Thursday, February 2, 2017

அவர்களுக்குத் தெரியுமா?

"எப்பிடி போகுது...என்ன உங்கள் ஆட்சிதானே?" 

பெரேரா அங்கிள் நேற்றுத் தொலைபேசினார். மகிந்த தோற்றதால் இப்போது தமிழர்களின் ஆட்சியாம். அப்படித்தான் பல சிங்களவர்கள் நினைக்கிறார்கள். பெரேரா தீவிர மகிந்தாபிமானி. பழைய அலுவலகத்தில் அடிக்கடி அரசியல் பேசி என்னைக் கடுப்பேற்றிக் கொண்டிருப்பார். பதிலுக்கு நானும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்துகொண்டிருப்பேன். மகிந்த அரசாங்கம் செய்வதெல்லாம் நாட்டு நன்மைக்கே என்கிற கொள்கையுடையவர். அவர் பௌத்தமதத்தைப் பின்பற்றும் தீவிர அடிப்படைவாதி. ஆனால் நல்லவர்.  

"ச்சே அந்த வன்னிச் சனங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நல்ல சாப்பாடு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு, என்ன கொடுமையெல்லாம் அனுபவித்திருப்பார்கள்?" என பெரேரா அவ்வப்போது கவலைப்படுவார். அவரது நினைப்பெல்லாம் புலிகள் தமிழ் மக்களைக் காலங்காலமாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர், அரசாங்கம் அவர்களை மீட்டு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது என்பதுதான். இங்கே பலரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நவநீதம்பிள்ளை இங்கே வந்திருந்த சமயம், ஒருநாள் பெரேரா பரபரப்பாக,
"அவர் முள்ளி வாய்க்காலில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முயன்றிருக்கிறார். அது எப்படி நியாயமாகும்?" என்றார்.

"அவர் புலிகளுக்குச் சார்பானவர் இல்லை. இறுதிப்போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் இறந்திருக்கிறார்கள் அவர்களுக்குத்தான் அந்த அஞ்சலி"

"அவ்வளவு பொதுமக்கள் இறந்தி ருக்கிறார்களா? இந்த விஷயம் எனக்குத் தெரியாது " என்றார் அதிர்ச்சி படிந்த முகத்துடன். 

பாவம் பெரேரா படிப்பது ஒரு இனவாதப் பத்திரிக்கை. பார்ப்பது அரச தொலைக்காட்சி, நம்புவது முற்றுமுழுதாக அரசாங்கத்தை. எப்படி உண்மை தெரியும்? அவரைப் பொறுத்தவரை அரசாங்கம் அறிவித்தபடி, இறுதிப்போரில் இறந்தவர்கள் அனைவருமே புலிகள்தான். இன்றுவரை சிங்களவர்கள் பலரது நம்பிக்கையும் அதுதான்!

எங்கள் பிரச்சினை அவர்களுக்குத் தெரியுமா? என்பதுதான் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்வியாக இருக்கிறது. எப்போதுமே அது அப்படித்தான். அவர்கள் எந்தளவிற்குப் தமிழர் பிரச்சினையைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்?

றுதிப்போர் ஆரம்பிக்கும் வரையில் இங்கேயுள்ள படித்த சிங்களவர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலரும் யுத்தம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை - நான் சந்தித்த அனுபவங்களின்படி. புலிகள் குறித்து ஒரு பயம், பிரமிப்பு இருந்தது. விழிகள் விரியப் பேசிக் கொள்வார்கள். சமாதான காலத்தில் யாழ் சென்று வந்தவர்கள் சிலர் வன்னியில் புலிகளைச் சந்தித்தது பற்றியும் அவர்கள் தமக்கு உதவியது பற்றியும் கூறுவார்கள். சிலர் அவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு, வீதி ஒழுங்கமைப்பு விதிகள் பற்றிச் சிலாகித்துப் பேசுவார்கள். யுத்தம் என்பது செய்திகளில் கேட்பது மட்டுமே.

அநேகமாக நான் வேலை பார்த்த அலுவலகங்களில் நான் மட்டுமே தமிழனாக இருப்பேன். மதிய உணவின்போது நான் எல்லோருடனும் சேர்ந்து கூட்டமாகச் சாப்பிடுவதை எப்போதும் விரும்புவதில்லை. அது ஏனோ ஒரு அசௌகரியம். ஒருவேளை ஆரம்பகால அனுபவமாகவும் இருக்குமோ என யோசித்ததுண்டு. கொழும்பு வந்த புதிதில் சாமாதான காலம் முடியப் போவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கின. அப்படியே நடந்து மாவிலாறு சம்பவமும் நடைபெற்றிருந்தது.

