Friday, January 25, 2013

காதல் தியாகிகள்!


தியாகம் என்பதும் ஒருவகை போதைதான். நான் தியாகி என்று சொல்லாமல், அல்லது அவையடக்கத்துடன்(?!) சொல்லிக் கொள்வதில் ஒரு அளவு கடந்த மகிழ்ச்சி கிடைப்பதாகத் தெரிகிறது. ஆனால் பாருங்கள், பலருக்கு தியாகம் செய்வதற்கு வசதியான சுதந்திரப் போராட்டங்கள் அமைவதில்லை. 'நான் ஒரு தியாகி' என்று உயிருடன் இருந்து சொல்லக்கூடிய உத்தரவாதமான சுதந்திரப் போராட்டம் எங்கேயும் நடப்பதில்லையே!

அந்தக் குறையைக் காதல் தீர்த்து வைக்கிறது. காதல் தியாகிகள் பலர் நம்மிடையே பரவலாக வாழ்கிறார்கள். இருப்பினும் காதலில் தியாகம் செய்கிறார்களா?தியாகம் செய்யப்படுகிறார்களா என்பது ஆராயப்படவேண்டியது.

அலுவலகத்தில் காதல் தியாகியான நண்பன் ஒருவன். அவனின் தியாகம் தொடர்பில் அவனுக்கு எக்கச்சக்கமான பெருமை இருந்தது. தன் காதல் வரலாற்றை அன்றைக்கும் யாருக்கோ புதுசா, உருக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் கெட்ட நேரம் நானும் அங்கே  இருந்து தொலைத்துவிட்டேன்.

"ரெண்டுபேரும் மூணு வருஷம் சின்சியரா லவ் பண்ணினோம். அவளுக்கு திடீர்னு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்தாங்க. எனக்கு அப்போ வேலையில்ல. எனக்கொரு வேலை கிடைச்சா அவள் வீட்ல சொல்லியிருக்கலாம். நானும் வேலைக்கு எவ்வளவோ ட்ரை பண்ணினேன். கிடைக்கல. இப்ப பார் எல்லாம் இருக்கு. அவ கட்டிப் போன அடுத்த வருஷமே எனக்கு வேலை கிடைச்சிட்டுது. கொஞ்சநாள் எல்லாமே வெறுத்துப் பொய் இருந்தேன். ஏதோ அவள் நல்லா இருந்தாச் சரின்னு.... அவள் நிறைய பீல் பண்ணினாள். என்ன செய்யிறதுன்னு கேட்டாள்.  நான்தான் பிரிஞ்சிடலாம்னு சொன்னேன்.நான் சொன்னதாலதான் அவள் அந்த மாப்பிள்ளையைக் கட்டினாள்"

"இரு இரு என்னமோ உதைக்குதே" என்றேன். ஃபீல் பண்ணிக்கொண்டிருந்த பயபுள்ளைகள் எல்லாம் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தர்கள்.

'தேவையா இது எனக்கு?ஏழு வருஷமா தியாகிங்கற நினைப்பில , மிதப்புல இருக்கிறவனை எதுக்கு குழப்பிவிடணும்?' ஆனாலும், ஒருவனின் அறியாமையைப் போக்க வேண்டிய சமூகப் பொறுப்பு(?!) இருக்கே!

"சரி மாப்பிள்ளை பாக்கேக்க அவள் என்ன கேட்டாள்ன்னு சொன்னே ?"

"என்ன செய்யிறதுன்னு"

"இது.. இது.. என்ன செய்யறதுன்னு கேட்டாளே அங்கயே உன் லவ் பணால் ஆயிடுச்சு! லவ் பண்ணிட்டு, என்ன செய்யிறதுன்னு கேட்கிறதே போங்காட்டம். அப்பவே அவள் என்ன செய்யிறதுன்னு ஒரு முடிவு எடுத்துட்டாள்ன்னு அர்த்தம்.."

"அதெப்பிடி எனக்கு வேலையில்ல நாங்க எப்பிடி?"

"ரெண்டு வருஷம் வெயிட் பண்ண முடியாதா? இருபத்திரண்டு வயசுதானே அப்போ! சரி விடு லவ் பண்ற விஷயத்தை அவங்க வீட்ல யாருக்காவது சொன்னாளா?"

"இல்ல எப்படி சொல்றது?"

"அது! அங்கதான் இருக்கு மேட்டர்! எங்கே வீட்ல சொன்னா அவங்க வீட்டுக்காரரே வெயிட் பண்றோம்னு சொல்லிட்டு, வெளிநாட்டு மாப்பிள்ளைய வேணாம்னு சொல்லிடுவாங்களோன்னு.."

"அப்பிடியானவளா இருந்தா எதுக்கு என்கிட்டே வந்து என்ன செய்யிறதுன்னு கேட்டிருப்பாள்?"

"இது பொயிண்ட்! ஏன்னா ஒருத்தனை ஏமாத்திட்டோம்னு உறுத்தாம வாழணுமில்ல. இப்பிடிக் கேட்டதால அவளும் உன்னை ஏமாத்தல! நீயும் தியாகியாகிட்டே! அத வேற பெருமையா சொல்றே. இதத்தான் ஒரு சொல்லு பல மாங்காய்ன்னு பெரியவங்க சொல்லுவாங்க ...நாட்டில மாங்காய்களுக்கா பஞ்சம்?

"சரி நீ சொல்ற மாதிரியே வச்சுப்போம் சப்போஸ் நான் இல்லைன்னு சொல்லியிருந்தா?"

"சொல்ல மாட்டேன்னு தெரியும்"

"அதெப்பிடி?"

"தப்பா எடுத்துக்காத மச்சி! மூணு மாசம் பழகின எனக்கே தெரியுது, மூணு வருஷம் லவ் பண்ணின அவளுக்குத் தெரியாதா.....நீ ஒரு கேணைன்னு..."

"சரி சரி முறைக்காத ஆக்சுவலா நீ தியாகியே இல்ல. மிக மோசமாக வஞ்சிக்கப்பட்ட ஒரு அபலை ஆண்.."

"ஆனா ஒண்ணு மச்சி! ஏமாந்ததே தெரியாம ஏழு வருஷமா தியாகிங்கிற மிதப்போட வாழ்ந்திருக்க பாரு  ச்சே! அத நினச்சாதாண்டா என்னால தாங்க முடியல!"

"..."

"இத இப்பிடியே விடக் கூடாது மச்சி நைட் நீ  பார்ட்டி வைக்கிறே.. எல்லாரும் தண்ணியப் போட்டுத் துக்கத்தை அனுஷ்டிக்கிறோம்!"

"அப்புறம் வேற யாராவது காதல் தியாகிங்க இருந்தா லைன்ல வந்து உங்க கதையச் சொல்லுங்க"

Thursday, January 10, 2013

நீ.எ.பொ.வ.- சமந்தாவும், மூக்குத்தியும்!


நீதானே என் பொன் வசந்தம் – நேற்று எதுவும் செய்ய முடியாத ஒரு வெறுமையான, வெறுப்பான பொழுதில் சும்மா பார்த்துக் கொண்டிருந்தேன். 'ஒரு பொண்ணையாவது வாழ்க்கைல லவ் பண்ணினவங்களுக்கு படம் பிடிக்கும்'னு கௌதம் மேனன் சொல்லியிருந்ததால் நான் முதலில் டீசண்டா பார்க்காமல் தவிர்த்திருந்தேன்.

போற போக்கில ஒரு வார்த்தைய தெரிஞ்சோ தெரியாமலோ சொல்லிட்டுப் போறது எவ்வளவு வில்லங்கத்தைக் கொண்டு வந்திடுது பாருங்க.

யாழ்ப்பாணத்தில் நம்மாளுங்க சிலர் கூடவே படிக்கிற ஒரு பொண்ணை 'ச்சூஸ்' பண்ணுவானுங்க. அப்புறம் அது டியூஷன் போகும்போது வீட்டுக்கும் டியூஷனுக்கும், சில பேர் ஸ்கூலுக்கும் ஃபாலோ பண்ணுவானுங்க. அந்தப் பொண்ணு சைக்கிள்ல போகும் இவனுங்க பின்னாடி நாற்பதடி தூரத்தில நாலு கிலோமீற்றர் தூரம் சைக்கிள்ல பின்னாடியே வீடுவரைக்கும் கொண்டுபோய் விடுவாங்க. அத வேற காவியக் காதல்னு அளந்துக்கிட்டிருப்பாங்க. இதில கொடுமை என்னான்னா அந்தப் பொண்ணுக்கு இந்த விஷயம் தெரிஞ்சே இருக்காது.

தெரிஞ்சாலும் அதை ஒரு காவல் நடவடிக்கையா பார்ப்பாங்களே தவிர காதலா பார்க்க மாட்டாய்ங்க. ஏன்னா, அவங்க வீட்டிலருந்து மெயின் ரோடு வரைக்கும் ஏற்கனவே அவங்க வீட்டு நாய் பின்னாடியே வந்து காவல் டியூட்டி பார்த்திருக்கும். அப்புறம்தான் அந்த நாய் டியூட்டிய இவனுங்க வான்டட்டா போயிப் பார்ப்பானுங்க. 

இப்ப என்னடான்னா நீ.எ.பொ.வ. படம் பார்த்ததும் இந்த 'டியூட்டி' பார்த்த பயபுள்ளைங்களுக்கு எல்லாம் பழைய 'காதலிச்ச' ஞாபகம் வந்துட்டுதாம். ஃபீல் பண்ணுறாங்களாமாம். என்ன கொடுமை சமந்தா இது?


பெண்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கும்போது, தாங்கள் எதிர்பார்த்த ஒரு சின்ன விஷயம் கூட எதிர்பாராத ஒரு தருணத்தில் நிகழ்ந்துவிடும்போது அவர்களின் ரியாக்சன் அவர்களின் நடை மிகச் சின்னச் சின்ன காலடிகளை மிக  வேகமாக வைத்து  கைகளைப் பக்கவாட்டில் உடலோடு இறுக்கிக்கொண்டு, சற்றே பம்மிக்கொண்டு ஒரு சிரிப்பு.. இதையெல்லாம் ஞாபகப்படுத்தியது காபி சாப்பிட ஜீவா அழைத்ததை சமந்தா தன் தோழிகளிடம் சொல்லும் காட்சி.

ஆனா ஒண்ணு, அடிக்கூந்தலில் ஒரு இன்ச் வெட்டிட்டு, அது முகத்தில தெரியும்னு நம்பி 'ஒரு வித்தியாசம் கண்டு பிடி பார்ப்போம்'னு கேட்பாங்க பாருங்க அந்தக் கொடுமைய லவ் பண்ணின பல பேர் அனுபவிச்சிருக்கலாம்.

முதன்முதல் படத்தின் ஸ்டில்ஸ் பார்த்தபோது தோன்றியது சமந்தாவின் மூக்குத்தி, ஆமா அது மூக்குத்திதானே? அவ்வளவு அழகு! மூக்குத்தி ஒரு பெண்ணுக்கு அவ்வளவு அழகாக இருக்குமா? சமந்தா அழகாக இருப்பதால் மூக்குத்தி அழகாகியதா இல்லை..... ஆச்சரியமாக இருந்தது. மூக்குத்தி சில வேளைகளில் தெய்வீகமான ஒரு அழகைக் கொடுத்துவிடுவது உண்மைதான்.

மூக்குத்தி இப்போதெல்லாம் யாரும் அணிவதில்லைப் போலும். பெண்களிடம் மிக அருகிப்போன சமாச்சாரமாகிவிட்டது இல்லையா? என்றேன் நண்பரிடம். "அடப் போங்க பாஸ் மூக்கு என்கிறதே இப்பல்லாம் பெண்களிடம் அருகிப் போயிட்டுது" என்கிறார்.

ஒருவேளை விண்ணைத்தாண்டி வருவாயா ஜெசி மாதிரி நித்யாவும் எல்லோரிடமும் நல்லா ரீச் ஆகியிருக்கும் பட்சத்தில், நம் பெண்களிடையே வெகுவாக அருகிப்போன மூக்குத்தி அணியும் கலாச்சாரம் மீண்டும் துளிர்த்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் அதில் ஓர் ஆபத்துமிருக்கிறது.  அது சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகக் கூட அமைந்துவிடக்கூடும். சமந்தாவைப் பார்த்து மூக்குத்தி அணிந்து கொள்வதென்பது பேஸ்புக் ப்ரோபைல் ல சமந்தா போட்டோ போடுறது போல ஈசியான விஷயமல்ல. நமக்கிருப்பது கூட மூக்குத்தானா என்பதை ஒருமுறை உறுதிப் படுத்திக் கொள்வது மிக அவசியம்.

Friday, January 4, 2013

பெண்களின் ஆடையும், வன்முறையும்!ஒரு பெண் மீதான வன்முறை இடம் பெறும்போதெல்லாம் பெண்களின் ஆடைகள் குறித்து மட்டுமே அதிகமாகப் பேசப்படுகின்றன.

ஒரு பெண் அணிந்திருக்கும் உடை குறித்து மோசமான வசைச் சொற்களால் தாக்கும் சைக்கோக்களிற்கு கலாச்சாரக் காவலர்கள் அந்தஸ்தைக் கொடுக்கும் மனநிலை பிறழ்ந்த சமூகம் நம்மிடையே உண்டு.