Friday, June 28, 2013
Saturday, June 22, 2013
தலைவா, சினிமாப்பெண்கள், அலப்பறை - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!
'தலைவா'க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சமீப காலமாக (நண்பனுக்குப் பின்) விஜய் படங்களைப் பார்க்கலாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். தலைவா- இயக்குனர் விஜய்தான் சற்று யோசிக்க வைக்கிறார்.
* * * * * * * *
* * * * * * * *
தமிழ்சினிமாவும் பெண்களும்
போன பதிவில் சிங்கம் பற்றிச் சொல்லிவிட்டு அனுஷ்காவை மறந்துபோனேன். தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் லூசுப் பெண்களாக இருப்பது தொன்று தொட்ட வழக்கம்தான். தற்போது பெரிய ஹீரோக்கள் படத்தில் தவிர்க்க முடியாமல் அது ஒன்றுதான் வழி. இருந்தாலும் அனுஷ்கா மாதிரி ஒருவர் நடிக்கும்போது சகிக்கவில்லை. ஒரு தமன்னா லூசுப்பொண்ணா நடிச்சா ஒக்கே. தோற்றத்துக்கு அது செட்டாகும். அனுஷ்கா அப்படி நடிப்பதைப் பார்க்கும்போது, 'எருமை மாதிரி வளர்ந்திருக்கே கொஞ்சம்கூட அறிவே வளரலைப் பாரு' என்று மட்டுமே தோன்றியது.தமிழ்சினிமாவின் இயல்புக்கு மாறான பெண்கள்!
துறுதுறுப்பான பெண் (அதாவது படத்திலயே லூசுன்னு சொல்லுவாங்க) - ரேவதி, ராதிகா மற்றும் பலர்.
புர்ச்சிப் பெண் - அந்தக் காலத்தில் சுஜாதா பின்னர் அறிவுஜீவி சுகாசினி!
ஆம்பிளைப் பெண்- விஜயசாந்தி
ராவான ரவுடிப் பொண்ணு - பானுபிரியா, ராதிகா
அறிவு வளராத ஓவரா வளர்ந்த பொண்ணுங்க - மீனா, ரம்பா மற்றும் பலர்.
'மெண்டலி டிப்ரெஷன்' காரெக்டர் (படபடப்பா, பதற்றமா இருப்பாங்க) - சில படங்களில் ரேவதி, எல்லா படங்களிலும் கீதா!
அப்புறம் பொண்ணுங்க மா....திரி - சமீரா ரெட்டி!
இயல்பான பொண்ணுங்க அப்பப்ப வரலாம். மற்றப்படி லூசுப் பொண்ணுங்கதான். இதைப்பார்த்து சில பொண்ணுங்க ஹீரோயின் ஆவதற்கு 'ட்ரை' பண்ணுவதுதான் உச்சகட்ட கொடுமை! அதாவது தாங்களும் லூசுப்பொண்ணு என்று ஃபேஸ்புக்கில் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கென்றே இருக்கிறார் ஜெனிலியா. சமகாலத்தில் லூசுப்பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஜெனிலியாவைத் தவிர யாரும் இல்லை என்பதே யதார்த்தம்.
* * * * * * * *
அலப்பறை!
நண்பன் ஒருத்தன் வெளிநாட்டிலருந்து வந்திருந்தான்.
அப்பிடியே வழக்கம்போல ரோட்ல நின்றுகொண்டிருந்தோம். திடீர்னு சொன்னான்.
"கொழும்பில கார் கூடிப்போச்சு"
"இங்க எப்பவுமே அப்பிடித்தானே ..புதுசா சொல்லுற"
"இல்லடா நான் நிக்கேக்க இப்பிடி இல்ல.என்ன டிராஃபிக்"
ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தேன். பயபுள்ளைக்கு என்னாச்சு? நல்லாத்தானே இருந்தான்?
"அங்க பார் பென்ஸ் .. கிறைஸ்லர்..அந்தா அங்க பி. எம். டபிள்யூ!" ஆச்சரியமா சொன்னான்.
"இதில என்ன புதுசா இருக்கு.. இங்கதான் பென்ஸ், பி.எம்.டபிள்யூ எல்லாம் குப்பையா (நிறைய என பொருள்படும்) இருக்கே!"
"நான் இங்க இருக்கேக்க பார்த்ததே இல்ல?"
"டேய் நீ எங்கடா காரைப் பார்த்தே? நாங்கள் காரைப்பற்றிக் கதைச்சாலும் என்னமோ லூசுப்பயலுகள் என்கிறமாதிரியே பார்ப்பே!"
"--"
"மச்சி மனச்சாட்சியோட பேசு.. இங்க இருக்கும்போது, உனக்கு பென்ஸ், BMW லோகோ எல்லாம் தெரியுமா? உனக்கு அது தெரியுறதுக்கே வெளிநாடு போக வேண்டியிருந்திருக்கு"
உச்சக்கட்டக் கடுப்பாகியிருந்தேன்.
பொதுவாக வெளிநாட்டிலிருந்து வரும் உறவுகள் கொழும்பில் பார்த்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம் இந்தக் கார்கள். குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் நண்பர்கள். புதிதாக வரும் எந்தக் கார்களையும் உடனேயே இறக்குமதி செய்து விடுவார்கள். இங்கே வரி 400% என்பது குறிப்பிடத்தக்கது. 2010 இல் ஒரு கொரொல்லாவின் உண்மையான விலை இலங்கை மதிப்பில் 16 லட்சம். ஆனால் இலங்கையில் 80 லட்சம். (ஒரு இந்திய ரூபாய் = 2.17 இலங்கை ரூபாயாம் இப்போது - புத்தகங்களெல்லாம் 4 மடங்கு விலை) அப்போது பென்ஸ் (2010 மொடல்) 50 லட்சம் போட்டிருந்தார்கள். அப்படியிருந்தும் வாங்கிக் குவிக்கிறார்கள். கடந்த வருடம் BMW - X1 வந்தபோது, வீதியில் இறங்கும்போதெல்லாம் புதிது புதிதாக X1 கண்ணில் படும்.
உறவினர் ஒருவர் வெளிநாட்டில் கார் வாங்கியதை ஒருவர் பெருமையாகச் சொன்னார். ஒரு ஐரோப்பிய நாட்டில் கார் வாங்குவது பெரிய விஷயமா என்ன? உண்மையில் இங்கே இருந்துகொண்டு ஒரு கார் வாங்குவதுதான் பெரிய விஷயம். கனடா சென்ற என் நண்பனொருவன் ஒரே மாதச் சம்பளத்தில் ஒரு செகண்ட் ஹாண்ட் கொரொல்லா வாங்கினான். இலங்கை மதிப்பில் 3 லட்சம். ஆனால் அதே செகண்ட் ஹாண்ட் கார் இலங்கையில் 30 லட்சம். நம்மைப் போல சாதாரணர்கள் இங்கேயிருந்துகொண்டு ஒரு நல்ல கார் (Benz, BMW, Jaguar ....etc ) வாங்குவதென்பது சாத்தியமில்ல்லை. நண்பனொருவன் அடிக்கடி சொல்வான் இதைஎல்லாம் வாங்குறதுனனா, ஒன்றில் பிறக்கும்போதே கோடீஸ்வரனாகப் பிறக்க வேண்டும். அல்லது ஏழையானாலும் ஐரோப்பாவில் பிறக்க வேண்டும்.
இதையெல்லாம் யோசிச்சு நொந்து நூடுல்சாகியிருக்கோம். இதுல இவன் வேற வந்து காமெடி பண்ணிக்கிட்டு..
அதில பாருங்க, ரோட்டில நிற்கும் பசங்க பொதுவா இரண்டு வகை. பொண்ணுங்களை சைட் அடிக்கிறவங்க பெரும்பான்மை. மிகச்சிறுபான்மை ஒன்றிருக்கு கார்களை சைட் அடிப்பவர்கள். நானும் ஜெயனும் சேர்ந்து சின்சியரா அதைத்தான் பண்ணுவோம், நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடும்போது. (காருக்குள்ள இருக்கிற பொண்ணுங்களை சைட் அடிக்கிற இன்னொரு வகையும் இருக்கு - அதுவும் முதலாவது வகைக்குள் அடங்கும்)
றோட்டில இறங்கின பொண்ணுங்களை மட்டுமே பார்த்த இந்த நாதாரி இப்போ புதுசா ஆச்சரியப்பட்டா காண்டாகுமா இல்லையா?
"டேய் அங்க ஜாகுவா."
"டாய்ய்ய்ய்!!!..கொண்டேபுடுவன்"
இதையெல்லாம் கூட விட்டுடலாம். இன்னொரு விஷயம்தான் தாங்க முடியல.
"என்னடா இங்க ஒரே டஸ்டா இருக்கு.. பார் காலைல புதுசாப் போட்ட டிஷர்ட் ஊத்தையாயிருக்கு .. அங்கயெண்டா.."
"தோய்க்காமலே நாலு மாசம் போடுவீங்களா?"
இதுல முக்கியமான் ஒரு விஷயம்..தலைவர் வெளிநாடு போய் மூன்றே மூன்று வருஷம்தான் ஆகுது! இதுக்கே இவ்வளவு அலப்பறை. ஆமா, பொதுவாப் பொண்ணுங்கதானே ஆறுமாசம் கொழும்பில இருந்துட்டு திரும்ப யாழ்ப்பாணம் வந்து, ஜாஃப்னா கிளைமேட் ஒத்தே வருதில்லன்னு இப்பிடி ஓவராப் பண்ணுவாங்க?
