Sunday, July 2, 2017

சிஷ்யன்!

மழை ஓய்ந்துவிட்டிருந்தது. கடற்கரை வீதியிலிருந்து பிரதான வீதியை இணைக்கும் அந்தச் சிறு வீதி குளித்துக் கொஞ்சமாக கிரவல் பூசியிருந்ததில், சர்க் சர்க் சத்தத்துடன் நடந்துகொண்டிருந்தோம். சற்றே குறுகலான வீதி. எதிரே தூரத்தில் கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. கவனிக்காதவன் போல நடு வீதியிலேயே சிஷ்யன் நடந்துகொண்டிருந்தான். அனிச்சையாக அவனை எச்சரிக்கை நினைத்தேன். விவேகானந்தர் இதுகுறித்து ஏதேனும் சொல்லித் தொலைத்திருப்பாரோ? என நினைத்து பேசவில்லை.

விவேகானந்தரோடு எனக்குத் தனிப்பட்ட ரீதியில் எந்தவித பிரச்சினையோ வாய்க்கால் தகராறோ கிடையாது. அவருடன் காத்திரமான ஃபேஸ்புக் விவாதமோ, கருத்துப்பரிமாற்ற முரண்பாடுகளோகூட எனக்கில்லை. ஏனெனில் அப்போது ஃபேஸ்புக் அறிமுகமாகியிருக்கவில்லை. இப்போது விவேகானந்தர் ஃபேஸ்புக்கில் இருக்கிறாரா என்பது பற்றிக்கூட எனக்குத் தெரியாது. ஓரிருமுறை அவர் படங்களை ப்ரொபைல் பிக்சராகப் பார்த்திருக்கிறேன். ஆனால் பெயர்கள் வேறாயிருந்ததில் அவை ஃபேக் ஐடிகள் எனப் புரிந்துபோனது. அப்படியிருக்க, விவேகானந்தரோடு எனக்கென்ன பிரச்சினை? எல்லாம் சிஷ்யனின் கைங்கர்யம். ஒரே மணித்தியாலத்தில் எனக்கு எதிரியாக்கிவிட்டான். விவேகானந்தரின் போதனைகள் குறித்து அச்சமாயிருங்கள் என மாலை மூன்று மணிக்கு யாரேனும் சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்கமாட்டேன். மூன்று பத்துக்கு சிஷ்யனைச் சந்தித்திருந்தேன்.

அழைப்புமணியை அழுத்தியதும் கதவைத் திறந்தவன், 'எப்பிடி இடத்தை டக்கென்று கண்டுபிடிச்சிட்டியோ?' என்றான்.
'நம்பர்தான் தெளிவா இருக்கே?'

கண்டுகொள்ளாமல் 'இதைத்தான் மச்சான் விவேகானந்தர்..' எனச் சிறுசிரிப்புடன் அவன் ஆரம்பித்தபோது நான் அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அடுத்த அரைமணி நேரத்தில் எட்டுத் தடவைகள், 'மச்சான் விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார் எண்டா' என்றபோது கொஞ்சம் அசாதாரணமாயிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து நண்பனை இப்படிப் பார்க்க கொஞ்சம் அதிர்ச்சியாயிருந்தது. என்னவாகியிருக்கும்? கடைசியாக, ரெண்டு வருஷத்துக்கு முதல் சந்தித்தபோது சரியாக இருந்தான். அதைவிட, விவேகானந்தருக்கு இப்பிடி ஒரு சிஷ்யனா? அந்தக் காளியே கனவில் வந்து சொல்லியிருந்தாலும் கூட அவரே நம்பியிருப்பாரா என்கிற சந்தேகம் வந்தது.

விவேகானந்தர் பெயரை உச்சரிக்கும்போது அவன்முகத்தில் ஒரு மந்தகாசம். ஆழ்மனத் தேடலில் மெய்ப்பொருள் கண்டுணர்ந்தவன்போல, உள்ளிருந்து ஞான ஒளியை அப்படியே வெளியே பரவ விடுவதுபோல பாவித்துக்கொண்ட மந்தகாசம். ஒரு பக்குவப்பட்டவன் போன்ற பாவனையுடன் அடிக்கடி கண்களை சற்று மேல் நோக்கி சூனியத்தை வெறிப்பதுபோல ஞானிகளுக்கு உரித்தான பார்வை வேறு பார்த்தான்.அப்போதுதான் கவனித்தேன். மேசையில் விவேகானந்தர் பற்றிய புத்தகம். புரிந்தது. அதுவரை அவனுக்கு வாசிப்புப் பழக்கம் இருந்ததாக தெரியவில்லை.  வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் என இரண்டுவகை மனிதர்களிடமும் பிரச்சினையில்லை. ஆனால் வாசிப்புப் பழக்கம் அறவே இல்லாதவர்கள் வாழ்நாளில் ஒரே ஒரு புத்தகத்தைப் படித்துத் தொலைத்துவிட்டால் என்ன ஆகும்? கொஞ்ச நாளைக்கு அது பற்றியே பேசிப்பேசி ஒரு வழி பண்ணிவிடுவார்கள் இல்லையா? விவேகானந்தருடையதோ அல்லது என்னுடையதோ கெட்டகாலம். அவன் கையில் புத்தகமாகச் சிக்கித் தொலைத்துவிட்டார்!

சரியாக நான் பயந்தபடியே நடந்தது. 'விவேகானந்தரைப் பற்றி படிச்சிருக்கிறியா?' என்றான் இல்லையென்ற பதிலை எதிர்பார்த்து. 'வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை இழந்துவிடடாய் நீ' தோரணை இப்போது மந்தகாசத்தில் தெரிந்தது. ஆகவே இதற்கான பதிலை நான் ஒருவரியில் சொல்வது அவ்வளவு சரியாயிருக்காது. 'எனக்கு ஆர்வமில்லை. ஆனா தேவையான அளவுக்குத் தெரிந்து வச்சிருக்கிறேன். அவர் நல்லவர், நாலும் தெரிஞ்சவர், நிறைய தத்துவங்கள் சொல்லியிருக்கார், சிக்காகோல சகோதர, சகோதரிகளேன்னு பேச ஆரம்பிச்சதால எல்லாரோட மனசையும் டச் பண்ணினதால பயங்கர கரகோஷமாம், நிறையப்பேர் விசில் கூட அடிச்சாங்களாம்.. அதுபோக கம்மார்க்கோ சிக்காக்கோ என்கிற சுலோகத்தையும் அவர்தான் முதலில் சொன்னதாக சொல்கிறார்கள்' என்றேன்.

அவன் கண்டுகொள்ளாமல், அறியாமையில் உழலும் மூடனுக்கு அருள்பாலிக்கும் ஞானகுருவின் பாவனையுடன் புன்னகை செய்து, 'இந்தப் புத்தகத்தை வாசிச்சுப்பார்' என்றான். நான் அவசரமாக 'மச்சான் வொஷ் ரூம் எங்க?' என்றேன்.

குளியலறைக்கு வழிகாட்டிய காட்டிய சிஷ்யன், "நான் இங்க நிறைய நேரம் நிக்கிறதில்ல மோசமான வைபரேஷன் இருக்கு"  - மேலதிகமாக உதவிக் குறிப்பொன்றை வழங்கினான். குழப்பமாக இருந்தது. இந்தக்குறிப்பு எவ்வகையில் எனக்கு உதவக்கூடும்? நானும் அதிக நேரம் அங்கே நிற்பதாகவோ, குளிப்பதாகவோ இல்லை. நிச்சயமாக அங்கே தூங்கும் எண்ணம் கிடையாது. அதிகபட்சம் இரண்டு நிமிடம். வைபரேஷன் குழப்பியது. பக்கத்தில் ரயில்பாதை இருப்பதால் வைபரேஷன் இருப்பது நியாயம்தான். ஆனால், அது குளியலறைக்குள் மட்டும் எப்பிடி? ஒருவேளை அமானுஷ்யமாக ஏதாவது?

வந்ததும் கேட்டேன், 'என்ன மச்சான் அது வைபரேஷன்?'
'இல்லடா, இங்க ஏழெட்டுப் பேர் இருக்கிறாங்கள், வந்து போறவங்கள் வேற. எல்லாரும் என்னென்ன மாதிரி யோசினைல இருப்பாங்களெண்டு தெரியாதுதானே. அந்த வைபரேஷன் மோசமான சிந்தனையள கொண்டுவந்திடும், அதான் நான் அங்க மினக்கெடுறேல்ல' என்றான். ஏதோ ஆன்மிக விஷயம் என்கிற அளவில் புரிந்தது. விவேகானந்தர் பயம் இருந்ததால் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

இருவரும் வீதிக்கு இறங்கியபோது, 'மச்சான் ஒருக்கா நெட்கஃபே போகவேணும்' என்றான்.

நெட்கஃபே! - இந்த வார்த்தையைக் கேட்ட மறுகணமே ஒரு நடிகை குளித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை என் மனத்திரையில் தத்ரூபமாக ஒட்டிட முயன்று தோற்றதை ஒளிவு மறைவில்லாமல் இந்தச் சமூகத்துக்குக் கூறுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் விவேகானந்தரின் சீடனிடம் சொல்லமுடியுமா? என்னை ஒரு காமக்கொடூரனாக நினைத்துவிடக்கூடுமல்லவா? அமைதி காத்தேன்.

நெட்கஃபேயில், ஒரு கணணியைத்தேர்ந்து, முன் தரையை,இருக்கையை, கீபோர்ட்டை பரிசோதித்தான் சிஷ்யன். இருவரும் ஒரே கணனியில் அமர்ந்திருந்தோம். பரபரப்பாக இருந்தான் சிஷ்யன். எனக்கு அங்கே எந்த வேலையுமில்லை. ஜீமெயிலில் எப்போதாவது நண்பர்கள் பகிரும் உலகின் பத்து அதிசய புகைப்படம், இருபது பொன்மொழிகள் போன்றவை தவிர எதுவும் வருவதில்லை. சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அதிக கணனிகள் ஆட்களின்றிக் காத்திருந்தன. திடீரென எங்கள் முன் அவசரமாக ஒரு உருவம் தோன்றி, ஸ்தம்பித்து நின்றது. அது எங்கள் கணனியைக் குறிவைத்து வந்திருந்தது. முகம் கோண, மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பித் தளர்ந்து நடந்தது. அதான் இவ்வளவு மெஷின் இருக்கே.. என்னாச்சு இவனுக்கு? யோசித்துக்கொன்டே திரும்ப, இங்கே சிஷ்யனும் ஏறக்குறைய அதேபோன்ற முகபாவனையுடன் இருந்தான்.

"என்னடா?"
"முக்கியமான மெயில் ஒண்டு வந்திருக்கவேணும்...'ச்சே!"

என்ன மெயில் அது? ஒருவேளை விவேகானந்தர் ஆசிரமத்திலிருந்து ஏதாவது? கேட்கவில்லை. ஏமாற்றமும், இயலாமை கலந்த கோபத்தோடும் பரிதாபமான  முகபாவத்தோடு இருந்தான்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு சந்திக்க நேரம் குறித்து வைத்திருக்கிறார் உங்கள் காதலி. வெய்யிலில் மண்டை காய்ந்துகொண்டு நிற்கிறீர்கள். நேரமாகிறது. பொறுமையிழந்து நிற்கும்போது, இன்றைய சந்திப்பு ரத்து என்று காதலியிடமிருந்து குறுந்தகவல் வருகிறது. எப்படியிருக்கும்? இந்த அனுபவத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையா, விடுங்கள்! நானும் உணர்ந்ததில்லை. சும்மா ஒரு பேச்சுக்காகக் கேட்டேன். அப்படியொரு நிலையில் இப்போது சிஷ்யன் இருந்தான்.

"என்னடா என்ன மெயில்?"
"சும்மா.. ஃபிரண்ட் ஒருத்தன் அனுப்பிறேண்டு.."

"சும்மாவா, அதுக்கா இவ்ளோ ஃபீல் பண்ணுறே?"
இப்போது அவன்முகத்தில் ஒரு அசட்டுச்சிரிப்பு. ஒரு விதமாக நாணிக்கோணி, "இல்ல மச்சி... அது வந்து...த்"

"அடப்பாவி! இந்த விஷயம் மட்டும் விவேகானந்தருக்கு தெரிஞ்சா.."
"டேய் இதான் உனக்கு சொல்லேல்ல.. நீ பாத்தியா?"

"நான் பாக்கேல்ல.. ஆனா நீ எப்பிடிறா பாக்கலாம்? என்ன இருந்தாலும் விவேகானந்தற்ற சிஷ்யன் நீ...'ச்சே! ஏண்டா இவ்ளோ கேவலமா இருக்கீங்க... அதுசரி எவ்ளோ நேரம்?"

"மூண்டு நிமிஷமாம். ஃபிளாஷ் மெமரி எல்லாம் கொண்டு வந்தனான், வாங்கினதுக்கு இதத்தான் முதன்முதலா கொப்பி பண்ணலாமெண்டு.. " சமீபத்தில் கேள்விப்பட்டிருந்த அந்த வஸ்துவை முதன்முறையாகப் பார்த்தேன்.

"என்ன இருந்தாலும் எங்கட காலத்தில நடந்த ஒரு விஷயத்தை நாங்கள் மிஸ் பண்ணிட்டம் எண்டிருக்கக்கூடாது.. பிறகு ஒரு நேரத்தில.." எங்கள் முன்னோர் போல நாங்களும், நம் காலத்தின் முக்கியமான நிகழ்வை ஆவணப்படுத்தாமல், அசட்டையாக  இருந்துவிடக்கூடாது என்கிற கவலை, அக்கறையுடன் பேசினான்.

"விடு மச்சி யாராவது டவுன்லோட் பண்ணியிருப்பான். நெட் கனெக்சனே தேவைப்படாம நெட்கஃபேக்கு வர்ற கோஷ்டி ஒண்டிருக்கு. எனக்கென்னமோ இது முக்கியமான மெஷின்போல இருக்கு. ஒருத்தன் அழாக்குறையா திரும்பிப் போனான் பார். இதில இருக்குன்னு பட்சி சொல்லுது"

இப்போது நம்பிக்கை தொனிக்க என்னைப் பார்த்தவன் கட்டளை கொடுத்தான். இப்போது திரை முழுவதும் வீடியோ ஃபைல்கள் ஏழுதிரைகள் தாண்டி வியாபித்திருந்தன. "ஒப்பின் பண்ணி  பார்க்க ஒரு நாள் வேணுமே"
'ட்ரை பண்ணலாம், எதையும் ஒப்பன் பண்ண வேணாம்.. மெதுவா ஸ்க்ரோல் பண்ணு' என்றேன். இப்போது சிஷ்யன் என்னைப் பார்த்த பார்வை அவ்வளவு சரியில்லை.

நமக்கென்று ஒரு பாரம்பரியமிருக்கிறது. முன்னொரு காலத்தில், யாராவது சிடி வைத்திருந்தால், அதைக்  கையில்வாங்கி  சற்றே மேலே தூக்கி பார்த்துப் பரிசோதிக்கவேண்டும். அது படமோ, பாட்டோ எதுவாயிருந்தாலும் பதிந்திருப்பது நம் கண்களுக்கு அப்படியே தெரிவதுபோல பாவனையுடன் பார்க்கவேண்டும். அது ஒரு பண்பாடு. நீங்களும் ஒருமுறையேனும் அதைச் செய்திருக்கலாம். அந்த அசட்டுத்தனத்துக்குச் சற்றும் குறையாத கிறுக்குத்தனமாக எனது செயல் சிஷ்யனுக்குப்பட்டிருக்கலாம்.

'மச்சி இத ஒப்பன் பண்ணு'
என்னை ஒருமாதிரியாகப் பார்த்தவாறே, வேற வழியும் இல்லாமல் அந்த வீடியோ கிளிப்பை திறந்தான். ஆச்சரியத்தில் கூவினான், 'டேய் எப்பிடிறா?' இப்போது சிஷ்யன் என்னைப்பார்த்த பார்வை, விவேகானந்தர் அளவுக்கு இல்லையென்றாலும் என்னையும் ஒரு குருவாக ஏற்றுக்கொள்வான் போலிருந்தது.

"எல்லாம் ஓரு ஞான திருஷ்டிதான்!" வீடியோ நடிகையின் பெயரின் ஆங்கில முதல் மூன்று எழுத்துக்களில் பெயரிடப்பட்டிருந்ததுதான் காரணம் என்று சொல்வது இப்போது அவசியமா என்ன? அதி அவசியமானதொரு தகவலை மட்டும் சொன்னேன், 'இந்த அஞ்சும் ஃபைலு ம் அதான்போல'

மிகுந்த பிரமிப்புடன், 'டேய் அவன் ஒண்டுதாண்டா சொன்னான். நீ வந்து.... பார் ஐஞ்சு! நல்லவேளை நீ மட்டும் வரேல்லையெண்டா..' சிஷ்யன் கொடூரமான வில்லனிடமிருந்து காப்பாற்றப்பட்ட அபலைப் பெண் போலவே பேசினான். நான் எதுவும் பேசவில்லை. அவனைத்தாண்டி அலட்சியமாக வெளியே வெறித்தேன். அதேவேளையில், 'இதிலென்ன இருக்கு? நான் என் கடமையைத்தானே செய்தேன்' தோரணை தெரியுமாறும் பார்த்துக்கொண்டேன்.

வீடு செல்லும் வரையில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அறையில் சிஷ்யன், எதிர்கால சந்ததியினருக்காக அந்த ஆவணத்தை மிகவும் கர்ம சிரத்தையாகத் தனது கணனியில் சேமித்துக் கொண்டிருந்தான். நான் மேசையிலிருந்த விவேகானந்தரின் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். சிஷ்யன் கவனித்த மாதிரியுமிருந்தது. கவனிக்காத மாதிரியும் இருந்தது. பிறகு அவன் விவேகானந்தர் பற்றி பேசுவதில்லை.