சுஜாதாவின் வாசகர்களால் என்றும் மறக்கமுடியாத, தவிர்க்கமுடியாத இரு கதா பாத்திரங்கள் கணேஷ்-வசந்த்.
அனால் சுஜாதா என்றதுமே சிலபேருக்கு கணேஷ்-வசந்த் தான் ஞாபகத்துக்கு வருவார்கள். இது ஒரு துரதிருஷ்ட வசமான கவலைக்குரிய விஷயம்! இது அவர் பெயரைக் கேட்டாலே அலர்ஜியாகிற இலக்கியவாதிகளின்(?!) நிலை!
பொதுவாக இரண்டு வெவ்வேறுபட்ட குண இயல்புகளை, நடத்தைகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் இணைந்து வரும்போது, அதிக வரவேற்பைப் பெறுகின்றன.
கணேஷ் - பொறுப்பான, அதிகம் பேசாத, கண்ணியமான, பெண்கள் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொல்லாத, கொஞ்சம் கண்டிப்பான ஆசாமி.
வசந்த் - கிண்டல், கேலி, விளையாட்டுத்தனம், வாய் அதிகம், எவ்வளவு பிசியிலும் பெண்களை கொஞ்சம் 'சைட்' அடித்தவாறு, ஜாலியான ஆசாமி.
தனது இரு வேறுபட்ட மனநிலைகளுக்கு கொடுத்த பாத்திர வடிவங்களா கணேஷ்-வசந்த்? ஒருவேளை பொறியியலாளர் ரங்கராஜன் 'கணேஷ்' ஆகவும், எழுத்தாளர் சுஜாதா 'வசந்த்' ஆகவும் இருந்தார்களா?
கணேஷின் அறிமுகம் நைலான் கயிறு நாவலில். அப்போது கணேஷ் டெல்லியில் இருந்ததாக ஞாபகம். ஒரு துணைக் கதாபாத்திரமாக வந்தார். வசந்த் அப்போது இல்லை.
பாதி ராஜ்ஜியம், அனிதா-இளம் மனைவி கதையிலும் கணேஷ் மட்டுமே.
கணேஷ் தனியாக வந்த கதைகளில் கணேஷிடம், வசந்தின் சில இயல்புகளைக் (அதே கிண்டல்,கேலி, பெண்கள்) காண முடிந்தது. ஏதோ ஒரு கதையில் நீரஜா என்ற பெண் உதவியாளர் இருந்தார். பிரியாவில் ( அல்லது காயத்ரி? ) தான் வசந்த் அறிமுகம் என்று நினைக்கிறேன்.
'காயத்ரி'யைத் திருட்டுத் தனமாக வீட்டில் வைத்து வாசித்த ஞாபகம் இருக்கிறது. அந்தவயதில் அது 'அடல்ஸ் ஒன்லி' ஆகவும், நான் கேள்விப்பட்டேயிராத சில விஷயங்களையும் உள்ளடக்கியிருந்தது!
பிரியா, காயத்ரி திரைப்படங்களாக வெளிவந்தனவாம். நான் பார்க்கவில்லை.
'எதையும் ஒரு வழி' பண்ணிவிடும் மணிரத்னம் குடும்பம் கணேஷ்-வசந்த் தொலைக்காட்சித் தொடராக்கியது. அந்தக் 'கொடுமையை' ஓரிரு முறை அனுபவித்திருக்கிறேன்.
இதையெல்லாம் சுஜாதா ஏன்தான் அனுமதித்தாரோ?
ஏராளமான பெண் ரசிகைகளைக் கொண்டிருந்தான் வசந்த். ஒரு கதையில் வசந்துக்கு திருமணம் செய்வதாக சுஜாதா முடிவு செய்ய, பலத்த எதிர்ப்புக் கிளம்பியதாம் பெண்கள் தரப்பிலிருந்து. அநேகமாக, பெண்களைக் கவர்ந்த கற்பனை ஹீரோக்களுக்கு திருமணம் நடைபெறுவதில்லை/கூடாது என்பது ஒரு பொதுவான நியதி.
(சில ஜேம்ஸ்பாண்டு படங்களில் அவருக்குத் திருமணம் நடைபெறும். ஆனால் அப்போதே எங்களுக்குத் தெரிந்துவிடும் அடுத்தடுத்த காட்சிகளில் பாவம் அந்தப் பெண் எதிரிகளால் கொல்லப்பட்டு விடுவாரென்று!)
நான் ரசித்த சில கணேஷ்-வசந்த் கதைகள்.
நிர்வாண நகரம், ஆ, எதையும் ஒருமுறை, கொலையுதிர்காலம், வசந்த் வசந்த், மறுபடியும் கணேஷ், காயத்ரி, பிரியா, மேற்கே ஒரு குற்றம், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு (நாடகம்), சில்வியா, மெரீனா, யவனிகா, ஐந்தாவது அத்தியாயம், விதி, கொலையரங்கம், விபரீதக் கோட்பாடு, ஆயிரத்தில் இருவர்
சுஜாதா எழுதிய சரித்திர நாவலான 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை'யில் வரும் பாத்திரங்களான 'கணேச'ப்பட்டர், 'வசந்த'குமாரன் இருவரும் கணேஷ்-வசந்தாகவே தோன்றுகின்றனர் எனக்கு.
எண்பதுகளில் கணேஷ்- வசந்த் எந்த அளவுக்கு பிரபலமடைந்து இருந்தார்கள் என்பதை சுஜாதாவே சொல்கிறார்,
......கணேஷ் வந்து “நைலான் கயிறு” ல்ல வந்தான் ’68ல்ல. வசந்த் வந்து “பிரியா” ல்ல தான் அறிமுகமானது. கணேஷ் முதல்லே “Solo”வா இருந்தான். ஆனா கதை எழுதறபோது Structureல கஷ்டமா இருந்தது. கணேஷ் வந்து மனசில, நினைச்சுகிட்டு இருந்ததை சொல்ல Counterpoint character தேவையாய் இருந்தது. கணேஷ் வந்து matured; வசந்த் immatured childish ஆக இருக்கான். கூட்டங்களுக்கெல்லாம் போனா “வசந்தை” ஏன் அழைச்சிட்டு வரல்லேன்னு கேக்கறாங்க. பஸ்லே பார்த்தேன்னு… சொல்றாங்க. பெண்கள் நிறைய பேர் வசந்துக்கு கல்யாணம் பண்ணி வைக்காதீங்கன்னு எழுதறாங்க.. psychologicalஆ அது ரொம்ப Interestஆ இருந்தது. கல்யாணத்தை கலைச்சிடுங்க, வேண்டான்னு சொல்றாங்க. They feel they will lose something charming அது மட்டுமல்ல… One reader sent a telegram நான் அவனுக்கு வந்து என் bloodஐ கொடுக்க தயாரா இருக்கேன்னு” They believe that Vasanth exists. எல்லோருக்கும் அவன் character பிடித்து இருக்கு. அந்த மாதிரி இருக்க ஆசைப்படறாங்க....
திரைப்பட இயக்குனர் வசந்த், சுஜாதாவின் வசந்த் பாத்திரத்தின் பாதிப்பிலேயே தனது பெயரை 'வசந்த்' ஆக மாற்றியதாகச் சொல்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு பெண் தனது பிரியமான நாய்க்குட்டிக்கு 'வசந்த்' எனப் பெயரிட்டு அழைத்தார்.
சில சிக்கலான விஷயங்களை கணேஷ்-வசந்த் கதைகளில் போகிற போக்கில் கூறிச் செல்வார் சுஜாதா!
ஒரு கதையில் போகிற போக்கில் வசந்த், 'நீட்ஷே' பற்றிக் கூறிச் சென்றதால் தான் நீட்ஷே யைத் தேடி வாசித்ததாக சாரு கூறியிருந்தார்.
(சாரு கூறியதன் பின்னர் தற்செயலாக வீட்டில் ஒரு 'நீட்ஷே' பற்றிய சிறு புத்தகம் கையில் சிக்க வாசித்தேன்)
இறுதியாக வந்த சில்வியா தொடரில், கவிஞர் சில்வியா பிளாத் பற்றிய தகவல்கள் கதையின் போக்கினூடே சொல்லப்பட்டது. கதையின் நாயகியான சில்வியாவுக்கும் அதே மனப்பிறழ்வு நோய் (Silvia Plath - Pulitzer Prize பெற்ற அமெரிக்க பெண் கவிஞர், எழுத்தாளர். தனது முப்பதாவது வயதில் 1963 இல் லண்டனில் தற்கொலை செய்து கொண்டார்)
இதையே சீரியஸாக சில்வியா பிளாத்தும், இருவேறுபட்ட மனநிலைகளின் பிறழ்வு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையாக எழுதினால் நானெல்லாம் எஸ்கேப்.
நகைச்சுவை உணர்வும், சகிப்புத் தன்மையுமே ஒரு சமூகத்தின் நாகரீகத்துக்கு அளவுகோலாக உள்ளன என்கிறார் சுஜாதா.
நமக்குள் இருக்கும் நகைச்சுவை, வாழ்வின் ரசிப்புத் தன்மை கலந்த ஒரு கொண்டாட்டமான மனநிலை எப்பொழுது எம்மை நீங்கிச் செல்கிறதோ அப்போதே நாம் மனதளவில் வயது போனவர்களாகிறோம் என்பது எனது கருத்து.
நம்மில் பலர் இளவயதிலேயே வயது போனவர்களாகவே இருக்கிறார்கள்!சில இலக்கியவாதிகளை(?!) வாசிக்கும்போது நமக்கும் நரைகூடிக் கிழப்பருவமெய்தின உணர்வைக் கொண்டு வந்துவிடுவார்கள்!
அந்தக் கொண்டாட்டமான மனநிலையை முதுமையிலும் தக்க வைத்திருப்பவர்கள் மனதளவில் இளமையானவர்களாகவே இருக்கிறார்கள்.
சுஜாதாவின் கொண்டாட்டமான மனநிலையே 'வசந்த்'! - இதுவும் எனது கருத்து. அவர் இறுதிவரை அப்படியே இருந்தார். அதனால் அவருடைய எழுத்துக்களும் என்றும் இளமையானவையாக இருக்கின்றன.
சுஜாதா படிக்கும் வயதில் நம்மில் பலரைப்போலவே பெண்களுடன் பேசிப் பழக சந்தர்ப்பங்களின்றி கூச்ச சுபாவமுள்ளவராகவே இருந்ததாகக் கூறியுள்ளார். அவருக்குள்ளிருந்த நகைச்சுவை உணர்வும், கிண்டலும், கேலியும் பின்னாளில் வசந்தாக வெளிப்பட்டிருக்கக்கூடும். எங்களுக்குள் இருக்கும் அதே உணர்வுகள் வசந்த்தை ரசிக்க, வரவேற்கச் செய்கின்றன.
எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு 'வசந்த்' இருக்கிறான் என்றே நான் நினைக்கிறேன். நாம் வளர்ந்த, வாழும், பணிபுரியும் இடங்களில் எம்மால் வெளிப்படுத்தப்படாத ஒருவனாக! எனக்குள்ளும், இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்குள்ளும் நிச்சயமாக ஒரு 'வசந்த்'! எந்த விகிதத்தில் கலந்திருக்கிறான் என்பதே ஆளாளுக்கு வித்தியாசம்!
அவரின் சில எழுத்துகளில் வரும் நகைச்சுவை வசந்த் எழுதியதைப் போலவே இருக்கும்.
ஸ்ரீரங்கத்துத் தேவதைகளில் 'மாமி, சேலை கட்டிய குதிரை போல நடந்து போனாள்!'.
இறுதியாக கற்றதும் பெற்றதும் தொடரில் இவ்வாறு தனது அனுபவத்தைக் கூறுகிறார்.
பார்க்கில் தனக்குப் பக்கத்தில் பெஞ்சில் அமர்ந்திருந்த தாத்தா!? தனது வயதைக் கண்டுபிடித்துச் சொல்லுமாறு கேட்க,
....நான் யோசித்து, 'கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கள்',
'மத்த விரல்களை ரெக்கை மாதிரி அசையுங்கோ' ,
'ரெண்டு கையையும் ஏரோப்ளேன் மாதிரி வச்சுண்டு மெதுவா குதிங்கோ..பாத்து...பாத்து...'
அவர் அப்படியே எல்லாம் செய்ய,
' உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!'
அவர் அசந்து போய், கை குடு எப்படிப்பா இவ்ளோ கரெக்டா சொன்னே?'
ஒரு ட்ரிக்கும் இல்லை, நேற்றுத்தான் இதே சமயம், இதே பெஞ்சில உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன்னிங்க, மறந்துட்டீங்க!'
தன்னுடைய எழுபது வயதில் வசந்த் இப்படித்தானே இருப்பான்(ர்)!
- பதிவர் ஜனாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தப்பதிவு!
- தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்!