ஒரு வழியாக நந்தலாலா வெளிவந்து விட்டது!
மிஷ்கினின் முதல் படமான 'சித்திரம் பேசுதடி' யிலேயே என்னவோ மிஷ்கினைப் பிடித்துக் கொண்டது.
என்ன காரணமென்று தெரியாமலே, ஏதோ சில வித்தியாசங்கள் வழமையான படங்களிலிருந்து. கமெரா கையாளப்படும் விதம், காட்சியமைப்பு - குறிப்பாக நேராகக் காட்டாமல் பார்வையாளனை உணரவைக்கும் அந்த தூக்கில் தொங்கும் காட்சி, வசனங்கள். ஆச்சரியமாக அந்தப்படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே நல்லவர்களாக இருந்தார்கள்.
ஒரு போலீஸ்காரனின் முதல் நாள் அனுபவம் - தமிழ் சினிமாவில் நாங்கள் பார்த்தேயிராத காட்சி. அஞ்சாதேயில்.
வழமையாக போலீஸ் யூனிபோர்மை மாட்டியதும், வீரம் வந்து, வெறிகொண்டு, கடத்தல்காரரையோ, உள்ளூர் தாதாவையோ தட்டிக் கேட்கப் புறப்பட்டு விடும் ஹீரோக்களுக்கு மத்தியில், அந்தச் சூழ்நிலையே ஒத்து வராமல் பின், படிப்படியாக வேலையில் ஒன்றும் அந்தக் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கே புதிது.
ஒளியமைப்பு, ஒளிப்பதிவில் ஏரியல்வியூ காட்சிகள், கமெரா நகர்ந்து செல்லும் விதம், கால்களின் நகர்வுகளின் மூலம் கதை சொல்லப்படுதல், லாங்ஷாட் காட்சிகள்.
பின்னணி இசை, தேவையான நேரங்களில் மௌனம் மட்டுமே. அதே போல் வசனங்கள் பல வசனங்களில் சொல்லவேண்டியதை சில காட்சிகளிலேயே உணர்த்தி விடுதல். இப்படி எல்லாமே!
இபோழுது நந்தலாலா.
பதிவுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. எல்லோரும் நல்ல படமென்று ஏற்றுக் கொண்டாலும் கலவையான விமர்சனங்கள். சிலர் கிகுஜிரோவின் Copy என்கிறார்கள்.
ஒரு படத்தை அப்படியே அப்பட்டமாக Copy அடிப்பதற்கும், அதன் பாதிப்பில் எமது சூழ்நிலைக்கேற்ப மாற்றி நல்ல படமாக கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்களுண்டு.
குறைந்த வசனங்களும், காட்சியமைப்பும் சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை மிஷ்கின் ஏற்கெனவே தனது படைப்புக்களில் நிரூபித்த ஒன்று.
குறிப்பாக இசை. இளையராஜா பற்றி எப்போதும் விமர்சிக்கும் 'சாரு', நந்தலாலா பின்னணிஇசை பற்றி உயர்வாகக் குறிப்பிட்டபோதே எதிர்பார்ப்பு எகிறியது எனக்கு.
குறிப்பாக இசை எங்கு மொனமாக இருக்கவேண்டுமென்று இந்தப் பின்னணி இசையின் மூலம் தெரிந்து கொள்ளலாமென்றும் பதிவர்கள் கூறியுள்ளார்கள்.
பொதுவாக மிஷ்கினின் படங்களில் இசை மட்டுமல்ல, வசனங்கள் எங்கு இருக்கக் கூடாதெனவும் தெரிந்து கொள்ளலாம். பேசும் வார்த்தைகளை விட, மெளனத்திற்கே அர்த்தம், ஆழம், வீச்சு அதிகம்.
இந்தப் படம் வெளிவராமல் நீண்டகாலம் இருக்கும்போது நினைத்தேன். உலக மகா மொக்கைப் படங்களாகவே தொடர்ந்து வெளியிட்டு வரும் சன்பிக்சர்ஸ் இது போன்ற நல்ல படங்களையும், வருடத்திற்கு இரண்டாவது வெளியிட்டால், கொஞ்சமாவது தாங்கள் சார்ந்துள்ள துறைக்கு ஒரு நியாயம் அல்லது நல்லது செய்ததாக அமையுமே என்று. இப்போது அந்த நல்ல காரியத்தை ஐங்கரன் செய்துள்ளது.
தனிப்பட்ட ரீதியில் மிஷ்கின் மேல் என்ன மாதிரியான (தலைக்கனம் பிடித்தவர் - ஒரு நல்ல படைப்பாளி அப்படி இருந்தாத்தான் என்ன?) விமர்சனங்கள் இருந்தாலும், அவர் தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு ஆளுமை.
தமிழ் சினிமா என்றாலே தொடர்ந்து,
- பெயரை மட்டும் மாற்றிக் கொண்டுவரும் பருத்திவீரன்கள்
- வெட்டுறாய்ங்க, கொல்றாய்ங்க...கூட்டமாக, பரட்டைத் தலையுடன் வந்து, காதலித்து கடைசியில் நண்பர்கள் அல்லது ஹீரோ உயிரை விடும் 'பாசக்காரப் பயலுக' படம்.
என்றுமட்டுமில்லாமல் (அவையும் நன்றாகவே இருந்தாலும்) இன்னும் வேண்டும்.
இன்னுமொரு வகை தமிழ் சினிமா இருக்கிறது.
-அநியாயத்தைத் தட்டிக்கேட்கும், ஊருக்கு உழைக்கும், நல்லவர், வல்லவரான, வழமையான ஹீரோவின் கதை.
-டப்பிங்கில் மட்டுமே தமிழ் பேசும், காட்சிகளில் தமிழுக்கு எந்த சம்பந்தமுமில்லாத மணிரத்னத்தின் தமிழ்ப்படங்கள்.
-ஆஸ்கார் கனவுகள் கலைந்து போனபின் 'இந்தியன் ஸ்டான்டர்டில்' எடுக்கப்படும் படங்கள்.
-பல ஹாலிவுட் படங்களிலிருந்து காட்சிகளைக் Copy அடித்து, ஹாலிவுட்காரனைக் கொண்டே கிராபிக்ஸ்ம் செய்து, ஹாலிவுட் க்கே..(!?)சவால்விடும் படங்கள்!
-இதுல கதை உன்னோடதா, என்னோடதான்னு இன்னும் சண்டை வேற பிடிக்கிறாங்கப்பா!....ஆமா இந்த விஷயம் அவங்களுக்குத் தெரியுமா?
இந்த மாதிரியான சூழ்நிலையில், தொடர்ந்தும் இப்படியான நல்ல படங்கள் வரவேண்டும்.
நந்தலாலா ஒரு ஆரம்பமாக அமையட்டும்!