Saturday, June 15, 2013
அவஸ்தை, அட்வைஸ், சிங்கம் - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!
சமீபத்தில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு எதிர்பாராத அவசரப்பயணம் செய்யவேண்டியிருந்தது. டிக்கட் புக் பண்ணப் போறதிலருந்து வழக்கமான ப்ரொசீஜர் ஆரம்பிச்சுது.
என்னதான் சொகுசு பஸ் என்று சொன்னாலும் அதில ஏதாவது கோல்மால் பண்ணி வச்சிடுவாங்க நம்மாளுங்க. ஒன்றரை வருஷம் தொடர்ந்து, வார இறுதியில் ரெண்டுநாள் திருமலை - கொழும்பு பயணம் (சொகுசு பஸ்தான்) செய்ததில் முள்ளந்தண்டு டமேஜ் ஆகிட்டுதோன்னு டவுட் வர்ற அளவுக்கு நொந்துபோயிருந்தேன். இருக்கை மிகச்சரியாக முதுகுக்கு இம்சை கொடுக்கக்கூடிய சாய்விலிருக்கும். அதைவிட குஷன் ரஃபா, வழுக்கும். இதுல ஏ.சி வேற நடுச்சாமத்தில 10 டிகிரி செல்சியஸ்ல இருக்கும். வேறு சொகுசு பஸ் இல்லாததால் அது ஒன்றே கதி. வெளியில பார்க்க பஸ் புதுசா, சூப்பரா இருக்கும் என்பது முக்கியமானது.(இதைப்பார்த்தே பலபேர் யாழ்ப்பாணத்துக்கும் அதே பஸ் நிறுவனத்தில் டிக்கட்போட்டு நொந்துபோய் வர்றாங்க)
யாழ்ப்பாணத்துக்கு ஓடுகின்ற பெரும்பாலான பேரூந்துகள் வாங்குற காசுக்கு மோசம் செய்யாதவை - அவை பார்க்க பழசாக இருந்தாலும்!
ஆனாலும் நம்ம ராசி இருக்கே! அதனால எப்பவும் முன்னேற்பாடா டிக்கட் போடும்போது, நல்ல கம்ஃபோர்ட்டபிளான்னு நாலு தரம் கேட்டு கன்ஃபர்ம் பண்ணி, அவன் பஸ் படம் முதற்கொண்டு காட்டி எங்களை நம்ப வச்சு, அதிலயே(?!) சீட் எல்லாம் செக் பண்ணி, சரின்னு காசைக் கொட்டி டிக்கட் போடுவம்.
இதுல போனமுறை டிக்கட் காசு வழமையைவிட நூறு ரூபா குறைவா இருக்க, "நல்ல பஸ்தானே?"
"சுப்பர் பஸ் தம்பி"
"அப்ப ஏண்ணே குறைவா இருக்கு?".
'அட காசு குறைவா இருக்கிறது ஒரு குற்றமாய்யா?' அதிர்ச்சியாப் பார்த்தார்.
பஸ்ல ஏறினதும் சீட்ல இருந்து பார்த்து சொன்னமாதிரியே இருக்கு ஏமாத்தலன்னு நிம்மதியாகி, அப்பிடியே லைட்டா திரும்பி பார்த்தா பக்குன்னு இருக்கும். நம்ம ஏழரை பிரகாரம், வழக்கம்போல பின் சீட்ல ஒரு ஆன்டியும் பொண்ணுமோ, இல்ல ரெண்டு பொண்ணுங்களோ இருக்கும்.
என்ன சோதனை! பெண்ணாதிக்க வாதியா இருப்பாங்களோ,சீட்டைப் பதிச்சா சவுண்டு விடுவாளுகளோன்னு கொஞ்சநேரம் பம்மிட்டே இருக்கணும். அதால அவங்களுக்கு எந்தப்பிரச்சினையும் இருக்காது என்கிறது வேற விஷயம். சரியான இடைவெளி இருக்கும். இருந்தாலும் என்னமோ அவங்க மடிலயே சாய்ஞ்சாமாதிரி ஒரு கண்ணகி எஃபெக்ட் குடுப்பாங்க. என்ன, சிலபேர் காலைத்தூக்கி சீட்ல வச்சிருக்கிறது மாதிரியான குரங்கு சேட்டை பண்ணிட்டு இருப்பாங்க. பாவம், அவங்களுக்கு கஷ்டம்தான்.
சரின்னு வெய்ட் பண்ணி பஸ்காரன் பின்பக்கம் வரும் டைம் பார்த்து சீட்டை சரிப்பம். அப்ப பஞ்சாயத்து வந்தா, அவனே விளக்கத்த குடுப்பான். நாம அனாவசியமா வாயத் திறக்க வேண்டியதில்ல பாருங்க!
