Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts

Saturday, July 30, 2011

காதல் வலி!

ஷன்னுக்கு காதல் வந்திருந்தது! எத்தனையாவது என்பது நமக்கு அவசியமாகப் படவில்லை!  கூடவே காதலின் வலியும்! காதல்வலி என்றதுமே சட்டென ஒரு முடிவுக்கு வந்து விடலாம் அது ஆண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று. ஏன் அது பெண்களுக்கு வருவதில்லை? இல்லை வெளிக்காட்டிக் கொள்வதில்லையா? இல்லை எதையும் 'லைட்'டாகத்தான் செய்வார்களா? இது டீப்பா ஆராய வேண்டிய விஷயம் என்றாலும் இப்ப அது நமக்கு வேணாம்.


இந்தக் காதல் வலியைப் பற்றித்தான் எத்தனை கவிதைகள், கதைகள். எத்தனை பேர் அனுபவிச்சு, உருகி,உருகி எழுதியிருக்கிறார்கள். ஆனா நான் சொல்ல வந்தது அதுவல்ல. ஒருவன் காதலிக்கத் தொடங்கியதுமே அவனது நண்பர்களுக்கு ஏற்படும் வலி இருக்கிறதே, அதைப் பற்றி யாராவது எழுதியிருக்கிறார்களா? அந்தக் கொடுமைய அனுபவிச்சுப் பார்த்தா தான் தெரியும். ஒரு பய நிம்மதியா இருக்க முடியுமா? 

எனது முதல் காதல்வலி...! டீன் ஏஜின் நடுப் பகுதி, அப்பல்லாம் ஜக்கு ஒழுங்காகக் கோவிலுக்குச் செல்வான். அவனின் கடவுள் பக்தி பற்றி எனக்கு எந்தவித  சந்தேகமுமில்லாததால் என்னால் உறுதியாகக் கூறமுடியும், சைட் அடிக்கத்தான் போறான் என்று! 

திரும்பி வந்ததுமே ஆரம்பிச்சுடுவான்.
'மச்சான் கோயில்ல ஒரு பொண்ண பாத்தேண்டா'
'நீ போனதே அதுக்குத் தானேடா'
'சூப்பரா இருந்திச்சுடா' , 'அப்பிடியா?' (உனக்கு காமாலைக் கண்தானே)
'நான் பாத்திட்டே இருந்தேண்டா' (இத சொல்ல வேற வேணுமா?)
'அவளும் பாத்தாள்டா' , 'ஓ' (பார்ரா)
' நான் சிரிச்சேண்டா', 'ம்ம்' (நீ இழிச்சவாய் தானேடா)
'அவளும் சிரிச்சாள்டா', 'ஓ' (அவளும் லூசா)
'நீ என்ன நினைக்கிறே?' , 'என்னது?' (எல்லா இழவையும் நீ பண்ணிட்டு என்னைக் கேட்டா?)

இனி அவள் தான் ஜக்குவின் கதை நாயகி, அதாவது இன்னொரு நாள் வேறு ஒருத்தியைச் சந்திக்கும்வரையில்.முதல் ஒன்றிரண்டு கதைகளில் நானும் ஆர்வம் காட்டினேன். ஆனா இதே வேலையா ஒருத்தன் இருந்தா என்ன பண்ண முடியும்? அதுக்குப் பிறகு எப்பவுமே நண்பர்களுக்கு எனது 'அட்வைஸ்' முடிவு பண்ணிட்டா உடனேயே அந்தப் பெண்ணிடம் காதலைச் சொல்லி விடுங்கள் என்பதாகத்தான் இருக்கும்! இல்லாட்டி நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டாங்களே!

நாங்களும் கதை கேட்டுட்டே. ஒரு கட்டத்தில வெறுத்துப் போய் நானே லவ் பண்ணலாமான்னு கூட யோசிச்சிருக்கேன்னா பார்த்துக் கொள்ளுங்க எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பேன்னு.

காலங்காலமாக யாராவது ஒருத்தன் காதலை வாழ வைத்தே தீருவேன் ன்னு கங்கணம் கட்டிட்டுத்தான் இருந்தாங்க. இப்பக்கூட நம்ம ஜேப்பி இருக்கானே, அவனுக்கு ஒரு ராசி அவன் ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளி, லவ் பண்ணப் போறேன்னு எங்ககிட்ட சொன்னான்னு வையுங்க, இவன் இங்க முடிவு பண்ணேக்க, அது யாரையாவது லவ் பண்ண ஆரம்பிச்சிடும்! இவன் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னா, அதுக்கு வெளிநாட்டுல மாப்பிள்ளை கிடைச்சிடும்! இல்லேன்னா யாரோடாவது ஓடிப்போயிடும்! அவனால எத்தனை பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கிடைச்சிருக்கு! எவ்வளவு பெரிய சமூக சேவைய சத்தமில்லாம செய்திட்டு இருக்கிறான்! ஆனா கொடுமையைப் பாருங்க, இந்த விஷயம் எதுவுமே அந்தப் பொண்ணுங்களுக்கு தெரியாது! 


இரண்டு வகையான காதல் இருந்திச்சு! இரண்டுமே ஒருதலைதான்!

ஒரு பெண்ணைப் பார்த்து, பிடித்துப் போய் காதலிப்பது. இது முதல் வகை. சாதாரணமானது.

சிலபேருக்கு, காதல் முதல்லயே வந்திடும். பிறகுதான் காதலிக்க ஆள் தேடுவானுகள்.


ஷன்னின் காதல்கள் இரண்டாம் வகை. அவன் தனது அனுபவங்களை, சாகசங்களை ஒவ்வொரு முறையும் 'புதுசா' சொல்றமாதிரியே.. விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க, நாங்களெல்லாம் பிரமித்துப் போய் ( நாங்களெல்லாம் எப்பதான் இதெல்லாம் தெரிஞ்சு கொள்ளப் போறமோ?) கேட்டிட்டு இருப்போம்.


இந்த முறை ஷன் மிகத் தீவிரமாக இருந்தான் அல்லது எங்களுக்கு அப்படித் தோன்றியது. இந்த மாதிரி சமயங்களில எல்லாப் பசங்க 'குறூப்' புக்குமே ஒரு அட்வைசர் இருப்பார்.எங்களுக்கும். அநேகமாக தொடர் தோல்வியை சந்தித்து, விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று 'கோச்' ஆன மாதிரி. அண்ணன் பல களங்கள், விழுப்புண்கள் கண்ட அனுபவத்திலிருந்து, (அநேகமாக நான்கைந்து வயது பெரியவராக வேறு இருப்பார்)  ஆழ்ந்த சிந்தனையுடன், நிதானமாக 'இப்பிடித்தான் நானும் ஒரு நாள்...' என்று ஆரம்பிக்கும்போது, நாங்களெல்லாம் அமைதியாகி....


எங்களில் பலர்  நாம லவ் பண்ணலையே தவிர அடுத்தவன் காதல பீல் பண்ற நல்ல மனசு வாய்க்கப் பெற்றிருந்தோம். அண்ணனின் சந்தோஷ தருணங்களில், சந்தோஷித்து, துக்கத்தில் பீலாகி, 'டச்' ஆன சமயங்களில் ஒருவரை ஒருவர் பார்த்து, (அண்ணன் நிஜமாவே பெரிய ஆளுதாண்டா! நாங்களும் இருக்கிறம்?!..ம்ம்ம்ம்) சில நேரங்களில் அண்ணன் ரொம்ப பீலாகி, குரல் தடுமாற கதை சொல்லும்போது, எல்லாரும் அழுவாரைப் போல உட்கார்ந்திருப்போம். ஆனா அப்போ, லவ் பண்ணிடிருக்கிறவன் மட்டும் லூசுத்தனமா எதையோ நினச்சு சிரிச்சுட்டே கேட்டிட்டு இருப்பான்.கொஞ்ச நாள்ல தனியா அழப் போறது தெரியாமல்!

அதில எங்க எல்லோருக்கும் ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தது - அதாவது இப்ப இல்லாட்டியும் என்றைக்காவது ஒருநாள் நாங்களும் லவ் பண்ணுவோம்! அப்ப எங்களுக்கும் இதெல்லாம் 'யூஸ்' ஆகும்னு!


அப்புறமென்ன 'அண்ணனின்' நேரடி வழிநடத்தலில், எங்காளு ஷன் போய் காதலை கடிதத்தில வடிச்சுக் கொடுக்க, பொண்ணு கலவரமாகிக் கடாசி எறிய, எங்களின் பிரகடனப் படுத்தப்படாத அந்தத் துக்கதினம். ஏன் ? நல்லா தானே போயிட்டிருந்திச்சு? அவளும்தானே பாத்திட்டிருந்தாள்?(உன்னத்தானா?) என்னப் பாக்கேக்க எல்லாம் சிரிப்பாளே (எதுக்கு சிரிச்சாளோ?) அப்போ இதுக்கு என்ன அர்த்தம்? அதுக்கு என்ன அர்த்தம்? ஏராளமான கேள்விகள் ஷன்னாலும் மற்றவர்களாலும் மாறி மாறிக் கேட்கப்பட்டது.


விடை தெரியாத பல கேள்விகளின் முடிவில் அண்ணன், 'இதுக்குத் தாண்டா முதல்லயே சொன்னேன்...' ( என்ன ஒரு தீர்க்க தரிசனம்! இதுதான் அண்ணன்! ) ஆரம்பிச்சு, தனது சொந்த அனுபவங்கள், சில பல சம்பவங்கள், உதாரணங்களின் மூலம் அந்த மாபெரும் உண்மையை(?!) முன்வைத்தார். 'பொண்ணுங்களே இப்பிடித்தான்'. 

அமைதி.
அண்ணன் 'இந்தப் பொண்ணுங்களையே நம்பக் கூடாதுடா' அந்த நிசப்த இரவில், 'ஆமாமா' எங்களின் கோரஸுடன், தூரத்தில் குறைக்கும் நாய்களின் பின்னணியுடன், பெண்களுக்கெதிரான அந்தத் தீர்மானம் மீண்டுமொருமுறை நிறைவேற்றப் பட்டது, எந்தப்பெண்ணுமே அறியாமல்!


ஷன்னும் இந்தமுறை ரொம்பப் பாதிக்கப்பட்டதால் மிகத்தெளிவாக தன் முடிவை அறிவித்துக் கொண்டான் 'இனி வாழ்கையில லவ் பண்ணக் கூடாது!' சில நாட்கள் அவனைக் காண முடியவில்லை! திடீரென்று ஒருநாள் , 'மச்சான் அவசரமா போறேண்டா பிறகு சந்திக்கிறேன்' சைக்கிளில் பேய் மாதிரி ஓடிட்டிருந்தான்!


சற்றுத் தொலைவில் சென்றுகொண்டிருந்தது ஒரு பெண்கள் கூட்டம்!
      

Tuesday, May 31, 2011

கடலை,கவிதை,காதல்!


'ஐயப்பன் செல்போனில் பேசுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?' 

கடலை போட்டுக் கொண்டிருந்த கம்பரைப் பார்த்தபோது அப்பிடித்தான் தோணிச்சு!  - கதிரையில் இரண்டு கால்களையும் தூக்கிவைத்துக் கொண்டு வலது கையை காதுக்குக் கொடுத்து, இடக்கையை இடது முழங்காலில் ரெஸ்டில!

தொடர்ந்து சிலநாட்களாக கம்பர் மொபைலும் கையுமாக யாரோ ஒரு பெண்ணுடன் ஒரே கடலை! அது சரி பொண்ணுன்னு எப்பிடி?.... அதான் நம்மாளுங்க கதைக்கேக்க முகத்தைப் பார்த்தாலே தெரியுமே! வாயெல்லாம் பல்லாக! மூஞ்சியே பல்ப்பாக!


அதிலும் கம்பர் இருக்கானே, அவனிடம் ஒரு பையன் முதன்முதலாக கதைக்கும்போது, நேராகப் பார்க்காமல் பக்கவாட்டில் தலையைத் திருப்பி, முகத்தை பதினைந்து டிகிரி ஏற்றக்கோணத்தில் வைத்து, விழிகளை அதே பதினைந்து டிகிரி இறக்கி வைத்து சிரிக்காமல், அலட்சியமாக, அமர்த்தலாக, நாங்களும் சும்மா இல்ல பெரிய ரௌடி தான் என்ற தோரணையில்தான் நோக்குவார்.

அதுவே பெண்ணாக இருந்தால், நேராக முகம் பார்த்து, முகத்தில் பரவசம் கொப்பளிக்க, இரு முனைகளிலும் உதடுகள் ஒட்டியிருக்க, நடுவில் உதடுகளை விரித்து, நான்கு பற்கள் தெரிய சிரித்தவாறே, ' ச்ச்சொல்லுங்கோ' (ஜொள்ளுங்கோ!) 
- கற்பனை பண்ண முடிகிறதா? முடியலயா! சரி விடுங்க உங்களுக்கு எதுக்கு அந்தக் கருமமெல்லாம்? மொத்தத்தில் பார்க்கக் கண்றாவியா இருக்கும்!

நாங்கள் தங்கியிருந்த அந்தப் பெரிய வீட்டில் நண்பர்கள் எட்டுப் பேரில் யார் எங்கு தூங்குவது என்ற ஒழுங்கு கிடையாது. பிரச்சினை கிடையாது. பெரிய ஹாலில் அவனவன் ஒரு நாளைக்கு ஒரு இடத்தில்!அறைக்குள் கட்டில்களில் யாரும் தூங்குவது குறைவு. ஆனா கம்பர் மட்டும் தனக்கென ஒரு அறையின் மூலை! அந்த ஏரியாவுக்குள் யாரும் போறதில்ல!

அந்தக் கடலை குறித்து சிலர் கேட்டபோது கம்பர் சொன்னது, 'அது பிரண்ட்ஷிப், தப்பா நினைக்கக் கூடாது!'  அதோட விட்டானா? ஒரு ஆணும் பெண்ணும் நட்பா பழகினா தப்பா யோசிக்கும் தமிழ் சமூகத்தை கிழிகிழியென்று அரைமணி நேரம்...நான் கூட ரொம்ப நொந்து போனேன் ஏன்தான் நாமெல்லாம் இப்பிடி 'விளங்காம' இருக்கோம்னு! - நல்லவேளை நானெதுவும் கேட்கல! 

**********

ஒரு மாலை நேரத்தில், கதிரையில் 'ஐயப்பன் ஸ்டைலில்' உட்கார்ந்திருந்த கம்பரின் கேள்வி..

'ஜீ, உனக்கு கவிதை எழுதத் தெரியும் தானே?'
'இல்லடா'
'சும்மா சொல்லாதே'
'தெரியாதுடா'

'ச்சே என்னடா உன்னைப்பற்றி என்னமோ நினைச்சேன் நிறைய புக்ஸ் எல்லாம் வாசிக்கிறே' 
'டேய் வாசிக்கிறவனால எல்லாம் எழுத ஏலாதுடா, அது சரி எதுக்கு கேக்கிறே?'

'சும்மா அவளுக்கு அனுப்பத்தான்!'
' பிரண்ட்டுன்னு சொன்னியேடா?'
' பிரண்ட்க்கு கவிதை அனுப்பிறதில்லையா? அனுப்பக் கூடாதா?' ( பிரண்ட்ஷிப்புக்கு கவிதையா? புதுக் கலவரமா இருக்கேடா?)
'அப்பிடியா? இவ்வளவு காலமா நீ எனக்கு ஒரு கவிதையும் அனுப்பலையே? - கம்பரைக் கலவரமாக்கி கிடைத்த gapல எஸ்கேப்!

பிறகு இரண்டு நாட்களாக இதே தொல்லை.
'மச்சான் உனக்கு வரும்டா, நீ எவ்வளவு நல்லா கதைக்கிறே, திங்க் பண்றே' நமக்கு சம்பந்தமில்லாதத எல்லாம் சொல்லி நல்லா உசுப்பேத்திறான்னு தெரிஞ்சுது! - ஆனா யாருகிட்ட? எவ்ளோ பார்த்திருக்கோம்?

ஆனா ஒரு கட்டத்தில எனக்கே ஒரு சபலம் வந்திட்டுன்னா பார்த்துக் கொள்ளுங்க! 'ஒருவேளை நமக்கு கவிதை வருமோ?' - அட அத விடுங்க! ஆபீசுக்கு வெள்ளை ஜிப்பா போட்டுக்கிட்டே ஜோல்னாப் பைக்குள்ள 'லாப்டாப்' கொண்டுபோறமாதிரி கனவுகூட வந்திச்சுன்னா பாருங்க!

நல்ல வேளை! உடனேயே தெளிஞ்சுட்டேன். தமிழ் கூறும் நல்லுலகிற்கு நிகழவிருந்த அசம்பாவிதம் தடுக்கப் பட்டது. நான் கவிதை எழுதாததைத் தான் சொல்றேன்!

பிறகு கடலை பிசியில் கவிதையை மறந்து விட்டான். 
தப்பிச்சன்டா! ஆனா ஒண்ணு! நல்லவேளையா கம்பர் 'லவ்' பண்ணல!   இல்ல கடலைக்கே இப்பிடிக் கண்ணைக் கட்டுதே, இவன் 'லவ்' பண்ண வேற ஆரம்பிச்சுட்டான்னா ஒருபயல் நிம்மதியா இருக்க முடியாதே! ஒழுங்கா தூங்க முடியுமா காதல் கதை சொல்லியே கொலையா கொன்னுருவானுகளே! - நிம்மதியானேன் - ஆனா விதி?

************

அன்று ஏனோ கம்பரை மறந்து கட்டிலில் தூங்கலாம்ன்னு அறைக்குள் போக, கம்பர் படு உற்சாகமாக 'டேய் ஜீ ஆபீஸ்ல வேலை எல்லாம் எப்பிடி போகுது?' ( என்னடா புதுசா அக்கறை?....அய்யய்யோ! அப்போ ஆரம்பிச்சுட்டானா?) - அலேட் ஆகிட்டேன்!

முன்னப் பின்ன நான் தேன் குடிச்ச நரியைப் பார்த்ததில்லை என்றாலும் கம்பரை பார்க்கும்போது ஊகிக்க முடிந்தது!

'......' (அதே தாண்டா!)

'உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா' 
'......' 

'நான் அவளை லவ் பண்றேன்டா' 
'ஓ....!  நான் வெளில படுக்கிறன்டா மச்சான்! குட்நைட்! 

Sunday, November 28, 2010

இதப் பற்றி நீ என்ன நினைக்கிறே?


'இதப் பற்றி நீ என்ன நினைக்கிறே?' - சிங்கம் கேட்டான்.

அசோகச் சக்கரவர்த்தி இல்லாமல் எப்படி ஒரு சரித்திரப் பாடம் இல்லையோ, அதே போல 'இதப் பற்றி நீ என்ன நினைக்கிறே?' என்ற கேள்வியைக் கடந்து செல்லாமல் இளமைப்பருவம் பையன்களுக்கு இல்லை.

கேள்வி கேட்கப்படும் நேரம் மாறுபடலாம். அனால் காலம், கேட்கிறவனைப் பொறுத்த வரையில் அவனுக்கு வாழ்வின் வசந்த(?) காலமாகவும், எங்களைப் பொறுத்தவரை எங்களின் போதாத காலமாகவும் இருக்கும்.

கேள்வியின் வடிவம் மாறலாம். 'இதுக்கு என்ன அர்த்தம்?', 'அப்ப ஒக்கே தானே?' என்பதாக.
உட்பொருள் ஒன்றுதான். பதிலும் அவ்வாறே.
'அவளுக்கும் ஒரு ஐடியா இருக்கலாம்', 'உன்ன பிடிச்சிருக்கு ன்னு நினைக்கிறேன்', 'ஆமாமா' இவ்வாறாக.
மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்தோமானால் அவ்வளவுதான். உடனே பார்வை மாறும்.

வெளியே ஒன்றும் சொல்லாட்டியும் உள்ளே என்ன நினைக்கிறான்னு ஊகிக்கலாம்.
பொறாமை, புகைச்சல்ல சொல்றான், இவன எவளுமே பார்த்திருக்க மாட்டாள் அதான் வயித்தெரிச்சல்.

நானெல்லாம் அப்போது ஒல்லிப்பிச்சானாக வேறு இருந்ததால் (இப்போ?), எங்கே வயிதெரிச்சல்ன்னு முடிவே பண்ணிடுவாங்களோன்னு உடனேயே 'அப்பிடியா?', 'இருக்கலாம்' ன்னு பொத்தாம் பொதுவாக எதையாவது உளறி, எஸ்கேப்.


இதே கேள்வியை சிங்கம் கேட்டபோது உடனடியாக நான் எதையும் கூறவில்லை.

சிங்கம் ஒரு சிந்தனாவாதி. பெரும்பகுதி சிந்தனை பெண்கள் பற்றித்தான். சமீபகாலமாக தான் அடிக்கடி சந்திக்க நேரும் பெண்ணைப் பற்றித்தான் அப்படிக் கேட்டான்.

அவள் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் தனக்குச் சார்பான காரணங்களைக் கற்பித்துக் கொண்டு, இதுக்கு என்ன அர்த்தம்? அப்போ அதுக்கு என்ன அர்த்தம்?
உடனடியாக 'ஆமா'ன்னு சும்மா சொல்றான்னு தெரிஞ்சிடும் போய் சொல்றான்னு.
இல்லேன்னு சொன்னா கேட்கமாட்டான்...அடம்பிடிப்பான்.

தீவிர சிந்தனையில் நான். 

இங்கு தீவிர சிந்தனை என்பது, தலையைச் சிறிது சாய்த்து, தொலைதூரத்தில் பார்வையைச் செலுத்தி, வெறித்த பார்வையுடன், புருவத்தைச் சிறிது சுருக்கி, முகத்தில் உணர்ச்சிகளற்ற ஒரு வெறுமையைப் படர விட்டு.....! கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கும் பழக்கம் இருந்தால், ஒரு கையால் தாடையைத் தடவிக் கொள்ளலாம், என்னை மாதிரி.

ஆனா அதே நேரத்தில எதிர்ல வாற பொண்ணை 'சைட்' அடிக்கலாம். 

இது தான் முக்கியமான விஷயம். ஆனா ரொம்ப கஷ்டமானதும் கூட. ஏன்னா நம்ம பசங்க 'சைட்' அடிக்கிறாங்க ன்னா அப்பிடியே முகத்தில தெரியும். பார்வை திசை மாறும், பேச்சு 'கட்' ஆகும், மூஞ்சில 'பல்ப்' எரியும். எங்களுக்கு பின்னால யாரோ பொண்ணு போகுதுன்னு திரும்பாமலே கண்டுபிடிக்கலாம்.

இதில எனக்கொரு பிரச்சனை என்னன்னா சிங்கம் தான் காதலைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் நேரம் பாத்துதான் எனக்குக் கொட்டாவி வரும். அத நான் மறைச்சு விடுறதுக்கு படுறபாடு இருக்கே ஐயோ ஐயோ.... நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே...!

நாளுக்கு நாள் சிங்கத்தில் காதல் தீவிரமாகி எங்களைக் கொலைவெறியுடன் துரத்தத் தொடங்கினான். கதை சொல்லத்தான்! பலமுறை காதல் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானதால் அவன் வருகிறான்னதுமே நம்ம நண்பர் கூட்டம் தெறிச்சு ஓடுற அளவுக்கு போயிட்டுது.

நிலைமை தீவிரமான ஆரம்பத்திலேயே நான் சொல்லிவிட்டேன். 'மச்சான் அங்க சொல்லி முடிவு தெரிஞ்சப்புறம், கற்பனை, கதை எல்லாத்தையும் 'டெவலப்' பண்ணு. இல்லாட்டி கஷ்டம். அது வரைக்கும் எனக்கு இந்தக் கதை ஒண்ணும் சொல்லவேணாம்'.

இதன்பிறகு என்னிடம் ஒன்றும் சொல்லல. எங்கள் நட்பில் கூட சிறு விரிசல். ஏத்தி விட்டு கூத்து பாக்கும் தீபாவிடம்தான் எல்லாம் சொல்ல, அவனும் தன்னால முடிஞ்ச அளவுக்கு, உசுப்பேத்தி, உருவேத்தி....

ஒரு சுபயோக, சுபதினத்தில் சிங்கம் அசிங்கப்பட்டு, மனசெல்லாம் ரணகளமாகி...

அன்றிரவு, எங்கள் அட்வைசர், காதல் 'கோச்' தலைமையில் நாங்களெல்லோரும் கூடி,

அந்த சோகத்திலும் சிங்கம் தளராமல் 'கோக்' தான் குடிச்சான். நாங்க தான் சோகம் தாங்க முடியாம 'பியர்'.

அப்ப சிங்கம் என்ன நினைத்தானோ, கேட்டான் ஒரு கேள்வி, 'டேய் உங்க எல்லாரையும் விட நான்தானேடா நல்லவன் ?'

'இதைப்பற்றி நீங்க என்ன நினைகிறீங்க?'