Monday, January 31, 2011

சிநேகமுள்ள சிங்கம் - பாலகுமாரன்


சித்திரைப் பாண்டியன் - என்னை மிகவும் பாதித்த, கவர்ந்த ஒரு கதாபாத்திரம்!

எழுத்தாளர் பாலகுமாரனின் கதைகளை முதலில் எனது பதினைந்து வயதில் வாசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அப்போது சரியான புரிதல்கள் இல்லாததாலோ என்னவோ மற்றைய எழுத்தாளர்களைப் (ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா) போலவே ஒரு விறுவிறுப்பான சுவாரஸ்யத்துக்காக மட்டுமே வாசித்தேன். வேறேதும் விசேடமாகக் கவரவில்லை. (தலைவர் சுஜாதாவிற்கு மட்டும் எப்போதுமே தனியிடம்)

இடையில் சில வருடங்களாக மற்றையதெல்லாம் விட்டு தலைவனின் எழுத்தை மட்டுமே! இருபது வயதில் தற்செயலாக மீண்டும் பாலகுமாரனின் புத்தகமொன்றை வாசித்தபோது, ஏதோ ஒரு வித்தியாசமான தனித்தன்மை இருப்பதாகத் தோன்ற, தொடர்ந்து எனது பெருமளவு நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டார் பாலகுமாரன். கூடவே மனதையும்!

எங்கள் வீட்டிற்கு அருகாமையிலிருந்த நூலகத்தில் எனது தேடுதல் வேட்டை தொடங்கி சிறிது நாளிலேயே கைவிட நேர்ந்தது பெரிதாக எதுவும் சிக்காததால்! பிறகு சற்றுத்தொலைவிலிருந்த ஒரு தனியார் நூலகத்திற்கு எல்லையை(?!) விரிவுபடுத்த, அங்கு நல்ல தீனி கிடைத்தது. அப்போது கிடைத்த ஒரு புத்தகம்தான் சிநேகமுள்ள சிங்கம்! சித்திரைப் பாண்டியன் அதில் வரும் நாயகன் பெயர். 

ஒரு நல்ல படம் பார்த்தால் இரண்டு, மூன்று நாட்கள் அதன் பாதிப்பு இருக்கும், இருக்கவேண்டும் அது போலவே ஒரு நல்ல நாவலை வாசித்தாலும்! அனால் எழுத்தின் வீச்சு இன்னும் அதிகம் என்றே நான் நினைக்கிறேன். சினிமாவில் விஷூவலாகவே காட்டப்படுவதால் நாங்கள் பார்ப்பதோடு சரி. 

ஆனால் ஒரு நல்ல ஆழமான எழுத்துக்களால் சொல்லப்படும் கதை, காட்சிகள் தொடர்பான விவரிப்பு, காரெக்டர் டீட்டெயிலிங்  இவற்றை ஒருங்கிணைத்து எமது மனத்திரையில் காட்சிகள் விரிகின்றன அல்லது உருவாக்கிக் கொள்கிறோம். அதனால்தான் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது என நான் நினைக்கிறேன்!

தொடர்ந்து பல நாட்களாக அந்த காரெக்டர் மனதில். அநேகமான பாலகுமாரனின் கதைகளின் நாயகன் எல்லோருமே தனித்துவமான குணங்களையுடைய ஒருவனாகவே இருப்பது வழமை என்றாலும் சித்திரைப் பாண்டியன் மட்டும் தனியாக! வேறு எந்தக் கதைகளினதும் கதாபாத்திரங்களின் பெயர்கூட ஞாபகத்தில் இல்லை. அதுவும் வாழ்வில் தோற்ற ஒருவனின், அரசியல், துரோகங்களால் அலைக்கழிக்கப்படும் ஒருவனின் கதை!

அந்தப் பொழுகளில் எனது நண்பன் 'எபி' யுடன் உரையாடும்போது நான் பாலகுமாரன் பற்றிப் பேச, அவன் வாசித்திருக்கவில்லை. அவனுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் முதல் அறிமுகம் சும்மா 'நச்'சுன்னு இருக்க வேண்டாமா? நான் 'சிநேகமுள்ள சிங்கத்தையே வாசிக்கக் கொடுத்தேன். என்னைப்போன்ற ரசனையையுடைய அவனுக்கும் சித்திரைப் பாண்டியனே ஹீரோவானான். பிறகென்ன 'எபி'யும் பாலகுமாரன் தேடலில் இறங்க, இனிமையான வாசிப்பனுபவங்கள்!

ஒரு காரெக்டர் ரெண்டு வரியில் ஒரு வசனம் பேசினால், அதன் அர்த்தம், பேசுபவரின் உள்மனதில் உள்ள எண்ணங்கள், தர்க்கங்கள், எழுத்தாளரின் விளக்கங்கள், கேள்விகள், பதில்கள் என இரண்டு மூன்று பக்கங்களுக்கு ஆழமாக ஆராய்ந்து விவரித்துச் செல்வது பாலகுமாரனின் பாணி. அதனால் சில நண்பர்கள் போரடிப்பதாகவும் சொன்னதுண்டு. ஆனால் எனக்கு அது பிடித்திருந்தது. ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் ஏதோ வாழ்க்கையில் நாமும் ரொம்ப அனுபவப்பட்ட மாதிரி ஒரு எண்ணம் தோன்றும் அப்போதெல்லாம்.

முதன் முதலில் வேலை கிடைத்து அலுவலகம் சென்றபோது, பலதரப்பட்ட மனிதர்களோடு, என்னைவிட எல்லோரும் வயதுகூடியவர்களாக, வெவ்வேறு நாட்டவர்களாக இருந்த  சூழலில், நான் சரியாக எல்லோரையும் புரிந்து கொள்ள, நடந்துகொள்ள  ஏதோ ஒருவகையில் எனக்கு அவரின் எழுத்துக்கள் துணை நின்றதாக உணர்ந்தேன்!

வாழ்வின் சில பாதுகாப்பான பகுதிக்குள் மட்டுமே பழக்கப்பட்ட வயதில், வெளி மனிதர்கள், முரண்பாடுகளைச் சந்தித்திராத பருவத்தில் நல்ல புத்தகங்களே வழிகாட்டிகளாகவும், வாழ்வியலைச் சொல்லிக் கொடுப்பவையாகவும் இருக்கின்றன.

சினிமாவில் பல படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியிருந்தலும் யாராலும் மறக்கமுடியாத, எல்லோருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான வசனம்,
'நாலு பேருக்கு நல்லது செய்தா எதுவுமே தப்பில்ல!'

அவர் எடுத்துக் கொள்ளும் கதைக்களத்திற்கான விபரிப்பில் அதற்கான உழைப்பு தெரியும் .உதாரணமாக இரும்புக்குதிரைகள், அதே போல சினிமா உலகைப்பற்றிக்கூரும் ஒரு நாவல் - பெயர் ஞாபகமில்லை. சுஜாதாவின் கனவுத்தொழிற்சாலை ஒரு இண்டலெக்சுவல் ஹீரோவின் பார்வையில் சொல்லப்படும். இது உதவி இயக்குனர், ஏனைய தொழிலாளிகளின் பார்வையில் பயணிக்கும் கதை!

தனது சுய சரிதையான முன்கதைச்சுருக்கத்தில் தனது இளமைக்காலம், தவறுகள், கற்றுக்கொண்டவை பற்றி ஒளிவு மறைவின்றி கூறியிருப்பார். சுஜாதா பற்றி, தனக்கு சிறுகதை எழுத சொல்லித்தந்தவர் என்றும், பின்னாளில் சுஜாதாவிடமே குடிபோதையில் சவால் விட்டது பற்றியும் கூறியிருப்பார். முன்கதைச்சுருக்கம் படித்தபின்னர் அவரது எல்லாக்கதா நாயகர்களிலும், அவரது சாயலே தெரிவதை உணர முடிந்தது.

நான், எனது நண்பர்கள் சிலர் ஓஷோவைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலத்தில், யாராவது புதிதாக ஓஷோ படிப்பவரைச் சந்தித்தால் ஒரு தனி மகிழ்ச்சி! எங்களுக்கும், அவருக்கும். (அப்படியானவர்களைச் சந்திப்பது அருமையாக இருந்ததால்/இருப்பதால்) ஓஷோவின் வாசகன் என்றதும் அவர்களின் அடுத்த கேள்வி, 'அப்போ பாலகுமாரன் படித்திருப்பீர்களே?'. பின்பு நானே ஒருசிலரிடம் செக் பண்ணியதுண்டு. அதென்னவோ அப்படித்தான்! 

பழைய பாலகுமாரனைப் பார்த்து சில வருடங்களாகிறது. சமீபத்தில் ஓரிரு கட்டுரைகளப் பார்த்தபோது, ஒன்ற முடியவில்லை. ஒருகாலத்தில் வெறித்தனமாக வாசித்த எழுத்தாளன். வயதாகிவிட்டது எழுத்துக்களில் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது.எந்த வயதிலும் இளமையாகவே வாழ்வதென்பது, தலைவர் சுஜாதா போன்ற ஒருசிலருக்கே சாத்தியமாகிறதோ!       

Friday, January 28, 2011

ஜீயும் தொலைக்காட்சியும்!



