உங்களுக்குத் தொலைந்து போய்விட வேண்டும் எனத் தோன்றியதுண்டா? வாழ்வில் ஒருமுறையாவது தொலைந்து போய்விட வேண்டுமென்று நினைக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா?
எதுவும் பிடிக்காத வெறுமையான சில பொழுதுகளில் தொலைந்து போய்விட வேண்டும் எனத் தோன்றுவதுண்டு. திடீரெனத் தனிமை ஒரு கனத்த போர்வையாக மூடிக் கொள்ளும். ஒரு மழைக்காலத்தின் வெளிச்சத்துக்கான ஒரு சிறு கீற்றும் தென்படாத இருளடர்ந்த மேகம் போல கவிந்திருக்கும். நான் யார்? யாருக்காக, எதற்காக நான் இருக்கிறேன்? எனக்காக யாராவது இருக்கிறார்களா? என்ன செய்துகொண்டிருக்கிறேன்? என்பதுபோன்ற கேள்விகள் எழும்போதெல்லாம் தொலைந்து போய்விடுவதைப் பற்றியும் தோன்றும். யாருக்கும் தெரியாமல், எந்த வித தடயங்களுமின்றி, காற்றில் கரைந்து போய்விடவேண்டும் எனத் தோன்றும். சில சமயங்களில் வாழ்க்கையில் எதையும் சாதிக்காமல் காலத்தோடு தொலைந்து போவிடுவோமோ என்ற பயம் கலந்த கேள்வியே தன்னம்பிக்கையைத் தொலைந்துபோகச் செய்துவிடுகிறது.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் ஒரே தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவுப்புகள் வரும். சிறுவர்கள், சிறுமிகள் புகைப்படங்களைக் காட்டும்போது, மனதை என்னவோ செய்யும். சின்ன வயதில் ஊரில் ஒரு திருவிழாக் கூட்டத்தில் அம்மா அப்பாவிடமிருந்து பிரிந்து, தொலைந்து போன அனுபவத்தைப் பெறாதவர்கள் மிகக் குறைவாகவே இருக்க முடியும். அந்தச் சில நிமிடங்களில் வாழ்க்கையே அவ்வளவுதான் என்று தோன்றியிருக்கிறது. ஒவ்வொரு கணமும் நீண்டு செல்லும். வீடு செல்லும் வழி தெரிந்திருந்தும், சொற்ப தூரத்திலேயே இருந்தாலும் அந்தப் பொழுதில் எல்லாமே சூனியமாகி விட்டதைப் போன்ற உணர்வு நெஞ்சை அழுத்தும். நான் அவ்வளவுதான்! தொலைந்து போய்விட்டேன் என்ற உணர்வே வேறெதையும் சிந்திக்க விடாது. பெரும் தவிப்புடன் தேடிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் சரியாக, தொலைந்து போன ஒரு சகாவின் அறிமுகப் படலம் ஒலிபெருக்கியில் ஆரம்பமாகும். பச்சைப் பாவாடை சட்டை அணிந்த சிறுமியோ அல்லது நீல நிறத்தில் சேர்ட் அணிந்த சிறுவனின் பெயரையோ அறிவிப்பார்கள். கூடவே அப்பா, அம்மா பெயர் விபரங்கள். ‘பெயர் சொல்ல ஒரு பிள்ளை’ கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோர் அரக்கப் பரக்க ஓடுவார்கள். பெயர் சொல்ல முடியாத பாலகர்களை ஒலிபெருக்கியில் சற்று அழவிட்டு ‘சிறப்பு’ நிகழ்ச்சியும் ஒலிபரப்பாகும்.