ஒருமாதிரி அப்பாடான்னு சாய்ஞ்சு ரெஸ்டுக்குப் போனா, அப்பத்தான் வந்த பக்கத்து சீட்காரன் அவன் சீட்டை நிரப்பி, பத்தாததுக்கு நாம சீட்லயே பாதி பங்கு கேட்கிற மாதிரியே மேல விழாத குறையா ஒட்டிட்டு இருப்பானுங்க. அப்ப வரும் பாருங்க ஒரு காண்டு!
'ஏண்டா கடல் பன்னி மாதிரி உடம்ப வளர்க்கத் தெரியுது ஒரு கரப்பான் பூச்சி சைசுக்காவது மனச்சாட்சிய வளர்க்கமாட்டீங்களாடா?அடுத்தவன இமசை பண்ணாம இருக்கப் பழகவே மாட்டீங்களாடா? ஒன்றரை சீட் தேவைப்படுறவனெல்லாம் எப்பிடிறா கூசாம ஒரு சீட் மட்டும் புக் பண்ணி வர்றீங்க? ஏண்டா காசு வாங்குறீங்க இல்ல.. ஒரு சீட்டுக்கு காசு வாங்கிட்டு அரை சீட்ல எப்பிடிறா இருக்கவைப்பீங்க? பக்கத்துல மனுஷ சைஸ்ல யாரையாவது இருத்த மாட்டீங்களா? லொறில, டிப்பர்ல போறவன எல்லாம் ஏண்டா பஸ்ல ஏத்துறீங்க?' - அப்பிடீன்னு ஃபேஸ்புக்ல பொங்குறதுக்கு நிறையக் கேள்விகள் மனசுல தோணும். வெளில கேக்க முடியாது, ஊருக்குப் போகணுமா இல்லையா?
இந்த இடத்தில்தான் ரெண்டு இருக்கைக்கும் நடுவில இருக்கிற மடக்கி விடக்கூடிய Hand rest முக்கிய இடம்பெறும். இந்த ஹான்ட் ரெஸ்ட் இருக்கே .. சும்மா இருக்கிறவன எல்லாம் ஓவர் நைட்ல சிவாஜி, கமல் ரேஞ்சுக்கு கொண்டுபோயிடும். எவனொருவன் முதல்ல தத்ரூபமா தூங்கிறமாதிரி 'காரெக்டராவே' மாறிடுறானோ அவனுக்கே அது கிடைக்கும். அந்த ஹான்ட் ரெஸ்ட்டை அமுக்கி ரெண்டுபேருக்கும் இடையில ஒரு எல்லையைப் போடும்போது ஒரு வில்லத்தனமான சிரிப்பு இயல்பாவே வரும்.
இவ்வளவு துன்பத்தையும் எதிர்கொண்டு அல்லது எஸ்கேப்பாகி, நிம்மதியா சாய்ஞ்சா, கரெக்டா அந்த நேரத்தில் படத்தைப் போடுவானுங்க. ஒருத்தன் நிம்மதியா, வசதியாத் தூங்கிக் கொண்டு போகத்தானே இப்பிடியான பேரூந்தை தெரிவு செய்வான். பிறகு படம் போட்டு இம்சை பண்றதுக்குப் பெயர் மேலதிக வசதியா? அப்படித்தான் பலரும் நம்புகிறார்கள்.
அன்றைக்கும். சற்றுத் தள்ளியிருந்த யாரோ ஒரு அறிவு ஜீவி குரல் கொடுத்தார் "தம்பி படத்தைப் போடுங்கோ!". பின்பு சொன்னார் "இதுக்கும் சேர்த்துத்தானே காசு வாங்குறாங்கள் இல்ல பார்த்துக் கொண்டு போவம் ஹே ஹே ஹே" - சிரிப்பு வேற! குடுத்த காசு வேஸ்ட் ஆகக்கூடாதுன்னு வலுக்கட்டாயமா நித்திரை முழிச்சு படம் பாக்கிறவன்லாம் இருக்கானுங்க போல.
நிறையநாளா பஸ் பயணம் டச் விட்டுப் போனதில் தூக்கமே வரவில்லை.'சென்னையில் ஒருநாள்' படம் போட்டிருந்தார்கள். சவுண்ட் சரியாக கேட்கவில்லை. வசனங்கள் கேட்க வேண்டிய அவசியமும் பெரிதாக இருக்கவில்லை. நல்லாத்தான் போயிட்டிருந்தது. திடீர்னு வெள்ளைச்சட்டை போட்டுக் கொண்டு சூர்யா வந்ததும் குழம்பிப் போனேன். ஏதாவது அப்பள விளம்பரமோ அல்லது பல்பொடி விளம்பரமாக இருக்குமோ என. சானலை மாத்துங்கப்பா என மனசு கூச்சலிட்டது. ஒரு கட்டத்தில சூர்யா படத்துக்கு தியேட்டருக்குப் போயிட்டே விளம்பரம் பார்க்கிறமாதிரி மக்கள் ஃபீல் பண்ணப் போகிறார்கள்.
விறுவிறுப்பாக படம் போய்க்கொண்டிருக்க, இடையிடையே படு ஸ்லோவாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். கைகளை உயர்த்தி ஆத்து ஆத்து என்று ஆத்திக் கொண்டிருந்தார். அநேகமா சாதிக்க வேணும், துணிஞ்சு நிக்கவேணும், போராட வேண்டும், தன்னம்பிக்கை, கடமை இப்படி ஏதாவது சொல்லியிருப்பார் என நம்புகிறேன். படம் முடிஞ்ச பிறகும் விடாமல் சொற்பொழிவு ஆத்திக் கொண்டிருந்தார். எதுக்கு இந்தக் கொடூரமான ஐடியா?
யோசித்துக் கொண்டேயிருக்கும்போது இரண்டாவது படத்தை ஆரம்பிச்சாங்க..
'ஏண்டா ஏன்? வழக்கமா ஒன்றுதானே? நான் வர்றது தெரிஞ்சு பிளான் பண்ணீட்டாங்களா?' மனசு அலறியது.
ஆரம்பமானது.. பல மொக்கையான, கேவலமான, மொண்ணைத்தனமான, கேனத்தனமான, மானங்கெட்டதனமான காதல் காட்சிகளுடன் பெருவெற்றி பெற்ற சிங்கம்!
Friday, June 7, 2013
தொலைந்துபோதல்!
உங்களுக்குத் தொலைந்து போய்விட வேண்டும் எனத் தோன்றியதுண்டா? வாழ்வில் ஒருமுறையாவது தொலைந்து போய்விட வேண்டுமென்று நினைக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா?
எதுவும் பிடிக்காத வெறுமையான சில பொழுதுகளில் தொலைந்து போய்விட வேண்டும் எனத் தோன்றுவதுண்டு. திடீரெனத் தனிமை ஒரு கனத்த போர்வையாக மூடிக் கொள்ளும். ஒரு மழைக்காலத்தின் வெளிச்சத்துக்கான ஒரு சிறு கீற்றும் தென்படாத இருளடர்ந்த மேகம் போல கவிந்திருக்கும். நான் யார்? யாருக்காக, எதற்காக நான் இருக்கிறேன்? எனக்காக யாராவது இருக்கிறார்களா? என்ன செய்துகொண்டிருக்கிறேன்? என்பதுபோன்ற கேள்விகள் எழும்போதெல்லாம் தொலைந்து போய்விடுவதைப் பற்றியும் தோன்றும். யாருக்கும் தெரியாமல், எந்த வித தடயங்களுமின்றி, காற்றில் கரைந்து போய்விடவேண்டும் எனத் தோன்றும். சில சமயங்களில் வாழ்க்கையில் எதையும் சாதிக்காமல் காலத்தோடு தொலைந்து போவிடுவோமோ என்ற பயம் கலந்த கேள்வியே தன்னம்பிக்கையைத் தொலைந்துபோகச் செய்துவிடுகிறது.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் ஒரே தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவுப்புகள் வரும். சிறுவர்கள், சிறுமிகள் புகைப்படங்களைக் காட்டும்போது, மனதை என்னவோ செய்யும். சின்ன வயதில் ஊரில் ஒரு திருவிழாக் கூட்டத்தில் அம்மா அப்பாவிடமிருந்து பிரிந்து, தொலைந்து போன அனுபவத்தைப் பெறாதவர்கள் மிகக் குறைவாகவே இருக்க முடியும். அந்தச் சில நிமிடங்களில் வாழ்க்கையே அவ்வளவுதான் என்று தோன்றியிருக்கிறது. ஒவ்வொரு கணமும் நீண்டு செல்லும். வீடு செல்லும் வழி தெரிந்திருந்தும், சொற்ப தூரத்திலேயே இருந்தாலும் அந்தப் பொழுதில் எல்லாமே சூனியமாகி விட்டதைப் போன்ற உணர்வு நெஞ்சை அழுத்தும். நான் அவ்வளவுதான்! தொலைந்து போய்விட்டேன் என்ற உணர்வே வேறெதையும் சிந்திக்க விடாது. பெரும் தவிப்புடன் தேடிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் சரியாக, தொலைந்து போன ஒரு சகாவின் அறிமுகப் படலம் ஒலிபெருக்கியில் ஆரம்பமாகும். பச்சைப் பாவாடை சட்டை அணிந்த சிறுமியோ அல்லது நீல நிறத்தில் சேர்ட் அணிந்த சிறுவனின் பெயரையோ அறிவிப்பார்கள். கூடவே அப்பா, அம்மா பெயர் விபரங்கள். ‘பெயர் சொல்ல ஒரு பிள்ளை’ கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோர் அரக்கப் பரக்க ஓடுவார்கள். பெயர் சொல்ல முடியாத பாலகர்களை ஒலிபெருக்கியில் சற்று அழவிட்டு ‘சிறப்பு’ நிகழ்ச்சியும் ஒலிபரப்பாகும்.
அது ஒரு மிகப்பாரிய இடம்பெயர்வு. லட்சம் மக்கள் ஒரே இரவில் நாட்டைக் காலி செய்ய முயன்றால்? பதினைந்து கிலோமீற்றர் தூரம் கடப்பதற்கு ஒரு நாள் பிடித்தது. யாழ்ப்பாணத்திலிருந்து, நாவற்குழி வரை செல்வதற்கு! எனக்கான ஒரு பயணப்பையை என் சைக்கிளில் மாட்டிக் கொண்டு, என் குடும்பத்தினரிடமிருந்து ஒரு மதிய வேளையில் தொலைந்து போயிருந்தேன். வெட்ட வெளியில் இரவில் கடும் குளிர், மதியம் பெய்த பெருமழையில் தெப்பலாக நனைந்து, தொடர்ந்து சுட்டெரித்த வெய்யிலில் காய்ந்து, பசி, தாகம் மறந்து, மரத்துப்போன நிலையில் நகர்ந்து கொண்டிருந்தேன். வழியில் தெரிந்தவர்களிடம் கூறிவிட்டு இரவு முழுவதும் பூட்டிய ஒரு கடை வாசலில் உட்கார்ந்திருந்தேன். அசதியில் சற்றுத் தூங்கி காலையில் சாரி சரியாகச் செல்பவர்களை அசுவாரசியமாகப் பார்த்தவாறு இருந்தேன். கவலைப்படவும் தோன்றவில்லை. தூரத்தில் என்னைக கண்டுகொண்ட அப்பா மகிழ்ச்சியாகக் கையசைத்ததைக்கூட யாரோ யாரையோ பார்த்துக் கையசைப்பதைப் போலவே சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தொலைத்தலும், தொலைந்து போதலும் எமக்கு ஒன்றும் புதிதல்லவே. ஆனாலும் சிலரை மறக்க முடிவதில்லை. ஒரு காலைப் பொழுதில் கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்கு அருகில் அவனைப் பார்த்தேன். அவன் நிலா - என் நண்பனின் தம்பி. மிக இலகுவாக, இனிமையாக எல்லோருடனும் பழகக் கூடிய அவன் வீடு எப்போதும் நண்பர்களால் நிறைந்து, கலகலப்பாக இருக்கும். அவனும் நண்பர்கள் சிலரும் ஒரு பயணத்திற்கான தயாரிப்பில் இருந்தார்கள் கொழும்பிலிருந்து திரிகோணமலை, பின்னர் திரிகோணமலையிலிருந்து கப்பலில் யாழ்ப்பாணம். கையசைத்துச் சிரித்தான். பேசுவதற்கு இருவருக்கும் அப்போது அவகாசம் இருக்கவில்லை.
இரண்டு நாட்களின் பின்னர் நண்பன் தொலைபேசியில் அழைத்தான். அதுவரை நான் கேட்டிராத ஒரு இறுகிப் போன குரலில், தம்பியைத் தொலைத்து விட்டதாகச் சொன்னான். எப்படி, என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவனுக்கும் தெரியவில்லை. சற்று நேரம் மௌனமாகக் கழிந்தது. “எப்ப எடுக்கிறது?”, “பொடி ஹொஸ்பிட்டல்ல” இருவரும் அபத்தமாக ஏதேதோ பேசிக்கொண்ட ஞாபகம். எங்கள் இருவருக்கும் முற்றிலும் புதிதான, சற்றும் எதிர்பார்க்காத சூழ்நிலையும், உரையாடலும் அது. அவனைப் பார்த்தேயிராத என் பெற்றோர் உட்பட பலரின் நிம்மதி அன்று தொலைந்துபோனது. ஏன், எதற்கு என்ற கேள்விகள் மனதைக் குடைந்து கொண்டிருந்தன.
