Tuesday, February 10, 2015

Good Bye, Lenin! (2003)தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அது தொண்ணூற்று ஏழாம் ஆண்டு. இந்திய அணி களத்தடுப்பிலிருந்தது. எங்கள் எண்பது வயதுப் பாட்டியம்மாவும் கண்களைச் சுருக்கியவாறு பார்த்துகொண்டிருந்தார். திடீரென்று அசுவாரசியமாகச் சொன்னார், "என்ன பழைய ஆக்கள் ஒருத்தரையும் காணேல்ல". நான் உட்பட கூடி இருந்து பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் சிரித்தோம். பாட்டியம்மா கிரிக்கெட் பற்றிப்பேசியதுதான் பலருக்கும் புதினமாகத் தெரிந்தது. சற்று யோசித்துப் பார்த்ததில் பாட்டியம்மா கடைசியாக ஒரு கிரிக்கெட் போட்டியைச் சாவகாசமாக அமர்ந்து பார்த்தது யாழ்ப்பாணத்தில் எண்பத்தேழு, அதற்குமுதல். ஆக, அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. 

ஆனால் சிலவேளைகளில் மிக அநியாயமாகவும் அவர் பேசுவதுண்டு. இரண்டாயிரத்து மூன்றாமாண்டு அவர் வீட்டிற்கு எதிரே ஒரு பெரிய மூன்று மாடி வீடொன்று கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. வீட்டு கேற்றடியில் என்னுடன் வந்து நின்றவர், இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு கண்களால் அளவெடுப்பதுபோன்ற தோரணையுடன் பார்த்துச் சடுதியில் ஒரு ‘எஸ்டிமேட்’ போட்டிருந்தார். கொஞ்சம் அதிர்ச்சியடைந்தவர்போலப் பேசினார். ‘எவ்வளவு பெரிய வீடு, கட்டி முடிக்க எவ்வளவு காசு செலவளியும்! ம்ம்ம்… எப்பிடியும் ஒரு லட்சம் தாண்டும்’ என்றாரே பார்க்கலாம். மயக்கம் போடாத குறையாக அப்படியே வெலவெலத்துப் போய்ப் பார்த்தேன். அவர் சீரியசாகத்தான் பேசினார். 

அவர் போட்ட கணக்கு எத்தனையாம் ஆண்டிற்கானது என்பது புரியவில்லை. அந்த ஆண்டின் நாணயப் பெறுமதியைத் தாண்டி அவர் வரவில்லை, அங்கேயே தேங்கிவிட்டார் போலும். வயதானவர்களுக்கான பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கவேண்டும். காலையில் என்ன சாப்பிட்டார்கள் என்பது நினைவிருக்காது. இருபத்திரண்டு வயதில் நடந்த கதையை அவ்வளவு துல்லியமாக நினைவு வைத்துச் சொல்வார்கள். அவரிடம் போய் இன்றைய நிலவரத்தைச் சொல்வது அவசியமில்லை. இன்னும் சில ஆண்டுகளோ மாதங்களோ வாழப்போகும் பெரியவர்களிடம் போய் அவர்கள் ஆழமாக நம்பும் ஒரு விடயத்தை எதற்குக் குழப்ப வேண்டும்? இறுதிக்காலத்தில் ஏன் வீணான மன உளைச்சலை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்?

ஓர் உண்மையைச் சொல்லாது விடுவது அப்படியொன்றும் கடினமானதல்ல. ஆனால் நாம் வாழும் சூழலில், கண்ணெதிரே நிகழும் சடுதியான மாற்றத்தை நம் அன்புக்குரிய ஒருவரிடம் மறைப்பதற்காகப் பொய் சொல்லவேண்டி நேர்ந்தால் அது எவ்வளவு சவாலானதாக இருக்கும்? அலெக்ஸுக்கு அப்படியொரு சிக்கல்தான். கொள்கைவாதியான, தேசத்தை மிகவும் நேசிக்கும் ஒருவருக்கு தாய்நாட்டில் சடுதியாக ஏற்படும் அரசியல் மாற்றங்கள், வாழ்நாளில் கற்பனை செய்தேயிராத காட்சிகளை எதிர்கொள்வது தீராத மன உளைச்சலையே கொடுத்துவிடும். சிறு அதிர்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாத மோசமான உடல்நிலையிலுள்ள தன் தாயாரிடமிருந்து நாட்டில் நிகழும் முக்கியமான மாற்றங்களை மறைக்க வேண்டிய சூழ்நிலை அலெக்ஸுக்கு.