அது ஒரு மிகப்பாரிய இடம்பெயர்வு. லட்சம் மக்கள் ஒரே இரவில் நாட்டைக் காலி செய்ய முயன்றால்? பதினைந்து கிலோமீற்றர் தூரம் கடப்பதற்கு ஒரு நாள் பிடித்தது. யாழ்ப்பாணத்திலிருந்து, நாவற்குழி வரை செல்வதற்கு! எனக்கான ஒரு பயணப்பையை என் சைக்கிளில் மாட்டிக் கொண்டு, என் குடும்பத்தினரிடமிருந்து ஒரு மதிய வேளையில் தொலைந்து போயிருந்தேன். வெட்ட வெளியில் இரவில் கடும் குளிர், மதியம் பெய்த பெருமழையில் தெப்பலாக நனைந்து, தொடர்ந்து சுட்டெரித்த வெய்யிலில் காய்ந்து, பசி, தாகம் மறந்து, மரத்துப்போன நிலையில் நகர்ந்து கொண்டிருந்தேன். வழியில் தெரிந்தவர்களிடம் கூறிவிட்டு இரவு முழுவதும் பூட்டிய ஒரு கடை வாசலில் உட்கார்ந்திருந்தேன். அசதியில் சற்றுத் தூங்கி காலையில் சாரி சரியாகச் செல்பவர்களை அசுவாரசியமாகப் பார்த்தவாறு இருந்தேன். கவலைப்படவும் தோன்றவில்லை. தூரத்தில் என்னைக கண்டுகொண்ட அப்பா மகிழ்ச்சியாகக் கையசைத்ததைக்கூட யாரோ யாரையோ பார்த்துக் கையசைப்பதைப் போலவே சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தொலைத்தலும், தொலைந்து போதலும் எமக்கு ஒன்றும் புதிதல்லவே. ஆனாலும் சிலரை மறக்க முடிவதில்லை. ஒரு காலைப் பொழுதில் கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்கு அருகில் அவனைப் பார்த்தேன். அவன் நிலா - என் நண்பனின் தம்பி. மிக இலகுவாக, இனிமையாக எல்லோருடனும் பழகக் கூடிய அவன் வீடு எப்போதும் நண்பர்களால் நிறைந்து, கலகலப்பாக இருக்கும். அவனும் நண்பர்கள் சிலரும் ஒரு பயணத்திற்கான தயாரிப்பில் இருந்தார்கள் கொழும்பிலிருந்து திரிகோணமலை, பின்னர் திரிகோணமலையிலிருந்து கப்பலில் யாழ்ப்பாணம். கையசைத்துச் சிரித்தான். பேசுவதற்கு இருவருக்கும் அப்போது அவகாசம் இருக்கவில்லை.
இரண்டு நாட்களின் பின்னர் நண்பன் தொலைபேசியில் அழைத்தான். அதுவரை நான் கேட்டிராத ஒரு இறுகிப் போன குரலில், தம்பியைத் தொலைத்து விட்டதாகச் சொன்னான். எப்படி, என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவனுக்கும் தெரியவில்லை. சற்று நேரம் மௌனமாகக் கழிந்தது. “எப்ப எடுக்கிறது?”, “பொடி ஹொஸ்பிட்டல்ல” இருவரும் அபத்தமாக ஏதேதோ பேசிக்கொண்ட ஞாபகம். எங்கள் இருவருக்கும் முற்றிலும் புதிதான, சற்றும் எதிர்பார்க்காத சூழ்நிலையும், உரையாடலும் அது. அவனைப் பார்த்தேயிராத என் பெற்றோர் உட்பட பலரின் நிம்மதி அன்று தொலைந்துபோனது. ஏன், எதற்கு என்ற கேள்விகள் மனதைக் குடைந்து கொண்டிருந்தன.
ஓரிரு மாதங்களில் நண்பனின் குடும்பம் கொழும்பு வந்தபோது சந்திக்கச் சென்றபோதிருந்த மனநிலையைச் சொல்லிவிட முடியாது. எப்படி எதிர்கொள்வது, என்ன பேசுவது மிகுந்த தயக்கத்துடன் சென்றபோது, இயல்பாகவே அவர்கள் எதிர்கொண்டது மன நிம்மதியளித்தது. மிகக் கவனமாக, மறந்து போய்க்கூட அவன் பற்றிய எந்தப் பேச்சையும் எடுக்கவில்லை, அவர்களும் கூட! பேசிப் பேசியே களைத்திருந்தார்கள், பேசி என்ன ஆகப்போகிறது? இடையிடையே சிறு மௌனம். அது அவன் நினைவுகளால் நிரம்பியிருந்தது. அவன் மாலையிட்டிருந்த புகைப்படத்தில் சலனமின்றி சிரித்துக் கொண்டிருந்தான்.நண்பனிடமும் அதுபற்றிப் பேசவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சில நாட்களில் சொல்லி முடித்தான்.
ஊரடங்கு அமலிலிருந்த அதிகாலை நான்கு மணிக்கே யாரோ கதவைத் தட்டியிருக்கிறார்கள். சத்தம் கேட்டு எழுந்து வந்தபோதுதான், அவர்கள் ஏற்கனவே கதவை உடைத்து உள்ளே வந்துவிட்டது தெரிந்திருக்கிறது. கையில் துப்பாக்கி. அப்போதைய வழக்கப்படி, அதிகார மையத்தின் அங்கீகாரம் பெற்ற திருடர்களாகக்கூட இருக்கலாம். முதலில் அப்படியே நம்பியிருக்கிறார்கள். தனியாகப் பேசவேண்டும் என, நிலா மட்டும் வெளியே அழைக்கப்பட்டு, மற்றவர்களை உள்ளே போகுமாறு சொல்லியிருக்கிறார்கள்.