ஓரிரு மாதங்களில் நண்பனின் குடும்பம் கொழும்பு வந்தபோது சந்திக்கச் சென்றபோதிருந்த மனநிலையைச் சொல்லிவிட முடியாது. எப்படி எதிர்கொள்வது, என்ன பேசுவது மிகுந்த தயக்கத்துடன் சென்றபோது, இயல்பாகவே அவர்கள் எதிர்கொண்டது மன நிம்மதியளித்தது. மிகக் கவனமாக, மறந்து போய்க்கூட அவன் பற்றிய எந்தப் பேச்சையும் எடுக்கவில்லை, அவர்களும் கூட! பேசிப் பேசியே களைத்திருந்தார்கள், பேசி என்ன ஆகப்போகிறது? இடையிடையே சிறு மௌனம். அது அவன் நினைவுகளால் நிரம்பியிருந்தது. அவன் மாலையிட்டிருந்த புகைப்படத்தில் சலனமின்றி சிரித்துக் கொண்டிருந்தான்.நண்பனிடமும் அதுபற்றிப் பேசவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சில நாட்களில் சொல்லி முடித்தான்.
ஊரடங்கு அமலிலிருந்த அதிகாலை நான்கு மணிக்கே யாரோ கதவைத் தட்டியிருக்கிறார்கள். சத்தம் கேட்டு எழுந்து வந்தபோதுதான், அவர்கள் ஏற்கனவே கதவை உடைத்து உள்ளே வந்துவிட்டது தெரிந்திருக்கிறது. கையில் துப்பாக்கி. அப்போதைய வழக்கப்படி, அதிகார மையத்தின் அங்கீகாரம் பெற்ற திருடர்களாகக்கூட இருக்கலாம். முதலில் அப்படியே நம்பியிருக்கிறார்கள். தனியாகப் பேசவேண்டும் என, நிலா மட்டும் வெளியே அழைக்கப்பட்டு, மற்றவர்களை உள்ளே போகுமாறு சொல்லியிருக்கிறார்கள்.
தொடர்ந்த ஒரு மணி நேரத்தில் குழப்பமும், பயமும் ஒருவாறு நீங்கி சற்றே நிம்மதியடைந்தபோது, ஓர் துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்கிறது!
அவனுக்கும், யாருக்குமே எதுவும் புரியவில்லை. காரணங்கள் ஏதும் இருக்கவில்லை. எதற்காக இப்படி? யாரிடம் கேட்பது? கேள்விகள் மட்டுமே எல்லோரிடமும் எஞ்சியிருந்தன. அதன் பின்னர் பலமாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறும்போதேல்லாம் அவன் வீடு தொலைக்காட்சியில் காட்டப்படுவது வழமையாகிப் போனது. நண்பனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் முன் வராந்தாவிலிருந்து படிக்கட்டு ஈறாக நிலம் வரை ஒரு குடம் சரிந்து நீர் ஓடியதுபோல் இரத்தம் ஓடி உறைந்து கிடக்கும்காட்சி அடிக்கடி ஒளிபரப்பாகி மனம் கனக்க வைக்கும்.
யாழ்ப்பாணம் சென்றிருந்த ஒரு காலைப்பொழுது. இரவு முழுவதும் பயணித்த அசதியில் இருந்த என்னைத் திடுக்கிடச் செய்தது ஒற்றைத் தொலைபேசியழைப்பு. அவனா? எதுக்கு? அவனா இப்பிடி? ஏராளமான கேள்விகளுடன் சென்றேன். சாரங்கன்! ஒருகாலத்தில் அவனும் நானும் நண்பர்களாயிருந்தோம். பின்னர் பெரிய இடைவெளி - வேறு வேறு பிரதேசத்தில் வளர்ந்ததாலும், சந்திப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லாததாலும். எப்போதாவது நேரில் சந்திக்கும்போது ஓரிரு வார்த்தைகள் பேசுவதுடன் கடந்து விடுவது வழக்கம். பின்னர் அதற்கும் வாய்ப்புகளிருக்கவில்லை. அப்போது அவன் மருத்துவ கல்லூரி மாணவனாயிருந்தான். அவனைப் பற்றி எதுவும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. நல்ல ரசிகன், பாடகன் என்று தெரியும். நன்றாகக் கவிதைகள் எழுதுவானாம், அதிகமாக ஆங்கிலத்தில். இவையெல்லாம் நண்பர்கள் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுவரை அவன் ஒரு மருத்துவனாகியிருக்க வேண்டும் என்றே நினைத்திருந்தேன்.
தெரிந்த முகங்கள், நண்பர்கள் சிலர் குழப்பமும், துயரமும், கேள்விகளுமாக நின்றிருந்தார்கள். ஓரளவிற்குமேல் நெருங்க முடியாமல் நெடி முகத்திலறைந்தது. நாண்பர்கள் யாருக்குமே அருகில் சென்று பார்க்க துணிவிருக்கவில்லை. ரெண்டு நாளைக்கு முதலே நடந்திருக்க வேண்டுமென்றார்கள். பாரம் தாங்காமல் நைலான் கயிறு ஈய்ந்து, கால்கள் தரையில் துவண்டிருந்தன. தன்னைத் தொலைத்திருந்தான். யாருக்குமே காரணம் தெரியவில்லை. ஏராளமான ஊகங்களை ஒவ்வொருவரும் வெளியிட்டார்கள். ஏற்கனவே அவன் ஓரிரு முறை இது பற்றிக் கூறியதை நண்பர்கள் பலரும் பேசிக் கொண்டார்கள். தனது துறையில் நாட்டமின்றி மருத்துவப்படிப்பைக் கைவிட்டிருந்ததாகவும், மிகுந்த விரக்தியில் இருந்ததாகவும், மிகுந்த மனவலிமை கொண்ட அவன் ஏன் இப்படிச் செய்தானென்றும் புலம்பியவாறு நண்பர்கள். அந்த நாளை அவன் திட்டமிட்டிருந்ததாகப் பின்னர் தெரிந்தது. ஆனால் எதற்காக? யாருக்கும் விடை தெரியவில்லை. ஏன் அவன் அப்படிச் செய்தான்? அவனைத் தூண்டியது எது? இறுதி நேரத்தில் என்ன நினைத்திருப்பான்?
தொலைந்து போனவர்கள் நிறைந்த பூமி இது. விரும்பித் தொலைவதும், தொலைக்கப்படுவதும் இங்கே புதிதல்ல. புதிது புதிதாகத் தொலைகிறார்கள். தொலைபவர்களைத் தேடுபவர்களும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். முடிவில்லாத தொடர்கதையிது. தொலைந்து போகிறவர்கள் பற்றிய செய்திகளெல்லாம் சாதாரண நிகழ்வாகப் பழகிவிட்டன. அதுபற்றியெல்லாம் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதாகவும் தெரியவில்லை, நமக்குத் தெரிந்தவர்களாக இருக்கும் வரையில். ஒரே கனவோடு வெவ்வேறு பாதைகளில் ஏராளமானோர் ஆரம்பித்த பயணத்தில் பலர் தொலைந்திருக்கிறார்கள், சிலர் வழிதவறிப் போயிருக்கிறார்கள், பாதியில் கனவைத் துறந்தவர்கள் சிலர், சக பயணிகளாலேயே தொலைக்கப்பட்டவர்கள் சிலர்.
விரும்பித் தொலைந்து போதல் சில சமயங்களில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இக்கட்டான பலதருணங்களில் மன ஆறுதலையும், அமைதியையும் கொடுக்கிறது. மனதை அழுத்தும் பிரச்சினைகளிலிருந்து பெயர்ந்து, மனதை இலேசாக்கி, மிதந்து, சிறகடித்துப் பறந்து தொலைந்துபோய்விட முடிகிறது.இனியதொரு நினைவு இந்தக் கணத்திலிருந்து தொலைந்து பால்ய காலத்துக்கு அழைத்துச் சென்று விடலாம். நல்லதொரு புத்தகம் , எழுத்து சிலநொடிகள், சில நிமிடங்கள், சமயங்களில் ஓரிரு மணித்துளிகள் கூட எங்கெங்கோ நினைவுகளின் ஆழத்தில் மூழ்கித் தொலைந்து போய்விடச் செய்துவிடலாம். உண்மையான, நேர்மையானதொரு காதலின் நினைவுகளில் தொலைந்து போகலாம். பிடித்த கவிதைகளில், பிடித்ததொரு பாடலில், பிடித்த சினிமாவில், இலக்கியத்தில் அது கொடுக்கும் உணர்வுகளில் தொலைந்து போய்விட முடிகிறது. உறவுகளின் அன்பில், இயற்கையின் அழகில் தொலைந்து போகலாம்.
நல்லதோர் இசையில் அப்படியே லயித்துக் கரைந்து தொலைந்து போய்விடலாம். சிலருக்கு இளையராஜா. சிலருக்கு ஏ.ஆர். ரஹ்மான். "இளையராஜா மட்டும் இல்லையெண்டா பைத்தியம் பிடிச்சிருக்கும்" - பதினைந்து வருடத்துக்கு முன் பிள்ளையார் கோவிலடியில் ஒரு முன்னிரவு நிலவு வேளையில், சசியண்ணன் சொன்னதை அவ்வளவு சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியவில்லை.
விரும்பித் தொலைவதற்கு ஏராளமான சாத்தியங்கள் இருக்கின்றன. அவையே பல சமயங்களில் தோலைந்து போகாமல் மீள்வதற்கும் வழி செய்கின்றன. வாழ்க்கையை நிரந்தரமாகத் தொலைத்துவிடாமல், காணாமல் போய்விடாமல் காப்பாற்றி விடுகின்றன. அடிக்கடி விரும்பித் தொலைவதும் மீள்வதுமே வாழ்வைச் சுவாரஷ்யமாக்குகின்றன. தொலைந்து தொலைந்து மீளலாம்..!
Subscribe to:
Posts (Atom)