1978 சிறுவயது அலெக்ஸ் தனது அக்காவுடன் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறான். கிழக்கு ஜெர்மன் உலகளாவிய ரீதியில் பெருமைப்படும் விதத்தில் அவர்கள் நாட்டு வீரர் Sigmund Jahn விண்வெளிக்குப் போவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் வீட்டில் அந்த அதிர்ச்சியான சம்பவம் தெரியவருகிறது. அலெக்ஸின் அப்பா, அவன் அம்மாவைப் பிரிந்து மேற்கு ஜெர்மனியிலுள்ள பெண்ணுடன் சென்றுவிட்டார். அம்மா உடைந்துவிடுகிறாள். சிலநாட்கள யாருடனும் பேசுவதில்லை. பிரமை பிடித்தவள்போல இருக்கிறாள். பின்பு மிகத் தெளிந்துவிடுகிறாள். சோஷலிச கருத்தாளராகவும், ஆளும்கட்சியின் ஆதரவாளராகவும் மாறி நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துச்சேவை செய்கிறாள். சிறந்த மக்கள் சேவைக்கான உயர்ந்த விருது பெறுகிறாள். தனது சோஷலிச நாட்டையே மணந்துகொண்டவள் போல மாறிவிடுகிறாள்.

பத்து வருடங்கள் சென்றபின்பு, இளைஞனான அலெக்ஸ் அரசாங்க எதிர்ப்புக் கொள்கைகளோடு வளர்கிறான். அம்மாவின் சோஷலிச கொள்கைகளை, அரசாங்கச் செய்திகளைச் சலிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். கிழக்கு ஜெர்மானியக் குடியரசின் நாற்பதாவது ஆண்டுவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றுமாலையே நூற்றுக்கணக்கானவர்கள் சோஷலிச அரசாங்கத்திற்கு எதிராக ஊர்வலம் செல்கிறார்கள். எமக்குப் பத்திரிகைச் சுதந்திரம் வேண்டுமென்று கோஷமிடுகிறார்கள். காரில் வந்துகொண்டிருக்கும் அம்மா சோஷலிசத்துக்கு எதிரான அந்தக்கூட்ட்டத்தை அதிர்ச்சியுடன் பார்க்கிறாள். அந்தக்கூட்டத்தில அலெக்ஸ் இருப்பதையும், அவனை போலீசார் இழுத்துச் செல்வதையும் பார்த்த அதிர்ச்சியில் மயங்கிவிழுகிறாள்.

மருத்துவமனையில் சோகமாக நிற்கிறான் அலெக்ஸ். ஹார்ட் அட்டாக் வந்து அம்மா கோமாவில் இருக்கிறாள். அவளுக்கு நினைவு திரும்புமா, மீண்டும் இயல்புக்கு வருவாளா என்பது பற்றி எதுவும் கூற முடியவில்லை என்கிறார் மருத்துவர். அரசாங்க எதிர்ப்பு ஊர்வலத்தில் தன்னைக் கவர்ந்த அழகிய பெண் லாரா, அந்த மருத்துவமனையில் தாதியாகக் கடமையாற்றுவது தெரிகிறது. இருவரும் நெருங்கிவிடுகிறார்கள்.

எட்டு மாதங்களின் பின்னர் அம்மாவுக்கு நினைவு திரும்புகிறது. எல்லோருடனும் பழையபடி பேசுகிறாள். அதுகுறித்து ஆச்சரியம் தெரிவிக்கும் மருத்துவர் அம்மாவின் மூளை பாதிப்படைந்திருப்பதால் ஒரு சிறு அதிர்ச்சியும் அவளது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என எச்சரிக்கிறார். அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவதுதான் பாதுகாப்பானது எனமுடிவுசெய்கிறான் அலெக்ஸ். அக்கா அது சரியான முடிவல்ல என்கிறாள். அலெக்ஸ் பிடிவாதமாக இருக்கிறான். இபோதுள்ள நாட்டின் நிலைமை அம்மாவுக்குத் தெரிந்துவிடவே கூடாது என அதற்கேற்ப ஒவ்வொன்றையும் திட்டமிடுகிறான். அது ஒன்றும் அவ்வளவு இலகுவானதாக இல்லை.

