Saturday, December 28, 2013

டக்கு எனப்படுவது யாதெனில்...


ங்கள் ப்ராஜெக்ட்காக சைட் விசிட் சென்றிருந்த சமயம். புத்தளையிலிருந்து மொனராகல போகும் வழியில் வீதியின் ஓரத்திலிருந்தே ஆரம்பித்தது ஓர் மலை. அதைக்காட்டி, சிங்கள அங்கிள் 'மலை வந்த கதை' பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

துட்டகெமுனுவுக்கும் (தமிழ் மன்னனான எல்லாளனை வென்றதால் சிங்களவர்களின் ஹீரோவாகக் கொள்ளப்படுகிறவன்) அவனுடைய தம்பிக்கும் இராஜ்ஜியம் தொடர்பாக சண்டை மூண்டிருந்ததாம். இரண்டுபேரும் பெரும் படையுடன் மோதிக் கொள்ளத் தயாராக இருந்தார்களாம். இவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பெரும் அழிவைத் தவிர்க்க வேண்டும். உடனே ஒரு பௌத்தத் துறவி தனது சக்தியால் இருவரும் இருந்த பகுதிகளுக்கு நடுவில் ஒரு மலையை உருவாக்கினாராம். அந்த மலைதான் இதுவாம்!

இதைக்கேட்டதும் உடனே என் பகுத்தறிவு விழித்துக் கொண்டது.
'இல்ல... பௌத்தத் துறவிகளெல்லாம் இந்த மாதிரி மாஜிக் வேலைகள் செய்வார்களா? சைவத் துறவியாக இருந்திருக்கலாம். இவனுங்க வழக்கம்போல மாத்தியிருப்பானுங்க!' நான்  ஆழ்ந்து சிந்திப்பதைப் பார்த்ததும் அங்கிள்  ஒரு முடிவுக்கு வந்திருப்பார் போல.

இந்தக் கதை நிச்சயமாக என் சிந்தனையில் அன்பு, மனிதநேயம் குறித்த நல்லதோர் மாற்றத்தை கொண்டுவந்திருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கலாம். கிட்டத்தட்ட புத்தருக்கு ஈக்குவலானது என்று நம்ப்பி ஒரு புன்னகை பூத்தவாறே கேட்டார், "என்ன யோசிக்கிறே?"

"ம்ம்ம்.. இந்த மலை இருக்கிறதால ரோட் சைட்ல எக்ஸ்கவேட் பண்ணி பைப் லேயிங் செய்ய வாய்ப்பில்லை. பாறைல ஸ்ட்ராப் அடிச்சுத்தான் கொண்டு வேணும். இதால நிறையப் பிரச்சினை. கஷ்டம்! எதிர்காலத்தை யோசிக்காம ஒரு மலையை அவசரப்பட்டு உருவாக்கிட்டார். அவர் தேவை என்ன? அந்த யுத்தத்தை நிறுத்தியிருக்க வேணும் அவ்வளவுதானே?"

"பேசாம அந்த துட்டகெமுனவையும் மற்ற கெமுனுவையும் போட்டுத் தள்ளியிருக்கலாம்ல?"


**********

பாடசாலையின் பழையமாணவர் சங்க வருடாந்த ஒன்றுகூடல்! பேசிக் கொண்டிருந்தோம். என் பின்னால் இருந்த இருக்கையில் ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார். திரும்பிப் பார்த்துவிட்டு 'இந்த அக்காவும் எங்க ஸ்கூல்லதான் படிச்சிருக்காங்க போல'. இடையில் பேசும் போது ரூபன் அண்ணன் "டீச்சர் உங்களுக்கே தெரியும்தானே" என்றார்.

'டீச்சரா?' மறுபடியும் திரும்பிப்பார்த்தேன். லேசாகச் சிரித்த மாதிரி இருந்தது. தெரிஞ்ச மாதிரியும் இருக்கு..ஆனா தெரியல.. பார்த்திருக்கிறேனே பெயர் ஞாபகப்படுத்த முயன்றேன். முடியலை. 'ஒகே இப்ப படிப்பிக்கிற டீச்சர்னா எனக்குத் தெரிய வாய்ப்பில்லை' நினைத்துக் கொண்டேன்.

பின்பு கேட்டேன், "டீச்சர் நீங்க எப்பலேருந்து படிப்பிக்கிறீங்க?"
"93 லருந்து எங்கட ஸ்கூல்தான்"
"நான் 96 ல வந்தேன். அப்பிடின்னா எனக்கு உங்களைத் தெரியுமா?" அறிவுபூர்வமாகக் கேட்க,
"உன்னை எனக்குத் தெரியுதுடா... அப்பிடியே இருக்கே நான் விக்கி டீச்சர்டா" தமிழ் டீச்சர்.
"அய்யய்யோ நீங்களா மிஸ்? அப்பவே யோசிச்சேன் எங்கயோ பாத்திருக்கேன்னு பேர் ஞாபகம் வரல்ல" அசடு வழிந்து சமாளித்தேன்.

இவ்வளவு வருஷத்துக்குப் பிறகு ஞாபகம் வைத்திருக்கும் அளவிற்கு அப்படி என்ன சம்பவம் நிகழ்ந்தது? என யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பாருங்கள் ஸ்கூல் லீவ் பண்ணி சரியா ஒரு வருஷம்கூட ஆகாத நேரம். ஒரு டீச்சர் என்னைக் கண்டதும் மிகுந்த உற்சாகமாகி ஏதோ கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்ட மகிழ்ச்சியுடன்,

"தம்பி உம்மட அண்ணா என்னட்டைப் படிச்சவரல்லோ?"
"அந்த அண்ணாவே.. நான்தான் மிஸ்!"

இந்த ஒன்றுகூடல் சம்பவத்தைப் பகிர்ந்ததும் நண்பன் கேட்டான், "அதெப்பிடி அவ்வளவு பேர் படிச்ச இடத்தில இத்தனை வருஷம் கழிச்சு உன்னை ஞாபகமிருக்கும்? "

"அதே டவுட்தான் மச்சி எனக்கும்" பிறகு யோசிக்கும்போது தோன்றியது இரண்டு சாத்தியங்கள்.

"முதலாவது, ஒரு ஸ்கூலில், அல்லது எங்கேயுமே 'ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு'கள்தான் பெரும்பான்மை. ஆக, இதில எந்தக் குமாரைப் பார்த்தாலுமே தெரிந்த குமாராகத் தோன்றலாம்"

"இரண்டாவது சாத்தியம்,  ஒரே இனத்தை, ஒரே வயதைச் சேர்ந்த இருபது குரங்குகளுக்குப் பெயரிட்டு, 'இதில் ராமுவைக் கண்டுபிடியுங்க பார்க்கலாம்' என்று யாரவது கூறினால் எங்களால் வித்தியாசப்படுத்த முடியாது. எல்லாமே ஒரே மாதிரித்தான் தெரியும்.அதே நேரம் எங்கேயோ காட்டில நாம் பார்க்கும் குரங்குகூட 'அட நம்ம ராமுல்ல இது?' என்று பார்த்தமாதிரியே தோணும்"

"இப்ப நீ என்ன சொல்ல வர்றே?"

"இல்ல மச்சி டீச்சர் உன்னைப் பார்த்திருந்தாலும் தெரியும்னுதான் சொல்லியிருப்பாங்க"

**********

க்கு எனப்படுவது யாதெனில்...
நண்பர்களிடையே தொடர்புகளைப் பேணிக் கொள்வதில் எங்களை யாருமே அடிச்சுக்க முடியாது. ஒரு மதிய நேரத்தில் நண்பன் தொலைபேசினான்.

"மச்சி எப்பிடிரா இருக்க?"
"மச்சி நீ எங்க இருக்க? வேலைலயாடா? இப்ப நீ பிசியா மச்சி?"

நான் மிக அக்கறையாகக் கேட்டதும், புரிந்து கொண்டு சிரித்தான்,
"ஒக்கே மச்சி நீ பிசியா இருக்கேன்னு தெரியுது.." இல்லாட்டி என்ன நண்பன்?

"நான் நைட் கோல் பண்றேண்டா!" என்றேன். 
"ஓக்கேடா!"

அவ்வளவுதான். அன்றிரவு பேசவில்லை. அதற்குப்பிறகு இடையிடையே 'இன்று எப்படியாவது பேசிவிட வேண்டும்' நினைத்துக் கொள்வேன். பிறகு வழமைபோல மறந்து விடுவேன்.

இரண்டு நாளைக்கு முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன். 
பேசும்போது மேற்கண்ட அந்தச் சம்பவத்தை நினைவூட்டினேன். அவனும் மறந்து போயிருந்தான். பிறகுதான் நினைவு வந்து அந்த அதிர்ச்சியான விஷயத்தைச் சொன்னான்.

சம்பவம் நடந்தது போன வருஷம் டிசெம்பர் மாதமாம்!

**********

ரியான நேரத்தில சரியான முடிவை எடுக்கிறதுதான் புத்திசாலித்தனம்!

வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். இலேசாக மழை தூறல் போட ஆரம்பித்தது. வீட்டுக்கு இன்னும் ரெண்டு நிமிஷ நடைதான். மழை பிடித்துக் கொண்டால் எப்போது விடும் என்று சொல்லமுடியாது. ஒதுங்கி நிற்கவேண்டாம் எனப் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தேன்.

எதிர்பாராமல் தூறல் சற்றுப் பலமானது. வேகத்தைக் கூட்ட, மழையும் இணைய ஓட்டமும் நடையுமாக வீட்டையடைந்தபோது, அரைநிமிடத்துக்கும் குறைவான அடைமழையில் தெப்பலாக நனைந்து விட்டேன்.

படியேறும்போது கவனித்தேன். சுத்தம்! மழை சுத்தமாக நின்றுவிட்டிருந்தது.

அதைவிட சோகம், வீட்டிலிருந்த ஆத்துமா ஒன்று "மழையே பெய்யல எப்பிடிடா நனைஞ்சே?" கையை வேறு பால்கனிக்கு வெளியே நீட்டி, அண்ணாந்து பார்த்தது.
"மழை பெய்யுதான்னு சினிமா ஹீரோயின் மாதிரி மேலே மட்டும்தான் பாப்பீங்களாடா? கீழ பாருங்கடா ரோட் நனைச்சிருக்கு"

நல்லார் ஒருவருக்காக மழை பெய்யுமாம். சமயத்தில், ரொம்ப நல்லவன் ஒருத்தன மட்டும் நனைக்கக்கூட பெய்யுமாம்!
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, December 11, 2013

தேடிச்சோறு சுட்டகதை - உட்கார்ந்து யோசிச்சது!

"தேடிச்சோறு நிதந்தின்று.."

வீழ்ந்து விடுவோமோ? என்று சிறு சந்தேகம் வரும்போதெல்லாம் சன்னமான குரலில் எனக்கு மட்டுமே கேட்கும் வகையில் சொல்லும்போது ஒரு உத்வேகம் வந்துவிடுகிறது. 'வீழ்வேனென்று நினைத்தாயோ?' இந்த வரிகளுக்கு மட்டும்  சந்தர்ப்பங்கள் தாராளமாக வாய்த்து விடுகின்றன. எதையாவது சாதிக்கத் திட்டம் இருக்கிறதோ இல்லையோ, முயற்சி செய்கிறோமா இல்லையோ என்பதெல்லாம் வேறு பிரச்சினை. சமயங்களில் துவண்டு போய்விடாமல் இருப்பதற்கேனும் கூடவே துணையிருக்கிறது!

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, என் அறையில் மேசைக்கு மேலாக சுவரில் அழகான கையெழுத்தில் எழுதி ஒட்டி வைத்திருந்தேன். அடிக்கடி பார்வையில் படவேண்டும் என இந்த ஏற்பாடு. ஆனால் பாருங்கள், படிக்கிற மேசைப்பக்கம் நாம் எந்தக்காலதில போயிருக்கிறோம்? அவ்வப்போது அகால வேளைகளிலெல்லாம் வெறியேற்றிக் கொள்வதாக நினைத்து கவிதையை முறைத்துப் பார்த்து இம்சை கொடுப்பது வழக்கம்.

கொழும்பு வந்தபின்னர், எந்தக் கடையில் கிடைக்கும் நல்ல சாப்பாடு என்று 'தேடிச் சோறு தின்றபோது' தோன்றியது அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லைடா தம்பி! இப்போது இணையத்தில், ஃபேஸ்புக்கிலும் சின்னஞ்சிறு கதைகள் பேசிக் கொண்டிருக்கிறேன்.எதையும் கிழித்துவிடவில்லை எனினும், நம்பிக்கையுடன் இதே கவிதை, என் கூடவே எப்போதும்!

பாரதி படப்பாடல்களில் 'நிற்பதுவே நடப்பதுவே' வெளியான காலத்திலேயே பிடித்துக் கொண்டது. சிலவருடங்களுக்கு முன்னர்தான் படம் பார்த்தேன். படத்தைத் மீண்டும் பலதடவை பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்போது மிகப்பிடித்துக் கொண்டது, 'எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ' பாடல்தான் - அதுவரை நான் கேட்டதேயில்லை! நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று,  எனக்கு மிகப்பிடித்த பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.


அதுபோலவே நல்லதோர் வீணை செய்தே' பாடலும்!

வாத்தியார் சுஜாதா என்ன செய்தார்? ஏன் செய்யவில்லை? என்ற கேள்விகளுக்கப்பால் அவர் செய்த மிக நல்லதும், அவசியமானதுமான  முயற்சிகளில் ஒன்று 'பாரதி' படம் உருவாவதற்குக் காரணமாயிருந்தது. படத்திற்கு அவரும் ஓர் தயாரிப்பாளர். நஷ்டமடைந்திருக்கலாம்!


லுவலகத்தில் வந்திருந்தபோதே வாழ்க்கையில் எதையாவது கிழித்துவிட வேண்டும் என்ற உத்வேகம் மனதில்! என் அறையில் அப்படியே சுற்றுமுற்றும் பார்த்ததில் காலண்டர் நவம்பர் மாதத்தைக் காட்டியது. யாரும் கவனிக்கவில்லை. அருகில் சென்று சற்று உயரத்தில் இருந்த கலண்டரை இருகைகளாலும் பிடித்து கிழிக்க, என்ன நடந்ததென்று தெரிவில்லை. நவம்பர் அப்படியே இருக்க, டிசெம்பர் கையோடு வந்திருந்தது. கரெக்டா அந்த நேரம் வந்த, அஃபீஸ் எய்ட் ஒருமாதிரிப் பார்த்துட்டுப் போறான். தொட்டதெல்லாம் துலங்கும்னு இதைத்தான் சொல்வார்கள் போலும்.


சுட்ட கதை!

DVD கடையில் தற்செயலாகப் பார்த்து, ஏதோ ஒரு நம்பிக்கையில் வாங்கினேன். ஏனோ படம் பிடித்திருந்தது. எந்த இடத்திலும் இரிட்டேட் பண்ணாமல் கதை நகர்ந்ததாலோ, நகைச்சுவை செய்கிறோம் என்று சாவடிக்காததாலோ, இல்லை நான் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்பதோ காரணமாயிருக்கலாம். என்வரையில், நகைச்சுவைக்காட்சி என்பது வாய்விட்டுச் சிரிக்க வைக்கவேண்டும் என்பதில்லை. மொக்கைக் காமெடிப் படம்தான்!ஒரு சோம்பேறித்தனமான ஊரின் போலீஸ் ஸ்டேசனில் கொன்ஸ்டபிளாக சேர்கிறார்கள் ஹீரோக்கள் இருவர். பெயர் ராம்கி, சங்கிலி! பக்கத்திலுள்ள ஆதிவாசிக் கிராமத்தின் தலைவர் 'ஒட்டகம்' (எம்.எஸ் பாஸ்கர்). அவர் மகளான 'சிலந்தி'யை இருவரும் ஒருதலையாக லவ்வுகிறார்கள். திடீரெனத் தலைவர் கொலையாக, துப்புத் துலக்கச் செல்கிறார்கள் இருவரும்.

படத்தின் காட்சிகளும் காமிக்ஸ் போலவே தோன்றியது. ஆங்காங்கே சின்ன சின்ன அடடே! சிபாரிசுக் கடிதத்தில் கைநாட்டு வைத்திருக்கும் கல்வித்துறை மந்திரி 'அறிவழகன்', தேநீர்க்கடைக்குப் பெயர் பரடைஸ் டீ ஸ்டால். ஆங்கிலத்தில் PARADESI TEA  STALL! போலவே போலீசார் முதல் குற்றவாளிகள் வரை விரும்பிப்படிக்கும் சாம்பசிவம் காமிக்ஸ் விளம்பரம் வேறு இடையிடையே வருகிறது. காமிக்ஸ் படித்தே குற்றம் செய்ய ஐடியாவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஐடியாவும் பெற்றுக் கொள்கிறார்கள் சாம்பசிவம் காமிக்ஸ் ரசிகர்கள் எனத்தெரிந்ததும் நட்பாகிறார்கள் ராம்கியும் சங்கிலியும்! போலீஸ் அதிகாரி நாசர் புதிதாகச் சேரும் சங்கிலியைப் பார்த்து,"மூக்கைப் பார்த்தா பய நம்ம ஜாதி மாதிரியிருக்கே!" சங்கிலியின் பிரச்சினைக்கான காரணத்தை ஊர்மக்கள் டீ.வி கருத்துக் கணிப்புப் போல பேசுவது, ஒருவர் டிஸ்கவரி சானல் ஸ்டைல் தமிழில் பிளந்துகட்டுவது புன்னகைக்க வைக்கிறது. சிலந்தி ஓர் இசைக்கருவியைத் தனிமையில் அமர்ந்து இசைக்கும் ஒரு காட்சி அட்டகாசம். அந்தக்காட்சி ஏதோ ஹொலிவூட் படம் பார்ப்பது போல இருந்தது.

படத்தின் நாயகி சிலந்தி ஏனோ எனக்கு ரஜினி மகள் சௌந்தர்யாவை ஞாபகப்படுத்தினார். அவளுக்காகவே இருவரும் உயிரைப் பணயம் வைத்து சாகசம் செய்கிறார்கள். கடைசியில் எந்த வேலையும் செய்யாத, எப்போதும் தின்றுகொண்டேயிருக்கும்  உருப்படாத இன்னொரு போலீசுக்கு செட்டாகிவிடுகிறாள் சிலந்தி. அந்தவகையில் சமகால யதார்த்தையும் படம் பேசுகிறது. படம் 1.40 மணி நேரம்தான். காமிக்ஸ் ரசிகர்களுக்குப் பிடிக்கலாம்.
Share This:   FacebookTwitterGoogle+

Friday, December 6, 2013

முதல் அனுபவம்!"ஸ்கூல் கட் அடிச்சு போர்ன் மூவி பாத்திருக்கிறாங்கள்!"

எதிர்பார்க்காத ஒரு குற்றச்சாட்டு ஆங்கில ஆசிரியையால் வைக்கப்பட்டிருந்தது. குழப்பமாக இருந்தது. நாளை பள்ளியில் இப்படியொரு சம்பவம் நிகழுமென யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஸ்கூல் கட் அடிச்சது உண்மை. நண்பன் வீட்டில் படம் பார்த்ததும் உண்மைதான்.

ஆனால் இந்த 'போர்ன்'என்ற வார்த்தையையே எங்களில் யாரும் கேட்டிருக்கவில்லை.என்னவென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம்.

"டேய் அது ப்ளூ பிலிமாம்டா!" ஒருத்தன் சொன்னான். அதிர்ச்சி!

"அய்யய்யோ" - வாய்விட்டு அலறினான் இன்னொருத்தன்.

வேறொன்றுமில்லை. பொதுவாக ஆங்கில ஆசிரியர்கள் அறிவுஜீவிகள் என்பது நம் பாடசாலைகளில் அதிபர்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் தொன்று தொட்டு நிலவிவரும் நம்பிக்கை.இந்த நிலையில் அவன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தானாம், 'இங்க்லீஷ் டீச்சருக்குத் தெரியாததா? ஒரு வேளை அருணாச்சலம் போர்ன் என்ற மூவி வகையைச் சார்ந்ததாக இருக்கலாம், ஆகவே விசாரணை வந்தால் உடனடியாகவே அப்ரூவராக மாறிவிடலாம்' - புதிதாக பீதி கிளப்பினான். அடப்பாவி! மொத்தமாகக் காரியத்தையே கெடுத்திருப்பான்.

பார்த்த படம் அப்போது புதிதாக வெளியாகியிருந்த 'அருணாச்சலம்'

பதின்ம வயது. ஆசிரியை சந்தேகப்பட்டாலும் தவறேதும் சொல்லமுடியாது. இயல்பானதுதான். நடந்திருக்க வாய்ப்புகளுண்டு. ஆனால் இதுதான் நடந்ததென்று அபாண்டமாகக் கூறியது ஏனென்று புரியவில்லை. அதுவும் தவிர அவர் மிக நல்லவர், எப்போதும் அன்பாகவே பழகுபவர், அமைதியான பெண்மணி. அவரிடமிருந்து அப்படியொரு குற்றச்சாட்டை நாங்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு மதம் சார்ந்த  பிரிவில் இருந்த அந்த ஆசிரியை அவர் வரையில், தவறு செய்த எங்களை மந்தையிலிருந்து வழிதவறிப்போன ஆடுகளாக நினைத்து மன்னித்துவிடாமல், பலி போட்டுவிடலாம் என முடிவெடுத்து விட்டிருந்தார். வேறு ஆசிரியர்கள் யாரும் அவர் சொன்னதைப் பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. என்னடா அப்பிடியா? என்று சாதாரணமாக வகுப்பாசிரியர் கேட்டதிலேயே ஆசிரியை மேல் கோபம். அதைவிடக் கடுமையான மன உளைச்சல்! ஏனெனில் நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. அப்போதைய லட்சியமான அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பம், வளங்கள் சரியாக அமையவில்லை.

இத்தனைக்கும் கணணி பள்ளியில் எங்களுக்கு அறிமுகமான அந்தக் காலகட்டத்திலேயே, எங்களில் குறூப்பிற்கு கணனி தொடர்பான நல்ல அறிவு இருந்தது. கணனியில் வழக்கம்போல பாட்டுக் கேட்பது, பெயின்டில் படம் வரைவது போன்ற முக்கியமான வேலைகளில் ஈடுபடும்போது கணணி ஸ்டக் ஆகிவிட்டால், பேந்தப் பேந்த முழித்து, ஆசிரியரை உதவி கேட்கும் மற்ற மாணவர்கள் போல அல்லாமல், அக்கம்பக்கம் பார்த்து நைசாக பவர் பட்டனை அமுக்கிவிட்டு 'எஸ்'ஆகிவிடும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருந்தோம். அப்படியிருந்தும் நம் லட்சியத்தை நிறைவேற்ற முடியாத சோகம் இருந்தது.

நான் வேறு அதி தீவிரமான மன உளைச்சலில் இருந்தேன். ஒற்றைச் சொற்தொடர் என்னை அவ்வளவு குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. அது 'வாய் மூலமான பாலுறவு!'  நாளிதழ்களில் மோனிகா - கிளிண்டன் விவகாரம் பரபரப்பாக பேசப்பட ஆரம்பித்த நாளிலிருந்து, அந்தக் குழப்பம். என்ன அது? அதுவரை சாதாரண வாசகனாக இருந்த நான்,தீவிர படிப்பாளியாக மாறியிருந்தேன். எவ்வளவு தேடியும் விடைகாண முடியவில்லை. நண்பர்களிடமெல்லாம் கேட்கவில்லை.'என் கவுரவம் என்னாவது?'

அப்போதெல்லாம் ஊடகத்துறை அவ்வளவு வளர்ச்சியடைந்திருக்கவில்லை. கமெராத்துறை, ஸ்கேண்டல் துறை எதுவுமே கேள்விப்பட்டதேயில்லை. ஏன் சன் டீ.வி. கூட இப்போது இருப்பது போல வளர்ச்சியடைந்திருக்கவில்லை. என்னமாதிரியான பத்திரிக்கை தர்மம் இது? எதையுமே தெளிவாகச் சொல்ல மாட்டார்களா? எனக்குள் இருந்த தீராத தேடல், ஊடக தர்மம் குறித்த கேள்விகளையும், அறச்சீற்றம், தார்மீகக் கோபம் போன்ற இன்னபிற உபாதைகளையும் ஏற்படுத்தியிருந்தது. அப்போதே ஒரு சமுதாய அக்கறை கொண்ட இணையப் போராளிக்கான அடையாளங்களை என்னிடம் கண்டுகொண்ட தருணம் அது.

ஆனால் ஒன்று, என்னதான் விவரமில்லாமல் இருந்தபோதிலும், அப்போதெல்லாம் கிளிண்டன் என்று பெயர் சொன்னவுடனேயே எனக்கும் கூட விவரமானவர்கள் போலவே மோனிக்காவின் வாய்தான் ஞாபகத்துக்கு வந்தது என்பதை இங்கே அவையடக்கத்துடன் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஏற்கனவே இருந்த அறச்சீற்றத்தை, மேலும் அதிகப்படுத்துவதுபோல அருணாச்சலம் விவகாரமும் அமைந்துவிட்டது.எங்களுக்கு பள்ளியில் ஏற்பட்ட இந்தக்களங்கத்தை பள்ளியிலேயே எப்படிப்போக்குவது? ஐயகோ இனி வரும் வரலாறு என்ன சொல்லும்? போன்ற கேள்விகள் என் சிந்தனையில். எங்கள் இமேஜ் என்னாவது? படம் பார்த்துப் பள்ளியில் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு, அவ்வளவு முட்டாள்களா நாங்கள்?

பள்ளிகள் தனியே வெறுமனே பாடப்புத்தகங்களை மட்டுமே கற்பிப்பனவல்ல. வாழ்வியலை அங்கே தான் கற்றுக்கொள்கிறோம் பின்னாளில் வாழ்க்கையில் எதிர்கொள்ளப்போகும் எல்லா பிரச்சனைகளுக்கும், அனுபவங்களுக்கும் ஒரு 'டிரையல்' பார்த்துக் கொள்ளும் காலம். உண்மையைச் சொன்னால் பள்ளியில் எல்லாவற்றையுமே கற்றுக் கொடுப்பதில்லை. நாங்களாகத்தான் தேடிக் கற்றுக் கொள்ளவேண்டும்.

மேற்கண்ட சம்பவம் சிலநாட்கள் மன உளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அதுகூட ஓர் அனுபவம்தான் இல்லையா? அது கொடுத்த பாடத்தைக் கற்றுக் கொண்டோம். முக்கியமாக 'இனிமேல் ஸ்கூல் கட் அடிச்சுப் படம் பார்ப்பதில்லை!' மனம் தோல்விகளாலும்,ஏமாற்றங்களாலும் துவண்டுவிடும் போதெல்லாம் வாழ்க்கை, அவற்றிலிருந்து மீளச்செய்யவும், புத்துயிர்க்கவும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் என்று சொல்வார்கள். அந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்கிறோமா என்பது முழுக்க எங்கள் திறமை சார்ந்தது.

சம்பவம் நிகழ்ந்து ஒருமாதத்தில் பள்ளியில் ஒரு பெரிய கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டதில்,கணினி அறை சிலநாட்கள் எங்கள் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.
Share This:   FacebookTwitterGoogle+

Followers

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |