Friday, July 26, 2013

இந்த வாய் இருக்கே...



லுவலகத்தின் டைனிங் ஏரியாவில் ஓரிருவர் வேலை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். 
பக்கத்திலிருந்த சிங்களப் பெண், "என்ன சொல்றாங்க?" 
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். உடனே கேட்டாள் 
"உனக்கு சிங்களம் தெரியுது. தெரியாதுன்னு சொல்லிட்டிருக்கே?" ஆகா நமக்கு டெஸ்ட் வச்சிருக்காளா இது தெரியாம..
"அப்பப்ப கொஞ்சம்...வேலை சம்பந்தப்பட்ட விஷயம்னா புரியும்"
"அப்போ நாங்க பேசுறது எல்லாம் கேப்பியா?"
"என்னாதிது? அஃபீஸ்ல இருந்து நீ பேசினா……  ஏதோ ஒட்டுக் கேட்ட மாதிரி ரியாக்ட் பண்றே?"

அவள் சிரிச்சுட்டுத் தன்பாட்டுக்குதான் இருந்தாள். நம்ம வாய் இருக்கே வச்சுட்டு சும்மா இல்லாமல்,

"ஹே நீ ஒண்ணும் கவலைப்படாதே நீ boy  ஃபிரெண்ட் கூடப் பேசுறது எனக்குப் புரியாது. அந்த டெக்னிக்கல் டெர்ம்ஸ்(?!) எல்லாம் எனக்குத் தெரியாது" - அவ்வளவுதான்!

அப்படியே சிரிப்புடன் என்பக்கம் திரும்பி, "உனக்கு கேர்ள் ஃ பிரண்ட் இருக்கா?" 
"இல்ல.." - தேவையா எனக்கு? 
ரோலிங் செயார பக்கத்தில மூவ் பண்ணி 
"பொய் சொல்லாதே! ப்ளீஸ் சொல்லு! ஏன நீ எப்பப் பார்த்தாலும் பொய் சொல்றே?" 
"அடங்கொன்னியா இது வேறையா? ஏய் இது இப்ப ரொம்ப முக்கியம் போ போய் வேலையைப் பாரு வேலையப்பாரு!"  

தேவையிலாத நேரத்தில வாயத் திறக்காம இருந்தாலே வில்லங்கத்தை  தவிர்க்கலாம். அதுக்காக தேவையான நேரத்தில மட்டும் வாயத் திறந்தா வில்லங்கம் வராதுன்னு இல்லை. அப்பவும் வரும்
 - ஆனா தவிர்க்கமுடியாது. 

சரி தேவையிலாத நேரத்திலயும், தேவையான நேரத்திலயும் வாயை திறக்காம இருந்தா வில்லங்கம் வராதா? அப்பிடின்னு கேட்டா…அப்பகூட வரும்! 
ஏன்னா நாமதான் வாய மூடிட்டு இருப்பமே தவிர, நம்ம நண்பர்கள் எங்காவது இசகு பிசகா வாயத் திறந்திருக்கலாம்.

ண்பன் நைனா எதையும் வெளிப்படையாக, யோசிக்காமல் பேசும் நல்லவன். அவன் என் இன்னொரு நண்பனைப் பார்த்திருக்கிறான். அவன் ரொம்ப நல்லவன். சென்சிடிவ்வான பேர்வழி. சின்ன விஷயத்துக்கும் நிறைய ஃபீல் பண்ணுவான்.

நண்பனுக்கு நைனாவை முதலில் சரியாக அடையாளம் தெரியல. அப்பிடியிருக்க, நைனா கீழ்க்கண்டவாறு நலம் விசாரித்திருக்கிறான்.

"என்ன மச்சான் வேலையை விட்டுட்டியா?"
"ஓமடா..யார் சொன்னது?"
"ஜீ சொன்னான்டா"

எல்லாத்தையும் பண்ணிட்டு சின்சியரா எனக்குத் தொலைபேசி,
"மச்சான் Sorryடா இப்பிடிக் கேட்டுட்டன் என்ன நினைச்சானோ? பக்கத்தில வைஃப் வேற..."
"அடப்...பாவி!"