அம்மா சுயநினைவின்றியிருந்த நாட்களில் அப்படி என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து முடிந்திருகின்றன? கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் உடைக்கப்பட்டுவிட்டது. இருநாடுகளும் ஒன்றிணைந்துவிட்டன. சடுதியாக எல்லாமே மாறிவிட்டன. கொக்காகோலா முதலில் வந்துவிடுகிறது. மதுவிடுதிகள் வந்துவிட்டன. நீலப்பட கஃபேக்கள், நைட் கிளப்கள் வந்துவிட்டன. வீதியில், வாகனங்களில் சத்தமாகக் கடவுள் வாழ்த்துச் சொல்லிக் கோஷமிட்டுச் செல்லும் இளைஞர்கள். பொதுத்தேர்தல் நடைபெற்றிருக்கிறது. மேற்கத்தியப் பொருட்கள், துரித உணவுக்கடைகள் அறிமுகமாகிவிட்டன. அலெக்ஸின் அக்கா, கல்லூரிப்படிப்பை நிறுத்திவிட்டு, 'பேகர் கிங்' இல் வேலை செய்கிறாள். அவளுக்கு ஒரு மேற்குக்காதலன் இருக்கிறான். சாதாரண மக்கள் பலர் தங்கள் வேலையை இழக்கிறார்கள். அலெக்ஸ் டிஷ் அண்டெனா விற்கும் கடையில் வேலை செய்கிறான். வீட்டில் யன்னல் திரைச்சீலை முதற்கொண்டு மேற்கத்தைய, நவீன பாணிக்கு மாறிவிட்டது. 

இப்போது மீண்டும் அம்மாவின் அறையைப் பழையபடி, எட்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே நண்பனின் உதவியுடன் மாற்றுகிறான் அலெக்ஸ். காதலி லாராவின் உதவியுடன் அம்புலன்சில் அம்மாவை வீட்டுக்கு அழைத்துவருகிறான். வரும் வழியில் வானொலிச் செய்தி அறிவிக்கிறது, 'கிழக்கு ஜெர்மனிப் பணம் இன்னும் இரண்டு வாரங்களுக்குமேல் செல்லாது உடனே மாற்றிக் கொள்ளுங்கள்'. செய்தி அம்மாவுக்குக் கேட்டுவிடாமல் ஒலியைக் குறைக்கச் சொல்கிறான். அக்கம்பக்கத்தில் யாரும் அம்மாவுடன் பேசவிடாதபடி பாதுகாப்பாக அறைக்குக் கொண்டுவந்துவிடுகிறான். படுக்கையிலிருக்கும் அம்மாவை மாறி மாறிக் கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறார்கள் அலெக்ஸும் அவன் சகோதரியும். 'அறையில் ஒரு டீவி இருந்தால் பார்த்துக் கொண்டிருக்கலாம்' என்கிறாள் அம்மா. நண்பன் உதவியுடன் நாடு இணைவதற்கு முன்னரான பழைய செய்திகளடங்கிய காசெட்டுகளைப் பக்கத்து அறையில் இருந்து அம்மாவின் டீவியில் தெரியச்செய்கிறான்.

