“என்ன இது?”
“அது காக்கா கொத்தினது”
“ஏன் கொத்திச்சு?”
“உங்கள மாதிரி சின்னப்பிள்ளையா இருக்கேக்க, அம்மாவ விட்டுட்டு தனியா மொட்டை மாடிக்கு போனப்போ...”
என் இடது புருவத்தில் மறைந்திருந்த சிறு வெட்டுக் காயத்தைக் காட்டி கேட்ட என் அக்கா மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் மறந்தே போய்விட்டிருந்த என் பால்ய வயது அடையாளம். புருவத்தின் குறுக்காக சிறிய ஆழமான ஒரு வெட்டு. காக்கா கொத்தியது என்றால் நம்பும்படியாக இருந்தது. அது எப்படி சற்றும் யோசிக்காமல் காக்கா கொத்தியது என்று சொல்ல முடிந்தது?
என் சின்னஞ்சிறு பராயத்தில் என் பெரியப்பாவிடம் அதே கேள்வியைக் கேட்ட ஞாபகம் இருக்கிறது. என் புருவத்தில் இருக்கும் அதே போன்ற வெட்டுக் காயம் அவருக்குமிருந்தது. அவர் சொன்ன பதிலும் அதே காக்கா கொத்தியதுதான்.
குழந்தைகள் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். கவனிப்பதும், கதை கேட்பதுமாக முதல் தேடல் குழந்தைப்பருவத்தில் ஆரம்பிக்கிறது. வளர்ந்து வருகையில் கவனித்தல் குறையலாம். ஆனால் கதை கேட்கும் ஆர்வம் வாழ்வின் இறுதிவரை குறைவதில்லை. முக்கியமாக குழந்தைப் பருவத்தில் பேச்சு ஆரம்பித்து சில நாட்களிலேயே 'கதை விடுதல்' என்பதும் ஆரம்பித்து விடுகிறது. அதை மட்டும் நாம் எப்போதும் தவறாமல் செய்து வருகிறோம்.
குழந்தைகளிடம் கதை விடுவதற்குத்தான் காக்காய்கள் எவ்வளவு உறுதுணையாக இருக்கின்றன. "காக்கா கொண்டு போயிட்டுது! " - குழந்தைகளிடம் ஒரு பொருளை மறைத்து வைப்பதற்கு நாம் உபயோகப்படுத்தும் உத்தி. அதன்மூலம் நாங்களே முதன்முறையாக குழந்தைகளுக்கு ‘கதைவிடுவது’ பற்றி அறிமுகம் செய்கிறோம். பின்னர் அவர்கள் எங்களிடம் வெகு தீவிரமான முகபாவத்தோடு ‘காக்கா கொண்டு போச்சு” என அதே ‘டெக்னிக்’கை பிரயோகிக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும்போல பெரியவர்களிடமிருந்தே கதைவிடுவதையும் கற்றுக் கொள்கிறார்கள்.
நாம் முதன்முதலாகக் கேட்ட 'கதைநாயகன்' காக்காதான் இல்லையா? திருட்டுத்தனமான பாத்திரமாகவே காக்கா அறிமுகப்படுத்தப்படுகிறது. பின் நமது திருட்டுத் தனங்களுக்கும் காக்கா மீதே பழிபோட்டு, திருட்டுத்தனத்தின் உருவகமாகவே அவைகளை மாற்றிவிட்டோம். சிறுவயதில் இடையிடையே ஓரக்கண்ணால் சற்றே சாய்ந்து பார்க்கும் பழக்கம் இருந்தது. “என்னடா காக்காப் பார்வை பார்க்கிறே?” என அக்காக்கள் சிலர் சிரித்தபடியே கேட்பார்கள். அவசரமாக, அரைகுரையாகக் குளிப்பதை ‘காக்காக் குளியல்’ , ‘காக்காக் கடி’ என காக்கைகள் நமக்கு கலைச் சொற்கள் சிலவற்றை வழங்கி நம் மொழிக்கும் சேவை செய்திருக்கின்றன.
பாவம் காக்கைகள் அவற்றுக்கு காலம் காலமாக தம் இனத்தின் மீது நாம் மேற்கொள்ளும் தவறான கற்பிதங்கள் பற்றித் தெரியாமல் இருக்கலாம். அல்லது தங்கள் மீதான அவதூறுகளைக் களைய வேண்டுமென்ற பிரக்ஞை இல்லாமலோ தங்கள் பாட்டுக்கு வாழ்ந்து வருகின்றன. ஆனாலும் அவ்வப்போது திருட்டுத்தனங்களும் செய்வதாகத் தெரிகிறது.
என் காயத்தைக் கண்ணாடியில் பார்த்தேன். புருவத்தின் குறுக்காக சற்றே ஆழமான ஒரு பிளவு. இவ்வளவு நாட்களாக நான் கவனிக்கவே இல்லையே? நேராகப் பார்த்தால் தெரியாததால், இப்படியொரு அடையாளத்தையே மறந்து போயிருந்தேன். அந்தக்காயம் ஏற்பட்டபோது, ஓரிரு மணிநேர பயத்தையும், சில நாட்கள் வலியையும் எனக்குக் கொடுத்திருந்தது.
பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, என் விளையாட்டுத் தோழர்களைச் சந்திக்க ஓடினேன். அப்பா கொழும்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் வீட்டில் அம்மாவின் கடுமையான சட்டதிட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதி. பொதுவாக நான் வெளியில் சென்று விளையாடுவதை அம்மா விரும்புவதில்லை என்பதால், பலத்த கெடுபிடியுடனேயே எப்போதாவது அதற்கான அனுமதியை பெற வேண்டியிருந்தது. அதுவும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில்.
சரியாக மாலை ஆறுமணிக்கு அம்மாவின் ஊரடங்கு அமல்படுத்தப்படும். அப்போது நான் வீட்டில் நிற்க வேண்டும், விளையாட்டில் தோழர்களுடன் ஏற்படும் பிரச்சினை எதுவானாலும் நான் அவற்றை வீட்டிற்கு கொண்டுவரக்கூடாது என்பவை அவற்றில் முக்கியமானவை. ஆனால் என்மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், சந்தேகத்திற்கு அடிப்படையான தகவல்கள் போன்றவற்றுக்கு காலதாமதமற்ற கடுமையான நடவடிக்கையும், காலவரையற்ற தடைச்சட்டமும் உண்டு. அப்போதெல்லாம் மோதலின் ஆரம்ப கட்டத்திலேயே ‘ஒ..’ வென்று அபாயச்சங்கை முழங்கி, பக்கத்து வீட்டுஅக்காக்களிடம் ஆதரவு கோருவதை என் ராஜதந்திர ரீதியான நடவடிக்கையாக வைத்திருந்தேன். அது எப்போதும் நல்ல பயனைக் கொடுப்பதாக இருந்தது. 'ஒப்பரேசன் லிபரேசன்' நடவடிக்கையின்போது திடீரென ஒருநாள் 'மிராஜ்' வந்ததே, அதேபோல பறந்து வருவார்கள்.
அன்று ஐஸ்போல் விளையாடிக் கொண்டிருந்தோம். பெயரைத் தவிர விளையாட்டில் ஐசுக்கும், பந்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஒருவர் கண்களைப் பொத்திக் கொண்டு ஒன்றிலிருந்து, ஐம்பதுவரை எண்ணிக கொண்டிருக்க மற்றவர்கள் ஒளிந்துகொள்வது. ஒளிந்திருப்பவர்களை ஒவ்வொருவராகக் கண்டுபிடித்தபின் மீண்டும் தொடங்கும். இப்போது முதலில் கண்டுபிடிக்கப்பட்டவர், கண்களை மூடிக் கொள்ள மற்றவர்கள் ஒளிந்துகொள்ள - இப்படியே தொடரும். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. தோழி ஒருத்தி கண்களை மூடிக் கொண்டு வழக்கத்தைவிட வேகமாக எண்ணத் தொடங்கினாள். நாங்கள் தலைதெறிக்க ஓடினோம். பாருங்கள், தோழிகள் எப்போதுமே இப்படித்தான் இருக்கிறார்கள்.
என்முன்னால் ஓடிக்கொண்டிருந்த நண்பன் திடீரெனத் தடுக்கி விழ, அவன்மீது நான் தடுக்கி, தடுமாறி எதிரிலிருந்த சதுரத் தூணின் விளிம்பில் மோதி, சற்று நேரம் எதுவும் புரியவில்லை, வலிக்கவுமில்லை. கண்கள் மின்னியது. லேசாக இரத்தம்கசிய, ‘வீட்டுக்கு எப்படிப் போவது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனது நல்ல நேரம். அன்று அப்பா கொழும்பிலிருந்து விடுமுறையில் வரும் நாளாக இருந்தது. தெருமுனையில் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தேன்.
தூரத்தில் அப்பா வருவது தெரிந்ததும் ஓடிச்சென்று அப்பாவிடமிருந்து சிறு பையொன்றை வாங்கி தொழில் மாட்டிக் கொண்டே கூட நடந்தேன். ‘குழந்தைகள் ஓடி விளையாட வேணும், விழுந்து காயம் பட வேணும்’ என்பது அப்பாவின் கொள்கை. கொள்கையின்படி வாழ்ந்ததில், அவரிடமும் சில விளையாட்டுக்காயங்கள். அதைவிட தன் இளம்வயதில் கிரிக்கட் விளையாடும்போது, பற்றைக்குள் பந்தை எடுக்கப் போய் கையில் பாம்பிடம் கடிவாங்கியிருந்தார். ‘பாம்பு கடித்த காயம்’ தெரியவில்லை. சிகிச்சையளிக்கும்போது வைத்தியர் கத்தி கொண்டு சுரண்டியதில் ஒரு பாம்புக் குட்டி அளவிற்கு கையில் அடையாளம். மேலதிக விபரமாகச் சொல்லியிருந்தார், பாம்பு கடித்தது அவ்வளவாக வலிக்கவில்லையாம். சிகிச்சைதான் பயங்கரமாக வலித்ததாம்.
ஒவ்வொரு காயங்கள், தழும்புகளுக்குப் பின்னாலும் அழகான எமது பால்யகால நினைவுகள், சுவாரஷ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. அது அன்றைய பொழுதில் பெருந்துன்பமாக இருந்து, பின்னர் அவை பற்றிய நினைவே இல்லாது போயிருக்கும். உண்மையில் அப்படி ஒரு காயம் இருப்பதையே மறந்து போயிருப்போம். யாரோ நெருங்கிய ஒருவர் கேட்கும்போது, அநேகமாக ஒரு குழந்தை கேட்கும்போது, மனம் பின்னோக்கிப் பயணிக்கும்.
ஒருமுறை பள்ளி விடுமுறையின்போது நண்பர்கள் எல்லோரும் விளையாடிவிட்டு வந்து, எங்கள் வீட்டு முற்றத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். சமீபத்தில் நடந்துமுடிந்த கிரிக்கெட் போட்டி பற்றிச் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த கமலன், பண்டா அடித்த சிக்ஸ் பற்றி ஆக்சன் காட்டினான். அவன் காற்றில் மட்டைடைச் சுழற்ற 'டொக்' சத்தம் எப்படி வந்ததென்று அதிர்ந்து திரும்பினோம். டினேஷ் கண்ணைப் பொத்திக் கொண்டிருந்தான். புருவத்தில் அடிபட்டு சதை பிய்ந்து தொங்கியது. மூன்று தையல் போடப்பட்டது. இப்போது அவன் சகோதரியின் குழந்தையோ, அல்லது ஓர் மருத்துவனான அவனிடம் வரும் ஓர் குழந்தையோ அவனிடமும் கேட்கலாம். ஒருவேளை சற்றே பெரிய காக்கா கொத்தியதாகக் கூட அவன் சொல்லல்லாம்.
என் பெரியப்பாவின் காயத்துக்குப் பின்னால் என்ன கதையிருக்கும்? ஒரு மாங்காய் திருடிய கதை இருக்கலாம். ஒரு கிட்டிப்புள் விளையாடிய கதை இருக்கலாம். நம் எல்லோரிடமும் நாம் மறந்துபோய்விட்ட ஒரு சிறுவயதுக் காயத்தின் அடையாளம், தழும்பு இருக்கும். என்போலவே பலருக்கும் புருவத்தில் ஒரு காக்கா கொத்திய காயம் இருக்கலாம். அதன்பின்னே ஒரு கதை இருக்கும். சுவாரஷ்யமான காரணம் இருக்கும், காக்காவைத் தவிர!
சிறு வயதில் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் மட்டும் அப்படியே தழும்புகளாக, நிரந்தர அடையாளங்களாக மாறிவிடுவது ஆச்சரியம்தான். ஒருவேளை வளர வளர அவதானமாக இருக்கப் பழகிவிடுவதால் காயங்கள் மனதில் மட்டுமே அதிகமாக ஏற்படுகின்றன போலும்.
யாருக்கும் தெரியாத, யாருமே கவனிக்காத, எந்தக் கேள்வியும் கேட்காத மனதின் காயங்களை நாமே கேள்வி கேட்டு, ஆறவிடாது அப்படியே புதிதாகப் பேணிக் கொள்கிறோம். ஏதோவொரு சமயத்தில் அந்த வலியையும், அதன் வீரியத்தையும் முதன்முறையாக ஏற்படுவது போன்றே உணர்ந்து கொள்கிறோம். மனதின் காயங்களையும் சிறு வயதின் விளையாட்டுத் தழும்புகள் போலவே சிறு புன்னகையுடன் கடந்து செல்ல முடிந்தால், முயன்றால் நன்றாயிருக்குமல்லவா?