Tuesday, May 31, 2011

கடலை,கவிதை,காதல்!


'ஐயப்பன் செல்போனில் பேசுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?' 

கடலை போட்டுக் கொண்டிருந்த கம்பரைப் பார்த்தபோது அப்பிடித்தான் தோணிச்சு!  - கதிரையில் இரண்டு கால்களையும் தூக்கிவைத்துக் கொண்டு வலது கையை காதுக்குக் கொடுத்து, இடக்கையை இடது முழங்காலில் ரெஸ்டில!

தொடர்ந்து சிலநாட்களாக கம்பர் மொபைலும் கையுமாக யாரோ ஒரு பெண்ணுடன் ஒரே கடலைஅது சரி பொண்ணுன்னு எப்பிடி?.... அதான் நம்மாளுங்க கதைக்கேக்க முகத்தைப் பார்த்தாலே தெரியுமேவாயெல்லாம் பல்லாகமூஞ்சியே பல்ப்பாக!


அதிலும் கம்பர் இருக்கானே, அவனிடம் ஒரு பையன் முதன்முதலாக கதைக்கும்போது, நேராகப் பார்க்காமல் பக்கவாட்டில் தலையைத் திருப்பி, முகத்தை பதினைந்து டிகிரி ஏற்றக்கோணத்தில் வைத்து, விழிகளை அதே பதினைந்து டிகிரி இறக்கி வைத்து சிரிக்காமல், அலட்சியமாக, அமர்த்தலாகநாங்களும் சும்மா இல்ல பெரிய ரௌடி தான் என்ற தோரணையில்தான் நோக்குவார்.

அதுவே பெண்ணாக இருந்தால், நேராக முகம் பார்த்து, முகத்தில் பரவசம் கொப்பளிக்க, இரு முனைகளிலும் உதடுகள் ஒட்டியிருக்க, நடுவில் உதடுகளை விரித்து, நான்கு பற்கள் தெரிய சிரித்தவாறே, ' ச்ச்சொல்லுங்கோ' (ஜொள்ளுங்கோ!
- கற்பனை பண்ண முடிகிறதாமுடியலயா! சரி விடுங்க உங்களுக்கு எதுக்கு அந்தக் கருமமெல்லாம்மொத்தத்தில் பார்க்கக் கண்றாவியா இருக்கும்!

நாங்கள் தங்கியிருந்த அந்தப் பெரிய வீட்டில் நண்பர்கள் எட்டுப் பேரில் யார் எங்கு தூங்குவது என்ற ஒழுங்கு கிடையாதுபிரச்சினை கிடையாதுபெரிய ஹாலில் அவனவன் ஒரு நாளைக்கு ஒரு இடத்தில்!அறைக்குள் கட்டில்களில் யாரும் தூங்குவது குறைவுஆனா கம்பர் மட்டும் தனக்கென ஒரு அறையின் மூலை! அந்த ஏரியாவுக்குள் யாரும் போறதில்ல!

அந்தக் கடலை குறித்து சிலர் கேட்டபோது கம்பர் சொன்னது, 'அது பிரண்ட்ஷிப், தப்பா நினைக்கக் கூடாது!'  அதோட விட்டானா? ஒரு ஆணும் பெண்ணும் நட்பா பழகினா தப்பா யோசிக்கும் தமிழ் சமூகத்தை கிழிகிழியென்று அரைமணி நேரம்...நான் கூட ரொம்ப நொந்து போனேன் ஏன்தான் நாமெல்லாம் இப்பிடி 'விளங்காம' இருக்கோம்னு! - நல்லவேளை நானெதுவும் கேட்கல

**********

ஒரு மாலை நேரத்தில், கதிரையில் 'ஐயப்பன் ஸ்டைலில்' உட்கார்ந்திருந்த கம்பரின் கேள்வி..

'ஜீ, உனக்கு கவிதை எழுதத் தெரியும் தானே?'
'இல்லடா'
'சும்மா சொல்லாதே'
'தெரியாதுடா'

'ச்சே என்னடா உன்னைப்பற்றி என்னமோ நினைச்சேன் நிறைய புக்ஸ் எல்லாம் வாசிக்கிறே
'டேய் வாசிக்கிறவனால எல்லாம் எழுத ஏலாதுடா, அது சரி எதுக்கு கேக்கிறே?'

'சும்மா அவளுக்கு அனுப்பத்தான்!'
' பிரண்ட்டுன்னு சொன்னியேடா?'
பிரண்ட்க்கு கவிதை அனுப்பிறதில்லையா? அனுப்பக் கூடாதா?' ( பிரண்ட்ஷிப்புக்கு கவிதையா? புதுக் கலவரமா இருக்கேடா?)
'அப்பிடியா? இவ்வளவு காலமா நீ எனக்கு ஒரு கவிதையும் அனுப்பலையே? - கம்பரைக் கலவரமாக்கி கிடைத்த gap எஸ்கேப்!

பிறகு இரண்டு நாட்களாக இதே தொல்லை.
'மச்சான் உனக்கு வரும்டா, நீ எவ்வளவு நல்லா கதைக்கிறே, திங்க் பண்றே' நமக்கு சம்பந்தமில்லாதத எல்லாம் சொல்லி நல்லா உசுப்பேத்திறான்னு தெரிஞ்சுது! - ஆனா யாருகிட்ட? எவ்ளோ பார்த்திருக்கோம்?

ஆனா ஒரு கட்டத்தில எனக்கே ஒரு சபலம் வந்திட்டுன்னா பார்த்துக் கொள்ளுங்க! 'ஒருவேளை நமக்கு கவிதை வருமோ?' - அட அத விடுங்க! ஆபீசுக்கு வெள்ளை ஜிப்பா போட்டுக்கிட்டே ஜோல்னாப் பைக்குள்ள 'லாப்டாப்' கொண்டுபோறமாதிரி கனவுகூட வந்திச்சுன்னா பாருங்க!

நல்ல வேளை! உடனேயே தெளிஞ்சுட்டேன்தமிழ் கூறும் நல்லுலகிற்கு நிகழவிருந்த அசம்பாவிதம் தடுக்கப் பட்டது. நான் கவிதை எழுதாததைத் தான் சொல்றேன்!

பிறகு கடலை பிசியில் கவிதையை மறந்து விட்டான்
தப்பிச்சன்டா! ஆனா ஒண்ணு! நல்லவேளையா கம்பர் 'லவ்' பண்ணல!   இல்ல கடலைக்கே இப்பிடிக் கண்ணைக் கட்டுதே, இவன் 'லவ்' பண்ண வேற ஆரம்பிச்சுட்டான்னா ஒருபயல் நிம்மதியா இருக்க முடியாதே! ஒழுங்கா தூங்க முடியுமா காதல் கதை சொல்லியே கொலையா கொன்னுருவானுகளே! - நிம்மதியானேன் - ஆனா விதி?

************

அன்று ஏனோ கம்பரை மறந்து கட்டிலில் தூங்கலாம்ன்னு அறைக்குள் போக, கம்பர் படு உற்சாகமாக 'டேய் ஜீ ஆபீஸ்ல வேலை எல்லாம் எப்பிடி போகுது?' ( என்னடா புதுசா அக்கறை?....அய்யய்யோ! அப்போ ஆரம்பிச்சுட்டானா?) - அலேட் ஆகிட்டேன்!

முன்னப் பின்ன நான் தேன் குடிச்ச நரியைப் பார்த்ததில்லை என்றாலும் கம்பரை பார்க்கும்போது ஊகிக்க முடிந்தது!

'......' (அதே தாண்டா!)

'உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா
'......' 

'நான் அவளை லவ் பண்றேன்டா
'....!  நான் வெளில படுக்கிறன்டா மச்சான்! குட்நைட்! 

Saturday, May 28, 2011

தமிழ்ப் பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? - நம்மவர்!


வார இறுதிகளில் நெடுந்தூரப் பேருந்துப் பயணங்கள் பெரும்பாலும் கொடுமையானதாக மாறிவிடுகிறது. 

பேரூந்தில் ஏறியதுமே முதலில் நோட்டமிடுவது எனது சீட்டுக்குப் பின் சீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதையே! இளம்பெண்கள் இருந்துவிட்டால் பகீரென்று விடுகிறது! - அவ்வளவுதான்! அன்றைய பயணம் நரகம்தான்!