தொடர்ந்த ஒரு மணி நேரத்தில் குழப்பமும், பயமும் ஒருவாறு நீங்கி சற்றே நிம்மதியடைந்தபோது, ஓர் துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்கிறது!
அவனுக்கும், யாருக்குமே எதுவும் புரியவில்லை. காரணங்கள் ஏதும் இருக்கவில்லை. எதற்காக இப்படி? யாரிடம் கேட்பது? கேள்விகள் மட்டுமே எல்லோரிடமும் எஞ்சியிருந்தன. அதன் பின்னர் பலமாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறும்போதேல்லாம் அவன் வீடு தொலைக்காட்சியில் காட்டப்படுவது வழமையாகிப் போனது. நண்பனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் முன் வராந்தாவிலிருந்து படிக்கட்டு ஈறாக நிலம் வரை ஒரு குடம் சரிந்து நீர் ஓடியதுபோல் இரத்தம் ஓடி உறைந்து கிடக்கும்காட்சி அடிக்கடி ஒளிபரப்பாகி மனம் கனக்க வைக்கும்.
யாழ்ப்பாணம் சென்றிருந்த ஒரு காலைப்பொழுது. இரவு முழுவதும் பயணித்த அசதியில் இருந்த என்னைத் திடுக்கிடச் செய்தது ஒற்றைத் தொலைபேசியழைப்பு. அவனா? எதுக்கு? அவனா இப்பிடி? ஏராளமான கேள்விகளுடன் சென்றேன். சாரங்கன்! ஒருகாலத்தில் அவனும் நானும் நண்பர்களாயிருந்தோம். பின்னர் பெரிய இடைவெளி - வேறு வேறு பிரதேசத்தில் வளர்ந்ததாலும், சந்திப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லாததாலும். எப்போதாவது நேரில் சந்திக்கும்போது ஓரிரு வார்த்தைகள் பேசுவதுடன் கடந்து விடுவது வழக்கம். பின்னர் அதற்கும் வாய்ப்புகளிருக்கவில்லை. அப்போது அவன் மருத்துவ கல்லூரி மாணவனாயிருந்தான். அவனைப் பற்றி எதுவும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. நல்ல ரசிகன், பாடகன் என்று தெரியும். நன்றாகக் கவிதைகள் எழுதுவானாம், அதிகமாக ஆங்கிலத்தில். இவையெல்லாம் நண்பர்கள் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுவரை அவன் ஒரு மருத்துவனாகியிருக்க வேண்டும் என்றே நினைத்திருந்தேன்.
தெரிந்த முகங்கள், நண்பர்கள் சிலர் குழப்பமும், துயரமும், கேள்விகளுமாக நின்றிருந்தார்கள். ஓரளவிற்குமேல் நெருங்க முடியாமல் நெடி முகத்திலறைந்தது. நாண்பர்கள் யாருக்குமே அருகில் சென்று பார்க்க துணிவிருக்கவில்லை. ரெண்டு நாளைக்கு முதலே நடந்திருக்க வேண்டுமென்றார்கள். பாரம் தாங்காமல் நைலான் கயிறு ஈய்ந்து, கால்கள் தரையில் துவண்டிருந்தன. தன்னைத் தொலைத்திருந்தான். யாருக்குமே காரணம் தெரியவில்லை. ஏராளமான ஊகங்களை ஒவ்வொருவரும் வெளியிட்டார்கள். ஏற்கனவே அவன் ஓரிரு முறை இது பற்றிக் கூறியதை நண்பர்கள் பலரும் பேசிக் கொண்டார்கள். தனது துறையில் நாட்டமின்றி மருத்துவப்படிப்பைக் கைவிட்டிருந்ததாகவும், மிகுந்த விரக்தியில் இருந்ததாகவும், மிகுந்த மனவலிமை கொண்ட அவன் ஏன் இப்படிச் செய்தானென்றும் புலம்பியவாறு நண்பர்கள். அந்த நாளை அவன் திட்டமிட்டிருந்ததாகப் பின்னர் தெரிந்தது. ஆனால் எதற்காக? யாருக்கும் விடை தெரியவில்லை. ஏன் அவன் அப்படிச் செய்தான்? அவனைத் தூண்டியது எது? இறுதி நேரத்தில் என்ன நினைத்திருப்பான்?
தொலைந்து போனவர்கள் நிறைந்த பூமி இது. விரும்பித் தொலைவதும், தொலைக்கப்படுவதும் இங்கே புதிதல்ல. புதிது புதிதாகத் தொலைகிறார்கள். தொலைபவர்களைத் தேடுபவர்களும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். முடிவில்லாத தொடர்கதையிது. தொலைந்து போகிறவர்கள் பற்றிய செய்திகளெல்லாம் சாதாரண நிகழ்வாகப் பழகிவிட்டன. அதுபற்றியெல்லாம் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதாகவும் தெரியவில்லை, நமக்குத் தெரிந்தவர்களாக இருக்கும் வரையில். ஒரே கனவோடு வெவ்வேறு பாதைகளில் ஏராளமானோர் ஆரம்பித்த பயணத்தில் பலர் தொலைந்திருக்கிறார்கள், சிலர் வழிதவறிப் போயிருக்கிறார்கள், பாதியில் கனவைத் துறந்தவர்கள் சிலர், சக பயணிகளாலேயே தொலைக்கப்பட்டவர்கள் சிலர்.
விரும்பித் தொலைந்து போதல் சில சமயங்களில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இக்கட்டான பலதருணங்களில் மன ஆறுதலையும், அமைதியையும் கொடுக்கிறது. மனதை அழுத்தும் பிரச்சினைகளிலிருந்து பெயர்ந்து, மனதை இலேசாக்கி, மிதந்து, சிறகடித்துப் பறந்து தொலைந்துபோய்விட முடிகிறது.இனியதொரு நினைவு இந்தக் கணத்திலிருந்து தொலைந்து பால்ய காலத்துக்கு அழைத்துச் சென்று விடலாம். நல்லதொரு புத்தகம் , எழுத்து சிலநொடிகள், சில நிமிடங்கள், சமயங்களில் ஓரிரு மணித்துளிகள் கூட எங்கெங்கோ நினைவுகளின் ஆழத்தில் மூழ்கித் தொலைந்து போய்விடச் செய்துவிடலாம். உண்மையான, நேர்மையானதொரு காதலின் நினைவுகளில் தொலைந்து போகலாம். பிடித்த கவிதைகளில், பிடித்ததொரு பாடலில், பிடித்த சினிமாவில், இலக்கியத்தில் அது கொடுக்கும் உணர்வுகளில் தொலைந்து போய்விட முடிகிறது. உறவுகளின் அன்பில், இயற்கையின் அழகில் தொலைந்து போகலாம்.
நல்லதோர் இசையில் அப்படியே லயித்துக் கரைந்து தொலைந்து போய்விடலாம். சிலருக்கு இளையராஜா. சிலருக்கு ஏ.ஆர். ரஹ்மான். "இளையராஜா மட்டும் இல்லையெண்டா பைத்தியம் பிடிச்சிருக்கும்" - பதினைந்து வருடத்துக்கு முன் பிள்ளையார் கோவிலடியில் ஒரு முன்னிரவு நிலவு வேளையில், சசியண்ணன் சொன்னதை அவ்வளவு சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியவில்லை.
விரும்பித் தொலைவதற்கு ஏராளமான சாத்தியங்கள் இருக்கின்றன. அவையே பல சமயங்களில் தோலைந்து போகாமல் மீள்வதற்கும் வழி செய்கின்றன. வாழ்க்கையை நிரந்தரமாகத் தொலைத்துவிடாமல், காணாமல் போய்விடாமல் காப்பாற்றி விடுகின்றன. அடிக்கடி விரும்பித் தொலைவதும் மீள்வதுமே வாழ்வைச் சுவாரஷ்யமாக்குகின்றன. தொலைந்து தொலைந்து மீளலாம்..!
நானெல்லாம் இன்னும் தொலையாமல் இருப்பது ஓர் ஆச்சர்யம்தான்
ReplyDeleteகாதலில், நட்பில், அன்பில், விட்டுக்கொடுத்தலில், வள்ளலாக தொலைந்து போவது இன்பமான ஒன்று...!
ReplyDeleteமெல்லியதாக கீறிச்சென்ற பதிவு. வழித்தடங்களில் எந்த ஒரு சுவடும் விடக்கூடாது என்ற நினைப்புடன் தான் தயாராக்கிக்கொண்டு இருக்கும் இந்த கணங்களில் எங்கோ என் நினைவுகளும் வாழும் என்ற நினைப்பு தனிமையை குலைக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteபல முறை தொலைந்து விட்டேன்..............
ReplyDeleteவணக்கம்,ஜீ!நலமா?///எப்படியெல்லாம் தொலைந்து போக முடிகிறது?ஹூம்!
ReplyDelete.வாழ்வில் ஒரு முறையாவது தொலைந்து போய் விட வேன்றுமெண்டு நினைக்காதவர்கள் யாரவது இருக்கிறர்களா ?...
ReplyDeleteமனது கனக்கிறது
ReplyDeleteஇந்த மாதிரி எல்லாம் பதிவு எழுத வேண்டாம். மனசு வலிக்கிறது.
ReplyDelete