அம்மாவின் பிறந்தநாள் வருகிறது. அம்மாவின், வயதான இயக்கத் தோழர்களைச் சந்தித்து நாட்டின் மாற்றங்கள் எதுவும் அம்மாவுக்குத் தெரியவேண்டாம் எனச் சொல்லிப் பிறந்தநாளுக்கு அழைக்கிறான். அந்தக் குடியிருப்பில் இருக்கும் சிறுவர்களுக்கு அம்மா சொல்லிக் கொடுத்த நாட்டுப்பற்றுப் பாடல்களைப் பாடவேண்டும் என பணம் கொடுத்துக்கேட்டுக் கொள்கிறான். எல்லாம் திட்டமிட்டபடியே நடக்கிறது. எல்லோரும் அலெக்ஸ் சொல்லிக் கொடுத்தபடியே மிகுந்த படபடப்புடன் கஷ்டப்பட்டுப் பொய் சொல்கிறார்கள். அம்மா மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். எல்லோரும் ஆசுவசமடைந்து கொள்ள. அலெக்ஸ் இறுதியாகப் பேசுகிறான். ஆனால் அம்மாவின் பார்வை மாறுகிறது. குழப்பத்துடன் அலெக்ஸை அழைக்கிறாள். 'என்ன அது?' என்கிறாள். எல்லோரும் அவள் பார்த்த திசையில் யன்னலூடு பார்கிறார்கள். அங்கே சற்றுத் தொலைவிலுள்ள கட்டடத்தின் சுவரில் பிரமாண்டமாகக் கோக்காகோலாவின் பானர் கட்டித் தொங்கவிடப்படுகிறது. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கும் என அப்போதைக்கு அம்மாவைச் சமாதானம் செய்கிறான். பின்பு, அதற்கும் நண்பன் உதவியுடன் ஒரு கதையைத் தயாரித்துச் சமாளிக்கிறான் அலெக்ஸ்.

ஒருமுறை அலெக்ஸ் கதிரையில் அமர்ந்தவாறே தூங்கிக்கொண்டிருக்கிறான். அம்மா மெதுவாகக் கட்டிலை விட்டிறங்குகிறாள். தன்னால் நடக்கமுடிகிறது என்கிற மகிழ்ச்சியுடன் நிதானமாக, மெதுவாக வீட்டிலிருந்து விதிக்கு இறங்குகிறாள். அங்கே அவள் பார்க்கும் காட்சிகள் அதுவரை அவள் காணாதவையாக இருக்கின்றன. கீழே புதிதாகக் குடிபுகும் குடும்பமொன்றின் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு இயேசு படம் இருக்கிறது. அவர்கள் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் எனத்தெரிந்து குழப்பமடைகிறாள். பெரிய அளவிலான பிரேசியர் விளம்பரத்தட்டி, புதிய கார்கள் எல்லாவற்றையும் காண்கிறாள். உச்சகட்டமாக ஒரு ஹெலிகொப்டரில் கட்டித் தூக்கிச்செல்லப்படும் லெனின் சிலை. அதேநேரம் அவளைத்தேடி வரும் அலெக்ஸ் மீண்டும் வீட்டுக்குக் கூட்டிச்செல்கிறான்.மறுநாள் அலெக்ஸின் ஏற்பாட்டில், அவன் நண்பன் வாசிக்கும் டீவி செய்தியில் புதிய தகவல்கள் வெளிவருகின்றன. அதாவது, மேற்கு ஜெர்மனியில் முதலாளித்துவத்தை எதிர்க்கும் ஏராளம் மக்கள் கிழக்குக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டியது நமது கடமை என்கிறது செய்தி. அம்மா நம்பி விடுகிறாள். அப்படியே வெளியில் பார்க்கிறாள். ஏராளமான புதியரக கார்கள் வீதியில் செல்கின்றன. ‘இவ்வளவு அகதிகளா? அவர்களுக்கு நாம் உதவவேண்டும்’ என்கிறாள். 

அம்மாவை ஊரில் பழைய வீட்டுக்குக்குக் கூட்டிச் செல்ல முடிவு செய்கிறான் அலெக்ஸ். ஆனால், வீதியில் செல்லும்போது மாற்றங்கள் தெரிந்துவிடும். எனவே 'சஸ்பென்ஸ்' என்று கண்களைக் கட்டிப் புதிதாக வாங்கிய காரில் குடும்பமாக அழைத்துச் செல்கிறார்கள். அங்கே தன் கணவனுடன் வாழ்ந்த நாட்களை நினைவு கூர்கிறாள். அவர் தனக்கும் பிள்ளைகளுக்கும் எழுதிய கடிதங்களை மறைத்துவிட்டதைச் சொல்கிறாள். பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்கிறாள். ஒருமுறை தன் கணவரைப் பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். அன்று அவள் உடல்நிலை மோசமடைகிறது. இம்முறை உயிர் பிழைப்பது கடினம் என்கிறார் மருத்துவர். அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற அப்பாவை அழைத்து வருகிறான் அலெக்ஸ். அவரிடமும் நாடு பற்றி எதுவும் சொல்லிவிட வேண்டாம் எனக்கேட்டுக் கொள்கிறான்.

இரு நாடுகளும் ஒன்றிணைந்த நாளின் கொண்டாட்டம் நிகழவிருக்கிறது. அதற்கு ஓரிரு நாட்கள் கழித்துத்தான் பழைய சோஷலிசக் குடியரசுதினம். ஆக, இந்தக் கொண்டாட்டத்தை குடியரசுதினக் கொண்டாட்டமாக மாற்றிவிடலாம் என முடிவுசெய்யும் அலெக்ஸ் முதற்கட்டமாக அம்மா தூங்கும்போது நாட்காட்டியில் சில தாள்களைக் கிழிக்கிறான். நண்பனுடன் இணைந்து ஒரு செய்திப்படம் தயாரிக்கிறான். அவர்கள் தயாரித்த மிகச்சிறந்த படம் இதுதான் என்கிறான் நண்பன்.

அம்மாவுடன், அலெக்ஸ், அக்கா, லாரா எல்லோரும் அமர்ந்து டீவி பார்க்கிறார்கள். விசேட செய்தி விவரணங்களுடன் ஒளிபரப்பாகிறது. கிழக்கு ஜெர்மன் தலைவர் பதவி விலகுகிறார். ஸ்டேட் கவுன்சில் சேர்மனான முன்னாள் விண்வெளி வீரர் சிக்மண்ட் ஜான் உரையாற்ற வருகிறார். ‘ஜான்?’ அம்மா ஆச்சரியத்துடன் கேட்கிறாள். ஆமாம் ஜானாக மாறியிருக்கும், அலெக்ஸ் சந்தித்த வாடகைக்கார்ச்சாரதி உரையாற்றுகிறார். அந்த உரையில் முக்கியமாக, தாங்கள் எதிரிகளாகக் கருதிய மேற்கு ஜெர்மன்காரர்கள் ஆயிரக்கணக்கில் சென்ற வருடம் தமது நாட்டில் வாழ விரும்பி வந்ததைக் குறிப்பிடுகிறார். ‘சோஷலிசம் என்பது எங்களைச் சுற்றிச் சுவர் எழுப்பிக் கொள்வதல்ல. எல்லோரோடும் இணைந்து வாழ்வதே, கனவு மட்டும் காண்பதல்ல, அதைச் செயற்படுத்துவதே, அதனால் பெர்லின் எல்லையைத் திறக்க முடிவு செய்தேன்’ என்கிறார். தொடர்ந்து பெர்லின் சுவர் உடைக்கப்படுவதையும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடுவதும் காண்பிக்கப்படுகிறது.

அலெக்ஸ் இடையிடையே அம்மாவைத் திரும்பிப் பார்க்கிறான். புன்னகைக்கிறான், அம்மாவும். அம்மா இம்முறை செய்திகளைக் கவனிப்பதைவிடவும் ஆர்வமாக அலெக்ஸை அவனறியாமல் பார்க்கிறாள், அர்த்தம் பொதிந்த அழகான புன்னகையுடன்! அவை பொய்யான செய்திகள் என்பது அவளுக்குத் தெரியும். எனினும் அலெக்ஸுக்காகப் பார்வையில் ஆச்சரியம் காட்டுகிறாள். அம்மாவுக்கு அன்று காலையிலேயே நாடுகள் ஒன்றிணைந்துவிட்ட செய்தியைச் சொல்லிவிடுகிறாள் லாரா. செய்திப்படம் முடிந்ததும் அலெக்ஸை மகிழ்ச்சியுடன் பார்த்துப் புன்னகைக்கிறாள். வாணவேடிக்கைகள் ஆரம்பமாகின்றன. இரவு முழுவதும் தொடர்கின்றன. சிறுபுன்னகையுடன், மனநிறைவுடன் கண்களை மூடுகிறாள் அம்மா.

