Showing posts with label கதை?. Show all posts
Showing posts with label கதை?. Show all posts

Friday, December 6, 2013

முதல் அனுபவம்!



"ஸ்கூல் கட் அடிச்சு போர்ன் மூவி பாத்திருக்கிறாங்கள்!"

எதிர்பார்க்காத ஒரு குற்றச்சாட்டு ஆங்கில ஆசிரியையால் வைக்கப்பட்டிருந்தது. குழப்பமாக இருந்தது. நாளை பள்ளியில் இப்படியொரு சம்பவம் நிகழுமென யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. ஸ்கூல் கட் அடிச்சது உண்மை. நண்பன் வீட்டில் படம் பார்த்ததும் உண்மைதான்.

ஆனால் இந்த 'போர்ன்'என்ற வார்த்தையையே எங்களில் யாரும் கேட்டிருக்கவில்லை.என்னவென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம்.

"டேய் அது ப்ளூ பிலிமாம்டா!" ஒருத்தன் சொன்னான். அதிர்ச்சி!

"அய்யய்யோ" - வாய்விட்டு அலறினான் இன்னொருத்தன்.

வேறொன்றுமில்லை. பொதுவாக ஆங்கில ஆசிரியர்கள் அறிவுஜீவிகள் என்பது நம் பாடசாலைகளில் அதிபர்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் தொன்று தொட்டு நிலவிவரும் நம்பிக்கை.இந்த நிலையில் அவன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தானாம், 'இங்க்லீஷ் டீச்சருக்குத் தெரியாததா? ஒரு வேளை அருணாச்சலம் போர்ன் என்ற மூவி வகையைச் சார்ந்ததாக இருக்கலாம், ஆகவே விசாரணை வந்தால் உடனடியாகவே அப்ரூவராக மாறிவிடலாம்' - புதிதாக பீதி கிளப்பினான். அடப்பாவி! மொத்தமாகக் காரியத்தையே கெடுத்திருப்பான்.

பார்த்த படம் அப்போது புதிதாக வெளியாகியிருந்த 'அருணாச்சலம்'

பதின்ம வயது. ஆசிரியை சந்தேகப்பட்டாலும் தவறேதும் சொல்லமுடியாது. இயல்பானதுதான். நடந்திருக்க வாய்ப்புகளுண்டு. ஆனால் இதுதான் நடந்ததென்று அபாண்டமாகக் கூறியது ஏனென்று புரியவில்லை. அதுவும் தவிர அவர் மிக நல்லவர், எப்போதும் அன்பாகவே பழகுபவர், அமைதியான பெண்மணி. அவரிடமிருந்து அப்படியொரு குற்றச்சாட்டை நாங்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு மதம் சார்ந்த  பிரிவில் இருந்த அந்த ஆசிரியை அவர் வரையில், தவறு செய்த எங்களை மந்தையிலிருந்து வழிதவறிப்போன ஆடுகளாக நினைத்து மன்னித்துவிடாமல், பலி போட்டுவிடலாம் என முடிவெடுத்து விட்டிருந்தார். வேறு ஆசிரியர்கள் யாரும் அவர் சொன்னதைப் பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. என்னடா அப்பிடியா? என்று சாதாரணமாக வகுப்பாசிரியர் கேட்டதிலேயே ஆசிரியை மேல் கோபம். அதைவிடக் கடுமையான மன உளைச்சல்! ஏனெனில் நாங்கள் அதுவரை பார்த்ததில்லை. அப்போதைய லட்சியமான அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பம், வளங்கள் சரியாக அமையவில்லை.

இத்தனைக்கும் கணணி பள்ளியில் எங்களுக்கு அறிமுகமான அந்தக் காலகட்டத்திலேயே, எங்களில் குறூப்பிற்கு கணனி தொடர்பான நல்ல அறிவு இருந்தது. கணனியில் வழக்கம்போல பாட்டுக் கேட்பது, பெயின்டில் படம் வரைவது போன்ற முக்கியமான வேலைகளில் ஈடுபடும்போது கணணி ஸ்டக் ஆகிவிட்டால், பேந்தப் பேந்த முழித்து, ஆசிரியரை உதவி கேட்கும் மற்ற மாணவர்கள் போல அல்லாமல், அக்கம்பக்கம் பார்த்து நைசாக பவர் பட்டனை அமுக்கிவிட்டு 'எஸ்'ஆகிவிடும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருந்தோம். அப்படியிருந்தும் நம் லட்சியத்தை நிறைவேற்ற முடியாத சோகம் இருந்தது.

நான் வேறு அதி தீவிரமான மன உளைச்சலில் இருந்தேன். ஒற்றைச் சொற்தொடர் என்னை அவ்வளவு குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. அது 'வாய் மூலமான பாலுறவு!'  நாளிதழ்களில் மோனிகா - கிளிண்டன் விவகாரம் பரபரப்பாக பேசப்பட ஆரம்பித்த நாளிலிருந்து, அந்தக் குழப்பம். என்ன அது? அதுவரை சாதாரண வாசகனாக இருந்த நான்,தீவிர படிப்பாளியாக மாறியிருந்தேன். எவ்வளவு தேடியும் விடைகாண முடியவில்லை. நண்பர்களிடமெல்லாம் கேட்கவில்லை.'என் கவுரவம் என்னாவது?'

அப்போதெல்லாம் ஊடகத்துறை அவ்வளவு வளர்ச்சியடைந்திருக்கவில்லை. கமெராத்துறை, ஸ்கேண்டல் துறை எதுவுமே கேள்விப்பட்டதேயில்லை. ஏன் சன் டீ.வி. கூட இப்போது இருப்பது போல வளர்ச்சியடைந்திருக்கவில்லை. என்னமாதிரியான பத்திரிக்கை தர்மம் இது? எதையுமே தெளிவாகச் சொல்ல மாட்டார்களா? எனக்குள் இருந்த தீராத தேடல், ஊடக தர்மம் குறித்த கேள்விகளையும், அறச்சீற்றம், தார்மீகக் கோபம் போன்ற இன்னபிற உபாதைகளையும் ஏற்படுத்தியிருந்தது. அப்போதே ஒரு சமுதாய அக்கறை கொண்ட இணையப் போராளிக்கான அடையாளங்களை என்னிடம் கண்டுகொண்ட தருணம் அது.

ஆனால் ஒன்று, என்னதான் விவரமில்லாமல் இருந்தபோதிலும், அப்போதெல்லாம் கிளிண்டன் என்று பெயர் சொன்னவுடனேயே எனக்கும் கூட விவரமானவர்கள் போலவே மோனிக்காவின் வாய்தான் ஞாபகத்துக்கு வந்தது என்பதை இங்கே அவையடக்கத்துடன் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஏற்கனவே இருந்த அறச்சீற்றத்தை, மேலும் அதிகப்படுத்துவதுபோல அருணாச்சலம் விவகாரமும் அமைந்துவிட்டது.எங்களுக்கு பள்ளியில் ஏற்பட்ட இந்தக்களங்கத்தை பள்ளியிலேயே எப்படிப்போக்குவது? ஐயகோ இனி வரும் வரலாறு என்ன சொல்லும்? போன்ற கேள்விகள் என் சிந்தனையில். எங்கள் இமேஜ் என்னாவது? படம் பார்த்துப் பள்ளியில் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு, அவ்வளவு முட்டாள்களா நாங்கள்?

பள்ளிகள் தனியே வெறுமனே பாடப்புத்தகங்களை மட்டுமே கற்பிப்பனவல்ல. வாழ்வியலை அங்கே தான் கற்றுக்கொள்கிறோம் பின்னாளில் வாழ்க்கையில் எதிர்கொள்ளப்போகும் எல்லா பிரச்சனைகளுக்கும், அனுபவங்களுக்கும் ஒரு 'டிரையல்' பார்த்துக் கொள்ளும் காலம். உண்மையைச் சொன்னால் பள்ளியில் எல்லாவற்றையுமே கற்றுக் கொடுப்பதில்லை. நாங்களாகத்தான் தேடிக் கற்றுக் கொள்ளவேண்டும்.

மேற்கண்ட சம்பவம் சிலநாட்கள் மன உளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அதுகூட ஓர் அனுபவம்தான் இல்லையா? அது கொடுத்த பாடத்தைக் கற்றுக் கொண்டோம். முக்கியமாக 'இனிமேல் ஸ்கூல் கட் அடிச்சுப் படம் பார்ப்பதில்லை!' மனம் தோல்விகளாலும்,ஏமாற்றங்களாலும் துவண்டுவிடும் போதெல்லாம் வாழ்க்கை, அவற்றிலிருந்து மீளச்செய்யவும், புத்துயிர்க்கவும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் என்று சொல்வார்கள். அந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்கிறோமா என்பது முழுக்க எங்கள் திறமை சார்ந்தது.

சம்பவம் நிகழ்ந்து ஒருமாதத்தில் பள்ளியில் ஒரு பெரிய கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டதில்,கணினி அறை சிலநாட்கள் எங்கள் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.

Wednesday, January 5, 2011

காவலன்?

சத்தம் கேட்டு விழித்துக் கொண்டான் அலெக்ஸ்.

ஏதோ பிரச்சினை பக்கத்தில். வாய்த்தகறாரில் இருந்தது. இனி பேச்சு முற்றி, ரத்தக் காயம் பார்க்காமல் ஓய மாட்டார்கள்!

ஏதோ ஏரியா சண்டை. அலெக்ஸ் அவை எவற்றிலும் பங்கு கொள்வதில்லை. 'எதற்காக வீண் சண்டை? எதுவுமே இங்கு நிரந்தரமில்லை. வர வர சாமியார் மாதிரி ஆகிறோமா? அப்போ சாமியாரெல்லாம்?'

தூக்கம் கலைந்துவிட்டது. சரியான குளிர். நீண்ட கொட்டாவியுடன் உடம்பை இறுக்கி சோம்பல் முறித்து... வெளியே வர...


எதிரிலுள்ள டீக்கடை வாசலில் வழக்கம்போல 'பெருசு' உட்கார்ந்து பழைய பேப்பரை பிரிச்சு மேஞ்சிட்டிருந்தது. 'அப்பிடி என்னத்தத் தான் ஒவ்வொருநாளும்...?'

'முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு! வாழ்கையை நிறைவாய் வாழ்ந்து முடித்த திருப்தியோ? சிரிப்புன்னா சும்மா சிரிப்பில்லை. கடைவாய்ப்பல் தெரியிற அளவு!'

மெதுவாக நடந்தான்.

எதற்கோ(?!) அவசரமா போய்க்கொண்டிருந்தான் அம்பு (அப்படித்தான் சொல்வார்கள்) எப்போதுமே ஒரு அவசரம். அவனைப் பார்க்கும்போதெல்லாம் அலெக்ஸ்சுக்கு ' நாய்க்கு வேலையுமில்லை, நிக்க நேரமுமில்லை' தான் ஞாபகத்துக்கு வரும்!

'நேற்று 'ஒற்றைக்கண்ண'னைப் பிடித்துவிட்டார்களாம். நாளைக்கு எங்களுக்கும் இதேநிலை வரலாம் என்பதால் அதிர்ச்சியாக இருந்தது'.

அனாலும் மனதின் ஒரு மூலையில் ஒரு சின்ன சந்தோஷமும்...அவன் பெரிய ரௌடி அலெக்ஸ்சுடன் ஒரு முறுகல் நிலை வேறு....காரணம்...அவள்!

அவள் நினைப்பே ஒரு தென்றலாய்...இதுவரை அலெக்ஸ் யாரையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை முதன்முதலாய்...அவள் பெயர் தெரியாது ஆனால் பெரிய இடம்!

கொஞ்சம் அலட்சியம்...கொஞ்சம் ஆச்சரியம் கலந்து, தலையைச் சிறிது சரித்து, அவள் பார்க்கும் பார்வை...அலெக்ஸ் கண்களை மூடித்திறந்து லேசாகத் தலையை உதறினான் ஒருமுறை!

 இதோ அவள் வீடு! பெரிய மாடிவீடு, பார்வையால் தேட...பல்கனியில் அவள்!

'ஓ! என்னைப் பார்க்கிறாள்'?! அலெக்ஸ் பரபரப்பானான். நிலை கொள்ளாமல்...

'இல்லையே என்னைத் தாண்டி..?' அனிச்சையாய்த் திரும்ப..


பார்வை நிலைகுத்த...உடல் விறைப்பாக..மூளைஎச்சரிக்க 'நாய்பிடிகாரன்கள்!' நாலுகால் பாய்ச்சலில் ஓடத் தொடங்கினான் அலெக்ஸ்!
  

Saturday, June 26, 2010

அறியாத வயசு

நாங்கள் மிகவும் தீவிரமாக இருந்தோம். எங்கள் மூவரில் யாருக்கு 'அந்த' யோசனை முதலில் தோன்றியது, யார் முதலில் வெளிப்படுத்தியது என்று எதுவும் தெரியவில்லை.


ஈனா நம்பிக்கை இல்லாமல், இப்பிடித்தான் ஒவ்வொரு தடவையும் 'பிளான்' பண்றதாகவும் பிறகு கைவிடுவதாகவும் என்று கூற, கடுப்பான ஞானா, 'எதையும் அவசரப்பட்டு செய்யக்கூடாது நீ எதையும் யோசிக்காம கதைக்கிறே'

ஒக்கே ஒக்கே இந்த முறை 'அத' முடிக்கிறோம் - இது நான்

ஒருமனதாக நாங்கள் தீர்மானித்துவிட்டோம்.

'எப்ப ?' - ஈனா

'நேற்று என்பது முடிந்து போனது, நாளை என்பது நிச்சயமற்றது, இன்று மட்டுமே நிஜம்' -நான் (அடிக்கடி அசந்தர்ப்பமாக இதைத்தான் கூறுவேன்)

என்னை முறைத்துக்கொண்டிருந்த ஞானா ' புதன் கிழமை?'

'சரி' - ஈனா
'எங்கே?'

'அங்க தானே வேற எங்க'
(எங்கள் பகுதியில் 'அந்த' விஷயத்துக்கு பிரபலமான இடம் )

'எட்டு மணி , ஓக்கேயா ?'
'ஒகே'

நாள் பார்த்து முகூர்த்தம் குறிக்கப்பட்டாயிற்று.

அந்த புதன்கிழமையும் வந்தது. காலையிலிருந்தே இனம் புரியாத ஒரு த்ரில், அல்லது கிளுகிளுப்பு அல்லது அடிவயிற்றில் லேசான ஒரு...ஒரு (அதான் இனம் புரியாத ன்னு சொல்லியாச்சே )


இதுவரை எங்களில் யாருக்கும் 'அந்த' அனுபவம் இல்லை. எவ்வளவு நாளைக்குத்தான் 'இப்படியே' இருப்பது?

மாலை ஏழு மணி. நாங்கள் மூவரும். 'இந்தப்பக்கத்தால போக வேணாம்...சொந்தகாரங்க...சுத்திபோகலாம்' - ஞானா


லேசாக தூறும் மழை. 'அதுவும் நல்லது தான்' - ஞானா. 'எதுக்கு'ன்னு யாரும் கேட்கவில்லை.


உள்ளே வந்து விட்டோம். எல்லோரும் எங்களை பார்ப்பதை போன்ற உணர்வு. ஒரு ரூமில் மூவரும்.

'யாரும்  வந்தால் தெரிஞ்சிடும். அவ்வளவுதான் ' - ஈனா கலவரப்படுத்தினான்.
ஞானா வெளியே போய் ஒரு மொட்டைத்தலை ஆசாமியிடம்  கதைத்தான்.


திரும்பி வந்து, 'வெயிட்' பண்ணட்டுமாம்.

' என்ன மாதிரி?' அனிச்சையாய் அவன் ஒரு விரலைக்காட்ட,
'மூணு பேருக்குமா?'

'..........'

'..........'


யாரும் எதுவும் பேசவில்லை. இது நிச்சயமாக நமது வாழ்வின் முக்கிய தருணம், இது நம்மை அடுத்தகட்டத்துக்கு..? கொண்டு செல்லும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை.


இப்பொழுதே எங்கள் முகத்தில் 'எதையோ'  சாதித்து விட்ட திருப்தி.
ஆழ்ந்த மௌனமும், மழைத்துளியின் ஓசையும் மட்டுமே.


'டொக்..., டொக்..'


ஒரு பியரும், மூன்று 'கிளாஸ்' களும் வைக்கப்பட்டன எமது மேசையில்.