எப்பிடிடா இருக்கே? நல்லா இருக்கியா? இப்பிடித்தானே நலம் விசாரிப்பாங்க? அதானேய்யா உலக வழக்கம்? ‘வேலையை விட்டுட்டியா’- இது புதுசால்ல இருக்கு!

ண்பனைக் கண்டா நலம் விசாரிக்கிறது தப்பில்ல. ஆனா இன்னொரு நட்பைக் கோமா ஸ்டேஜில படுக்க வைக்கிற அளவுக்கு நலம் விசாரிக்கிறதுதான் தப்பு!

தை விட இன்னொரு டைப் இருக்கு. வோன்டட்டா போய் வடைச்சட்டிகுள்ள வாயை வைக்கிறது. வில்லங்கத்தை விலைக்கு வாங்கிறதைவிட நாமளே உருவாக்கினா என்ன? அப்பிடீன்னு யோசிக்கிற விஞ்ஞானிகள் கோஷ்டி!

"ச்சே! செம்ம பல்பு மச்சி! என்ன நினைச்சிருப்பான்... ச்சே"
நண்பன் ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தான்.
"என்னடா?"
"இல்ல மச்சான் அஃபீஸ்ல ஒருத்தி பயங்கர ஓவரா டிரஸ் பண்ணிட்டு வருவாள்"
"தமிழா?".
"ஒரு தமிழ் அப்பிடி வந்தாத்தானடா நியூஸ்?
"ஆமால்ல"

"அவளுக்குச் சம்பந்தமே இல்லாம டைட்ட்ட்டா என்னமோ கவர்ச்சிப் புயல் மாதிரியே வருவாள். சிங்கள கேர்ள்ஸ் கூட அங்க அப்பிடி வர்ரதில்ல. எல்லாரும் ஒரு மாதிரியா, கேவலமா பார்ப்பாங்க. பாக்க எங்களுக்கே அந்தரமா, எரிச்சலா இருக்கும். அண்டைக்கு ஆக ஓவரா வந்தாள் செம்ம காண்டாகி, பக்கத்தில இருந்த ஒரு அண்ணன்கிட்ட புலம்பிட்டேன். இதுகளை மாதிரி ஒண்டு ரெண்டுதான் எல்லாரையும் கேவலப்படுத்துதுகள். தமிழாக்களின்ர மானத்தை வாங்குறதுக்குன்னே வந்திருக்குதுகள். இதை எல்லாம் எங்கிருந்து பிடிச்சுக்கொண்டு வந்தாங்களோ? அப்பிடீன்னு"

"சரி அவன் என்ன சொன்னான்?"
"அவன் ஒரு நல்ல பெடியன் மச்சான். நெத்தியில வீபூதி வச்சுட்டு வாற பழம். அவனும் ஓமோம் எண்டு சீரியஸா கேட்டுக் கொண்டிருந்தான்"

"மச்சி இது நல்லால்ல! ஒருத்தி எப்படி வந்தா என்ன? அவள் டிரெஸ்ல அவளுக்கும், வீட்டுக்காரருக்கும் இல்லாத அக்கறை எங்களுக்கெதுக்கு? உனக்கு பிடிச்சிருந்தா சைட் அடி! பிடிக்கலன்னா கண்டுக்காத! நீங்க கலாச்சாரத்தைக் காப்பாத்துறீங்களா? அதென்ன திடீர்னு தமிழாக்களின் மானம், தமிழன் பெருமைன்னு, நல்லாத்தானே இருந்தே? டீவில ஏழாம் அறிவு பார்த்தியா?"

அவசரமாக இடைமறித்தான், "டேய் அவள் வர்றாள்டா....இங்கதாண்டா இருக்கிறாள் நேற்றுத்தான் தெரியும்" 

இன்னொரு நண்பனின் ஃபிளாட்ஸ்க்கு எதிரில்தான் நின்றுகொண்டிருந்தோம். அவள் கண்டுக்கல! கூட வந்தவர் நண்பனைப் பார்த்துச் சிரித்து "பார்ட்டி ஒண்டுக்குப் போறம்" சொல்லிட்டுப் போனார்.

"பாரு மச்சி! அந்தப் பொண்ணு பார்ட்டிக்கே பவ்வியமா மாரியம்மன் கோயில் குடை மாதிரி பச்சைக்கலர்ல ஒரு சிங்குச்சா சுடிதார் போட்டுட்டுப் போகுது அதப்போய் தப்பா பேசியிருக்க ராஸ்கல்.... ஆனா ஒண்ணு மச்சி இந்தப்பொண்ணு நீ சொன்னமாதிரி டிரஸ் பண்ணும் அப்பிடின்னு யோசிச்சா எனக்குக்கூட  லைட்...டா கோபம் வரத்தான் செய்யுது. அத விடு இப்ப என்ன பிரச்சினை?"

"தேவையில்லாம கதைச்சு... அவளுக்கும் தெரிஞ்சுதோ?"
"அதெப்பிடிறா தெரியும்? அந்தப் பழம் இதைப்போய் சொல்றானா?"
"டேய் அவன்தாண்டா இப்ப அவளோட போனது"

"....??"

"அந்தப்பழம் அவளின்ர அண்ணன்டா நேற்றுத்தான் தெரியும்!"

Monday, July 15, 2013

புத்தகக்கடை பல்புகள்!


ப்பப்போ உயிர்மை வாங்கிப் படிக்கிறது வழக்கம். வெள்ளவத்தையில் பூபாலசிங்கம் புத்தகசாலையில்தான் கிடைக்கும் - அதுவும் குறித்த எண்ணிக்கைதான் வரும்! இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சும் 'பல்பு' வாங்கியே தீரணும்னு அடம்பிடிச்சா என்ன பண்றது?

அன்று நண்பனோட அறைக்குப் போயிட்டிருந்தேன். பக்கத்தில இருக்கிற பெரிய புத்தகக் கடைகள்ல சிலவேளைகளில் கிடைக்கலாம்னு நம்பி போனேன். அந்தக் கடைல ரெண்டு அங்கிள்ஸ் இருந்தாங்க. ரொம்ப நாகரீகமா, அன்பா 'தம்பி நாங்க உயிர்மை எடுக்கிறதில்ல. பூபாலசிங்கத்தில கிடைக்கும்!' - இது பேச்சு! மனிதத் தன்மை! அடிப்படை நாகரீகம்! 

ஆனா அதுக்கு முன்னாடி ஒரு கடைக்குப் போனேன் பாருங்க! அங்கே ஒரு இளம் பெண்மணி இருந்தார். அப்பவே தோணிச்சு 'தப்பான இடத்துக்கு வந்துட்டடா ஜீ' 

நம்ம ஊர்ல பெரும்பான்மையான பெண்மணிகள் தமிழ்கூறும் நல்லுலகின் மிகச்சிறந்த ஒரே இலக்கியவாதி ரமணிசந்திரன் என்று எந்த சந்தேகமுமின்றி உணர்ந்துகொண்டவர்கள் என்பதால், திரும்பி ஓடிடலாம்னு நினைச்சேன்..அதுக்குள்ள அவர் என்னைக் கண்டு,

"என்ன பாக்கிறீங்க?"
"உயிர்மை இருக்கா?"
"அப்பிடீன்னா?"

சொன்னேன்! படு கேவலமா என்னை ஒரு லுக் விட்டு கொஞ்சம் யோசித்தவருக்கு வந்துச்சு பாருங்க கோபம், 
"அக்கா...அக்கா!"- என்று கத்தினார்.(யார்ரா இவன் எங்க வந்து என்ன பேச்சுப் பேசறான்? என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறானா? இருடி)

அக்கா விவரமானவங்க போல என்று நினைத்தேன். வந்து,
'என்ன கேட்டீங்க?'
"உயிர்மை"
"என்னது?"
"உயிர்மை"
"......???"
'நான் சரியாத்தான் பேசுறனா?' சந்தேகத்தில் மாறி மாறிச் சொன்னேன் 

உயிர்ர்ர்ர்மை
ஊ...ரிமை
உய்ய்ர்ர்ர்மை
உய்ய்ய்..

யூ நோ! ஐ கேன் ஸ்பீக் ஃபைவ் லாங்குவேஜஸ் இன் டமில்!

ஒருவழியா நம்மள டயர்டாக்கி, கொஞ்சம் வருந்துகிறமாதிரியான 'வெளங்காதவனா இருப்பான் போலிருக்கே'முகபாவனையோடு, சிறுபுன்னகையுடன் சொன்னார்,

"இங்க அதெல்லாம் இல்ல!"