அம்மாவின் ஆசை அவளது சாம்பல் சுதந்திர சோஷலிச நாட்டின் காற்றில் கலக்க வேண்டுமென்பது. அதன்படி சாம்பலை ஒரு வாணவேடிக்கை ரொக்கட்டில் வைத்து வானத்தில் வெடிக்கவைக்கிறான் அலெக்ஸ். அப்பா, குடும்பத்துடன் அக்கா, லாரா, அம்மாவின் பழைய தோழர்கள் எல்லோரும் உடனிருக்கிறார்கள். 'அம்மாவின் இறுதி மூச்சுவரை நம்நாடு அவள் நம்பியபடியே இருப்பதாக நாம் பார்த்துக் கொண்டோம். அப்படி இனி ஒருபோதும் ஆகிவிடாது என்கிறபோதிலும், அம்மாவின் நினைவுகளில் நாடும் அப்படியே இருக்கும்' என்கிற அலெக்ஸின் குரலுடன் படம் முடிகிறது.

ஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரக் கொள்கை மாற்றம் எப்படியெல்லாம் அன்றாடவாழ்வில் சடுதியாகப் பிரதிபலிக்கிறது? அம்மா வருடக்கணக்காக உழைத்துச் சம்பாதித்த பழைய பணத்தை வங்கிக்குக் கொண்டு செல்கிறான் அலெக்ஸ். காலக்கெடு இரண்டு நாளுக்குமுன் முடிந்துவிட்டதால் வங்கியில் மாற்றிக்கொடுக்க மறுக்கிறார்கள். விரக்தியுடன் அவ்வளவு பணத்தையும் கிழித்து எறிகிறான் அலெக்ஸ்.

அம்மா கேட்கும், அவள் விரும்பும் ஊறுகாய்ப் போத்தல்கூட எங்கும் கிடைக்கவில்லை. பல்பொருள் அங்காடியில் இருப்பவை ஹொலண்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்கிறார்கள். இறுதியில் அலெக்ஸ் குப்பைத் தொட்டியிலிருந்து வெற்றுப்போத்தலை எடுத்து, சுடுநீரில் அவித்து, அதற்குள் புதியதைக் கொட்டி, லேபில் ஒட்டிக் கொடுக்கிறான். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் மினக்கெடுகிறான்.

அம்மாவுக்காகத் தயாரிக்கப்படும் செய்திப்படங்களுக்கான பின்னணியும், அவற்றின் பின்னாலுள்ள செய்திகளும், சோகமும் ஆழமானவை. அம்மா வீதியில் இறங்கிச்செல்லும்போது அங்கிருந்து அகற்றிச் செல்லப்படும் லெனின் சிலையின் கை தன் தோழரை நோக்கி நீளுவது போலவே அம்மாவை நோக்கி வரும் காட்சி மென்சோகத்துடன் கூடிய அழகு. Wolfgang Becker இயக்கத்தில் 2003 இல் வெளியான ஜெர்மானியப்படம் ஏராளமான விருதுகளைப் பெற்றிருந்தது.

அம்மா இறுதிச்செய்திப்படத்தைப் பார்க்கும் காட்சி மிக நெகிழ்ச்சியானது. அதுவரை தான் நம்பிக் கொண்டிருந்த கொள்கைகள், சித்தாந்தங்களின் மதிப்பீடுகள் சரிந்து போனது தெரிந்தும் புன்னகையுடன் கடந்துவிடும் அம்மாவின் மௌனம் அர்த்தபூர்வமானது. சிறுகுழந்தை சொல்லும் சாகசக்கதைகளைப் பொய்யென்று தெரிந்தே ரசிக்கும் தாயின் அன்பு மட்டுமல்ல அது. தன் அன்புக்குரியவளின் நம்பிக்கை எத்தருணத்திலும் தகர்ந்துபோய்விடக்கூடாது, என்கிற அலெக்ஸின் அர்ப்பணிப்பை முழுமையாகப் புரிந்துகொண்ட மனநிலையும்கூட. சிறுபுன்னகையுடன் லாரா பார்க்கும் பார்வையும் அதைத்தான் சொல்கிறது.

(பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதியது)

Share This:   FacebookTwitterGoogle+

Followers

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |