Thursday, September 7, 2017

பள்ளிக்கால வன்முறை!


யா
ழ்ப்பாணத்தின் பள்ளி நாட்களில், விமானக்குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் எல்லாவற்றையும் தாண்டி அதிகம் அச்சுறுத்தியது ஆசிரியர்களின் வன்முறைதான்! இயல்பாக சிறுவர்களாக இருக்கவிடாமல் எப்போதும் மிகுந்த பதட்ட உணர்வையும், எச்சரிக்கையையும் ஒருங்கே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அடிக்கடி தோன்றும் விஷயம் இது. 

ஒழுக்கம் என்பது தண்டனைக்குப் பயந்திருப்பது என்று நம்பும் சமூகம். மனித உரிமைகள் ஆணைக்குழு பற்றிக் கேள்வியேபட்டிராத காலம். பலருக்கு வீட்டிலும் சொல்லமுடியாது. அப்படியே ஒரு பெரிய மனுஷனிடம் சொல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். தங்கள் வாத்தியார் கைகளை மடக்கச்சொல்லி, மொழியில் அடிமட்டத்தால் அடிப்பர் என்பதை பெருமையாக நினைவு கூர்வார். அல்லது முஷ்டியை மடக்கி மண்டையில் எப்படி ஓங்கி கொட்டும், தொட்டுத் தொடரும் ஒரு கொட்டுப் பாரம்பரியம் பற்றிப் பரவசமாகப் பேசுவார்.

விளைவு? பள்ளிக்கால வன்முறையைக் கேட்க ஆளே கிடையாது. சரி, இப்போது சிந்திக்க தெரிந்த, வளர்ந்துவிட்ட நண்பர்களிடம் கேளுங்கள். 'அந்தக்காலத்தில் அடிச்சு வளர்த்ததாலதான் நான் இப்ப இப்பிடியொரு மனுஷனாகி..' என ஆரம்பிப்பார்கள். இல்லாவிட்டால் வால் முளைத்துக் குரங்காகி மரத்தில் தாவிக் கொண்டிருப்பார்களாம் என்பது அவர்கள் நம்பிக்கை. எதையெல்லாம் ரொமாண்டிசைஸ் செய்துகொள்கிறோம், என்ன உளறுகிறோம் என்கிற விவஸ்தையே நமக்குக் கிடையாது.

ஒரு கல்லூரிக்கு குறைந்தபட்சம் இரண்டு பிரதான சைக்கோ ஆசிரியர்கள் இருப்பார்கள். சில 'ஒழுக்கமான' பாடசாலைகளில் இன்னும் அதிகம். 'குற்றவாளி' மாணவனை வகுப்புக்கு வெளியில் நிற்கவைத்தால் போதும். 'இவன் ஏன் அடிக்கிறான்?', 'இவன் எனக்குப் படிப்பிக்கவில்லையே?' என்றெல்லாம் கேட்க முடியாது. இதற்காகவே பிரத்தியேகமாக சட்டம் ஒழுங்கு பேணும் சைக்கோ ஆசிரியர்கள் இருந்தார்கள். இவர்கள் எந்த வகுப்புக்குள்ளும் புகுந்து யாரையும் அடிப்பார்கள். முதலில் அடித்துவிட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பார்கள். இந்த ஒழுக்கவியல் ஆசிரியர்களுக்கு இருக்கும் முக்கியமான தகுதி - அவர்களிடம் எந்தவிதமான ஒழுக்கமும் கிடையாது என்பதுதான்.

கொழும்பில் நம் ஆசிரிய நண்பன் நேர்த்தியாக உடை, சப்பாத்து அணிந்து வேலைக்குச் செல்லும்போது அறையிலிருந்த ஒருவன் கூறினான். 'எதுக்கு டீசண்டா இருக்கே? தலையைக் கலைச்சு விடு. கைய ஒழுங்கா மடிக்காதே ஏறி இறங்கி நிற்கட்டும். பழைய சிலிப்பர் போட்டு ஒற்றைக்காலை லேசா இழுத்து நட! அதானடா சரியா இருக்கும்?' என்று சிரித்தான். அவன் வார்த்தைகளில், கிண்டலுக்குஅப்பால் இருந்த ஓர் உண்மை மிக மோசமானது.

உண்மையில் நம் ஆசிரியர்கள் பாவம். தென்னாசியாவிலேயே இலங்கையில்தான் அரசாங்க ஆசிரியர்களுக்குச் சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை என நினைக்கிறேன். யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு பாகிஸ்தான் சென்று கற்பிக்கும் யோசனையில் சில ஆசிரியர்கள் இருந்தார்கள். அங்கே நல்ல சம்பளம் என்றார்கள்.சமுகத்தில் ஆசிரியர்களின் பணி மகத்தானது. அதுவும் சிறுவர் பள்ளி ஆசிரியர்கள் மிக முக்கியமானவர்கள்.

உண்மையில் பெருவிருப்பத்தோடும், ஆர்வத்தோடும் இளைஞர்களாக கற்பிக்க வரும் ஆசிரியர்கள் சில வருடங்களில் தேங்கி, சலிப்படைந்து விடுகிறார்கள். அவர்களில் சிலர் கேலிக்குள்ளாகிறார்கள். சிலர் வன்முறையாளர்களாகிறார்கள். பலர் எப்போதும் உற்சாகமாக மாணவர்களோடு தம்மையும் புதுப்பித்துக் கொள்கிறார்கள். அவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.வளர்ந்த நாடுகள் போல, எந்தத்தொழிலைச் செய்தாலும் தன்னிறைவான வாழ்க்கையொன்றை வாழமுடியும் என்கிற நிலை இருக்கவேண்டும். அதன்பின்பே செய்யும் தொழிலில் 'சேவை', 'அர்ப்பணிப்பு' என்கிற பேச்செல்லாம்!

ஆரம்பப் பள்ளியிலேயே நாம் கொடுமைகளுக்குபழக்கப்பட்டிருந்தோம். அந்த ஆசிரியர்களில் சிலர் உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கலாம். அவர்களை நம்பிப்பிஞ்சுகளை ஒப்படைப்பது மிகக்கொடூரமானது. ஒரு கணத்தில் அன்பே உருவாகப் பேசும் ஆசிரியர்கள், அடுத்த கணத்திலேயே பெரும் வன்முறையாளராகி விடுவார்கள்.

ஐந்தாம் ஆண்டில் ஸ்கொலர்ஷிப் படிப்பில் எங்கள் ஆசிரியர் புள்ளி குறைந்தவர்களை அடிப்பது ஒரு சடங்கு. ஒரு தும்புத்தடியின் பாதி அளவு விட்டத்தில் பெரியதொரு கம்பால் பின்பக்கத்தில் ஓங்கி அடிக்கும்போது,‘ப்ளடி ஃபூல்’ என்று பல்கலைக் கடித்து உறுமியவாறு அடிப்பார். பின்பொரு முறை நானும் ஜனகனும்பேசிக்கொண்டிருந்தோம். ‘எப்படி அவரால் முடிந்தது?’. அவரது மூத்த மகன் இயக்கத்திற்குச் சென்றதிலிருந்துதான் இப்படி ஒரு பாதிப்பு அவருக்கு என்றான்.

அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது. அவரது கடைசி மகன் எங்கள் வகுப்புதான். வேறொரு டிவிஷனில் படித்தான். ஒழுங்காக வீட்டுப்பாடங்கள் எதையும் செய்யமாட்டான். புத்தகங்கள் கொண்டுவர மாட்டான். அவன் வகுப்பாசிரியர் அவனை நேராக எங்கள் வகுப்புக்கு தகப்பனிடம் கூட்டி வந்துவிடுவார். எங்கள் வகுப்பிலோ பயிற்சிப்புத்தகம் கொண்டுவராமல் விடுவது ஏறக்குறைய கொலைக்குற்றம். மகன் மீதான புகார்களை கூறும்போது கொஞ்சம் முறைத்தபடி கண்டிக்கும் பாவனையில் பேசுவார். அவனோ ஏதோ பாராட்டுரையைக் கேட்பதுபோல சிரித்தபடி நிற்பான். அவன் சிரிப்பைப்பார்க்க எங்களுக்கே நாலு அப்பு அப்பலாம் போலிருக்கும். பாவம் பெற்ற தந்தை அவருக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா?அவனும் இயக்கத்திற்குப் போய்விடுவான் என்ற பயம் அவருக்கு இருந்திருக்கக்கூடும். அது அவருக்கு மேலதிக உளவியல் தாக்கம்தான். அதனாலென்ன? சற்று நேரத்தில் எங்கள் வகுப்பில் யாரோ ஒருவன் சிக்குவான் இல்லையா? சேர்த்துக் கவனித்துக் கொள்வார்!

இதுபற்றி பின்னர் நண்பன் பார்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சந்தேகம் வந்தது. அது இன்னொரு ஆசிரியர் பற்றியது. வேட்டையாடும் மிருகம் போன்ற பளபளக்கும் கொள்ளிக் கண்கள். சிரிக்கும்போது இன்னும் பயமாக இருக்கும். இன்னும் பளபளக்கும் விழிகள். குரூரமான சிரிப்பு. அவருக்குப் பயந்து இரண்டு பேர் வேறு பள்ளிக்குச் சென்றிருந்தார்கள். அவர்பற்றித்தான் கேட்டேன். ‘அந்தாளுக்கு என்ன பிரச்சினைடா? என்ன பாதிப்பு?’
பார்த்தி யோசிக்காமல், அவசரமாக சொன்னான், "அவன் பிறவிச் சைக்கோ!"

ரு வகையில் வன்முறைக்கு உள்ளாகுபவனுக்கு எந்தப் பாதிப்புமில்லை. அல்லது பழகிவிடும். கடந்து போய்விடுவான். ஆனால் பக்கத்திலிருந்து பார்ப்பவன் நிலைமை மோசமானது. தற்காப்பு உணர்வும்,எச்சரிக்கையான அவதானிப்பும் ஒரு தத்தளிப்பான நிலையில் மனதை எப்போதும் வைத்துக்கொள்ளும். அப்படியான சந்தர்ப்பங்களில் பயந்திருக்கிறேன் எங்கே நானும் எழுத்தாளனாகி விடுவேனோ என்று. நண்பர்கள் புண்ணியத்தில் அப்படியொரு அசம்பாவிதம் நிகழவில்லை.

புவி என்றொரு பேர்வழி. நல்ல உயரமாக கச்சலாக நிற்கவே தெம்பில்லாத மாதிரி ஆடிக்கொண்டே இருப்பார். இளைஞர்! எப்போதும் தோளுக்கு மேலே ஓங்கியபடியே இருக்கும் கையில் பிரம்பு ஆடிக்கொண்டிருக்கும். ஆஸ்துமா இருக்கவேண்டும். இழுத்துக் கொண்டிருக்கும். வாயைத் திறந்தால்குப்பை கூழங்களைப் பறக்கவைப்பது போலகாற்று ‘ஹூய்ய்ய்’ என்று வரும். கிரீச்சிடும் குரலில் பேச முயற்சிப்பார். அவர் என்ன பாடம் படிப்பிகிறார்? எதுவும் தெரியாது. இங்கே என்னதான் செய்துகொண்டிருந்தார்? தெரியாது! ஆனால் நாம் என்ன செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும் எப்படியும் அடித்துவிடுவார் என்று மட்டும் தெரியும். சிலருக்கு அவர் மனிதர்தானா என்றே சந்தேகம். இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய், ‘புவி செத்துப்போய் மூன்று வருசமாச்சு’ என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.

ஏதோ ஒரு அசுபயோக அசுப தினத்தில் புவியிடம் விசாரணையில் மாட்டிக்கொண்டேன்.
"உய்ய்ய் எங்க கர்ர்ர் யார்ர்?”
"உ ஹ்ஹ்ஹ் ர்ர்ர்ர் எந்த கிளாஸ்? சொல்லு"

சரமாரியாக கேள்விகள்.முதல் கேள்விக்குப் பதில் சொல்ல அவகாசமில்லை. அடுத்தடுத்து கேள்விகள். வழக்கம்போல பதிலை எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது. கையில் பிரம்பு ஆடிக்கொண்டிருந்தது. சரமாரியாக இரண்டு முறை என் தோளுக்கருகே அடி விழுந்தபோதுகோபம் தலைக்கேறியது.வகுப்பில் படிப்பிக்கும் எந்த ஆசிரியரிடமும் அடி வாங்கியதில்லை. பிரம்பைப் பிடித்து பறித்து இழுத்தேன். முறிக்க முயற்சித்தேன். அனிச்சையாக என் வலதுகை சற்று உயர்ந்தது சுட்டு விரல் எதோ சொல்லும் பாவனையில் நீண்டிருந்தது.

சம்பவத்தில் புவி அதிர்ச்சியடைந்தமாதிரியிருந்தது. எதுவும் பேசவில்லை. மேலதிக விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்டேன். விசாரணை அதிகாரி சம்பவம் பற்றிக் கேட்டதும், கன்னத்தில் ஓங்கி அறைந்தபோது கண்கள் இருட்டி மின்னல் வெட்டி ஒரு முழு வட்டத்தை சுற்றியிருந்தேன். சொல்லமுடியாது, அது மூன்று வட்டமாகக்கூட இருக்கலாம். என் சுட்டுவிரல் மடக்கப்பட்டபோது நியாயமாக என் அலறல் என் வகுப்புக்குக் கேட்டிருக்க வேண்டும். அநியாயமாகவோ, அதிர்ச்சியிலோ சத்தம் போடவில்லை. முகத்தில் சரமாரியான தாக்குதலில் கண் மங்கலாகத் தெரிந்தது. குத்து மதிப்பாக நடந்து வகுப்புக்குள் சென்றபின்னர் கவனித்ததில், சட்டைப்பொத்தான் ஒன்று அறுந்திருந்தது. வாய்க்குள் உதடு கிழிந்து உப்புக்கரித்தது. முகம் வீங்கியிருந்தது.

வீட்டில் அப்பா கேட்டபோது. வகுப்பில் அடிதடி சண்டை என்றேன். பையன்களுடன் சண்டை என்பதால் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. பிரச்சினையைச் சொல்லியிருந்தால் பள்ளிக்கு வந்திருப்பார். எனக்கு அவர்மீது எக்கச்சக்க கோபம் இருந்தது.சின்ன வயதில் சொல்லி வளர்த்துபோல ஸ்கொலர்ஷிப் இழவெல்லாம் பாஸ் பண்ணித் தொலைத்தும் என்னை யாழ் இந்துவில் சேர்க்காமல் கொக்குவில் இந்துவில் படிக்க விட்டது குறித்தது அது. அவருக்கு அதற்குக் காரணங்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் அந்தப் பள்ளியுடன் ஒன்றவே முடிந்ததில்லை. நாட்டுச் சூழல் காரணமாக நாலைந்து பள்ளிகளில் படித்திருந்தும் இரண்டு வருடங்கள் படித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் பள்ளிக்காலம் சுதந்திரமாக, சுவாரசியமாக இருந்தது அங்கேதான். ஒருவேளை அன்று அப்பாவிடம் சொல்லியிருந்தால் மறுநாளே பள்ளியை மாற்றியிருக்கக்கூடும். உண்மையில் பள்ளியிலேயே எனக்குத் தண்டனையாக மறுநாள் அப்பாவை அழைத்துவரச் சொல்லியிருப்பார்கள். ஆச்சரியமாக அப்படி நடக்கவில்லை.

அதையெல்லாம் விட எனக்குப் பெரிய கவலை ஒன்றிருந்தது. மேற்குறித்த சம்பவத்தில் நான் நொந்து நூடுல்ஸாகி வகுப்புக்கு வந்தது மட்டுமே சக மாணவர்களுக்குத் தெரியும். அதற்கு முன்னர் நான் நிகழ்த்திய அந்த வீரச்சம்பவம் யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால், கன்ரீனில் இலவச டீ, றோல் கிடைக்கும். வகுப்புத்தோழன் ஒருத்தன் என்னிடம் ‘இனிமே எல்லாம் அப்பிடித்தான்’ என்று சொல்லியிருப்பான். இதெல்லாம் நடக்காமல் போய்விட்டதே!

அதன் பிறகு புவி என்னிடம் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. பிறகு இடம்பெயர்ந்து சென்றபின்னர் நானும் கேள்விப்படவில்லை. புவியும் ஒரு விசித்திரமான மனிதர். அவருக்கு என்ன பாதிப்பு இருந்ததோ தெரியவில்லை. என் வலதுகை சுட்டுவிரலில் அவ்வப்போதுசற்றுப் பிரச்சினை இருக்கிறது. அது எதனால் என்றும் புரியவில்லை!

Wednesday, September 6, 2017

கெட்டவார்த்தை!

த்ரிஷாவும் நண்பர்களும் நள்ளிரவு தாண்டிய அகாலவேளைகளில் நடுவீதியில் கூடிக் கும்மாளமடிப்பது குறித்து ஏரியா வாசிகளுக்குப் புகார்கள் இருந்தன. ஆனாலும் பெரிய இடத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக அமைதி காத்தார்கள்.

அப்புமணி குறித்து யோசிக்கும்போது, ‘பெரிய இடம்’ என்பதை விடப் ‘பெரிய வாய்’ என்பது சரியாக இருக்கலாம். வாயைத்திறந்தால், தமிழ் மொழிப் பரிச்சயமே இல்லாத த்ரிஷாவின் நண்பர்களே தெறித்து ஓடிவிடுவார்கள். மற்றபடி, த்ரிஷா பற்றியதோ, திரிஷாவுக்கும் எனக்குமான முதல் சந்திப்பு பிள்ளையார் கோவிலில் நடந்ததைப் பற்றியதோ அல்ல இந்தப்பதிவு. கெட்டவார்த்தைகள் பற்றியது. த்ரிஷா பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

இப்போது நினைத்தால் வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. என்ன மாதிரியான இலக்கிய வறட்சி மிக்க சூழலில் வளர்ந்திருக்கிறேன்? ஒன்பது வயதில் ஒருவனுக்குக் கெட்டவார்த்தை தெரியாமல் இருப்பது எவ்வளவு கொடுமையானது? அதுவரை காதில் விழுந்ததிலையா அல்லது கவனிக்கவில்லையா? அந்த இடம்பெயர்வு மட்டும் இல்லையென்றால் இந்தக் குறைந்தபட்ச விழிப்புணர்வு கூட இருந்திருக்காதே!

என்னைவிட வயதொன்று குறைந்த என் விளையாட்டுத் தோழி.  அவளுக்குத் தெரிந்திருந்தது. எனக்குத்தான் தெரியவில்லை. என்ன ஒரு அவமானம் பாருங்கள்.

அதைவிடக் கொடுமை, அவள் தம்பி தூஷணத்தில் மிகுந்த புலமை பெற்று விளங்கியதாகப் பேசிக்கொண்டார்கள். அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த ஆகச் சிறந்த கெட்ட வார்த்தையான சனியன், மூதேவியை எப்போதாவது வாய்தடுமாறிச் சொன்னாலே அம்மாவால் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட எனக்கு அது மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது, அவன் வயது.

மூன்று வயது ! இந்தச் சின்னவயதில் என்ன ஒரு ஞானம்! என்மனதில் அவனுக்குத் திருஞான சம்பந்தருக்குச் சமமான இடத்தை வழங்கச் சித்தமாயிருந்தேன்.

அவன்தான் என் அப்போதைய ஒரே நம்பிக்கை. அவனைக் குருவாகக் கொண்டு சீண்டி, உசுப்பேத்தி அவன் உதிர்க்கும் முத்துக்களைப் பொறுக்கிவிடலாம் என ஐடியா வந்தது. ஆனால் என் நேரம்! அவன் தூஷண பிரசங்கத்தை சமீப காலத்தில்தான் நிறுத்தியிருந்தான். அவன் சித்தப்பா, மாமா அத்தைகள் என்று வருவோர் போவோர் எல்லாரும் மேற்கொண்ட சரமாரியான தாக்குதல்களை அடுத்து, தனது போராட்ட வழிமுறையை மாற்றியிருந்தான். அதாவது இரசாயன ஆயுதப் பிரயோகத்தில் ஈடுபடத் தொடங்கியிருந்தான். எதிரி மீது துப்பிவிடுவது! ஆக, என் நம்பிக்கைகள் எல்லாம் தகர்ந்துபோய் வாழ்ந்துகொண்டிருந்த அந்த நாளில்தான் அந்த நல்ல சேதியைத் தோழி பகிர்ந்துகொண்டாள். அருகாமையில் ஒரு வீட்டு மதிற்சுவரில் யாரோ கெட்டவார்த்தைகள் எழுதியிருக்கிறார்கள் என்றாள்.

இந்த இடத்தில் விவரமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, அப்பாவித்தனமான  முகபாவனையோடு கேட்டேன்.

"என்ன எழுதியிருக்கு?"

"தூஷணம்"

"அதான் என்ன எழுதியிருக்கு"

“அதான் தூஷணம்"

"எப்பிடி.. எழுதியிருக்கு?”

"அதச் சொல்லக்கூடாதே" - அவள் என்னைவிட விவரமாக இருந்தாள்.

பெண்கள் எப்போதுமே எந்த வயதிலுமே எங்களைவிட விவரமாகத்தான் இருக்கிறார்கள்.

"நீயே போய்ப் பார். மூண்டாவது வீடுதாண்டி ஒழுங்கை முடக்கில இருக்கிற மதில்ல எழுதிருக்கு" உதவிக் குறிப்புகள் தந்தாள்.

புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளும், ஆவல், தேடலுடன் சிட்டாய்ப் பறந்தேன். திரும்பி வரும்போது 'பாத்துட்டியா' என்பதுபோல தலையசைத்துப் புன்னகைத்தாள். என் முகத்தில் தெரிந்த ஒளி அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்க வேண்டும். நானும் ஒரு மாதிரி உண்டு, இல்லை, பொய், மெய், நன்மை, தீமை எல்லாம் கடந்த, நடுவில் இருக்கக்கூடிய ஞானச்சிரிப்பு சிரித்துவைத்தேன்.

ஆனால், முகத்தில் தெரியும் ஒளி ஞானம் பெற்றதால் மட்டுமே வருவதில்லை. நாம் வாங்கிய பல்பும் ஒளியைக் கொடுக்கும் அல்லவா? அந்த மதிற்சுவர் முழுவதும் என்னென்னமோ எல்லாம் எழுதியிருந்தது. அதில தூஷணத்தை எங்க போய்க் கண்டுபிடிக்கிறது?

கெட்டவார்த்தை பேசுபவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்றொரு பொதுவான நம்பிக்கை சிறுவயதில் பள்ளி நாட்களில் எனக்கும் இருந்தது. இப்போதும்கூட பலருக்கும் இருக்கலாம். சரமாரியாக வார்த்தைக்கு வார்த்தை அடைமொழியாகப் பேசும் ஒருவன், சினிமாப்பாடல்களை செந்தமிழில் மாற்றிப் பாடும் நண்பனொருவன் என பல விற்பன்னர்கள் நம்மோடு படிப்பார்களில்லையா?

எங்கள் பள்ளியில் ஒரு பீ.டி. வாத்தியார் புதிதாக வந்திருந்தார். பொதுவாக இங்க்லீஷ் வாத்தியார்களுக்கு பள்ளியில் ஒரு மதிப்பு இருப்பதுபோல பீ.டி.வாத்தியார்கள் மீதும் ஒரு பார்வை இருந்தது. அவர்களைக் கைகழுவி விட்டதுபோல என்ன செய்தாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. எப்போதோ துவைத்த ட்ராக் சூட் அணிந்துகொண்டுதான் பள்ளிக்கு வருவார். வாயில் தமிழ் துள்ளி விளையாடும். சாதாரணமாக அவரால் பேச முடியாதோ என்பதுபோலிருக்கும் அவர் பேச்சு.

பள்ளிக்கு அவர் வந்து அப்போதுதான் ஒரு வாரம் ஆகியிருந்தது. எங்கள் வகுப்போடு பரிச்சயமாகியிருந்தார். காலையில் வரிசையாகச் சென்றுகொண்டிருந்தபோது ரணகளமாக கமெண்ட் அடித்தார். "பெரிய ஆக்களாடா நீங்க? ட்ரவுசரையும் மாட்டிக் கொண்டு, சூத்தையும் ஆட்டிக்கொண்டு போறதப் பாரு!"

அன்று உதைபந்தாட்டப் பயிற்சி. “பந்தை நிலத்தில் வைத்து சுயாதீனக் காலை பந்துக்குப் பக்கவாட்டில் வைத்து, இயங்கும் காலை பின்னோக்கி இழுத்து உள்ளங்கால் வளைவால் மெதுவாக உருட்டவேண்டும்” என்றார்.

பின்பு, "எங்க நான் சொன்னதைச் சொல்லு" - ஒருவனிடம் கேட்டார்.

அவன் சொல்ல ஆரம்பித்தான், "பந்தை நிலத்தில் வைத்து சுகயீனக் காலை பக்கவாட்டில" என்றபோதே புரிஞ்சு போச்சு. ஒருத்தன் சிக்கிட்டான்.

"டேய் என்னது சுகயீனக்காலா" வாத்தி டென்ஷனாகி, சீரியசாகக் கேட்பதுபோல,
"இங்க வேற யாருக்காவது சுகயீனக் கால் இருக்கா?"

யாரோ ஒரு அப்பாவி அதை நம்பி "சேர் எனக்கிது  வாதக் கால்" என்றான்.

எல்லாரும் சிரிப்புடன் வாத்தியையே பார்த்துட்டு இருந்தோம். வாத்தி, "ஹூம் இனி ஒவ்வொருத்தனா சொல்லுவானுகள் வாதக்கால், ஓதக்கொட்டை!”

முன்பு வேலைசெய்த அலுவலகத்தில் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் பிரவாகமாக ஓடும். ஒவ்வொரு வார்த்தைக்கும் அடைமொழியாக கெட்டவார்த்தையாக பேசியிருக்கிறேன். அப்போதுதான் உணர்ந்தேன். நம் சொந்தமொழியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ள எந்தவித மனத்தடையும் இருப்பதில்லை. பின்பு தமிழிலும். என் பொறுமையின் எல்லையைத் தாண்டச்செய்யும்போது வேறு சரியான தமிழ் வார்த்தைகள் கிடைப்பதில்லை. உண்மையைச் சொன்னால் நான் கெட்ட வார்த்தைகளில் சரமாரியாக உரையாடியது எல்லாம் ஒருசில பெண்களுடன் மட்டும்தான் என்பதை நினைக்கும்போது ஒரு மாதிரியாகத்தானிருக்கிறது.


சில வருடங்களுக்குமுன் முன், யாழ்ப்பாணம் கசூரினா கடலில் குளித்துக் கொண்டிருந்தோம். கரைக்குச் சமீபமாக ஒரு ஏரியாவில் மீனவர்கள் வலை கட்டி மீன் பிடிக்கும் செட்டப் செய்திருந்தார்கள். அதற்குள் ஆர்வக் கோளாறுத்தனமாக சிலர் சென்றுவிட்டார்கள். "டேய்.." குரல் கேட்டது. கரையிலிருந்து ஒருவர் சிறு கட்டுமரத்தில் வந்தார். கையிலிருந்த துடுப்பினால் ஓங்கி தண்ணீரில் அடித்து எல்லோரையும் வெளியே அனுப்பினார். கூடவே செந்தமிழ்ப்பாட்டும். குடித்திருந்தார். அவர் கோபம் நியாயமானது. அந்தத் துடுப்பு மட்டும் தவறுதலாக மேலே பட்டுவிட்டால், பத்து நாளைக்கு எழும்ப முடியாது என்பதால் எல்லோரும் சிரித்துகொண்டு அவசரமாக வெளியேறினார்கள். நாங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

அந்தக் கூட்டத்தில் ஒரு வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் இருந்தார். யாழ்மக்கள் வெளிநாட்டுக்காரர் விஷயத்தில் மறப்போம், மன்னிப்போம் கொலகையையே கடைப்பிடிப்போம். அதுபோல அவர்களும் எந்த முட்டாள்தனமான காரியமென்றாலும் முன்னின்று முகம்கொடுப்பார்கள். அப்படித்தான் நடந்த தவறுக்கு அவராகவே விளக்கம் கொடுக்க முன்வந்தார்.

"இல்ல நாங்கள் வந்து வெளிநாட்டில இருந்து வந்ததால.."

“அவர் வெளிநாட்டு பு--- அவரும் அவற்ர ஸ்டைல் பு-- கழுத்தில ஒரு சங்கிலிப் பு--- அதில சு-- ஆட்டிக் கொண்டு வந்திட்டார் விளக்கம் குடுக்க!”

பாராட்டு வாங்கியவர்  உட்பட, எல்லாரும் சிரித்தார்கள்.

சரி ஒற்றை வார்த்தையில் முடிக்கலாம் என்று நினைத்துச்  சொன்னார், "Sorry"

"ம்ம்ம் அவற்ற இங்கிலீஷ் பு----!"


மீண்டும் த்ரிஷாவுக்கே வருவோம்.

அன்றொருநாள் காலை நேரத்தில் பிள்ளையார் கோவிலுக்குப் போனபோது ‘த்ரிஷா வெளில போ வெளில..’ என்று சுதா அய்யா குரல் விரட்டியது. த்ரிஷா பதில் சொல்லாமல் போக மனமில்லாததுபோல பார்த்துக் கொண்டிருந்தது. ஆச்சரியம் தாங்கவில்லை. என்னவொரு பொருத்தம். வெள்ளையாக, உயரமாக வெடவெடவென ஸ்லிம்மாக இளமையாக. யார் வைத்திருப்பார்கள் அந்தப் பெயரை. என் ஆச்சரியம், யோசனை பற்றிக் கண்டுகொள்ளாமல் த்ரிஷா ஓடிப்போய்விட்டது.

அப்புமணி வீட்டில் நாலைந்து நாய்கள் இருந்தன. வேறு யார் பெயர்களும் தெரியாது. எல்லாவற்றுக்கும் காரண, அகாரணப் பெயர்கள் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக எந்தவொரு கோபமான தருணத்திலும் அவற்றின் பெயர் கொண்டே மரியாதையாக அழைக்கபட்டார்கள் என்றும் பின்னர் தெரிந்தது. பாருங்கள், அதுவும் திரிஷாவின் மூலமாகத்தான்!

ஓர் மழைக்கால மாலை. இருளடைந்திருந்த அப்புமணி வீட்டு வராந்தாவில் அவர் தூங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் யாரும் காணவில்லை. எங்கிருந்தோ த்ரிஷா ஓடிவர, பின்னாலேயே த்ரிஷாவின் ஆண் நண்பர்கள் பத்துப் பன்னிரண்டுபேர் பின்னாலேயே ஓடி வந்தார்கள். த்ரிஷா அப்புமணியைக் கண்டிருக்க வேண்டும். லாவகமாக அவரைத் தாண்டிப்பாய்ந்து ஓடிவிட்டாள். சுவாரசியமாகத் துரத்திகொண்டுவந்த நண்பர்கள் அப்புமணி தூங்கிக்கொண்டிருந்ததைக் கவனிக்காமல், அப்புமணி மீது இடறி விழுந்து புரண்டெழும்பினார்கள்.

என்ன நடந்ததென்றே தெரியாமல் எக்கச்சக்க அதிர்ச்சியுடன் பதறி எழுந்துகொண்ட அப்புமணி அவிழ்ந்த சாரத்தை இறுக்கப் பிடித்துக்கொண்டு ஆக்ரோசமாகக் கத்தினார்.

“இவள் த்ரிஷா பு---- தான் ஓ---காக இஞ்ச எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்துட்டாள்”

Sunday, July 2, 2017

சிஷ்யன்!

மழை ஓய்ந்துவிட்டிருந்தது. கடற்கரை வீதியிலிருந்து பிரதான வீதியை இணைக்கும் அந்தச் சிறு வீதி குளித்துக் கொஞ்சமாக கிரவல் பூசியிருந்ததில், சர்க் சர்க் சத்தத்துடன் நடந்துகொண்டிருந்தோம். சற்றே குறுகலான வீதி. எதிரே தூரத்தில் கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. கவனிக்காதவன் போல நடு வீதியிலேயே சிஷ்யன் நடந்துகொண்டிருந்தான். அனிச்சையாக அவனை எச்சரிக்கை நினைத்தேன். விவேகானந்தர் இதுகுறித்து ஏதேனும் சொல்லித் தொலைத்திருப்பாரோ? என நினைத்து பேசவில்லை.

விவேகானந்தரோடு எனக்குத் தனிப்பட்ட ரீதியில் எந்தவித பிரச்சினையோ வாய்க்கால் தகராறோ கிடையாது. அவருடன் காத்திரமான ஃபேஸ்புக் விவாதமோ, கருத்துப்பரிமாற்ற முரண்பாடுகளோகூட எனக்கில்லை. ஏனெனில் அப்போது ஃபேஸ்புக் அறிமுகமாகியிருக்கவில்லை. இப்போது விவேகானந்தர் ஃபேஸ்புக்கில் இருக்கிறாரா என்பது பற்றிக்கூட எனக்குத் தெரியாது. ஓரிருமுறை அவர் படங்களை ப்ரொபைல் பிக்சராகப் பார்த்திருக்கிறேன். ஆனால் பெயர்கள் வேறாயிருந்ததில் அவை ஃபேக் ஐடிகள் எனப் புரிந்துபோனது. அப்படியிருக்க, விவேகானந்தரோடு எனக்கென்ன பிரச்சினை? எல்லாம் சிஷ்யனின் கைங்கர்யம். ஒரே மணித்தியாலத்தில் எனக்கு எதிரியாக்கிவிட்டான். விவேகானந்தரின் போதனைகள் குறித்து அச்சமாயிருங்கள் என மாலை மூன்று மணிக்கு யாரேனும் சொல்லியிருந்தால்கூட நம்பியிருக்கமாட்டேன். மூன்று பத்துக்கு சிஷ்யனைச் சந்தித்திருந்தேன்.

அழைப்புமணியை அழுத்தியதும் கதவைத் திறந்தவன், 'எப்பிடி இடத்தை டக்கென்று கண்டுபிடிச்சிட்டியோ?' என்றான்.
'நம்பர்தான் தெளிவா இருக்கே?'

கண்டுகொள்ளாமல் 'இதைத்தான் மச்சான் விவேகானந்தர்..' எனச் சிறுசிரிப்புடன் அவன் ஆரம்பித்தபோது நான் அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அடுத்த அரைமணி நேரத்தில் எட்டுத் தடவைகள், 'மச்சான் விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார் எண்டா' என்றபோது கொஞ்சம் அசாதாரணமாயிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்து நண்பனை இப்படிப் பார்க்க கொஞ்சம் அதிர்ச்சியாயிருந்தது. என்னவாகியிருக்கும்? கடைசியாக, ரெண்டு வருஷத்துக்கு முதல் சந்தித்தபோது சரியாக இருந்தான். அதைவிட, விவேகானந்தருக்கு இப்பிடி ஒரு சிஷ்யனா? அந்தக் காளியே கனவில் வந்து சொல்லியிருந்தாலும் கூட அவரே நம்பியிருப்பாரா என்கிற சந்தேகம் வந்தது.

விவேகானந்தர் பெயரை உச்சரிக்கும்போது அவன்முகத்தில் ஒரு மந்தகாசம். ஆழ்மனத் தேடலில் மெய்ப்பொருள் கண்டுணர்ந்தவன்போல, உள்ளிருந்து ஞான ஒளியை அப்படியே வெளியே பரவ விடுவதுபோல பாவித்துக்கொண்ட மந்தகாசம். ஒரு பக்குவப்பட்டவன் போன்ற பாவனையுடன் அடிக்கடி கண்களை சற்று மேல் நோக்கி சூனியத்தை வெறிப்பதுபோல ஞானிகளுக்கு உரித்தான பார்வை வேறு பார்த்தான்.அப்போதுதான் கவனித்தேன். மேசையில் விவேகானந்தர் பற்றிய புத்தகம். புரிந்தது. அதுவரை அவனுக்கு வாசிப்புப் பழக்கம் இருந்ததாக தெரியவில்லை.  வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் என இரண்டுவகை மனிதர்களிடமும் பிரச்சினையில்லை. ஆனால் வாசிப்புப் பழக்கம் அறவே இல்லாதவர்கள் வாழ்நாளில் ஒரே ஒரு புத்தகத்தைப் படித்துத் தொலைத்துவிட்டால் என்ன ஆகும்? கொஞ்ச நாளைக்கு அது பற்றியே பேசிப்பேசி ஒரு வழி பண்ணிவிடுவார்கள் இல்லையா? விவேகானந்தருடையதோ அல்லது என்னுடையதோ கெட்டகாலம். அவன் கையில் புத்தகமாகச் சிக்கித் தொலைத்துவிட்டார்!

சரியாக நான் பயந்தபடியே நடந்தது. 'விவேகானந்தரைப் பற்றி படிச்சிருக்கிறியா?' என்றான் இல்லையென்ற பதிலை எதிர்பார்த்து. 'வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை இழந்துவிடடாய் நீ' தோரணை இப்போது மந்தகாசத்தில் தெரிந்தது. ஆகவே இதற்கான பதிலை நான் ஒருவரியில் சொல்வது அவ்வளவு சரியாயிருக்காது. 'எனக்கு ஆர்வமில்லை. ஆனா தேவையான அளவுக்குத் தெரிந்து வச்சிருக்கிறேன். அவர் நல்லவர், நாலும் தெரிஞ்சவர், நிறைய தத்துவங்கள் சொல்லியிருக்கார், சிக்காகோல சகோதர, சகோதரிகளேன்னு பேச ஆரம்பிச்சதால எல்லாரோட மனசையும் டச் பண்ணினதால பயங்கர கரகோஷமாம், நிறையப்பேர் விசில் கூட அடிச்சாங்களாம்.. அதுபோக கம்மார்க்கோ சிக்காக்கோ என்கிற சுலோகத்தையும் அவர்தான் முதலில் சொன்னதாக சொல்கிறார்கள்' என்றேன்.

அவன் கண்டுகொள்ளாமல், அறியாமையில் உழலும் மூடனுக்கு அருள்பாலிக்கும் ஞானகுருவின் பாவனையுடன் புன்னகை செய்து, 'இந்தப் புத்தகத்தை வாசிச்சுப்பார்' என்றான். நான் அவசரமாக 'மச்சான் வொஷ் ரூம் எங்க?' என்றேன்.

குளியலறைக்கு வழிகாட்டிய காட்டிய சிஷ்யன், "நான் இங்க நிறைய நேரம் நிக்கிறதில்ல மோசமான வைபரேஷன் இருக்கு"  - மேலதிகமாக உதவிக் குறிப்பொன்றை வழங்கினான். குழப்பமாக இருந்தது. இந்தக்குறிப்பு எவ்வகையில் எனக்கு உதவக்கூடும்? நானும் அதிக நேரம் அங்கே நிற்பதாகவோ, குளிப்பதாகவோ இல்லை. நிச்சயமாக அங்கே தூங்கும் எண்ணம் கிடையாது. அதிகபட்சம் இரண்டு நிமிடம். வைபரேஷன் குழப்பியது. பக்கத்தில் ரயில்பாதை இருப்பதால் வைபரேஷன் இருப்பது நியாயம்தான். ஆனால், அது குளியலறைக்குள் மட்டும் எப்பிடி? ஒருவேளை அமானுஷ்யமாக ஏதாவது?

வந்ததும் கேட்டேன், 'என்ன மச்சான் அது வைபரேஷன்?'
'இல்லடா, இங்க ஏழெட்டுப் பேர் இருக்கிறாங்கள், வந்து போறவங்கள் வேற. எல்லாரும் என்னென்ன மாதிரி யோசினைல இருப்பாங்களெண்டு தெரியாதுதானே. அந்த வைபரேஷன் மோசமான சிந்தனையள கொண்டுவந்திடும், அதான் நான் அங்க மினக்கெடுறேல்ல' என்றான். ஏதோ ஆன்மிக விஷயம் என்கிற அளவில் புரிந்தது. விவேகானந்தர் பயம் இருந்ததால் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

இருவரும் வீதிக்கு இறங்கியபோது, 'மச்சான் ஒருக்கா நெட்கஃபே போகவேணும்' என்றான்.

நெட்கஃபே! - இந்த வார்த்தையைக் கேட்ட மறுகணமே ஒரு நடிகை குளித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை என் மனத்திரையில் தத்ரூபமாக ஒட்டிட முயன்று தோற்றதை ஒளிவு மறைவில்லாமல் இந்தச் சமூகத்துக்குக் கூறுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் விவேகானந்தரின் சீடனிடம் சொல்லமுடியுமா? என்னை ஒரு காமக்கொடூரனாக நினைத்துவிடக்கூடுமல்லவா? அமைதி காத்தேன்.

நெட்கஃபேயில், ஒரு கணணியைத்தேர்ந்து, முன் தரையை,இருக்கையை, கீபோர்ட்டை பரிசோதித்தான் சிஷ்யன். இருவரும் ஒரே கணனியில் அமர்ந்திருந்தோம். பரபரப்பாக இருந்தான் சிஷ்யன். எனக்கு அங்கே எந்த வேலையுமில்லை. ஜீமெயிலில் எப்போதாவது நண்பர்கள் பகிரும் உலகின் பத்து அதிசய புகைப்படம், இருபது பொன்மொழிகள் போன்றவை தவிர எதுவும் வருவதில்லை. சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அதிக கணனிகள் ஆட்களின்றிக் காத்திருந்தன. திடீரென எங்கள் முன் அவசரமாக ஒரு உருவம் தோன்றி, ஸ்தம்பித்து நின்றது. அது எங்கள் கணனியைக் குறிவைத்து வந்திருந்தது. முகம் கோண, மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பித் தளர்ந்து நடந்தது. அதான் இவ்வளவு மெஷின் இருக்கே.. என்னாச்சு இவனுக்கு? யோசித்துக்கொன்டே திரும்ப, இங்கே சிஷ்யனும் ஏறக்குறைய அதேபோன்ற முகபாவனையுடன் இருந்தான்.

"என்னடா?"
"முக்கியமான மெயில் ஒண்டு வந்திருக்கவேணும்...'ச்சே!"

என்ன மெயில் அது? ஒருவேளை விவேகானந்தர் ஆசிரமத்திலிருந்து ஏதாவது? கேட்கவில்லை. ஏமாற்றமும், இயலாமை கலந்த கோபத்தோடும் பரிதாபமான  முகபாவத்தோடு இருந்தான்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு சந்திக்க நேரம் குறித்து வைத்திருக்கிறார் உங்கள் காதலி. வெய்யிலில் மண்டை காய்ந்துகொண்டு நிற்கிறீர்கள். நேரமாகிறது. பொறுமையிழந்து நிற்கும்போது, இன்றைய சந்திப்பு ரத்து என்று காதலியிடமிருந்து குறுந்தகவல் வருகிறது. எப்படியிருக்கும்? இந்த அனுபவத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையா, விடுங்கள்! நானும் உணர்ந்ததில்லை. சும்மா ஒரு பேச்சுக்காகக் கேட்டேன். அப்படியொரு நிலையில் இப்போது சிஷ்யன் இருந்தான்.

"என்னடா என்ன மெயில்?"
"சும்மா.. ஃபிரண்ட் ஒருத்தன் அனுப்பிறேண்டு.."

"சும்மாவா, அதுக்கா இவ்ளோ ஃபீல் பண்ணுறே?"
இப்போது அவன்முகத்தில் ஒரு அசட்டுச்சிரிப்பு. ஒரு விதமாக நாணிக்கோணி, "இல்ல மச்சி... அது வந்து...த்"

"அடப்பாவி! இந்த விஷயம் மட்டும் விவேகானந்தருக்கு தெரிஞ்சா.."
"டேய் இதான் உனக்கு சொல்லேல்ல.. நீ பாத்தியா?"

"நான் பாக்கேல்ல.. ஆனா நீ எப்பிடிறா பாக்கலாம்? என்ன இருந்தாலும் விவேகானந்தற்ற சிஷ்யன் நீ...'ச்சே! ஏண்டா இவ்ளோ கேவலமா இருக்கீங்க... அதுசரி எவ்ளோ நேரம்?"

"மூண்டு நிமிஷமாம். ஃபிளாஷ் மெமரி எல்லாம் கொண்டு வந்தனான், வாங்கினதுக்கு இதத்தான் முதன்முதலா கொப்பி பண்ணலாமெண்டு.. " சமீபத்தில் கேள்விப்பட்டிருந்த அந்த வஸ்துவை முதன்முறையாகப் பார்த்தேன்.

"என்ன இருந்தாலும் எங்கட காலத்தில நடந்த ஒரு விஷயத்தை நாங்கள் மிஸ் பண்ணிட்டம் எண்டிருக்கக்கூடாது.. பிறகு ஒரு நேரத்தில.." எங்கள் முன்னோர் போல நாங்களும், நம் காலத்தின் முக்கியமான நிகழ்வை ஆவணப்படுத்தாமல், அசட்டையாக  இருந்துவிடக்கூடாது என்கிற கவலை, அக்கறையுடன் பேசினான்.

"விடு மச்சி யாராவது டவுன்லோட் பண்ணியிருப்பான். நெட் கனெக்சனே தேவைப்படாம நெட்கஃபேக்கு வர்ற கோஷ்டி ஒண்டிருக்கு. எனக்கென்னமோ இது முக்கியமான மெஷின்போல இருக்கு. ஒருத்தன் அழாக்குறையா திரும்பிப் போனான் பார். இதில இருக்குன்னு பட்சி சொல்லுது"

இப்போது நம்பிக்கை தொனிக்க என்னைப் பார்த்தவன் கட்டளை கொடுத்தான். இப்போது திரை முழுவதும் வீடியோ ஃபைல்கள் ஏழுதிரைகள் தாண்டி வியாபித்திருந்தன. "ஒப்பின் பண்ணி  பார்க்க ஒரு நாள் வேணுமே"
'ட்ரை பண்ணலாம், எதையும் ஒப்பன் பண்ண வேணாம்.. மெதுவா ஸ்க்ரோல் பண்ணு' என்றேன். இப்போது சிஷ்யன் என்னைப் பார்த்த பார்வை அவ்வளவு சரியில்லை.

நமக்கென்று ஒரு பாரம்பரியமிருக்கிறது. முன்னொரு காலத்தில், யாராவது சிடி வைத்திருந்தால், அதைக்  கையில்வாங்கி  சற்றே மேலே தூக்கி பார்த்துப் பரிசோதிக்கவேண்டும். அது படமோ, பாட்டோ எதுவாயிருந்தாலும் பதிந்திருப்பது நம் கண்களுக்கு அப்படியே தெரிவதுபோல பாவனையுடன் பார்க்கவேண்டும். அது ஒரு பண்பாடு. நீங்களும் ஒருமுறையேனும் அதைச் செய்திருக்கலாம். அந்த அசட்டுத்தனத்துக்குச் சற்றும் குறையாத கிறுக்குத்தனமாக எனது செயல் சிஷ்யனுக்குப்பட்டிருக்கலாம்.

'மச்சி இத ஒப்பன் பண்ணு'
என்னை ஒருமாதிரியாகப் பார்த்தவாறே, வேற வழியும் இல்லாமல் அந்த வீடியோ கிளிப்பை திறந்தான். ஆச்சரியத்தில் கூவினான், 'டேய் எப்பிடிறா?' இப்போது சிஷ்யன் என்னைப்பார்த்த பார்வை, விவேகானந்தர் அளவுக்கு இல்லையென்றாலும் என்னையும் ஒரு குருவாக ஏற்றுக்கொள்வான் போலிருந்தது.

"எல்லாம் ஓரு ஞான திருஷ்டிதான்!" வீடியோ நடிகையின் பெயரின் ஆங்கில முதல் மூன்று எழுத்துக்களில் பெயரிடப்பட்டிருந்ததுதான் காரணம் என்று சொல்வது இப்போது அவசியமா என்ன? அதி அவசியமானதொரு தகவலை மட்டும் சொன்னேன், 'இந்த அஞ்சும் ஃபைலு ம் அதான்போல'

மிகுந்த பிரமிப்புடன், 'டேய் அவன் ஒண்டுதாண்டா சொன்னான். நீ வந்து.... பார் ஐஞ்சு! நல்லவேளை நீ மட்டும் வரேல்லையெண்டா..' சிஷ்யன் கொடூரமான வில்லனிடமிருந்து காப்பாற்றப்பட்ட அபலைப் பெண் போலவே பேசினான். நான் எதுவும் பேசவில்லை. அவனைத்தாண்டி அலட்சியமாக வெளியே வெறித்தேன். அதேவேளையில், 'இதிலென்ன இருக்கு? நான் என் கடமையைத்தானே செய்தேன்' தோரணை தெரியுமாறும் பார்த்துக்கொண்டேன்.

வீடு செல்லும் வரையில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அறையில் சிஷ்யன், எதிர்கால சந்ததியினருக்காக அந்த ஆவணத்தை மிகவும் கர்ம சிரத்தையாகத் தனது கணனியில் சேமித்துக் கொண்டிருந்தான். நான் மேசையிலிருந்த விவேகானந்தரின் புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். சிஷ்யன் கவனித்த மாதிரியுமிருந்தது. கவனிக்காத மாதிரியும் இருந்தது. பிறகு அவன் விவேகானந்தர் பற்றி பேசுவதில்லை.

Friday, February 3, 2017

சுதந்திரம்!

'கப்பலேறிப் போயாச்சு' பாடலின் ஆரம்பத்தில் உச்சஸ்தாயியில் ஒலிக்கும் புல்லாங்குழலும் தொடரும் கோரஸ் இசையும் இப்போதும்கூட புதிதாகச் சுதந்திரத்தைப் பெற்றுவிட்ட புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அடிமைத் தழையிலிருந்து விடுதலை பெறுவதை இசையூடாக உணரச் செய்த பாடல். முதன்முதலாக படம் பார்த்தபோது, அந்தப் பாடல் ஒருவித புல்லரிப்பை, சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அப்போது கொடுத்த மனவெழுச்சியை இப்போது கேட்கும்போதும் உணரமுடிகிறது. 

அது ஏனோ தெரியவில்லை சுதந்திரம் என்பதை இந்திய சுதந்திரத்தோடு மட்டுமே பொருந்திப்பார்க்க முடிகிறது. முதன்முதலாக எதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் மனநிலையில், வயதில் 'இந்தியன்' படத்தைப் பார்த்ததால் அப்படியா? இந்தியன் படத்தில் மட்டுமே சுதந்திரம் பற்றிய முழுமையான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதாலும்  இருக்கலாம். அப்படியானால் சுதந்திரம் என்பதையே படம் பார்த்து உணரவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோமா?  சரியாகச் சொல்ல முடியவில்லை.

எப்படியோ இந்திய சுதந்திரத்துக்கும் இலங்கையின் சுதந்திரத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. சுதந்திரப் போராட்டம் என்ற ஒன்று இலங்கையில் நடந்ததாக எமக்கு யாரும் சொன்னதில்லை. இந்தியா இனித் தேவையில்லை என்று வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்தபோது, இனி இலங்கை தேவையில்லை என்பதால் விட்டுச் சென்றுவிட்டார்கள் என்பதாகவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பள்ளி நாட்களில், வரலாற்றுப் பாடத்தில் 'இலங்கையின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள்' என்று ஏராளமானோரின் பெயர்கள் கூறபட்டிருந்தன. பரீட்சையில் புள்ளிகளைப் பெறுவதற்காகத் தேவைப்படும் என்பதைத் தவிர்த்து யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுவும் தவிர வரலாற்றுப் பாடத்தில் யாருக்கும் எந்த நம்பிக்கையும் இருந்ததில்லை. ஏதோ கதை சொல்கிறார்கள் என்ற வகையில் கேட்டுக் கொள்வதில் தடையேதுமிருக்கவில்லை. ஆனால் அதிலிருந்து கேள்விகள் கேட்டது மட்டுமே கடுமையான உபாதையாக இருந்தது.

சுதந்திரதினம் என்பது பள்ளிவிடுமுறை நாள் என்பதைத் தவிர வேறெந்த முக்கியத்துவமும் இல்லாதிருந்தது. கடந்த சில வருடங்களில் கடுப்பேற்றும் நாள் என்பதாகவும் மாறியிருந்தது. தொண்ணூற்று எட்டாம் ஆண்டின் சுதந்திர தினம் என்று நினைவு. வவுனியாவில் இருந்தபோது அப்போது பரீட்சார்த்த ஒலிபரப்பிலிருந்தது 'வானம்பாடி' என்றொரு வானொலிச் சேவை. அதில் சுதந்திரதின விசேட உரை அல்லது வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பலர். அவர்கள் எல்லோரும் இலங்கையின் சுதந்திரத்துக்க்காகப் போராடிய தலைவர்கள், தியாகிகள் பற்றி நினைவுகூர, நன்றி தெரிவிக்கவும் தவறவில்லை. 

மறைந்த அமைச்சர் ஒருவர். அவர் பேச்சைக் கேட்பதே மிகவும் சுவாரசியமானது. என் நண்பர்கள் பலரைப்போலவே எனக்கும் மிகப்பிடித்த பேச்சாளர், தமிழ் ஆளுமை. அதிரடியாகப்பேச்சை ஆரம்பித்தார். இங்கே பலரும் என்னமோ பல தியாகிகள் போராடிச் சுதந்திரத்தைப் பெற்றதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியெலாம் எதுவுமில்லை. இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தபோது துரதிருஷ்டவசமாக இலங்கைக்கும் கொடுத்துவிட்டார்கள் என்றார். அன்றிலிருந்து அவர்மேல் மேலும் மரியாதை அதிகரித்திருந்தது.

லங்கைக்கு துரதிருஷ்டவசமாக சுதந்திரம் கிடைத்தது பற்றி எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் இருக்கவில்லை. யாழ்ப்பணத்தில் 2002 இல் சமாதான உடன்படிக்கை ஏற்படும் வரையில் ஊரடங்கு இரவு எட்டரை மணிக்கு அமல் படுத்தப்படும் காலப்பகுதி. ஆகவே, இரவு எட்டு மணிவரை நீடிக்கும் எங்கள் வீதியோர அரட்டைப் பேச்சுக்களில் சுதந்திரம் குறித்தும் பேசியிருக்கிறோம். 

சுதந்திரம் மட்டும் கிடைக்காமல் இருந்திருந்தால்..? என்பது பற்றிய கனவு அது. 

'மச்சி நாங்களெல்லாம் இங்க்லீஷ் மீடியத்திலேயே படிச்சிருப்போம். வெள்ளைக்காரன் புண்ணியத்தில இங்க்லீஷ் மீடியத்தில படிச்சுட்டு, ஓட்டை உடைசல் இங்க்லீஷ் பேசிக்கொண்டு, கணக்குப் பாடத்தில் கூட  கிராமர் மிஸ்டேக் கண்டுபிடிக்கும் இந்த அப்பன்காரன்களை ஸ்டைலா இங்க்லீஷ் கதைச்சு தெறிச்சோட வைக்கலாம்' 

'ஓமடா பேப்பர்ல எழுதினத அப்பிடியே வாசிக்கிறமாதிரி ஒரு இங்க்லீஷ். இதில படிச்சவங்களாம் எண்டொரு பெருமை'. 

'எங்கள் எல்லாரிட்டையும் சைக்கிளுக்குப் பதிலா ஆளுக்கொரு கார் இருக்கும். இந்த நேரத்தில இப்பிடியெல்லாம் வெட்டியா நிக்காம டிஸ்கோ, நைட்கிளப் என்று பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடலாம்' 

இப்படியாகப் பல 'காத்திரமான' கருத்துக்கள் முன்வைக்கப்படும்.

அதைவிட மிக முக்கியமான ஒரு விஷயமிருந்தது. எங்களுக்கெல்லாம் குறைந்தபட்சம் ஆளுக்கொரு கேர்ள் ஃபிரண்ட் இருப்பார்கள் என்பதுதான் அது.

எங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக அதையே கருதினோம். எங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட் கிடைக்காமல் போனதற்கான ஒரே காரணம் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்ததுதான் என்று தீவிரமாக நம்பிக் கொண்டிருந்த காலம் அது. இதே நம்பிக்கையுடன் பலரும் இருந்ததாகத் தெரிகிறது.

டந்த முறை யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது சந்தித்த நண்பன் ராகுல், அடிக்கடி செல்பேசியில், 'இப்ப வெளிக்கிட்டு வந்துட்டிருக்கேன்', 'இப்ப அங்கதான் போயிட்டிருக்கேன்', 'அரைமணித்தியாலத்தில வீட்ட நிப்பன்'
- மனைவியிடம் ரன்னிங் கமெண்டரி கொடுத்துக் கொண்டிருந்தான்.

கட் செய்ததும் கொஞ்சம் ஆசுவாசமாக தலையை அசைத்தவன் (அது என் பிரமையாக இருக்கலாம்)

"என்ன மச்சான் பாக்கிற?" என்றான்.
"இல்ல மச்சி அந்தக்காலத்தில இரவு பத்துமணி வரைக்கும் ரோட்ல சுத்திட்டிருந்த பயபுள்ள... அப்பல்லாம் வீட்டில ஒருவார்த்த சொல்லியிருப்பியா? இப்ப ஆறுமணிக்கே.."
"விடுறா விடுறா"
"என்ன ஆட்டமடா போட்டீங்க...இந்தச் சந்தீல ஒருமணித்தியாலம் நிப்பாங்களாம்.. அப்பிடியே வீட்ட போறமாதிரியே வெளிக்கிட்டு அந்தச் சந்தீல போய் ரெண்டு மணித்தியாலம் நிப்பாங்களாம்.. வெளீல கொட்டிட்டு சாமத்தில வீட்ட போய் பாவம் மினக்கெட்டு அம்மா சமைச்சு வச்சத சாப்பிடாமலே படுப்பாங்களாம் என்னா அராஜகம்.."
"கதைப்பீங்கடா கதைங்க"  
"இல்ல மச்சி அப்பிடிப்பாத்த உன்ன, இப்ப இப்பிடி....மனசுக்கு ரொம்பக்க்க் கஷ்டமாயிருக்குடா"
"சரி சரி விடு காணும்"
"மச்சி எப்பவாவது சுதந்திரத்த இழந்துட்டம்னு ஃபீல் பண்ணியிருக்கியா?"
"அப்பிடியெல்லாம் இல்லடா... முதல்ல வெளிலருந்து யோசிச்சா அப்பிடித்தானிருக்கும் ஆனா அப்பிடியில அது ஒரு சுதந்திரம் இதுவுமொரு சுதந்திரம்தான்... நல்லாருக்கு"
"அத ஏண்டா அழுறமாதிரியே சொல்றே"

புதிதாகத் திருமணமான நண்பன் சில நாட்களோ, மாதங்களோ எதையோ பறிகொடுத்த மாதிரி கண்களுடன், சோகமாக இருப்பதுபோலத் தோன்றுவதெல்லாம் - உண்மையில் அவன் அப்படி இருக்கிறானா, இல்லை நாங்கள் அப்படி ஒரு கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்க்கிறோமா என்பது சரியாகத் தெரிவதில்லை. திருமணமானால் சுதந்திரம் அவ்வளவுதான் என்றொரு நம்பிக்கை நம்மிடையே எப்போதுமுண்டு. நினைத்த நேரத்தில் ஊர்சுற்ற முடியாது என்பதுதான் பிரதான கவலை. நண்பர்களிடமிருந்து தவிர்க்க முடியாமல் விலக நேரிடும். ஏதோ ஒரு மாட்டிக்கொண்ட உணர்வு வந்துவிடும்.

நண்பன் ஜோதி கொழும்பு வரும்போதெல்லாம் நாங்கள் தங்கியிருந்த பெரிய வீட்டில் வந்து தங்குவான். வேலைக்குப் போய்விட்டு வந்து இரவு கட்டாக்காலிகள் போல கேட்பாரின்றிச் சுற்றிக் கொண்டிருந்த எங்களை ஏதோ விசித்திர ஜந்துகளைப் பார்ப்பது போலவே பார்த்துக் கொண்டிருப்பான்.

கொழும்பில் பாதுகாப்புக் கெடுபிடிகள் நிலவிய காலகட்டம். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். பார்ட்டி, குடி, வீதியில் அரட்டை என ஒன்பது, பத்து, பன்னிரண்டு மணிக்கெல்லாம் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நாள் தவறாமல் 'நைட் கிளப்' சென்று அதிகாலை மூன்று மணிக்கு வீடு திரும்புவான் இன்னொருத்தன். யாருக்காவது பிறந்தநாள் வந்துவிட்டால் வீடே அமர்க்களப்படும். ஷைல் தனக்குத் தெரிந்த சாப்பாட்டுக்கடை நண்பனிடம் சொல்லி பெருமெடுப்பில் கோழிகள் பொரித்து, முட்டைகள் அவித்து (அது சைவக்கடை என்பது முக்கியமானது) இன்னும் என்னென்ன முடியுமோ அதெல்லாம் செய்வித்து, இரவு ஏழுமணிக்கு த்ரீவீலரில் கொண்டுவந்து இறக்கும்போது, சயந்தன் இன்னொரு த்ரீவீலரில் போத்தல்களைக் கொண்டுவந்திருப்பான். கௌரி, வெள்ளை, சங்கர், எனக்கெல்லாம் ஆளாளுக்கு ஒருவேலை பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கும். எல்லாம் கச்சிதமாக ஆரம்பித்தால் விடிகாலைவரை திருவிழாதான்! யாரும் கேள்வி கேட்க இல்லாத கொண்டாட்டம் அது!

இதெல்லாம் அவனுக்குப் புதிதாக, பிரமிப்பாக இருந்திருக்க வேண்டும். பாவம், அவன் பள்ளியில் படித்து, உயர்கல்வி முடித்து வேலையில் சேர்ந்து முதல் மாதச் சம்பளம் வாங்கும்போதே வீட்டில் அவனுக்கு மனைவி! நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருந்தது. இதுகுறித்து ஒருநாள் மிகவும் கவலைப்பட்டு, தீவிர சோகத்தில் ஆழ்ந்து அதை மறக்க ஒரு சோகப் பார்ட்டி வேறு!

"டேய் முப்பது வயதுக்கு மேலதான் கட்டவேணும் என்னடா?" 
ஒருமுறை மிகுந்த ஏக்கத்தோடு கேட்டான். என்ன சொல்வதென்று தெரியவில்லை.
வாழ்க்கையில் சுதந்திரத்தையே அனுபவிக்காத ஒரு அபலை(?) ஆணின் அத்தனை சோகமும் அவன் கண்களில் தெரிந்தது.

ண்மையில் இந்த சுதந்திரம் என்பது கூட ஒரு கற்பிதமாக இருக்கலாம். அல்லது அதுவும் ஒரு நம்பிக்கைதான் நான் சுதந்திரமாக இருக்கிறேன் என உணர்வதுதான் சுதந்திரம். பத்துவருடம் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்கிற நிர்ப்பந்தம் இருக்கும்போது சுதந்திரம் பறிக்கப்பட்டதாய் உணர்வோம். ஆனால் பத்து வருடமாக ஒரேநாட்டிலேயே எங்கும் போகாமல் இருப்பதில் எந்தப் பிரச்சினையுமில்லை. நாம் எப்போதும் எந்தநாட்டுக்கும், ஏன் எந்தக் கிரகத்துக்கும் போகலாம், வரலாம் என்கிற மனநிலைதான் சுதந்திரமாய் இருக்கிறது.

கடுமையான கெடுபிடிகள் இருந்த யுத்த காலம். அலுவலகத்தில் உடன் வேலைபார்த்த இரண்டு நண்பர்களைப் போலீஸ் தவறான தகவலின் அடிப்படையில் கைது செய்துவிட்டது. உடனடியாகத் தகவல் தெரிந்து அலுவலகமே பரபரப்பானது. உயர்மட்டத்தில் செல்வாக்குள்ள நிர்வாகி இரண்டே நாட்களில் நேரில் சென்று அவர்களை அதிரடியாக விடுவித்து அலுவலகம் அழைத்து வந்தார். நடந்ததை அவர்களால் நம்பவே முடியவில்லை.

கைது செய்யப்பட்ட விதத்தைப் பார்த்தபோது மீண்டும் வெளியில் வருவோம் என்றே நம்பவில்லையாம். இரவு முழுவதும் தூங்காமல் ஒருவரியோருவர் பார்த்து அழுதுகொண்டிருந்திருக்கிறார்கள். அன்று அவர்கள் உணர்ந்ததுதான் உண்மையான் சுதந்திரம் என்று தோன்றுகிறது. அப்படியொரு மலர்ச்சியை அவர்கள் முகத்தில் என்றும் பார்த்ததில்லை. அதே காலப்பகுதியில் ஒருவித பயத்துடன் கொழும்பிலிருந்த நண்பர்கள் சிலர் இந்தியா சென்றிருந்தார்கள். அவர்கள் பின்பு இங்கு வந்தபின் சொல்வது தாம் தமிழனாக சுதந்திரமாக, எந்தவித பயமுமின்றி உணர்ந்தது சென்னையில்தான் என்பார்கள்.

ங்களுக்கே எந்த அளவிற்குச் சுதந்திரம் இருக்கிறது என்கிற கேள்வி ஏதுமில்லாமலே, யாருக்காவது சுதந்திரம் வழங்கிவிடும் ஆர்வம் மட்டும் எல்லோருக்குமிருக்கிறது. அது ஓர் போதை. நாங்களும் வழங்கியிருந்தோம். எங்களால் வெள்ளைக்காரன் மாதிரி நாட்டுக்கா வழங்கமுடியும். ஒரு வீட்டுக்குச் சுதந்திரம் வழங்கியிருந்தோம்.

நண்பன் ஒருவன் யாழ்ப்பாணத்தில் வந்து தங்கிப் படித்துகொண்டிருந்த  வீடு அது. கடும் கண்டிப்பான உரிமையாளர் மனைவியுடன் கொழும்புசெல்ல, வீடு ஒருவாரம் எங்கள் கட்டுப்பாட்டில்! முதல்நாள் மாலையே ஒரு குறூப் டீவி, விசிடி பிளேயர் சகிதம் தரையிறங்கியது. இன்னொரு குறூப் அட்டைப் பெட்டிகள், நீலாம்பரி ஹோட்டல் அசைவ உணவு வகைகளுடன் முன்னிரவு நேரத்தில் களத்தில் இறங்கியது.

அயலவர்கள் இரண்டே நாட்களில் மிக்க மகிழ்ச்சி தெரிவித்தார்கள். "தம்பி இந்த வீடு இப்பதான் இவ்வளவு கலகலப்பா இருக்கு. எனக்குத் தெரிஞ்ச நாள் துவக்கம் ஒரு விறுத்தமில்லாமத்தான் இருந்திருக்கு" - உண்மையாகவே பாராட்டினார் பக்கத்து வீட்டு அங்கிள்.
பின்னர் தெரிந்தது  - நீண்டநாள் பகையாம்! 

அங்கேயொரு நாய் இருந்தது. அதை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை, பாவம். நண்பன் கேற்றை திறந்து வைத்தான். நாய் பொருட்படுத்தவில்லை. அதை வெளியே அழைத்துச் சென்றான். அடக்குமுறையிலேயே வளர்ந்ததில் வெளியே வந்தால் ஓடித் தப்பலாம் என்கிற பொது அறிவெல்லாம் அதற்கு இருக்கவில்லை. 'உச்சு வா' என்று கூட்டிக் கொண்டே நண்பன் ஓட, அதுவும் சேர்ந்து ஓடியது. அப்படியே ஓடிப்போனது, நாய்க்கும் சுதந்திரம்! ஏதோ எங்களால் முடிந்தது.

நம் மக்கள் எப்போதெல்லாம் சுதந்திரம் கிடைத்ததைப் போல மகிழ்ந்திருக்கிறார்கள் என்று யோசித்தால்?
எனக்குத் தெரிந்து 87 ஆம் ஆண்டில் ஒருமுறை. அப்படி ஒரு மகிழ்ச்சி எல்லோருக்கும். இந்திய அமைதிப்படை வந்தது அப்போது. பின்பு 94 ஆம் ஆண்டில். சந்திரிகா இலங்கையின் ஜனாதிபதியானார். துரதிருஷ்டவசமாக இந்த சுதந்திர மனநிலை எல்லாம் சில நாட்களுக்குத்தான் நீடித்தது. அதன்பின் தெளிந்துவிடார்கள். மற்றபடி, சுதந்திரம் என்கிற உணர்வை முழுமையாய் அனுபவித்தில்லை. அதற்கு அளவுமுறையும் கிடையாது. சமயங்களில் அடக்குமுறையின்போதுதான் நாம் அதுவரை அனுபவித்த சுதந்திரத்தை உணர்ந்துகொள்கிறோம். 

கடுமையாக நோயுற்று படுக்கையிலிருந்து எழுந்து வெளியே உலாவச் செல்லும் அந்த முதல் மாலைப்பொழுதில் முடிகலைத்து வீசுவதுதான் மீண்டெழுந்த ஒருவனின் சுதந்திரக் காற்று!  நான் சமீபத்தில் உணர்ந்ததும் அதுதான். சமயங்களில் மனதிற்கு பிடிக்காமல் போய்விட்ட நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு வெளியே வரும்போது இருப்பதும்கூட ஒரு சுதந்திர உணர்வே! இன்னும்கூட சுதந்திரம் எப்படியிருக்கும்? என்றுகேட்டால் மறுபடியும் 'கப்பலேறிப் போயாச்சு' பாடலுக்குத்தான் போகவேண்டும்.

Thursday, February 2, 2017

அவர்களுக்குத் தெரியுமா?

"எப்பிடி போகுது...என்ன உங்கள் ஆட்சிதானே?" 

பெரேரா அங்கிள் நேற்றுத் தொலைபேசினார். மகிந்த தோற்றதால் இப்போது தமிழர்களின் ஆட்சியாம். அப்படித்தான் பல சிங்களவர்கள் நினைக்கிறார்கள். பெரேரா தீவிர மகிந்தாபிமானி. பழைய அலுவலகத்தில் அடிக்கடி அரசியல் பேசி என்னைக் கடுப்பேற்றிக் கொண்டிருப்பார். பதிலுக்கு நானும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்துகொண்டிருப்பேன். மகிந்த அரசாங்கம் செய்வதெல்லாம் நாட்டு நன்மைக்கே என்கிற கொள்கையுடையவர். அவர் பௌத்தமதத்தைப் பின்பற்றும் தீவிர அடிப்படைவாதி. ஆனால் நல்லவர்.  

"ச்சே அந்த வன்னிச் சனங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நல்ல சாப்பாடு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு, என்ன கொடுமையெல்லாம் அனுபவித்திருப்பார்கள்?" என பெரேரா அவ்வப்போது கவலைப்படுவார். அவரது நினைப்பெல்லாம் புலிகள் தமிழ் மக்களைக் காலங்காலமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர், அரசாங்கம் அவர்களை மீட்டு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது என்பதுதான். இங்கே பலரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நவநீதம்பிள்ளை இங்கே வந்திருந்த சமயம், ஒருநாள் பெரேரா பரபரப்பாக,
"அவர் முள்ளி வாய்க்காலில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முயன்றிருக்கிறார். அது எப்படி நியாயமாகும்?" என்றார்.

"அவர் புலிகளுக்குச் சார்பானவர் இல்லை. இறுதிப்போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள் அவர்களுக்குத்தான் அந்த அஞ்சலி"

"அவ்வளவு பொதுமக்கள் இறந்தி ருக்கிறார்களா? இந்த விஷயம் எனக்குத் தெரியாது " என்றார் அதிர்ச்சி படிந்த முகத்துடன். 

பாவம் பெரேரா படிப்பது ஒரு இனவாதப் பத்திரிக்கை. பார்ப்பது அரச தொலைக்காட்சி, நம்புவது முற்றுமுழுதாக அரசாங்கத்தை. எப்படி உண்மை தெரியும்? அவரைப் பொறுத்தவரை அரசாங்கம் அறிவித்தபடி, இறுதிப்போரில் இறந்தவர்கள் அனைவருமே புலிகள்தான். இன்றுவரை சிங்களவர்கள் பலரது நம்பிக்கையும் அதுதான்!

எங்கள் பிரச்சினை அவர்களுக்குத் தெரியுமா? என்பதுதான் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்வியாக இருக்கிறது. எப்போதுமே அது அப்படித்தான். அவர்கள் எந்தளவிற்குப் தமிழர் பிரச்சினையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்?

றுதிப்போர் ஆரம்பிக்கும் வரையில் இங்கேயுள்ள படித்த சிங்களவர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலரும் யுத்தம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை - நான் சந்தித்த அனுபவங்களின்படி. புலிகள் குறித்து ஒரு பயம், பிரமிப்பு இருந்தது. விழிகள் விரியப் பேசிக் கொள்வார்கள். சமாதான காலத்தில் யாழ் சென்று வந்தவர்கள் சிலர் வன்னியில் புலிகளைச் சந்தித்தது பற்றியும் அவர்கள் தமக்கு உதவியது பற்றியும் கூறுவார்கள். சிலர் அவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு, வீதி ஒழுங்கமைப்பு விதிகள் பற்றிச் சிலாகித்துப் பேசுவார்கள். யுத்தம் என்பது செய்திகளில் கேட்பது மட்டுமே.

அநேகமாக நான் வேலை பார்த்த அலுவலகங்களில் நான் மட்டுமே தமிழனாக இருப்பேன். மதிய உணவின்போது நான் எல்லோருடனும் சேர்ந்து கூட்டமாகச் சாப்பிடுவதை எப்போதும் விரும்புவதில்லை. அது ஏனோ ஒரு அசௌகரியம். ஒருவேளை ஆரம்பகால அனுபவமாகவும் இருக்குமோ என யோசித்ததுண்டு. கொழும்பு வந்த புதிதில் சாமாதான காலம் முடியப் போவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கின. அப்படியே நடந்து மாவிலாறு சம்பவமும் நடைபெற்றிருந்தது.

சாப்பாட்டு மேசை உரையாடல்களில் முக்கிய பேச்சே யுத்தமும் புலிகளும்தான். ஆரம்பத்தில் யுத்தம் பற்றிய எனது பார்வை, தமிழர்களின் நிலை பற்றி என்னிடம் ஆர்வமாகப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் என்ன நினைத்தார்களோ, புலிகள் தரப்பில் 'பேசவல்ல அதிகாரியாக' என்னைப் பாவித்துக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். நானும் முடிந்தவரை பதிலளிப்பேன். சிலநாட்களில் அநேகமான என் பதில்கள், 'இந்தக் கேள்வி எனக்குப் பிடிச்சிருக்கு', 'இந்தக் கேள்வி சுத்தமாகப் பிடிக்கவில்லை'.

எல்லோரும் நல்ல நண்பர்களாக, உதவி செய்பவர்களாக இருந்தாலும், ஒரிருவரிடம் மட்டும் 'இனத்துவேஷம்' அவ்வப்போது பேச்சில் கிண்டலாக வெளிப்படும். ஒருமுறை காலி சென்றிருந்தபோது, கடலில் தூரத்தில் தெரிந்த படகொன்றைக்காட்டி ஒருவர் கேட்டார், "உமா அது எல்டிடி படகுதானா என்று பார்த்துச் சொல்!"

பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் சந்தித்த யுத்தத்தை கொழும்பிலும், வேறு இடங்களிலும் பேரூந்துக் குண்டுவெடிப்புகளூடாகத்தான் நேரடியாகத் தெரிந்துகொண்டார்கள். அது நிச்சயமாக எம்மைப் புரிந்துகொள்ளும் அனுபவமாக இருக்கவில்லை.

பேரூந்துக் குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஒரு காலைப்பொழுதில், ஹர்ஷா சோகமும் கோபமுமாக என்னிடம் வந்தான். 'நீங்கள் எங்கள் ஜனாதிபதியைக் கொல்லுங்கள், அமைச்சர்களைக் கொல்லுங்கள்.. ஏன் அநியாயமாகக் குழந்தைகளை எல்லாம் கொன்றிருக்கிறீர்கள்?' என்றான். உடனே புள்ளி விபரங்களை எடுத்துக்கூறி, நீங்கள் கொல்கிறீர்கள், அதனால் நாங்களும் என்று சொல்வதைப் போன்ற அபத்தம் வேறேதும் இருக்க முடியாது என்பதால் அன்றைய பொழுது மௌனமாகவே கடந்துபோனது. அன்று யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.

எங்கள் பிரச்சினை அவர்களுக்குத் தெரியுமா? எந்த அளவிற்கு அவர்கள் நம் பிரச்சினையைப் புரிந்துகொண்டுள்ளார்கள்? அதைத் தெரிவிப்பதற்கான வழிவகைகள் ஏதேனும் தமிழர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டதா என்பது தெரியவில்லை, ஆனால் சிங்களவர்கள் சிலர் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

திருகோணமலையில் வேலை செய்த அலுவலகத்தில் ஒரு சிங்கள அங்கிள். நல்ல மனிதர்தான். ஆனால் பாருங்கள் ஓர் புத்தகம் வைத்திருந்து அவரைச் சந்திக்க வரும் சிங்கள நண்பர்களுக்கு அன்பளிப்பது வழக்கம். எழுதியது அவரது நண்பராம். இனப் பிரச்சினையைப் பற்றிப் புரிந்துகொள்ள கட்டாயம் படிக்கவேண்டும், வரலாறு தெரியவேண்டும் என்பதற்காக அதனை வழங்குவதாகக் கூறினார். அந்தப்புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவத்தினரைப் புலிகள் கொன்றதிலிருந்துதான் இனப்பிரச்சினை ஆரம்பிக்கிறது. அதுதான் தோற்றுவாயாம். இப்படி ஆளாளுக்கு தங்கள் விருப்பப்படி வரலாற்றை எழுதிப் பரப்பிக் கொண்டுள்ளார்கள். அலுவலகங்களில் பேசிப்பழகிய வரையில் எங்காவது ஓரிருவர் தவிர, அவர்கள் யாருக்கும் எந்தப் புரிதலும் இல்லை என்பதுதான் உண்மை. அல்லது புரிந்துகொள்ள விருப்பமில்லை. படித்தவர்கள், இணையத்தை நாள்தோறும் பயன்படுத்துபவர்கள் நிலைமையே இப்படி.

சிங்களவர்களில் பலருக்கு இன்னும் தமிழர்கள் யார் என்பது தெரியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவில் இருந்தோ, ஆபிரிக்காவில் இருந்தோ வந்தவர்களாக இருக்கலாம். அல்லது செவ்வாய்க் கிரகத்திலிருந்துகூட வந்திருக்கலாம். பலர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என நம்புகிறாரகள். ஆனால் தமிழர்கள் வந்தேறிகள் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அப்படித்தான் அரசியல்வாதிகளால் அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவர்களின் வரலாற்றுப் பாடப்புத்தகம்கூட அப்படிச் சொல்லிக் கொடுக்கலாம். தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வக்குடிகள் அல்ல. அவர்கள் இங்கே வாழலாம் ஆனால் நாட்டைப் பிரிக்க, அதிகாரத்தில் உரிமை கோர எல்லாம் முடியாது என்பதுதான் இனவாத அரசியல்வாதிகளின் பேச்சாக இருந்துவருகிறது. 

எதற்காக இந்த யுத்தமெல்லாம்? அடிப்படையில் என்னதான் பிரச்சினை? என்கிற விவரமெல்லாம் சாதாரண ஒரு சிங்களப் பிரஜைக்குத் தெரியாது. அல்லது தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அதனைச் சிங்கள அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ தெரியப்படுத்த விரும்பியதில்லை. நன்கு படித்த சிங்களவர்களுக்கே இனப் பிரச்சினை பற்றிய தெளிவில்லை எனும்போது சாதாரண ஒரு சிங்களப் பிரஜை, எங்கோ கிராமத்தில்வாழும் பாமர மக்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் பார்வையில் இனப்பிரச்சினை என்பது, வந்தேறிகளான தமிழர்கள் புலிகள் மூலமாக நாட்டைத் துண்டாட முயற்சித்தார்கள். அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து, படையினரின் உயிர்த்தியாகத்தின்மூலம் தீவிரவாதிகளை ஒழித்து நாட்டைக் காப்பாற்றிவிட்டார்கள். புலிகள் ஒரு மோசமான தீவிரவாதிகள். அவர்கள் நம் நாட்டின் ஒருபகுதியைப் பிடித்து வைத்திருந்தார்கள். அரசாங்கம் அவர்களிடமிருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்து அமைதியான வாழ்வுக்கு வழி செய்திருக்கிறது என்பதுதான் பலரது புரிதல்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் இப்பொது ஒரு அமைதியான, சுபீட்சமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பெரும்பான்மையானோரின் நம்பிக்கை.

"இனி நீங்க யாழ்ப்பாணம் போகலாம் என்ன?"

சந்தோஷமாக சிரித்துக்கொண்டே உடன் வேலை பார்க்கும் சிங்கள நண்பர்களால் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம். 'ஒக்கம இவறாய்' (எல்லாம் முடிந்தது) எனக் குறிப்பிடப்பட்ட இறுதி யுத்ததின்பின்னர் அவர்களின் விசாரிப்பு அது. அவர்களைப் பொருத்தவரை யாழிலும் யுத்தம் நடைபெற்றது. அதனால்தான் நாங்கள் போகமுடியாமல் கொழும்பில் இருக்கிறோம் என்றே நம்பிக்கொண்டிருந்தார்கள். பலருக்கு யாழ்ப்பாணம் வன்னியில்தான் இருக்கிறது அல்லது வன்னி யாழில் இருக்கிறது என்கிற நம்பிக்கை. யுத்த காலத்தில் இலங்கை இணையத்தளங்களில் இராணுவம் அப்போது முன்னேறிய நிலைகளை அப்டேட் செய்துகொண்டிருந்தார்கள். எனது அலுவலகத்தில் பலர் அப்போதுதான் இலங்கை வரைபடத்தையே முதன்முதல் பார்ப்பதுபோல பார்த்தார்கள். ஒரு நண்பருக்கு மதவாச்சி வவுனியாவுக்குக் கீழே இருந்தது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதுவரை அவர் மேலே இருந்ததாக நம்பிக் கொண்டிருந்தாராம்.

யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதை கிடையாது என்பதே அவர்களுக்குப் பேரதிர்ச்சி. கப்பலிலும், விமானத்திலும்தான் செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது, தேவையுமில்லாதது. இவர்கள் எல்லோரும் நாளாந்தம் இணையத்தைப் பயன்படுத்தும் வசதியுள்ளவர்கள். அநேகமானோர் பொறியியல் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“இனி உங்களுக்கு எல் டி டி பயம் இல்லைத்தானே நீங்க யாழ்ப்பாணம் போகலாம் என்ன?” என ஒரு படி மேலே சென்று அதி விவரமாகப் பேசுபவர்களிடம், 'ஙே' என்றொரு பார்வை பார்ப்பதே மிகச்சிறந்த பதிலாக இருந்திருக்கிறது.

பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறோமோ இல்லையோ ஆனால் தீர்வு சொல்வதில் எல்லோருக்குமே ஒருவித ஆர்வமிருக்கிறது.

றுதிப்போர் உச்சமடைந்திருந்த காலம். புதிய வீட்டுக்கு மாறிக் கொண்டிருந்தோம். பொருட்களை ஏற்றிக்கொண்டு Canter Lorry யின் முன்புறம் நானும் நண்பனும் டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தோம். டிரைவர் சிங்களவர்தான். வாட்டசாட்டமாக இருந்தார். பேச்சுக் கொடுத்தவர் நாங்கள் யாழ்ப்பாணம் என்று தெரிந்ததும். நானும் அங்கே இருந்திருக்கிறேன் என்றார். மாதகல், காரைநகர், ஊர்காவற்துறை, காங்கேசன்துறை எல்லா இடமும் பரிச்சயம் அருமையான இடங்கள், எதுக்கு இந்தச்சண்டை என்றார். 

அவர் கடற்படையில் இணைந்திருந்தார் எனவும், பின்னர் வேலையை விட்டுவிட்டு மத்திய கிழக்கு சென்று சிலவருடங்கள் வேலை பார்த்திருக்கிறார். பணம் சேர்ந்ததும் வாகனத்தை வாங்கி இங்கேயே இருப்பதாகவும் சொன்னார். 

"ஒருவேளை ஓடிவந்திருப்பான்" என்றான் நண்பன் மெதுவாக. 
"ஓடி வரல தம்பி ரிட்டையர் பண்ணிட்டு வந்தது "
, இப்போது கொச்சையான தமிழில் பேசினார். அசடு வழிந்துவிட்டு நண்பன் தொடர்ந்தும் பேசினான்.

யுத்தம் அவருக்குப் பிடிக்கவில்லை. எதுக்கு இந்தச்சண்டை என அடிக்கடி சலித்துக் கொண்டார். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஓர் நல்லிணக்கத் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தார். நாங்கள் வெலவெலத்துப் போனோம். இதுவரை யாருமே அப்படியொரு யோசனை சொன்னதாகத் தெரியவில்லை. அவர் சர்வசாதரணமாகக் கூறிவிட்டார். 

"இப்ப பாருங்க மட்டக்களப்ப கருணா அம்மானிட்ட குடுத்தாச்சு அதேமாதிரி யாழ்ப்பாணத்த பிரபாகரனிட்ட குடுத்தா எல்லபிரச்சினையும் ஓவர்"

'யாழ்ப்பாணத்துக்கு ரயில் விட்டாச்சு', 'நல்ல ரோட் போட்டிருக்கு இதெல்லாம் இவ்வளவு நாளா இல்லாம சனம் எவ்வளவு கஷ்டப்பட்டிச்சு?', 'முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததால்தானே இதெல்லாம் சாத்தியமானது?' என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும் மகிழ்ச்சி தெரிவிக்கும் பலர் இருக்கிறார்கள். 

இதெல்லாம் முப்பது வருஷத்துக்கு முதலே இருந்ததுதான் என்பதெல்லாம் பெரியவர்கள் சிலருக்கும் மட்டுமே தெரியும். இளைஞர்கள்? உண்மையில் நாங்கள் யுத்தம் ஆரம்பிக்கும்போது இருந்ததைவிட  இன்னும் பின்னோக்கி வந்துவிட்டோம். இவ்வளவுகால இழப்புகளும், வலியையும் கடந்து இப்போது யோசித்தால் முதலில் இருந்த நிலையை அடைவதேகூட சாத்தியமில்லையோ என்கிற அவநம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது.

போரினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகள் மக்களிடம் திரும்பக் கையளிக்கப்பட்டதா? உடைமைகளை இழந்தவர்களுக்கு சரியானபடி ஈழப்பீடுகள் வழங்கப்பட்டனவா? பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள், தொழில் முயற்சிகள் பற்றியதெல்லாம் சம்பந்தப்படவர்களின் தனிப்பட்ட கவலைகள் என்பதில் எல்லோருமே தெளிவாக இருக்கிறார்கள். தொண்ணூறாம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு இன்னும் விடுவிக்கப்படவில்லை. எல்லாமே பயிர்ச்செய்கை நிலங்கள். அதே முல்லைத்தீவுப் பிரதேசத்திலும். பாதுகாப்புக் காரணங்கள்காட்டி உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவம் கையகப்படுத்தியதை முற்றாக விடுவிப்பார்கள் என்கிற நம்பிக்கையே பலரிடம் இல்லை. 

உண்மையில் 96 இல் யாழ்ப்பாணத்தில் இராணுவம் கைப்பற்றியபோதே வலிகாமம் வடக்கு பிரேதேசத்தை மக்களிடம் கையளித்திருக்க முடியும். அண்மையில் வலிகாமம் பகுதியில் ஒரு குறித்தபகுதி காணிகள் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக, அல்லது பார்வையிட அனுப்பதிப்பதாகச் செய்திகள் வெளியாகின. அதுவே சிங்களப் பெரும்பான்மையினரால் என்னவோ தமிழர்களுக்குப் பெரியதொரு தீர்வுத்திட்டத்தைக் கொடுப்பதுபோலவே ஒரு பரபரப்புச் செய்தியாகப் பேசப்பட்டிருக்கும். ஊடகங்கள் வாயிலாகச் சிங்களமக்கள் அப்படித்தான் உணரக்கூடும். மக்களின் சொந்தக் காணிகளைத் திருப்பிக் கொடுப்பதே என்னமோ அரசாங்கம் பெரியதொரு விட்டுக் கொடுப்பைச் செய்வதுபோல, என்னமோ தமிழீழத்தைப் பெறுவதைப்போல சிக்கலான விடயமாகிவிட்டது. இதற்காகத்தான் தமிழர்கள் போராடினார்கள் என்றுகூட ஒரு பெருங்கூட்டம் நம்பலாம்.

சமீபத்தில் ஒரு சர்ச்சை. இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாடுவது பற்றியது. பாடலாம் அப்படித்தான் இருந்தது என்பது பலர் கருத்து. இல்லை தமிழில் பாடக்கூடாது என ஏதோ ஓர் அமைப்பு சர்ச்சையைக் கிளப்பியது. 

இன்னும் சொந்தமண்ணுக்குத் திரும்ப அனுமதிக்கப்படாமல் இருக்கும் ஓர் வன்னி விவசாயக் குடிமகனோ, யுத்தத்தில் அவயத்தை இழந்து வாழ வழியின்றிக் கஷ்டப்படும் ஓர் இளைஞனோ தேசிய கீதத்தைத் தமிழில் பாடியேயாக வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருப்பார்கள் என்றோ, தமிழில் பாடியே தீரவேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் என்றோ நான் நம்பவில்லை.

ஆனால் இதையெல்லாம் பார்த்து, தமிழர்கள் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்குத்தான் சண்டைபிடித்தார்கள் என நம்பும் ஒரு கூட்டம் தென்னிலங்கையில் இருக்கும் என நம்பலாம்.

4tamilmediaவில் 2015ல் வெளியானது. 

Monday, January 30, 2017

Living Together - காதல் தாண்டிய நம்பிக்கை!


த்து ஆண்டுகளுக்குமுன், கொழும்பு வந்த புதிது. வெள்ளவத்தையில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சற்றுத்தள்ளி எதிரிலிருந்த வீட்டில் அறுபது வயதைக் கடந்த தம்பதிகள் இருவர். ஆங்கிலம் பேசும் சிங்களவர்கள். அநேகமான காலைப்பொழுகளில் அலுவலகம் புறப்படும்போது அந்த வீட்டுப் பெண்மணி கடற்கரைக்கு நாயை அழைத்துக்கொண்டு செல்ல, கையசைத்து விடைகொடுத்துவிட்டுப் பூக்கன்றுகளுக்கு நீரூற்றிக் கொண்டிருப்பார் அந்த அங்கிள்.

ஒருநாள் நண்பன் சொன்னான், 'டேய் இதுகள் ரெண்டும் கல்யாணம் கட்டேல்ல லிவிங் டுகெதரில இருக்குதுகள்' என்றான். சொல்லும்போதே அவன் தொனியில் ஒரு ஒவ்வாமை கலந்திருந்தது. லிவிங் டுகெதர் என்பதை ஒரு வித கெட்ட வார்த்தைபோல ஆக்கிவிட்டார்களோ என்று தோன்றியது. ஆனால் என்னை ஆச்சரியப்படுத்தியது அந்தத் தம்பதியரின் வயது. அதுவரை நாங்கள் பேசிக் கொண்டிருந்த லிவிங் டுகெதர் இளமைப் பருவத்தை மட்டுமே கருத்திற்கொண்டிருந்தது. முதுமைப் பிராயம் பற்றிச் சிந்தித்ததில்லை.


பள்ளி இறுதிநாட்களில், வீதியோர அரட்டைகளில் நண்பர்கள் அவ்வப்போது லிவிங் டுகெதர் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். அதுதான் சிறந்த வாழ்க்கைமுறை என்பதில் அப்போதெல்லாம் எங்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. அதற்கான அப்போதைய பிரதான் காரணம் திருமணம் நமக்கு ஒத்துவராத பெண்ணிடம் மாட்டிக்கொண்டால் என்னாவது? காலம் முழுக்கக் கண்ணீரோடு(?!) வாழ்ந்து தொலைக்க வேண்டுமே என்கிற பயம்தான். கூடவே, நம் சுதந்திரம் பறிபோய்விடும். ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டுவிடுவோம். மற்றையது பொறுப்பெடுத்துக் கொள்ளுதல் பற்றிய பிரச்சினை. அதிலும் நாம் - அதாவது ஆண்கள் புதியதொரு பந்தத்துக்குள் பிணைத்துக் கொள்வதற்கு ஒருவித பயமும் தயக்கமும் எப்போதும் இருக்கிறது.

பெரும்பாலான ஆண்கள், பெண்களுடன் ஒப்பிடுகையில் மனதைரியம் குறைந்தவர்களாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. பொதுவான நம் தமிழ்ச்சமூகத்தில் விடலைப் பையன்களாக இருக்கும் காலத்திலிருந்து திருமணம் செய்துகொள்ளும் காலம்வரை எதையும் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத, பொறுப்புகள் ஏதுமற்ற  விளையாட்டுத்தனமான விடலைப் பையன் மனநிலையோடே இருப்பதில் யாருக்கும் எந்தப் புகார்களும் இருப்பதில்லை. திடீரென்று திருமணம் என்பதைப் பற்றிச் சிந்திக்கும்போது நம் சுதந்திர வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விடுவோமோ என்கிற அச்சம் பீடித்துக் கொள்கிறது. இப்போதும்கூட இதே பிரச்சினைகள், பயம் இருக்கத்தான் செய்கிறது. 


யக்குனர் மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' படம் வெளியாகப்போவதை அண்மித்த நாட்களில் லிவிங் டுகெதர் பற்றி பேச்சுக்களும் ஆரம்பமாகிவிட்டிருந்தன. படம் அதுபற்றியது என்று சொல்லப்பட்டது. Living Together சரியானதா? அது நம் சமூகத்துக்கு ஒத்துவருமா? போன்ற கேள்விகள் சமீப காலத்தில் நண்பர்களிடையே, ஃபேஸ்புக்கில் பேசப்பட்டன.  கவிஞர் வைரமுத்து வேறு இந்தப்படம் கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தும் எனக் கூறியிருந்தார். திருமணம் செய்துக்கொள்ளாமல் இருவர் சேர்ந்து வாழ்வதை நம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது முற்றிலும் காமம் சார்ந்ததாகவே பார்க்கப்படும் என்பது உண்மைதான். நம் சமூகத்தில் திருமணம் நிச்சயமான காதலர்கள் சேர்ந்து வாழ்வதைப் பெற்றோரே அனுமதித்தாலும் மற்றோருக்குப் பிரச்சினைதான். ஆனால் லிவிங் டுகெதர் பற்றி இப்போதுதான் தமிழ்ப் படம்பார்த்துக் கலாச்சார அதிர்ச்சியடையும் நிலையில் நம்சமூகம் இல்லை என்றே நம்புகிறேன்.

வாசிப்புப் பழக்கமுள்ள வீடுகளில் பழைய கல்கி, குமுதம் இதழ்களில் வெளிவந்த தொடர்கதைகளை பக்கங்களைப் பிரித்து பைண்ட் செய்து வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். அப்படி பொன்னியின் செல்வனை வாசித்தபோது கூடவே, குமுதம் இதழ்களில் வெளிவந்த 'நியூ வேவ் கதைகள்' என்கிற உபதலைப்புகளுடன் வெளியான நாவல்கள் அந்தக்காலத்துக்குக் கலாச்சார அதிர்ச்சி கொடுக்கக்கூடியவைதான். பதின்ம வயதுகளில் பெரியவர்கள் கண்ணில் படாமல் படிக்கவேண்டிய நாவல்களாக இருந்தது கூடுதல்சிறப்பு!

ரேஸ்கிளப், நைட் பார்ட்டி, டிஸ்கோ, போதை ஊசி தாராளமாகப் புழங்கும். கைகளில் புகையும் சிகரெட்டுடன், பெல் பொட்டம் அணிந்திருக்கும் ஸ்டைலான பெண்கள். ஷேர்ட் அணிந்து கீழ் மூன்று பட்டங்கள் பூட்டாமல் அப்படியே வயிற்றுக்கு மேலே முடிச்சிட்டிருப்பார்கள். 'இப்படியா இருந்திருக்கிறார்கள்?'  ஓவியங்களைப் பார்க்கும்போதே ஆச்சரியமாக இருக்கும். அந்தக் கதைகளிலுள்ள வாழ்க்கை இன்னும் தமிழ்ப்படங்களில் வந்ததாகத் தெரியவில்லை. முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்னரே தமிழ் வெகுசன இதழ்களில் லிவிங் டுகெதர் பற்றிப்பேசும் கதைகள், நாவல்கள் வந்திருக்கவேண்டும். ஆக, நம் சமூகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. நடைமுறையில் மிக அரிதாகவேயிருந்தாலும் இந்த வாழ்க்கை முறை தெரிந்ததுதான்.


லிவிங் டுகெதர் நம்பிக்கையின் அடிப்படையிலானது. நம்பிக்கைக்குக் கால எல்லை கிடையாது. ஒரு வருடத்திற்கு ஒன்றாக வாழ்ந்து பிரிந்து விடுவோம் என்கிற ஒப்பந்த அடிப்படையில் செய்துகொண்டால், அது லிவிங் டுகெதரில் சேருமா? அப்படியாயின் பின்னர் ஆறு நாட்கள் லிவிங் டுகெதர் அப்படியே இன்னும் விவரமாக ஆறு மணித்தியாலம் லிவிங் டுகெதர் என்று அபத்தமாகிவிடும். லிவிங் டுகெதர் என்கிற வார்த்தையை ஒவ்வொருவரும் தம் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்வதில் ஒட்டுமொத்தமாகத் தவறாகவே பார்க்கப்படுகிறது.

லிவிங் டுகெதர் ஒரு கோட்பாடோ, நெகிழ்வுத் தன்மைகளற்ற கடும் விதிகளுடன் கடைப்பிடிக்கப்படுகிற கொள்கையோ அல்ல. அது ஒரு முடிவெடுத்தல் நிலை என்பதே எனது புரிதல். அது பின்னர் ஒருகட்டத்தில் திருமணத்தில் முடியலாம். அல்லது இறுதிவரை அப்படியே சேர்ந்து வாழலாம். துரதிருஷ்ட வசமாக இடையில் ஒத்துவராமல் பிரிந்தும் செல்லலாம். இந்த 'பிடிக்காவிட்டால் பிரிந்து சென்றுவிடலாம்' என்பதை மட்டும் பிரதானப்படுத்தி, லிவிங் டுகதர் என்பதே இடையில் விட்டுவிட்டு ஒடுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. முழுமையாகக் காமம் சார்ந்தது. பெண்களைப் பயன்படுத்திவிட்டு விலகிச் செல்ல வழிசமைப்பது என்பதாக மட்டுமே நம் சமூகத்தில் நம்பப்படுகிறது. அதற்கேற்றாற்போலவே நாம் அன்றாடம் கேள்விப்படும் காதல் கதைகளும் அமைந்துவிடுகின்றன. லிவிங் டுகெதர் குறித்துச் சார்பான கருத்துக்களைக் கொண்டவர்களே அவ்வளவு நல்லவர்களாக இருக்கமுடியாது என்கிற கருத்து இன்றைய இளையோரிடமே இருக்கிறது. ஆக பெரியவர்கள் பற்றிப் பேச வேண்டியதில்லை.

"உனக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்கா?"
பொதுவாக அலுவலகத்தில் கூட வேலைசெய்யும் சிங்களவர்கள், பெரியவர்கள் அப்படித்தான் ஒருவித அக்கறையுடன் கேட்பார்கள். அது அவர்கள் வழக்கம்.

அது ஒரு அவுட்சோர்சிங் நிறுவனம். அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கானது. அங்கு எங்களுக்கு பயிற்சியளித்த சிங்களப் பெண்மணியும் அதே கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொள்ளவார், 'பயிற்சிக்காலம் முடிந்ததும் ஒரு நண்பியைத் தேடிக்கொள்' என்கிற மேலதிக அறிவுரையையும் வழங்குவார். 


ஒருமுறை திருமணம் பற்றி ஏதோ பேச்சு வந்தது. எப்போது செய்துகொள்வதாக உத்தேசம் என்றார் பயிற்சியாளர். 'யாழ்ப்பாணத்தில் நாங்கள் முப்பது வயது கடந்துதான் திருமணம் பற்றி யோசிப்போம். அதுதான் எங்கள் வழக்கம்' என்றான் நண்பன். கூடவே யாழ்ப்பாணத்தின் சீதன விவரம் பற்றித் தான் தெரிந்துகொண்டதையும் விழிகள் விரிய ஆச்சரியமாகச் சொல்லிக் கொண்டார். என்னைப்பார்த்து '
உனக்கு எப்போ திருமணம்?'

சற்றும் யோசிக்காமல் 'எனக்கு அதிலெல்லாம் ஆர்வமில்லை.. லிவிங்டுகெதர்தான்' என்றேன்.

அவ்வளவுதான்! மிகுந்த அதிர்ச்சியடைந்துபோனவர் போல ஒரு பார்வை பார்த்தார். உண்மையிலேயே என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறி, 'இது நல்லதில்லை இப்பிடியிருந்தால் எப்படி? என்மகளை உனக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பமாட்டேன் என்றார். யாரும் அதைச்சரியாகக் கவனிக்கவில்லை என்று நினைத்தேன். பின்னர் நண்பன், "ஏண்டா அப்படிச்சொன்னே? மனிசி தன்ர மகளைக் கட்டிவைக்கிற ஐடியாவில இருந்திருக்கு நீ கெடுத்துட்ட" என்று சிரித்தான்.

'ஓ காதல் கண்மணி' படத்தில் நாயகன் ஆதி, நாயகி தாரா அறிமுகமாகி ஒருவர் பாலொருவர் ஈர்க்கபடுகிறார்கள். சிலமாதங்களில் இருவரும் அமெரிக்கா, பிரான்ஸ் செல்லவேண்டும். அதுவரையில் காதல், பிரிவு, வலி போன்ற உணர்வுகளுக்கு இடம்கொடுப்பதில்லை என்கிற நிபந்தனையுடன் தம்மைப் பகிர்ந்துகொள்ளச் சம்மதமாயிருக்கிறார்கள். இருவரும் ஒன்றாகத் தங்கிக் கொள்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல 2004 இல் வெளியான மணிரத்னத்தின் ஆய்த எழுத்தில் சித்தார்த், த்ரிஷா டேட்டிங் செய்வார்களே அதேதான். என்ன ஒன்றாக ஒரே அறையில் தங்கிக் கொள்வது என்பது புதிதாக இருக்கலாம். இந்த உறவு முறையை எப்படி அழைப்பது? லிவிங் டுகெதர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

மற்றபடி படம் லிவிங் டுகெதர் பற்றிப் பேசவில்லை. பேச வேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில் அது லிவிங் டுகெதர் அல்ல. அப்படி அழைத்துக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். அவர்களிடயான ஈர்ப்பு அல்லது காமம் ஒருநிலையில் அன்பு, அக்கறையாக மாறுகிறது. அதைத்தானே காதல் என்கிறோம். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அழகான காதல் கதையாக, இந்த உறவுமுறை திருமணத்தில் முடிவதுதான் சரியானது என்று சொல்கிறது படம்.

லிவிங் டுகெதரில் இணைந்துகொள்ள, திருமணம் செய்துகொள்வதை விட மிகப்பெரிய பொறுப்புணர்வு, நம்பிக்கை தேவை. அது நம்மிடையே இருக்கிறதா? என்பது அவசியமான கேள்வி. திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துவிட்ட இருவர் ஒரிருமாதம் ஒன்றாகத்தங்கி ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பின்னர் திருமணம் செய்துகொள்ளுதல் அல்லது ஒத்துவராவிட்டால் நண்பர்களாகப் பிரிதல் என்கிற நடைமுறை மேலை நாடுகளில் இருக்கிறது. அதனை நம் தமிழர்களும் இப்போது செயற்படுத்துகிறார்களாம் என சில வருடங்களுக்குமுன் என் அலுவலகத் தோழி குறிப்பிட்டிருந்தார். 

'நாங்களும் வெள்ளைக்காரர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல' என்கிற கொள்கையுடைய அதிகார்வலரான லண்டனில் வாழும் அவரது உறவுக்காரப் பெண்மணி தன் மகளுக்குத் திருமணம் பேசியிருந்தார். அதுமுக்கியமல்ல, ஒருமாத கால புரிந்துகொள்ளும் 'லிவிங் டுகெதரில்' மகளை வாழ அனுமதித்திருந்ததைப் பெருமையாகக் கூறியிருக்கிறார். வீட்டிலிருந்த பழமைவாத அம்மம்மா 'அதெப்பிடி பிள்ள சரியாவரும்?' என ஆட்சேபனைக் குரல் எழுப்பியிருக்கிரார். 

"நீங்கள் சும்மா இங்க இருந்துகொண்டு பட்டிக்காடுகள்  மாதிரிக் கதைக்காதையுங்கோ மாமி.. அங்க இப்ப எல்லாம் அப்பிடித்தான்" என்று வாயை அடைத்துவிட்டார். தோழி இதனை ஆச்சரியமாகக் கூறிக்கொண்டிருந்தார். 

இந்த இடத்தில்தான் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது. அது காதல் திருமணம் அல்ல. இருவீட்டார் பேசிச் செய்வதுதான். நம் மக்களின் நேர்மையை நம்பி.... எனினும் இதுபற்றித் தோழியிடம் கேட்பது பட்டிக்காட்டுத்தனமாய் ஆகிவிடுமோ என்பதால் மௌனமாக இருந்துவிட்டேன்.

சில வாரங்கள் கழிந்து அந்தப்பெண்மணி மிகவும் மனமுடைந்து போய்விட்டார் என்றார். அந்தத்திருமண ஒப்பந்தம் ஏதோ சீதனப் பிரச்சினையில் ரத்தாகிவிட்டது. 

"மாமி நீங்க அப்பவே சொன்னீங்க நான்தான் அறிவில்லாமல் விட்டுடேன்" என்று அடிக்கடி அரற்றிக் கொண்டிருந்தாராம். 

நம் பெரியவர்கள் ஊர், சாதி பார்த்து, ஜாதகப் பொருத்தம் பார்த்து, சீதனப் பேரம்பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இப்படி ஒத்திகை பார்க்க ஆசீர்வாதம் செய்து அனுப்பிவைப்பது என்ன நடைமுறை என்பது புரியவில்லை. நிச்சயம் 'வெள்ளைக்காரன் தமிழர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய' முறை அது என்று தோன்றியது.

ண்மையில் லிவிங் டுகெதர் நம் சமூகத்தின் அடிப்படைச் சிந்தனைவாத முறையில் வளர்ந்தவர்களின் வாழ்க்கை முறைக்கு ஒத்து வராது என்றே நம்புகிறேன். ஆண்களைப் பொறுத்தவரை அதிகமான பொறுப்புகளை எடுத்துக்கொள்ள நேரிடும். இந்த வாழ்க்கை முறையில் ஆண், பெண் இருவரும்தம் உழைப்பில் தன்னிறைவு அடையக்கூடியவகையில் வேலைபார்ப்பவர்களாக இருப்பார்கள். பெண்கள் தம் சொந்த உழைப்பில் தனியாக வாழக்கூடியவர்களாக, ஆண்களிடம் தங்கியிருக்க வேண்டிய நிலை இருக்காது. அது அவர்களைச் சுதந்திரமாக உணரவைக்கும்.

அதே நேரத்தில் ஆண்களுக்கு அதிக பொறுப்பும், வேலைப்பழுவும் சேர்ந்துகொள்ளும். அதாவது வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்ய நேரிடும். மேலை நாட்டு ஆண்களுக்கு இதில் எந்தச் சிரமமுமில்லை. ஆனால் நம்மவர்? பெரும்பாலும் சமைலறைப் பக்கமே எட்டிப் பார்க்காமல், வீட்டு வேலைகள் செய்து பழக்கப்படாமல் தமிழ் அம்மாக்களால் வளர்க்கப்படும் ஆண்களுக்கு இதெல்லாம் ஒத்துவர வாய்ப்பில்லை.


இருவருக்கிடையில் ஆழமான அன்பும், நம்பிக்கையும் நேர்மையும் இருக்கும்போது காலம் முழுவதும் இணைந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரமும், சமய சடங்குகளும் அவசியமில்லை என்பது உண்மையே. மத நம்பிக்கையில்லாதவர்கள் தாலி கட்டிக் கொள்ளாமல் திருமணம் செய்து வாழ்வது இங்கே சாதாரணம். ஆனால் சட்டபூர்வமாகப் பதிந்து கொள்ளாமல் வாழ்வது பின்னர் நடைமுறைச் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பதாலேயே அவர்களும் பதிந்துகொள்கிறார்கள் என நம்புகிறேன். குழந்தைகள்  பெற்றுக்கொள்வது, சொத்துச்சேர்ப்பது போன்ற விஷயங்களில் சட்ட, நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள திருமணத்தில் முடிவதாகவே இருக்கும். தவிர, சட்டபூர்வமான திருமணம் பெண்களுக்குப் பாதுகாப்பைக் கொடுப்பதாகவே உள்ளது.

நம் சமூகத்தில் ஆங்காங்கே பரவலாகக் காணப்படும் லிவிங் டுகெதர் எனச்சொல்லப்படும் வாழ்க்கை முறை குறுகிய காலத்திற்கான இடைக்காலத் தீர்வாகவே இருக்கிறது. பொறுப்புகளை எடுத்துகொள்ள விரும்பாத இரண்டுபேர் லிவிங் டுகெதரில் இணைந்துகொள்வது என்பது இளமை வேகத்திலான ஓர் அவசரகாலத் தீர்மானமாகவே இருக்க முடியும். முதுமைப் பிராயம் பற்றியே சிந்தனையே அதில் வருவதில்லை. அதுதான் அந்த வயதான லிவிங் டுகெதர் தம்பதிகளைப் பார்த்ததும் என்னை ஆச்சரியப்படுத்தியது.

'ஓ காதல் கண்மணி' படத்திலும் அப்படியேதான். தாராவும், ஆதியும் தமது நிகழ்காலத் தேவைகளுக்காகவே இணைந்துகொள்கிறார்கள். பின்னர் கணபதி, பவானி என்கிற தம்பதிகளின் இயல்பான வாழ்வு அவர்களின் வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றுகிறது.


முதுமைப் பிராயம் குறித்த சிந்தனைதான் அவர்கள் மனதை மாற்றியிருக்க வேண்டும். திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு இருவரும் மனதளவில் தயாராகிவிடும்போது,  தாரா, ஆதியிடம் கேட்பதும் அப்படித்தான் இருக்கிறது. 


'வயசானபிறகு என்னை இப்பிடிப் பார்த்துக் கொள்ளுவியா?'

4tamilmediaவில் 2015ல் வெளியானது.    

Wednesday, January 11, 2017

காதலும், நம் சமூகமும் மற்றும் இயக்குனர் விக்கிரமன் படங்களும்!Horror sentiment Family Drama
பாணியிலான திரைப்படங்கள் முன்னொரு காலத்திலே தமிழில் சரமாரியாக வெளிவந்து கொண்டிருந்தன. எனக்குத் தெரிந்தவரையில் தொண்ணூறு ஆறு தொடக்கம் இரண்டாயிரம் வரையிலான காலப்பகுதி அவ்வகைத் திரைப்படங்களின் பின்னைய பொற்காலம் எனலாம்.

ஆரம்பகாலத்தில் தமிழ் சினிமா கேட்சி ஊடகமாக இருந்தது. பின்னர்தான் காட்சி ஊடகமாக மாறியது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பார்க்காமலேயே கேட்டுணரும் பாணியிலானவை அவை. ஊரின் சிறுவயது ஞாபகம் உங்களுக்கும் இப்போதும் இருக்கக் கூடும். "இஷைத்தமிழ் நீ ஷெய்த அரும் ஷாதனை.." பாடல் முடிந்ததும் "டிர்ர்ர்ர்ர்ர்..றி...ய்ங்.." என்கிற இசையில் திருவிளையாடல் படத்தின் காட்சி மாறிவிட்டதை நாம் கோவில் திருவிழா குழாய் ஸ்பீக்கரில் கேட்டே அறிந்துகொண்டோமல்லவா?

பின்னைய காலத்தில் தமிழ்சினிமாவும் காட்சி ஊடகமானாலும் மறுபடியும் அவ்வப்போது யாராவது வந்து பழையபடி கையைப் பிடித்து இழுத்துச் செல்வதுண்டு. ஹொரர்  செண்டிமெண்ட் ஃபாமிலி டிராமா அநேகமாக அந்தப் பணியைச் செய்தவை.

யாழ்ப்பாணத்தின், வன்னியின் மின்சாரமில்லா காலங்கள், வவுனியாவின் 96,97 களின் இடம்பெயர் இடநெருக்கடிக் காலங்கள், யாழ்ப்பாணத்தின் 97 களுக்குப் பின்னைய 2000 வரையான மின்சாரப் பற்றாக்குறை காலகட்டங்களில் படம் பார்ப்பது என்பது ஒரு சடங்கு. அது போலவே படம் கேட்பது என்பது அதனோடு இணைந்த ஒரு சம்பிரதாயம். ஒருவீட்டில் படம் ஓட்டுவித்தால் சுற்றுச் சூழலில் ஆறேழு வீடுகளுக்கு படம் கேட்கும். அந்தப் படங்களில்  படங்கள் இப்படங்கள் முக்கியமானவை. இப்போது இந்தப் படங்களின் இசை குறித்த முக்கியத்துவம் புரிந்திருக்கும்

.தமிழின் ஹொரர் செண்டிமெண்ட் ஃபாமிலி டிராமா பாணியிலான திரைப்படம் உங்கள் அயல் வீடுகளில் ஒளிபரப்பிய காலத்தைச் சற்று நினைவு கூருங்கள். ஓரிரு குரல்கள் தொடர்ச்சியாக இடைவிடாமல் பேசுகின்றன. வெவ்வேறு மாடுலேஷனில், ஏற்ற இறக்கங்களோடு, மூக்கை உறிஞ்சிக் கொண்டு, அழுதுகொண்டு, அரற்றிக் கொண்டு ..மொத்தத்தில் பேசிக்கொண்டே...யிருப்பார்கள். சிறிது இடைவெளி கிடைக்கும்போது இசையமைப்பாளர் 'லாலா லாலால லாலா லாலால' இசைக்கோர்வையை ஒலிக்க விடுவார். இப்போது நாம் புரிந்துகொண்டிருப்போம், அவை இயக்குனரின் விக்கிரமனின் படங்கள் என்பதை!

பின்னர் மீண்டும் பேச்சு. சில இடங்களில் பேச்சு சற்றுக் குறைவாக இசை அவ்வப்போது "டுடுடிய்ங்.." சற்று நேரம் கழித்து இன்னொரு "டுடுடிய்ங்.." - இது நகைச்சுவைக் காட்சி என்பதை நாம் நாலு வீடு தள்ளியிருந்தே புரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு வகை இசைக்கோர்வைகள் இந்தப் படங்களின் இசையின் அடிநாதம். எஸ். ஏ. ராஜ்குமார் என்பவர் இதில் சிறந்து விளங்கினார். இரண்டு இசைக் கோர்வைகள், ஐந்து பாடல்கள் மட்டுமே வைத்துக் கொண்டு பத்து வருடங்களுக்கு மேலாக, பலபடங்களுக்கு இசையமைத்த அவர் திறமை அசாத்தியமானது என இப்போதும்கூட பலரும் வெகுவாகச் சிலாகிப்பதை நாம் பார்க்கிறோம்.

விக்கிரமன் சார்  படங்களின் மையக்கருவை 'உழைத்தால் நிச்சயம் உயர்வுண்டாகும்', 'நல்லவனுக்கு நல்லதே நடக்கும் கெட்டவன் அழிந்துபோவான்', 'ஒருவருக்குத் தீங்கு செய்தால் அவனைக் கடவுள் தண்டிப்பார்' என்கிற சிறுவர் நீதிக் கதைகளின் பெரியதிரை வடிவமாகக் கூடக் கொள்ளலாம். பார்ப்பவர்கள் யாரின் மனநிலைக்கும் தீங்கு விளைவிக்காத இவ்வகைத் திரைப்படங்கள் வெளிவந்தபோது டீவி சீரியல்களின் ஆதிக்கம் இப்போது போலில்லை. உண்மையில் பழக்கமில்லாமல் சடுதியாகப் பார்ப்பவர்களை மிக மோசமாக பாதிக்கும் இந்த வகை டீவி சீரியல்களை எப்போதாவது பார்க்க நேரிடுகையில் விக்கிரமன் சாரை  நன்றியுடன் நினைத்துக்கொள்வதுண்டு.

நேர்மறைச் சிந்தனையை வளர்ப்பதில் அவர் படங்கள் பெரும்பங்காற்றியிருக்கின்றன. உதாரணமாக, புளியம்பட்டி டூ பொள்ளாச்சி தினமும் பேரூந்தில் ஏற்றிச் செல்லும் அவ்வளவு பிரயாணிகளுக்கும் மாதமுடிவில் பெரிய சில்வர்குடம் பரிசளிக்க முடியுமா? என்றால் முடியும். அந்தப் பழைய பேரூந்தை வந்தவிலைக்கு விற்றுவிட்டால் முடியும். ஆனால் பேருந்தையும் விற்காமல், சில்வர்குடமும் பரிசளித்து, பணக்காரராகவும் ஆகிவிடுவது எப்படிச் சாத்தியம்? (சூர்ய வம்சம்) இங்கேதான் இயக்குனரின் நேர்மறை அணுகுமுறையை உணர்ந்துகொள்ளலாம். அந்த நம்பிக்கைதான் விக்கிரமன் சார் படங்கள்!

அதனை விட விக்கிரமன் சாரின் படங்கள் நம் சமூகத்தில் தாக்கம் செலுத்தியது நம் அழுகுணிக் குமார்களின் அணுகுமுறையில் என்றால் அது மிகையல்ல!

நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் அழுகுணிக் குமார்களை நாமறிவோம். காலத்துக்குகேற்ப அவர்களின் அணுகுமுறைகள் மாறிக்கொன்டே இருந்தாலும் கொள்கையளவில் அவர்கள் எப்போதும் ஒரேமாதிரியானவர்கள்தான். 'இந்தப் பெண்களே இப்படித்தான்' என்பதே அவர்களின் ஏகோபித்த தாரக மந்திரம். 'பெண்கள் ஏமாற்றுப்பேர்வழிகள்' எனும் பொருள்பட ஃபேஸ்புக் உள்ளிடட சமூகவலைத்தளங்களையும் கண்ணீரும் கம்பலையுமாக பதிவிட்டு வரும் அவர்களின் அன்றைய காலத்து ஒரே ஆறுதலாக விக்கிரமன் சார் படங்கள்தான்  விளங்கின என்றே சொல்லலாம்.

அழுகுணிக் குமார்கள் காதலில் விழுந்துவிட்டதாக, அல்லது அப்படி அவர்களே நம்பத் தொடங்கும்போது, அவர்தம் கூட இருக்கும் நண்பர்களுக்கு ஏழரை ஆரம்பமாகிவிடும். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தம் நிலையைச் சொல்ல எதுவித முயற்சிகளும் எடுக்காமல் ஒருவகையினர். இவர்கள் இதயம் முரளியாகத் தங்களை பாவித்துக் கொள்பவர்கள். இன்னொருவகை காதலைச் சொல்லி செருப்படி வாங்காத குறையாக அல்லது நண்பர்களாக இருப்போம் என்கிற பதிலைப் பெற்றவர்கள். இது செருப்படியை விட வீரியமானது (அதாவது பிஞ்ச செருப்பை சாணியில் முக்கி அடித்ததுபோல) எனினும் குமார்கள் அதனைப் புரிந்துகொள்ளும் அறிவோடு இருப்பதில்லை. ஒரு கௌரவமாகவே கருதிக் கொள்வர். நண்பர்களும் அப்படியே விட்டு விடுவார்கள்.

அதெப்படி சம்பந்தமேயில்லாமல் ஒருவர் காதலைச் சொன்னவுடன் நண்பனாகி விடுவார்? குமார்களின் (இனி அழுகுணிக் குமார்களைக் குமார்கள் என்றே அழைப்போம்) தொண தொண தொல்லையிலிருந்து தப்பிக்க பெண்கள் கைக்கொண்ட ராஜதந்திர ரீதியான உத்தி அது! சமயங்களில் ஒரு விசுவாசமான வேலைக்காரனாகவும், சிறந்த எடுபிடியாகவும் அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவகையில் குமார்களின் நண்பர்களுக்கும் இந்த ஏற்பாடு ஆசுவாசத்தைக் கொடுத்தது என்பதே உண்மை.

இவ்வாறான குமார்களைப் புத்துணர்ச்சி கொள்ள வைத்தது விக்கிரமன் சாரின் 'பூவே உனக்காக' திரைப்படம். படம் வந்ததிலிருந்து குமார்களின் தோரணையே மாறிவிட்டது. தங்களைத் தியாகிகளாகவே நினைக்கத் தலைப்பட்டார்கள். ஆளாளுக்கு 'காதல்ங்கிறது ஒரு செடியில் பூத்த ரோஜா மாதிரி..அது ஒருமுறைதான்' என்று பேசிக் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். எங்கள் குழுவுக்கு அணுக்கமான இன்னொரு நண்பர் குழுவிலிருந்த குமார் ஒருவர், தனது பதினெட்டாவது காதல் முயற்சி தோற்றபோதும் ‘காதல்ங்கிறது ஒருமுறைதான்’ வசனத்தை சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தார்.

இது ஒருவிதமான புரட்சியையே ஏற்படுத்தியது. குமார்கள் தாங்கள் தியாகம் செய்ததாக நம்பிக் கொண்டதில் அவர்களுக்கு ஒருவித பெருமிதத்தையும், நண்பர்களுக்கு நிம்மதியையும் ஒருங்கே கொடுத்தன என்றால் அது மிகையாகாது.

இன்னும் சில குமார்களை நேரடியாக ‘எடுபிடி’ அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து வைத்திருப்பார்கள் பெண்கள். இந்தவகைக் குமார்கள் தம்மை ஒரு லட்சியக் காதலானாகவே கருதிக் கொண்டு ரகசியமாகக் காதல் செய்து வருவார்கள். காதலை தெரிவிக்க சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். தம் காதலியினதும்(?!) தமக்குமான ரசனைகள் ஒத்துப் போவதையும், போகாவிட்டாலும் வலுக் கட்டாயமாகப் போகவைத்தும் அவருக்குப் பிடித்ததெல்லாம் தனக்கும் பிடிப்பதான பிரமையிலும் -  அரிதாக உண்மையாகவும், அடிக்கடி இருவர் விருப்பங்களைச் சோதித்துப் பார்த்து, திருப்திப்பட்டு காதல் வளருவதான பிரமையுடன் - மொத்தத்தில் பிரமை பிடித்து வாழ்ந்து வருவார்கள்.

ஏதோ ஒரு துணிச்சல் பெற்ற, சுபயோக சுபதினத்தில் காதலைச் சொல்லி அசிங்கப்பட்டு வரும் குமார்கள் காட்டும் சோகத்தைவிட நண்பர்கள் காட்டும் அறச்சீற்றம் அளவிடமுடியாதது. அது ஏற்கனவே எங்கேயோ பட்டு உணர்ந்ததன் வெளிப்பாடாக இருக்ககூடும். இந்த வகையான சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு பாடல் வெளிவந்தது. அது  'யுத்' படத்தின் 'சர்க்கரை நிலவே' என்பதாகும். பாடல் ‘உனக்கும் எனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காதென்றாய்?’ என்கிற அறிவு பூர்வமான, காத்திரமான கேள்வியை முன்வைத்தது. குமார்கள் இந்தவரிகளை உறுதியாகப் பற்றிக் கொண்டார்கள். இதுவரை காலமும் ஆண்வர்க்கத்திற்கு நேர்ந்த அவலநிலையை தட்டிக் கேட்டதாக அப்போது கன்சல்டன்ட்ஸ் ஆகியிருந்த முன்னாள் குமார்களும் உவகையடைந்தார்கள். அந்த வரிகளை எழுதிய பிரகிருதி யாரெனத் தெரியவில்லை. என்னவொரு சிந்தனை பாருங்கள்! சாதாரணமாக இப்படி யோசிக்க முடியுமா? அபத்தமான இந்த வரிகளை மேற்கோள் காட்டியே குமார்கள் ஆக்ரோசமாக கேள்வி எழுப்பினார்கள். அதானே? ஏன்னா நியாம்பா இது? நியாயப்படி பிடிச்சுத்தானே ஆகணும்?

ஆனாலும் சமூக ரீதியில், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் இந்தப்பாடல் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என குமார்கள் விசனமடைந்திருந்தார்கள். வழக்கம்போல ‘பெண்களே இப்படித்தான்’ என அதற்கும் நண்பர்களையே வதைத்துக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான சூழ்நிலையில் விக்கிரமன் சாரின் படங்கள் குமார்களின் காயங்களுக்கு ஒருவித ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தன என்றால் மிகையல்ல. சமயங்களில் சில பெண்களும் சேர்ந்து குமார்களை ஆதரவளித்து உற்சாகப்படுத்தினர் என்பதுதான் இங்கே உச்சகட்ட நகைச்சுவை!

விக்கிரமன் சார் படங்களின் 'சோப்ளாங்கி' ஹீரோக்களாக (உதாரணமாக உன்னை நினைத்து) தங்களை நினைத்துக் கொண்டனர். தான் காதலிக்கும் பெண் வேறொருவரைக் காதலிப்பதாகத் தெரிந்த பின்னரும் அந்தக் குடும்பத்து உதவுவது போல குமார்கள் தம் காதலிகளுக்கு உற்ற நண்பனாக இருப்பர்கள். ஒருகட்டத்தில் நல்ல மனம்கொண்ட 'சோப்ளாங்கி' ஹீரோவை விட்டு மோசமான நபரைக் காதலித்துவிட்டதை எண்ணி காதலி மனம் வருந்துவார் என்பது குமார்களின் ஆழ்ந்த நம்பிக்கை. அத்தகைய சந்தர்ப்பத்தில் தாம் பெருந்தன்மையாக, ஒரு கனவானாக நடந்துகொள்ளவேண்டும் கூறி நட்பை மெய்ப்பிக்க வேண்டும். இதற்காகவே, நம் குமார்கள் தமது காதலிகளின் காதல் எப்போது ஊற்றிக் கொள்ளும் என உள்ளூர எதிர்பார்ப்புடன் எடுபிடியாகத் தமது பணியினை மேற்கொள்வர்.

ஆனால் நடைமுறை சினிமாவுக்கு சம்பந்தமில்லாதது. குமார்களின் எதிர்பார்ப்பின்படியே காதலிகளின் காதல்கள் ஊற்றிக் கொண்டாலும் அவர்கள் குமார்களைப் பொருட்படுத்துவதில்லை. விவரமாக வேறொரு காதலனோ, வெளிநாட்டு மாப்பிள்ளையோ கிடைத்து அவர்கள் பாட்டுக்குச் சென்றுகொண்டாயிருப்பார்கள். குமார்களும் அதே ஏக்கப் பார்வையுடன் அலைந்துகொண்டிருந்தார்கள். ஆனாலும் உள்ளூர குமார்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கும். அதனை விக்கிரமன் சாரின் 'சூர்யவம்சம்' போன்ற படங்கள் கொடுத்திருந்தன.

காதலனைக் கைவிட்டுச் செல்லும் காதலிகள் என்றோ ஒருநாள் அதற்கான தண்டனையைப் பெறுவார்கள். வருந்துவார்கள். அப்போது தாம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என அடுத்தகட்டத் தயார்படுத்தலில் இருப்பார்கள். எஞ்சினியரான அவள் புருஷனுக்கு வேலை போனால் உங்களைத் காண வருவாள். அவனுக்கு உங்கள் பஸ் கம்பனியில் டிகக்ட் கிழிக்கும் வேலை வேண்டி! உண்மையில், அவனுக்கு வேலை போனால் அவன் இன்னொரு கம்பெனியில் என்ஜினியராக வேலை தேடிக்கொள்வான். டிக்கட் கிழிக்க வரமாட்டான் என்பதுதான் யதார்த்தமாக இருந்தாலும், காதல்வயப்பட ஆரம்பத்திலிருந்து தமது மூளையை ஒருவித கொழுப்புப் பதார்த்தமாகவே பேணிக் கொள்வதால் குமார்கள் இதனை உணர்ந்துகொள்வதில்லை.

சமயங்களில் பெண்கள் மிகத் தெளிவானவர்கள். உண்மையில் ஒருபெண் பட்டுணர்ந்து தான் காதலிப்பவனை விட்டு விலகும்போதே அவள் வாழ்க்கை நன்றாகச் செல்ல ஆரம்பித்துவிடுகிறது என்பதே நாம் அனுபவத்தில் கண்டது. அதனைக் குமார்கள் அன்றும் இன்றும் என்றும் புரிந்துகொண்டதேயில்லை.

ஏதோ ஒருகட்டத்தில் எல்லாக் குமார்களும் ஒரு புள்ளியில் இணைந்துகொண்டுவிடுவார்கள். உண்மையில் காதலில் இருந்து ஒருகட்டத்தில் காதலிகள் சுதாகரித்து கழற்றிவிடப்படட குமார்கள், எடுபிடிகளாக நியமிக்கப்பட்டு தமக்குள்ள காதலை வளர்த்து கவிதை வரைந்து காவியக் காதலில் ஈடுபட்ட குமார்கள், காதல் விண்ணப்பப் படிவங்களை திரும்பத் திரும்ப அனுப்பிய குமார்கள் எல்லோருமே காதலியால் ஏமாற்றப்பட்ட பட்டியலில் விரும்பி இணைந்துகொள்வார்கள். இதில் இன்னொரு விசித்திர வகைக் குமார்களும் அடக்கம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே தெரியாமல் ஐம்பது மீட்டர் தூரத்தில் சைக்கிளில் துரத்திய குமார்கள்கூடாத் தாங்களும் ஏமாற்றப்பட்டதாக ஏதோ ஒரு புரியாத தர்க்கத்தின் அடிப்படையில் தாங்களும் வஞ்சிக்கப்பட்டதாக அவர்களே நம்பிக்கொண்டிருப்பார்கள். அவர்களும் இந்தப்புள்ளியில் இணைவதுதான் உச்சகட்ட அவலம் எனலாம்.

இவர்களுக்காகவே ஒருபாடல் உருவாக்கி வெளியிட்டார் விக்கிரமன் சார். பட்டி தொட்டியெங்கும் குமார்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. குமார்கள் புத்துணர்ச்சியுடன், முக மலர்ச்சியுடன் பாடித் திரிந்தார்கள். அது, 'பொம்பிளைங்க காதலைத்தான் நம்பி விடாதே!'. குமார்களின் தேசிய கீதமாகவே ஆகிப்போனது. அப்போதே பெரிய சந்தேகம் ஒன்றிருந்தது. பெண்களை நம்பாமல் வேறு யார் காதலை நம்புவது? ஒரு ஆண் பெண்ணின் காதலைத்தானே நம்ப வேண்டும்? என்ன அபத்தம் இது? கொஞ்சம் ஆழமாக யோசித்தால் வில்லங்கமாக அல்லவா வருகிறது? உண்மையில் அப்படி இருந்தால் குமார்கள்தான் எவ்வளவு பாவப்பட்டவர்கள்? ஆண் ஓரினச் சேர்க்கையாளருக்காக உருவாக்கப்பட்ட பாடலை குமார்கள் தமக்கான தேசிய கீதமாக வரித்துக்கொண்டதுதான் இந்த நூற்றாண்டின் மகத்தான சோகம் எனலாம்.

எது எப்படியோ இன்றைய  காலகட்டத்தில் டீவி சீரியல்கள் வரவேற்பறைகளை ஆக்கிரமிக்க, வன்மமும் குரோதமும் வஞ்சகமும் அதிர்வலைகளாக உருவாகி நிறைந்துள்ளதாகப் பலரும் அஞ்சுகிறார்கள். உண்மையில் நம் சமூகத்தில் அன்பும், நம்பிக்கையும் பாசமும் பெருக்கெடுக்க, ஒன்றாகக் குழுமியிருந்து படம் பார்த்துக் களித்த காலமொன்று உண்டெனில் அது இயக்குனர் விக்கிரமன் படங்கள் வெளிவந்த காலம் எனலாம். அதற்காகவே நாம் என்றென்றும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம்