Tuesday, April 16, 2013

The Hole (1998)



விரும்பித் தேர்ந்தெடுத்துக் கொண்ட தனிமை மிகுந்த சுதந்திர உணர்வையும், மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியது. அதுவே தனிமைப்படுத்தப்பட்டதாக, கைவிடப்பட்டதாக உணரும்போது, சுய பச்சாதாபத்தையும், இனம்புரியாத பயத்தையும் கொடுத்துவிடுகிறது.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வெறுமையாக, ஆள் நடமாட்டமின்றி இருக்கிறது. தனியாக இருக்கும் அவள், தன் வீட்டின் பின்புற பல்கனியில் நிற்கிறாள் . அயலில் ஒரு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. தொடர்ந்து ஒரு பெண்ணின் குரல் "தயவு செய்து போய்விடு எனக்கு மிகுந்த பயமாக இருக்கிறது மனிதத் தன்மையுடன் நடந்துகொள்" எனக் கெஞ்சுகிறது. சற்று நேரத்தில் அவள் வீட்டு அழைப்பு மணியும் ஒலிக்கிறது. அவளும் பயந்து, பின்னர் ஒரு முறை அவள் வெளியே வந்து பார்க்கிறாள்.  யாரும் அங்கே இல்லை. அதே நேரத்தில், இன்னொரு வீட்டின் அழைப்பு மணியை ஒரு சிறுவன் அழுத்துகிறான். உடனடியாகவே அங்கிருந்து தனது சிறிய சைக்கிளை ஒட்டிக் கொண்டு அதே மாடியிலுள்ள வேறு பகுதிக்குச் செல்கிறான். சற்று நேரத்தில் வேறொரு வீட்டின் அழைப்புமணி ஒலிக்கிறது. ஒரு சிறவனின் விளையாட்டே அவர்களுக்கு மிகுந்த பயங்கரமானதாக இருக்கிறது.

மில்லேனியம் பிறப்பதற்குச் சில தினங்கள் இருக்கின்றன. தாய்வானின் நகரப் பகுதியொன்றில் ஒரு புதுவிதமான நோய் பரவி வருகிறது. நோய் பரவி வரும் இடங்களைத் தனிமைப் படுத்தும் நடவடிக்கையாக அரசாங்கம் அங்கிருந்து மக்களை வெளியேறச் சொல்கிறது. தொடர்ந்து மழை பெய்வதால் கழிவு நீர் வடிகாலமைப்பும் சீர்குலைந்திருக்கிறது. அதனால் அங்கே நீர் வழங்கலும் இடம்பெறாது என செய்தி ஊடகங்களில் அறிவிக்கப்படுகிறது. வேறுவழியில்லை, அங்கே வாழ முடியாத சூழ்நிலையில் பெருமளவான மக்கள் வெளியேறி விடுகிறார்கள்.

ஒரு சிலர் அங்கேயே இருக்கிறார்கள். அவனும் அப்படித்தான். நகரத்தின் மார்க்கெட் தொகுதியில் பலசரக்குக் கடை வைத்திருப்பவன். அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் தனியாக வாழ்பவன். வாழ்க்கை பற்றிய பெரிதான ஈடுபாடோ, புகார்களோ இல்லாதவன்போல் அதன்போக்கில் வாழ்கிறான். முதல்நாள் இரவு சாப்பிட்ட உணவு, குடித்த பியர் எல்லாம் அப்படியே சிறிய மேசைமீது இருக்க, சோபாவில் தூங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது வரும் ஒரு பிளம்பர் அவன வீட்டில் நீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், அது கீழ் வீட்டில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுப்பதால், பரிசோதிக்க வேண்டும் என்கிறான்.

தரையைச் சோதிக்கும் அவன் நீர்க்குழாய் செல்லும் பாதைய இனங்கண்டு கொத்தி, அப்படியே விட்டுச் செல்கிறான். தரைத்தளத்தின்மீது புதிதாக ஒரு துளை. அவன் வீட்டையும், அதற்கு நேர் கீழே இருக்கும் அவள் வீட்டினையும் இணைப்பது போல அந்தத் துளை. அவள் வீடு நீர்க்கசிவினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில அறைகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. துணிகளை ஊறப்போட்டு பிழிந்து நீரை அகற்ற முனைகிறாள். ஏராளமான டாய்லெட் பேப்பர்களை வாங்கி வைத்திருக்கிறாள்.

காலையில் கடைக்குச் செல்கிறான் அவன். அந்தக் கடைத்தொகுதி முழுவதும் பூட்டப்பட்ட கடைகளுடன் காலியாக இருக்கிறது. தன கடையிலிருந்து ஒரு சிறிய தகரத்திலடைக்கப்பட்ட உணவு எடுத்துக் கொண்டு வந்து பூனை ஒன்றை அழைக்கிறான். அதற்கு சாப்பிடக்  கொடுக்கிறான். தானும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டே அருகில் அமர்ந்து, பூனையைத் தடவிக் கொடுக்கிறான். சுற்றிலும் ஏராளமான அதே போன்ற காலிக் கொள்கலன்கள் கிடக்கின்றன. அந்தப் பூனைக்கு உணவு கொடுப்பது அவனது அன்றாடக் கடமைகளில் ஒன்று.

ஒரூ பெரியவர் அவனது கடைக்குவந்து தனக்கு ஒரு பீன் சோர்ஸ் வேண்டுமெனக் கேட்கிறார். அவர் கையில் கொண்டுவந்திருந்த மாதிரியைப் பார்த்துவிட்டுச் சொல்கிறான். "இந்த பிராண்ட் இப்போது வருவதில்லை. நிறுத்தப்பட்டு விட்டது. வேறு நல்லது இருக்கு" அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்கிறார். அங்கேயே வேறு கடைகளில் கிடைக்குமா எனத் தேடி அலைகிறார். வேறு எந்தக் கடைகளும் திறந்திருக்கவில்லை. மீண்டும் சந்தைக் கட்டடத்தின் வாசலில் வந்து யோசனையுடன் நிற்கிறார். அவனும் அதைக் கவனிக்கிறான். நோயிலிருந்து பாதுகாக்க தன் ஊரை விட்டு நீங்க விருப்பமின்றி இருப்பவர் தனக்குப் பிடித்த, தன் வழக்கமான வகை உணவுப் பொருளிலிருந்து அவ்வளவு இலகுவில் மாறிவிட விரும்பவில்லை. இரவு மீண்டும் அநதப் பூனைக்கு அன்போடு உணவு கொடுத்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்புகிறான். போதையில் வரும் அவன் தன வீட்டின் வரவேற்பறையிலிருந்த அந்தத் துளையை பரிசொதிப்பவன் போல அருகில் செல்கிறான். அப்போது பார்த்து அவனுக்கு வாந்தி வருகிறது. 

ரவில் விழித்துக் கொள்ளும் அவள் எழுந்து செல்லும்போது தனது மேசையின் மீது கைவைக்க எதுவோ ஒட்டிக் கொள்கிறது. அண்ணாந்து மேலே பார்ப்பவள் அருவருப்பு, ஆத்திரம், அழுகையுமாக சுத்தம் செய்கிறாள்.  ஏற்கனவே இருந்த பிரச்சினைகளுடன் இப்போது அந்தத் துளையும் அவளுக்கு ஒரு பெரிய தொல்லையாகி விடுகிறது.

காலையில் தன் கடைக்கருகில் ஒரு மனிதன் விசித்திரமாக ஊர்ந்து கொண்டு செல்வதைப் பார்த்து, பேச முயற்சிசெய்கிறான். அவனோ சட்டை செய்யாமல் ஒரு கரப்பான் பூச்சி போல குப்பைக் குவியல், இருட்டான இடம் தேடி ஊர்ந்துகொண்டே செல்கிறான். பின்பு சிலரின் உதவியுடன் அவனை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்கின்றனர். இந்த நேரத்தில் தன் மேல்வீட்டுக்காரனைச் சந்திக்க வந்த அவளும் பார்த்து அதிர்ச்சியடைகிறாள். ஊர்ந்து சென்ற மனிதன் அந்த விசித்திர நோயால் பீடிக்கப்பட்டவன்.

அதுவரை அவர்கள் சந்தித்துக் கொண்டதில்லை. ஒருவரையொருவர் பொருட்படுத்தியதில்லை.
அவள் கேட்கிறாள்,"இன்று மதியம் இரண்டு மணிக்கு வீட்டில் இருப்பாயா? பிளம்பர் வருவான்"
"இருக்கக் கூடும்"
"நீ கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதனைத் திருத்த முடியாமலே போய்விடும்"

அன்றிரவு இனந்தெரியாத அந்த தொற்றுநோய் பற்றிய அறிவுறுத்தலைக் கேட்கிறாள். 'தாய்வான் வைரஸ்' எனப் பெயரிட்டு அழைக்கிறார்கள். கரப்பான் பூச்சி மூலம் பரவலாம் எனச் சந்தேகிக்கிறார்கள். ஆரம்பத்தில் காய்ச்சல் போன்று இருக்கும். பின்னர் வெளிச்சத்தைக் கண்டு பயப்படுவார்கள்.  பூச்சிகள் போலவே ஊர்ந்து கொண்டு இருளான இடம் தேடி ஒளிந்துகொள்வார்கள் எனச் சொல்லப்பட்டுகிறது. அச்சம் கொள்ளும் அவள் கரப்பான் பூச்சிகளை ஒழிக்க, ஏராளமாக ஸ்பிரே அடிக்கிறாள். வீடு முழுதும் மருந்து பரவி துளை வழியாக அவன் வீட்டிற்குள்ளும். இருவரும் உளே இருக்க முடியாமல் கதவு யன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு, வெளியே பல்கனியில் நிற்கிறார்கள். மௌனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.

னிமையிலுள்ள இருவரையும் அந்தத்துளை ஏதோ ஒருவகையில் நெருங்கச் செய்கிறது. அவன் துளையைச் சிறிது சிறிதாகப் பெருப்பிக்கிறான். அடிக்கடி துளை வழியாக அவளைப் பார்க்கிறான். அவளுக்கும் அது தெரிந்தே இருக்கிறது. முதலில் தொல்லையாக நினைப்பவள் பின்னர் கண்டுகொள்வதில்லை. ஓர் ஆறுதலைக் கூடக் கொடுத்திருக்கலாம். தான் தனித்துவிடப்படவில்லை என்ற உணர்வையும்,.பாதுகாப்பையும் கொடுத்திருக்கலாம்.

ஓரிரவில்,அவள் இடைவிடாது தும்மிக் கொண்டு மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு தூங்குகிறாள். நள்ளிரவில் திடீரென விழித்துக் கொள்பவள் படுக்கையறைக்குள் தண்ணீர் வந்துவிட்டுப்பதைப் பார்த்து அழுகிறாள். அடுத்த காட்சியில் வரவேற்பறையில் ஏராளமான குவிந்து கிடக்கும் துணிகள், பேப்பர்களுக்கிடையே அவள் வேகமாக ஊர்ந்து சென்று ஒளிந்து கொள்வது அதிர வைக்கும். இதனை மேலே இருந்து பார்ப்பவன் ஆற்றாமையுடன் அழுகிறான். மூர்க்கமாக உடைத்து அந்தத் துளையைப் பெருப்பிக்கிறான்.

பெருப்பிக்கப்பட்ட துளை வழியாக காலை வெளிச்சம் பாய்கிறது. அவள் எழுந்து மூச்சு வாங்கியபடி வெளிச்சத்தில் துளையைப் பார்த்தவாறு சாய்ந்திருக்க மேலேயிருந்து நீர் பருகக் கொடுக்கிறான். நீர்க்குடுவையை வாங்குவதுபோல மீண்டும்  அவன் கையை நீட்ட, அவள் இருகைகளாலும் பற்றிக் கொள்கிறாள். அப்படியே தூக்குகிறான். இருவரும் புதிய ஆடைகளுடன் அணைத்தவாறு நிற்க, பாடலுடன் படம் நிறைவடைகிறது.

வளுக்கு உண்மையிலேயே அந்த நோய்த்தொற்று ஏற்பட்டதா? அல்லது மிதமிஞ்சிய பயம், சுகவீனத்தாலேற்பட்ட பலவீனமான மனிநிலை காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில் அவ்வாறு நடந்து கொண்டாளா? இறுதிக் காட்சியில் அவள் குறித்த நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் நடத்தைக்கு முரணாக வெளிச்சத்தை நோக்கியே வருகிறாள். அவன் தன்பால் ஈடுபாடு கொண்டிருப்பது அவளுக்குத் தெரியும். ஆனாலும் அவன் தயங்கி விலகியிருக்கிறான்., அவன் மனத்தடையை உடைத்துக்கொண்டு வெளிவருவதற்காக அப்படி நடந்துகொண்டாள் என்றே நம்புகிறேன். பாடல்களின் சில வரிகளிலும் அப்படியே வருகிறது.

படம் முழுவதும் மழை பெய்துகொண்டே இருக்கிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது உண்மையிலேயே மழை பெய்வது போன்ற உணர்வைக் கொடுத்தது. இப்படி என நண்பனும் கூறியிருந்தான்.

படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருக்கும். மிகப் பழமையான இசை. 'ஓ கலிப்சோ' என்ற பாடல் 1959 இல் வெளிவந்த பாடல். அடுக்குமாடிக் குடியிருப்பின் எலிவேட்டர், பழைய படிக்கட்டு போன்ற இடங்களில் பாடல் படமாக்கப்பட்டிருக்கும். வெள்ளை, ஓரிரு வர்ண உடை, அதிகபட்சம் நான்கு பெண்கள், நான்கு ஆண்களை மட்டும் வைத்துக் கொண்டு பாடல் காட்சிகள் மிக அழகாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு கனவுப் பாடலை, பிரம்மாண்டமான அரங்கமைத்து நூறு பேரை ஆடவைத்து, எடுக்காமலே கொடுக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

இயக்கம் : Tsai Ming-Liang
இசை :    Grace Chang
நாடு : Taiwan
மொழி : Mandarin, Taiwanese

2 comments:

  1. நல்ல அறிமுகம்
    நன்றி

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete