Showing posts with label வவுனியா. Show all posts
Showing posts with label வவுனியா. Show all posts

Wednesday, July 23, 2014

மெரூன் கலர் ஜட்டி!

வாழ்வின் துன்பங்களுக்கு உயிரின், உடைமைகளின் இழப்புகள் மட்டுமே காரணமாக அமைவதில்லை. மாறாக ஒரு மெரூன் கலர் ஜட்டியின் வரவு கூட காரணமாக அமைந்துவிடலாம்.

நெடுந்தூரப் பேரூந்துப் பிரயாணங்கள் எனக்குப் புதிதல்ல. கொழும்பு - யாழ் குறைவாகவே இருந்தாலும், கொழும்பு - திருகோணமலை வாரம் இருமுறை தொடர்ந்து ஒன்றரை வருடங்கள் பயணித்திருக்கிறேன். ஆனால் அவையெல்லாம் குளிரூட்டப்பட்ட கொகுசுப் பேரூந்துகளின் பாதுகாப்பான பிரயாணங்கள். உடைமைகள் விஷயத்தில் எந்தக் கவலையுமின்றி, எல்லாவற்றையும் இருக்கைக்கு மேலே வைத்துவிட்டு நிம்மதியாகத் தூங்கிவிடலாம். வசதி வாய்ப்புகள் கவலையீனத்தையும் சேர்த்தே பழக்கப்படுத்திவிடுகின்றன போலும்! பாருங்கள் என் தவறை நியாயப்படுத்த எவ்வளவு பேச வேண்டியிருக்கிறது?

கொழும்பிலிருந்து வவுனியா பகலில் செல்ல வேறுவழியில்லாமல் ஒரு சாதா பேரூந்தில் ஏறி, யன்னலோரம் அமர்ந்து மேலே இடமில்லாததால் மடியில் பயணப்பையை வைத்திருந்தேன். அருகில் அதே போல ஒரு சிங்கள இளைஞனும் அமர்ந்திருந்தார். அர்ஜூனின் மொக்கைப் படம் ஒரு டிவியில் போய்க்கொண்டிருந்தது. படம் முடிந்து பாதித்தூரத்தில் குழந்தையுடன் வந்த முஸ்லிம் பெண்மணிக்கு தன் இருக்கையைக் கொடுத்துவிட்டு எழுந்து நின்றுகொண்டார் அந்த சிங்கள இளைஞன். பின்னர் வேறு இருக்கை கிடைக்க, என்னிடமிருந்த அவரது பையையும் பெற்றுக் கொண்டு அமர்ந்துவிட்டார்.

பிறருக்கு உதவி செய்வது எனக்கு உவப்பானதுதான். ஆனால் அதன் பின் விளைவுகள் அவ்வளவு உவப்பானதாக இருந்ததில்லை என்பது என் அனுபவம். இருந்தாலும் ஒரு சமூக அக்கறையாளனாகவோ, ஃபேஸ்புக் போராளியாகவோ மாறும் முனைப்போ, மமதையோ என்னவோ ஒன்று. என் ராசி தெரிந்தும் ரிஸ்க் எடுத்துவிடுகிறேன். இடையில் இறங்கி விட்டு திரும்ப அமரும்போது அந்தப் பெண்மணி எனக்காக வழிவிட்டு நகர்வது கஷ்டமாக இருக்க, "உங்களுக்கு ஈசின்னா அந்த சைட்ல இருங்க" என்றேன். சிறு புன்முறுவலோடு 'தாங்க்ஸ்'.

அந்தக் குழந்தை சிரித்துக்கொண்டே என்கையைப் பிடித்து விளையாடியது. மறுபக்கத்தில் மூவர் அமரும் இருக்கையின் கரையில் இருந்த தாடிவைத்த அண்ணன் குழந்தையோடு அவ்வப்போது கதைகேட்டு சிரித்தபடியே வந்தார். அந்தப்பெண்மணியின் கணவர். "இதில வரப்போறீங்களா?" மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி அமர்ந்துகொண்டார். நான் அவரது இடத்தில் அமர்ந்துகொண்டேன். மேலே பையை வைக்க இடமிருந்தது. வைத்தேன். அவ்வளவுதான். இறங்கும்போது இருக்கவில்லை.

தெரியாமலோ, தெரிந்தோ, மாறியோ, மாறாமலோ யாரோ எடுத்துக் கொண்டு மதவாச்சியில் இறங்கிவிட்டார்கள். எனது பயணப்பை இருந்த இடத்திற்கு அருகில் இன்னொரு சிறிய பை இருந்தது. ஒருவேளை  மாறியிருக்கக் கூடும் என நம்ப விரும்பியபடி இறங்கினேன். கண்டக்டர் கேட்டார். இல்லை என்றேன். "தூங்கிட்டா இருந்தீங்க?" ஒற்றைக் கேள்வியுடன் நேரம் அனுமதிக்காததால் யாழ் விரைந்தது பேரூந்து.

'தூங்கிட்டா இருந்தீங்க?' - அப்போதைக்கு அதுதான் தமிழின் ஆகச்சிறந்த கெட்ட வார்த்தையாக தோன்றியது.

ஒருகணம் எதுவும் தோன்றாமல் வெறுமையாக இருந்தது, ஓர் பயணத்தின்போது பையைத் தொலைத்துவிட்டு  வெறுங்கையுடன் நிற்கும்போது ஏற்படும் உணர்வே வெறுமை எனப் புரிந்தது. அடுத்தகட்ட நடவடிக்கையாக வவுனியாவில் எங்கள் வழமையான சஹானாஸ் துணிக்கடை நோக்கி பஜார் வீதியூடாக நடந்தேன். கடையில் தெரிந்த முகம் ஒன்றையும் காணவில்லை. 'ஒருவேளை ஒரே பெயரில் வேறு கடையோ?' நீளமான உட்பகுதிக்குச் செல்கையில் முதலாளி எதிர்ப்பட்டார்.
"ஹாய் நானா! எப்பிடி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் தம்பி வாங்க.." குத்துமதிப்பாக குழப்பமாக பேசினார்.

எட்டு வருஷத்துக்கு முதல் பார்த்தது. அவர் தம்பிகளுக்கு அடையாளம் தெரியும். யாரையும் காணவில்லை. அவசரமாக என்னென்ன தேவையென்று சொல்லி, அவசரமாக தெரிவு செய்து, எனக்கு உதவிய கடைத்தம்பி சிவப்பு நிறத்தில் அண்டர் வெயார் எடுத்துக் காட்டினான். "சரிய்யா ஆனா லைட் கலர்ல வைங்க பாஸ் ப்ளூ, வைட், ஆஷ் இப்பிடி..." "ஒக்கே பாஸ்" பவ்வியமாக சொன்னான்.

இடையில் ஒருவர் வந்து, "உங்களை நான் பார்த்திருக்கேன். எங்க இருந்தீங்க?" என்றார். சொன்னேன். விலை பார்க்க அவகாசம் இருக்கவில்லை. சஹானாசில் எனக்கு இதற்கு முன்னர் பேரம் பேச எப்போதும் அவசியம் இருந்ததில்லை. அதே ஞாபகத்தில் கவுண்டருக்கு வந்தேன்.
"உங்களுக்கு குறைச்சுப் போட்டிருக்கேன்"அதே தம்பி பவ்வியமாக சொன்னான். ஆறாயிரம் ரூபாய் வந்தது.
வரும்போது முதலாளி "தம்பி எங்கடா இப்ப?" சொன்னேன். "இந்தப்பக்கம் வந்தா வாடாப்பா!" என்றார் வழமைபோல அடையாளம் தெரிந்தவராக.

கொஞ்சம் ஓய்வானதும், மனம் தொலைந்துபோனவை பற்றிய கணக்கு போட்டது. அதிகமில்லை இரண்டு ஷேர்ட், இரண்டு பாண்ட்ஸ், இரண்டு ஜட்டி, ஃபோன் சார்ஜர், பயணப்பை என மொத்தம் இருபதாயிரத்துக்கு கணக்கு வந்தது. ஆயாசமாக இருந்தது. பணம் என்பதை விட தேடி வாங்கியது என்பதும், ஒருமுறை மட்டுமே அணிந்தவை என்பதும் சற்றே உறுத்தியது. எடுத்தவனுக்கு லக் என்று ரணகளத்திலும் யோசிக்கத் தோன்றியது. மற்றபடி அலட்டிக் கொள்ளவில்லை.

உறவுகளைச் சந்தித்ததும் அளவளாவியதும் மகிழ்ச்சியை, மனநிறைவைக் கொடுத்தது. அது ஓரிரு நாட்களோ, ஓரிரு மனித்தியாலங்களோ என்பது பொருட்டல்ல!

ஆனால் இந்தச் சம்பவம் என்னை நினைத்து மிக ஆச்சரியப்பட வைக்கிறது. வழக்கமாக சிறு சம்பவங்களுக்கே மனம் குழம்பி அதிகம் யோசிக்கும் நான், ஓரளவு பெருசம்பவமான இது குறித்து அலட்டிக் கொள்ளாமல் விட்டதுதான். என்னமோ போனது போகட்டும் என்கிற மனநிலையா? எவ்வளவோ பாத்திருக்கோம் இது என்ன என்கிற மனப்பக்குவத்தை காலம் கற்பித்து விட்டதா? அல்லது எது நடந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒருவித ஜென் மனநிலைக்கு வந்துவிட்டேனா? புரியவில்லை!

காலையில் கடைப்பையைத் திறந்து பார்த்ததும் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. மெரூன் கலரில் இரண்டு ஜட்டிகள் இருந்தன. மேற்கண்ட சம்பவத்தின் ஆகப்பெரிய சோகமாகத் தோன்றுவது, நான் மெரூன் கலர் ஜட்டி அணிந்ததே. வாழ்க்கைல இப்படியொரு சோகத்தை உணர்ந்ததே இல்லை என்பதுபோல, அந்த மெரூன் கலர் ஜட்டி அந்தத் துன்பியல் சம்பவத்தை நினைவூட்டிக் கொண்டே இருப்பது போலப்படுகிறது.

சந்தர்ப்பம் என்பது சமயங்களில் மோசமான எதிரி. அது சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்து மிக மோசமாகப் பழிவாங்கிவிடுகிறது. எந்த அளவு மோசமானது என்றால்... மெரூன் கலர் ஜட்டி அணியவைத்துவிடும் அளவுக்கு!

Wednesday, October 9, 2013

ரணேஸ் வாத்தி!

“Sorry! வவுனியால இருந்து மச்சான் வந்திருந்தார்.. அதான் லேட்டாயிட்டுது” 
ஒரு மாலை சந்திப்பின் போது நண்பன் சத்யன். 

"வவுனியாலருந்தா எங்க ஏரியால்ல! எங்க வயசா?"
"இல்ல வயசு கூட... டீச்சரா இருக்கார்"

ஏனோ கேட்கவேண்டும்போலத் தோன்றியது. உள்ளுணர்வாகவும் இருக்கலாம்.

"உங்க சொந்த இடம்?"
“அல்வாய், தெரியுமா?”
“இல்ல. எங்களுக்கு கூட ஒருத்தர் சயன்ஸ் படிப்பிச்சார் வவுனியால. அவரும் அல்வாய்தான்”
“என்ன பேர்?”
“ரணேஸ்”
“அவர்தான் ஆள்”

அளவு கடந்த மகிழ்ச்சியுடன் விசாரித்தேன். சொந்தமாக அச்சகம் வைத்திருப்பதாகவும், மணமுடித்து  இரண்டு பிள்ளைகள் இருப்பதையும் சொன்னான். 

"அந்த டைம்ல ஒரு லவ்வும் இருந்திச்சு"
"அவதான் வைஃப்" சிரித்துக்கொண்டே சொன்னவன், அவரிடம் வந்து பேசும்படி அழைத்தான்.

"இல்ல வேணாம். ஞாபகமிருக்குமா தெரியல" தயக்கத்துடன் மறுத்தேன். அவனும் என்னைப்போலவே ஒருவன் என்பதால் வற்புறுத்தவில்லை. சற்றுத் தூரத்தில் சத்யன் வீட்டு வாசலில் விடைபெறுவதற்காக நின்று பேசிக்கொண்டிருந்தவரைப் பார்த்தேன். திரும்பி நின்றுகொண்டிருந்ததால் முகம் தெரியவில்லை. பதின்மூன்று வருஷமாகிவிட்டது. முன்பிருந்ததை விட இன்னும் பருத்திருந்தார்.

அவர் புறப்பட்டுச் சென்றவுடன் யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை போய்ப் பேசியிருக்கலாமோ? இயல்பாகவே ஏதோ ஒரு கூச்சம், தயக்கம் தடுத்துவிடுகிறது. பின்னர் அதற்காக வருந்துவது. பல சந்தர்ப்பங்களில் இப்படி நடந்தாலும் இன்றுவரை என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை, அல்லது முயலவில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்று மூன்று வருடங்களுக்குப் பின் மீண்டும் பள்ளியில் எனது கணித ஆசிரியரை  பார்த்தபோதும் அப்படித்தான் ஒதுங்கிச் சென்றுவிட்டேன்.நான் அவருடைய மிக விருப்பத்துக்குரிய மாணவர்களில் ஒருவனாக இருந்தேன். எத்தனை பேர் படித்திருப்பார்கள்? என்னை ஞாபகமிருக்குமா? நானே கேள்வி கேட்டு என் செயலை நியாயப்படுத்திக் கொண்டேன். எதிர்பாராமல் அன்று மதியமே, "டேய் உமா!" குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். "எப்பிடிடா இருக்கே? எங்கடா இவ்வளவு நாளா இருந்தே?" என் தலைமுடி கோதி, அவர் அன்பாகப் பேசியபோது, குற்றவுணர்ச்சியுடன் தடுமாறி நின்றிருந்தேன்.


ணேஸ் வாத்தி! - இங்கு வாத்தி என்பது மரியாதைக் குறைவான வார்த்தை அல்ல. வாத்தி என அழைக்கப்படுபவர் எங்களில் ஒருவர். மனதிற்குப் பிடித்த, எப்போதும் எங்கள் அன்பிற்குப் பாத்திரமான, நெருக்கமான ஆசிரியரை வாத்தி என்றே அழைப்பது வழக்கம்.

ரணேஸ் வாத்தியைப் பார்த்ததுமே எங்கள் எல்லோருக்கும் பிடித்துக் கொண்டது. சிலபேருக்கு மட்டுமே பார்த்தவுடன் ஈர்த்துக் கொள்ளும் முகம் அமைந்துவிடுகிறது. நடிகர் ரஜினியையும், விஜயையும் எந்தக் குழந்தைக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறதே அதுபோல! ரணேஸ் வாத்தியிடமும் கொஞ்சம் அன்றையகால நடிகர் விஜயின் சாயல் இருந்தது. பேசும்போது முகத்தில் சிநேகபாவமும், சிறுபுன்னகையும் கலந்திருக்கும். அப்போதுதான் ஆசிரியர் கல்லூரியில் படிப்பை முடித்து, எங்கள் பள்ளியில் இணைந்திருந்தார். 

அந்தக் காலப்பகுதியே எனது பாடசாலை நாட்களின் மிக மகிழ்ச்சியானதாக இருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஏராளமான மாணவர்களையும், ஆசிரியர்களையும் அரவணைத்துக் கொண்டது, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் . மாணவர்களின் தொகை எதிர்பாராத அளவு திடீரென அதிகரிக்க, மாலைநேர வகுப்புகள் நடாத்தி, ஓரிரு மாதங்களிலேயே மூன்றுமாடிக் கட்டடங்கள கட்டி முடிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.

நாங்கள் எல்லோரும் அங்கு படிக்கக் கிடைத்ததை பெரும் வரப் பிரசாதமாகவே கருதினோம். அதற்குக் காரணம் இருந்தது. யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ எறிகணை வீச்சு, விமானத்தாக்குதல்களுக்கு மத்தியில் வளர்ந்தபோதும் அதையெல்லாம் விட மோசமானதாக இருந்தது ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சில ஆசிரியர்களிடமிருந்து நாங்கள் எதிர்கொண்ட வன்முறைதான். ஆனால் இங்கே அராஜகம் செய்யும் ஆசிரியர்களை மாணவர்களும்கூட 'தட்டிக் கேட்கும்' சுதந்திரம் இருப்பதாகப் பலரும் நம்பியதால் பள்ளிக்கு தனிப்பெருமை இருந்தது. யாழிலிருந்து வந்த சில 'மதிப்புக்குரிய' ஆசிரியர்கள் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்புகள் போலப் பாவமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

என்ன ஒரேயொரு சோகம், அது ஒரு இருபாலார் படிக்கும் பள்ளி என்பதை அவ்வப்போது யாராவது ஞாபகப்படுத்தித் தொலைத்தார்கள். இதுகுறித்து நண்பனொருவன் தீவிர கவலையை வெளிப்படுத்தினான்.

"எங்கட வகுப்புக்கு மட்டும் எட்டு டிவிஷன்கள் இருக்கு. ஒவ்வொண்டிலயும் குறைஞ்சது நாப்பது பேர். மொத்தமா முந்நூற்றிருபது பேர் இருக்கிறம். இதுல கேர்ள்ஸ் எத்தினைபேர் மச்சான்?"

"இருபது பேர் வருமா?"

"ரெண்டே ரெண்டு டிவிஷன்ல மொத்தமா பதினைஞ்சு பேர் இருக்கலாம்.. ஏண்டா இப்பிடியொரு மிக்ஸ்ட் ஸ்கூல் வச்சிருக்கிறாங்கள்? தனியப் பசங்கள மட்டும் படிக்க விடலாமே?"
- பெண்களுக்கென்று பிரத்தியேகமாக இரு பெரிய கல்லூரிகள் இருந்தன.


"டேய் தவமணி கொன்வெண்டுக்கு வந்திருக்கானாம்" - பரபரப்பாக செய்தியைப் பகிர்ந்துகொண்டான் ஒருவன். 

யாழில் பிரபல கல்லூரியில் அட்டகாசம் செய்தவர் அவர். நாங்கள் கேள்விப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தினார் லிங்கநாதன் ஆசிரியர். பழக்க தோஷத்தில் கைகள் யாரையாவது அடிக்கப் பரபரக்க, கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு மிகவும் நொந்து போயிருப்பதாகவும் மேலதிக தகவல் சொன்னார். செய்தி கேட்டு அகமகிழ்ந்து போனோம். ஒருவேளை பாதுகாப்புக் கருதித் திட்டமிட்டுத்தான் அங்கே இணைந்துகொண்டாரோ என்ற சந்தேகமும் வந்தது.

மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒருவன் ஆவேசமாகக் கூறினான் “தவமணி மட்டும் இங்க வந்திருக்கோணும்டா! நல்ல பாடம் படிப்பிச்சிருக்கலாம்!”

அராஜகமான மனிதர்களுடன் பழகிய எங்களுக்கு, தோழமையுடன் பேசுகின்ற, எங்கள் பேச்சையும் காதுகொடுத்துக் கேட்கின்ற, பரஸ்பரம் மரியாதை கொடுக்கின்ற ஆசிரியர்கள் என்றும் மனதில் நிறைந்திருப்பதில் ஆச்சரியமென்ன இருக்கமுடியும்? அவர்களுடன் அளவளாவிய ஒவ்வொரு பொழுதும் எப்போதும் மறக்க முடியாதவை.

பள்ளியில் ரணேஸ் எங்களுக்கு அவர் வகுப்பெடுக்கவில்லை. எங்களுக்கு பிரத்தியேக குழு வகுப்பு ஒன்றை எடுத்துக் கொண்டிருந்த லிங்கநாதன் ஆசிரியர் வெளிநாடு சென்றுவிட, ரணேஸ் எங்களோடு இணைந்துகொண்டார்.


கிரி வீட்டில்தான் வகுப்பு. தனியறை ஒன்றில் பெரிய டைனிங் டேபிளை சுற்றி எங்கள் Gang அமர்ந்திருக்கும். அப்போது Gang என்ற சொல்லையே புதிதாகப் புழக்கத்தில் கொண்டுவந்தவன் கிரிதான். கிரி, பவன், சாந்தன், சதீஷ், மரூ, விம்மி, 'பிரபுதேவா' கிரி, ரஜீவ், திலீ இவர்களுடன் நான்.

உண்மையில் என்னையும், திலீயையும் ஆரம்பத்திலேயே, 'இவங்கள் சரிப்பட்டு வரமாட்டாங்கள்' என்று Gang இல் சேர்க்கவில்லை. சாந்தன் வேறு பின்னாட்களில்தான் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் இணைந்திருந்தான். ஆக, நாங்கள் மூன்றுபேரும் வெளியிலிருந்து அவ்வப்போது 'நக்கல் நல்லாதரவு'வழங்கிக் கொண்டிருந்தோம். தீபாவளி, வருஷத்துக்கு ஒரே நிறத்தில் புத்தாடைகள், சிலிப்பர் என யூனிஃபோர்மில் வந்து, ஏரியா நாய்களுக்கெல்லாம் அனாவசிய டென்ஷன் கொடுப்பது Gang இன் முக்கிய பணி!

ஒரு வகுப்பிற்குரிய வரைவிலக்கணங்கள் எதற்குள்ளும் அடங்காதது அந்த பாடவேளைகள். எங்களுக்கு ஒரு நல்ல நண்பனாகவும், சமயங்களில் அண்ணனாகவும் இருந்தார். எந்தத் தயக்கங்களுமின்றி எதைப்பற்றியும் பேசும், விவாதிக்கும் சுதந்திரம் இருந்தது. அந்தவயதில் ஒரு விஞ்ஞான ஆசிரியரிடம் கேட்பதற்கு எங்களிடம் ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. அதையெல்லாம் கேட்பதற்கு நல்ல ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லை.

ரணேஸ் வாத்தியிடம் எதையும் மனம் விட்டுப் பேச, கேட்க முடிந்தது. ஆனால், நாங்கள் கேட்ட பல சந்தேகங்கள் அவருக்குமே இருந்ததுதான் கொடுமை!


ரண்டு மணிநேர வகுப்பில் முக்கால் மணி நேரம், சில சமயங்களில் அரைமணி நேரமே தீவிரமான படிப்பு, ஏனைய நேரம் அரட்டையுடன் படிப்பு. நாட்டுப்பிரச்சினை, சினிமா, புத்தகங்கள் மற்றும் அப்போது எங்களுக்குப் புதிதாக இருந்த காதலும் எப்போதும் புதிதாகவே தோன்றும் பெண்களும்! எங்களில் சிலர் காதல் வயப்பட்டதாக நம்பிக் கொண்டிருந்த காலம் அது. எங்கள் ஏரியாவான குருமன்காட்டுப் பிள்ளையார் கோவில் ஒழுங்கையில் ஓர் இரவு எட்டுமணிக்கு "தம்பீ!" குரல்கேட்டு திரும்பினால் சாந்தன்! 'இவன் இங்க என்ன பண்றான்? நேரம்தவறாமல் ஆறுமணிக்கு வீட்ட போறவன்?'

காதல், அவனவன் வாங்கிய 'பல்பு'கள் பற்றியெல்லாம் விவாதம், ஆலோசனைகள் இடம்பெறும். ரணேஸ் சிரித்துக் கொண்டே அமைதியாக இருப்பார் அவ்வப்போது ஏதாவது கேட்டால், சொல்வார். ஒருமுறை வகுப்புக்குத் தாமதமாக அரக்கப்பரக்க வந்து சேர்ந்தார் ரணேஸ். கொழும்புக்கு யாரையோ ரயிலேற்றிவிட்டு வந்ததாகச் சொன்னார். சற்றுநேரம் கழித்து, விரிவாகக் கூறினார், தன் வருங்கால மாமானாரிடம், மகளின் ஃபிரண்டாக அறிமுகமாகி, வழியனுப்பி விட்டு வந்ததாக! அவர் காதல் கதையைக்கேட்க, சிறு வெட்கத்துடன் கூறினார். 

முழுக்க முழுக்க கொண்டாட்டமாக படிப்பதே தெரியாமல் ஆனால் சரியாக கவனமாகவே படித்தோம். ஆனால் என்ன, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாது. என்றாவது ஒருநாள் கிரியின் அம்மா நாங்கள் படிக்கும் 'ஸ்டைலை'ப் பார்த்திருக்கும் பட்சத்தில் சங்கத்தையே கலைத்துவிட்டிருக்கக் கூடிய அபாயம் இருந்தது. வகுப்பு முடிந்து நேராக, 'பிரின்ஸ்' ஹோட்டலுக்கு செல்வோம். வவுனியா பஸ் நிலையத்துக்கு எதிரே, 'கொப்பேகடுவ' சிலைக்குப் பின்னால் இருந்தது. இடியப்பம், பச்சைச் சம்பல், சொதியுடன் உளுந்துவடை என்ற தமிழனின் அட்டகாசமான கூட்டணி அங்கேதான் அறிமுகமானது. கண்டுபிடித்தவன் ரசனைக்காரன்தான்!


மாணவர்களைச் சக மனிதனாக மதிக்கும், சக தோழனாகக்கருதி, தோளில் கைபோட்டு அழைத்துச் செல்வது போலக் கற்பிக்கும் ஆசிரியர்களை என்றும் மறக்கவியலாது. இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. திரும்ப மாணவர்கள் தோளில் கைபோடுவதை அனுமதிக்கவும் கூடாது, நண்பனாக இருக்கும் அதேவேளையில் அதிகம் நெருங்கவிடாமல் தங்கள் மரியாதையையும் பேணிக்கொள்ள வேண்டும். சிலர் இதற்கு குறுக்குவழியாக வகுப்பறையில் ஏஜோக் சொல்வதுமுண்டு. ஆனால் அவர்கள் தோற்றுவிடுகிறார்கள்.அந்தப்பொழுதுக்கான சுவாரஸ்யத்துக்கு மட்டுமே அவர்கள். மாணவர்களைச் சரியாகக் கையாளும் ஆசிரியர்கள் மீதான மரியாதை என்றும் குறைவதில்லை. அவ்வப்போது தங்களை நினைவுபடுத்தியபடியே இருப்பார்கள்.

கதிர் ஆசிரியரும் அப்படித்தான். நியாயமான கண்டிப்புக்கும், கோபத்துக்கும் பெயர்போன இளைஞர். தமிழ் கற்பித்தவர். எங்களுக்கு நல்ல நண்பராக இருந்த ஓலெவல் பரீட்சை முடிந்தபின் ஒருநாள் அவருடன் கிரியும், நானும் வவுனியாவின் பெரிய திரையரங்கான றோயல் தியேட்டரில் ரஜினியின் 'வீரா' படம் பார்த்தோம். அப்போது பழைய படங்கள்தான் ஓடிக்கொண்டிருந்தது. அவரது வழக்கம்போல ஐஸ்கிறீம் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். படம் முடிந்தபின் வவுனியாக் குளம் வான்பாய்வதாக சொன்னான் கிரி. அங்கே சென்றோம். குளக்கட்டின் மேற்சுவரை மேவி நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. திறந்து விடப்பட்டிருந்த சிறிய கால்வாயினூடு நீர் வேகமாகப் பாய்ந்தது. அந்த இடத்தில் குடையை விரித்துக் கவிழ்த்துப் பிடித்தபோது, மீன்குஞ்சுகள் துள்ளிக் கொண்டிருந்தன. முழங்கால் வரை ஜீன்சை ஏற்றி விட்டுக்கொண்டு, அந்தக் குளிர்ந்த மாலைப் பொழுதில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சிடையே, "அழகான நடிகை என்றால் அது ஹீராதான்" என்றார். 'இதயம்' அவருக்கு மிகப்பிடித்த படமாக இருந்திருக்கலாம்.


ருமுறை மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்த விஞ்ஞானப் புத்தகத்தில் ஒரு படத்தைப் பார்த்து தீவிர யோசனையுடன் இருந்தவன்,

"சேர் இப்பிடியேயா இருக்கும்?" கேட்டேன். 

புத்தகத்தை நிலைக்குத்தாக பிடித்த விம்மி சொன்னான், "இல்ல இப்பிடி..என்ன சேர்?"

"இல்லடா நாப்பத்தஞ்சு பாகை சாய்வில இருக்குமாம். எங்கட சயன்ஸ் சேர் அப்பிடித்தான் சொல்லித்தந்தவர்" - ரணேஸ்.

அப்போது 'ஜெயசிக்குறு' ராணுவ நடவடிக்கை வேறு ஆரம்பித்து, வேப்பங்குளம் பகுதிலிருந்து ஆட்டிலறி தாக்குதல் நடத்தியதில் நகரமே கிடுகிடுத்துக் கொண்டிருந்தது. எப்போதும் எம்நாட்டு வழக்கம்போல யுத்தகள ஆய்வுகளும் வகுப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இருப்பினும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுக்கே முன்னுரிமை. ரஜினி, கமல் காலத்து முன்னாள் பிரபல நடிகையொருவர் 'கலைச்சேவை' முடிந்ததும் உடனடியாக துள்ளிக் குதித்து உடற்பயற்சி செய்வாராம் என்ற அதிமுக்கிய செய்தியினடிப்படையில் (உபயம் - தினமுரசு) அதுகுறித்தான விஞ்ஞான ரீதியிலான சாதகங்கள், சாத்தியங்கள் குறித்து அலசி ஆராய்ந்தது ஞாபகமிருக்கிறது.

ரணேஸ் பிளாக் பெல்ட் என்ற தகவல் தெரிந்ததும், ஓ.எல். பரீட்சை முடிந்ததும் எல்லோரும் அவரிடம் கராத்தே கற்றுக் கொள்வது என்றோர் அவசரத் தீர்மானத்தை நிறைவேற்றி, அதைவிட அவசரமாக மறந்துபோயிருந்தோம். எப்போதோ ரணேஸ் தனது ஊர் அல்வாய் என்று கூறியிருந்தது நினைவிலிருந்தது. வேறெதுவும் அந்த ஊர் பற்றி எனக்குத் தெரியாது. சென்றதோ, அதன்பிறகு யாரும் சொல்லக் கேட்டதோ இல்லை. அதுவே ரணேஸ் வாத்தியை திரும்ப சந்திக்க வைத்தது. அடுத்தமுறை பார்க்கும்போது, கண்டிப்பாகப் பேசிவிடவேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன். சொல்லப்போனால், அந்த நாளை எதிர்பார்த்திருந்தேன்.


லுவலகத்திலிருந்த காலைநேரத்தில் அதிசயமாக சத்யன் செல்பேசினான்.

"ஏன்யா? என்ன நடந்தது?"

"கிட்னி ஃபெயிலியர். அங்க சரியாக் கவனிக்கேல்லயாம். கடைசி நேரத்தில கொழும்புக்குக் கொண்டுவந்திருக்கினம். வழிலயே முடிஞ்சுதாம்"

பேச வேண்டிய நேரத்தில் மௌனமாயிருந்துவிட்டு பின்னர் வருந்துவது ஒன்றும் புதிதல்ல எனினும், மீண்டும் தோன்றியது, இப்போதும்கூட !

'ஒருமுறை பேசியிருக்கலாம்'

Tuesday, May 28, 2013

எதையும் பிளான் பண்ணி..



'ஞ்சு மணிக்கே இவ்வளவு வெளிச்சமாவா இருக்கு?'

தூக்கத்திலிருந்து விழித்ததுமே ஆச்சரியம்தான்.

ஒருவேளை லேட்டாயிட்டுதோ? லேசா டவுட் வந்ததுமே பாய்ந்தடிச்சு ஃபோனை பார்த்தால் Off! அய்யய்யோ ஆஃப் ஆகி ஆப்படிச்சிட்டுதே! On பண்ணிப் பார்த்தா நேரம் 7.15. ச்சே! எப்பிடி இப்பிடியெல்லாம்? ஃபோன்ல சார்ஜ் இருக்கே? எல்லாம் நம்ம ராசி! 

6.50 க்கு ட்ரெயின். விம்மி இப்ப மைண்ட்ல எப்பிடி திட்டுவான்? அப்பிடியே கண்ணை மூடி மனக்கண்ணை அப்பிடியே ஒப்பன் பண்ணா ரணகொடூரமாக இருந்தது. அப்பிடியே கட் பண்ணிட்டு, அழைத்தேன். இந்தமாதிரியான தவிர்க்கமுடியாத தருணங்களில் பேச்சை எப்பிடி ஆரம்பிக்கிறதுன்னு இப்ப பார்க்கலாம்.

"சொல்லுடா" விம்மி.
"மச்சி போயிட்டா இருக்கே?" - பின்ன அவன் என்ன தண்டவாளத்திலையா படுத்திருக்கப்போறான்?
"ம்ம்ம்" செம்ம காண்டாகி சைலன்டா  இருந்தான்.
அந்தத் துன்பியல் சம்பவத்தைச் சொன்னேன்.
அவன் என்னமோ 'இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டா என்ன?' கவுண்டமணி மாதிரியே கண்டுக்காம, "சரி முக்கா மணித்தியாலத்துக்கு ஒரு பஸ் இருக்கு பிடிச்சு வந்து சேர்"

ஆனா ஒண்ணு இந்தமாதிரி நேரத்தில திட்டாம சைலண்டா இருக்கானே இதத்தான் பக்குவம்கிறது ட்ரெயினிங்காவும் இருக்கலாம். அசந்தர்ப்பமா அண்ணியைப் பாராட்டத் தோன்றியது.

*********

சரியான திட்டமிடலுடன் செயலாற்றும் காரியம் நிச்சயமாக வெற்றிபெறும் என்பது அறிஞர்கள், ஆன்றோர்கள், அனுபவப்பட்டவர்கள், வெற்றிபெற்ற தொழிலதிபர்கள், தமிழர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் தன்னம்பிக்கையூட்டும் '.....எப்படி?' புத்தகம் எழுதுபவர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னதான் திட்டமிட்டாலும் சரியான் நேரத்தில் கனகச்சிதமாகச் சொதப்பிவிடலாம் என்பதை யாராவது அடிபட்டவர்கள் சொல்லியிருக்கிறார்களா தெரியவில்லை. நேரம், ராசி என்று சொல்லப்படுகிற ஏதோ ஒன்று சரியாக அமைந்திருக்கும் பட்சத்தில் எல்லாமே வெளங்கிரும் என்பது என் அனுபவம்.

சனிக்கிழமை வவுனியா செல்வதாக விம்மியும் நானும் முடிவு செய்தோம். அன்றிரவு ஒரு நண்பர்கள் சந்திப்பு. ஞாயிறு நண்பன் திலீயின் திருமண வரவேற்பு. நண்பர்கள் அனைவருக்குமே வாழ்க்கையில் மறக்கமுடியாத அட்டகாசமான காலப்பகுதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் படித்த காலப்பகுதிதான். 

விம்மி டிரெயினுக்கு டிக்கெட் புக் பண்றது, நண்பர்களை செல்பேசில தொடர்புகொண்டு ஒருங்கிணைக்கிறது போன்ற சின்னச்சின்ன வேலைகளைச் செய்தான். நான் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுறது, 'மச்சி நான் வவுனியா போறேண்டா' என்று வெளிநாட்டில இருக்கிற நண்பர்களைக் கடுப்பேத்திறது போன்ற முக்கியமான விஷயங்களைப் பார்த்துக் கொண்டேன்.

அப்பவே லைட்டா உறுத்திச்சு. வழக்கமா நாம எங்க போனாலும் சைலண்டா போயிட்டு வர்றதுதானே வழக்கம். ஏற்கனவே நம்ம ராசி அப்பிடி. எதுக்கு இந்த வேண்டாத வேலை? அப்பிடியெல்லாம் எதுவும் ஆகாதுன்னு எனை நானே சமாதானப்படுத்திக் கொண்டு, அஞ்சு மணிக்கு அலார்ம் செட்பண்ணிட்டு தூங்கிப் போயிட்டேன்.

*********

இனி என்னத்த அவசரப்பட்டு? சரியா 8.50 க்கு கோட்டையில் இறங்கி, தனியார் பேரூந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். அந்தப்பக்கம் கடைசியா 2008ல போனது. போக வேண்டிய தேவை இருக்கவில்லை. அங்க போனா அடுத்த அதிர்ச்சி! 'அய்யய்யோ இதுலருந்த பஸ் ஸ்டாண்ட் எங்க?' 
பக்கத்தில நின்ற ஆட்டோக்கார அங்கிளிடம் கேட்டேன்.

என்ன இருந்தாலும் சிங்களவர்களுக்கு மொழிப்பற்று அதிகம் இருக்கும்போல. தம் மொழியை யாரும் கொடூரமாகக் கொலை செய்வதை விரும்புவதில்லைப் போலும். ஓரிரு வார்த்தைதான் சிங்களத்தில பேசினேன். அதுக்கே பொறுக்க முடியாமல் உடனேயே தெளிவான தமிழில் பேச ஆரம்பித்துவிட்டார். நம்மைப் போல பலரால் பாதிக்கப்பட்டிருப்பார் போல! "அப்பிடியே நேராப்போய் ரோட் க்ரொஸ் பண்ணினா அந்தப்பக்கமா இருக்கு" நான் வந்த வழியைக் காட்டினார்.

ஆர்வலர்கள் கவனிக்க; தமிழை இப்படியும் வளர்க்கலாம்!

பஸ்ஸைப் பிடிச்சு நாலுமணிக்கு வவுனியா போயிட்டேன். மூன்று மணித்தியாலம் லேட்! மற்றபடி எல்லாம் திட்டமிட்டபடி நிகழ்ந்தது!

அதுக்குள்ளே விம்மி காலைலயே என் ஸ்டேட்டஸ்ல கமெண்ட் பண்ணியிருந்தான். இவ்வளவு பில்டப்புக்கும் நோ யூஸ். கடைசில 'பூட்'  குடுத்துட்டான். (எவ்வளோ நாளைக்குப் பிறகு நாங்க யூஸ் பண்ணின இந்த ஸ்லாங் கேக்கிறேன்)

அடுத்தநாள் ஹோட்டல்ல உள்ள போகும்போதே திலீ அம்மா சிரிச்சுட்டே "எப்ப நேற்று வந்துட்டீங்களா?" கேட்டபோது  எதுவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை. சற்று அநேரத்தில் அங்கிள் கைகுலுக்கி சிரித்துக் கொண்டு சொன்னார், "ஒரு மாதிரி நித்திரை கொண்டு வந்துட்டே என்ன"
'அவ்வ்வ்!'
"விம்மி, திலீ வீட்ட ஒலிபரப்புச் செய்துட்டியா?"
"அதெல்லாம் உடனேயே அப்டேட் பண்ணிட்டேன்"
ஒத்துக்கிடுறேன் நீ ஊடகவியலாளன்டா!

*********

நாம ஒரு விஷயத்தைப் பிளான் பண்ணிப் பண்ணினா அதுக்கு மேலால யாரோ பிளான் பண்ணி மொத்தமா பணால் ஆகிடும். நாங்க சும்மா பிளான் பண்ணினாலே இப்பிடின்னா மாஸ்டர் பிளான் போட்டா என்னவாகும்? கொடுமை என்னவெனில், பெரும்பாலும் பிளான் பண்ணும்போது அது சாதா பிளானா மாஸ்டர் பிளானா என்பது தெரிவதில்லை. அதனைப் பிளான் பண்ணுபவர்கள் தீர்மானிப்பதில்லை. மாறாக, பின்விளைவுகளே தீர்மானிகின்றன.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய்க்கொண்டிருந்த பேரூந்து. அதிகாலைநேரம் வவுனியா தாண்டிக்குளத்தில் தரித்து நின்றபோது, அதற்குள்ளிருந்து நான் பிளான் பண்ணிக் கொண்டிருந்தேன். டினேஷுக்கு ஃபோன் பண்ணலாமா? வேணாமா? டினேஷ் வந்தா வேப்பங்குளத்தில இருக்கிற அவன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போவான். அங்க போனா ரெண்டு மூணு நாளைக்கு அங்கயிருந்து கிளம்ப முடியாது - அன்புத் தொல்லை!

ஆக, யாழ்ப்பணத்திலிருந்து திரும்பி வரும்போது அங்க போகலாம் என்பது 'பிளான்!யாழ்ப்பாணம் போய் இரண்டு மணிநேரத்தில் தெரிந்தது அது 'மாஸ்டர் பிளான்' என்பது. 

செய்தி வந்தது - சண்டை தொடங்கி A9 வீதி மூடப்பட்டதாக!


*********

அந்த மாஸ்டர் பிளானுக்குப் பிறகு மூன்று மாசம் சிக்கி சீரழிஞ்சு எப்பிடிக் கொழும்புக்கு வந்து சேர்ந்தேன் என்பதை வார்த்தைகளில் சொல்வதை விட...