பத்து ஆண்டுகளுக்குமுன், கொழும்பு வந்த புதிது. வெள்ளவத்தையில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சற்றுத்தள்ளி எதிரிலிருந்த வீட்டில் அறுபது வயதைக் கடந்த தம்பதிகள் இருவர். ஆங்கிலம் பேசும் சிங்களவர்கள். அநேகமான காலைப்பொழுகளில் அலுவலகம் புறப்படும்போது அந்த வீட்டுப் பெண்மணி கடற்கரைக்கு நாயை அழைத்துக்கொண்டு செல்ல, கையசைத்து விடைகொடுத்துவிட்டுப் பூக்கன்றுகளுக்கு நீரூற்றிக் கொண்டிருப்பார் அந்த அங்கிள்.
ஒருநாள் நண்பன் சொன்னான், 'டேய் இதுகள் ரெண்டும் கல்யாணம் கட்டேல்ல லிவிங் டுகெதரில இருக்குதுகள்' என்றான். சொல்லும்போதே அவன் தொனியில் ஒரு ஒவ்வாமை கலந்திருந்தது. லிவிங் டுகெதர் என்பதை ஒரு வித கெட்ட வார்த்தைபோல ஆக்கிவிட்டார்களோ என்று தோன்றியது. ஆனால் என்னை ஆச்சரியப்படுத்தியது அந்தத் தம்பதியரின் வயது. அதுவரை நாங்கள் பேசிக் கொண்டிருந்த லிவிங் டுகெதர் இளமைப் பருவத்தை மட்டுமே கருத்திற்கொண்டிருந்தது. முதுமைப் பிராயம் பற்றிச் சிந்தித்ததில்லை.
பள்ளி இறுதிநாட்களில், வீதியோர அரட்டைகளில் நண்பர்கள் அவ்வப்போது லிவிங் டுகெதர் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். அதுதான் சிறந்த வாழ்க்கைமுறை என்பதில் அப்போதெல்லாம் எங்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. அதற்கான அப்போதைய பிரதான் காரணம் திருமணம் நமக்கு ஒத்துவராத பெண்ணிடம் மாட்டிக்கொண்டால் என்னாவது? காலம் முழுக்கக் கண்ணீரோடு(?!) வாழ்ந்து தொலைக்க வேண்டுமே என்கிற பயம்தான். கூடவே, நம் சுதந்திரம் பறிபோய்விடும். ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டுவிடுவோம். மற்றையது பொறுப்பெடுத்துக் கொள்ளுதல் பற்றிய பிரச்சினை. அதிலும் நாம் - அதாவது ஆண்கள் புதியதொரு பந்தத்துக்குள் பிணைத்துக் கொள்வதற்கு ஒருவித பயமும் தயக்கமும் எப்போதும் இருக்கிறது.
பெரும்பாலான ஆண்கள், பெண்களுடன் ஒப்பிடுகையில் மனதைரியம் குறைந்தவர்களாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. பொதுவான நம் தமிழ்ச்சமூகத்தில் விடலைப் பையன்களாக இருக்கும் காலத்திலிருந்து திருமணம் செய்துகொள்ளும் காலம்வரை எதையும் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத, பொறுப்புகள் ஏதுமற்ற விளையாட்டுத்தனமான விடலைப் பையன் மனநிலையோடே இருப்பதில் யாருக்கும் எந்தப் புகார்களும் இருப்பதில்லை. திடீரென்று திருமணம் என்பதைப் பற்றிச் சிந்திக்கும்போது நம் சுதந்திர வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விடுவோமோ என்கிற அச்சம் பீடித்துக் கொள்கிறது. இப்போதும்கூட இதே பிரச்சினைகள், பயம் இருக்கத்தான் செய்கிறது.
இயக்குனர் மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' படம் வெளியாகப்போவதை அண்மித்த நாட்களில் லிவிங் டுகெதர் பற்றி பேச்சுக்களும் ஆரம்பமாகிவிட்டிருந்தன. படம் அதுபற்றியது என்று சொல்லப்பட்டது. Living Together சரியானதா? அது நம் சமூகத்துக்கு ஒத்துவருமா? போன்ற கேள்விகள் சமீப காலத்தில் நண்பர்களிடையே, ஃபேஸ்புக்கில் பேசப்பட்டன. கவிஞர் வைரமுத்து வேறு இந்தப்படம் கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தும் எனக் கூறியிருந்தார். திருமணம் செய்துக்கொள்ளாமல் இருவர் சேர்ந்து வாழ்வதை நம் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது முற்றிலும் காமம் சார்ந்ததாகவே பார்க்கப்படும் என்பது உண்மைதான். நம் சமூகத்தில் திருமணம் நிச்சயமான காதலர்கள் சேர்ந்து வாழ்வதைப் பெற்றோரே அனுமதித்தாலும் மற்றோருக்குப் பிரச்சினைதான். ஆனால் லிவிங் டுகெதர் பற்றி இப்போதுதான் தமிழ்ப் படம்பார்த்துக் கலாச்சார அதிர்ச்சியடையும் நிலையில் நம்சமூகம் இல்லை என்றே நம்புகிறேன்.
வாசிப்புப் பழக்கமுள்ள வீடுகளில் பழைய கல்கி, குமுதம் இதழ்களில் வெளிவந்த தொடர்கதைகளை பக்கங்களைப் பிரித்து பைண்ட் செய்து வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். அப்படி பொன்னியின் செல்வனை வாசித்தபோது கூடவே, குமுதம் இதழ்களில் வெளிவந்த 'நியூ வேவ் கதைகள்' என்கிற உபதலைப்புகளுடன் வெளியான நாவல்கள் அந்தக்காலத்துக்குக் கலாச்சார அதிர்ச்சி கொடுக்கக்கூடியவைதான். பதின்ம வயதுகளில் பெரியவர்கள் கண்ணில் படாமல் படிக்கவேண்டிய நாவல்களாக இருந்தது கூடுதல்சிறப்பு!
ரேஸ்கிளப், நைட் பார்ட்டி, டிஸ்கோ, போதை ஊசி தாராளமாகப் புழங்கும். கைகளில் புகையும் சிகரெட்டுடன், பெல் பொட்டம் அணிந்திருக்கும் ஸ்டைலான பெண்கள். ஷேர்ட் அணிந்து கீழ் மூன்று பட்டங்கள் பூட்டாமல் அப்படியே வயிற்றுக்கு மேலே முடிச்சிட்டிருப்பார்கள். 'இப்படியா இருந்திருக்கிறார்கள்?' ஓவியங்களைப் பார்க்கும்போதே ஆச்சரியமாக இருக்கும். அந்தக் கதைகளிலுள்ள வாழ்க்கை இன்னும் தமிழ்ப்படங்களில் வந்ததாகத் தெரியவில்லை. முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன்னரே தமிழ் வெகுசன இதழ்களில் லிவிங் டுகெதர் பற்றிப்பேசும் கதைகள், நாவல்கள் வந்திருக்கவேண்டும். ஆக, நம் சமூகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. நடைமுறையில் மிக அரிதாகவேயிருந்தாலும் இந்த வாழ்க்கை முறை தெரிந்ததுதான்.
லிவிங் டுகெதர் நம்பிக்கையின் அடிப்படையிலானது. நம்பிக்கைக்குக் கால எல்லை கிடையாது. ஒரு வருடத்திற்கு ஒன்றாக வாழ்ந்து பிரிந்து விடுவோம் என்கிற ஒப்பந்த அடிப்படையில் செய்துகொண்டால், அது லிவிங் டுகெதரில் சேருமா? அப்படியாயின் பின்னர் ஆறு நாட்கள் லிவிங் டுகெதர் அப்படியே இன்னும் விவரமாக ஆறு மணித்தியாலம் லிவிங் டுகெதர் என்று அபத்தமாகிவிடும். லிவிங் டுகெதர் என்கிற வார்த்தையை ஒவ்வொருவரும் தம் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்வதில் ஒட்டுமொத்தமாகத் தவறாகவே பார்க்கப்படுகிறது.
லிவிங் டுகெதர் ஒரு கோட்பாடோ, நெகிழ்வுத் தன்மைகளற்ற கடும் விதிகளுடன் கடைப்பிடிக்கப்படுகிற கொள்கையோ அல்ல. அது ஒரு முடிவெடுத்தல் நிலை என்பதே எனது புரிதல். அது பின்னர் ஒருகட்டத்தில் திருமணத்தில் முடியலாம். அல்லது இறுதிவரை அப்படியே சேர்ந்து வாழலாம். துரதிருஷ்ட வசமாக இடையில் ஒத்துவராமல் பிரிந்தும் செல்லலாம். இந்த 'பிடிக்காவிட்டால் பிரிந்து சென்றுவிடலாம்' என்பதை மட்டும் பிரதானப்படுத்தி, லிவிங் டுகதர் என்பதே இடையில் விட்டுவிட்டு ஒடுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது. முழுமையாகக் காமம் சார்ந்தது. பெண்களைப் பயன்படுத்திவிட்டு விலகிச் செல்ல வழிசமைப்பது என்பதாக மட்டுமே நம் சமூகத்தில் நம்பப்படுகிறது. அதற்கேற்றாற்போலவே நாம் அன்றாடம் கேள்விப்படும் காதல் கதைகளும் அமைந்துவிடுகின்றன. லிவிங் டுகெதர் குறித்துச் சார்பான கருத்துக்களைக் கொண்டவர்களே அவ்வளவு நல்லவர்களாக இருக்கமுடியாது என்கிற கருத்து இன்றைய இளையோரிடமே இருக்கிறது. ஆக பெரியவர்கள் பற்றிப் பேச வேண்டியதில்லை.
"உனக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்கா?"
பொதுவாக அலுவலகத்தில் கூட வேலைசெய்யும் சிங்களவர்கள், பெரியவர்கள் அப்படித்தான் ஒருவித அக்கறையுடன் கேட்பார்கள். அது அவர்கள் வழக்கம்.
அது ஒரு அவுட்சோர்சிங் நிறுவனம். அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கானது. அங்கு எங்களுக்கு பயிற்சியளித்த சிங்களப் பெண்மணியும் அதே கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொள்ளவார், 'பயிற்சிக்காலம் முடிந்ததும் ஒரு நண்பியைத் தேடிக்கொள்' என்கிற மேலதிக அறிவுரையையும் வழங்குவார்.
ஒருமுறை திருமணம் பற்றி ஏதோ பேச்சு வந்தது. எப்போது செய்துகொள்வதாக உத்தேசம் என்றார் பயிற்சியாளர். 'யாழ்ப்பாணத்தில் நாங்கள் முப்பது வயது கடந்துதான் திருமணம் பற்றி யோசிப்போம். அதுதான் எங்கள் வழக்கம்' என்றான் நண்பன். கூடவே யாழ்ப்பாணத்தின் சீதன விவரம் பற்றித் தான் தெரிந்துகொண்டதையும் விழிகள் விரிய ஆச்சரியமாகச் சொல்லிக் கொண்டார். என்னைப்பார்த்து '
உனக்கு எப்போ திருமணம்?'
சற்றும் யோசிக்காமல் 'எனக்கு அதிலெல்லாம் ஆர்வமில்லை.. லிவிங்டுகெதர்தான்' என்றேன்.
அவ்வளவுதான்! மிகுந்த அதிர்ச்சியடைந்துபோனவர் போல ஒரு பார்வை பார்த்தார். உண்மையிலேயே என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறி, 'இது நல்லதில்லை இப்பிடியிருந்தால் எப்படி? என்மகளை உனக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பமாட்டேன் என்றார். யாரும் அதைச்சரியாகக் கவனிக்கவில்லை என்று நினைத்தேன். பின்னர் நண்பன், "ஏண்டா அப்படிச்சொன்னே? மனிசி தன்ர மகளைக் கட்டிவைக்கிற ஐடியாவில இருந்திருக்கு நீ கெடுத்துட்ட" என்று சிரித்தான்.
'ஓ காதல் கண்மணி' படத்தில் நாயகன் ஆதி, நாயகி தாரா அறிமுகமாகி ஒருவர் பாலொருவர் ஈர்க்கபடுகிறார்கள். சிலமாதங்களில் இருவரும் அமெரிக்கா, பிரான்ஸ் செல்லவேண்டும். அதுவரையில் காதல், பிரிவு, வலி போன்ற உணர்வுகளுக்கு இடம்கொடுப்பதில்லை என்கிற நிபந்தனையுடன் தம்மைப் பகிர்ந்துகொள்ளச் சம்மதமாயிருக்கிறார்கள். இருவரும் ஒன்றாகத் தங்கிக் கொள்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல 2004 இல் வெளியான மணிரத்னத்தின் ஆய்த எழுத்தில் சித்தார்த், த்ரிஷா டேட்டிங் செய்வார்களே அதேதான். என்ன ஒன்றாக ஒரே அறையில் தங்கிக் கொள்வது என்பது புதிதாக இருக்கலாம். இந்த உறவு முறையை எப்படி அழைப்பது? லிவிங் டுகெதர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
மற்றபடி படம் லிவிங் டுகெதர் பற்றிப் பேசவில்லை. பேச வேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில் அது லிவிங் டுகெதர் அல்ல. அப்படி அழைத்துக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். அவர்களிடயான ஈர்ப்பு அல்லது காமம் ஒருநிலையில் அன்பு, அக்கறையாக மாறுகிறது. அதைத்தானே காதல் என்கிறோம். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அழகான காதல் கதையாக, இந்த உறவுமுறை திருமணத்தில் முடிவதுதான் சரியானது என்று சொல்கிறது படம்.
லிவிங் டுகெதரில் இணைந்துகொள்ள, திருமணம் செய்துகொள்வதை விட மிகப்பெரிய பொறுப்புணர்வு, நம்பிக்கை தேவை. அது நம்மிடையே இருக்கிறதா? என்பது அவசியமான கேள்வி. திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்துவிட்ட இருவர் ஒரிருமாதம் ஒன்றாகத்தங்கி ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பின்னர் திருமணம் செய்துகொள்ளுதல் அல்லது ஒத்துவராவிட்டால் நண்பர்களாகப் பிரிதல் என்கிற நடைமுறை மேலை நாடுகளில் இருக்கிறது. அதனை நம் தமிழர்களும் இப்போது செயற்படுத்துகிறார்களாம் என சில வருடங்களுக்குமுன் என் அலுவலகத் தோழி குறிப்பிட்டிருந்தார்.
'நாங்களும் வெள்ளைக்காரர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல' என்கிற கொள்கையுடைய அதிகார்வலரான லண்டனில் வாழும் அவரது உறவுக்காரப் பெண்மணி தன் மகளுக்குத் திருமணம் பேசியிருந்தார். அதுமுக்கியமல்ல, ஒருமாத கால புரிந்துகொள்ளும் 'லிவிங் டுகெதரில்' மகளை வாழ அனுமதித்திருந்ததைப் பெருமையாகக் கூறியிருக்கிறார். வீட்டிலிருந்த பழமைவாத அம்மம்மா 'அதெப்பிடி பிள்ள சரியாவரும்?' என ஆட்சேபனைக் குரல் எழுப்பியிருக்கிரார்.
"நீங்கள் சும்மா இங்க இருந்துகொண்டு பட்டிக்காடுகள் மாதிரிக் கதைக்காதையுங்கோ மாமி.. அங்க இப்ப எல்லாம் அப்பிடித்தான்" என்று வாயை அடைத்துவிட்டார். தோழி இதனை ஆச்சரியமாகக் கூறிக்கொண்டிருந்தார்.
இந்த இடத்தில்தான் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது. அது காதல் திருமணம் அல்ல. இருவீட்டார் பேசிச் செய்வதுதான். நம் மக்களின் நேர்மையை நம்பி.... எனினும் இதுபற்றித் தோழியிடம் கேட்பது பட்டிக்காட்டுத்தனமாய் ஆகிவிடுமோ என்பதால் மௌனமாக இருந்துவிட்டேன்.
சில வாரங்கள் கழிந்து அந்தப்பெண்மணி மிகவும் மனமுடைந்து போய்விட்டார் என்றார். அந்தத்திருமண ஒப்பந்தம் ஏதோ சீதனப் பிரச்சினையில் ரத்தாகிவிட்டது.
"மாமி நீங்க அப்பவே சொன்னீங்க நான்தான் அறிவில்லாமல் விட்டுடேன்" என்று அடிக்கடி அரற்றிக் கொண்டிருந்தாராம்.
நம் பெரியவர்கள் ஊர், சாதி பார்த்து, ஜாதகப் பொருத்தம் பார்த்து, சீதனப் பேரம்பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இப்படி ஒத்திகை பார்க்க ஆசீர்வாதம் செய்து அனுப்பிவைப்பது என்ன நடைமுறை என்பது புரியவில்லை. நிச்சயம் 'வெள்ளைக்காரன் தமிழர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய' முறை அது என்று தோன்றியது.
உண்மையில் லிவிங் டுகெதர் நம் சமூகத்தின் அடிப்படைச் சிந்தனைவாத முறையில் வளர்ந்தவர்களின் வாழ்க்கை முறைக்கு ஒத்து வராது என்றே நம்புகிறேன். ஆண்களைப் பொறுத்தவரை அதிகமான பொறுப்புகளை எடுத்துக்கொள்ள நேரிடும். இந்த வாழ்க்கை முறையில் ஆண், பெண் இருவரும்தம் உழைப்பில் தன்னிறைவு அடையக்கூடியவகையில் வேலைபார்ப்பவர்களாக இருப்பார்கள். பெண்கள் தம் சொந்த உழைப்பில் தனியாக வாழக்கூடியவர்களாக, ஆண்களிடம் தங்கியிருக்க வேண்டிய நிலை இருக்காது. அது அவர்களைச் சுதந்திரமாக உணரவைக்கும்.
அதே நேரத்தில் ஆண்களுக்கு அதிக பொறுப்பும், வேலைப்பழுவும் சேர்ந்துகொள்ளும். அதாவது வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்ய நேரிடும். மேலை நாட்டு ஆண்களுக்கு இதில் எந்தச் சிரமமுமில்லை. ஆனால் நம்மவர்? பெரும்பாலும் சமைலறைப் பக்கமே எட்டிப் பார்க்காமல், வீட்டு வேலைகள் செய்து பழக்கப்படாமல் தமிழ் அம்மாக்களால் வளர்க்கப்படும் ஆண்களுக்கு இதெல்லாம் ஒத்துவர வாய்ப்பில்லை.
இருவருக்கிடையில் ஆழமான அன்பும், நம்பிக்கையும் நேர்மையும் இருக்கும்போது காலம் முழுவதும் இணைந்து வாழ்வதற்கு சட்ட அங்கீகாரமும், சமய சடங்குகளும் அவசியமில்லை என்பது உண்மையே. மத நம்பிக்கையில்லாதவர்கள் தாலி கட்டிக் கொள்ளாமல் திருமணம் செய்து வாழ்வது இங்கே சாதாரணம். ஆனால் சட்டபூர்வமாகப் பதிந்து கொள்ளாமல் வாழ்வது பின்னர் நடைமுறைச் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பதாலேயே அவர்களும் பதிந்துகொள்கிறார்கள் என நம்புகிறேன். குழந்தைகள் பெற்றுக்கொள்வது, சொத்துச்சேர்ப்பது போன்ற விஷயங்களில் சட்ட, நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள திருமணத்தில் முடிவதாகவே இருக்கும். தவிர, சட்டபூர்வமான திருமணம் பெண்களுக்குப் பாதுகாப்பைக் கொடுப்பதாகவே உள்ளது.
நம் சமூகத்தில் ஆங்காங்கே பரவலாகக் காணப்படும் லிவிங் டுகெதர் எனச்சொல்லப்படும் வாழ்க்கை முறை குறுகிய காலத்திற்கான இடைக்காலத் தீர்வாகவே இருக்கிறது. பொறுப்புகளை எடுத்துகொள்ள விரும்பாத இரண்டுபேர் லிவிங் டுகெதரில் இணைந்துகொள்வது என்பது இளமை வேகத்திலான ஓர் அவசரகாலத் தீர்மானமாகவே இருக்க முடியும். முதுமைப் பிராயம் பற்றியே சிந்தனையே அதில் வருவதில்லை. அதுதான் அந்த வயதான லிவிங் டுகெதர் தம்பதிகளைப் பார்த்ததும் என்னை ஆச்சரியப்படுத்தியது.
'ஓ காதல் கண்மணி' படத்திலும் அப்படியேதான். தாராவும், ஆதியும் தமது நிகழ்காலத் தேவைகளுக்காகவே இணைந்துகொள்கிறார்கள். பின்னர் கணபதி, பவானி என்கிற தம்பதிகளின் இயல்பான வாழ்வு அவர்களின் வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றுகிறது.
முதுமைப் பிராயம் குறித்த சிந்தனைதான் அவர்கள் மனதை மாற்றியிருக்க வேண்டும். திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு இருவரும் மனதளவில் தயாராகிவிடும்போது, தாரா, ஆதியிடம் கேட்பதும் அப்படித்தான் இருக்கிறது.
'வயசானபிறகு என்னை இப்பிடிப் பார்த்துக் கொள்ளுவியா?'
4tamilmediaவில் 2015ல் வெளியானது.
லிவிங் டுகெதர் என்பது சிக்கலான பிரச்சினையே. அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் நிலவும் நிரந்தரமற்ற வேலை வாய்ப்புகளும், சிதைந்துபோன குடும்ப அமைப்பும் இம்மாதிரியானதொரு மாய உறவு உருவாகக் காரணமாகியிருக்கின்றன. பிள்ளைகளின் படிப்புக்கு பெற்றோர் பொறுப்பேற்கும் சமுதாயம் நம்முடையது. பெண்களின் திருமணத்திற்கு முழுப் பொறுப்பும் தகப்பனுடையது என்கிறது நமது மரபு. எனவே நமக்கு இம்மாதிரியான லிவிங் டுகெதர் வாழ்வுமுறை தேவையில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.