சாப்பாட்டு மேசை உரையாடல்களில் முக்கிய பேச்சே யுத்தமும் புலிகளும்தான். ஆரம்பத்தில் யுத்தம் பற்றிய எனது பார்வை, தமிழர்களின் நிலை பற்றி என்னிடம் ஆர்வமாகப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் என்ன நினைத்தார்களோ, புலிகள் தரப்பில் 'பேசவல்ல அதிகாரியாக' என்னைப் பாவித்துக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். நானும் முடிந்தவரை பதிலளிப்பேன். சிலநாட்களில் அநேகமான என் பதில்கள், 'இந்தக் கேள்வி எனக்குப் பிடிச்சிருக்கு', 'இந்தக் கேள்வி சுத்தமாகப் பிடிக்கவில்லை'.

எல்லோரும் நல்ல நண்பர்களாக, உதவி செய்பவர்களாக இருந்தாலும், ஒரிருவரிடம் மட்டும் 'இனத்துவேஷம்' அவ்வப்போது பேச்சில் கிண்டலாக வெளிப்படும். ஒருமுறை காலி சென்றிருந்தபோது, கடலில் தூரத்தில் தெரிந்த படகொன்றைக்காட்டி ஒருவர் கேட்டார், "உமா அது எல்டிடி படகுதானா என்று பார்த்துச் சொல்!"

பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் சந்தித்த யுத்தத்தை கொழும்பிலும், வேறு இடங்களிலும் பேரூந்துக் குண்டுவெடிப்புகளூடாகத்தான் நேரடியாகத் தெரிந்துகொண்டார்கள். அது நிச்சயமாக எம்மைப் புரிந்துகொள்ளும் அனுபவமாக இருக்கவில்லை.

பேரூந்துக் குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஒரு காலைப்பொழுதில், ஹர்ஷா சோகமும் கோபமுமாக என்னிடம் வந்தான். 'நீங்கள் எங்கள் ஜனாதிபதியைக் கொல்லுங்கள், அமைச்சர்களைக் கொல்லுங்கள்.. ஏன் அநியாயமாகக் குழந்தைகளை எல்லாம் கொன்றிருக்கிறீர்கள்?' என்றான். உடனே புள்ளி விபரங்களை எடுத்துக்கூறி, நீங்கள் கொல்கிறீர்கள், அதனால் நாங்களும் என்று சொல்வதைப் போன்ற அபத்தம் வேறேதும் இருக்க முடியாது என்பதால் அன்றைய பொழுது மௌனமாகவே கடந்துபோனது. அன்று யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.

எங்கள் பிரச்சினை அவர்களுக்குத் தெரியுமா? எந்த அளவிற்கு அவர்கள் நம் பிரச்சினையைப் புரிந்துகொண்டுள்ளார்கள்? அதைத் தெரிவிப்பதற்கான வழிவகைகள் ஏதேனும் தமிழர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டதா என்பது தெரியவில்லை, ஆனால் சிங்களவர்கள் சிலர் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.

திருகோணமலையில் வேலை செய்த அலுவலகத்தில் ஒரு சிங்கள அங்கிள். நல்ல மனிதர்தான். ஆனால் பாருங்கள் ஓர் புத்தகம் வைத்திருந்து அவரைச் சந்திக்க வரும் சிங்கள நண்பர்களுக்கு அன்பளிப்பது வழக்கம். எழுதியது அவரது நண்பராம். இனப் பிரச்சினையைப் பற்றிப் புரிந்துகொள்ள கட்டாயம் படிக்கவேண்டும், வரலாறு தெரியவேண்டும் என்பதற்காக அதனை வழங்குவதாகக் கூறினார். அந்தப்புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவத்தினரைப் புலிகள் கொன்றதிலிருந்துதான் இனப்பிரச்சினை ஆரம்பிக்கிறது. அதுதான் தோற்றுவாயாம். இப்படி ஆளாளுக்கு தங்கள் விருப்பப்படி வரலாற்றை எழுதிப் பரப்பிக் கொண்டுள்ளார்கள். அலுவலகங்களில் பேசிப்பழகிய வரையில் எங்காவது ஓரிருவர் தவிர, அவர்கள் யாருக்கும் எந்தப் புரிதலும் இல்லை என்பதுதான் உண்மை. அல்லது புரிந்துகொள்ள விருப்பமில்லை. படித்தவர்கள், இணையத்தை நாள்தோறும் பயன்படுத்துபவர்கள் நிலைமையே இப்படி.

சிங்களவர்களில் பலருக்கு இன்னும் தமிழர்கள் யார் என்பது தெரியாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவில் இருந்தோ, ஆபிரிக்காவில் இருந்தோ வந்தவர்களாக இருக்கலாம். அல்லது செவ்வாய்க் கிரகத்திலிருந்துகூட வந்திருக்கலாம். பலர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என நம்புகிறாரகள். ஆனால் தமிழர்கள் வந்தேறிகள் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அப்படித்தான் அரசியல்வாதிகளால் அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவர்களின் வரலாற்றுப் பாடப்புத்தகம்கூட அப்படிச் சொல்லிக் கொடுக்கலாம். தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வக்குடிகள் அல்ல. அவர்கள் இங்கே வாழலாம் ஆனால் நாட்டைப் பிரிக்க, அதிகாரத்தில் உரிமை கோர எல்லாம் முடியாது என்பதுதான் இனவாத அரசியல்வாதிகளின் பேச்சாக இருந்துவருகிறது. 

எதற்காக இந்த யுத்தமெல்லாம்? அடிப்படையில் என்னதான் பிரச்சினை? என்கிற விவரமெல்லாம் சாதாரண ஒரு சிங்களப் பிரஜைக்குத் தெரியாது. அல்லது தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அதனைச் சிங்கள அரசியல்வாதிகளோ, ஊடகங்களோ தெரியப்படுத்த விரும்பியதில்லை. நன்கு படித்த சிங்களவர்களுக்கே இனப் பிரச்சினை பற்றிய தெளிவில்லை எனும்போது சாதாரண ஒரு சிங்களப் பிரஜை, எங்கோ கிராமத்தில்வாழும் பாமர மக்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் பார்வையில் இனப்பிரச்சினை என்பது, வந்தேறிகளான தமிழர்கள் புலிகள் மூலமாக நாட்டைத் துண்டாட முயற்சித்தார்கள். அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து, படையினரின் உயிர்த்தியாகத்தின்மூலம் தீவிரவாதிகளை ஒழித்து நாட்டைக் காப்பாற்றிவிட்டார்கள். புலிகள் ஒரு மோசமான தீவிரவாதிகள். அவர்கள் நம் நாட்டின் ஒருபகுதியைப் பிடித்து வைத்திருந்தார்கள். அரசாங்கம் அவர்களிடமிருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்து அமைதியான வாழ்வுக்கு வழி செய்திருக்கிறது என்பதுதான் பலரது புரிதல்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் இப்பொது ஒரு அமைதியான, சுபீட்சமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பெரும்பான்மையானோரின் நம்பிக்கை.

"இனி நீங்க யாழ்ப்பாணம் போகலாம் என்ன?"

சந்தோஷமாக சிரித்துக்கொண்டே உடன் வேலை பார்க்கும் சிங்கள நண்பர்களால் கேட்கப்பட்ட இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத தமிழர்கள் இருப்பார்களா என்பது சந்தேகம். 'ஒக்கம இவறாய்' (எல்லாம் முடிந்தது) எனக் குறிப்பிடப்பட்ட இறுதி யுத்ததின்பின்னர் அவர்களின் விசாரிப்பு அது. அவர்களைப் பொருத்தவரை யாழிலும் யுத்தம் நடைபெற்றது. அதனால்தான் நாங்கள் போகமுடியாமல் கொழும்பில் இருக்கிறோம் என்றே நம்பிக்கொண்டிருந்தார்கள். பலருக்கு யாழ்ப்பாணம் வன்னியில்தான் இருக்கிறது அல்லது வன்னி யாழில் இருக்கிறது என்கிற நம்பிக்கை. யுத்த காலத்தில் இலங்கை இணையத்தளங்களில் இராணுவம் அப்போது முன்னேறிய நிலைகளை அப்டேட் செய்துகொண்டிருந்தார்கள். எனது அலுவலகத்தில் பலர் அப்போதுதான் இலங்கை வரைபடத்தையே முதன்முதல் பார்ப்பதுபோல பார்த்தார்கள். ஒரு நண்பருக்கு மதவாச்சி வவுனியாவுக்குக் கீழே இருந்தது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதுவரை அவர் மேலே இருந்ததாக நம்பிக் கொண்டிருந்தாராம்.

யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதை கிடையாது என்பதே அவர்களுக்குப் பேரதிர்ச்சி. கப்பலிலும், விமானத்திலும்தான் செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது, தேவையுமில்லாதது. இவர்கள் எல்லோரும் நாளாந்தம் இணையத்தைப் பயன்படுத்தும் வசதியுள்ளவர்கள். அநேகமானோர் பொறியியல் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“இனி உங்களுக்கு எல் டி டி பயம் இல்லைத்தானே நீங்க யாழ்ப்பாணம் போகலாம் என்ன?” என ஒரு படி மேலே சென்று அதி விவரமாகப் பேசுபவர்களிடம், 'ஙே' என்றொரு பார்வை பார்ப்பதே மிகச்சிறந்த பதிலாக இருந்திருக்கிறது.

பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறோமோ இல்லையோ ஆனால் தீர்வு சொல்வதில் எல்லோருக்குமே ஒருவித ஆர்வமிருக்கிறது.

றுதிப்போர் உச்சமடைந்திருந்த காலம். புதிய வீட்டுக்கு மாறிக் கொண்டிருந்தோம். பொருட்களை ஏற்றிக்கொண்டு Canter Lorry யின் முன்புறம் நானும் நண்பனும் டிரைவரின் அருகில் அமர்ந்திருந்தோம். டிரைவர் சிங்களவர்தான். வாட்டசாட்டமாக இருந்தார். பேச்சுக் கொடுத்தவர் நாங்கள் யாழ்ப்பாணம் என்று தெரிந்ததும். நானும் அங்கே இருந்திருக்கிறேன் என்றார். மாதகல், காரைநகர், ஊர்காவற்துறை, காங்கேசன்துறை எல்லா இடமும் பரிச்சயம் அருமையான இடங்கள், எதுக்கு இந்தச்சண்டை என்றார். 

அவர் கடற்படையில் இணைந்திருந்தார் எனவும், பின்னர் வேலையை விட்டுவிட்டு மத்திய கிழக்கு சென்று சிலவருடங்கள் வேலை பார்த்திருக்கிறார். பணம் சேர்ந்ததும் வாகனத்தை வாங்கி இங்கேயே இருப்பதாகவும் சொன்னார். 

"ஒருவேளை ஓடிவந்திருப்பான்" என்றான் நண்பன் மெதுவாக. 
"ஓடி வரல தம்பி ரிட்டையர் பண்ணிட்டு வந்தது "
, இப்போது கொச்சையான தமிழில் பேசினார். அசடு வழிந்துவிட்டு நண்பன் தொடர்ந்தும் பேசினான்.

யுத்தம் அவருக்குப் பிடிக்கவில்லை. எதுக்கு இந்தச்சண்டை என அடிக்கடி சலித்துக் கொண்டார். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஓர் நல்லிணக்கத் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தார். நாங்கள் வெலவெலத்துப் போனோம். இதுவரை யாருமே அப்படியொரு யோசனை சொன்னதாகத் தெரியவில்லை. அவர் சர்வசாதரணமாகக் கூறிவிட்டார். 

"இப்ப பாருங்க மட்டக்களப்ப கருணா அம்மானிட்ட குடுத்தாச்சு அதேமாதிரி யாழ்ப்பாணத்த பிரபாகரனிட்ட குடுத்தா எல்லபிரச்சினையும் ஓவர்"

'யாழ்ப்பாணத்துக்கு ரயில் விட்டாச்சு', 'நல்ல ரோட் போட்டிருக்கு இதெல்லாம் இவ்வளவு நாளா இல்லாம சனம் எவ்வளவு கஷ்டப்பட்டிச்சு?', 'முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததால்தானே இதெல்லாம் சாத்தியமானது?' என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும் மகிழ்ச்சி தெரிவிக்கும் பலர் இருக்கிறார்கள். 

இதெல்லாம் முப்பது வருஷத்துக்கு முதலே இருந்ததுதான் என்பதெல்லாம் பெரியவர்கள் சிலருக்கும் மட்டுமே தெரியும். இளைஞர்கள்? உண்மையில் நாங்கள் யுத்தம் ஆரம்பிக்கும்போது இருந்ததைவிட  இன்னும் பின்னோக்கி வந்துவிட்டோம். இவ்வளவுகால இழப்புகளும், வலியையும் கடந்து இப்போது யோசித்தால் முதலில் இருந்த நிலையை அடைவதேகூட சாத்தியமில்லையோ என்கிற அவநம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது.

போரினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகள் மக்களிடம் திரும்பக் கையளிக்கப்பட்டதா? உடைமைகளை இழந்தவர்களுக்கு சரியானபடி ஈழப்பீடுகள் வழங்கப்பட்டனவா? பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள், தொழில் முயற்சிகள் பற்றியதெல்லாம் சம்பந்தப்படவர்களின் தனிப்பட்ட கவலைகள் என்பதில் எல்லோருமே தெளிவாக இருக்கிறார்கள். தொண்ணூறாம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு இன்னும் விடுவிக்கப்படவில்லை. எல்லாமே பயிர்ச்செய்கை நிலங்கள். அதே முல்லைத்தீவுப் பிரதேசத்திலும். பாதுகாப்புக் காரணங்கள்காட்டி உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவம் கையகப்படுத்தியதை முற்றாக விடுவிப்பார்கள் என்கிற நம்பிக்கையே பலரிடம் இல்லை. 

உண்மையில் 96 இல் யாழ்ப்பாணத்தில் இராணுவம் கைப்பற்றியபோதே வலிகாமம் வடக்கு பிரேதேசத்தை மக்களிடம் கையளித்திருக்க முடியும். அண்மையில் வலிகாமம் பகுதியில் ஒரு குறித்தபகுதி காணிகள் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக, அல்லது பார்வையிட அனுப்பதிப்பதாகச் செய்திகள் வெளியாகின. அதுவே சிங்களப் பெரும்பான்மையினரால் என்னவோ தமிழர்களுக்குப் பெரியதொரு தீர்வுத்திட்டத்தைக் கொடுப்பதுபோலவே ஒரு பரபரப்புச் செய்தியாகப் பேசப்பட்டிருக்கும். ஊடகங்கள் வாயிலாகச் சிங்களமக்கள் அப்படித்தான் உணரக்கூடும். மக்களின் சொந்தக் காணிகளைத் திருப்பிக் கொடுப்பதே என்னமோ அரசாங்கம் பெரியதொரு விட்டுக் கொடுப்பைச் செய்வதுபோல, என்னமோ தமிழீழத்தைப் பெறுவதைப்போல சிக்கலான விடயமாகிவிட்டது. இதற்காகத்தான் தமிழர்கள் போராடினார்கள் என்றுகூட ஒரு பெருங்கூட்டம் நம்பலாம்.

சமீபத்தில் ஒரு சர்ச்சை. இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாடுவது பற்றியது. பாடலாம் அப்படித்தான் இருந்தது என்பது பலர் கருத்து. இல்லை தமிழில் பாடக்கூடாது என ஏதோ ஓர் அமைப்பு சர்ச்சையைக் கிளப்பியது. 

இன்னும் சொந்தமண்ணுக்குத் திரும்ப அனுமதிக்கப்படாமல் இருக்கும் ஓர் வன்னி விவசாயக் குடிமகனோ, யுத்தத்தில் அவயத்தை இழந்து வாழ வழியின்றிக் கஷ்டப்படும் ஓர் இளைஞனோ தேசிய கீதத்தைத் தமிழில் பாடியேயாக வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருப்பார்கள் என்றோ, தமிழில் பாடியே தீரவேண்டும் என அடம்பிடிக்கிறார்கள் என்றோ நான் நம்பவில்லை.

ஆனால் இதையெல்லாம் பார்த்து, தமிழர்கள் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்குத்தான் சண்டைபிடித்தார்கள் என நம்பும் ஒரு கூட்டம் தென்னிலங்கையில் இருக்கும் என நம்பலாம்.

4tamilmediaவில் 2015ல் வெளியானது. 

2 comments:

  1. super...

    ReplyDelete
  2. அருமையான எழுத்து.......... நம்மவர்களுக்கே புரிதல்கள் இருந்ததில்லை.இதில் பெரும்பான்மையினர்,எங்கே.....ஹூம்........///ஒரே ஒரு நெருடல் தான்,ஜீ..........அந்த மாவிலாறு.....அதனால் தான் போர்<?!......உண்மையில் அதை ஒரு காரண்மாக வைத்துத் தான்,இன அழிப்பு நடவடிக்கை ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும்..ஏனெனில்,போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலையீட்டால்,அந்தப் பிரச்சினை சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்ட போதும்..............

    ReplyDelete