உன்னை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு! தினமும் ஏதோ ஒரு சீரியலிலாவது, யாரோ ஒருவர் இன்னொருவரைப்பார்த்து  பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்! (நிஜத்தில் நடக்குமா? அப்படி வசனம் பேச்சுவழக்கில்தான் உள்ளதா?) 

நான் தொலைகாட்சி பார்ப்பது மிக அரிது! எப்போதாவது பார்த்தாலும் நகைச்சுவை, டிஸ்கவரி. டீ.வி.யைக் கடந்து செல்லும்போது கவனிப்பதுண்டு. பொழுது போகாமல் ஒருநாள் தொலைகாட்சியில் ஒரு ரவுண்டு வந்தபோது!

எல்லாரும் நல்லாயிருக்கனும்! - இதுவும் ஒரு டெம்ப்ளேட் காட்சி! கோவிலுக்குப் போனா நல்லவங்க (சீரியல்ல!) எல்லாம் இப்பிடித்தான் கும்பிடுறாங்க! (எந்தப் பிள்ளையாரோ, முருகனோ இப்படி ஒருவரைப் பார்த்திருப்பர்ர்களா? அவர்களுக்கே வெளிச்சம்!) 

அப்புறம் ஒரு சொல் வழக்கத்திலுள்ளது மூலியமா - அதாவது சேகர் மூலமா தெரிஞ்சது என்பதை சேகர் மூலியமா தெரிஞ்சது (இதை நான் வேறு எங்குமே கேட்டதில்லை, சீரியல் தமிழென்று ஒன்றுள்ளதோ?)

*******************************************************************************************************

ஜெயா டீ.வி.ல மம்மி வழக்கம்போல மைனாரிட்டி தி.மு.க.வையும், அய்யாவையும் திட்டிட்டிருந்தாங்க! (விடுங்க மம்மி இவிய்ங்க எப்பவுமே இப்பிடித்தான்!)

தூர்தர்ஷனில் யாரோ ஒரு ஹிந்தித் தாத்தா! பல்லில்லாததாலோ என்னவோ கஷ்டப் பட்டு கதைத்தார் (யாராவது எம்.பி.யாக இருக்ககுமோ!)

*******************************************************************************************************

ஏதோ சீரியல்  டைட்டிலில் எழில்வரதன் என்ற பெயர் கண்டு, மனம் பின்னோக்கி...

எழில்வரதன் - ஆனந்த விகடனில் 2005,6 களில் என்று நினைக்கிறேன் அட்டகாசமான சிறுகதைகளை எழுதி வந்தவர். அவரது கதைகளின் கரு அநேகமாக துன்பியல் சார்ந்ததாக இருந்தாலும், அதைச் சொல்லும்போது நக்கல், நகைச்சுவையில் பின்னியெடுத்துவிடுவார். 

இப்போது சீரியலில்? பொருளாதார ரீதியில் வளம் பெறமுடிந்தால் சரிதான். இருந்தாலும் சினிமா வசனகர்த்தா என்றால் நன்றாயிருக்கும்! (எல்லா சீரியல்களிலும் ஒரே காட்சிகள், வசனங்களைத்தானே பெயர்கள், ஆட்களை மாற்றி?)

*******************************************************************************************************

சில (அல்லது பல?) நாட்களுக்குமுன் சன் டீவியில்(?) இராமாயணம் ஒளிபரப்பானபோது, கவனித்தேன்..

அதில் வந்த ராவணனைப் பார்த்தபோது, சிறுவயதில் எங்கள் ஸ்கூல் வாசலில் மாங்காய் விற்றுக் கொண்டிருந்த 'அங்கிள்' போலவே இருந்தார்! ஒரு நிமிஷம் அவர்தான் நடிக்கிறாரோன்னு அசந்து போயிட்டேன்னா பார்த்துக்கொள்ளுங்க!

*******************************************************************************************************

ஊட்டச் சத்துக்கள் நிறைந்த, பெரியோர்களுக்கு ரொம்பநல்ல, குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஏதோ பதார்த்தத்தை ஒரு ஆன்டி செய்திட்டிருந்தாங்க! 
இப்படியான நிகழ்ச்சிகளுக்கு இல்லத்தரசிகள் ஆதரவு எப்பவுமே இருக்கும்போல! பலர் ஆர்வமா பார்ப்பதை கவனித்திருக்கிறேன். சிலர் நோட்ஸ் கூட எடுப்பாங்க.ஆனா எதுவும் செய்கிறார்களா தெரியவில்லை!

மூன்று வருடங்களுக்கு முன், நம்நாட்டு  டீ.வி ஒன்றில் சமையல் நிகழ்ச்சி செய்யும் ஆன்டி, பிரபல பேக்கரியொன்றில் பாண் (பிரெட்) வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்! பக்கத்தில் நின்ற நண்பன் சொன்னான் தான் அடிக்கடி பார்ப்பதாகவும், வீட்டில் அநேகமாக நாட்களில் இரவுச்சாப்பாடு பாண் போல என்றான்!        

நாங்கெல்லாம் ஒரு காலத்தில தூர்தர்ஷனில் வசந்த் அன்கோ ஓனர் சாப்பிடுவதை வாய் பார்த்தவய்ங்க..தெரியும்ல!

*******************************************************************************************************

விஜய் டீ.வி.யின் ஆன்மீக விளம்பர சேவைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. நித்திக்கும் ஒரு 'ஸ்லாட்' கொடுக்கலாமே!
பகலில் 'ஆன்மிகம்' இரவில் 'நடந்தது என்ன?'

*******************************************************************************************************

நம்நாட்டு தனியார் சானல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளினிகளை எப்படி செலக்ட் செய்யக்கூடாதுன்னு தெரியவேண்டுமா? அந்த சானலை பார்க்க! (எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்றே புரியவில்லை!) 

காலைல ஆரம்பிப்பாங்க பாருங்க, நண்பன் ஒருவன் சொன்னான் 'எங்க இருந்துடா இதுங்களைப் பிடிச்சிட்டு வந்தாங்க? காலைல முழிச்சா, நாள் வெளங்கிரும்! அவர்களின் பேச்சு,ஸ்டைல்(?),தமிழ் எல்லாம் பார்க்கும்போது கொழும்பில் ஒரு குறித்த பிரதேசத்திலிருந்தே 'பிடிச்சுக்கொண்டு' வந்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது!

இதில் இந்தியத் தொகுப்பாளினிகளை பார்த்து இவர்கள் அதேபோல் ட்ரை பண்ணுகையில் கானமயிலாட...'தான் ஞாபகத்துக்கு வருகிறது! வான்கோழி ஆடினாக்கூட போனாப் போகுதுன்னு விட்டுவிடலாம் (தோகையாவது இருக்கே!) வாத்துகள், காக்காய்கள் எல்லாம் ஆடினா? ஸ்ஸ்ஸ..ப்பா! 


*******************************************************************************************************

ஏதோ சானலில் ஒரு விளம்பரம் கவர்ந்தது,
டாக்டர் எக்ஸ் நிகழ்ச்சியில் பாலியல் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறார் Dr.காமராஜ்! (பார்ரா!)

********************************************************************************************************


ஏதோ ஒரு சீரியலில் (பார்க்கல காதில் கேட்டது) இளையராஜாவின் 'How to name it? வயலின் இசையை அப்பட்டமாகக் copy அடித்து பின்னணி இசை போட்டுத்தாக்குகிறார்! (மாற்றியிருந்தாலும் அப்படியே தெரிகிறது) அலறல்கள், கதறல்கள், கத்தல்கள் இடையே கிடைக்கும் 'கேப்'பில் வயலின் இழைகிறது!

********************************************************************************************************

மொத்தமாக ஆராய்ந்ததில் நமக்கு டிஸ்கவரிதான் சரி! நம்மளயே டிஸ்கவரி சானலில் வரும் ஒரு காரெக்டர்(?!) போலவே வீட்டில் அதிசயமாகப் பார்ப்பது போலத்தோன்றுவதால் எதுக்கு வம்பு? டீ.வியே வேணாம்!    

Wednesday, January 26, 2011

Christopher Nolan


2006 இல் ஒருநாள். தற்செயலாக ஒரு DVD கடையில் அந்த ஆண்டில் வெளியான  The Prestige  என்று ஒருபடம். டைரக்க்ஷன் கிறிஸ்டோபர் நோலன் என்றிருந்தது! ஏதோ ஒன்று பார்த்ததும் ஈர்க்க, (அப்போது நோலன் பற்றி எதுவும் தெரியாது!)  வாங்கினேன்.

நல்ல தரமான DVD. அருமையான ஒளிப்பதிவு, அழகான ஆர்ட் டைரக்சன்! ஆனா, படத்தில என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல! அப்போதிருந்த மனநிலையில் பொறுமையில்லாமல் அரைமணி நேரம் பார்த்துவிட்டு நிறுத்திவிட்டேன் (முடியல!)

சரியாக இரண்டு வருஷங்களின்பின் ஒரு ஆர்வக்கோளாறில படம் பார்க்க முடிவு செய்து, மேஜிக் கலைஞர்கள் பற்றிய கதை என்பதால் ஈடுபாட்டுடன் பார்த்தேன். ஒன்றும் புரியாமலே சும்மா படம் பார்க்க , கதையில் வரும் சில ட்விஸ்டுகள் அசரவைக்க (ச்சே! இவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டியேடா!)

இருந்தாலும் படம் சரியாக பிடிபடவில்லை. படம் என்பதை படத்தில் பேசப்படும் ஆங்கிலம் எனத் தவறாகப் புரிந்து கொண்டு, தமக்கு இங்லீஷ் நல்லா தெரியும் அதால படம் புரிந்ததுவிட்டது எனக் கூறும் பயபுள்ளைகள் நம்மிடையே பலர். அப்படியானவர்களுக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலைப் பரிந்துரைக்கிறேன்.
  

கதை - இரண்டு மேஜிக் கலைஞர்கள் தொழில் போட்டி மற்றும், தனிப்பட பழிவாங்கல் காரணமாக முட்டிக் கொள்ள... என்னவாகிறது? - என்பதுதான்! திரைக்கதையில்தான் இருக்கு உண்மையான மேஜிக்!

இது  ஒரு Nonlinear ஸ்டைலில் அமைந்திருக்கும். (இது நோலனின் ஸ்பெஷாலிட்டி)

இரண்டாம் முறை பார்க்கும்போதுதான் (நம்முடைய அறிவுக்கு?!)தெளிவாக(??) விளங்கியது. கூடவே சில குழப்பங்களும்! 
மூன்றாம் முறை பார்க்கையில் இன்னும் புதிய சில விஷயங்கள், கூடவே அதிகரித்த குழப்பங்களும்! 
நான்காம் முறை....வேணாம் இத்தோட நிறுத்திக்குவோம்!

ஏன்?, எப்படி?, எதற்காக?, யார்?, யார் நல்லவன்?, உண்மை என்ன? - இப்படி ஏராளமான கேள்விகள், குழப்பங்கள். மண்டை காய்ஞ்சிருச்சு! அந்தக் காலகட்டத்தில் நம்ம தலையில் ஏராளமான முடி இருந்திச்சு....அப்புறம் கணிசமாகக் குறைந்ததுபோல ஒரு உணர்வு!

படம் பார்த்த நமக்கே இவ்வளவு குடைச்சல்னா, திரைக்கதை அமைக்க எப்படி உட்கார்ந்து யோசிச்சிருக்கணும்? அண்ணன் கிறிஸ்டோபர் நோலன் வாழ்க!

Christopher Nolan
வயது 40. ஹாலிவுட் இயக்குனர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்

லண்டனில் பிறந்தவர் - அதனால்தான் லண்டனில் பிறந்த ஹாலிவுட் நடிகர் Christian Bale, இங்க்லீஷ் நடிகர் Michael Caine இருவரையும் அதிகமாகத் தான் படங்களில் பயன்படுத்துகிறார்? (எப்பூடி??...தமிழேண்டா!!! )

நோலனின் முதல் படம் 1998 இல் வெளியான Following. இவரே எழுதி, இயக்கிய சின்ன பட்ஜெட் படம் (6000 டொலர்ஸ், black & white ). லண்டனில் படமாக்கப்பட்ட இப்படத்தின் வெற்றி ஹாலிவுட் வாய்ப்பை ஏற்படுத்தியது!

ஆறுமாசம் ஹோட்டலில் ரூம் போட்டு கதை யோசிச்சு, படமெடுத்து ரிலீஸ் பண்ணினா எங்கே கதை? ன்னு தேட அதுக்கு தனியா ரூம் போட்டு யோசிக்கணும் - பல படங்களில் பார்த்த அனுபவம்.

கதையென்ற ஒன்றையே முடிவு பண்ணாமல் ஒரு பெரும்படையுடன் காமெராவைத் தூக்கிக்கொண்டு போய் மூன்று வருடங்களாகப் படமெடுக்கும் அறிவுஜீவி இயக்குனர்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

அனால் கதையை தேர்ந்தெடுத்த பின்னர் திரைக்கதைக்கான அசுர உழைப்பு நோலனின் படங்களில் (Memento, The Prestige) தெரியும்!

தமிழில் கஜினி வெளியானபோது நோலனின் இன்னொரு புகழ்பெற்ற படைப்பான Memento (2000) குறித்துப் பேசப்பட்டது!


Memento பார்த்தபோது அது இன்னொரு விதமான அனுபவம்!

- மனைவி/காதலியின் கொலைக்கான பழிவாங்கல்
- Short term memory loss,
- உடலில் பச்சை குத்துதல்,
- Polaroid Photography
என்ற 'கஜினி' யுடனான ஒற்றுமைகள் தவிர்த்து, திரைக்கதையமைப்பு முற்றிலும் புதிய அனுபவம்!

அதுவும் முதல் தடவை எதுவும் புரியவில்லை, பின்பு புரிந்தபின் அதிலும் விடை காண முடியாத கேள்விகள், குழப்பங்கள்!

மெமெண்டோ ஒரு Revers Chronological ஸ்டைலில் எடுக்கப்பட்ட Psychological Thriller படம்! அதுவரை இல்லை அதைத்தவிர அப்படி ஒரு படத்தைப் பார்த்ததில்லை நான்.

வழமையான த்ரில்லர்/பழிவாங்கல் படங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக இருக்க, மெமெண்டோவில் இதுக்கு முதல் என்ன நடந்திருக்கும்? என எதிர்பார்க்க வைப்பது புதிதாக!

ஆனால் கதை (அல்லது தீம்?) என்று பார்க்கும்போது மெமெண்டோ, கஜினி இரண்டுமே,
மனைவி/காதலியின் கொலைக்காக, Short term memory loss பிரச்சினையுடைய ஒருவனின் பழிவாங்கல் - என்பதுதானே!

'கஜினி' இந்திக்குப் போனபோது, படத்தின் கதை உரிமை(?!) உன்னோடதா? என்னோடதா? ன்னு சண்டை போட்டாங்க இயக்குனரும், தயாரிப்பாளரும். ஆனால் இது எதுவுமே பாவம் ஜொனதன் நோலனுக்கு தெரியாது! ஜொனதன் நோலன்? அவரோடதுதான் 'மெமெண்டோ' கதை!

Jonathan Nolan
எழுத்தாளர், திரைக்கதையாசிரியர்
கிறிஸ்டோபர் நோலனின் தம்பி.
Memento Mori என்ற இவரது சிறுகதையே மெமெண்டோ திரைப்படமானது!

இவரும், அண்ணனும் சேர்த்தே கிறிஸ்டோபர் நோலன் படங்களின் திரைக்கதையைப் பின்னுகிறார்கள்!

கிறிஸ்டோபர் நோலனின் மற்றைய படங்கள்,
Insomnia (2002), Batman Begins (2002), The Dark Night (2008), சென்ற வருடம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய Inception.

Inception நான் இன்னும் பார்க்கவில்லை (பார்த்தால் மட்டும் உனக்கு புரிஞ்சிடுமா?) எல்லாம் ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான் (இருக்கிற தலைமுடியைக் காப்பாற்றிக் கொள்ள வேணாமா?) அதுதான் நோலனின் master piece என்கிறார்கள்.

இயக்குனர் முருகதாஸ், கிறிஸ்டோபர் நோலனின் ரசிகர் போலும்! தற்போது இயக்கிவரும் 'ஏழாம் அறிவு' படம், The Prestige + Inception என்று சந்தேகிக்கப் படுகிறது. சூர்யா வேறு மேஜிக் கலைஞராக நடிக்கிறார் என்கிறார்கள்! 'கஜினி' போலவே  நன்றாயிருக்கும் என நினைக்கிறேன்!    

Sunday, January 23, 2011

இரண்டு கோப்பை மது!




இந்த நொடியினை

முழுமையாய் 

உணர்ந்து வாழ்வதென்பது 

என்னளவில் எப்போதுமே

சாத்தியமாவதில்லை!

எப்போதாவது

அந்தக்கணங்களில்

எனது இருப்பை உணர்ந்து 

கொள்ள முடிகிறது  

இரண்டுகோப்பை மதுவில்!



காலம்

இறந்தகால வலிகளின்

நினைவுகளோடும்

எதிர்கால ஏக்கங்களின்

கனவுகளோடும்


கவனிக்கப்படாமலே 

கடந்து செல்கிறது 

நிகழ்காலம்!




Friday, January 21, 2011

வெற்றிமாறனின் அசத்தலான 'ஆடுகளம்!'


வெற்றிமாறனின் கதைக்களம், கதை சொல்லும் உத்தி, டீட்டெயிலிங், கதா பாத்திரங்களின் குணவியல்புகளின் சித்தரிப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தவை.

பொல்லாதவன் படம் இறுதிக்காட்சியில் தொடங்கும். தனுஷ் 'எல்லாம் இந்த பைக்கால தான்' என்று சொல்லும்போதே கதை குறித்த எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது, யோசிக்கவைத்தது! ஒரு புதிய களத்தில், நிழல் உலகம் பற்றி, ஒரு உலக சினிமா போன்ற லாவகத்துடன் பயணிக்கும் கதையில் தேவையில்லாத காதல் காட்சிகள், பாடல்கள் மற்றும் ஒற்றை ஆளாக தனுஷ் பலரைப் போட்டுப் புரட்டி எடுக்கும்போதே அது தமிழ் சினிமாவானது!

பொல்லாதவன் ஒரு வெற்றிப்படமாக இருந்தாலும், அதற்குரிய மரியாதை கிடைக்கவில்லை, ஒரு மசாலாப் படமாகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. நான் பொல்லாதவன் நல்ல படம் என்று சொன்னபோது சில நண்பர்கள் பார்த்த பார்வை அப்படியே தோன்றியது.    

ஆடுகளம் 
பொல்லாதவன் போலவே இறுதிக்காட்சியில் ஆரம்பித்து பிளாஷ்பேக்கில் கதை சொல்லப்படுகிறது!

-எப்போதும் அடிக்கிறாய்ங்க, கொல்றாய்ங்க என்று சண்டைக்கு ரெடியாக பொருளுடன் அலைவது.
-போவோர் வருவோரிடம் 'லந்து' கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு காரெக்டர்
-நாலைந்து பேர் ஒரே நேரத்தில் பேசுதல் அல்லது இடைவெளி விடாமல் பேசுதல்
என்ற வழமையான மதுரை டெம்ப்ளேட் படங்களில் இருந்து வேறுபட்டு, புதிய களத்தில்.

சேவற்சண்டையை ஒரு பொழுபோக்காக கொள்ளாமல் தமது வாழ்க்கை, தன்மானம், கௌரவம் எல்லாவற்றையும் அதனூடாகவே பார்க்கும், வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. 

தனி ஒரு மனிதனின்(பேட்டைக்காரன்) தான் சீடன் தன்னை மிஞ்சிவிட்டான், தான் உதாசீனப் படுத்தப் படுகிறோம் என்ற எண்ணம், அவமான உணர்வின் வலி, தொடரும் சில நிகழ்வுகளால், வன்மமாக மாறி, பழிவாங்கலாக முடியும்போது அது சிலபேரின்(கருப்பு, பேட்டைக்காரன், மீனாள், ஐரீன், துரை, ஊளை) வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதைப் பேசுகிறது படம்.

பேட்டைக்காரன் - ஜெயபாலன்  
இவரின் பார்வை ஒன்றே எல்லா செய்திகளையும் அநாயாசமாகக் கூறிச்செல்கிறது, அரையிருட்டான காட்சிகளில் வன்மம், குரோதம் பளபளக்கும் கண்களில். இறுதிக்காட்சியில் ஆற்றாமை, குற்றவுணர்வு எல்லாமே கண்களில்.

கருப்பு - தனுஷ் 
புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு தனுஷின் திறமைக்கு தீனி போடும் ஒரு அருமையான வாய்ப்பு. எப்பொழுதுமே தனுஷ் ஒரு டைரக்டரின் ஆளுகைக்குட்பட்ட நடிகராகவே இருப்பது அவரின் பிளஸ். தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வெள்ளந்தியான மனதுடன், விசுவாசம், கொண்டாட்டம் என்று மனிதர் அசத்துகிறார்.

துரை - கிஷோர் 
எந்த இடத்திலும் மிகைப்படாத ஒரு நடிப்பில். ஒரு அண்ணன் போல கருப்புவிற்காக பேட்டைக்காரனிடம் பரிந்து பேசுவதில், அவனுக்கு வாழ்க்கையில் செட்டிலாக வாய்ப்பு கிடைப்பதாகத் தெரிந்ததும் பந்தயத்திற்கு ஒத்துக் கொள்ளச் செய்வது, கருப்பு ஓவராகப் போவது போல தெரிந்தால் அடக்கி வைப்பது என மிகக் கச்சிதமான நடிப்பு! பொல்லாதவன், வெண்ணிலா கபடிக்குழு படங்களிலும் அசத்தியிருக்கும் என்னைக் கவர்ந்த, தமிழ் சினிமாவினால் நன்றாகப் பயன்படுத்தப்படாத ஒரு நடிகர்.
          
கருப்புவின் தாய், மீனாள், அயூப், ஊளை, ஐரீனின் நண்பன், போலீஸ் அதிகாரி என்று எல்லோரும் நிறைவாக! முதல் பாதியில் பெரும்பான்மை பாத்திரங்களின் டீட்டெயிலிங்கிலேயே சென்று விடுவதால் நீளமாய் இருப்பதுபோல தோன்றினாலும் இந்த மாதிரியான கதைக்கு அது தவிர்க்க முடியாதது, அவசியமானதாகவே தோன்றுகிறது.

அசத்தலான சேவல் சண்டைக்காட்சிகள், ஒரு ஹீரோ - வில்லனின் சண்டைக்காட்சிகளுக்கு நிகராக, 'சீட்' நுனிக்கு ரசிகர்களை கொண்டுவருவது போல. படத்தில் அதைப்போல் மனிதர்களின் சண்டை கவரவில்லை என்பதற்கு திரையரங்கில் சேவற்சண்டையின்போது நிலவும் நிசப்தமே சான்று.

சில இடங்களில் குறிப்பாக இறுதிச் சண்டைக்காட்சியில் கருப்புவின் சேவல் தலையைக் குனிந்து கொண்டு பார்க்கும் காட்சியில், சில இரத்தம் தெறிக்கும் காட்சிகளில் மட்டுமே கிராபிக்ஸ் என்பதை உணர முடிகிறது!

ஒரு காட்சியில் சண்டையை நேரடியாகக் காட்டாமல், சுற்றி நிற்கும் மனிதர்களின் முகங்களில் தெரியும் உணர்வுகளின் மூலம் சண்டையின் போக்கு சொல்லப்படுதல் அருமையான உத்தி.

முதலில் இன்னொருவனின் தொல்லையிலிருந்து தப்ப கருப்புவைக் காதலிப்பதாகச் சொல்லும் ஐரீன் பின்பு நண்பர்களாக இருப்போமென்று கூறுவது வரை சரியே.பின்பு ஏன், எப்படி காதலியானாள் என்பது அழுத்தமாக கூறப்படவில்லை. அதுவும் கருப்பு மூன்று லட்சம் ஜெயித்த பின்பு காதலை ஏற்றுக்கொள்வது...'தப்பா தெரியுதே மாப்ள!'.

இந்தப்படத்திலும் (பொல்லாதவன் போலவே) காதல் தேவையில்லாத ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது! ஆனால் காதல் தொடர்பான காட்சிகள் சுவாரஸ்யமாகவே! குறிப்பாக 'யாத்தே யாத்தே' பாடலில் தனுஷின் ஆட்டம், நிலைகொள்ளாமல் நகரும் காமெரா என அதிலுள்ள உற்சாகமான கொண்டாட்டமான மனநிலை பார்த்துக் கொண்டிருக்கும் எங்களையும் தொற்றிக் கொள்கிறது!

ஜீ.வி.பிரகாஷின் பின்னணி இசை ஓக்கே! சில இடங்களில் குறிப்பாக சேவற்சண்டைக் காட்சிகளில் கவனிக்க வைக்கிறது! எங்கோ கேட்டமாதிரி இருக்கேன்னு யோசித்த போதே பார்த்தி சொன்னான் Pirates of the Caribbean, Gladiator படங்களில்....!

வழமையான தமிழ் சினிமாவில் வரும் சில எதிர்பார்ப்புகளைத் தூண்டும் காட்சிகள் வந்து, ஆனால் அப்படி நிகழாமல் செல்வதே புதுமையாக உள்ளது. பந்தயத்தில் தோற்று மொட்டையடிக்கும் போலீஸ் அதிகாரி, பேட்டைக்காரனின் உண்மையான முகத்தை அறியும் கருப்பு என்ன செய்கிறார்கள் என்பதே அது.

ஒரு மோசமான ஒளி, ஒலியமைப்புள்ள திரையரங்கில் பார்த்ததால் படசான்றிதழே இருட்டாக, பிறகு படம்வேறு இரவுக்காட்சிகள் அதிகமா, மொத்தத்தில தியேட்டர்லயே திருட்டு DVDல பார்த்த எபெக்ட். ஒரிஜினல் DVD வந்ததும் வாங்க வேண்டும்! 

மொத்தத்தில தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு அருமையான படைப்பு! நல்ல படம் பார்க்க விரும்பும் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்! 
  

Tuesday, January 18, 2011

Hummer கனவுகள்!


சமீபத்தில் மன்மதன் அம்பு பார்க்கும்போது, படத்தில் த்ரிஷா ஓட்டிச் செல்லும் ஹமர் கமலின் காரை இடித்து, இடைவேளை விட்டதும் நண்பன் பார்த்தியும் நானும் ஹமர் (Hummer) பற்றி பேச ஆரம்பித்து விட்டோம்!

எப்போதுமே எனக்கு ஹமர் மீது தனி ஈர்ப்பு! SUV க்களிலேயே (Sports Utility Vehicles) ஒரு தனித்தன்மை, முரட்டுத்தனமான வடிவமைப்பு, ஒரு கம்பீரம். மிக அரிதாகவே காணக்கிடைப்பதால், கண்டவுடன் தொற்றிக்கொள்ளும் ஒரு உற்சாகம்!

முதன் முதலாக நான் நேரில் பார்த்தது ஆறு வருடங்களுக்கு முன். அகலமான, வலப்பக்கம் வீதியிலும், இடப்பக்கம் பிளாட்போர்ம் இலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விதமே தனி அழகாக, ஒரு விளையாட்டுப் பொம்மை போல (Toy) பார்ப்பவர்களை நிச்சயம் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகோடு! கடந்து வந்தபின் திரும்பிப் பார்த்தேன். பின்பு அடிக்கடி அதே இடத்தில். (கிரிக்கெட் வீரர் அரவிந்த டீ சில்வாவுடையது..? அவருக்கு சொந்தமான உணவக வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது)


டோனி, ஹர்பஜன்சிங், உதயநிதி ஸ்டாலின், ஹரிஷ் ஜெயராஜ் ஆகியோர் ஹமர் வைத்திருக்கும் சில பிரபலங்கள். அதில் ஹர்பஜன்சிங்கின் ஹமர் கொள்வனவு தொடர்பாக, வரி ஏய்ப்பு சம்பந்தமான சர்ச்சை எழுப்பப்பட்டது! இது இலங்கையில் இருந்து வாங்கப்பட்டிருந்தது. 

டோனி, ஹர்பஜன்சிங் ஆகியோர் இலங்கையிலிருந்து வாங்கியிருக்கிறார்கள். இலங்கையிலுள்ள ஒரு பிரபல Left Hand Drive வாகனங்களை Right Hand Drive ஆக மாற்றும் (அதிலும் விஷேஷமாக Hummer) கம்பனியியிடமிருந்து.

அமெரிக்க கனரக வாகன உற்பத்தி நிறுவனமான AM General மூலம் 1992 லிருந்து பொது மக்கள் பாவனைக்காக ஹம்மர் வாகனங்களைத் தயாரித்தது. இந்த நிறுவனம் மிலிட்டரிக்காக தயாரித்த ஹம்வீ (Humvee) வாகனங்கள் 1984 லிருந்து பாவனையில். 
பொதுமக்கள் பாவனைக்கான தயாரிக்கப்படுபவை மிகக் குறைந்தளவே (ஒப்பீட்டளவில்) அநேகமான அமெரிக்காவின் இராணுவத்தின் கனரக வாகனங்கள், ட்ரக்குகள், அம்புலன்ஸ் எல்லாமே Humvee தயாரிப்புகள்.


1998 இல் பிரபல அமெரிக்க நிறுவனமான General Motors பொது மக்கள் பாவனைக்கான ஹமர் தயாரிப்புரிமையை வாங்கி Hummer H1, Hummer H3, Hummer H3 தயாரித்து வருகிறது.


Hummer H1- இது இராணுவ வாகனங்களை போன்றே வடிவமைக்கப்பட்டது.

Hummer H1

Hummer H2, H3 - இவை அழகான வடிவமைப்பைக் கொண்டவை.

                                                          Hummer H2

                                                         Hummer H3

என்னதான் H3 லேட்டஸ்ட் வெர்சன் ஆகவிருந்தாலும் H2 இன் ஸ்டைலே தனித்தன்மையாக, ஏனைய SUV க்களிலிருந்து வேறுப்பட்டு, கம்பீரமாக தெரிகிறது!  

நல்லாத்தான் இருக்கு...ஹ்ம்ம் (வேறென்ன? பெருமூச்சு தான்!)


சில Humvee வாகனங்கள்






Friday, January 14, 2011

'ரஜினி காந்த்'தசக்தி!


ஹா ஹா ஹா ஹா ஹா..!

சீரான இடைவெளியில், நிதானமாக, நிறுத்தி நிறுத்தி அழகாக...மிக அழகாக சிரித்தான்! எலோருக்கும் ஆச்சரியம், சிரிப்பாக இருந்தது  என்ன இது புதுசா? யாரைப்பார்த்து இப்படி?

இதில ஆச்சரியப்பட என்ன இருக்கு என்கிறீர்களா?
சிரித்தவனுக்கு மூன்று வயது!
அப்புறம் அவனையே கேட்க, சொன்னான் 'ரச்சினி!'

கொஞ்ச நாட்களாக பயபுள்ள தொடர்ந்து 'நினைத்தாலே இனிக்கும்' படத்தை DVD யில் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்திட்டிருந்தான்! அதிலும் குறிப்பாக 'நம்ம ஊரு சிங்காரி' பாடலைத்தான்.

ஒழுங்கா இரண்டு வார்த்தை சரியான உச்சரிப்பில் வராத, ஒரு குழந்தையின் மனதில் ஒரு பார்வையிலேயே பார்த்ததும் இடம்பிடித்துக் கொள்ளும் 'பவர்', 'காந்தசக்தி' ரஜினி!

எனக்கும் அப்படித்தான் சிறுவயதில் ரஜினியை மிகவும் பிடிக்கும்! எனக்கு மட்டுமல்ல அநேகமாக எல்லோருக்குமே அப்படித்தானென்று நினைக்கிறேன்.

உண்மையில் ரஜினி ஒரு ஆச்சரியம்தான்! சில விஷயங்களை ரஜினி செய்வது/செய்தால்  மட்டுமே ரசிக்க முடிகிறது! உதாரணம் எந்திரன்! எந்திரனுக்கான எதிர்மறை விமர்சனகள் எல்லாம் ஷங்கருக்கானதே! அதில் ரஜினியின் பங்களிப்பு கனகச்சிதமானது. வேறு யார் செய்தாலும் ரசித்திருக்காது!

வயது போன ஹீரோக்கள், பேத்திகளுடன் நடிப்பது குறித்த குற்றச்சாட்டுகளில் விலக்களிக்கக் கூடிய ஒருவர் ரஜினிதான். எந்திரன் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது..ஒரு விஞ்ஞானியை ஒரு கல்லூரி மாணவி காதலிக்கலாம், இயல்பானது! ஆனா மாணவிக்காக ஒரு ஆன்டியை (ஐஸ்) நடிக்க வச்சிட்டாங்களே! இளவயது ஹீரோயினாக தேர்ந்தெடுத்திருக்கலாமேன்னு! 

நம் தமிழர்களுக்கு ஒரு பழக்கம். சில சமயங்களில் எனக்கும் கூட (இது தமிழர்களுக்கு மட்டுமா என்று சரியாகத் தெரியாது..நான் ஒரு தமிழன் என்பதால் அப்படிச் சொல்கிறேன்)

எதை பற்றியுமே உடனடியாக ஒரு வரையறை அல்லது முடிவு தேவைப்படுகிறது! புதிதாக ஒருவருடன் பேசும்போது, நான்கைந்து வசனங்களிலேயே அவர் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். அவர் விருப்பங்கள், காரெக்டர் பற்றி அறிந்து கொள்வது நல்ல விஷயம். ஆனால், இதுதான் இவர் என்ற முடிவுக்கு வருவது தவறு! பிறகு அவர் சொல்வது எல்லாமே எமது முடிவுடனான ஒப்பீடாகவே பார்க்கப்படும்!

நாம் சில டெம்ப்ளேட்டுகளை வைத்துக் கொண்டிருப்போம். பார்ப்பவர்களை எல்லாம் இவர் எதற்குள் அடங்குவார்? புத்தி உடனே விழித்துக் கொள்ளும் உடனே முத்திரை குத்திவிட!

எதையாவது சொன்னால் உடனே ஒரு முடிவு பண்ணிடுவோம்!
நான் கமல் ரசிகன் என்றால் அப்போ இவனுக்கு ரஜினி பிடிக்காது! (ஏன் இருவரையும் பிடிக்கக் கூடாது?)
விஜய்யை கலாய்த்தால் - அஜித்தோட ரசிகன்! (இருவரையுமே பிடிக்காம இருக்கலாமே?)
ஒரு மதத்தில் ஒரு சிலர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் - அந்த மதத்துக்கு எதிரானவன், மதவாதி, குறித்த மதத்தினரை புண்படுத்திட்டான்!

சாதாரணமானவர்களுக்கே இந்தநிலை என்றால் சூப்பர் ஸ்டாருக்கு? ஒவ்வொரு முறையும் அவரை நோக்கி வீசப்படும் விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு, சமாளித்து வருவதற்குள் பார்த்துக் கொண்டிருக்கும் எங்களுக்கே தாங்கமுடியாது!
  
நடிப்பு என்பதை ஒரு தொழிலாகப் பார்க்காமல் ஒரு நடிகனை, சமுதாயத்தின் வழிகாட்டி, அறிவுரை வழங்குனர், கலாச்சாரச் சின்னம், கருத்துக் கருவூலம் என்றெல்லாம் கருதும் மனநிலை வேறு எந்த நாட்டிலாவது இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்களான எங்களுக்கே வாய்க்கப் பெற்ற அற்புதமான வரப்பிரசாதம்!

இந்த மாதிரியான ஒரு சூழலில் சூப்பர் ஸ்டாராக இருப்பது எவ்வளவு கொடுமை? ரஜினி நின்றால், இருந்தால், நடந்தால் எதற்குமே ஒரு அர்த்தம் கற்பிக்கப்படும் நிலையில் (தெரிந்தோ தெரியாமலோ இரண்டு விரலைச் சேர்த்து வைத்திருந்தால்..அதுவே பெரிய பரபரப்பாகி அதற்கு ஆய்வுக்கட்டுரைகள்) அவர் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு கொடுத்த விலை....அவரால் இஷ்டப்பட்டதை செய்ய, பேச, நினைத்த இடத்திற்குச் செல்ல, அதைவிடக் கொடுமை அவர் இஷ்டப்படாத இடத்திற்குச் செல்லாமல் விட முடிவதில்லை! (ஒரு வருஷத்தில எத்தனை பாராட்டு விழா? விரும்பியா சென்றிருப்பார்?)

பல சந்தர்ப்பங்களில் மிக மோசமாக அலைக்கழிக்கப்படும் ஒரு நல்ல மனிதர் ரஜினி!

எல்லோருக்கும் பிடிக்கிறதோ, இல்லையோ, விரும்பியோ, விரும்பாமலோ தமிழ் சினிமாவில் என்றும் ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டுமே! 

Wednesday, January 12, 2011

தொடர்கிறது..!



இப்போதும் என்

பேரூந்துப் பயணங்களில்

எதையோ நினைத்து - மனம்

சஞ்சலமடையச் செய்கிறது,

எப்போதாவது கேட்கும்.....

'டயர்' வெடிக்கும் சத்தம்!

   
ஒருகணம் துணுக்குற்று

உடனேயே சுதாரித்து

குழப்ப ரேகைகள்.... 

மறையா முகங்களில் 

தமக்குள் கூறிக்கொண்ட

சமாதானம் மென்முறுவலாக 

சக பயணிகள்!

Tuesday, January 11, 2011

Baran


ஒருவன் காதலுக்காக என்னென்ன செய்கிறான்? அதுவும் தான் காதல் கொண்ட பெண் தன்னை விரும்புகிறாளா இல்லையா என்றே தெரியாத நிலையில்? அனாலும் இதை ஒரு காதல் கதையென்று சொல்ல முடியாது. அதையும் தாண்டி அன்பு, மனிதநேயம், புலம் பெயர்ந்தவர்கள் வேற்று நாடுகளில் எதிர்கொள்ளும் சவால்கள் எனப் பல விஷயங்களைச் சொல்கிறது! 

லத்தீப் (Lateef) ஒரு கட்டுமானத் தளத்தில் வேலை செய்யும் விளையாட்டுத்தனமான டீன் ஏஜ் பையன். அவனது வேலை தொழிலாளர்களுக்கு உணவு ஏற்பாடு, தேநீர் தயாரிப்பது மொத்தத்தில் சமையலறைப் பொறுப்பு! ஒருநாள் அங்கு வேலை செய்யும் நஜாப் (Najaaf ) என்ற ஆப்கன் தொழிலாளி விபத்துக்குள்ளாகி ஒரு காலை இழக்க, அவருடைய மகன் ரஹ்மத் அங்கு வேலைக்கு வருகிறான்.


இளவயதினனான ரஹ்மத்தால் கட்டட கடினமான வேலையில் ஈடுபட முடியாமல் போக, லத்தீப்பின் பொறுப்பிலிருந்த சமையலறை வேலை ரஹ்மாத்துக்கும், கட்டட வேலை லத்தீப்புக்கும் கொடுக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடையும் லத்தீப், ரஹ்மத் கொடுக்கும் டீ, தயார் செய்யும் உணவு எதையும் அருந்துவதில்லை. எல்லோரும் ரஹ்மத்தைப் பாராட்ட மேலும் ஆத்திரமடையும் லத்தீப் சமையலறைக்குள் புகுந்து, பொருட்களைச் சிந்தி, எறிந்து அலங்கோலப்படுத்துகிறான்.

இதெல்லாம் தெரிந்தும் காட்டிக்கொடுக்காமல் ரஹ்மத் அமைதியாக தனது வேலையைத் தொடர்கிறான். இந்நிலையில் தற்செயலாக லத்தீப்புக்கு அதிர்ச்சிகரமான் ஒரு உண்மை தெரிய வருகிறது! அது...ரஹ்மத் ஒரு பெண்! அதன்பின் என்னவாகிறது?


ரஷ்ய, தலிபன் பிரச்சினை காரணமாக, ஆப்கானிஸ் தானிலிருந்து பலர் அகதிகளாக, ஈரானில். அவர்களுக்கு முகாம்களை விட்டு வெளியிடங்களில் தங்கவோ, வேலை செய்யவோ அனுமதியில்லை. வேலை செய்வதாயின் விசேட அனுமதி பெற வேண்டும். அது இலகுவானதல்ல, எனவே சட்ட விரோதமாக வேலை செய்ய, அதனை தங்களுக்கு சாதகமாக்கி குறைந்த ஊதியத்தில் வேலை வாங்குகிறார்கள் கட்டட ஒப்பந்தக்காரர்கள். இடையிடையே போலீசார் சோதனைக்கு வர, ஒழிந்து கொள்கிறார்கள் ஆப்கன் தொழிலாளிகள்.

ரஹ்மத் ஒரு பெண் என்று தெரிந்ததும் லத்தீப்பின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றம். மறுநாள் ஒழுங்காகத் தலைவாரி, நல்ல ஆடைகள் உடுத்தி இன்பண்ணி வர, சூபர்வைசர் கேட்பார், 'எதற்கு வேலைத்தளத்தில் பாப் பாடகர் போல நிற்கிறாய்?'


தன்னிடம் இறுதியாக உள்ள பணத்தை எடுத்துப் போய் நஜாப்பிற்கு ஊன்று கட்டை வாங்கி வந்து, அவர் வீட்டில் யாரோ பேசிக்கொண்டிருக்கும்போது 'கடவுள் உதவி செய்வார்' என்று கூற, தான் வந்தது யாருக்கும் தெரியாமலே, சத்தம் செய்யாமல் அங்கு வைத்துவிட்டு வெளியேறும் காட்சி.

அவளது பெயர் ரஹ்மத் என்றே அறிந்திருக்கும் அவன் தற்செயலாக ஒரு உரையாடலின் போதே தெரிந்து கொல்கிறான் அவள் பெயர் பாரன் (Baran).

அவள் கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல், தனது தங்கைக்கு உடல்நலக்குறைவு என்று அழுது, தான் உழைத்த பணம் முழுவதையும் பெற்றுக்கொண்டுவந்து கொடுக்கும் காட்சி.

பாரன் ஆப்கன் செல்லப்போகிறாள் என்று அவள் தந்தை கூறியதும், அதிர்ச்சியடைந்து, குரல் நடுங்க உரையாடும் காட்சி.

தனக்கு உதவி செய்யும் லத்தீப்பைப் பார்த்து ஓரே ஒரு தடவை, ஒரு சிறு கணம், மிக இலேசாகப் புன்னகைக்கிறாள் பாரன். உடனேயே பர்தாவால் முகத்தை மூடிக்கொண்டு விடும் ஒரு கவிதை போன்ற அழகான இறுதிக்காட்சி!


இன்னும் ஏராளம் உண்டு, குறைவான வசனங்கள், அமைதியான, பெரும்பாலும் மௌனமாக இருக்கும் பின்னணி இசை, ஏழைகளிடம் உள்ள மனிதாபிமானம், தன்மானம், முக்கியமாக சொந்த மண்ணை விட்டு வந்து வேற்றுநாட்டில் வாழும் வாழ்வின் அவலநிலை!

2001 ம் ஆண்டில் மஜீத் மஜிதியின் எழுத்து, இயக்கத்தில் உருவான இந்தப்படம் சிறந்த படத்துக்கான Grand Prix of the Americas Awards உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றது.

இயக்கம் - Majid Majidi
மொழி -   Persian

Friday, January 7, 2011

மன்மதன் அம்பு!


நாலு நாளைக்கு முன், பார்த்தி 'மன்மதன் அம்பு' பார்க்க அழைத்தான். நான் பல பதிவுகளை படித்திருந்ததால் மறுக்க, அவன் எனது புத்தாண்டு தீர்மானங்கள் பதிவைப்படித்து விட்டிருந்தான். இதையெல்லாம் என்ஜாய் பண்ணாட்டி, அப்புறம் எப்பிடி மாற்றம் வரும்னு செண்டிமெண்ட்டா பிளாக்மெயில் பண்ண நான், பார்த்தி, இன்னொரு நண்பன் கிளம்பிட்டோம்!

ஏண்டா இந்தத் தியேட்டர்? நான் கேட்க, எங்க ஏரியால இங்க மட்டும் தான் ஓடுது. (என்ன கொடுமை தலைவா?)
2.30 ஷோவுக்கு 2.25 க்கு சாவகாசமா போறமே 'சீட்' பிரச்சினையாய் இருக்குமோ? 
அடுத்த கவலையுடன் உள்ளே போக....அரங்கு நிறைந்த காலி இருக்கைகள்! 
படம் தொடங்கும்போது ஒரு தரம் திரும்பிப் பார்த்து, 'முப்பது பேர் இருப்பாங்கல்ல?'

பொதுவாக எனக்குப் பிடித்த படங்கள் பலவற்றை (கமல் படங்கள் உட்பட) நான் தியேட்டரில் பார்த்தது குறைவு (அதில் ஒரு சந்தோஷம் இருந்தாலும்). 
எல்லாமே DVD யில் தான். அதற்காக பல நாட்கள் காத்திருந்திருக்கிறேன். எனக்குத் தனிமையில், இரைச்சலில்லாமல் பார்ப்பதுதான் அதிகம் பிடிக்கும்!

நல்ல வேளை! தியேட்டர்ல எந்தக் கூச்சல் இரைச்சலும் இல்ல......ஆனா கொடுமைய பாருங்க! எல்லா இரைச்சலும் படத்துக்குள்ளதான்!

அதிகப்படியான இங்க்லீஷ் வசனங்கள், தெளிவில்லாத தமிழ் வசனங்கள் அப்டீன்னு பலபேர் சொன்னாங்க....ஆனா சில வசனங்கள் தமிழா, இங்க்லீஷான்னே புரியல!..ஒரு வேளை தியேட்டர் தான் அப்செட்டோ?

கதை - எவ்ளோ பெரிய கப்பல்! சூப்பர்! (நன்றி உதயநிதி!)
லைவ் சவுண்ட் - ஆமா, எதுக்கு சவுண்டை மட்டும் யதார்த்தாமா வச்சு?

நமக்கு வாய்த்திருக்கும் மாதவன் மிகுந்த திறமைசாலி ஆனால், நல்ல படங்கள்தான் வாய்ப்பதில்லை. கலக்கலான, சிம்பிளான நடிப்பு! 

சில இடங்களில் சாதாரண டிஜிட்டல் கமெராவில் எடுத்தது போல காட்சிகள், குறிப்பா த்ரிஷா-சங்கீதா. மேக்கப் போடலையா? போட்டால் சங்கீதா த்ரிஷாவைவிட அழகாக இருக்கக் கூடுமோ? என்ற ஆழ்ந்த சிந்தனை தோன்றியது (ரொம்ப முக்கியம்!)
ஆனாலும் ஒளிப்பதிவு பளிச்சிடும் இடங்கள் சங்கீதாவின் பரு முகத்தில்! த்ரிஷாவின் டாட்டூ....!

ஒரு நல்ல படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் கவனத்தை வேறெதிலும் திரும்ப விடாது அப்படியே ஈர்த்துக்......ரெண்டு சீட் தள்ளி ஒரு ஜோடி, கூட்டம் வராதுன்னு நம்ம்ம்பி... வந்திருப்பாங்களோ, நாம வந்து இருந்து தொலைச்சிட்டோம்!

ஒரு பாட்டுக்கு கமல் ஆடுவாரே ஒரு ஆட்டம்! செம்ம கலக்கல் தலைவா!
(முன்சீட்டில் ஒரு குழந்தை பயந்து போய் அழத் தொடங்கிவிட்டது!)
என்னா டான்ஸ்! எனக்குப் புல்லரிச்சுப் போச்சு! ( எனக்கு மட்டும்தானா? சுற்றுமுற்றும் பார்த்ததில் ஒருவர் தீவிரமாக சொறிந்து கொண்டிருந்தார்...ரைட்டு!)

படத்தில் வரும் இலங்கைத் தமிழர் தெனாலி கமலைப் போலவே வாயைப் பிளந்து பிளந்து, லூசுத்தனமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்! ஆமா, இலங்கைத் தமிழர் என்றால் அப்படியா? 

அமெரிக்கா,மத்திய கிழக்கு தவிர்ந்த உலக நாடுகளில் பெரும்பான்மையான தமிழ் சினிமா வியாபாரம், நட்சத்திரக் கலை நிகழ்ச்சிகள் இலங்கைத் தமிழரைக் குறிவைத்தே! அதனால்தான் சினிமாப் பைத்தியங்களாகக் காட்டுகின்றனரோ?

நீலவானம் பாடலுக்கு தலைவர் நீ...ள....மா...க...இழுக்க, எனக்கு வாய் வலிச்சிடுச்சு! 
அந்தப் பாடலுக்கான உழைப்பு, திட்டமிடல் அபாரம்! அருமையான காட்சியமைப்பு!

கமல் சில காட்சிகளில் நெகிழ வைத்தாலும், கஷ்டப்பட்டு நடிக்கும் கமலை, எந்தக் கஷ்டமுமில்லாமல் சிம்பிளாக மாதவனும், சங்கீதாவும் 'ஓவர்டேக்' பண்ணுகிறார்கள்!

படத்தின் இறுதிக்காட்சியில் மாதவன், சங்கீதா 'டைட்டானிக்' படத்தில் வரும் பிரபல காட்சி போல கையை விரித்துக் கொண்டு நிற்பார்கள்!
இதுதான் மிக முக்கியமான சீன்! இது ஒரு குறியீடு! (இது கே.எஸ். ரவிக்குமாருக்கே தெரியாது!) - பெரிய கப்பல்ல வச்சு படமெடுத்தால் மட்டும் அது 'டைட்டானிக்' ஆகாது! கதை, காட்சியமைப்புத்தான் முக்கியம்!

எனக்கு என்னவோ படம் பார்த்தது சந்தோஷமாகத்தான் இருந்தது! பார்த்திக்கு எப்படியோ? (அவன்தானே 'டிக்கெட்' எடுத்தான்!)

காத்திருப்போம் 'தலைவன் இருக்கிறான்'க்காக!
நாங்கள் உதயநிதி கடைசி நேரத்தில், படத்தைக் கைமாத்திட்டு 'கிரேட் எஸ்கேப்பான' மாதிரி இல்லை, இறுதிவரை கூடவே வருவோம் தலைவா! 

இந்தப் பாடலைப் பாருங்கள். இது 'நீல வானத்துக்கு' ஒரு சின்ன இன்ஸ்பிரேஷனாக மட்டுமே இருந்திருக்கும்! இது ஒரு சிம்பிளான பாடல், நீலவானத்தோடு ஒப்பிடுகையில்! 

 


Thursday, January 6, 2011

முதல்வன்!


நம் ஒவ்வொருவருக்கும் அடிமனதில் சில ஆசைகள், தேவைகள், ஏக்கங்கள் இனம்புரியாத என்னென்னவோ இருக்கும்! அது என்ன என்று எங்களுக்கே தெரியாமல் இருக்கும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றை கண்டடையும்போது, அடடா! இதைத்தான் எதிர்பார்த்தோமா?...எனத் தோன்றும்! 

அப்படித்தான் எனக்கும் தோன்றியது....ஏதோ ஒன்று வித்தியாசமாக, இதுவரை உணராத இனம்புரியாத உணர்வு....முதன்முதலாய் 'சின்ன சின்ன ஆசை' பாடல் கேட்டபோது! 

மின்சாரமில்லாத அந்தக் காலத்தில் வீட்டில் இலங்கை வானொலியில், தேநீர்க்கடைகளிலும், அயலவர், உறவினர் திருமண வீடுகளிலும் சக்கை போடு போட்டன ரோஜா பாடல்கள்! பாடல்வரிகளை நான் எப்போதுமே கவனித்ததில்லை. இசை மட்டுமே (இப்போதும்)

அதிலும் எனக்கு 'புது வெள்ளை மழை' அப்படிப் பிடித்துக்கொண்டது! குறிப்பாக அந்தப்பாடலின் பின்னணி இசையே பனிச்சாரலடிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது! சில வருடங்களின் பின்னரே நான் பாடல்காட்சியைப் பார்த்தேன்! (அதே போல் James Horner இன் Titanic theme பாடலில் அலையடிப்பதை உணரலாம்)

ஒரு கட்டத்தில் வெறித்தனமான ரஹ்மான் ரசிகனாக...எல்லாப் பாதையும் ரோமிற்குச் செல்வதைப் போல எந்தப் பேச்சினிடையேயும் ரஹ்மான் வந்துவிட, அப்போது நான் வவுனியாவிலிருந்து யாழ் வந்து பள்ளியில் இணைந்திருந்ததால் 'வவுனியா ரஹ்மான்' என்று வகுப்பில் அழைப்பார்கள்! 

அநேகமாக ரஹ்மானின் 2000 இற்கு முன் வெளியான அனைத்துப் பாடல்களும் மிகவும் பிடித்திருந்தது! பிறகு வந்தது பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை முன்பு வந்தது அதிகம் பிடித்தது...இன்றுவரை! அதிலும் ரோஜா, கிழக்குச்சீமையிலே, பம்பாய், இந்தியன்,  ஜீன்ஸ், முதல்வன், தேசம் படங்களின் பின்னணி இசை, டைட்டில் இசை என்றும் புதிதாகவே! 

பிடித்த பாடல்களைக் கேட்டுக்கொண்டே வேறு வேலைகளைச் செய்தல் என்பது என்னளவில் சாத்தியமாவதில்லை! இசையைக் கவனிப்பதும் கரைந்து போவதுமே என்னியல்பு! அதிக சத்தம் பிடிக்காது. ஓசைகள் அடங்கிய ஆழ்ந்த இரவுகளில் எனது அறையை மட்டுமே நிரப்பும் 5.1 surround ஒலியில்...நிசப்தமான பின்னிரவில் 'புத்தம் புது பூமி வேண்டும்' கேட்பது மிகவும் பிடிக்கும். இது யாழ்ப்பாணத்தில் இருந்தவரை மட்டுமே! நாடோடியாய் மாறியபின் mp3 player இல் ஒடுங்கிக்கொண்டது என் இசை.

என் தனிமை, சந்தோஷம், சோகம், உற்சாகம் எல்லாவற்றிலும் என்னோடு பயணம் செய்யும் என் இன்னொரு நிழலாக இசை...அதுவும் குறிப்பாக ரஹ்மானின் பின்னணி (BGM ) இசை! 

என் உற்சாகமான பொழுதுகளிலும் , காலையில், இளந்தேன்றல் வீச, நடந்து செல்லும்போதும் இயல்பாகவே எனக்குள் 'முதல்வன் தீம் மியூசிக்' ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது எனக்குமட்டும் கேட்க! 

இப்போ அதை நீங்களும் கொஞ்சம்...?



எளிமை, தன்னடக்கம், இறைநம்பிக்கை இவற்றின் வடிவமான இசைப்புயலின் 45  ஆவது பிறந்தநாளில் அடுத்த Academy Award ஐ பெற்றுக்கொள்ள வாழ்த்துவோம்!   

எனக்குப் பிடித்த ஒரு Theme Music, Slumdog Millionaire படத்தில் இடம்பெற்றது!
    


இன்னும் ஏராளம் இருக்கு சொல்ல....எழுத முடியவில்லை! அதான் ஒரு சின்ன பதிவாக!          

Wednesday, January 5, 2011

காவலன்?

சத்தம் கேட்டு விழித்துக் கொண்டான் அலெக்ஸ்.

ஏதோ பிரச்சினை பக்கத்தில். வாய்த்தகறாரில் இருந்தது. இனி பேச்சு முற்றி, ரத்தக் காயம் பார்க்காமல் ஓய மாட்டார்கள்!

ஏதோ ஏரியா சண்டை. அலெக்ஸ் அவை எவற்றிலும் பங்கு கொள்வதில்லை. 'எதற்காக வீண் சண்டை? எதுவுமே இங்கு நிரந்தரமில்லை. வர வர சாமியார் மாதிரி ஆகிறோமா? அப்போ சாமியாரெல்லாம்?'

தூக்கம் கலைந்துவிட்டது. சரியான குளிர். நீண்ட கொட்டாவியுடன் உடம்பை இறுக்கி சோம்பல் முறித்து... வெளியே வர...


எதிரிலுள்ள டீக்கடை வாசலில் வழக்கம்போல 'பெருசு' உட்கார்ந்து பழைய பேப்பரை பிரிச்சு மேஞ்சிட்டிருந்தது. 'அப்பிடி என்னத்தத் தான் ஒவ்வொருநாளும்...?'

'முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு! வாழ்கையை நிறைவாய் வாழ்ந்து முடித்த திருப்தியோ? சிரிப்புன்னா சும்மா சிரிப்பில்லை. கடைவாய்ப்பல் தெரியிற அளவு!'

மெதுவாக நடந்தான்.

எதற்கோ(?!) அவசரமா போய்க்கொண்டிருந்தான் அம்பு (அப்படித்தான் சொல்வார்கள்) எப்போதுமே ஒரு அவசரம். அவனைப் பார்க்கும்போதெல்லாம் அலெக்ஸ்சுக்கு ' நாய்க்கு வேலையுமில்லை, நிக்க நேரமுமில்லை' தான் ஞாபகத்துக்கு வரும்!

'நேற்று 'ஒற்றைக்கண்ண'னைப் பிடித்துவிட்டார்களாம். நாளைக்கு எங்களுக்கும் இதேநிலை வரலாம் என்பதால் அதிர்ச்சியாக இருந்தது'.

அனாலும் மனதின் ஒரு மூலையில் ஒரு சின்ன சந்தோஷமும்...அவன் பெரிய ரௌடி அலெக்ஸ்சுடன் ஒரு முறுகல் நிலை வேறு....காரணம்...அவள்!

அவள் நினைப்பே ஒரு தென்றலாய்...இதுவரை அலெக்ஸ் யாரையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை முதன்முதலாய்...அவள் பெயர் தெரியாது ஆனால் பெரிய இடம்!

கொஞ்சம் அலட்சியம்...கொஞ்சம் ஆச்சரியம் கலந்து, தலையைச் சிறிது சரித்து, அவள் பார்க்கும் பார்வை...அலெக்ஸ் கண்களை மூடித்திறந்து லேசாகத் தலையை உதறினான் ஒருமுறை!

 இதோ அவள் வீடு! பெரிய மாடிவீடு, பார்வையால் தேட...பல்கனியில் அவள்!

'ஓ! என்னைப் பார்க்கிறாள்'?! அலெக்ஸ் பரபரப்பானான். நிலை கொள்ளாமல்...

'இல்லையே என்னைத் தாண்டி..?' அனிச்சையாய்த் திரும்ப..


பார்வை நிலைகுத்த...உடல் விறைப்பாக..மூளைஎச்சரிக்க 'நாய்பிடிகாரன்கள்!' நாலுகால் பாய்ச்சலில் ஓடத் தொடங்கினான் அலெக்ஸ்!
  

Sunday, January 2, 2011

A Walk to Remember


சில சமயங்களில், எதிர்பார்த்தேயிராத, எந்தப் பொது இயல்புகளும் இல்லாத இருவர்   சாதாரணமாகப் பழகிக் கொண்டிருக்கும்போதே சட்டென்று ஒருநொடியில் நிகழ்ந்துவிடும் ஆச்சர்யம்..காதல்!......அப்படீன்னு அனுபவப்பட்டவங்க சொல்றாங்க!

அப்படித்தான் இந்தப் படத்திலும்.

எதற்கும் கவலைப்படாத, அலட்டிக் கொள்ளாத மற்றவர் மனநிலை பற்றிக் கவலைப்படாத ஈகோ உள்ள இளைஞன் கார்ட்டர்! பாதிரியாரான தந்தையின் சொல் தட்டாத, கடவுள், தன் சொந்த நம்பிக்கைகளுன் வாழும் அமைதியான அழகான நல்ல பெண் ஜேமி!


ஆரம்பத்தில் எந்த வித ஈடுபாடுமின்றி பழகிக்கொண்டிருக்கும் கார்ட்டர் படிப்படியாக ஜேமியிடம் ஈர்க்கப்படுகிறான். அதுவும் உயர்பள்ளியில் நிகழும் ஒரு நாடகத்தில் இருவரும் இணைந்து நடிக்கையில், ஜேமி பாடும்போது முற்றுமுழுதாக அவள் வசம்...!

ஒரு நல்ல காதல் எப்படி ஒருவனது வாழ்க்கையில், நடத்தையில், உறவுமுறை குறித்த புரிதல்களில்களில்  மாற்றத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறுகிறது படம்.


ஜேமிக்கு Leukemia என்றதும் கார்ட்டரை விட எனக்கு அதிர்ச்சியாகிடுச்சு! அந்தக் காட்சியில் இருவரதும் நடிப்பு...என்ன சொல்றது!




ஜேமியை மகிழ்விக்க தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை எல்லாம் (அம்மாவிடம் டான்ஸ் கற்றுக் கொள்வது, இரவு பகலாக் ஒரு பெரிய தொலைநோக்கியை வடிவமைப்பது- ஜேமியின் ஆசை) மகிழ்ச்சியுடன் செய்கிறான்.

குறிப்பாக தனக்குப் பிடிக்காத, பேச விரும்பாத ஆனால் பாசத்தைக்காட்டும் தந்தையிடம் சென்று உதவி கேட்பது, பின்னர் அவரிடம் சென்று நன்றி சொல்லும் காட்சி.


என்னதான் காதல், சென்டிமென்ட் என்றாலும் அலட்டலில்லாமல் அதைச் சொன்னவிதம் ...ஹாலிவுட் காரங்களை Copy அடிப்பவங்க இதைக் கவனிப்பதே இல்லையா?



இதுவே தமிழ்ல நாயகனுக்கோ, நாயகிக்கோ பிளட் கான்சர் வந்தா என்னென்ன கொடுமைய எல்லாம் பார்க்க நேரிடும்! 
தன்னோட காதலி தன்னை வெறுக்கணும்னு இன்னொரு பெண்ணோட சேர்ந்து நாடகம் போட்டு, வாழ்க்கைத் தத்துவப் பாடல் பாடி, உள்ள ஆபாச, ஆபத்துக் கூத்துகளையெல்லாம் அரங்கேற்றி, சாகும்போது கூட ரத்தவாந்தி எடுத்துக் கொண்டே பாட்டுப்பாடி, அவன் இம்சை தாங்காம படம் பார்க்கிறவங்க 'எப்படா இவன் சாவான்'னு யோசிக்க வைக்க மாட்டாங்க?!
படம் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் ஒரு தமிழ்க் 'காவியம்' நினைவுக்கு வந்து தொலைத்தது!

மனதை வருடும் பின்னணி இசை- Mervyn Warren

பிரபல Pop Singer, நடிகை Mandy Moore ஜேமியாக!

A walk to remember என்ற நாவலை அடிப்படியாகக் கொண்டு 2002 இல் வெளிவந்த படம் இது.


படத்தில் வரும் மேற்கோள்களில்? (Quotes) ஒன்று இது,

"Love is always patient and kind. It is never jealous. Love is never boastful or conceited. It is never rude or selfish. It does not take offense and is not resentful"


படம் பார்த்து, சில வருடங்களாக, எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று! இதைக் கொஞ்சம் கேட்டு...பார்த்து....இதுவே கதை சொல்ற மாதிரி இருக்கு!