Friday, December 19, 2014

மச்சான் (2008)



ஜெர்மனியின் Bavaria நகரில் நடைபெறும் 2004 ஆம் ஆண்டுக்கான Hand Ball Tournament இல் ஜேர்மனியும் இலங்கையும் மோதிக் கொள்ளும் போட்டி ஆரம்பமாகிறது. முற்றிலும் வித்தியாசமான போட்டி அது. இலங்கை அணி புதிதாகத் திகைத்து நின்று வேடிக்கை மட்டும் பார்த்துகொண்டிருக்க, ஜெர்மனி விளையாடி வென்றுவிடுகிறது. ஏதோ சந்தேகம் தோன்ற, ஜெர்மன் போட்டி அமைப்பாளர்கள், இலங்கை ஒலிம்பிக் கமிட்டியிடம் விசாரிக்கிறார்கள். கமிட்டியின் பதில், இலங்கையில் Hand Ball டீம் என்ற ஒன்றே கிடையாது. தவிர, Hand Ball விளையாட்டுக்கென்று ஒரு கழகம் கூட நம்நாட்டில் கிடையாது'.

இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இத்தாலிய இயக்குனர் Uberto Pasolini இயக்கிய படம் சிங்களத் திரைப்படம் 'மச்சான்'

அதிகாலைப்பொழுது. ஆளரவமற்ற கொழும்பு நகரப்பகுதி. மனோஜ், ஸ்டான்லி போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அருகில் கட்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் இன்னொரு நண்பன் விஜித். அவன்மூலம் கிடைத்த பகுதிநேர வேலை அது. மனோஜ் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பரிசாரகனாக வேலை பார்க்கிறான். அவனை நம்பியிருக்கும் குடும்பம், படிக்கும் தம்பிகள், தங்கைகளுக்காக மேலதிகமாக இந்த வேலை. ஸ்டான்லி வீதியில் தோடம்பழம் விற்பது தொடக்கம் கிடைத்த வேலைகளையெல்லாம் செய்கிறான். கணவனைப் பிரிந்து பிள்ளைகளுடன் வந்திருக்கும் அக்கா, வயதான இரு பாட்டிகள், பள்ளிக்குப் போகாமல் சொல்பேச்சுக் கேட்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் சின்ன வயதுத்தம்பி என்று ஏராளம் பிரச்சினைகளுடன் வாழ்பவன். மேலதிகமாக படகில் வெளிநாடு செல்வதற்காக அக்காவின் கணவர் சுரேஷிடம் பணம்பெற்று முகவரிடம் மூன்றுலட்சம் கொடுத்துவிட்டு அவருக்கு ஒழித்துத் திரிகிறான்.

காலை ஜெர்மன் தூதரகத்திற்கு செல்வதுபற்றிப் பேசுகிறார்கள். வேலைக்காக ஜெர்மனி செல்வதற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள் மனோஜ், ஸ்டான்லி. விஜித்திற்கு அந்த யோசனையில் உடன்பாடில்லை. அது சாத்தியமில்லை என்கிறான். "வெளிநாட்டவருக்கு நம் நாட்டிலிருந்து மருத்துவர்கள், தாதிகள்தான் வேண்டும். எங்களைப் போன்றவர்களல்ல" என்கிறான். மனோஜ் சொல்கிறான், "நல்ல நாடு, நல்ல மக்கள். வேலை வாய்ப்புகள் அதிகம். நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம்" என்கிறான்.

"என்ன இருந்தாலும் அங்கே நாங்கள் அங்கே இண்டாம்தரப் பிரஜைகள்தானே?" - விஜித்.
ஸ்டான்லி தன் அழுக்கான பழைய டி ஷர்ட், காற்சட்டையைக்காட்டி, "பார் இங்க மட்டும் நாங்கள் என்ன முதல் தரப் பிரஜைகளாகவா வாழ்கிறோம்?" - நண்பர்கள் மூவரும் சிரித்துக் கொள்கிறார்கள்.

