Showing posts with label Christopher Nolan. Show all posts
Showing posts with label Christopher Nolan. Show all posts

Friday, February 18, 2011

The Prestige


ஒவ்வொரு மேஜிக்கும் மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டது.


The Pledge - மேஜிக் நிபுணர் முதலில் ஒரு பொருளைக்காட்டி, பார்வையாளர்களைச் சோதிக்கச் சொல்வார்.


The Turn - அந்தப்பொருளை வைத்து அசாதாரணமான ஒன்றைச் செய்தல் (உதாரணம் மறையச் செய்தல்)


The Prestige - மறையச் செய்வதோடு நாம் மகிழ்வதில்லை.மறைந்ததை மீளக் கொண்டுவர வேண்டும். இதுதான் மிகவும் கடினமான மூன்றாவது பகுதி. இது தான் The Prestige!

இந்த மூன்று பகுதிகளையும் அடிப்படையாகக்  கொண்டு படம் நகர்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் லண்டனில் இருக்கும் இரு மேஜிக்  கலைஞர்களான ஆன்ஜியர் (Angier),அல்பிரட் போர்டன் (Alfred Borden) இருவருக்கும் இடையிலான தொழில் போட்டி, தனிப்பட்ட வாழ்க்கையின் பழிவாங்கல்கள் பற்றி சொல்லப்படுகிறது படத்தில்.

ஆன்ஜியர் (Hugh Jackman) - மேஜிக்கை ஒரு கலையாகப் பார்ப்பவன். போர்டன் (Christian Bale) - மேஜிக்தான் வாழ்க்கை, அதற்காக எதையும் தியாகம் செய்யலாம் என நினைப்பவன். அப்படித்தான் வாழ்கிறான்!


ஆன்ஜியரைக் கொன்றதற்காக நீதிமன்றத்தில் போர்டனுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கும் காட்சியிலிருந்து ஆரம்பித்து, சில வருடங்கள் முன், பின்னாக பயணிக்கிறது கதை.

ஆன்ஜியர், ஜூலியா (ஆன்ஜியரின் மனைவி), போர்டன் மூவரும் மேஜிக் காட்சிகளை உருவாக்கும் கட்டரிடம் வேலை செய்கிறார்கள். கை,கால் கட்டப்பட்ட நிலையில் பெரிய தண்ணீர் தொட்டிக்குள் போடப்படும் ஜூலியா அதிலிருந்து தப்பி வெளிவருவதுதான் ஹைலைட்! ஒவ்வொரு முறையும் 'கெட்டப்' மாற்றிக்கொண்டு பார்வையாளர் போன்று உட்கார்ந்திருக்கும் ஆன்ஜியர், போர்டன் இருவரும் காட்சியின்போது முறையே ஜூலியாவின் கால், கை கட்டி முடிச்சுப் போடுவார்கள்!

ஒருநாள் கை முடிச்சினை அவிழ்க்க முடியாமல் ஜாலியா இறந்துபோக, போர்டன் மீது சந்தேகப்படும் ஆன்ஜியர், இறுதிச் சடங்கின்போது 'நீ போட்டது எந்த வகையான முடிச்சு? எனக்கேட்க 'தெரியாது' என்கிறான் போர்டன். இந்தப் பொறுப்பற்ற பதிலால் ஆத்திரமடைகிறான் ஆன்ஜியர்.


போர்டன் Bullet Catching செய்யும்போது,ஆன்ஜியர் மாறுவேடத்தில் குழப்புவதற்காக வந்து பங்கேற்க, வந்திருப்பது யாரென்று புரிந்தாலும் எதுவும் செய்ய இயலாத சூழலில், போர்டனின் இரண்டு விரல்கள் 'அவுட்'. பதிலுக்கு போர்டனும் களத்தில் இறங்க, இப்போது அடுத்தவன் மேஜிக்கைக் குழப்புவது இருவருக்கும் உபதொழிலாகிறது.

வழமையான மேஜிக்குகள் ஜனங்களுக்கு அலுத்துவிட புதுமையாக ஏதாவது செய்ய வேண்டிய சூழ்நிலையில், திடீரென பிரபலமகிவிடுகிறான் போர்டன் தனது 'Transported Man' என்ற Illusion மூலம். அதாவது மேடையின் ஒரு பக்கத்தில் மறையச் செய்து ஒரே கணத்தில் மறுபக்கத்தில் தோன்றச் செய்வது! இதனால் குழம்பிப்போகும் ஆன்ஜியர் தனது எஞ்சினியர் கட்டரின் உதவியுடன், தன்னைப் போலவே தோற்றமளிக்கும் ஒருவனை வைத்து அதே மேஜிக்கை 'New Transported Man' என்ற பெயரில் செய்ய தொழில் சூடு பிடிக்கிறது.

இருந்தாலும் போர்டனின் மேஜிக் தந்திரம் என்ன? - இந்தக் கேள்வி ஆண்ஜியரை குழப்புகிறது.இதே தந்திரத்தைத் தான் போர்டனும் பயன்படுத்துகிறான் என்ற கட்டாரின் விளக்கத்தை ஏற்க மறுக்கிறான். தன்னுடைய உதவியாளினி (+ இந்நாள் காதலி)ஒலிவியாவை வேவு பார்பதற்காக போர்டனிடம் வேலைக்கு அனுப்ப, அவளுக்கு போர்டன் மீது காதல்வர, அந்தக் களேபரத்தில் போர்டனின் மனைவி சாரா தற்கொலை செய்து கொள்கிறாள் ஒலிவியாவும் போர்டனைப் பிரிந்து சென்று விடுகிறாள். ஒலிவியா போர்டனிடம் திருடிய டைரியைக் கொண்டு ரகசியத்தை அறிய முடியவில்லை ஆன்ஜியரால்! காரணம் அதில் Cryptography முறையில் எழுதப் பட்டிருப்பதால்.


போர்டனின் எஞ்சினியர், பெலனை (Fallon) கடத்தி, போர்டனிடம் நேரடியாகக் கேட்க அவன் டெஸ்லா பெயரைச் சொல்கிறான். (Nikola Tesla - எலெக்ட்ரிக்கல் துறையில் இவரது பங்களிப்பைப் பற்றி ஒரு பெரிய பதிவு போடலாம். தாமஸ் அல்வா எடிசனுடனும் இணைந்து பணியாற்றியவர்) ஆன்ஜியர் டெஸ்லாவைச் சந்திக்கிறான். அவனுக்காக அவர் உருவாக்கிக் கொடுத்த, ஒழுங்காக வேலை செய்யுமா இல்லையா என்றே தெரியாத ஒரு ஆபத்தான மெஷினோடு திரும்ப வருகிறான்.

இந்தமுறை, ஆண்ஜியரின் ட்ரிக்கை அறிய வரும் போர்டன், தண்ணீர் தொட்டிக்குள்ளிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் ஆண்ஜியரைக் காப்பாற்ற முயல்கிறான். ஆனால்....அஞ்சியரைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது! (படத்தின் முதலாவது காட்சி)

பிறகு என்னவாகிறது? - அது கிறிஸ்டோபர் நோலனின் மேஜிக்!


Christopher Priest என்பவரின் Novel ஐ அடிப்படையாகக் கொண்டு 2006 இல் வெளி வந்த படம். 
திரைக்கதை - Christopher Nolan, Jonathan Nolan 
இயக்கம் - Christopher Nolan
சிறந்த ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்சனுக்கான Oscarக்கு பரிந்துரைக்கப்பட்டது.


Are You watching closely?
படம் ஆரம்பிக்கும்போது கேட்கப்படும் கேள்வி, படம் முடியும்போதுதான் தெரிகிறது அது கிறிஸ்டோபர் நோலன் எங்களைப்பார்த்துக் கேட்ட கேள்வி என்று!


மேலே சொன்ன ஒழுங்கில் காட்சிகள் இருக்காது.கதை நேர்கோட்டில் பயணிக்காமல், வெவேறு காலத்தில் காட்சிகளின் ஒழுங்கு மாறியிருக்கும் (Nonlinear)


Mementoவில் இரண்டாவது காட்சியிலேயே (Scene) படத்தின் காட்சியமைப்பு புரிந்து விடும். காலத்தை பிரித்தறிய கலர்டோன் வேறுபாடு இருக்கும். இதில் அப்படி அல்ல. 'க்ளூ'வாக கதாபாத்திரங்களின் ஆடைகள், ஸ்டைல்.


அஞ்சியர், போர்டன் இருவரும் மற்றவர்களின் டைரியை மாறி, மாறி ஒரே நேரத்தில் படிப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். ஆனால் வேறு வேறு காலப்பகுதி.


பிடித்த காட்சி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது! எல்லாமே அசத்தல்!அதிலும் முக்கியமான சில - அஞ்சியரின் மேஜிக் காட்சியில் புகுந்து போர்டன் பண்ணும் அட்டகாசமான குளறுபடிகள், தற்கொலை செய்துகொள்ள முன் சாராவின் நடிப்பு, டூப்ளிகேட் அஞ்சியரின் அலப்பறைகள், போர்டனின் சாரா, ஒலிவியாவிடம் உண்மை சொல்ல முடியாத தவிப்புகள் (இதை இரண்டாம் முறை  படம் பார்க்கும் போதுதான் புரிந்துகொள்ள முடியும்)


முதன்முறை பார்க்கும்போது ஒரு குழப்பம், முடிவில் ஆச்சரியம்! இரண்டாம் முறை எல்லாம் தெளிவாகப் புரியும் (அதாவது காட்சியமைப்பு)


ஒரு நல்ல படத்தைப் பார்க்க விரும்பும் நண்பர்கள் கண்டிப்பாக பாருங்கள்!


சில குழப்பங்கள்...கேள்விகள்!
இது பற்றித் தனிப்பதிவிடும்படிஅண்ணன்,தானைத் தலைவன் செங்கோவி கூறியிருந்தார். படம் பற்றி எனக்கு வெளங்கியது (?!) படம் பார்த்த நண்பர்களின் கருத்துகள், பதில்கள் கிடைத்தால் பார்க்கலாம்!
ஒருமுறை பார்த்தவுடன் நியாயமாக எல்லோருக்கும் தோன்றக்கூடிய
கேள்விகள்!
போர்டன் போட்ட அந்த முடிச்சு தற்செயலா? திட்டமிட்டதா?
போர்டன், ஆன்ஜியர் இருவரில் யார் நல்லவர்? இருவருமா?
முடிச்சு பற்றி ஏன் போர்டனால், ஆன்ஜியரிடம்  ஒழுங்காகப் பதில் சொல்ல முடியவில்லை? ஒருவேளை முடிச்சு போட்டதும், கேள்வி கேட்கப்பட்டதும் வேறு வேறு ஆட்களிடமா? அப்படியானால் தூக்கிலிடப்பட்டது?
நீதி மன்றத்திலும் போர்டன் ஒழுங்காகப் பதில் சொல்லாதது ஏன்? விரக்தியா?
சாரா, ஒலிவியாவைக் காதலித்தது யார்?
போர்டன் பற்றிய ரகசியத்தைத் தெரிந்து கொண்டதால்தான் சாரா தற்கொலை செய்தாளா?
போர்டன், ஆன்ஜியரின் பழிவங்களில் சிக்கியது தற்செயலானதா? அல்லது ஆன்ஜியரால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றா?
கட்டர், ஆன்ஜியரின் பழிவாங்கலுக்கு உடந்தையாக இருந்தாரா? ஆன்ஜியர் பற்றிய உண்மை தெரிந்திருந்ததா?
அப்படியானால், போர்டனுக்கு நியாயமாக அந்த தண்டனை கிடைக்க வேண்டியதுதான் என்று நினைத்தாரா?


பதில்கள் இங்கே! http://umajee.blogspot.com/2011/02/are-you-watching-closely.html

Christopher Nolan

Wednesday, January 26, 2011

Christopher Nolan


2006 இல் ஒருநாள். தற்செயலாக ஒரு DVD கடையில் அந்த ஆண்டில் வெளியான  The Prestige  என்று ஒருபடம். டைரக்க்ஷன் கிறிஸ்டோபர் நோலன் என்றிருந்தது! ஏதோ ஒன்று பார்த்ததும் ஈர்க்க, (அப்போது நோலன் பற்றி எதுவும் தெரியாது!)  வாங்கினேன்.

நல்ல தரமான DVD. அருமையான ஒளிப்பதிவு, அழகான ஆர்ட் டைரக்சன்! ஆனா, படத்தில என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல! அப்போதிருந்த மனநிலையில் பொறுமையில்லாமல் அரைமணி நேரம் பார்த்துவிட்டு நிறுத்திவிட்டேன் (முடியல!)

சரியாக இரண்டு வருஷங்களின்பின் ஒரு ஆர்வக்கோளாறில படம் பார்க்க முடிவு செய்து, மேஜிக் கலைஞர்கள் பற்றிய கதை என்பதால் ஈடுபாட்டுடன் பார்த்தேன். ஒன்றும் புரியாமலே சும்மா படம் பார்க்க , கதையில் வரும் சில ட்விஸ்டுகள் அசரவைக்க (ச்சே! இவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டியேடா!)

இருந்தாலும் படம் சரியாக பிடிபடவில்லை. படம் என்பதை படத்தில் பேசப்படும் ஆங்கிலம் எனத் தவறாகப் புரிந்து கொண்டு, தமக்கு இங்லீஷ் நல்லா தெரியும் அதால படம் புரிந்ததுவிட்டது எனக் கூறும் பயபுள்ளைகள் நம்மிடையே பலர். அப்படியானவர்களுக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலைப் பரிந்துரைக்கிறேன்.
  

கதை - இரண்டு மேஜிக் கலைஞர்கள் தொழில் போட்டி மற்றும், தனிப்பட பழிவாங்கல் காரணமாக முட்டிக் கொள்ள... என்னவாகிறது? - என்பதுதான்! திரைக்கதையில்தான் இருக்கு உண்மையான மேஜிக்!

இது  ஒரு Nonlinear ஸ்டைலில் அமைந்திருக்கும். (இது நோலனின் ஸ்பெஷாலிட்டி)

இரண்டாம் முறை பார்க்கும்போதுதான் (நம்முடைய அறிவுக்கு?!)தெளிவாக(??) விளங்கியது. கூடவே சில குழப்பங்களும்! 
மூன்றாம் முறை பார்க்கையில் இன்னும் புதிய சில விஷயங்கள், கூடவே அதிகரித்த குழப்பங்களும்! 
நான்காம் முறை....வேணாம் இத்தோட நிறுத்திக்குவோம்!

ஏன்?, எப்படி?, எதற்காக?, யார்?, யார் நல்லவன்?, உண்மை என்ன? - இப்படி ஏராளமான கேள்விகள், குழப்பங்கள். மண்டை காய்ஞ்சிருச்சு! அந்தக் காலகட்டத்தில் நம்ம தலையில் ஏராளமான முடி இருந்திச்சு....அப்புறம் கணிசமாகக் குறைந்ததுபோல ஒரு உணர்வு!

படம் பார்த்த நமக்கே இவ்வளவு குடைச்சல்னா, திரைக்கதை அமைக்க எப்படி உட்கார்ந்து யோசிச்சிருக்கணும்? அண்ணன் கிறிஸ்டோபர் நோலன் வாழ்க!

Christopher Nolan
வயது 40. ஹாலிவுட் இயக்குனர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்

லண்டனில் பிறந்தவர் - அதனால்தான் லண்டனில் பிறந்த ஹாலிவுட் நடிகர் Christian Bale, இங்க்லீஷ் நடிகர் Michael Caine இருவரையும் அதிகமாகத் தான் படங்களில் பயன்படுத்துகிறார்? (எப்பூடி??...தமிழேண்டா!!! )

நோலனின் முதல் படம் 1998 இல் வெளியான Following. இவரே எழுதி, இயக்கிய சின்ன பட்ஜெட் படம் (6000 டொலர்ஸ், black & white ). லண்டனில் படமாக்கப்பட்ட இப்படத்தின் வெற்றி ஹாலிவுட் வாய்ப்பை ஏற்படுத்தியது!

ஆறுமாசம் ஹோட்டலில் ரூம் போட்டு கதை யோசிச்சு, படமெடுத்து ரிலீஸ் பண்ணினா எங்கே கதை? ன்னு தேட அதுக்கு தனியா ரூம் போட்டு யோசிக்கணும் - பல படங்களில் பார்த்த அனுபவம்.

கதையென்ற ஒன்றையே முடிவு பண்ணாமல் ஒரு பெரும்படையுடன் காமெராவைத் தூக்கிக்கொண்டு போய் மூன்று வருடங்களாகப் படமெடுக்கும் அறிவுஜீவி இயக்குனர்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

அனால் கதையை தேர்ந்தெடுத்த பின்னர் திரைக்கதைக்கான அசுர உழைப்பு நோலனின் படங்களில் (Memento, The Prestige) தெரியும்!

தமிழில் கஜினி வெளியானபோது நோலனின் இன்னொரு புகழ்பெற்ற படைப்பான Memento (2000) குறித்துப் பேசப்பட்டது!


Memento பார்த்தபோது அது இன்னொரு விதமான அனுபவம்!

- மனைவி/காதலியின் கொலைக்கான பழிவாங்கல்
- Short term memory loss,
- உடலில் பச்சை குத்துதல்,
- Polaroid Photography
என்ற 'கஜினி' யுடனான ஒற்றுமைகள் தவிர்த்து, திரைக்கதையமைப்பு முற்றிலும் புதிய அனுபவம்!

அதுவும் முதல் தடவை எதுவும் புரியவில்லை, பின்பு புரிந்தபின் அதிலும் விடை காண முடியாத கேள்விகள், குழப்பங்கள்!

மெமெண்டோ ஒரு Revers Chronological ஸ்டைலில் எடுக்கப்பட்ட Psychological Thriller படம்! அதுவரை இல்லை அதைத்தவிர அப்படி ஒரு படத்தைப் பார்த்ததில்லை நான்.

வழமையான த்ரில்லர்/பழிவாங்கல் படங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக இருக்க, மெமெண்டோவில் இதுக்கு முதல் என்ன நடந்திருக்கும்? என எதிர்பார்க்க வைப்பது புதிதாக!

ஆனால் கதை (அல்லது தீம்?) என்று பார்க்கும்போது மெமெண்டோ, கஜினி இரண்டுமே,
மனைவி/காதலியின் கொலைக்காக, Short term memory loss பிரச்சினையுடைய ஒருவனின் பழிவாங்கல் - என்பதுதானே!

'கஜினி' இந்திக்குப் போனபோது, படத்தின் கதை உரிமை(?!) உன்னோடதா? என்னோடதா? ன்னு சண்டை போட்டாங்க இயக்குனரும், தயாரிப்பாளரும். ஆனால் இது எதுவுமே பாவம் ஜொனதன் நோலனுக்கு தெரியாது! ஜொனதன் நோலன்? அவரோடதுதான் 'மெமெண்டோ' கதை!

Jonathan Nolan
எழுத்தாளர், திரைக்கதையாசிரியர்
கிறிஸ்டோபர் நோலனின் தம்பி.
Memento Mori என்ற இவரது சிறுகதையே மெமெண்டோ திரைப்படமானது!

இவரும், அண்ணனும் சேர்த்தே கிறிஸ்டோபர் நோலன் படங்களின் திரைக்கதையைப் பின்னுகிறார்கள்!

கிறிஸ்டோபர் நோலனின் மற்றைய படங்கள்,
Insomnia (2002), Batman Begins (2002), The Dark Night (2008), சென்ற வருடம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய Inception.

Inception நான் இன்னும் பார்க்கவில்லை (பார்த்தால் மட்டும் உனக்கு புரிஞ்சிடுமா?) எல்லாம் ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான் (இருக்கிற தலைமுடியைக் காப்பாற்றிக் கொள்ள வேணாமா?) அதுதான் நோலனின் master piece என்கிறார்கள்.

இயக்குனர் முருகதாஸ், கிறிஸ்டோபர் நோலனின் ரசிகர் போலும்! தற்போது இயக்கிவரும் 'ஏழாம் அறிவு' படம், The Prestige + Inception என்று சந்தேகிக்கப் படுகிறது. சூர்யா வேறு மேஜிக் கலைஞராக நடிக்கிறார் என்கிறார்கள்! 'கஜினி' போலவே  நன்றாயிருக்கும் என நினைக்கிறேன்!