Showing posts with label doordarshan. Show all posts
Showing posts with label doordarshan. Show all posts

Wednesday, December 15, 2010

தூர்தர்ஷனும் யாழ்ப்பாணமும்


எங்களுக்கும் தூர்தர்ஷனுக்குமான தொடர்பு மகாபாரத காலத்துப் பழமை வாய்ந்தது! அதாவது, இந்திய ராணுவம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் தூர்தர்ஷனில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பினார்கள். அதைச் சொன்னேன்!

ஹிந்தியில்தான். இருந்தாலும் பெரியவர்கள் கதை சொல்ல, ஞாயிறு காலை பத்துமணிக்கு டீ.வி.முன்னால். ஏனைய பொழுதுகளில் ரூபவாஹினி மட்டுமே. பிறகு இந்திய இராணுவம் வெளியேற, மகாபாரதப் போர் தொடங்கும் முன்னரே எங்கள் போர் ஆரம்பித்துவிட, யாழ்ப்பாணத்தில் மின்சாரம் நின்று போயிற்று!

சரியாக ஆறு வருடம் கழித்து யாழில் திரும்ப மின்சாரம் வந்தபோது, புதிதாக டீ.வி. வாங்கியோரும், இருந்ததைத் திருத்தியும் (எங்க வீட்ல இருந்தது 16  வயதான நேஷனல் கலர் டீ.வி., அது எந்த திருத்தலுக்கும் அவசியமின்றி வேலை செய்ததில் அப்பாவுக்கு ஒரு பெருமை) பாவிக்கத் தொடங்கும் போது, எல்லோருடைய பெரு விருப்பத்துக்குரிய தெரிவு தூர்தர்ஷன்தான். ஏனெனில் வேற எந்த சானலும் கிடையாது.

முதன் முதல் டீ.வி. பார்க்கும்அந்த நாள் இருக்கே...எங்கள் வயதில் இருந்த ஒவ்வொருத்தனுக்கும் அது ஒரு திருவிழா மாதிரி. அப்போ பொதிகை ஆரம்பிக்கவில்லை. தூர்தர்ஷனின் நேஷனல்... ஒரே ஹிந்திதான். அப்பப்போ கொஞ்சம் தமிழ்! 

முதல் நாள் டீ.விக்கு முன்னால பயபுள்ளைக பழியாக் கிடந்து, ஹிந்தி நியூஸ், ஹிந்தி சீரியல் எல்லாம் சின்சியரா, சீரியஸா பார்ப்பாங்க.
மகாபாரத காலத்தில பார்த்த அதே விளம்பரங்களை மீண்டும் திரையில் பார்க்கும்போது அட அட என்ன ஆச்சர்யம், சந்தோஷம்! ( பத்து வருஷம் கழிச்சுப் பழைய பிரண்டைப் பார்த்த மாதிரி )

வெள்ளிக் கிழமையில் ஒளியும்ஒளியும் போடுவார்கள். எட்டரை நிகழ்ச்சிக்கு ஆறு மணியிலிருந்தே பயபுள்ளைக காத்திருக்க, முத்து முத்தா நான்கு பாடல்கள் போடுவாங்க! அது அநேகமா விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, சரத்குமார் பாடலா இருக்கும்.

அதே வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஒரு படம் போடுவாங்க பாருங்க. அதப் பாக்கிறதுக்கு எத்தனை போராட்டங்கள், சோதனைகள்!
மின்வெட்டு காரணமாக பத்து மணிக்கு வரும் மின்சாரம் சரியான நேரத்துக்கு வராது. வெறுத்துப் போய் இருப்போம்!

மின்சாரம் சரியான நேரத்தில வந்துட்டா...ஒளிபரப்பு நிலையத்தினர் ஹிந்தில இருந்து, தமிழுக்கு மாற்றி இருக்க மாட்டார்கள்! இது அத விடக் கொடுமை! ஹிந்திப் படத்தை இருபது நிமிடம் பார்த்துக் கொண்டிருக்க திடீர்னு தமிழுக்கு மாற்றுவார்கள். என்ன படம்னே தெரியாது! அநேகமா அப்படியான படம் தான் போடுவாங்க.

எல்லாமே சரியா இருந்தா ( எப்பவாவது ஒருநாள் ) சந்தோஷமா பார்த்துட்டே இருந்தா படத்தோட டைட்டில் வரும்! 'வா ராஜா வா!'
வாழ்க்கைல கேள்வியே படாத ஒரு படமா இருக்கும். இருந்தாலும் தைரியத்த இழக்காம, மனசத் தளரவிடாம இருந்தா, டைட்டில தொடர்ந்து பதின்மூன்று விளம்பரம்!

முதலாவதா 'வீக்கோ டெர்மரிக்' அதே பழைய சோப் விளம்பரம்.
பத்து வருஷத்துக்கு முன்னாடி குளிச்சிட்டிருந்த அதே 'ஆன்டி' தான் இப்போ 'அக்காவாகி' குளிச்சிட்டிருந்தா! (புரியல? நாங்க வளர்ந்திட்டோம்னு சொல்றேன்!)

விளம்பரம் முடியும்போதே கண்ணைக் கட்ட ஆரம்பிச்சுடும். அதையும் தாண்டி, கொள்கைப்பிடிப்போட இருந்தா...ஒரு ஐந்து நிமிடம் விட்டு இன்னொரு பத்து விளம்பரம்!...இதுல பாதிப்பேரு அவுட்!
ஒரு கட்டத்தில் படுமொக்கைப் படத்தின் வெப்பம் தாங்காமல் எலோருமே தூங்கி, கரெக்டா வணக்கம் போடும்போது எழுந்திருந்து பார்ப்பாங்க! (அது மட்டும் எப்பிடீன்னே தெரியல!)

அந்தக்காலத்தில் ரூபவாஹினியில் எல்லாம் ஒரு நிமிடம் ஏதாவது ஒளிபரப்பில் குளறுபடி (மிக அரிதாகத்தான் நடக்கும்) நேர்ந்தாலே உடனே 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' ன்னு ஒரு கார்டு போடுவாங்க!

ஆனா தூர்தர்ஷன்ல என்னதான் ஆனாலும், எவ்வளவு நேரம் குழறுபடி நடந்தாலும் அவர்கள் எதற்குமே வருந்தியதில்லை! (ஒரு வேளை அவர்களே யாரும் நம்ம சானல் பார்க்க மாட்டார்களென நம்பினார்களோ?) ஒருவேளை தமிழக மீனவர்கள் மீது இந்தியா அரசு காட்டும் அக்கறை போலவே தனது தமிழ்நேயர்கள் மீது அரசு தொலைக்காட்சியும் அன்பு கொண்டிருந்ததோ?  

என்னதான் இருந்தாலும், தேசிய விருது பெற்ற கருத்தம்மா, அந்திமந்தாரை போன்ற பல படங்களை நான் தூர்தர்ஷனில்தான் பார்த்தேன்! 
( நல்ல விஷயத்தையும் சொல்லணுமில்ல? )

திடீரென்று தோன்றியது..யாழ்ப்பாணத்தில் இப்போது யாராவது தூர்தர்ஷன் பாக்கிறார்களா? எனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் எல்லா வீடுகளிலும் கேபிள் கனெக்சன் இருப்பதால் இலங்கையின் தமிழ் சானலான சக்தி டீ.வி.யைக்கூட யாரும் பார்ப்பதில்லை (கொழும்பில்தான் பார்க்கிறார்கள் ).

ஆனால் யாரும் பழசை மறந்திருக்க மாட்டார்கள்!
அதனால்தானோ என்னவோ...ரிமோட்டில் சானல் மாற்றிக்கொண்டு உலாவரும்போது, எல்லா சானலிலும் கொஞ்ச நேரம் தரித்து நின்று பார்த்தாலும் பொதிகை வரும்போது நிற்காமல் ஓடுகிறார்கள் (நானும்)!