Friday, August 31, 2012

சிங்களப் பாடல்கள் - ஓர் இசை அற்புதம்!



"உனக்கு சிங்களப்பாட்டு பிடிக்குமா?"

அலுவலகத்தின் உணவு வேளையின்போது சிங்களப் பொண்ணு ஒண்ணு கேட்டது.

Wednesday, August 15, 2012

டேட்டிங்! (Dating)

"டேட்டிங் எண்டா ஃபிரண்ட்ஸ்கூட போய் சுத்தி, சாப்பிட்டு வர்றதுதானாம்!"

அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீ.

ஒரு நிமிஷம் அவனுக்கு எதுவும் புரியவில்லை. சொன்னது அலுவலகத்தில் கூடவே வேலை பார்க்கும், சின்ன வயசில இருந்தே கொழும்பில் வளர்ந்த, நன்கு படித்த இளம்பெண். 

'ஒருவேளை நம்மளக் கலாய்க்கிறாளோ?’ யோசனையுடன் பார்த்தான். ‘சேச்சே அப்பிடியிருக்காது’ கண்களில் அப்படித் தெரியவில்லை.

சீரியசாகத்தான் சொன்னார். அம்மம்மாகூட உட்கார்ந்து பூஜையறையில் தேவாரம் பாடிட்டு, கந்தன்கருணை படம் எல்லாம் பாக்கிற பெண் அப்படிச் சொன்னதில் பெரிதாக ஆச்சரியப்படவும் ஏதுமில்லை.  

குறித்த பெண் ஸ்டைலா, மொடேர்னா ட்ரெஸ் பண்ணி எப்பவும் ஐபோட்ல பாட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார். ஒரு முறை ஆர்வக் கோளாறில் அவர் ஐபோட்டைக் காதுக்கு கொடுத்துவிட்டு உடனேயே கலவரமாகித் திருப்பிக் கொடுத்த அனுபவம் ஜீக்கு இருந்தது. ஐபோட்டில் கந்தசஷ்டி கவசம் கதறிக் கொண்டிருந்தது. 

'சரி அந்தப்பிள்ளையும் என்னத்தையோ புதுசாத் தெரிஞ்சுகொண்டிருக்குது. எதுக்கும் லைற்றா ரோக்கப் (Talk) போடுவம்' என முடிவுசெய்து,   

"அப்பிடியா? எப்பிடி இப்பிடியெல்லாம்?" ஆச்சரியத்துடன் கேட்டு வைத்துவிட்டு அமைதியாக இருந்தான் ஜீ.

“அன்ரிதான் சொன்னா” அந்தப்பெண் சொல்ல ஆரம்பித்தார்.

'அதில பாருங்கோ, இந்த லேடீஸ் எல்லாம் ஒருத்தனுக்கு ஒரு விஷயத்தை ஆரம்பிச்சாலே, முழுசா சொல்லி முடிச்சுட வேணுமெண்டு முடிவெடுத்த பிறகுதான் சொல்லுவினம். அப்பிடி ஒரு தடவை முடிவு பண்ணிட்டா... பிறகு தன்னோட பேச்சை மட்டுமில்ல பக்கத்தில சிக்கி இருக்கிறவன்ர கதறல் கெஞ்சலைக்கூட கேட்க மாட்டினம் . ஒரு வழி பண்ணிடுவினம்' - இப்படியாக நம் பெரியவர்கள், அனுபவஸ்தர்கள் சொல்வதை என்னைப் போலவே நீங்களும் கேட்டிருக்கக்கூடும்.

ஜீயும் வழக்கம் போல 'எனக்கு இதுல இன்ட்ரெஸ்ட்டே கிடையாது. ஏதோ நீங்க சொல்றதால கேக்கிறன்' என்கிற ரீதியில் ஒரு முகபாவத்தை செட் பண்ணி வச்சிருந்தான்.

அன்ரி லண்டன்ல இருந்து வந்திருந்தா. அவ ஒரு 'பீட்டர் பேர்வழி' என்று தெரிந்தது.  அவ பேச ஆரம்பிக்கும் ஐந்து வசனங்களில் மூன்று 'அங்க லண்டன்ல எல்லாம்...' என்றே ஆரம்பிக்கும். மீதி இரண்டு 'என்ன இது? இங்க எல்லாம் இப்பிடி இருக்கு?' என்பதாக அமையும்.  

வெள்ளைக்காரனெல்லாம் விஞ்ஞானிகள், வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தவனெல்லாம் அறிவாளிகள் என்ற தீவிர நம்பிக்கை கொண்டது நம் தமிழ்ச்சமூகம். காலங்காலமா கதை கேட்பது, கதை சொல்வது, கதை விடுவது என்பவற்றின் மூலமாகவே நமது பொது அறிவை விருத்தி செய்துகொள்பவர்கள் நாங்கள். வெளிநாட்டில இருந்து யாராவது வீட்டுக்கு வந்திருந்தா என்ன பண்ணுவோம்? அதேதான் அங்கயும் நடந்திச்சுது. 

அன்ரியைச் சுத்தி இருந்து கதை கேட்டுக்கொண்டிருக்க, அவவும் உற்சாகமா துபாய்ல இருந்து வந்த வடிவேலு மாதிரியே சொற்பொழிவு ஆத்திக் கொண்டு இருந்திருக்கிறா. இடையிடையே மானே, தேனே போல, "என்ன ஊர் இது?", "என்ன வெக்கை?", "என்ன வெய்யில்?", "எவ்வளவு டஸ்ட்?" இப்படியான கேள்விகள் வேற. அந்தக் கேள்விகளை இன்டிரெக்டா இப்படியும் பொருள் கொள்ளலாம். "இங்கயெல்லாம் எப்பிடி இருக்கிறீங்க?", "மனுஷன் இருப்பானா இங்க?", "ஆமா, நீங்க எல்லாம் மனுஷர் தான?"- இப்பிடியே போயிட்டு இருந்திருக்குது! 

அவ்வப்போது டிரெக்டா "என்ன கன்ட்ரி இது? இன்னும் அப்பிடியே இருக்குது?" அன்ரி கேட்க, இவைக்கும் உண்மை உறைச்சு ஃபீலாயிட்டிணமாம். பிறகென்ன வழக்கம்போல, இந்தக் கண்ட்ரில பிறந்த குற்றத்தை எண்ணி வெட்கி, அவமானப்பட்டு, அசடு வழிந்து சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அன்ரியும் இதே கன்ட்ரிலதான் பிறந்து முப்பது வயசுவரை வாழ்ந்தவங்க என்பது அவ்வளவு முக்கியமல்லாத விஷயம்.

அன்ரியைப் பொறுத்தவரைக்கும் எல்லாம் நல்ல படியாத்தான் போயிட்டிருந்திருக்கு. ஆனால்  பாருங்க இடைல ஒரு ஃபுளோல பெருமையோட பெருமையா "என்ர மகளும் டேட்டிங் எல்லாம் போறவ" எண்டு சொல்லியிருக்கிறா. அங்கதான் வந்திருக்கு வில்லங்கம்.   

"டேட்டிங் எண்டா என்ன?" - ஓடியன்சில இருந்து யாரோ ஒரு காரெக்டர் கேள்வி கேட்டிருக்குது. 
நிச்சயமா இந்தப்பெண் இல்லை. ஏனெண்டா அவையின்ர குடும்பத்திலயே நாலு பொது விஷயம் தெரிஞ்ச விவரமான ஆள் அதுதான். வலு கெட்டிக்காரி என்கிற ஒரு இமேஜ் இருக்குதாம். அதை  மெயின்டெயின் பண்றதுக்காகவே, அவசரப்பட்டு எங்கேயுமே இப்பிடி கேள்வி கேட்கிறதில்ல.

இந்த இடத்திலதான் அன்ரிக்கு பெரிய பிசகு பண்ணிப்போட்டன் எண்டு விளங்கிருக்கு. உடனேயே சடன் பிரேக் போட்டுட்டு, மனுசி முழுசியிருக்கு. யோசிச்சுப்பாருங்க எம்.பீ.ஏ. படிச்ச இந்த தலைமுறைப் பெண்ணே இவ்வளவு விவரமாயிருக்குது. அப்ப, இதுக்கு முந்தின ஜெனரேஷன் அம்மா? அதுக்கும் முந்தின ஜெனரேஷன் அம்மம்மா? அவங்கள் எல்லாம் எவ்வளவு விவரமாயிருப்பாங்க? இந்த விவரக் கூட்டத்துக்கு விளங்கப்படுத்திறது எப்பிடி?

உண்மையச் சொன்னா நாளைக்கு அன்ரியையே ஒரு மாதிரியாத்தான் பாப்பினம். கொஞ்ச நேரத்திலயே இதையெல்லாம் அனலைஸ் பண்ணி அன்ரி சொன்ன பதில்தான் 'டேட்டிங் எண்டா ஃபிரண்ட்ஸ்கூட போய் சுத்தி, சாப்பிட்டு வர்றது!'

கொடுமையைப் பாருங்க தனது மகள் டேட்டிங் போறதைப் பெருமையாச் சொல்ல முடிந்த அம்மாவுக்கு டேட்டிங் எண்டா என்னங்கிறதை அதே பெருமையோட சொல்ல முடியுதா? நாங்களும் வெள்ளைக்காரனோட ஈக்குவலாத்தான் வாழுறம் எண்டுறத சொல்லுவமெண்டா முடியுதா? இவையளெல்லாம் எப்பதான் வளரப் போயினமோ? பாவம் மனுசி உள்ளுக்குள்ள நொந்து போயிருக்கும்.

அதுக்குப் பிறகு அந்தக் குடும்பமே அன்ரிகூட சந்தோஷமா அடிக்கடி 'டேட்டிங்' போயிட்டு இருக்கினமாம். அதாவது ஹோட்டல் ஹோட்டலா போய் விதம்விதமா சாப்பிட்டுக்கொண்டிருக்கினமாம்.

'ச்சே! எனக்குன்னு வந்து வாய்க்குதுங்க... எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?' - ஜீ நொந்துபோயிருந்தான்.

திடீரென ஏதோ உண்மை உறைக்க, அதிர்ச்சியடைந்து தலையில் கைவைத்துக்கொண்டிருந்தான்.

இந்த சம்பாஷனை நடந்து கொண்டிருந்த போது, ஜீயும் அந்தப் பெண்ணும் KFCல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

* * * * * * * *

மேலேயே கதை முடிந்துவிட்டது. ஆனாலும் எனக்கொரு கெட்ட பழக்கம். பிறகு என்ன நடந்தது என்பது பற்றி ஜீ என்னிடம் சொல்லியிருந்தான். அதையும் சொல்லவேணுமெண்டு நினைகிறேன். ஜீயின் அந்த அட்டகாசமான 'டேட்டிங்' நடந்த அன்றைக்கே ஜீயின் அந்தப்பெண்ணுடனான நட்பு 'பணால்' ஆகிட்டுதாம். காரணம்... 

ஜீயிடமும் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது.

தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது ஒரு விஷயத்தை தவறாகப் புரிந்து வைத்திருந்தால், உண்மையை எடுத்துச் சொல்லிப் புரியவைத்து விடவேண்டும் என்று நினைப்பான். இந்த சமூகத்தின்மீது அக்கறை உள்ளவனாக (இப்படி அவனே சொன்னான்) தனது கடமை அது என்பான். இருந்தாலும் இது கொஞ்சம் சிக்கலான விஷயம்.

அவன்கூட எல்லாம் நாலு வருஷத்துக்கு ஒருமுறைதான் போனால் போகுதென்று ஒரு பெண் வந்து ஹாய், ஹலோ சொல்லும். அதையும் அவனே வில்லங்கமாக எதையாவது சொல்லித் தெறிச்சோட வைக்கிறது வழக்கம். முதலில் எதுக்கு இப்ப தேவையில்லாம.. என்று யோசித்திருக்கிறான். 'சரி வர்றது வரட்டும் பார்க்கலாம்... நமக்கு உண்மைதான் முக்கியம்!'

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கஷ்டப்பட்டு போதுமான இடைவெளிவிட்டு பொறுமையா, பக்குவமா 'டேட்டிங்'கின் தோற்றம், வரலாறு, தாற்பரியம் பற்றிக் கிளாஸ் எடுத்தான். 

அந்தப் பெண் சிம்பிளா ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். ஜீ சொந்தச் செலவிலயே சூனியம் வச்சுட்டான் என்கிறது அந்த முதல் கேள்வியிலேயே தெரிந்தது... 

"அப்ப என்ர தங்கச்சிய கூடாதவள் என்கிறியா?"

Thursday, August 2, 2012

தமிழ்ப் பெண்களின் அம்மாக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?


"தம்பி இந்த 'சீட்'டை கொஞ்சம் சரிச்சு விடுங்க"

பேரூந்தில் எனது இருக்கைக்கு அருகில், நடையை அடுத்த இரு இருக்கைகளில் யன்னலோரத்தில் அவர், கையில் குழந்தை. பக்கத்து இருக்கையில் எனக்கு அருகாமையில் அந்தப் பெண்.

எனது பெண்ராசி காரணமாக நான் பெண்களுக்கு உதவி செய்வதில் யோசிப்பதால், "அந்த பட்டனை ப்ரெஸ் பண்ணிட்டே சரியுங்க"