“Sorry! வவுனியால இருந்து மச்சான் வந்திருந்தார்.. அதான் லேட்டாயிட்டுது”
ஒரு மாலை சந்திப்பின் போது நண்பன் சத்யன்.
"வவுனியாலருந்தா எங்க ஏரியால்ல! எங்க வயசா?"
"இல்ல வயசு கூட... டீச்சரா இருக்கார்"
ஏனோ கேட்கவேண்டும்போலத் தோன்றியது. உள்ளுணர்வாகவும் இருக்கலாம்.
"உங்க சொந்த இடம்?"
“அல்வாய், தெரியுமா?”
“இல்ல. எங்களுக்கு கூட ஒருத்தர் சயன்ஸ் படிப்பிச்சார் வவுனியால. அவரும் அல்வாய்தான்”
“என்ன பேர்?”
“ரணேஸ்”
“அவர்தான் ஆள்”
அளவு கடந்த மகிழ்ச்சியுடன் விசாரித்தேன். சொந்தமாக அச்சகம் வைத்திருப்பதாகவும், மணமுடித்து இரண்டு பிள்ளைகள் இருப்பதையும் சொன்னான்.
"அந்த டைம்ல ஒரு லவ்வும் இருந்திச்சு"
"அவதான் வைஃப்" சிரித்துக்கொண்டே சொன்னவன், அவரிடம் வந்து பேசும்படி அழைத்தான்.
"இல்ல வேணாம். ஞாபகமிருக்குமா தெரியல" தயக்கத்துடன் மறுத்தேன். அவனும் என்னைப்போலவே ஒருவன் என்பதால் வற்புறுத்தவில்லை. சற்றுத் தூரத்தில் சத்யன் வீட்டு வாசலில் விடைபெறுவதற்காக நின்று பேசிக்கொண்டிருந்தவரைப் பார்த்தேன். திரும்பி நின்றுகொண்டிருந்ததால் முகம் தெரியவில்லை. பதின்மூன்று வருஷமாகிவிட்டது. முன்பிருந்ததை விட இன்னும் பருத்திருந்தார்.
"இல்ல வேணாம். ஞாபகமிருக்குமா தெரியல" தயக்கத்துடன் மறுத்தேன். அவனும் என்னைப்போலவே ஒருவன் என்பதால் வற்புறுத்தவில்லை. சற்றுத் தூரத்தில் சத்யன் வீட்டு வாசலில் விடைபெறுவதற்காக நின்று பேசிக்கொண்டிருந்தவரைப் பார்த்தேன். திரும்பி நின்றுகொண்டிருந்ததால் முகம் தெரியவில்லை. பதின்மூன்று வருஷமாகிவிட்டது. முன்பிருந்ததை விட இன்னும் பருத்திருந்தார்.
அவர் புறப்பட்டுச் சென்றவுடன் யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு முறை போய்ப் பேசியிருக்கலாமோ? இயல்பாகவே ஏதோ ஒரு கூச்சம், தயக்கம் தடுத்துவிடுகிறது. பின்னர் அதற்காக வருந்துவது. பல சந்தர்ப்பங்களில் இப்படி நடந்தாலும் இன்றுவரை என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை, அல்லது முயலவில்லை.
யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்று மூன்று வருடங்களுக்குப் பின் மீண்டும் பள்ளியில் எனது கணித ஆசிரியரை பார்த்தபோதும் அப்படித்தான் ஒதுங்கிச் சென்றுவிட்டேன்.நான் அவருடைய மிக விருப்பத்துக்குரிய மாணவர்களில் ஒருவனாக இருந்தேன். எத்தனை பேர் படித்திருப்பார்கள்? என்னை ஞாபகமிருக்குமா? நானே கேள்வி கேட்டு என் செயலை நியாயப்படுத்திக் கொண்டேன். எதிர்பாராமல் அன்று மதியமே, "டேய் உமா!" குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். "எப்பிடிடா இருக்கே? எங்கடா இவ்வளவு நாளா இருந்தே?" என் தலைமுடி கோதி, அவர் அன்பாகப் பேசியபோது, குற்றவுணர்ச்சியுடன் தடுமாறி நின்றிருந்தேன்.
ரணேஸ் வாத்தி! - இங்கு வாத்தி என்பது மரியாதைக் குறைவான வார்த்தை அல்ல. வாத்தி என அழைக்கப்படுபவர் எங்களில் ஒருவர். மனதிற்குப் பிடித்த, எப்போதும் எங்கள் அன்பிற்குப் பாத்திரமான, நெருக்கமான ஆசிரியரை வாத்தி என்றே அழைப்பது வழக்கம்.
ரணேஸ் வாத்தியைப் பார்த்ததுமே எங்கள் எல்லோருக்கும் பிடித்துக் கொண்டது. சிலபேருக்கு மட்டுமே பார்த்தவுடன் ஈர்த்துக் கொள்ளும் முகம் அமைந்துவிடுகிறது. நடிகர் ரஜினியையும், விஜயையும் எந்தக் குழந்தைக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறதே அதுபோல! ரணேஸ் வாத்தியிடமும் கொஞ்சம் அன்றையகால நடிகர் விஜயின் சாயல் இருந்தது. பேசும்போது முகத்தில் சிநேகபாவமும், சிறுபுன்னகையும் கலந்திருக்கும். அப்போதுதான் ஆசிரியர் கல்லூரியில் படிப்பை முடித்து, எங்கள் பள்ளியில் இணைந்திருந்தார்.
அந்தக் காலப்பகுதியே எனது பாடசாலை நாட்களின் மிக மகிழ்ச்சியானதாக இருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஏராளமான மாணவர்களையும், ஆசிரியர்களையும் அரவணைத்துக் கொண்டது, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் . மாணவர்களின் தொகை எதிர்பாராத அளவு திடீரென அதிகரிக்க, மாலைநேர வகுப்புகள் நடாத்தி, ஓரிரு மாதங்களிலேயே மூன்றுமாடிக் கட்டடங்கள கட்டி முடிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.
நாங்கள் எல்லோரும் அங்கு படிக்கக் கிடைத்ததை பெரும் வரப் பிரசாதமாகவே கருதினோம். அதற்குக் காரணம் இருந்தது. யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ எறிகணை வீச்சு, விமானத்தாக்குதல்களுக்கு மத்தியில் வளர்ந்தபோதும் அதையெல்லாம் விட மோசமானதாக இருந்தது ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சில ஆசிரியர்களிடமிருந்து நாங்கள் எதிர்கொண்ட வன்முறைதான். ஆனால் இங்கே அராஜகம் செய்யும் ஆசிரியர்களை மாணவர்களும்கூட 'தட்டிக் கேட்கும்' சுதந்திரம் இருப்பதாகப் பலரும் நம்பியதால் பள்ளிக்கு தனிப்பெருமை இருந்தது. யாழிலிருந்து வந்த சில 'மதிப்புக்குரிய' ஆசிரியர்கள் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்புகள் போலப் பாவமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
நாங்கள் எல்லோரும் அங்கு படிக்கக் கிடைத்ததை பெரும் வரப் பிரசாதமாகவே கருதினோம். அதற்குக் காரணம் இருந்தது. யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ எறிகணை வீச்சு, விமானத்தாக்குதல்களுக்கு மத்தியில் வளர்ந்தபோதும் அதையெல்லாம் விட மோசமானதாக இருந்தது ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சில ஆசிரியர்களிடமிருந்து நாங்கள் எதிர்கொண்ட வன்முறைதான். ஆனால் இங்கே அராஜகம் செய்யும் ஆசிரியர்களை மாணவர்களும்கூட 'தட்டிக் கேட்கும்' சுதந்திரம் இருப்பதாகப் பலரும் நம்பியதால் பள்ளிக்கு தனிப்பெருமை இருந்தது. யாழிலிருந்து வந்த சில 'மதிப்புக்குரிய' ஆசிரியர்கள் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்புகள் போலப் பாவமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
என்ன ஒரேயொரு சோகம், அது ஒரு இருபாலார் படிக்கும் பள்ளி என்பதை அவ்வப்போது யாராவது ஞாபகப்படுத்தித் தொலைத்தார்கள். இதுகுறித்து நண்பனொருவன் தீவிர கவலையை வெளிப்படுத்தினான்.
"எங்கட வகுப்புக்கு மட்டும் எட்டு டிவிஷன்கள் இருக்கு. ஒவ்வொண்டிலயும் குறைஞ்சது நாப்பது பேர். மொத்தமா முந்நூற்றிருபது பேர் இருக்கிறம். இதுல கேர்ள்ஸ் எத்தினைபேர் மச்சான்?"
"இருபது பேர் வருமா?"
"ரெண்டே ரெண்டு டிவிஷன்ல மொத்தமா பதினைஞ்சு பேர் இருக்கலாம்.. ஏண்டா இப்பிடியொரு மிக்ஸ்ட் ஸ்கூல் வச்சிருக்கிறாங்கள்? தனியப் பசங்கள மட்டும் படிக்க விடலாமே?"
- பெண்களுக்கென்று பிரத்தியேகமாக இரு பெரிய கல்லூரிகள் இருந்தன.
"எங்கட வகுப்புக்கு மட்டும் எட்டு டிவிஷன்கள் இருக்கு. ஒவ்வொண்டிலயும் குறைஞ்சது நாப்பது பேர். மொத்தமா முந்நூற்றிருபது பேர் இருக்கிறம். இதுல கேர்ள்ஸ் எத்தினைபேர் மச்சான்?"
"இருபது பேர் வருமா?"
"ரெண்டே ரெண்டு டிவிஷன்ல மொத்தமா பதினைஞ்சு பேர் இருக்கலாம்.. ஏண்டா இப்பிடியொரு மிக்ஸ்ட் ஸ்கூல் வச்சிருக்கிறாங்கள்? தனியப் பசங்கள மட்டும் படிக்க விடலாமே?"
- பெண்களுக்கென்று பிரத்தியேகமாக இரு பெரிய கல்லூரிகள் இருந்தன.
"டேய் தவமணி கொன்வெண்டுக்கு வந்திருக்கானாம்" - பரபரப்பாக செய்தியைப் பகிர்ந்துகொண்டான் ஒருவன்.
யாழில் பிரபல கல்லூரியில் அட்டகாசம் செய்தவர் அவர். நாங்கள் கேள்விப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தினார் லிங்கநாதன் ஆசிரியர். பழக்க தோஷத்தில் கைகள் யாரையாவது அடிக்கப் பரபரக்க, கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு மிகவும் நொந்து போயிருப்பதாகவும் மேலதிக தகவல் சொன்னார். செய்தி கேட்டு அகமகிழ்ந்து போனோம். ஒருவேளை பாதுகாப்புக் கருதித் திட்டமிட்டுத்தான் அங்கே இணைந்துகொண்டாரோ என்ற சந்தேகமும் வந்தது.
மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒருவன் ஆவேசமாகக் கூறினான் “தவமணி மட்டும் இங்க வந்திருக்கோணும்டா! நல்ல பாடம் படிப்பிச்சிருக்கலாம்!”
அராஜகமான மனிதர்களுடன் பழகிய எங்களுக்கு, தோழமையுடன் பேசுகின்ற, எங்கள் பேச்சையும் காதுகொடுத்துக் கேட்கின்ற, பரஸ்பரம் மரியாதை கொடுக்கின்ற ஆசிரியர்கள் என்றும் மனதில் நிறைந்திருப்பதில் ஆச்சரியமென்ன இருக்கமுடியும்? அவர்களுடன் அளவளாவிய ஒவ்வொரு பொழுதும் எப்போதும் மறக்க முடியாதவை.
பள்ளியில் ரணேஸ் எங்களுக்கு அவர் வகுப்பெடுக்கவில்லை. எங்களுக்கு பிரத்தியேக குழு வகுப்பு ஒன்றை எடுத்துக் கொண்டிருந்த லிங்கநாதன் ஆசிரியர் வெளிநாடு சென்றுவிட, ரணேஸ் எங்களோடு இணைந்துகொண்டார்.
கிரி வீட்டில்தான் வகுப்பு. தனியறை ஒன்றில் பெரிய டைனிங் டேபிளை சுற்றி எங்கள் Gang அமர்ந்திருக்கும். அப்போது Gang என்ற சொல்லையே புதிதாகப் புழக்கத்தில் கொண்டுவந்தவன் கிரிதான். கிரி, பவன், சாந்தன், சதீஷ், மரூ, விம்மி, 'பிரபுதேவா' கிரி, ரஜீவ், திலீ இவர்களுடன் நான்.
உண்மையில் என்னையும், திலீயையும் ஆரம்பத்திலேயே, 'இவங்கள் சரிப்பட்டு வரமாட்டாங்கள்' என்று Gang இல் சேர்க்கவில்லை. சாந்தன் வேறு பின்னாட்களில்தான் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் இணைந்திருந்தான். ஆக, நாங்கள் மூன்றுபேரும் வெளியிலிருந்து அவ்வப்போது 'நக்கல் நல்லாதரவு'வழங்கிக் கொண்டிருந்தோம். தீபாவளி, வருஷத்துக்கு ஒரே நிறத்தில் புத்தாடைகள், சிலிப்பர் என யூனிஃபோர்மில் வந்து, ஏரியா நாய்களுக்கெல்லாம் அனாவசிய டென்ஷன் கொடுப்பது Gang இன் முக்கிய பணி!
ஒரு வகுப்பிற்குரிய வரைவிலக்கணங்கள் எதற்குள்ளும் அடங்காதது அந்த பாடவேளைகள். எங்களுக்கு ஒரு நல்ல நண்பனாகவும், சமயங்களில் அண்ணனாகவும் இருந்தார். எந்தத் தயக்கங்களுமின்றி எதைப்பற்றியும் பேசும், விவாதிக்கும் சுதந்திரம் இருந்தது. அந்தவயதில் ஒரு விஞ்ஞான ஆசிரியரிடம் கேட்பதற்கு எங்களிடம் ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. அதையெல்லாம் கேட்பதற்கு நல்ல ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லை.
ரணேஸ் வாத்தியிடம் எதையும் மனம் விட்டுப் பேச, கேட்க முடிந்தது. ஆனால், நாங்கள் கேட்ட பல சந்தேகங்கள் அவருக்குமே இருந்ததுதான் கொடுமை!
ரணேஸ் வாத்தியிடம் எதையும் மனம் விட்டுப் பேச, கேட்க முடிந்தது. ஆனால், நாங்கள் கேட்ட பல சந்தேகங்கள் அவருக்குமே இருந்ததுதான் கொடுமை!
இரண்டு மணிநேர வகுப்பில் முக்கால் மணி நேரம், சில சமயங்களில் அரைமணி நேரமே தீவிரமான படிப்பு, ஏனைய நேரம் அரட்டையுடன் படிப்பு. நாட்டுப்பிரச்சினை, சினிமா, புத்தகங்கள் மற்றும் அப்போது எங்களுக்குப் புதிதாக இருந்த காதலும் எப்போதும் புதிதாகவே தோன்றும் பெண்களும்! எங்களில் சிலர் காதல் வயப்பட்டதாக நம்பிக் கொண்டிருந்த காலம் அது. எங்கள் ஏரியாவான குருமன்காட்டுப் பிள்ளையார் கோவில் ஒழுங்கையில் ஓர் இரவு எட்டுமணிக்கு "தம்பீ!" குரல்கேட்டு திரும்பினால் சாந்தன்! 'இவன் இங்க என்ன பண்றான்? நேரம்தவறாமல் ஆறுமணிக்கு வீட்ட போறவன்?'
காதல், அவனவன் வாங்கிய 'பல்பு'கள் பற்றியெல்லாம் விவாதம், ஆலோசனைகள் இடம்பெறும். ரணேஸ் சிரித்துக் கொண்டே அமைதியாக இருப்பார் அவ்வப்போது ஏதாவது கேட்டால், சொல்வார். ஒருமுறை வகுப்புக்குத் தாமதமாக அரக்கப்பரக்க வந்து சேர்ந்தார் ரணேஸ். கொழும்புக்கு யாரையோ ரயிலேற்றிவிட்டு வந்ததாகச் சொன்னார். சற்றுநேரம் கழித்து, விரிவாகக் கூறினார், தன் வருங்கால மாமானாரிடம், மகளின் ஃபிரண்டாக அறிமுகமாகி, வழியனுப்பி விட்டு வந்ததாக! அவர் காதல் கதையைக்கேட்க, சிறு வெட்கத்துடன் கூறினார்.
முழுக்க முழுக்க கொண்டாட்டமாக படிப்பதே தெரியாமல் ஆனால் சரியாக கவனமாகவே படித்தோம். ஆனால் என்ன, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாது. என்றாவது ஒருநாள் கிரியின் அம்மா நாங்கள் படிக்கும் 'ஸ்டைலை'ப் பார்த்திருக்கும் பட்சத்தில் சங்கத்தையே கலைத்துவிட்டிருக்கக் கூடிய அபாயம் இருந்தது. வகுப்பு முடிந்து நேராக, 'பிரின்ஸ்' ஹோட்டலுக்கு செல்வோம். வவுனியா பஸ் நிலையத்துக்கு எதிரே, 'கொப்பேகடுவ' சிலைக்குப் பின்னால் இருந்தது. இடியப்பம், பச்சைச் சம்பல், சொதியுடன் உளுந்துவடை என்ற தமிழனின் அட்டகாசமான கூட்டணி அங்கேதான் அறிமுகமானது. கண்டுபிடித்தவன் ரசனைக்காரன்தான்!
மாணவர்களைச் சக மனிதனாக மதிக்கும், சக தோழனாகக்கருதி, தோளில் கைபோட்டு அழைத்துச் செல்வது போலக் கற்பிக்கும் ஆசிரியர்களை என்றும் மறக்கவியலாது. இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. திரும்ப மாணவர்கள் தோளில் கைபோடுவதை அனுமதிக்கவும் கூடாது, நண்பனாக இருக்கும் அதேவேளையில் அதிகம் நெருங்கவிடாமல் தங்கள் மரியாதையையும் பேணிக்கொள்ள வேண்டும். சிலர் இதற்கு குறுக்குவழியாக வகுப்பறையில் ஏஜோக் சொல்வதுமுண்டு. ஆனால் அவர்கள் தோற்றுவிடுகிறார்கள்.அந்தப்பொழுதுக்கான சுவாரஸ்யத்துக்கு மட்டுமே அவர்கள். மாணவர்களைச் சரியாகக் கையாளும் ஆசிரியர்கள் மீதான மரியாதை என்றும் குறைவதில்லை. அவ்வப்போது தங்களை நினைவுபடுத்தியபடியே இருப்பார்கள்.
கதிர் ஆசிரியரும் அப்படித்தான். நியாயமான கண்டிப்புக்கும், கோபத்துக்கும் பெயர்போன இளைஞர். தமிழ் கற்பித்தவர். எங்களுக்கு நல்ல நண்பராக இருந்த ஓலெவல் பரீட்சை முடிந்தபின் ஒருநாள் அவருடன் கிரியும், நானும் வவுனியாவின் பெரிய திரையரங்கான றோயல் தியேட்டரில் ரஜினியின் 'வீரா' படம் பார்த்தோம். அப்போது பழைய படங்கள்தான் ஓடிக்கொண்டிருந்தது. அவரது வழக்கம்போல ஐஸ்கிறீம் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். படம் முடிந்தபின் வவுனியாக் குளம் வான்பாய்வதாக சொன்னான் கிரி. அங்கே சென்றோம். குளக்கட்டின் மேற்சுவரை மேவி நீர் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. திறந்து விடப்பட்டிருந்த சிறிய கால்வாயினூடு நீர் வேகமாகப் பாய்ந்தது. அந்த இடத்தில் குடையை விரித்துக் கவிழ்த்துப் பிடித்தபோது, மீன்குஞ்சுகள் துள்ளிக் கொண்டிருந்தன. முழங்கால் வரை ஜீன்சை ஏற்றி விட்டுக்கொண்டு, அந்தக் குளிர்ந்த மாலைப் பொழுதில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சிடையே, "அழகான நடிகை என்றால் அது ஹீராதான்" என்றார். 'இதயம்' அவருக்கு மிகப்பிடித்த படமாக இருந்திருக்கலாம்.
ஒருமுறை மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்த விஞ்ஞானப் புத்தகத்தில் ஒரு படத்தைப் பார்த்து தீவிர யோசனையுடன் இருந்தவன்,
"சேர் இப்பிடியேயா இருக்கும்?" கேட்டேன்.
புத்தகத்தை நிலைக்குத்தாக பிடித்த விம்மி சொன்னான், "இல்ல இப்பிடி..என்ன சேர்?"
"இல்லடா நாப்பத்தஞ்சு பாகை சாய்வில இருக்குமாம். எங்கட சயன்ஸ் சேர் அப்பிடித்தான் சொல்லித்தந்தவர்" - ரணேஸ்.
அப்போது 'ஜெயசிக்குறு' ராணுவ நடவடிக்கை வேறு ஆரம்பித்து, வேப்பங்குளம் பகுதிலிருந்து ஆட்டிலறி தாக்குதல் நடத்தியதில் நகரமே கிடுகிடுத்துக் கொண்டிருந்தது. எப்போதும் எம்நாட்டு வழக்கம்போல யுத்தகள ஆய்வுகளும் வகுப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இருப்பினும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுக்கே முன்னுரிமை. ரஜினி, கமல் காலத்து முன்னாள் பிரபல நடிகையொருவர் 'கலைச்சேவை' முடிந்ததும் உடனடியாக துள்ளிக் குதித்து உடற்பயற்சி செய்வாராம் என்ற அதிமுக்கிய செய்தியினடிப்படையில் (உபயம் - தினமுரசு) அதுகுறித்தான விஞ்ஞான ரீதியிலான சாதகங்கள், சாத்தியங்கள் குறித்து அலசி ஆராய்ந்தது ஞாபகமிருக்கிறது.
ரணேஸ் பிளாக் பெல்ட் என்ற தகவல் தெரிந்ததும், ஓ.எல். பரீட்சை முடிந்ததும் எல்லோரும் அவரிடம் கராத்தே கற்றுக் கொள்வது என்றோர் அவசரத் தீர்மானத்தை நிறைவேற்றி, அதைவிட அவசரமாக மறந்துபோயிருந்தோம். எப்போதோ ரணேஸ் தனது ஊர் அல்வாய் என்று கூறியிருந்தது நினைவிலிருந்தது. வேறெதுவும் அந்த ஊர் பற்றி எனக்குத் தெரியாது. சென்றதோ, அதன்பிறகு யாரும் சொல்லக் கேட்டதோ இல்லை. அதுவே ரணேஸ் வாத்தியை திரும்ப சந்திக்க வைத்தது. அடுத்தமுறை பார்க்கும்போது, கண்டிப்பாகப் பேசிவிடவேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டேன். சொல்லப்போனால், அந்த நாளை எதிர்பார்த்திருந்தேன்.
அலுவலகத்திலிருந்த காலைநேரத்தில் அதிசயமாக சத்யன் செல்பேசினான்.
"ஏன்யா? என்ன நடந்தது?"
"கிட்னி ஃபெயிலியர். அங்க சரியாக் கவனிக்கேல்லயாம். கடைசி நேரத்தில கொழும்புக்குக் கொண்டுவந்திருக்கினம். வழிலயே முடிஞ்சுதாம்"
பேச வேண்டிய நேரத்தில் மௌனமாயிருந்துவிட்டு பின்னர் வருந்துவது ஒன்றும் புதிதல்ல எனினும், மீண்டும் தோன்றியது, இப்போதும்கூட !
'ஒருமுறை பேசியிருக்கலாம்'
சில மனிதர்களை சந்திக்க மறந்து விட்டோமே,அடுத்த தடவை போகும் போது நிச்சயம் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்த ஒருவர் இறந்து விட்டார் என்னும் போது ஏற்படும் வேதனை சொல்லி மாளாது!(அனுபவம்)
ReplyDeleteசென்ற முறை இந்தியா சென்றபோது, உடன்வந்த இன்னொரு ஃபேமிலியுடன் பேசிக்கொண்டிருந்தோம், அதாவது தங்கமணி பேசிக்கொண்டிருந்தது. அந்த பெண்ணும் கோவில்பட்டி என்று தெரியவர, யார் என்று விசாரித்தால் எனது பி.டி.ஆசிரியரின் மகள் அவர். ஆர்வமாக அவர் நலம் விசாரித்தேன். ‘அப்பா ஏர்போர்ட்டுக்கு வருவார்’ என்றது. வந்தார். வழக்கம்போல் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு, என்ன பேசுவது என்று தெரியாமல் பேசாமலே நடையைக் கட்டினேன்..இந்த விஷயத்திலும் நாம.............அட, ஆண்டவா!
ReplyDelete