ஜெர்மன் தூதரகத்தில் மனோஜும் ஸ்டான்லியும் அமர்ந்திருக்கிறார்கள். ஸ்டான்லியின் சட்டைப்பையிலிருந்த பேனா மை கசிந்து, இதற்காகவே அவன் வாங்கியிருந்த புதுச் சட்டையில் ஊறியிருப்பதைக் கவனிக்கிறார்கள். அதேநேரம் அவர்கள் பெயர் அழைக்கப்பட, அவசர அவசரமாக அங்கிருந்த ஒரு பேப்பரால் துடைத்து விடுகிறான் மனோஜ்.

அதிகாரி கேட்கிறார், "நீங்கள் அரசியல் ஜெர்மனியில் தஞ்சம் கோருகிறீர்களா?"
"இல்லை நாங்கள் உங்கள் கருணையை எதிர்பார்க்கவில்லை. அங்கு சென்று உழைக்கவே விரும்புகிறோம்"
விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. ஆயாசமாக வெளியே செல்லும்போது மனோஜ் இயலாமையுடன், ஏமாற்றமுமாக "எங்களைப் போன்றோருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துதவ மாட்டீர்களா?" என்கிறான்.
வீடு வரும் ஸ்டான்லியைப் பார்த்துவிட்டு அவன் அக்கா கேட்கிறாள், "இப்போ இருக்கிற நிலைமையில் உனக்குப் புதுச்சட்டை அவசியம்தானா?"

மாலைநேரம். கடற்கரையில் மனோஜும், ஸ்டான்லியும் அமர்ந்திருக்கிறார்கள். ஸ்டான்லிக்கு சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தேடும் மனோஜ், காற்சட்டைப் பையிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துப் போடுகிறான். அப்போது ஜெர்மன் தூதரகத்தில் ஸ்டான்லியின் சட்டை மைக்கறையைத் துடைத்த பேப்பர் இருக்கிறது. எடுத்துப் பார்க்கிறான் ஸ்டான்லி. அது ஒரு விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பு அறிவித்தல். Handball tournament 2004 - Bavaria என்றிருக்கிறது.



Handball அது என்ன விளையாட்டு? அப்படியொன்றை அவர்கள் அதுவரை கேள்விப்பட்டிருக்கவில்லை. சற்றுத் தொலைவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கும் தெரியவில்லை. புதிதாக இருக்கிறது.

ஸ்டான்லி கேட்கிறான், "நாங்கள் போலியாக ஒரு handball டீம் அமைத்து ஏன் ஜெர்மனி செல்லக் கூடாது?"
"ஆனால் எங்களுக்கு அப்படி ஒரு விளையாட்டு இருப்பதே தெரியாதே!". வெளிநாட்டு நண்பிகள் அதிகம் கொண்ட இன்னொரு நண்பனான பியலிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடிவு செய்கிறார்கள். அவன் மனோஜ் பணிபுரியும் ஹோட்டலிலேயே கிகிளோவாக இருப்பவன்.

ஸ்டான்லி, மனோஜ், பியல், விஜித் நால்வரும் கடற்கரையில் அமர்ந்திருக்கிறார்கள். ஸ்டான்லி சொல்கிறான், "சிம்பிள் நாங்கள் ஜெர்மன் விளையாட்டுத்துறைக்கு கடிதம் அனுப்புகிறோம். அவர்கள் அழைப்புக் கடிதம் அனுப்புவார்கள். விசா கிடைத்துவிடும்". விஜித் மட்டும் அதெல்லாம் சாத்தியமில்லை என்பதுபோல் சிரித்துக் கொண்டே மறுக்கிறான்.

சரி விளையாட்டுக் குழுவிற்கு என்ன பெயர் வைப்பது? "மட்டக்குளி எருமைகள்' (mattakkuli  Buffaloes) என்று வைக்கலாமா?" என்கிறான் ஸ்டான்லி. "இலங்கையில்தான் handball என்பதே கிடையாதே. Srilanka National Hand Ball Team என்று வைத்துவிடலாம்" மனோஜ் சொல்ல, அப்படியே முடிவாகிறது.

ஜெர்மன் விளையாட்டுத்துறையிடமிருந்து பியலுக்குத் தொலை பேசி அழைப்பு வருகிறது. சீருடையுடன், முகாமையாளர், மருத்துவர் உள்ளிட்ட 'டீம்' புகைப்படம் அனுப்புச் சொல்கிறார்கள். பரபரப்பாகிறார்கள் நண்பர்கள். ஸ்டான்லி தனது தம்பியுன் உதவியுடன் பேரம்பேசி, வீதியோர நடைபாதைக் கடையொன்றில் இலங்கை கிரிக்கட் சீருடையை ஒத்த டி ஷர்ட்டுகள் தெரிவுசெய்து வாங்குகிறான். Srilanka National Hand Ball Team எனப் பெயர் பொறித்து சீருடைகள் இப்போது தயார்.

ஸ்டான்லி தனது பணத்தேவைக்காக முகவர் றுவானிடம் சென்று தனது பணத்திலிருந்து கொஞ்சம் பெற்றுக் கொள்கிறான். வெளிநாட்டுக்குச் செல்ல முகவர்களிடம் பணம்கட்டி ஏமாந்த பலரது கதை நமக்குத் தெரிந்திருக்கும். அப்படியொரு ஏமாற்றுப் பேர்வழி முகவர்தான் றுவான். ஸ்டான்லி போலவே, அவனிடம் ஆஃகானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் பிரயாணிகள் படகில் செல்வதற்குபோ பணம்கட்டிவிட்டு அலைந்துகொண்டிருக்கிறார்கள். 'இதோ படகு வந்துகொண்டிருக்கிறது', 'வழியில் மூழ்கிவிட்டது' என்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறான். உபரியாக அறிவுரை வேறு வழங்குகிறான், 'இங்கே வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்காதீர்கள், போலீஸ் கைதுசெய்துவிடலாம்!'

மிக இரகசியமாக இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என முடிவு செய்திருந்தும், ஸ்டான்லி குழுவினர் ஜெர்மனி செல்லும் விடயம் மெல்ல வெளியே கசிந்து புதிது புதிதாக ஆட்கள் வந்து அவர்களுடன் சேர்கிறார்கள். ஸ்டான்லிக்கு வெளிநாடு செல்ல பணம் கடன் வாங்கி ஏற்பாடு செய்த, அவன் அக்காவின் கணவன் சுரேஷ் மிகவும் சிரமப்படுகிறான். 'இந்தவட்டியே எங்களைத் தின்றுவிடும்' எனக்கூறும் அவன்மனைவி மத்தியகிழக்கு நாடொன்றுக்குச் செல்ல தயாராகிறாள். சுரேஷ் அதை விரும்பவில்லையெனினும் வேறு வழியில்லை. இந்நிலையில் சுரேஷும் 'டீமில்' இணைந்து கொள்கிறான். ஜெர்மனுக்கு விண்ணப்படிவத்தை அனுப்பும்போது தபால் நிலையத்தில் சந்திக்கும் முஸ்லிம் பெண்ணொருவர் "என்ன ஸ்டான்லி ஜெர்மனிக்குக் கடிதமா?" எனக் கேட்க, ஸ்டான்லி பந்தாவாக "கடிதம் மட்டுமில்லை, ஜெர்மனிக்கே போகப் போகிறேன்" என்கிறான். அந்தப்பெண்மணி தன் கணவனிடம் இதுபற்றிக் கூறுகிறாள். அவள் கணவனும் அவர்களுடன் இணைந்துகொள்ள வருகிறார். 

"வெளியே விஷயம் தெரிகிறது ஆட்கள் அதிகரிக்கிறார்கள்" என மனோஜ் அலுத்துக் கொள்கிறான். ஒரு சிறிய மைதானத்தில் அனைவரும் கூடி நிற்கும்போது திடீரெனப் புதிதாக ஒருவன் வர, "யாரது?" பியல் சொல்கிறான் "என்னுடைய மச்சான்". "வேறு யாருக்கும் சொல்லவில்லைத்தானே" இல்லையென்கிறான். தூரத்தில் இன்னொருவன் சைக்கிளில் வருகிறான். "அது யார்?" இப்போது பியலின் மச்சான் சொல்கிறான் "அவன் என்னுடைய மச்சான்".

அப்போது, திடீரென ஒரு போலீஸ் ஜீப் அங்கே வருகிறது. 'டீமில்' சிலர் அங்கிருந்து கலைந்து ஓட முயல, யாரும் ஓடக்கூடாது என்கிறார் போலீஸ் அதிகாரி. டீம் உறுப்பினர்கள் அனைவரதும் விண்ணப்படிவங்கள் அடங்கிய ஃபைலை வாங்கிப் பார்க்கிறார். ஒவ்வொருவர் முகங்களையும் கவனித்துப் பார்க்க, 'அவ்வளவுதான் மாட்டிக் கொண்டோம்' என்ற மனநிலையில் சிலர் மறைத்து கொள்ள முனைகிறார்கள். போலீஸ் அதிகாரி நிதானமாகத் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு நிரப்பிய விண்ணப்படிவத்தை எடுக்கிறார், கூடவே வந்த கொன்ஸ்டபிளினதும். இப்போது அவர்களும் டீமில்!

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பித்துவிட்டு நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். நிராகரிக்கப்படுகிறது. ஸ்டான்லி மிகவும் சோர்வடைந்து விடுகிறான். சில நாட்களில் ஸ்டான்லியும் நண்பர்களும் சந்தித்து மது அருந்திக் கொண்டிருக்கும்போது அங்கே அவனது வெளிநாட்டு முகவர் றுவானும் இணைந்திருக்கக் காண்கிறான். மனோஜ் சொல்கிறான் "இவர் உதவியுடன் இன்னொருமுறை முயற்சி செய்யலாம்" என. முகவர் றுவான் தான் உள்ளிட்ட தனது பிரயாணிகளையும் டீமில் சேர்க்க வேண்டும் என்கிறான். இரண்டாம் முறை முயற்சிக்கிறார்கள். றுவான் தனது வெளிநாட்டுப் பிரயாணிகளிடம் சொல்கிறான், "எனக்கு இன்னும் கொஞ்சம் பணம் தரவேண்டும். படகு அல்ல விமானத்தில் உங்களை அழைத்துச் செல்கிறேன். தவிர, முதலில் உங்களுக்கு முதலில் ஸ்ரீலங்கன் பாஸ்போர்ட் தயார் செய்ய வேண்டும்". "வெளிநாட்டுக்காரரை நம்முடன் அழைத்துச் செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தாதா அவர்களுக்கு?" என்ற ஸ்டான்லியின் கேள்விக்கு, "இல்லை அவர்களுக்கு நாம் எல்லோருமே கறுப்பர்கள்தான்" என்கிறான் றுவான்.

அனுமதி மறுக்கபட்டமைக்கான காரணத்தை ஆராய்கிறார்கள். இலங்கை விளையாட்டுக் கமிட்டியின் கடிதம் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் தேவை, முக்கியமாக இலச்சினைகளுடன். முகவர் றுவான் தனது அனுபவத்தின் மூலம் சரியான ஆட்களை இனங்கண்டு முக்கியமான கடிதங்கள், அரசாங்க இலச்சினைகளை பிரதியெடுத்து போலிகள் தயாரித்து இம்முறை மிகக் கச்சிதமாக திட்டமிடுகிறார்கள். இடையில் Handball விளையாடிப் பழகுவது என்றோர் திட்டமும். பந்தை வைத்துக் கொண்டு ஏதோ ஒரு மாதிரி விளையாடுகிறார்கள். அப்போது, முகவரின் பிரயாணிகளுடன் பிரச்சினையாகி அடிதடியாகிவிடுகிறது. றுவான் சொல்கிறான், "நாம் எதற்கு இப்படி விளையாடிப் பிரச்சினைப்பட வேண்டும்? நாம்தான் அங்கே சென்றவுடனேயே தப்பியோடி விடுவோமே?" அவன் யோசனை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இம்முறை கனகச்சிதமாகத் திட்டமிட்டு, மிகச்சரியாக ஏமாற்றியதால், விசா கிடைத்துவிடுகிறது.

நண்பர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். இறுதி நேரத்தில் மனோஜ் மனம் மாறிவிடுகிறான். குடும்பத்தைவிட்டுப் பிரிய மனமின்றி இங்கேயே தங்கிவிடுகிறான். புறப்படும் நேரம்வரை அவனை எதிர்ப்பார்த்து விமான நிலையத்தில் காத்திருக்கும் ஸ்டான்லியுடன் விஜித் இணைந்துகொள்ள, டீம் ஜெர்மனிக்குச் செல்கிறது. குடிவரவு அதிகாரிகளின்முன் கலவரத்துடன் வரிசையில் காத்திருக்கிறார்கள். பிரச்சினையின்றி அனுமதித்தும் எல்லோரும் நிம்மதியுடன், நம்பிக்கையுடன் கடவுச்சீட்டைக் கொடுக்கிறார்கள். தனக்கான உள்நுழையும் அனுமதி கிடைத்ததும் முகவர் றுவான் குடிவரவு அதிகாரியிடம் நன்றி சொல்லும் பாணியில் சிங்களத்தில் 'Fuck You' எனக்கூற, அதிகாரியும் அமர்த்தலாக அந்த நன்றியை ஏற்றுக் கொள்கிறார்.




இலங்கை அணியை வரவேற்று அழைத்துச் செல்கிறார்கள் ஜெர்மன் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள். தனது பிரயாணிகளுடன் முகவர் றுவான் விமான நிலையத்திலிருந்தே தனியாக தப்பியோட முனையும் திட்டம் தோல்வியில் முடிந்துவிட வேறு வழியின்றி அவர்களும், டீமுடன் பிரத்தியேக பேரூந்தில் செல்கிறார்கள். 'நாளைதான் உங்களுக்கான போட்டி. இன்று ஒய்வெடுத்துச் சுற்றிப் பாருங்கள்' என்கிறார்கள். காலை உணவு உட்கொண்டதும் போலி முகவர் கையில் ரயில் டிக்கட்டுகளுடன் வருகிறார். 'ஐந்து யூரோ இப்போதே புறப்படுங்கள்' என்கிறான். சரியாக அதே நேரத்தில் உள்ளே வரும் ஏற்பாட்டாளர் ஒருவர், "சிறு மாற்றம் செய்ய நேர்ந்துவிட்டது. இன்று உங்களுக்கான போட்டி, விளையாடிவிட்டு நாளை ஓய்வெடுங்கள்" என்கிறான்.

வேறுவழியின்றி நண்பர்கள் விளையாடத் தயாராகிறார்கள். அதுவரை பார்த்தேயிராத விளையாட்டு. என்ன செய்வதென்றே தெரியாதநிலையில் தயங்கியவாறு நிற்கிறார்கள். எதுவாகினும் எதிர்கொள்ளலாம் எனச்சிலர் களத்தில் இறங்க, ஜேர்மனி 59 - 0 இல் வென்றுவிடுகிறது. ஒருநாள் கழித்து இன்னுமொரு போட்டி. இம்முறை இலங்கை அணி ஏதோ விளையாட முயற்சிக்கிறார்கள். கடுமையாகப் போராடி ஒரு கோல் போடுகிறார்கள். மிகுந்த ஆரவாரமிடுகிரார்கள். மிகக்கடினமான ஒரு விக்கெட்டை எடுத்ததுபோன்ற கிரிக்கெட் அணிபோல உற்சாகத்தில் கூச்சலிட, பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். எதிரணியினரும் சேர்ந்து இவர்களை உற்சாகப்படுத்தி கைதட்ட, அன்றைய ஆட்டம் 57-1 என்ற கணக்கில் முடிகிறது.

அன்றிரவு விடுதியில் நண்பர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்கள் ஒன்றாக இணைந்து பயணித்த அவர்கள், விடைபெற்றுக் கொள்ளும் தொனியில், இனிமேல் சந்திக்க முடியுமா? இல்லையா என்பது தெரியாமல் மகிழ்ச்சி, துயரம், புதிய நம்பிக்கை எனக் கலவையான உணர்வுகளுடன் ஒவ்வொருவரும் ஸ்டான்லிக்கு நன்றி சொல்கிறார்கள். ஸ்டான்லி எதுவும் பேசாமல் நெகிழ்ச்சியுடன் இருக்கிறான். அனைவரும் இரவு வணக்கம் சொல்லி, விடைபெற்றுத் தங்கள் அறைகளுக்குத் தூங்கச் செல்கிறார்கள். 

சிறிது நேரத்தில் அங்கே போலீஸ் வருகிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்கள் தங்கியிருக்கும் நான்கு அறைகளின் கதவுகளையும் ஒரே நேரத்தில் சடுதியாகத் திறக்கிறார்கள். அங்கே யாரும் இல்லை!

டீம் நண்பர்கள் ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நாடுகளுக்குத் தப்பிச் செல்கிறார்கள். இறுதியில் ஸ்டான்லி, சுரேஷ், விஜித், றுவான் நால்வரும் இங்கிலாந்து செல்ல முடிவெடுக்கிறார்கள். ஜெர்மானிய அரசாங்கம் 'டீம்' நண்பர்களைப் பிடிக்க ஆணை பிறப்பிக்கிறது. ஆனால், இன்றுவரை (படம் வெளியாகும்வரை) அவர்கள் யாரும் இனங்காணப்படவில்லை என்கிறது படம்.

போலீஸ் அறைக்குள் சென்றபோது, அங்கே இருந்த காகிதத்தில் எழுதியிருந்தது, 'We love Germany thanks for  everything'. ஜெர்மன் விளையாட்டுத் திட்ட ஒருங்கமைப்பாளர் நொந்துபோய்க் கூறியது, "இதுவே இறுதித் தடவையாக இருக்கும். இலங்கையிலிருந்து இனி எந்த டீமையும் அழைப்பதாகத் என்னிடம் திட்டம் இல்லை" 'அவர்கள் அழுக்கு உடைகளை அப்படியே விட்டுச் சென்றுவிட்டார்கள்' என மேலதிகமாகக் கவலை தெரிவித்திருந்தாராம். அவர்கள் ஃபிரான்ஸ் சென்றிருக்கலாம் என ஜெர்மன் தெரிவித்தது.

முதலில் படம் பார்க்க ஆரம்பிக்கையில் என்ன இது? ஒளிப்பதிவு ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது, எனத் தோன்றியது. பின்னர் யோசித்தால், அதிகாலை நேரத்தின் கொழும்பு புறக்கோட்டை, மருதானை பகுதியின் ஒப்பனையில்லாத நிறம் அதுதான். ஒரு சேரிப்பகுதியின் இயல்பான, மழைநாளின் ஈரலிப்பும், இருண்மையும் அப்படியே இயல்பாகப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவு.

கதை மாந்தர்கள் யாவரும் சேரிப்பகுதியைச் சேர்ந்தவர்கள். மிகுந்த நெருக்கடிகளுக்கிடையில் வாழும் அவர்களின் அவல வாழ்வை அப்படியே இயல்பாகச் சொல்கிறது படம். ஒவ்வொருவருக்கும் பிரச்சினை. ஆனாலும் நண்பர்கள் இணைந்திருக்கும்போது அதையெல்லாம் மறந்து அதையும் இலகுவாகவே எடுத்துக் கொள்கிறார்கள். பார்வையாளர் நாமும் அப்படியே! கொண்டாட்டமாகவே அணுக வைக்கிறது காட்சிகள் ஒவ்வொன்றும். பின்னணி இசையும் அப்படியே. சட்டவிரோதமாக அவர்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையிலும், நாங்களும் சேர்ந்து பங்கு பெறுவது போலவே உணர்கிறோம். அடிப்படையில் நம் நாட்டைவிட்டு, நல்லதோர் நாட்டிற்குச் சென்றுவிடவேண்டும் எனும் எண்ணம் நம்மையறியாமலே அடிமனதிலிருக்கிறது போலும்.

இலங்கை - ஐரோப்பியக் கூட்டுத் தயாரிப்பான இப்படத்தை இயக்கியவர் இத்தாலிய இயக்குனர் உபர்ட்டோ பசோலினி. தயாரிப்பாளர்களில் ஒருவர் பிரசன்ன விதானகே. படத்தின் உருவாக்கத்தில் அவரே அதிகம் பங்காற்றியிருப்பார் என நம்புகிறேன். படம் தயாரிப்பில் இருக்கும்போது பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக உண்மையில் பிரசன்ன விதானகேயின் படமாகவே அறிமுகமானது மச்சான். அதுவே பார்க்க வேண்டிய ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரசன்ன விதானகேயின் 'புரஹந்த களுவர' (1997) (Death on a Full Moon Day) பார்த்ததனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு.

உயிர் பிழைக்கவும், உழைக்க வேண்டியும் வேறுவழியின்றி, ஐரோப்பிய நாடொன்றுக்கோ, கனடாவுக்கோ செல்வதைக் கனவாகக் கொண்டு உயிரைப் பொருட்படுத்தாது சாகசப் பயணங்களை மேற்கொண்ட பலரின் கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். சந்தித்திருக்கிறோம். நிச்சயமாக யாழ்ப்பாணத்தில் ஒவ்வொருவருடைய நெருங்கிய உறவினர்களிடம், நண்பர்களிடம் அப்படியொரு கதை இருக்கும். கடும் குளிரில் காடு மேடுகளில், நடந்து சென்றவர்கள்,படகுகளில்,பயணித்தவர்கள், கண்டெய்னர்களில் பதுங்கியிருந்து வெறும் கோக் மட்டும் அருந்தியவாறு நாட்களையும் எல்லையையும் கடந்தவர்கள், அந்த முயற்சியிலே அந்நிய மண்ணில் அடையாளம் இல்லாமலே தொலைந்து போனவர்கள் பலரது கதைகள் நம்மிடமுண்டு.

அவை இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.இதோ எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் யாரோ ஒருவர் தனது குடியுரிமை விண்ணப்பம் அனுமதிக்கப்படுமா நிராகரிக்கப்படுமா எனத் தவித்துக் கொண்டிருப்பார். யாரோ ஒருவர் முகவரால் ஏமாற்றப்பட்டிருக்கலாம். உயிரைப் பணயம் வைத்து ஒரு கடற்பிரயாணத்துக்குத் தயாராகியபடி ஒருவர், நடுவழியில் தவித்துக் கொண்டு ஒருவர் இருக்கக்கூடும். ஏன் இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடமும்கூட மறக்கமுடியாத ஒரு அனுபவம் இருக்கக்கூடும்.

பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதிய கட்டுரை இது!