ஆனா மற்றப் பெண்மணிக்கு அப்பவும் கோபம் அடங்கல! விரோதமாக முறைத்துக் கொண்டிருந்தார், 'அதெப்புடிறா என்னப்பாத்து நீ அந்தக் கேள்வியக் கேக்கலாம்?'
தேவையா எனக்கு?

நேகமான எல்லாப் புத்தகக் கடைகளிளுமே அதிகமாக விற்பனையாபவை பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களே. இலக்கியம் என்று வரும்போது மட்டும் ரமணிச்சந்திரன்!

அனுபவங்கள் காரணமாக அவ்வப்போது புத்தகக் கடைகளுக்குள் நுழையும்போதெல்லாம் அங்கிருக்கும் பெண்களைக் கண்டவுடன் பீதியாகிவிடுகிறது. பொறுப்பாக இருக்கும் பெரியவர்கள் எப்போதும் நாம் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு, பக்குவமாகப் பதில் சொல்வார்கள். வெள்ளவத்தை பூபாலசிங்கம் புத்தகசாலையில் எல்லோருமே நல்லவிதமாகப் பேசக் கூடியவர்கள். உரிமையாளர் (அவரென்றுதான் நினைக்கிறேன்) நல்ல வாசகராகவும் இருப்பார் எனத் தோன்றுகிறது.

ஏனைய கடைகளில் இளம்பெண்கள்தான் முதலில் எதிர்கொள்வார்கள். முதலாம் வகுப்புக்கான கணிதப்பயிற்சி, சுற்றாடல் வினாவிடை என்று வருபவர்களுக்கு கொடுக்கும் மரியாதையும், முக மலர்ச்சியும் தனியானது.

அங்கே போய் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் உதவாத புத்தகங்களைக் கேட்பவர்களுக்கு காட்டும் எதிர்வினை, ஏற இறங்க கேவலமாகப் பார்த்து, 'போய்யா யோவ்...நாடிருக்கிற நிலைமைல காமெடி பண்ணிட்டு' என்பதாகவே இருக்கும்.

சமீபத்தில், நண்பர் தான் பங்குக்கு 'பல்ப்' வாங்க முடிவு செய்திருந்தார். ஒரு பெரிய புத்தகக் கடைக்குள் நுழைத்தார். முடிவு தெரிந்திருந்ததால் நான் வெளியிலேயே நின்று கொண்டேன்.

அங்கே நின்ற அக்காவிடம் "ராஜூமுருகன்ர வட்டியும் முதலும் இருக்கா?" என்றார்.
மிகுந்த முக மலர்ச்சியுடன் "ஓ! வாங்க" என்று அழைத்துச் சென்றார்.
'என்னடா இது? நான் எங்க இருக்கேன்?' அதிர்ச்சியடைந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
நண்பர் உள்ளே சென்று பார்த்தவர் பிரகாசமாக சிரித்துக் கொண்டு வெளியில் வந்தார்.

அப்பிடியே கூட்டிப் போய் வர்த்தகவியல் பாடப் புத்தகங்கள் இருந்த ஏரியாவைக் காட்டியிருக்கிறார் அந்தக்கா.

ஷோபாசக்தியின் புத்தகங்கள் இலங்கையில் விற்பனை செயப்படுவதில்லை என்றே நம்புகிறேன். அவர் ஒரு தமிழினத் துரோகி எனத் தமிழினத் தியாகிகளால் கூறப்படுவது காரணமாக இருக்கலாம்.

இந்த விஷயம் ஒன்றும் தெரியாத ஒரு பொழுதில்  கடைகளில் விசாரித்திருக்கிறேன். பெரியவர்கள் உள்ளிட்ட பலர், அப்படியொரு பெயரையே முதன்முதல் கேட்டதுபோல பார்த்தார்கள். 

நம்ம வழமையான பிரபல கடையில் ஒரு பெண்ணிடம் வேறுவழியில்லாமல் கேட்க, புரியாமல் யோசித்தார்.
"யாரது?" என்றார்.
"ஒரு ரைட்டர் , நாவல், சிறுகதை.."
"ஓ.. அவ கதை எல்லாம் எழுதுவாவா?"

அவவா?அடப்பாவிங்களா!

அப்போதுதான் புரிந்தது ஷோபா என்றதும் நடிகர் விஜயின் அம்மா என அந்தப்பெண் யோசித்திருப்பார் போல.அதனால்தான்,அவர் பாட்டுத்தானே பாடுவார், கதையும் எழுதுவாரா? என ஆச்சரியப்பட்டிருக்கிறார் போல.

எனக்கும் குழப்பமாவே இருந்தது ஒருவேளை, நான் ஷோபாசக்தி என்று சொன்னது ஷோபா சந்து என்று கேட்டிருக்குமோ?

Thursday, July 11, 2013

எழுத்தும் அபத்தங்களும்!



எட்டாம் வகுப்புப் படிக்கும்போது தமிழில் இரண்டு வசனங்களை இணைக்கும் வினாக்கள் பரீட்சையில் கேட்கப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் சரியாகவே விடை எழுதியிருப்பேன் (எனக்குக் கட்டுரைதான் வராது)

உதாரணமாக இப்படியிருக்கும்.

1. முற்பகுதிக்குத் தனியான நிறம்
2. முற்பகுதி கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கிறது - இரண்டையும் இணைத்தால்,

கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் முற்பகுதிக்குத் தனியான நிறம்

அதுபோல,
1.பிற்பகுதி தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கிறது
2.பிற்பகுதிக்குத் தனிநிறம் 

தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் பிற்பகுதிக்குத் தனி நிறம்

ஆக, கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் முற்பகுதிக்குத் தனியான நிறம், தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் பிற்பகுதிக்குத் தனி நிறம்

இந்த வசனத்தை

/முற்பகுதி கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் தனியான ஒரு நிறம், பிற்பகுதி தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் தனி நிறம் // 

-இப்படி எழுதியிருக்கிறார் எஸ்.ரா.பரதேசி விமர்சனத்தில். அவரது தளத்தில் படிக்கும்போது கண்டுகொள்ளவில்லை. சொல்லவந்த விஷயம் நமக்குப் புரிந்துவிடும்போது வசன அமைப்பையோ, இலக்கணத்தையோ (அது நமக்குத் தெரியாது என்பது வேறு விஷயம்) கண்டுகொள்வதில்லை.ஆக,எழுதும்போதும் நிகழ்ந்து விடுவது மிகச்சாதாரணம்.

இன்று காலை விமலாதித்த மாமல்லனின் தளத்துக்குச் சென்றபோது இதனைப் பார்த்தேன். திருத்தியிருந்தார். ஏற்கனவே ஒருமுறை விநாயக முருகனின் ஃபேஸ்புக் பதிவை அவர் திருத்தியிருந்ததைப் பார்த்தபோதே மிகுந்த ஆயாசமாக இருந்தது - 'அய்யய்யே.. நானெல்லாம் எவ்வளவு அபத்தக் குப்பைகளை எழுதிருப்பேன் என!' 

இந்தத் தளத்தில் ஏராளமான அபத்தக் குப்பைகள் கொட்டியிருக்கிறேன். இரண்டு வருடத்துக்குமுன்னர் எழுதிய பதிவுகளைப் பார்க்கும்போது அப்படித்தோன்றுகின்றது. இன்றைய எழுத்துக்கள் நாளைய அபத்தமாக இருக்கலாம்.

ஏறத்தாள ஒரு வருடத்துக்கு முன்பு வரை எனக்கு 'ஒரு', 'ஓர்' எப்படிப் பயன்படுத்துவதென்று தெரியாது. பள்ளியில் தமிழாசிரியர்கள் யாருமே அதைக் கற்பித்ததில்லை. அப்போதுதான் புரிந்தது, 'டேய் உனக்குத் தமிழே இன்னும் தகராறு!'

எழுத்துப் பிழை! எவ்வளவு கவனமாக இருந்தாலும் தவிர்க்க முடியவில்லை - கவனக்குறைவை. எப்போதேனும் ஒரு பதிவை பார்க்கும்போது தென்படும் எழுத்துப் பிழைகள் என்மீதே மிகுந்த கோபம் கொள்ளச் செய்கின்றன. 

நான் எழுதியதைச் சரி பார்க்காமல் மற்றவர் படிக்க அனுமதிப்பதைப் போன்ற மொள்ளமாரித்தனம் வேறேதுமில்லை என்பது எனக்கான என் தனிப்பட்ட கருத்து. இதற்கு நேரமில்லை,அவசரம் என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதில் சம்மதமில்லை. அப்படி அவசரமாக, நேரம் போதாமல், இடைவிடாத பணிகளுக்கிடையில்(?!) அர்ப்பணிப்புடன்(?!) நான் எழுதிக் கிழித்து சேவையாற்ற வேண்டிய  நிலையில் தமிழ்கூறும் நல்லுலகம் இல்லை என்ற உறுதியான நம்பிக்கை எப்போதும் எனக்குண்டு.

எப்போதுமே எனக்கு எழுதுவதில் மிகுந்த சோம்பேறித்தனம். சிந்தனையும் (உள்ளடக்கம் டப்பாவாக இருந்தாலும்), எழுதுவதும் (தட்டச்சுவதும்) ஒரே நேரத்தில் சேர்ந்தியங்கக் கைவரப் பெற்றவர்க்கே சொல்ல வந்ததை மாற்றுக் குறையாமல் அப்படியே சொல்வது  இலகுவாகிறது என நம்புகிறேன். 

நான், எழுத நினைக்கும் வசனங்களை அப்படியே முழுமையாக பத்துப் பதினைந்து நிமிடங்களில் மனதில் ஓட்டிப் பார்த்துவிடுவதால், மேற்கொண்டு தட்டச்ச சலிப்பாகிவிடுகிறது.பாதியிலேயே 'இது தேவையில்லை' என்றும் தோன்றிவிடும். விளைவாக, டிராஃப்ட்டில் குப்பைகள் அதிகமாகின்றன.

என்வரையில் Blogging என்பது, மற்றவர்கள் படிக்க அனுமதிக்கும் 'எனது டிஜிட்டல் டைரி' என்றபோதிலும், இதுவரை எழுதியவற்றில், அபத்தக் குப்பைகளை அகற்றிவிடலாம் என்று தோன்றும். அப்படிச் செய்யும் பட்சத்தில், எதுவுமே எஞ்சாது போகும் அபாயம் இருப்பதால், மொத்தமாக மூடிவிட்டுப் புதிதாக ஆரம்பிக்கலாம் என்ற எனக்கே குபீர் சிரிப்பை வரவழைக்கும் யோசனையும் வருவதுண்டு. 

'மொத்தமாக மூடிவிடலாம்' என்பது முகம் தெரியாமல் எழுதுவதிலுள்ள வசதி என ஆரம்ப காலத்தில் நினைத்திருந்தேன். பின்னர் ஒரிருவருக்குப் பரிச்சயமாகி, ஃபேஸ்புக்கிலும் பலரறிந்த (ஐந்து பேர்) பிரபலமானாலும், ஏதோ ஓர் கணத்தில் 'போதும்' எனத் தோன்றுகையில், மொத்தமாகத் துண்டித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இன்னும் ஆறுதலைக் கொடுக்கின்றது. 

Monday, July 1, 2013

புஜ்ஜி!


“அலே காக்கா வடை வேன்மா?”

மொட்டை மாடியில் அம்மா சோறூட்டிக் கொண்டிருக்கையில், அருகில் வந்தமர்ந்த காக்கையைப் பார்த்து புஜ்ஜி சீரியசாகக் கேட்டான். ‘அழகான காக்கா வடை வேணுமா?’

காக்கைகள் எப்போதும் வடைக்காகவே காத்திருகின்றன என்பது அவன் புரிதல். இரண்டு நாளைக்கு முதல்தான் புஜ்ஜி பாட்டி வடை சுட்ட கதையை முதன்முதலாக கேட்டிருந்தான். இனி அடிக்கடி கேட்பான். தெரிந்த கதையையே திரும்பத் திரும்ப பிடித்தவர்கள் வாயால் கேட்பது ஒரு தனி சுவாரஷ்யம் இல்லையா? குழந்தைகளுக்கு பேச்சு வர ஆரம்பிக்கும்போது, கதை கேட்பதும் ஆரம்பிக்கிறது.  கவனித்தலும், கதை கேட்டலுமே அவர்களின் பொழுதுகளைச் சுவாரஷ்யமாக்குகிறது. கதை கேள்விகளைக் கேட்க வைக்கிறது. அதுவே விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறது .