Thursday, September 7, 2017

பள்ளிக்கால வன்முறை!


யா
ழ்ப்பாணத்தின் பள்ளி நாட்களில், விமானக்குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் எல்லாவற்றையும் தாண்டி அதிகம் அச்சுறுத்தியது ஆசிரியர்களின் வன்முறைதான்! இயல்பாக சிறுவர்களாக இருக்கவிடாமல் எப்போதும் மிகுந்த பதட்ட உணர்வையும், எச்சரிக்கையையும் ஒருங்கே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அடிக்கடி தோன்றும் விஷயம் இது. 

ஒழுக்கம் என்பது தண்டனைக்குப் பயந்திருப்பது என்று நம்பும் சமூகம். மனித உரிமைகள் ஆணைக்குழு பற்றிக் கேள்வியேபட்டிராத காலம். பலருக்கு வீட்டிலும் சொல்லமுடியாது. அப்படியே ஒரு பெரிய மனுஷனிடம் சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். தங்கள் வாத்தியார் கைகளை மடக்கச்சொல்லி, மொழியில் அடிமட்டத்தால் அடிப்பர் என்பதை பெருமையாக நினைவு கூர்வார். அல்லது முஷ்டியை மடக்கி மண்டையில் எப்படி ஓங்கி கொட்டும், தொட்டுத் தொடரும் ஒரு கொட்டுப் பாரம்பரியம் பற்றிப் பரவசமாகப் பேசுவார்.

விளைவு? பள்ளிக்கால வன்முறையைக் கேட்க ஆளே கிடையாது. சரி, இப்போது சிந்திக்க தெரிந்த, வளர்ந்துவிட்ட நண்பர்களிடம் கேளுங்கள். 'அந்தக்காலத்தில் அடிச்சு வளர்த்ததாலதான் நான் இப்ப இப்பிடியொரு மனுஷனாகி..' என ஆரம்பிப்பார்கள். இல்லாவிட்டால் வால் முளைத்துக் குரங்காகி மரத்தில் தாவிக் கொண்டிருப்பார்களாம் என்பது அவர்கள் நம்பிக்கை. எதையெல்லாம் ரொமாண்டிசைஸ் செய்துகொள்கிறோம், என்ன உளறுகிறோம் என்கிற விவஸ்தையே நமக்குக் கிடையாது.

ஒரு கல்லூரிக்கு குறைந்தபட்சம் இரண்டு பிரதான சைக்கோ ஆசிரியர்கள் இருப்பார்கள். சில 'ஒழுக்கமான' பாடசாலைகளில் இன்னும் அதிகம். 'குற்றவாளி' மாணவனை வகுப்புக்கு வெளியில் நிற்கவைத்தால் போதும். 'இவன் ஏன் அடிக்கிறான்?', 'இவன் எனக்குப் படிப்பிக்கவில்லையே?' என்றெல்லாம் கேட்க முடியாது. இதற்காகவே பிரத்தியேகமாக சட்டம் ஒழுங்கு பேணும் சைக்கோ ஆசிரியர்கள் இருந்தார்கள். இவர்கள் எந்த வகுப்புக்குள்ளும் புகுந்து யாரையும் அடிப்பார்கள். முதலில் அடித்துவிட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பார்கள். இந்த ஒழுக்கவியல் ஆசிரியர்களுக்கு இருக்கும் முக்கியமான தகுதி - அவர்களிடம் எந்தவிதமான ஒழுக்கமும் கிடையாது என்பதுதான்.

கொழும்பில் நம் ஆசிரிய நண்பன் நேர்த்தியாக உடை, சப்பாத்து அணிந்து வேலைக்குச் செல்லும்போது அறையிலிருந்த ஒருவன் கூறினான். 'எதுக்கு டீசண்டா இருக்கே? தலையைக் கலைச்சு விடு. கைய ஒழுங்கா மடிக்காதே ஏறி இறங்கி நிற்கட்டும். பழைய சிலிப்பர் போட்டு ஒற்றைக்காலை லேசா இழுத்து நட! அதானடா சரியா இருக்கும்?' என்று சிரித்தான். அவன் வார்த்தைகளில், கிண்டலுக்குஅப்பால் இருந்த ஓர் உண்மை மிக மோசமானது.

உண்மையில் நம் ஆசிரியர்கள் பாவம். தென்னாசியாவிலேயே இலங்கையில்தான் அரசாங்க ஆசிரியர்களுக்குச் சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை என நினைக்கிறேன். யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு பாகிஸ்தான் சென்று கற்பிக்கும் யோசனையில் சில ஆசிரியர்கள் இருந்தார்கள். அங்கே நல்ல சம்பளம் என்றார்கள்.சமுகத்தில் ஆசிரியர்களின் பணி மகத்தானது. அதுவும் சிறுவர் பள்ளி ஆசிரியர்கள் மிக முக்கியமானவர்கள்.

உண்மையில் பெருவிருப்பத்தோடும், ஆர்வத்தோடும் இளைஞர்களாக கற்பிக்க வரும் ஆசிரியர்கள் சில வருடங்களில் தேங்கி, சலிப்படைந்து விடுகிறார்கள். அவர்களில் சிலர் கேலிக்குள்ளாகிறார்கள். சிலர் வன்முறையாளர்களாகிறார்கள். பலர் எப்போதும் உற்சாகமாக மாணவர்களோடு தம்மையும் புதுப்பித்துக் கொள்கிறார்கள். அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.வளர்ந்த நாடுகள் போல, எந்தத்தொழிலைச் செய்தாலும் தன்னிறைவான வாழ்க்கையொன்றை வாழமுடியும் என்கிற நிலை இருக்கவேண்டும். அதன்பின்பே செய்யும் தொழிலில் 'சேவை', 'அர்ப்பணிப்பு' என்கிற பேச்செல்லாம்!

ஆரம்பப் பள்ளியிலேயே நாம் கொடுமைகளுக்குபழக்கப்பட்டிருந்தோம். அந்த ஆசிரியர்களில் சிலர் உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கலாம். அவர்களை நம்பிப்பிஞ்சுகளை ஒப்படைப்பது மிகக்கொடூரமானது. ஒரு கணத்தில் அன்பே உருவாகப் பேசும் ஆசிரியர்கள், அடுத்த கணத்திலேயே பெரும் வன்முறையாளராகி விடுவார்கள்.

ஐந்தாம் ஆண்டில் ஸ்கொலர்ஷிப் படிப்பில் எங்கள் ஆசிரியர் புள்ளி குறைந்தவர்களை அடிப்பது ஒரு சடங்கு. ஒரு தும்புத்தடியின் பாதி அளவு விட்டத்தில் பெரியதொரு கம்பால் பின்பக்கத்தில் ஓங்கி அடிக்கும்போது,‘ப்ளடி ஃபூல்’ என்று பல்கலைக் கடித்து உறுமியவாறு அடிப்பார். பின்பொரு முறை நானும் ஜனகனும்பேசிக்கொண்டிருந்தோம். ‘எப்படி அவரால் முடிந்தது?’. அவரது மூத்த மகன் இயக்கத்திற்குச் சென்றதிலிருந்துதான் இப்படி ஒரு பாதிப்பு அவருக்கு என்றான்.

அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது. அவரது கடைசி மகன் எங்கள் வகுப்புதான். வேறொரு டிவிஷனில் படித்தான். ஒழுங்காக வீட்டுப்பாடங்கள் எதையும் செய்யமாட்டான். புத்தகங்கள் கொண்டுவர மாட்டான். அவன் வகுப்பாசிரியர் அவனை நேராக எங்கள் வகுப்புக்கு தகப்பனிடம் கூட்டி வந்துவிடுவார். எங்கள் வகுப்பிலோ பயிற்சிப்புத்தகம் கொண்டுவராமல் விடுவது ஏறக்குறைய கொலைக்குற்றம். மகன் மீதான புகார்களை கூறும்போது கொஞ்சம் முறைத்தபடி கண்டிக்கும் பாவனையில் பேசுவார். அவனோ ஏதோ பாராட்டுரையைக் கேட்பதுபோல சிரித்தபடி நிற்பான். அவன் சிரிப்பைப்பார்க்க எங்களுக்கே நாலு அப்பு அப்பலாம் போலிருக்கும். பாவம் பெற்ற தந்தை அவருக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா?அவனும் இயக்கத்திற்குப் போய்விடுவான் என்ற பயம் அவருக்கு இருந்திருக்கக்கூடும். அது அவருக்கு மேலதிக உளவியல் தாக்கம்தான். அதனாலென்ன? சற்று நேரத்தில் எங்கள் வகுப்பில் யாரோ ஒருவன் சிக்குவான் இல்லையா? சேர்த்துக் கவனித்துக் கொள்வார்!

இதுபற்றி பின்னர் நண்பன் பார்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சந்தேகம் வந்தது. அது இன்னொரு ஆசிரியர் பற்றியது. வேட்டையாடும் மிருகம் போன்ற பளபளக்கும் கொள்ளிக் கண்கள். சிரிக்கும்போது இன்னும் பயமாக இருக்கும். இன்னும் பளபளக்கும் விழிகள். குரூரமான சிரிப்பு. அவருக்குப் பயந்து இரண்டு பேர் வேறு பள்ளிக்குச் சென்றிருந்தார்கள். அவர்பற்றித்தான் கேட்டேன். ‘அந்தாளுக்கு என்ன பிரச்சினைடா? என்ன பாதிப்பு?’
பார்த்தி யோசிக்காமல், அவசரமாக சொன்னான், "அவன் பிறவிச் சைக்கோ!"

ரு வகையில் வன்முறைக்கு உள்ளாகுபவனுக்கு எந்தப் பாதிப்புமில்லை. அல்லது பழகிவிடும். கடந்து போய்விடுவான். ஆனால் பக்கத்திலிருந்து பார்ப்பவன் நிலைமை மோசமானது. தற்காப்பு உணர்வும்,எச்சரிக்கையான அவதானிப்பும் ஒரு தத்தளிப்பான நிலையில் மனதை எப்போதும் வைத்துக்கொள்ளும். அப்படியான சந்தர்ப்பங்களில் பயந்திருக்கிறேன் எங்கே நானும் எழுத்தாளனாகி விடுவேனோ என்று. நண்பர்கள் புண்ணியத்தில் அப்படியொரு அசம்பாவிதம் நிகழவில்லை.

புவி என்றொரு பேர்வழி. நல்ல உயரமாக கச்சலாக நிற்கவே தெம்பில்லாத மாதிரி ஆடிக்கொண்டே இருப்பார். இளைஞர்! எப்போதும் தோளுக்கு மேலே ஓங்கியபடியே இருக்கும் கையில் பிரம்பு ஆடிக்கொண்டிருக்கும். ஆஸ்துமா இருக்கவேண்டும். இழுத்துக் கொண்டிருக்கும். வாயைத் திறந்தால்குப்பை கூழங்களைப் பறக்கவைப்பது போலகாற்று ‘ஹூய்ய்ய்’ என்று வரும். கிரீச்சிடும் குரலில் பேச முயற்சிப்பார். அவர் என்ன பாடம் படிப்பிகிறார்? எதுவும் தெரியாது. இங்கே என்னதான் செய்துகொண்டிருந்தார்? தெரியாது! ஆனால் நாம் என்ன செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும் எப்படியும் அடித்துவிடுவார் என்று மட்டும் தெரியும். சிலருக்கு அவர் மனிதர்தானா என்றே சந்தேகம். இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய், ‘புவி செத்துப்போய் மூன்று வருசமாச்சு’ என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.

ஏதோ ஒரு அசுபயோக அசுப தினத்தில் புவியிடம் விசாரணையில் மாட்டிக்கொண்டேன்.
"உய்ய்ய் எங்க கர்ர்ர் யார்ர்?”
"உ ஹ்ஹ்ஹ் ர்ர்ர்ர் எந்த கிளாஸ்? சொல்லு"

சரமாரியாக கேள்விகள்.முதல் கேள்விக்குப் பதில் சொல்ல அவகாசமில்லை. அடுத்தடுத்து கேள்விகள். வழக்கம்போல பதிலை எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது. கையில் பிரம்பு ஆடிக்கொண்டிருந்தது. சரமாரியாக இரண்டு முறை என் தோளுக்கருகே அடி விழுந்தபோதுகோபம் தலைக்கேறியது.வகுப்பில் படிப்பிக்கும் எந்த ஆசிரியரிடமும் அடி வாங்கியதில்லை. பிரம்பைப் பிடித்து பறித்து இழுத்தேன். முறிக்க முயற்சித்தேன். அனிச்சையாக என் வலதுகை சற்று உயர்ந்தது சுட்டு விரல் எதோ சொல்லும் பாவனையில் நீண்டிருந்தது.

சம்பவத்தில் புவி அதிர்ச்சியடைந்தமாதிரியிருந்தது. எதுவும் பேசவில்லை. மேலதிக விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்டேன். விசாரணை அதிகாரி சம்பவம் பற்றிக் கேட்டதும், கன்னத்தில் ஓங்கி அறைந்தபோது கண்கள் இருட்டி மின்னல் வெட்டி ஒரு முழு வட்டத்தை சுற்றியிருந்தேன். சொல்லமுடியாது, அது மூன்று வட்டமாகக்கூட இருக்கலாம். என் சுட்டுவிரல் மடக்கப்பட்டபோது நியாயமாக என் அலறல் என் வகுப்புக்குக் கேட்டிருக்க வேண்டும். அநியாயமாகவோ, அதிர்ச்சியிலோ சத்தம் போடவில்லை. முகத்தில் சரமாரியான தாக்குதலில் கண் மங்கலாகத் தெரிந்தது. குத்து மதிப்பாக நடந்து வகுப்புக்குள் சென்றபின்னர் கவனித்ததில், சட்டைப்பொத்தான் ஒன்று அறுந்திருந்தது. வாய்க்குள் உதடு கிழிந்து உப்புக்கரித்தது. முகம் வீங்கியிருந்தது.

வீட்டில் அப்பா கேட்டபோது. வகுப்பில் அடிதடி சண்டை என்றேன். பையன்களுடன் சண்டை என்பதால் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. பிரச்சினையைச் சொல்லியிருந்தால் பள்ளிக்கு வந்திருப்பார். எனக்கு அவர்மீது எக்கச்சக்க கோபம் இருந்தது.சின்ன வயதில் சொல்லி வளர்த்துபோல ஸ்கொலர்ஷிப் இழவெல்லாம் பாஸ் பண்ணித் தொலைத்தும் என்னை யாழ் இந்துவில் சேர்க்காமல் கொக்குவில் இந்துவில் படிக்க விட்டது குறித்தது அது. அவருக்கு அதற்குக் காரணங்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் அந்தப் பள்ளியுடன் ஒன்றவே முடிந்ததில்லை. நாட்டுச் சூழல் காரணமாக நாலைந்து பள்ளிகளில் படித்திருந்தும் இரண்டு வருடங்கள் படித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் பள்ளிக்காலம் சுதந்திரமாக, சுவாரசியமாக இருந்தது அங்கேதான். ஒருவேளை அன்று அப்பாவிடம் சொல்லியிருந்தால் மறுநாளே பள்ளியை மாற்றியிருக்கக்கூடும். உண்மையில் பள்ளியிலேயே எனக்குத் தண்டனையாக மறுநாள் அப்பாவை அழைத்துவரச் சொல்லியிருப்பார்கள். ஆச்சரியமாக அப்படி நடக்கவில்லை.

அதையெல்லாம் விட எனக்குப் பெரிய கவலை ஒன்றிருந்தது. மேற்குறித்த சம்பவத்தில் நான் நொந்து நூடுல்ஸாகி வகுப்புக்கு வந்தது மட்டுமே சக மாணவர்களுக்குத் தெரியும். அதற்கு முன்னர் நான் நிகழ்த்திய அந்த வீரச்சம்பவம் யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால், கன்ரீனில் இலவச டீ, றோல் கிடைக்கும். வகுப்புத்தோழன் ஒருத்தன் என்னிடம் ‘இனிமே எல்லாம் அப்பிடித்தான்’ என்று சொல்லியிருப்பான். இதெல்லாம் நடக்காமல் போய்விட்டதே!

அதன் பிறகு புவி என்னிடம் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. பிறகு இடம்பெயர்ந்து சென்றபின்னர் நானும் கேள்விப்படவில்லை. புவியும் ஒரு விசித்திரமான மனிதர். அவருக்கு என்ன பாதிப்பு இருந்ததோ தெரியவில்லை. என் வலதுகை சுட்டுவிரலில் அவ்வப்போதுசற்றுப் பிரச்சினை இருக்கிறது. அது எதனால் என்றும் புரியவில்லை!

Wednesday, September 6, 2017

கெட்டவார்த்தை!

த்ரிஷாவும் நண்பர்களும் நள்ளிரவு தாண்டிய அகாலவேளைகளில் நடுவீதியில் கூடிக் கும்மாளமடிப்பது குறித்து ஏரியா வாசிகளுக்குப் புகார்கள் இருந்தன. ஆனாலும் பெரிய இடத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக அமைதி காத்தார்கள்.

அப்புமணி குறித்து யோசிக்கும்போது, ‘பெரிய இடம்’ என்பதை விடப் ‘பெரிய வாய்’ என்பது சரியாக இருக்கலாம். வாயைத்திறந்தால், தமிழ் மொழிப் பரிச்சயமே இல்லாத த்ரிஷாவின் நண்பர்களே தெறித்து ஓடிவிடுவார்கள். மற்றபடி, த்ரிஷா பற்றியதோ, திரிஷாவுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு பிள்ளையார் கோவிலில் நடந்ததைப் பற்றியதோ அல்ல இந்தப்பதிவு. கெட்டவார்த்தைகள் பற்றியது. த்ரிஷா பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

இப்போது நினைத்தால் வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. என்ன மாதிரியான இலக்கிய வறட்சி மிக்க சூழலில் வளர்ந்திருக்கிறேன்? ஒன்பது வயதில் ஒருவனுக்குக் கெட்டவார்த்தை தெரியாமல் இருப்பது எவ்வளவு கொடுமையானது? அதுவரை காதில் விழுந்ததிலையா அல்லது கவனிக்கவில்லையா? அந்த இடம்பெயர்வு மட்டும் இல்லையென்றால் இந்தக் குறைந்தபட்ச விழிப்புணர்வு கூட இருந்திருக்காதே!

என்னைவிட வயதொன்று குறைந்த என் விளையாட்டுத் தோழி.  அவளுக்குத் தெரிந்திருந்தது. எனக்குத்தான் தெரியவில்லை. என்ன ஒரு அவமானம் பாருங்கள்.

அதைவிடக் கொடுமை, அவள் தம்பி தூஷணத்தில் மிகுந்த புலமை பெற்று விளங்கியதாகப் பேசிக்கொண்டார்கள். அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த ஆகச் சிறந்த கெட்ட வார்த்தையான சனியன், மூதேவியை எப்போதாவது வாய்தடுமாறிச் சொன்னாலே அம்மாவால் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட எனக்கு அது மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது, அவன் வயது.

மூன்று வயது ! இந்தச் சின்னவயதில் என்ன ஒரு ஞானம்! என்மனதில் அவனுக்குத் திருஞான சம்பந்தருக்குச் சமமான இடத்தை வழங்கச் சித்தமாயிருந்தேன்.

அவன்தான் என் அப்போதைய ஒரே நம்பிக்கை. அவனைக் குருவாகக் கொண்டு சீண்டி, உசுப்பேத்தி அவன் உதிர்க்கும் முத்துக்களைப் பொறுக்கிவிடலாம் என ஐடியா வந்தது. ஆனால் என் நேரம்! அவன் தூஷண பிரசங்கத்தை சமீப காலத்தில்தான் நிறுத்தியிருந்தான். அவன் சித்தப்பா, மாமா அத்தைகள் என்று வருவோர் போவோர் எல்லாரும் மேற்கொண்ட சரமாரியான தாக்குதல்களை அடுத்து, தனது போராட்ட வழிமுறையை மாற்றியிருந்தான். அதாவது இரசாயன ஆயுதப் பிரயோகத்தில் ஈடுபடத் தொடங்கியிருந்தான். எதிரி மீது துப்பிவிடுவது! ஆக, என் நம்பிக்கைகள் எல்லாம் தகர்ந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த அந்த நாளில்தான் அந்த நல்ல சேதியைத் தோழி பகிர்ந்துகொண்டாள். அருகாமையில் ஒரு வீட்டு மதிற்சுவரில் யாரோ கெட்டவார்த்தைகள் எழுதியிருக்கிறார்கள் என்றாள்.

இந்த இடத்தில் விவரமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, அப்பாவித்தனமான  முகபாவனையோடு கேட்டேன்.

"என்ன எழுதியிருக்கு?"

"தூஷணம்"

"அதான் என்ன எழுதியிருக்கு"

“அதான் தூஷணம்"

"எப்பிடி.. எழுதியிருக்கு?”

"அதச் சொல்லக்கூடாதே" - அவள் என்னைவிட விவரமாக இருந்தாள்.

பெண்கள் எப்போதுமே எந்த வயதிலுமே எங்களைவிட விவரமாகத்தான் இருக்கிறார்கள்.

"நீயே போய்ப் பார். மூண்டாவது வீடுதாண்டி ஒழுங்கை முடக்கில இருக்கிற மதில்ல எழுதிருக்கு" உதவிக் குறிப்புகள் தந்தாள்.

புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளும், ஆவல், தேடலுடன் சிட்டாய்ப் பறந்தேன். திரும்பி வரும்போது 'பாத்துட்டியா' என்பதுபோல தலையசைத்துப் புன்னகைத்தாள். என் முகத்தில் தெரிந்த ஒளி அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். நானும் ஒரு மாதிரி உண்டு, இல்லை, பொய், மெய், நன்மை, தீமை எல்லாம் கடந்த, நடுவில் இருக்கக்கூடிய ஞானச்சிரிப்பு சிரித்துவைத்தேன்.

ஆனால், முகத்தில் தெரியும் ஒளி ஞானம் பெற்றதால் மட்டுமே வருவதில்லை. நாம் வாங்கிய பல்பும் ஒளியைக் கொடுக்கும் அல்லவா? அந்த மதிற்சுவர் முழுவதும் என்னென்னமோ எல்லாம் எழுதியிருந்தது. அதில தூஷணத்தை எங்க போய்க் கண்டுபிடிக்கிறது?

கெட்டவார்த்தை பேசுபவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்றொரு பொதுவான நம்பிக்கை சிறுவயதில் பள்ளி நாட்களில் எனக்கும் இருந்தது. இப்போதும்கூட பலருக்கும் இருக்கலாம். சரமாரியாக வார்த்தைக்கு வார்த்தை அடைமொழியாகப் பேசும் ஒருவன், சினிமாப்பாடல்களை செந்தமிழில் மாற்றிப் பாடும் நண்பனொருவன் என பல விற்பன்னர்கள் நம்மோடு படிப்பார்களில்லையா?

எங்கள் பள்ளியில் ஒரு பீ.டி. வாத்தியார் புதிதாக வந்திருந்தார். பொதுவாக இங்க்லீஷ் வாத்தியார்களுக்கு பள்ளியில் ஒரு மதிப்பு இருப்பதுபோல பீ.டி.வாத்தியார்கள் மீதும் ஒரு பார்வை இருந்தது. அவர்களைக் கைகழுவி விட்டதுபோல என்ன செய்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. எப்போதோ துவைத்த ட்ராக் சூட் அணிந்துகொண்டுதான் பள்ளிக்கு வருவார். வாயில் தமிழ் துள்ளி விளையாடும். சாதாரணமாக அவரால் பேச முடியாதோ என்பதுபோலிருக்கும் அவர் பேச்சு.

பள்ளிக்கு அவர் வந்து அப்போதுதான் ஒரு வாரம் ஆகியிருந்தது. எங்கள் வகுப்போடு பரிச்சயமாகியிருந்தார். காலையில் வரிசையாகச் சென்றுகொண்டிருந்தபோது ரணகளமாக கமெண்ட் அடித்தார். "பெரிய ஆக்களாடா நீங்க? ட்ரவுசரையும் மாட்டிக் கொண்டு, சூத்தையும் ஆட்டிக்கொண்டு போறதப் பாரு!"

அன்று உதைபந்தாட்டப் பயிற்சி. “பந்தை நிலத்தில் வைத்து சுயாதீனக் காலை பந்துக்குப் பக்கவாட்டில் வைத்து, இயங்கும் காலை பின்னோக்கி இழுத்து உள்ளங்கால் வளைவால் மெதுவாக உருட்டவேண்டும்” என்றார்.

பின்பு, "எங்க நான் சொன்னதைச் சொல்லு" - ஒருவனிடம் கேட்டார்.

அவன் சொல்ல ஆரம்பித்தான், "பந்தை நிலத்தில் வைத்து சுகயீனக் காலை பக்கவாட்டில" என்றபோதே புரிஞ்சு போச்சு. ஒருத்தன் சிக்கிட்டான்.

"டேய் என்னது சுகயீனக்காலா" வாத்தி டென்ஷனாகி, சீரியசாகக் கேட்பதுபோல,
"இங்க வேற யாருக்காவது சுகயீனக் கால் இருக்கா?"

யாரோ ஒரு அப்பாவி அதை நம்பி "சேர் எனக்கிது  வாதக் கால்" என்றான்.

எல்லாரும் சிரிப்புடன் வாத்தியையே பார்த்துட்டு இருந்தோம். வாத்தி, "ஹூம் இனி ஒவ்வொருத்தனா சொல்லுவானுகள் வாதக்கால், ஓதக்கொட்டை!”

முன்பு வேலைசெய்த அலுவலகத்தில் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் பிரவாகமாக ஓடும். ஒவ்வொரு வார்த்தைக்கும் அடைமொழியாக கெட்டவார்த்தையாக பேசியிருக்கிறேன். அப்போதுதான் உணர்ந்தேன். நம் சொந்தமொழியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ள எந்தவித மனத்தடையும் இருப்பதில்லை. பின்பு தமிழிலும். என் பொறுமையின் எல்லையைத் தாண்டச்செய்யும்போது வேறு சரியான தமிழ் வார்த்தைகள் கிடைப்பதில்லை. உண்மையைச் சொன்னால் நான் கெட்ட வார்த்தைகளில் சரமாரியாக உரையாடியது எல்லாம் ஒருசில பெண்களுடன் மட்டும்தான் என்பதை நினைக்கும்போது ஒரு மாதிரியாகத்தானிருக்கிறது.


சில வருடங்களுக்குமுன் முன், யாழ்ப்பாணம் கசூரினா கடலில் குளித்துக் கொண்டிருந்தோம். கரைக்குச் சமீபமாக ஒரு ஏரியாவில் மீனவர்கள் வலை கட்டி மீன் பிடிக்கும் செட்டப் செய்திருந்தார்கள். அதற்குள் ஆர்வக் கோளாறுத்தனமாக சிலர் சென்றுவிட்டார்கள். "டேய்.." குரல் கேட்டது. கரையிலிருந்து ஒருவர் சிறு கட்டுமரத்தில் வந்தார். கையிலிருந்த துடுப்பினால் ஓங்கி தண்ணீரில் அடித்து எல்லோரையும் வெளியே அனுப்பினார். கூடவே செந்தமிழ்ப்பாட்டும். குடித்திருந்தார். அவர் கோபம் நியாயமானது. அந்தத் துடுப்பு மட்டும் தவறுதலாக மேலே பட்டுவிட்டால், பத்து நாளைக்கு எழும்ப முடியாது என்பதால் எல்லோரும் சிரித்துகொண்டு அவசரமாக வெளியேறினார்கள். நாங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

அந்தக் கூட்டத்தில் ஒரு வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் இருந்தார். யாழ்மக்கள் வெளிநாட்டுக்காரர் விஷயத்தில் மறப்போம், மன்னிப்போம் கொலகையையே கடைப்பிடிப்போம். அதுபோல அவர்களும் எந்த முட்டாள்தனமான காரியமென்றாலும் முன்னின்று முகம்கொடுப்பார்கள். அப்படித்தான் நடந்த தவறுக்கு அவராகவே விளக்கம் கொடுக்க முன்வந்தார்.

"இல்ல நாங்கள் வந்து வெளிநாட்டில இருந்து வந்ததால.."

“அவர் வெளிநாட்டு பு--- அவரும் அவற்ர ஸ்டைல் பு-- கழுத்தில ஒரு சங்கிலிப் பு--- அதில சு-- ஆட்டிக் கொண்டு வந்திட்டார் விளக்கம் குடுக்க!”

பாராட்டு வாங்கியவர்  உட்பட, எல்லாரும் சிரித்தார்கள்.

சரி ஒற்றை வார்த்தையில் முடிக்கலாம் என்று நினைத்துச்  சொன்னார், "Sorry"

"ம்ம்ம் அவற்ற இங்கிலீஷ் பு----!"


மீண்டும் த்ரிஷாவுக்கே வருவோம்.

அன்றொருநாள் காலை நேரத்தில் பிள்ளையார் கோவிலுக்குப் போனபோது ‘த்ரிஷா வெளில போ வெளில..’ என்று சுதா அய்யா குரல் விரட்டியது. த்ரிஷா பதில் சொல்லாமல் போக மனமில்லாததுபோல பார்த்துக் கொண்டிருந்தது. ஆச்சரியம் தாங்கவில்லை. என்னவொரு பொருத்தம். வெள்ளையாக, உயரமாக வெடவெடவென ஸ்லிம்மாக இளமையாக. யார் வைத்திருப்பார்கள் அந்தப் பெயரை. என் ஆச்சரியம், யோசனை பற்றிக் கண்டுகொள்ளாமல் த்ரிஷா ஓடிப்போய்விட்டது.

அப்புமணி வீட்டில் நாலைந்து நாய்கள் இருந்தன. வேறு யார் பெயர்களும் தெரியாது. எல்லாவற்றுக்கும் காரண, அகாரணப் பெயர்கள் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக எந்தவொரு கோபமான தருணத்திலும் அவற்றின் பெயர் கொண்டே மரியாதையாக அழைக்கபட்டார்கள் என்றும் பின்னர் தெரிந்தது. பாருங்கள், அதுவும் திரிஷாவின் மூலமாகத்தான்!

ஓர் மழைக்கால மாலை. இருளடைந்திருந்த அப்புமணி வீட்டு வராந்தாவில் அவர் தூங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் யாரும் காணவில்லை. எங்கிருந்தோ த்ரிஷா ஓடிவர, பின்னாலேயே த்ரிஷாவின் ஆண் நண்பர்கள் பத்துப் பன்னிரண்டுபேர் பின்னாலேயே ஓடி வந்தார்கள். த்ரிஷா அப்புமணியைக் கண்டிருக்க வேண்டும். லாவகமாக அவரைத் தாண்டிப்பாய்ந்து ஓடிவிட்டாள். சுவாரசியமாகத் துரத்திகொண்டுவந்த நண்பர்கள் அப்புமணி தூங்கிக்கொண்டிருந்ததைக் கவனிக்காமல், அப்புமணி மீது இடறி விழுந்து புரண்டெழும்பினார்கள்.

என்ன நடந்ததென்றே தெரியாமல் எக்கச்சக்க அதிர்ச்சியுடன் பதறி எழுந்துகொண்ட அப்புமணி அவிழ்ந்த சாரத்தை இறுக்கப் பிடித்துக்கொண்டு ஆக்ரோசமாகக் கத்தினார்.

“இவள் த்ரிஷா பு---- தான் ஓ---காக இஞ்ச எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்துட்டாள்”