Wednesday, February 23, 2011

Life is Beautiful


யுத்தம்! ஒரு மனிதனின் வாழ்க்கையில், குடும்பங்களில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, உறவுகளைச் சிதைக்கிறது என்பதைக் கூறும் திரைப்படம். இரண்டாம் உலகப் போரின்போது நடைபெறும் கதை.

இது போல் எத்தனை கதைகள்...! எமது நாட்டிலும் இன்னும் எங்கெல்லாமோ..!


மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்ட கிய்டோ நகரத்தில் புத்தகக் கடை ஒன்றை வைப்பதற்காக தனது மாமா வீட்டிற்கு வருகிறான். வரும்வழியில், ஒருபண்ணை வீட்டில் தன்னை இளவரசர் என்று ஒரு சிறுமியிடம் அறிமுகப்படுத்தி தண்ணீர் குடிக்கும்போது, மேலே இருந்து வைக்கோல் போரில் விழும் தோராவைத் தாங்கிப் பிடிக்க இருவரிடையே ஒரு இனிய அறிமுகம்!

தோராவுக்கு திருமண ஏற்பாடுகள், கிய்டோ வேலை செய்யும் ஹோட்டலிலேயே நடைபெற, அது எதுவும் தெரியாமல் கிய்டோ வேலை செய்ய, புத்திசாலித்தனமாக மேசைக்குக் கீழே அவனைச் சந்தித்து தோரா விஷயத்தைச் சொல்ல இருவரும் அங்கிருந்து தப்பி ஓடுகிறார்கள்.


1939 ம் ஆண்டு. இரண்டாம் உலகப் போரின் கடைசி. இப்போது கிய்டோ தான் விரும்பியவாறு புத்தகக்கடை, தோரா, ஐந்து வயது மகன் ஜோஸ்வாவுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஜெர்மன் படைகள் வருகின்றன. கடைகளில் 'நாய்களுக்கும் யூதர்களுக்கும் அனுமதியில்லை' வாசகங்கள்.


ஜோஸ்வாவின் பிறந்தநாள். யூதர்களைக் கைது செய்து தனியிடத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.  யூத இனத்தவனான கிய்டோ, மாமா, ஜோஸ்வாவையும் அழைத்துச்செல்ல, யூத இனத்தைச்சாராத தோரா இராணுவ அதிகாரிகளிடம் பேசிப் பார்த்து, பலனின்றி, தன்னையும் அழைத்துச் செல்லக்கோருகிறாள்.


எங்கு போகிறோம் என்றே தெரியாமல் எல்லோரும் இறுகிப் போய் இருக்க, ஜோஸ்வா கேள்வி கேட்டுக் கொண்டே வருகிறான். கிய்டோ வழக்கம் போல் நகைச்சுவையாக உனது பிறந்த நாள் என்பதால் ஜாலியாக சுற்றுகிறோம் எனக்கூற, ஜோஸ்வா நம்புகிறான். கிய்டோவும், மகனும் ஒரே இடத்தில். தோரா தனியாக பெண்கள் சிறையில்.



நாஜிக்களின் வதைமுகாம். சிறிய அறைகளில் ஏராளமானோர் நெருக்கமாக, அடுக்கடுக்காக அலுமாரி போன்ற படுக்கைகள். ஜோஸ்வா இது பிடிக்காமல், வீட்டுக்குப் போகலாம் என்கிறான்.

அவனைச் சமாளிக்க கிய்டோ ' இது ஒரு விளையாட்டு, 1000 points எடுப்பவர்களுக்கு ஒரு கவச வாகனம் (tank ) பரிசு என்கிறான். விளையாட்டின் நிபந்தனைகளாக,

-'அம்மாவைப் பார்க்க வேண்டுமென்று கேட்கக்கூடாது.
-பிஸ்கட்,ஸ்நாக்ஸ் கேட்கக் கூடாது.
-வீட்டுக்குப் போகவேண்டுமென்று கேட்கக்கூடாது' என்கிறான்.

ஜோஸ்வாவும் அதனை நம்புகிறான்.





ஒருநாள் 'குளிக்க' அழைக்கும்போது போகாமல் அறையினுள் ஒளிந்து கொள்கிறான்  ஜோஸ்வா. 'குளிக்க' என்று , விஷவாயுவால் கொல்வதைக் கூறுகிறார்கள். வீட்டிலும் விளையாட்டாக அப்படி அடிக்கடி தன்னை மறைத்துக் கொள்ளும் ஜோஸ்வா, இயல்பாகவே ஒளிந்து தப்பித்துக் கொள்கிறான்.


போர் முடிவுக்கு வரும் காலப்பகுதி. முகாமில் எல்லோரையும் கொன்று இப்போது சொற்பமானவர்களே எஞ்சியிருகிறார்கள். நேச நாட்டுப் படையினர் அருகில் வந்து விட்டார்கள். பின்வாங்கிச் செல்ல ஆயத்தமாகும் ஹிட்லரின் படைகள் அவசரமாக எஞ்சியிருப்பவர்களைக் கூட்டிச்சென்று கொல்கிறார்கள்.


இறுதியில் தோராவையும் அழைத்துச்செல்ல, இப்போது அவளைக்காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தப்பிக்க முயற்சி செய்யும்  கிய்டோ தாங்கள் தங்கியுள்ள கட்டடத்துக்கு வெளியே வந்து அங்குள்ள ஒரு உறுதியான பெட்டியைக் காட்டி, அதனுள் ஜோஸ்வாவை ஒளிந்து கொள்ளச்சொல்லி, இன்னும்  60 points தான் தேவை என்றும், யார் கண்ணிலும் படாமல், பொறுமையாக எந்த நடமாட்டமும் இல்லாதவரை  திறக்காமல் இருந்தால், கவச வாகனம் கிடைக்கும் எனக் கூற ஜோஸ்வாவும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறான்.


கிய்டோ அங்கிருந்து தோரா தங்கியுள்ள முகாமிற்கு செல்கிறான். அவள் காப்பாற்றப் பட்டாளா ?


படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நகைச்சுவையாகவே நகர்கிறது..சோகம் கூட.


-கிய்டோ, தோராவின் காதல் காட்சிகள்,

-வதைமுகாமில் கைதிகளுக்கான ஒழுங்கு விதிகளைக் கூற வரும் ஜெர்மன் அதிகாரிகள் மொழி பெயர்த்துச் சொல்ல ஒருவரை அழைக்கிறார்கள். கிய்டோ ஓடிவந்து மொழிபெயர்க்கிறான். அதிகாரிகள் அவர்கள் சொல்லும் விதிமுறைகளை அப்படியே மாற்றி தனது மகனுக்குச் சொன்ன விளையாட்டின் விதிமுறைகளாகக் கூறுகிறான். அதிகாரிகள் போனபின் மற்றவர்கள் குழம்ப, தன்னை ஒன்றும் கேட்க வேண்டாமென்று கூறி விடுகிறான்.


-குளிக்க அழைக்க, அது நச்சு வாயுக் குளியல் என்பதை அறியாத கிய்டோவின் மாமா தனது மேற்சட்டையைக் கழற்றிவிட்டு வருகிறார். குளியலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வரும் பெண் அதிகாரி, தடுக்கி விழப்பார்க்க, அவர் தாங்கி, ' பார்த்து ' எனக்கூறும் நெகிழ்வான காட்சி.



-இறுதியில் நேச நாட்டுப் படை வீரன் ஒருவன் சிறுவனைத் தன்னுடன் கவச வாகனத்தில் தூக்கி வைத்துக்கொள்ள, அது விளையாட்டில் தான் வென்றதற்கு கிடைத்த பரிசாகவே எண்ணி மகிழ்ந்து கொள்ளும் ஜோஸ்வா.



-விசாரணைகளுக்காக அழைத்துச்செல்லப்படும் போதெல்லாம் ஜோஸ்வா பார்ப்பதால் அவன் முன்னிலையில் கைகளை வீசி நகைச்சுவையாக நடந்து செல்லும் கிய்டோ, இறுதியில் தன்னைக் கொல்ல அழைத்துச்செல்லும் போதும், ஜோஸ்வா பெட்டிக்குள், மறைந்திருந்து பார்ப்பதைக் கவனித்ததும், அவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு அதேபோல் கைகளை வீசி நடக்கும் நெகிழ்வான காட்சி.


இப்படி ஏராளமான, மனதை வருடும் காட்சிகள், பின்னணி இசையுடன் 1997 இல் வெளிவந்தது.

இயக்கம் - Roberto Benigni அவரே கிய்டோவாக நடிக்க, மனைவி தோராவாக.
மொழி - Italian, German

விருதுகள்-
Academy Award for Best Foreign Language Film 1998 - Best actor 
best dramatic score Grand Prix, Cannes 1998
European Film Award For Best European Film 1998

Monday, February 21, 2011

பூங்காற்று திரும்புமா?


எத்தனையோ பாடல்களை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தாலும், அனைவருக்கும் பிடித்த, ஒரு மறக்கமுடியாத பாடல் பூங்காற்று திரும்புமா? என்று நினைக்கிறேன்!

ஒரு காலகட்டத்தில் தமிழிலுள்ள கம்பீரமான, தனித்துவமான குரலென்று அவரது குரல் பற்றிச் சொல்வதுண்டு! அதை நிரூபிப்பதைபோல உள்ளன, சிவாஜிக்கு அவர் பாடிய பாடல்கள்.  

(எவ்வளவோ காலமாக நடித்த சிவாஜிக்கு, ஒரு நல்ல இயல்பான, மிகை நடிப்பில்லாத ஒரு பாத்திரத்தை வழங்க ஒரு பாரதிராஜா வரவேண்டியிருந்தது! சிவாஜியின் பிற்பட்ட காலத்திலேயே முதல்மரியாதை, தேவர்மகன் போன்ற 'நல்ல' படங்கள் (அவர் நடித்ததில்) கிடைத்தன!)

சிவாஜிக்கு ஏற்ற குரல்? இதைவிடப் பொருத்தமான குரல், சிவாஜியே பாடியது போல வேறு யாருடைய குரல் பொருந்தும்?



அதேபோல படிக்காதவன் படத்தில் 'ஒரு கூட்டுக் கிளியாக'. எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று! 



இது ஒரு ஆச்சரியமளிக்கும் பாடல்! மலேசிய வாசுதேவனின் குரலில் ஒரு வித்தியாசமான முயற்சியா? தனக்கு கம்பீரமாக மட்டுமல்ல, மென்மையாக குழைவாக காதல் வழியும் குரலிலும் பாடமுடியும் என்று நிரூபித்த பாடலா? பாடல் வெளியான காலத்தில் மிகப்பெரிய வரவேற்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்குமோ? தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும்! 

 

மறைந்தாலும் ரசிகர்களின் மனதில் என்றும் வாழ்வார் மலேசியா வாசுதேவன்!

டிஸ்கி - மன்னிக்க வேண்டும் Quality யான லிங்க் கிடைக்கவில்லை!   

Friday, February 18, 2011

Are You watching closely?



கேள்விகள்! பதில்கள்! குழப்பங்கள்! 
எனது The Prestige பதிவின் தொடர்ச்சியாக, அதிலுள்ள குழப்பங்கள், கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியும் முயற்சியில் (பார்ரா! ரொம்ப முக்கியம்!) அண்ணன் செங்கோவியினது பின்னூட்டங்களும், எனது பதில்களும்! படம் பார்த்தவர்கள் பங்கு கொள்ளுங்க!

படம் பற்றிய பதிவு இங்கே! The Prestige


போர்டன் போட்ட அந்த முடிச்சு தற்செயலா? திட்டமிட்டதா?

எனக்கு வெளங்குனதைச் சொல்றேன்..தப்புன்னு தோணுச்சுன்னா,வாங்க சண்டை போடுவோம்!(இப்போ ஃப்ரீதான்!) போர்டன் போட்ட அந்த முடிச்சு தற்செயலா? திட்டமிட்டதா? தற்செயலானதுதான்...வேணும்னே போட காரணம் இல்லையே..அவனுக்கு முடிச்சு போடத்தெரியலைன்னு முதல்லயே காட்றாங்களே..(அவன் முடிச்சுப் போடும்போது, கீழ(!) ஆன்சியர் முத்தம் கொடுப்பானே..அந்தக் கடுப்பா?..இருக்காது, அவன் பொண்டாட்டுக்குத் தானே கொடுத்தான்! :-)

தற்செயலானதென்றே நானும் நினைக்கிறேன்!
ஆனால் போர்டனுக்கு அந்த வழக்கமான முடிச்சிடுவதில் குழப்பம் இருப்பதாகச் சொல்கிறான். அப்போது, ஜூலியா தன்னால் எந்த முடிச்சையும் விடுவிக்கமுடியும் எனக்கூற, கட்டர் அது ஆபத்தானது, முயற்சிக்கவேண்டாம் என்று கூறுவார். குறித்த அந்த நாளில் போர்தான் முடிச்சிடும்போது ஒருகணம் தயங்கியவாறு பார்க்க, ஜூலியா தலையை அசைப்பாள்! அப்படியானால்..ஜூலியாவின் சம்மதத்தோடு மற்றைய முடிச்சு?   


போர்டன், ஆன்ஜியர் இருவரில் யார் நல்லவர்? இருவருமா?

ரெண்டு பேரும் நல்லவங்கதான்..ஆனா, போர்டன் வேணும்னே முடிச்சுப் போட்டதா தப்பா புரிஞ்சுக்கிட்டு, பழிக்குப்பழின்னு இறங்குனதால ஆன்ஞியர் ரொம்பக் கெட்டவனாவும், போர்டன் கொஞ்சம் கெட்டவனாவும் ஆகிடறாங்க!

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்! சந்தர்ப்ப சூழ்நிலை! அப்படிப் பார்க்கப் போனால் போர்டனை கொஞ்சம் கெட்டவனாகவும் கூறமுடியாது. மிக நல்லவன்! எப்படி? அடுத்த கேள்வியில்!   

முடிச்சு பற்றி ஏன் போர்டனால், ஆன்ஜியரிடம்  ஒழுங்காகப் பதில் சொல்ல முடியவில்லை? 

போர்டன் தான் ஒழுங்காத் ‘தெரியலை’ன்னு சொல்றான்ல! (இங்க பவுடர் டப்பா எங்க வச்சீங்கன்னு கேட்டாலே மறந்து போய் முழிக்கிறோம்..யோவ், கல்யாணம் பண்ணுங்கய்யா..எல்லா டவுட்டும் தீர்ந்திடும்! :-)

இது கொஞ்சம் குழப்பமா இல்ல? வழமையான முடிச்சுன்னு கொல்லி 'எஸ்' ஆகியிருக்கலாமே! இங்குதான் போர்டன் அநியாயத்துக்கு நல்லவனாகிறான்! ஒருவேளை குற்றவுணர்வு?  


ஒருவேளை முடிச்சு போட்டதும், கேள்வி கேட்கப்பட்டதும் வேறு வேறு ஆட்களிடமா? 

வேற வேற ஆள்னாலும் ஒரு போர்டன், இன்னொரு போர்டன்கிட்ட சொல்லியிருப்பார்ல..உண்மையிலேயே தெரியலங்கிறேன்!

சொல்லியிருப்பான்! அப்போ அவனும் அநியாயத்துக்கு நல்லவன்? என்ன கொடுமை பாஸ்! :-)

அப்படியானால் தூக்கிலிடப்பட்டது?

இது கேள்வி! அருமையான கேள்வி..சூப்பரான கேள்வி...முடிச்சுப் போட்டவராத்தான் இருக்கணும்..இல்லேன்னா வெளில இருக்குறவர் ஃபீல் பண்ணியிருப்பாரே..ஆனாலும் குழப்பம்தான்!

குழப்பம்! அநேகமாக முடிச்சுப்போட்டவனே தொடர்ந்து போர்டன் காரெக்டரை மெயின்டெயின் பண்ணி இருக்கலாம்! ஆனாலும் குழப்பம்தான்!
  

நீதி மன்றத்திலும் போர்டன் ஒழுங்காகப் பதில் சொல்லாதது ஏன்? விரக்தியா?

அவருக்கே தெரியலையே..!

இல்லை பாஸ்!

போர்டன் நீதிமன்றத்தில் நிற்பது ஆன்ஜியரைக் கொன்ற குற்றச்சாட்டில்! உயிர்போகும் விஷயத்தில், கோர்ட்டில் எந்தவிதமான அக்கறையும், கவலையுமின்றி (உண்மையில் குற்றம் செய்யாதபோது ஏற்படும் வலியின்றி) போர்டன் இருப்பது உறுத்துகிறது! ஒருவேளை தன மனைவி சாரா இறந்ததால் ஏற்பட்ட விரக்தியா? அப்படியானால் இன்னொரு குழப்பம் அடுத்த கேள்வியில்!  

சாரா, ஒலிவியாவைக் காதலித்தது யார்?

சத்தியமா நான் இல்லீங்க..தூக்குல தொங்கினவரும் சாராவைக் காதலிக்கலை..’சாரி அபௌட் சாரா’ன்னு வெளில இருக்குற போர்டன்கிட்ட சொல்றாருல்ல! அதனால வெளில இருந்தவர்-சாரா, தொங்குனவரு-ஒலிவியா

சத்தியமா நானும் இல்லை! :-)

உண்மைதான்! 'சாரி அபௌட் சாரா’ன்னு வெளில இருக்குற போர்டன்கிட்ட சொல்றதால, அவருக்கு சாரா இறந்த விரக்தி இல்லை!
சாராவைக் காதலித்தது போர்ட னா? பெல்லனா? - இது சொல்லப்படவில்லை!
இறுதியில் உயிரோடு இருப்பவன் யார்?
ஆன்ஜியரிடம் கூறும்போது, We were both Borden. We were both Fallon என்கிறான்!
அதே போல் I loved Sarah. He loved Olivia! - என்கிறான்!


போர்டன் பற்றிய ரகசியத்தைத் தெரிந்து கொண்டதால்தான் சாரா தற்கொலை செய்தாளா?

ஆமாம், எங்கயாவது வெளிலபோகணும்னா இன்னொரு போர்டனைத் துணைக்கு அனுப்புறதா ஒரு சீன் வருமே..’இந்த மாதிரி என்னால வாழமுடியாது’ன்னு சாகற சீனுக்கு முன்னாடி சாரா சொல்லுமே!

நான் நினைத்தேன் சாராவுக்கு முதலிலேயே போர்டனின் ரகசியம் தெரிந்திருக்கும்! ஒலிவியா பற்றிய குழப்பத்தால் தற்கொலை பண்ணியிருக்கலாமென்று!
போர்டனைக் காதலிக்கும்போதே சாராவுக்கு தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு - சாரா வழியனுப்பியபின் வீட்டிற்குள் போர்டன்!- எங்களுக்குக் 'க்ளூ'வான அந்தக் காட்சி!

சராவுக்குத் தெரியும் ஆனால் ஒலிவியா முன் நடிக்கவேண்டிய கட்டாயம்! சாராவுக்கும், போர்டனுக்கும் இல்லையா?


போர்டன், ஆன்ஜியரின் பழிவங்களில் சிக்கியது தற்செயலானதா? அல்லது ஆன்ஜியரால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றா?

எதிர்பார்த்திருக்கலாம்..!

அப்படித்தான் நானும் நினைக்கிறேன்! எதிர்பார்த்திருக்கலாம்! அப்படியானால் கட்டருக்கும் அதில் பங்கிருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்!

கட்டர், ஆன்ஜியரின் பழிவாங்கலுக்கு உடந்தையாக இருந்தாரா? ஆன்ஜியர் பற்றிய உண்மை தெரிந்திருந்ததா?

உடந்தை இல்லை பாஸ்..ஆன்ஞியரே கட்டர்கிட்ட சொல்வானே ‘உங்களை நான் இன்வால்வ் ஆக வேண்டாம்னு சொன்னேன்’ன்னு..உடந்தைன்னா கடைசீல ஏன் போர்டன்கூட இருக்காரு!

ஆன்ஜியர் கட்டரிடம் ‘உங்களை நான் இன்வால்வ் ஆக வேண்டாம்னு சொன்னேன்’ன்னு சொல்வதுதான் குழப்புது! அப்படியானால் கட்டருக்கு, ஆன்ஜியர் ஏதோ கோல்மால் பண்ணுகிறான் என்பது புரிந்திருக்க வேண்டும்! 

அப்படியானால், போர்டனுக்கு நியாயமாக அந்த தண்டனை கிடைக்க வேண்டியதுதான் என்று நினைத்தாரா?

போர்டன் சாகிறவரைக்கும் ஆன்ஞியர் ரகசியம் கட்டருக்கே தெரியாதே..அதனால தண்டனை வாங்கிக் கொடுத்தார், தெரிஞ்சப்புறம் போர்டன் கட்சியில சேர்ந்துட்டார்.(தேர்தல் ஸ்பெஷல் எழுதி எழுதி இப்படியே வருது!

ஆன்ஜியரைத் நீர்த் தொட்டிக்குள்ளிருந்து காப்பாற்ற போர்டன் முயல்வதை அவர் நேரடியாகப் பார்த்திருந்தாரே! அதைவிடவும் அந்தத் தொட்டி எப்போதுமே உயிருக்கு உத்தரவாதம் இல்லாதது என்ற உண்மையும் அவருக்குத் தெரியும்! இருந்தும்...! 

அன்ஜியர் உயிர் பிழைத்ததை அவர் அறிந்திருக்கவில்லை! புத்திசாலித்தனமாக  டூப்ளிக்கேட்டைப்  போட்டு  கட்டரை  நம்பவச்சிடான்  அன்ஜியர் இல்ல? - இந்த  இடத்தில் எனக்குக் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கு அது எப்படின்னு! இன்னொரு தரம் ?


The Prestige


ஒவ்வொரு மேஜிக்கும் மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டது.


The Pledge - மேஜிக் நிபுணர் முதலில் ஒரு பொருளைக்காட்டி, பார்வையாளர்களைச் சோதிக்கச் சொல்வார்.


The Turn - அந்தப்பொருளை வைத்து அசாதாரணமான ஒன்றைச் செய்தல் (உதாரணம் மறையச் செய்தல்)


The Prestige - மறையச் செய்வதோடு நாம் மகிழ்வதில்லை.மறைந்ததை மீளக் கொண்டுவர வேண்டும். இதுதான் மிகவும் கடினமான மூன்றாவது பகுதி. இது தான் The Prestige!

இந்த மூன்று பகுதிகளையும் அடிப்படையாகக்  கொண்டு படம் நகர்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் லண்டனில் இருக்கும் இரு மேஜிக்  கலைஞர்களான ஆன்ஜியர் (Angier),அல்பிரட் போர்டன் (Alfred Borden) இருவருக்கும் இடையிலான தொழில் போட்டி, தனிப்பட்ட வாழ்க்கையின் பழிவாங்கல்கள் பற்றி சொல்லப்படுகிறது படத்தில்.

ஆன்ஜியர் (Hugh Jackman) - மேஜிக்கை ஒரு கலையாகப் பார்ப்பவன். போர்டன் (Christian Bale) - மேஜிக்தான் வாழ்க்கை, அதற்காக எதையும் தியாகம் செய்யலாம் என நினைப்பவன். அப்படித்தான் வாழ்கிறான்!


ஆன்ஜியரைக் கொன்றதற்காக நீதிமன்றத்தில் போர்டனுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கும் காட்சியிலிருந்து ஆரம்பித்து, சில வருடங்கள் முன், பின்னாக பயணிக்கிறது கதை.

ஆன்ஜியர், ஜூலியா (ஆன்ஜியரின் மனைவி), போர்டன் மூவரும் மேஜிக் காட்சிகளை உருவாக்கும் கட்டரிடம் வேலை செய்கிறார்கள். கை,கால் கட்டப்பட்ட நிலையில் பெரிய தண்ணீர் தொட்டிக்குள் போடப்படும் ஜூலியா அதிலிருந்து தப்பி வெளிவருவதுதான் ஹைலைட்! ஒவ்வொரு முறையும் 'கெட்டப்' மாற்றிக்கொண்டு பார்வையாளர் போன்று உட்கார்ந்திருக்கும் ஆன்ஜியர், போர்டன் இருவரும் காட்சியின்போது முறையே ஜூலியாவின் கால், கை கட்டி முடிச்சுப் போடுவார்கள்!

ஒருநாள் கை முடிச்சினை அவிழ்க்க முடியாமல் ஜாலியா இறந்துபோக, போர்டன் மீது சந்தேகப்படும் ஆன்ஜியர், இறுதிச் சடங்கின்போது 'நீ போட்டது எந்த வகையான முடிச்சு? எனக்கேட்க 'தெரியாது' என்கிறான் போர்டன். இந்தப் பொறுப்பற்ற பதிலால் ஆத்திரமடைகிறான் ஆன்ஜியர்.


போர்டன் Bullet Catching செய்யும்போது,ஆன்ஜியர் மாறுவேடத்தில் குழப்புவதற்காக வந்து பங்கேற்க, வந்திருப்பது யாரென்று புரிந்தாலும் எதுவும் செய்ய இயலாத சூழலில், போர்டனின் இரண்டு விரல்கள் 'அவுட்'. பதிலுக்கு போர்டனும் களத்தில் இறங்க, இப்போது அடுத்தவன் மேஜிக்கைக் குழப்புவது இருவருக்கும் உபதொழிலாகிறது.

வழமையான மேஜிக்குகள் ஜனங்களுக்கு அலுத்துவிட புதுமையாக ஏதாவது செய்ய வேண்டிய சூழ்நிலையில், திடீரென பிரபலமகிவிடுகிறான் போர்டன் தனது 'Transported Man' என்ற Illusion மூலம். அதாவது மேடையின் ஒரு பக்கத்தில் மறையச் செய்து ஒரே கணத்தில் மறுபக்கத்தில் தோன்றச் செய்வது! இதனால் குழம்பிப்போகும் ஆன்ஜியர் தனது எஞ்சினியர் கட்டரின் உதவியுடன், தன்னைப் போலவே தோற்றமளிக்கும் ஒருவனை வைத்து அதே மேஜிக்கை 'New Transported Man' என்ற பெயரில் செய்ய தொழில் சூடு பிடிக்கிறது.

இருந்தாலும் போர்டனின் மேஜிக் தந்திரம் என்ன? - இந்தக் கேள்வி ஆண்ஜியரை குழப்புகிறது.இதே தந்திரத்தைத் தான் போர்டனும் பயன்படுத்துகிறான் என்ற கட்டாரின் விளக்கத்தை ஏற்க மறுக்கிறான். தன்னுடைய உதவியாளினி (+ இந்நாள் காதலி)ஒலிவியாவை வேவு பார்பதற்காக போர்டனிடம் வேலைக்கு அனுப்ப, அவளுக்கு போர்டன் மீது காதல்வர, அந்தக் களேபரத்தில் போர்டனின் மனைவி சாரா தற்கொலை செய்து கொள்கிறாள் ஒலிவியாவும் போர்டனைப் பிரிந்து சென்று விடுகிறாள். ஒலிவியா போர்டனிடம் திருடிய டைரியைக் கொண்டு ரகசியத்தை அறிய முடியவில்லை ஆன்ஜியரால்! காரணம் அதில் Cryptography முறையில் எழுதப் பட்டிருப்பதால்.


போர்டனின் எஞ்சினியர், பெலனை (Fallon) கடத்தி, போர்டனிடம் நேரடியாகக் கேட்க அவன் டெஸ்லா பெயரைச் சொல்கிறான். (Nikola Tesla - எலெக்ட்ரிக்கல் துறையில் இவரது பங்களிப்பைப் பற்றி ஒரு பெரிய பதிவு போடலாம். தாமஸ் அல்வா எடிசனுடனும் இணைந்து பணியாற்றியவர்) ஆன்ஜியர் டெஸ்லாவைச் சந்திக்கிறான். அவனுக்காக அவர் உருவாக்கிக் கொடுத்த, ஒழுங்காக வேலை செய்யுமா இல்லையா என்றே தெரியாத ஒரு ஆபத்தான மெஷினோடு திரும்ப வருகிறான்.

இந்தமுறை, ஆண்ஜியரின் ட்ரிக்கை அறிய வரும் போர்டன், தண்ணீர் தொட்டிக்குள்ளிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் ஆண்ஜியரைக் காப்பாற்ற முயல்கிறான். ஆனால்....அஞ்சியரைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது! (படத்தின் முதலாவது காட்சி)

பிறகு என்னவாகிறது? - அது கிறிஸ்டோபர் நோலனின் மேஜிக்!


Christopher Priest என்பவரின் Novel ஐ அடிப்படையாகக் கொண்டு 2006 இல் வெளி வந்த படம். 
திரைக்கதை - Christopher Nolan, Jonathan Nolan 
இயக்கம் - Christopher Nolan
சிறந்த ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்சனுக்கான Oscarக்கு பரிந்துரைக்கப்பட்டது.


Are You watching closely?
படம் ஆரம்பிக்கும்போது கேட்கப்படும் கேள்வி, படம் முடியும்போதுதான் தெரிகிறது அது கிறிஸ்டோபர் நோலன் எங்களைப்பார்த்துக் கேட்ட கேள்வி என்று!


மேலே சொன்ன ஒழுங்கில் காட்சிகள் இருக்காது.கதை நேர்கோட்டில் பயணிக்காமல், வெவேறு காலத்தில் காட்சிகளின் ஒழுங்கு மாறியிருக்கும் (Nonlinear)


Mementoவில் இரண்டாவது காட்சியிலேயே (Scene) படத்தின் காட்சியமைப்பு புரிந்து விடும். காலத்தை பிரித்தறிய கலர்டோன் வேறுபாடு இருக்கும். இதில் அப்படி அல்ல. 'க்ளூ'வாக கதாபாத்திரங்களின் ஆடைகள், ஸ்டைல்.


அஞ்சியர், போர்டன் இருவரும் மற்றவர்களின் டைரியை மாறி, மாறி ஒரே நேரத்தில் படிப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். ஆனால் வேறு வேறு காலப்பகுதி.


பிடித்த காட்சி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது! எல்லாமே அசத்தல்!அதிலும் முக்கியமான சில - அஞ்சியரின் மேஜிக் காட்சியில் புகுந்து போர்டன் பண்ணும் அட்டகாசமான குளறுபடிகள், தற்கொலை செய்துகொள்ள முன் சாராவின் நடிப்பு, டூப்ளிகேட் அஞ்சியரின் அலப்பறைகள், போர்டனின் சாரா, ஒலிவியாவிடம் உண்மை சொல்ல முடியாத தவிப்புகள் (இதை இரண்டாம் முறை  படம் பார்க்கும் போதுதான் புரிந்துகொள்ள முடியும்)


முதன்முறை பார்க்கும்போது ஒரு குழப்பம், முடிவில் ஆச்சரியம்! இரண்டாம் முறை எல்லாம் தெளிவாகப் புரியும் (அதாவது காட்சியமைப்பு)


ஒரு நல்ல படத்தைப் பார்க்க விரும்பும் நண்பர்கள் கண்டிப்பாக பாருங்கள்!


சில குழப்பங்கள்...கேள்விகள்!
இது பற்றித் தனிப்பதிவிடும்படிஅண்ணன்,தானைத் தலைவன் செங்கோவி கூறியிருந்தார். படம் பற்றி எனக்கு வெளங்கியது (?!) படம் பார்த்த நண்பர்களின் கருத்துகள், பதில்கள் கிடைத்தால் பார்க்கலாம்!
ஒருமுறை பார்த்தவுடன் நியாயமாக எல்லோருக்கும் தோன்றக்கூடிய
கேள்விகள்!
போர்டன் போட்ட அந்த முடிச்சு தற்செயலா? திட்டமிட்டதா?
போர்டன், ஆன்ஜியர் இருவரில் யார் நல்லவர்? இருவருமா?
முடிச்சு பற்றி ஏன் போர்டனால், ஆன்ஜியரிடம்  ஒழுங்காகப் பதில் சொல்ல முடியவில்லை? ஒருவேளை முடிச்சு போட்டதும், கேள்வி கேட்கப்பட்டதும் வேறு வேறு ஆட்களிடமா? அப்படியானால் தூக்கிலிடப்பட்டது?
நீதி மன்றத்திலும் போர்டன் ஒழுங்காகப் பதில் சொல்லாதது ஏன்? விரக்தியா?
சாரா, ஒலிவியாவைக் காதலித்தது யார்?
போர்டன் பற்றிய ரகசியத்தைத் தெரிந்து கொண்டதால்தான் சாரா தற்கொலை செய்தாளா?
போர்டன், ஆன்ஜியரின் பழிவங்களில் சிக்கியது தற்செயலானதா? அல்லது ஆன்ஜியரால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றா?
கட்டர், ஆன்ஜியரின் பழிவாங்கலுக்கு உடந்தையாக இருந்தாரா? ஆன்ஜியர் பற்றிய உண்மை தெரிந்திருந்ததா?
அப்படியானால், போர்டனுக்கு நியாயமாக அந்த தண்டனை கிடைக்க வேண்டியதுதான் என்று நினைத்தாரா?


பதில்கள் இங்கே! http://umajee.blogspot.com/2011/02/are-you-watching-closely.html

Christopher Nolan

Tuesday, February 15, 2011

எஸ்.எம்.எஸ். செய்வினை! - நம்மவர்



ஒன்றரை வருடத்திற்கு முன், நண்பன் ஒருவனோடு பேசிக்கொண்டிருந்தபோது, தாயுடன் வந்த எங்கள் வயதொத்த ஒருவனைக் கண்டதும் ஆ...! எப்ப வந்தது? கையைக் காட்டிக்கொண்டே அருகில் சென்றான்.

லண்டனிலிருந்து ஸ்டூடண்ட் விசால போய் படிச்சிற்று வந்திருப்பான் - நினைத்துக் கொண்டேன். கொழும்பில் நிறையப் பசங்க   நிற்பாங்க  திடீர்னு  காணமுடியாது  லண்டன்  போயிருப்பாங்க ! ஒரு வருடம் சந்திக்காமல் இருந்திட்டு பார்த்தாலே எங்கயாவது வெளிநாடு போய் வந்தாயா? என்று கேட்பவர்கள் அநேகம். நண்பன் அவர்களோடு பேசிக்கொண்டிருக்க, அதுக்கிடையில...  


வாங்க ஒரு சின்ன Flashback!

இரண்டு வருடங்களுக்கு முன் ஏகன் ன்னு ஒரு அஜித்தின் மகா மொக்கைப்படம் ஒன்று வந்ததே ஞாபகமிருக்கா?

அந்தப் படம் வெளிவரும்போது அஜித் இலங்கைத் தமிழருக்கு எதிரானவர் என்று ஒரு பிரபல 'ஓட்டுமாட்டு', 'ஸ்டன்ட்' பத்திரிகை, போகிற போக்கில் கொளுத்திப்போட்டுவிட, அதை நம்பி நம்ம தன்மானத் தமிழர்கள் கொந்தளித்து, கொதித்து, கொப்பளித்..

நம்ம புலம்பெயர் தமிழர் சிலர் ஏகனைப் புறக்கணித்தார்களாம். நம்ம நண்பர்களும் பலர் Facebookல இதுக்கு ஒரு குரூப்பே ஓப்பன் பண்ணி வச்சிருந்தாங்க. அதில போய் பார்த்தா, நம்ம கூட படிச்ச தீவிர விஜய் ரசிகர்கள் எல்லாம் ஒண்ணு கூடி கும்மியடிச்சிட்டிருந்தாங்க. அடப்பாவிகளா தன்மானத்தக் காட்டிட்டீங்களேடா!

ஆனா ஒண்ணு! படத்தோட ஸ்டில்ஸ் பார்க்கும்போதே தெரிஞ்சிடிச்சு ....வெளங்கிரும்னு! எனக்குத் தோணிச்சு, ஒரு மொக்கைப் படத்தை எதுக்கு வீணாப் புறக்கணிக்கனும்? அது வழமையா தானா நடக்குறதுதானே? 

அப்புறம், எஸ்.எம்.எஸ் எல்லாம் அனுப்பினாங்க. கனடாவில இருந்தெல்லாம் வந்திச்சு. பயபுள்ளக சிலர் அதை சின்சியரா அனுப்பினாங்க. அப்புறம் படம் வந்ததும் முதல்ல அவங்கதான் பார்த்தாங்க வழக்கம்போல!

இப்போ எதுக்கு இதைச் சொல்றேன்னு கேக்குறீங்களா? இருங்க... நண்பன் திரும்பி வர்றான்...



'அவனைத் தெரியுமாடா?'


'இல்ல'


'அப்போ அவனோட கதை உனக்குத் தெரியாது?'


புரியாமல் பார்க்க,


'ஏகனைப் புறக்கணிக்கச் சொல்லி ஒரு மெசேஜ் வந்திச்சே..'


'எப்பவோ வந்திச்சு அதுக்கென்ன இப்போ?'


'கனடாவில இருந்து முதல்ல இவனோட மொபைலுக்குதான் வந்திச்சாம். கொழும்பில முதன்முதல் இவன் மொபைல்ல இருந்துதான் மற்றவங்களுக்கு மெசேஜ் போயிருக்கு'


'அதுக்கு?'


'பிடிச்சு 'உள்ள' போட்டுட்டாங்க. ரெண்டு நாளைக்கு முதல்தான் ரிலீஸ் பண்ணாங்களாம்!'
 

நாம ஒரு safe ஆன இடத்தில செட்டில் ஆகிட்டு, அடுத்தவன உசுப்பேத்தி அடிவாங்க விடுறதில இருக்கிற ஆனந்தம் இருக்கே அட அட அட!

டிஸ்கி - அப்பப்ப 'நம்மவர்' என்று ஒரு சீரிஸா (Series) எழுதலாம் என்று ஒரு ஐடியா - கிடைக்கிற வரவேற்பைப்(?!) பொறுத்து!  


   

Monday, February 14, 2011

The Notebook


ஒரு வயது முதிர்ந்த தம்பதி. அந்தக் கணவன் தன் மனைவிக்கு ஒரு Notebook இலுள்ள கதையை வாசித்துக் காட்டுகிறார். அது Noah, Allie என்ற இளம் காதலர்கள் பற்றிய கதை! 

1940 ஆம் ஆண்டு. தனது சம்மர் விடுமுறையைக் கழிக்க பெற்றோருடன் தெற்குக் கரோலினாவிலுள்ள Seabrook கிற்கு வருகிறாள் இளம் பெண் அலி. அங்கு ஒரு கார்னிவெல் கொண்டாட்டத்தில் நோவாவைச் சந்திக்க, படிப்படியாக அது காதலாக மாற, இருவருக்கும் இனிமையான விடுமுறையாகக் கழிகிறது. நோவா ஒரு மரம் வெட்டும் ஆலையில் வேலை செய்கிறான். ஒரு கைவிடப்பட்ட பழைய வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்லும் நோவா, அவளுக்காக அந்த வீட்டை வாங்கித் திரும்பக்கட்டித் தருவேன் என உறுதியளிக்கிறான்.


அலி- நோவாவின் காதல் அலி யின் பெற்றோருக்குத் தெரியவர, நோவா தங்கள் குடும்பத்திற்கு ஏற்றவன் இல்லை எனவும், அவனை விட்டு விலகிவிடுமாறும் கூற, இதைக்தெரிந்து கொண்ட நோவா அவளை வீட்டு விலகிச் செல்கிறான். அவனுக்கும் அலிக்கும் இடையிலான ஒரு வாக்குவாதத்திற்குப் பின் இருவரும் உறவை முறித்துக் கொள்கிறார்கள்.

விடுமுறை முடிந்து அலி குடும்பம் ஊரைவிட்டுச் சென்றதும், அவளுக்கு ஒரு நாளைக்கொரு கடிதம் வீதம் எழுதுகிறான் நோவா. அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அவன் கடிதம் எழுதுவதை அவள் அறிந்திருக்கவில்லை. அவளின் தாயாரால் மறைக்கப்படுவதால். சரியாக ஒரு வருடம் கடிதமெழுதி, பதிலில்லாததால், நிரந்தரமாகப் பிரிவதாக அடுத்த கடிதமும் எழுதுகிறான். 366 கடிதங்கள். பதில் இல்லை. நோவா தனது கிராமத்தை விட்டு அட்லாண்டா செல்கிறான்.


ஒருநாள் வேலைத்தளத்தில், பேர்ல்ஹார்பர் செய்தியைக்கேட்கும் நோவா இராணுவத்தில் சேர்ந்து உலகப்போரில் பங்குகொள்கிறான். அதேநேரத்தில் காலேஜில் படிக்கும் அலி, மருத்துவத்தாதியாக வோலண்டியராக சேர்ந்து காயமுற்ற இராணுவவீரர்களை பராமரிக்க, அங்கே Lon ஐச் சந்திக்கிறாள். Lon இன் இராணுவத் தரம், குடும்ப நிலை எல்லாம் தங்களுக்கு ஏற்றதாக இருக்க, அலியின் பெற்றோரால் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது.


இதேவேளை ஊர்திரும்பிய நோவா தன் தந்தையின் உதவியுடன் அந்தப் பழைய வீட்டை வாங்கி திருத்தி புதிதாக்கிவிடுகிறான். அவனுக்கு அலிக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டது தெரிந்திருந்தது. இருந்தும் அவள் திரும்பி வருவாள் என நம்புகிறான். வீட்டை விலைக்கு கேட்டுவரும் ஒருவருக்கும் விற்கவில்லை. அவளுக்காகக் காத்திருக்கிறான். தற்செயலாக பத்திரிகையில் அந்த வீட்டைப் பார்க்கும் அலி, நோவாவைத் தேடி வருகிறாள். பின்பு என்னவாகிறது... என்பது மீதிக்கதை.


அந்த வயது முதிர்ந்த பெண் தான் அலி. அவளால் தன்னை, தனது குடும்பத்தாரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவளது நினைவைக் கொண்டுவரவே ஒவ்வொருநாளும் அந்த புத்தகத்தை வாசிக்கிறார் நோவா. நோவா தூங்கியதும் அலி ஒவ்வொரு முறையும் அதில் எழுதி வைக்கிறாள் 'Read this to me, and I'll comeback to you'.  

2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த ஹாலிவுட் படம், Nicholas Sparks எழுதிய Notebook நாவலை அடிப்படையாகக் கொண்டது. 
   

Tuesday, February 8, 2011

The Isle


அமைதியான பெரிய ஏரி. அதற்குள் மிதக்கும் சின்னச் சின்ன மிதவை வீடுகள் (Floating cottages). அவற்றில் தங்கி ஓய்வெடுக்கும், மீன்பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு தரையிலிருந்து படகுச் சேவை, உணவு, போன்றவற்றைக் கவனித்துக் கொள்கிறாள் அந்த அழகான ரிசார்டை (Resort) நடத்தும்/வேலை பார்க்கும் வாய்பேசாத பெண் ஹீ ஜின்! தேவையாயின் பெண்களும் வரவழைத்துக் கொடுக்கப்படும். ஹீ ஜின் விருப்பப்பட்டால் அவளையும்!

அங்கு தங்க வருகிறான் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியான ஹூன் சிக். அவனிடம் அவளுக்கு எந்த விதமான ஈடுபாடும் இல்லை. ஒருமுறை அவன் அழுதுகொண்டிருப்பதைக் காணும் அவள் அவனுக்குள் இருக்கும் ஏதோ பிரச்சினையைப் புரிந்துகொள்கிறாள். அவன் மேல் ஒரு சிறு பரிதாபம் வருகிறது. தற்கொலைக்கு முயலும் அவனைக் காப்பாற்றுகிறாள்.


ஹூன் மீன்பிடிப்பதற்கு போட்டிருந்த தூண்டிலை எடுத்துப்பார்க்க அதில் ஒரு பொம்மை மீன். சிறு சிரிப்புடன் ஒரு புழுவை மாட்டி விடுகிறாள். தூண்டிலில் மீன் சிக்கியவுடன் வந்து பார்க்கும் அவனைச் சிரித்தவாறே, ஊஞ்சலில் ஆடிக்கொண்டு பார்க்கிறாள். தூண்டிலில் இருந்து மீனை விடுவித்து, மீண்டும் கடலில் விடும் அவனை ஆச்சரியமாகப் பார்க்கிறாள். மறுநாள் ஹூன் கம்பியினால் வளைத்துச் செய்யப்பட்ட ஊஞ்சலாடும் பெண் உருவப் பொம்மையை அவளுக்குப் பரிசளிக்கிறான்.

ஒரு மழை நாளில் அவனுக்காக ஒரு பெண் அனுப்பப்பட, அவளை அவனது மிதவையில் கொண்டு சென்று விடும் ஹீ ஜின் அந்தப்பெண் மீது லேசான பொறாமையுணர்வு தலைதூக்க, கரைக்குத் திரும்ப அவளை அழைத்துவரச் செல்லவில்லை. இதனால் அன்றிரவு முழுதும் அங்கேயே அந்தப்பெண் தங்கிவிட நேர்கிறது. அவன் அந்தப்பெண்ணுடன் வெறுமனே போழுதைக்கழிக்கவே விரும்புகிறான். அவனுடைய செயலால் அவன்மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட அவன் கொடுக்கும் பணத்தை மறுத்துவிடுகிறாள். அவன் செய்த சைக்கிள் பொம்மையை எடுத்துக் கொள்கிறாள் மறுநாள் அவளைக் காணாததால் தேடிவரும் பெண்தரகன், அவனைத் தாக்கிவிட்டு, அழைத்துச் செல்கிறான். ஹூனைப் பிடித்துப் போனதால் தனது விடுமுறை நாட்களில் அவனைச் சந்திக்க வருகிறாள் அந்தப்பெண்.


ஒருமுறை ஹூனைத்தேடி அந்த ஏரிக்கு வரும் போலீசாரைப் பார்த்தவுடன் தற்கொலை செய்ய முயலும் ஹூனை மீண்டும் காப்பாற்றி, மறைவான இடத்தில் அவனுடைய மிதவையை நிறுத்தி வைக்கிறாள் ஹீ ஜின். இந்நிலையில், மீண்டும் ஹூனைச் சந்திக்க வரும் அந்தப் பெண் உற்சாகத்துடன் படகில் ஏறுகிறாள். படகைச் செலுத்தும் ஹீ ஜின், ஹூனுடைய மஞ்சள் மிதவையைக் கடந்து வேறொரு மிதவைக்கருகில் நிறுத்த, குழப்பத்துடன் இறங்கும் அந்தப் பெண் உள்ளே எட்டிப் பார்க்கிறாள். அதன் பிறகு?

அவர்களிடையே காதல் உருவாகிவிடுகிறது. அது முழுக்க வன்முறையாலேயே வெளிப்படுத்தப்படுகிறது. உணரப்படுகிறது.  ஓரிரு காட்சிகளைக் கண்களை மூடியவாறே என்னால் பார்க்க(?!) முடிந்தது. தைரியசாலிகள் நேரடியாகப் பார்க்க முயற்சி செய்யலாம். குறிப்பாக ஹூன், ஹீ ஜின்  தற்கொலைக்கு முயலும் காட்சிகள்.

ஹூன் சிக் எப்படித் தற்கொலைக்கு முயல்கிறான் என்றால், நான்கைந்து முட்கள்  கொண்ட தூண்டிலை விழுங்கி, பின்னர் அதைப் பலங்கொண்ட மட்டும் இழுத்து பார்க்கிறான் பின்னர் அப்படியே தண்ணீருக்குள் குதித்து விடுகிறான். அவனைக் காப்பாற்ற வேண்டுமெனில் தூண்டிலை இழுக்க வேண்டும். அப்படியே அவனைக் காப்பாற்றி விடுகிறாள்.

ஹீ ஜின் அதற்கும் மேல். ஒருநிலையில் ஹீ ஜின் பற்றித் தெரிந்ததும் அவளிடமிருந்து விடுபட்டுச் செல்ல முயற்சிக்கிறான் ஹூன் சிக். அவள் இதை எதிர்பார்த்தே இருந்திருக்கிறாள். கயிற்றின் ஒரு முனை ஹூன் சிக் தப்பிச் செல்லும் படகில் கட்டப்பட்டிருக்கிறது. மறுமுனையில் இணைக்கப்பட்ட தூண்டில் முள்ளைத் தனது..... அதைச் சொல்ல முடியாது முடிந்தால் பார்த்துக் கொள்ளுங்கள். (முடியல! ஏண்டா பார்த்தோம்னு ஆயிடிச்சு!)

என்னால் சிறுபடகு, கப்பல், படு மோசமான பாதையினூடான பயணங்களில் எல்லாம் வாந்தி எடுக்காமல் செல்ல முடியும்! எடுத்ததற்கெல்லாம் வாந்தி எடுப்பவர்கள் பலர். அவர்கள் இந்தப்படத்தைத் தவிர்க்கலாம். அந்தளவிற்கு பாதிப்பான காட்சிகளா என்று எனக்குத் தெரியவில்லை. அனால் வெனிஸ் படவிழாவில் திரையிட்டபோது பலர் வாந்தி எடுத்ததாச் சொல்கிறார்கள். 
 

அழகான அமைதியான இயற்கைக் காட்சிகள். மிக மெதுவாக நகரும் காமெரா, ஒரு கவிதைபோல பயணிக்கும் கதை, மிகக் குறைந்த வசனங்கள். தமிழ் சினிமாவோடு ஒப்பிடுகையில் கொலையை எல்லாம் படு டீசண்டாகத்தான் காட்டுகிறார் இயக்குனர். சொல்லப் போனால் கொலை செய்வதைக் காட்டவே இல்லை.  ஆனால் தற்கொலை தான் முடியல! சுயவதை என்பது எப்படி இருக்கிறது என்று 'டீப்'பா காட்டியிருக்கிறார் இயக்குனர். இதற்கு 'பியானோ டீச்சர்' எவ்வளவோ பரவாயில்ல! 

2000 ஆண்டில் வெளியான இந்த தென்கொரியப்பட்ம் சொந்த நாட்டில் போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், உலக  அளவில்  பேசப்பட்ட, சர்ச்சைக்குரிய திரைப்படம்.

இயக்கம் - Kim Ki-duk
மொழி - Korean           

Friday, February 4, 2011

அப்பரும் ஐ. சி. நம்பரும்


நண்பன் மிகவும் சந்தோஷப்பட்டான். அவசரமாக ஒரு சிறு பேப்பரில் எழுதினான். அவனுக்குப் பிடித்த ஒரு பெண்ணின் ஐ.சி.(ஐடென்ட்டிட்டி கார்ட்) நம்பர் அது.
சரி அத வச்சு என்ன பண்ணலாம்?

அவளுடைய பிறந்த நாளைக் கண்டுபிடிக்கலாம். அதுக்குத்தான் சந்தோசம்!
முதல் இரண்டு இலக்கம் பிறந்த ஆண்டு அது மட்டும் எங்களுக்குத் தெரிந்திருந்தது.

'எப்பிடிடா பாக்கிறது?'
'அடுத்த மூண்டு நம்பர்ல தாண்டா இருக்கு'

'ஒவ்வொரு மாசமா கழிச்சு பாக்கணும்டா...சின்ன வயசில இங்க்லீஷ் புக்ல இருந்திச்சுடா'
அந்நிய மொழி பிடிக்காதென்ற ஒரே காரணத்துக்காக அதைப் படிக்கவில்லை (வேற ஒண்டுமில்லை)

கண்டு பிடிக்கும் பொறுப்பு எனது தலையில்.

நான் பொதுவாக வீட்டில் யாருடனும் அதிகமாக கதைப்பதில்லை. இது போன்ற முக்கியமான(?) விஷயங்களில் அதைப் பார்க்க முடியுமா?

வீடு வந்ததும் அப்பாவிடம் படு இயல்பாக ஆரம்பிதேன்,

அப்பா இந்த ஐ.சி.நம்பர்ல இருந்து date of birth எப்பிடி பாக்கிறது?
அப்பா சொன்னார்.

இப்போ நம்பர் 84220 ன்னு ஆரம்பிச்சா 84 பிறந்த ஆண்டு.220 ல இருந்து 31,30 என்று மாறி மாறிக் கழிக்க (பெப்ரவரிக்கு மட்டும் 29),  8 முறை கழித்த பின், இறுதியில் 7 எஞ்சும். ஆகவே 8 ம் மாசம் 7 ம்  திகதி. இதுதான் விஷயம்! (இவ்வளவு தானா?)

'ஒக்கே' நான் பெரிதாக சுவாரஸ்யமில்லாமல்.
'ஏண்டா?' அப்பா
'இல்ல சும்மாதான்'

அப்பா மீண்டும் தனது வேலையில் கவனமாக,
யாரோ என்னையே கவனிப்பது போல்......அக்கா!

படித்துக் கொண்டு, இவ்வளவு நேரம் நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டு.
ஆகா இவள் வேற.. டவுட் வந்திட்டுது!
இப்போ உடனே என்னோட ரூமுக்குள்ள போக ஏலாது. பாத்திடலாம் யாருகிட்ட?

நான் ரேடியோவைப் போட்டேன். ஒரு பாட்டு!
டி.வியை 'ஒன்' பண்ணி சானல்களை மாற்றி,
நேரத்தைக் கடத்தி, சும்மா நோட்டம் விட்டேன். யாரும் கவனிக்கல.

இப்ப போகலாம். (எப்பிடிடா உன்னால மட்டும்?!)

மெதுவாக, படு இயல்பாக எனது ரூமை நோக்கி நடக்க,

பின்னாலிருந்து அப்பாவின் குரல்,

'தம்பி! girls எண்டா 500 ஐ டிடக்ட் பண்ண வேணும்'

'-------'


குறிப்பு 1: நாங்கெல்லாம்  அப்பாகிட்டயே 'பல்ப்' வாங்கினவய்ங்க!

குறிப்பு 2: நான் திரும்பி வந்துவிட்டேன்.
இது கூட பரவாயில்லை. அவர் சொல்லியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்? திரும்ப அவரிடம் நானே போய் 500 கூட இருக்கே ன்னு கேட்டு, வலிய மாட்டி...ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா!

குறிப்பு 3: இது சிலவருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்... அல்ல அல்ல சரித்திரம்!