்ளாமல் தமது வாழ்க்கை, தன்மானம், கௌரவம் எல்லாவற்றையும் அதனூடாகவே பார்க்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. 

தனி ஒரு மனிதனின்(பேட்டைக்காரன்) தான் சீடன் தன்னை மிஞ்சிவிட்டான், தான் உதாசீனப் படுத்தப் படுகிறோம் என்ற எண்ணம், அவமான உணர்வின் வலி, தொடரும் சில நிகழ்வுகளால், வன்மமாக மாறி, பழிவாங்கலாக முடியும்போது அது சிலபேரின்(கருப்பு, பேட்டைக்காரன், மீனாள், ஐரீன், துரை, ஊளை) வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதைப் பேசுகிறது படம்.

பேட்டைக்காரன் - ஜெயபாலன்  
இவரின் பார்வை ஒன்றே எல்லா செய்திகளையும் அநாயாசமாகக் கூறிச்செல்கிறது, அரையிருட்டான காட்சிகளில் வன்மம், குரோதம் பளபளக்கும் கண்களில். இறுதிக்காட்சியில் ஆற்றாமை, குற்றவுணர்வு எல்லாமே கண்களில்.

கருப்பு - தனுஷ் 
புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு தனுஷின் திறமைக்கு தீனி போடும் ஒரு அருமையான வாய்ப்பு. எப்பொழுதுமே தனுஷ் ஒரு டைரக்டரின் ஆளுகைக்குட்பட்ட நடிகராகவே இருப்பது அவரின் பிளஸ். தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வெள்ளந்தியான மனதுடன், விசுவாசம், கொண்டாட்டம் என்று மனிதர் அசத்துகிறார்.

துரை - கிஷோர் 
எந்த இடத்திலும் மிகைப்படாத ஒரு நடிப்பில். ஒரு அண்ணன் போல கருப்புவிற்காக பேட்டைக்காரனிடம் பரிந்து பேசுவதில், அவனுக்கு வாழ்க்கையில் செட்டிலாக வாய்ப்பு கிடைப்பதாகத் தெரிந்ததும் பந்தயத்திற்கு ஒத்துக் கொள்ளச் செய்வது, கருப்பு ஓவராகப் போவது போல தெரிந்தால் அடக்கி வைப்பது என மிகக் கச்சிதமான நடிப்பு! பொல்லாதவன், வெண்ணிலா கபடிக்குழு படங்களிலும் அசத்தியிருக்கும் என்னைக் கவர்ந்த, தமிழ் சினிமாவினால் நன்றாகப் பயன்படுத்தப்படாத ஒரு நடிகர்.
          
கருப்புவின் தாய், மீனாள், அயூப், ஊளை, ஐரீனின் நண்பன், போலீஸ் அதிகாரி என்று எல்லோரும் நிறைவாக! முதல் பாதியில் பெரும்பான்மை பாத்திரங்களின் டீட்டெயிலிங்கிலேயே சென்று விடுவதால் நீளமாய் இருப்பதுபோல தோன்றினாலும் இந்த மாதிரியான கதைக்கு அது தவிர்க்க முடியாதது, அவசியமானதாகவே தோன்றுகிறது.

அசத்தலான சேவல் சண்டைக்காட்சிகள், ஒரு ஹீரோ - வில்லனின் சண்டைக்காட்சிகளுக்கு நிகராக, 'சீட்' நுனிக்கு ரசிகர்களை கொண்டுவருவது போல. படத்தில் அதைப்போல் மனிதர்களின் சண்டை கவரவில்லை என்பதற்கு திரையரங்கில் சேவற்சண்டையின்போது நிலவும் நிசப்தமே சான்று.

சில இடங்களில் குறிப்பாக இறுதிச் சண்டைக்காட்சியில் கருப்புவின் சேவல் தலையைக் குனிந்து கொண்டு பார்க்கும் காட்சியில், சில இரத்தம் தெறிக்கும் காட்சிகளில் மட்டுமே கிராபிக்ஸ் என்பதை உணர முடிகிறது!

ஒரு காட்சியில் சண்டையை நேரடியாகக் காட்டாமல், சுற்றி நிற்கும் மனிதர்களின் முகங்களில் தெரியும் உணர்வுகளின் மூலம் சண்டையின் போக்கு சொல்லப்படுதல் அருமையான உத்தி.

முதலில் இன்னொருவனின் தொல்லையிலிருந்து தப்ப கருப்புவைக் காதலிப்பதாகச் சொல்லும் ஐரீன் பின்பு நண்பர்களாக இருப்போமென்று கூறுவது வரை சரியே.பின்பு ஏன், எப்படி காதலியானாள் என்பது அழுத்தமாக கூறப்படவில்லை. அதுவும் கருப்பு மூன்று லட்சம் ஜெயித்த பின்பு காதலை ஏற்றுக்கொள்வது...'தப்பா தெரியுதே மாப்ள!'.

இந்தப்படத்திலும் (பொல்லாதவன் போலவே) காதல் தேவையில்லாத ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது! ஆனால் காதல் தொடர்பான காட்சிகள் சுவாரஸ்யமாகவே! குறிப்பாக 'யாத்தே யாத்தே' பாடலில் தனுஷின் ஆட்டம், நிலைகொள்ளாமல் நகரும் காமெரா என அதிலுள்ள உற்சாகமான கொண்டாட்டமான மனநிலை பார்த்துக் கொண்டிருக்கும் எங்களையும் தொற்றிக் கொள்கிறது!

ஜீ.வி.பிரகாஷின் பின்னணி இசை ஓக்கே! சில இடங்களில் குறிப்பாக சேவற்சண்டைக் காட்சிகளில் கவனிக்க வைக்கிறது! எங்கோ கேட்டமாதிரி இருக்கேன்னு யோசித்த போதே பார்த்தி சொன்னான் Pirates of the Caribbean, Gladiator படங்களில்....!

வழமையான தமிழ் சினிமாவில் வரும் சில எதிர்பார்ப்புகளைத் தூண்டும் காட்சிகள் வந்து, ஆனால் அப்படி நிகழாமல் செல்வதே புதுமையாக உள்ளது. பந்தயத்தில் தோற்று மொட்டையடிக்கும் போலீஸ் அதிகாரி, பேட்டைக்காரனின் உண்மையான முகத்தை அறியும் கருப்பு என்ன செய்கிறார்கள் என்பதே அது.

ஒரு மோசமான ஒளி, ஒலியமைப்புள்ள திரையரங்கில் பார்த்ததால் படசான்றிதழே இருட்டாக, பிறகு படம்வேறு இரவுக்காட்சிகள் அதிகமா, மொத்தத்தில தியேட்டர்லயே திருட்டு DVDல பார்த்த எபெக்ட். ஒரிஜினல் DVD வந்ததும் வாங்க வேண்டும்! 

மொத்தத்தில தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு அருமையான படைப்பு! நல்ல படம் பார்க்க விரும்பும் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்! 
  

Friday, January 7, 2011

மன்மதன் அம்பு!


நாலு நாளைக்கு முன், பார்த்தி 'மன்மதன் அம்பு' பார்க்க அழைத்தான். நான் பல பதிவுகளை படித்திருந்ததால் மறுக்க, அவன் எனது புத்தாண்டு தீர்மானங்கள் பதிவைப்படித்து விட்டிருந்தான். இதையெல்லாம் என்ஜாய் பண்ணாட்டி, அப்புறம் எப்பிடி மாற்றம் வரும்னு செண்டிமெண்ட்டா பிளாக்மெயில் பண்ண நான், பார்த்தி, இன்னொரு நண்பன் கிளம்பிட்டோம்!

ஏண்டா இந்தத் தியேட்டர்? நான் கேட்க, எங்க ஏரியால இங்க மட்டும் தான் ஓடுது. (என்ன கொடுமை தலைவா?)
2.30 ஷோவுக்கு 2.25 க்கு சாவகாசமா போறமே 'சீட்' பிரச்சினையாய் இருக்குமோ? 
அடுத்த கவலையுடன் உள்ளே போக....அரங்கு நிறைந்த காலி இருக்கைகள்! 
படம் தொடங்கும்போது ஒரு தரம் திரும்பிப் பார்த்து, 'முப்பது பேர் இருப்பாங்கல்ல?'

பொதுவாக எனக்குப் பிடித்த படங்கள் பலவற்றை (கமல் படங்கள் உட்பட) நான் தியேட்டரில் பார்த்தது குறைவு (அதில் ஒரு சந்தோஷம் இருந்தாலும்). 
எல்லாமே DVD யில் தான். அதற்காக பல நாட்கள் காத்திருந்திருக்கிறேன். எனக்குத் தனிமையில், இரைச்சலில்லாமல் பார்ப்பதுதான் அதிகம் பிடிக்கும்!

நல்ல வேளை! தியேட்டர்ல எந்தக் கூச்சல் இரைச்சலும் இல்ல......ஆனா கொடுமைய பாருங்க! எல்லா இரைச்சலும் படத்துக்குள்ளதான்!

அதிகப்படியான இங்க்லீஷ் வசனங்கள், தெளிவில்லாத தமிழ் வசனங்கள் அப்டீன்னு பலபேர் சொன்னாங்க....ஆனா சில வசனங்கள் தமிழா, இங்க்லீஷான்னே புரியல!..ஒரு வேளை தியேட்டர் தான் அப்செட்டோ?

கதை - எவ்ளோ பெரிய கப்பல்! சூப்பர்! (நன்றி உதயநிதி!)
லைவ் சவுண்ட் - ஆமா, எதுக்கு சவுண்டை மட்டும் யதார்த்தாமா வச்சு?

நமக்கு வாய்த்திருக்கும் மாதவன் மிகுந்த திறமைசாலி ஆனால், நல்ல படங்கள்தான் வாய்ப்பதில்லை. கலக்கலான, சிம்பிளான நடிப்பு! 

சில இடங்களில் சாதாரண டிஜிட்டல் கமெராவில் எடுத்தது போல காட்சிகள், குறிப்பா த்ரிஷா-சங்கீதா. மேக்கப் போடலையா? போட்டால் சங்கீதா த்ரிஷாவைவிட அழகாக இருக்கக் கூடுமோ? என்ற ஆழ்ந்த சிந்தனை தோன்றியது (ரொம்ப முக்கியம்!)
ஆனாலும் ஒளிப்பதிவு பளிச்சிடும் இடங்கள் சங்கீதாவின் பரு முகத்தில்! த்ரிஷாவின் டாட்டூ....!

ஒரு நல்ல படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் கவனத்தை வேறெதிலும் திரும்ப விடாது அப்படியே ஈர்த்துக்......ரெண்டு சீட் தள்ளி ஒரு ஜோடி, கூட்டம் வராதுன்னு நம்ம்ம்பி... வந்திருப்பாங்களோ, நாம வந்து இருந்து தொலைச்சிட்டோம்!

ஒரு பாட்டுக்கு கமல் ஆடுவாரே ஒரு ஆட்டம்! செம்ம கலக்கல் தலைவா!
(முன்சீட்டில் ஒரு குழந்தை பயந்து போய் அழத் தொடங்கிவிட்டது!)
என்னா டான்ஸ்! எனக்குப் புல்லரிச்சுப் போச்சு! ( எனக்கு மட்டும்தானா? சுற்றுமுற்றும் பார்த்ததில் ஒருவர் தீவிரமாக சொறிந்து கொண்டிருந்தார்...ரைட்டு!)

படத்தில் வரும் இலங்கைத் தமிழர் தெனாலி கமலைப் போலவே வாயைப் பிளந்து பிளந்து, லூசுத்தனமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்! ஆமா, இலங்கைத் தமிழர் என்றால் அப்படியா? 

அமெரிக்கா,மத்திய கிழக்கு தவிர்ந்த உலக நாடுகளில் பெரும்பான்மையான தமிழ் சினிமா வியாபாரம், நட்சத்திரக் கலை நிகழ்ச்சிகள் இலங்கைத் தமிழரைக் குறிவைத்தே! அதனால்தான் சினிமாப் பைத்தியங்களாகக் காட்டுகின்றனரோ?

நீலவானம் பாடலுக்கு தலைவர் நீ...ள....மா...க...இழுக்க, எனக்கு வாய் வலிச்சிடுச்சு! 
அந்தப் பாடலுக்கான உழைப்பு, திட்டமிடல் அபாரம்! அருமையான காட்சியமைப்பு!

கமல் சில காட்சிகளில் நெகிழ வைத்தாலும், கஷ்டப்பட்டு நடிக்கும் கமலை, எந்தக் கஷ்டமுமில்லாமல் சிம்பிளாக மாதவனும், சங்கீதாவும் 'ஓவர்டேக்' பண்ணுகிறார்கள்!

படத்தின் இறுதிக்காட்சியில் மாதவன், சங்கீதா 'டைட்டானிக்' படத்தில் வரும் பிரபல காட்சி போல கையை விரித்துக் கொண்டு நிற்பார்கள்!
இதுதான் மிக முக்கியமான சீன்! இது ஒரு குறியீடு! (இது கே.எஸ். ரவிக்குமாருக்கே தெரியாது!) - பெரிய கப்பல்ல வச்சு படமெடுத்தால் மட்டும் அது 'டைட்டானிக்' ஆகாது! கதை, காட்சியமைப்புத்தான் முக்கியம்!

எனக்கு என்னவோ படம் பார்த்தது சந்தோஷமாகத்தான் இருந்தது! பார்த்திக்கு எப்படியோ? (அவன்தானே 'டிக்கெட்' எடுத்தான்!)

காத்திருப்போம் 'தலைவன் இருக்கிறான்'க்காக!
நாங்கள் உதயநிதி கடைசி நேரத்தில், படத்தைக் கைமாத்திட்டு 'கிரேட் எஸ்கேப்பான' மாதிரி இல்லை, இறுதிவரை கூடவே வருவோம் தலைவா! 

இந்தப் பாடலைப் பாருங்கள். இது 'நீல வானத்துக்கு' ஒரு சின்ன இன்ஸ்பிரேஷனாக மட்டுமே இருந்திருக்கும்! இது ஒரு சிம்பிளான பாடல், நீலவானத்தோடு ஒப்பிடுகையில்! 

 


Friday, December 24, 2010

10 வருடங்களில் பிடித்த 10 பாடல்கள்!

நண்பர் 'அதிரடி ஹாஜா'வின் அழைப்பினை ஏற்று, இந்தப்பதிவு! எனக்குப் பிடித்த சில பாடல்களில் 2001 - 2010 காலத்திற்கு இடைப்பட்டவை இவை!


பூவே வாய் பேசும்..
படம் - 12B
இசை - ஹரிஷ் ஜெயராஜ்



வெள்ளைப் பூக்கள்...
படம் - கன்னத்தில் முத்தமிட்டால் 
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்



என்ன இது என்ன இது..
படம் - நளதமயந்தி
இசை - ரமேஷ் விநாயகம்





மூங்கில் காடுகளே...
படம் - சாமுராய்
இசை - ஹரிஷ் ஜெயராஜ்





இளம் காற்று வீசுதே...
படம் - பிதாமகன்
இசை - இளையராஜா




யார் யார் சிவம்...
படம் - அன்பே சிவம்  
இசை - வித்யாசாகர்




என்னை பந்தாட...
படம் - உள்ளம் கேட்குமே 
இசை - ஹரிஷ் ஜெயராஜ்





உந்தன் தேசத்தின் குரல்...
படம் - தேசம் (Swades)
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்




முழுமதி அவளது...
படம் - ஜோதா அக்பர்    
இசை - ஏ.ஆர்.ரஹ்மான் 




ஒண்ணுக்கொண்ணு...
படம் - நந்தலாலா 
இசை - இளையராஜா


உங்களுக்கு பிடிச்சிருக்கா?