சொகுசு பஸ்களை ரிசேர்வ் பண்ணி பயணம் செய்வதன் முக்கிய காரணமே ஏசி, சௌகர்யமான அட்ஜஸ்ட்டபிள் சீட் என்பதால் தூங்கிட்டே பயணிக்கத்தான்! அதாவது மற்றவர்களுக்கு இடையூறில்லாமல், பின்னாலிருப்பவர்களின் முழங்காலில் இடிக்காமல் இருக்கையை சாய்த்து, வசதியாக!

ஆனால் இருக்கையை சாய்க்க விடாது தடுத்தால் எப்படியிருக்கும்? இதைத்தான் செய்து வருகிறார்கள்! - பெரும்பாலான பெண்கள்!

முதல்முறை அப்படித்தான் ஒரு பெண்! மிக அழகான பெண்! பெண்ணின் அருகிலிருந்த அங்கிளிடம் பார்க்கச் சொன்னேன் எவ்வளவு தூரம் அட்ஜஸ்ட் செய்யலாமென்று பார்க்க! அவர் சொன்னார் 'நீங்க தாராளமா சரியுங்க தம்பி'ன்னு. ஆனால் அந்தப் பெண் சிறிதும் அனுமதிக்கவில்லை, அவரும் பேசிப்பார்த்து பலனில்லை! 

நான் எதுவும் பேசவில்லை என்ன பேசுவது? எப்படிப் பேசுவது இப்படியான பெண்மணிகளுடன்? கொஞ்சம் கூட மனிதப் பண்புகள் , அடுத்தவனும் மனுஷன் என்று நினைக்கும் குணம் இல்லாதவர்களைச் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. 

முதலில் எரிச்சலாக இருந்தாலும் அதனாலும் எனக்குத்தானே பாதிப்பு? அப்பத் தோணிச்சு பாருங்க - ஏழு மணித்தியாலம் அந்தப் பெண்ணுக்கு முன்னாலிருந்து பயணம் செய்வதே இவ்வளவு கஷ்டமா இருக்குதுன்னா அதை கல்யாணம் செய்பவன் கதி? - எப்புடியெல்லாம் யோசிச்சு மனசைத் தேத்த வேண்டியிருக்கு?

அப்படியே நிமிர்ந்தவாறே தூக்கமுமின்றி பயணம் செய்து மறுநாள், கழுத்து, உடம்பு வலியால் அலுவலகத்தில் அவஸ்தை! 

இன்னொரு நாள். எனக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒருபெண்! எனது முழங்காலில் அவருடைய இருக்கை சாய நானும் ஒவ்வொரு முறையும் சீட்டில் தட்டுவேன் உடனே சிறிது உயர்த்துவார். சற்று நேரத்தில் காலின்மீது சரிக்க நான் திரும்பவும்....பயணம் முழுவதும் அவஸ்தை தொடர்ந்தது. தூக்கமுமில்லை! 

இவ்வளவிற்கும் எல்லாரும் படித்த பெண்கள். முக்கியமான விஷயம் தமிழ்ப் பெண்கள்! 

ஏன் தமிழ்ப் பெண்கள் மட்டும் இப்படி நடந்து கொள்கிறார்கள்? அடுத்தவன் அவஸ்தைகள், மனநிலையை மதிக்காமல் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி மனசாட்சியே இல்லாமல் வாழ எப்படி முடிகிறது?

சரி! அதைக்கூட விட்டு விடுங்கள்! இவ்வளவு அநியாயம் பண்ணிட்டு, கடைசியில் இறங்கிப்போகும்போது ஏதோ நாமதான் என்னமோ 'ஈவ் டீசிங்' பண்ணினமாதிரி கண்ணகி கசின் ரேஞ்சில ஒரு 'லுக்கு' விடுவாங்க பாருங்க! அதாங்க பெரிய கொடுமை! 

தாங்கள் ஒழுங்காக சௌகர்யமாக அமரும் இந்தப் பெண்கள், மற்றவர்களும் அதே வசதிக்காகத்தான் அதிக விலை கொடுத்து சொகுசுப் பேரூந்துகளில் வருகிறார்கள் என்பதை ஏன் நினைத்துப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்? 

இயல்பாகவே தமிழ்ச் சமூகம் பெண்களுக்குத் தரும் மரியாதையை, ஒரு பரிவை அல்லது சலுகையை தங்களுக்கு ஒரு வேலியாகப் பயன்படுத்திக்கொண்டு வந்து அந்த வேலியே பின்பு தடித் தோலாக மாறிவிட்டதா? 

இந்த மாதிரியான தடித்தோல் பேர்வழிகளிடம் எப்படிப் பேச முடியும்? என்னதான் அநியாயத்தைக் கண்முன்னால்  பார்த்துக் கொண்டிருந்தாலும், ஒரு பெண்ணிற்கெதிராகப்  பேசினா நம்ம நடுத்தர , வயோதிக அன்பர்கள்  சண்டைக்கு வந்துவிட மாட்டார்களா?

அதுவும் அழகான பெண்கள் என்றால் எமது சமுதாயத்துக்கே ஒரு பெரிய வீக்னெஸ் அல்லவா?

இதுக்கென்றே ஒரு கூட்டம் இருக்கே! பெண்கள் துயர்துடைக்க(?!) எங்கடா சான்ஸ் கிடைக்கும்னு அலைஞ்சிட்டு! இது தாய்க்குலத்தைக் காப்பாற்றும் கூட்டமா அல்லது 'கவர்' செய்ய முயலும் கூட்டமா என்பது ஆராயப்பட வேண்டியதொன்று! 

பெரும்பாலான ஆண்கள் வயது வித்தியாசமின்றி இளம்பெண்களைக் கண்டுவிட்டாலே குரலை உயர்த்தி அடிக்கடி அந்தப் பக்கம் ஒரு லுக் விட்டுக் கொண்டே ஹீரோவாக முயற்சி செய்யும் ஒரு சைக்கோ சமூகத்தில், பெண்கள் இப்படித்தான் இருப்பார்களா?

பெண்களையும் , ஆண்களையும் அருகருகே உட்கார இடமளிப்பதில்லை நம்ம தமிழ் ஏரியா பேருந்துகளில்! கலாச்சாரத்தைக் காப்பாற்றும்(?!) முயற்சியாம்! (ஜோடியாக பதிவு செய்தல் ஓக்கே!)  மிக்க நல்லது!அதை அப்பிடியே தனித்தனி வரிசையாகவே மாற்றிவிட்டால், நம்மள மாதிரி அப்பாவி ஜீவனுகள் பிழைச்சுப் போகும்! 

இன்று அதிகாலையும் தூக்கமின்றி வந்தேன்! நாளை திரும்பவும் போகணும்! புதுசா என்ன கொடுமையோ? இப்பவே கண்ணைக் கட்டுது!  

இந்தப் பதிவைப் படிக்கும் பெண்கள் ஒருநிமிஷம் நியாயமாக யோசியுங்கள், உங்கள் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்!  ஏனெனில் நீங்களோ, உங்கள் தோழியோ கூட இதில் அடங்கலாம்!

இதில் ஒட்டு மொத்தமாக எல்லாப் பெண்களையும் குறை கூறவில்லை! மற்றவர்களையும் மனிதராக மதிக்கும் பெண்களும் பலர் இருந்தாலும், நம்மவரில் பெரும்பான்மை இவர்கள்தான்!   
  
நீங்களும் இப்படியான அவஸ்தைகளைச் சந்தித்திருக்கிறீர்களா?ஆண்களால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி நிறையப் பேசுகிறார்கள்! பெண்களால் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை யாரிடம் சொல்வது?

பிராணிகளுக்கு எல்லாம் ப்ளூ கிராஸ் இருக்கு..ஆனா அப்பிராணி ஆண்களுக்கு?

Monday, May 23, 2011

மங்காத்தா, ocean 's Eleven, An Inconvenient Truth!


மங்காத்தா ocean 's Eleven இன் உல்டாவா? முழுவதுமாக இல்லாமல் கொஞ்சமா சுட்டு? - நானா ஒண்ணும் யோசிக்கல! 

இயக்குனர் வெங்கட் பிரபுதான் மங்காத்தா படத்தில் அஜித்தின் கெட்டப், ஹெயார் ஸ்டைல் ஜோர்ஜ் க்லூனி மாதிரி பெப்பர், சால்ட் ஸ்டைலில் இருக்கும்னு சொல்லியிருந்தார்! 

- அதிலும் ஸ்பெஷலா ocean 's Eleven படத்தில் வரும் ஜோர்ஜ் க்லூனி மாதிரி என்றார். அதுதான் உறுத்திச்சு!

                                                                    George Clooney                                                            

ஆமா இந்த 'ஸ்டைல்' விஷயம் ஜோர்ஜ் க்லூனிக்குத் தெரியுமா? தெரிஞ்சா நொந்திட மாட்டாரா? அஜீத்ல ஒரு ஹாலிவுட் லுக் இருக்கு என்பதை மறுக்கமுடியாது! அது பில்லா மாதிரியான  ஸ்லிம் அஜீத் என்றால் ஓக்கே! ஆனா மங்காத்தா அஜீத்ல? 


கதைக்களம் வேறு காமெடி கலந்த குற்றவியல் , காசினோ, கேம்ப்ளிங் அப்பிடி இப்பிடின்னு அதே மாதிரி! அதைமாதிரியே படத்தில ஒரு கூட்டமே நடித்துக் கொண்டிருப்பதாலும் அப்படியிருக்க சான்ஸ் இருக்கு! 
-ஆபீசில மல்லாக்க சாய்ஞ்சிட்டு, சீலிங்கைப் பாத்திட்டே இருந்தேனா, அப்பதான் திடீர்னு தோணிச்சு! 

Ocean 's Eleven

George Clooney  , Brad Pitt , Matt Damon , ஜூலியா ராபர்ட்ஸ் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து, 2001 வெளிவந்த காமெடி கலந்த குற்றவியல் கதை!  பெரும் வரவேற்பினால் பின்னர் அதன் தொடர்ச்சியாக Twelve, Thirteen ம்   
வெளிவந்தது! 

அதெல்லாம் சரி! மங்காத்தா போஸ்டரில எல்லாரும் வழக்கம்போல கோட்-சூட், கூலிங் கிளாஸ மாட்டிட்டு நிக்கிறதுதான்....தப்பா தெரியுதே! - பார்க்கலாம்!   

***********

தெரியாமல் செய்த ஒரு தவறை உணர்ந்து சரி செய்ய முயலும்போது அது... அதைவிட பெரிய தவறாய் முடிந்துவிடுகிறது! 

***********


எவ்வளவு கவனமாக இருந்தாலும் 
முடித்துப் பார்கையில் ஒன்றிரண்டு 
விடுபட்டு - முகச்சவரம்!


***********

An Inconvenient Truth  


புவி வெப்பமடைதல் அதனால் காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஒரு Documentary படம் இது! 2006 இல் வெளிவந்தது! ஒரு நண்பர் DVD தந்தபோது முதலில் பார்க்க விரும்பவில்லை. பிறகு என்னதான் இருக்குன்னு சும்மா பார்க்க நம்ம அல்கோர் (Al Gore) வந்தார் பாருங்க! (அவர்தான் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்ல முதன்முறை புஷ்கூட போட்டியிட்டாரே!)

வந்த உடனே இப்பிடித்தான் ஆரம்பிச்சார்,   I am Al Gore; I used to be the next President of the United States. அல்கோர் மக்களுக்கு ஸ்லைட்ஸ் ஷோ மூலம் விளங்கப் படுத்துகிறார்! 

காட்சிகள் (அனிமேஷன்?), இசை எல்லாம் அட்டகாசம்! அதாலதான் பார்த்தேன்!  

டாகுமெண்டரிக்கான  Academy Award வென்றபடம்! பல நாடுகளின் பாடசாலைகளில் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாம் இந்தப்படம்!   


Friday, May 20, 2011

முரளி இந்தியாவிடம் ஏதும் பெற்றுக் கொண்டாரா?


'முரளி இந்தியாவிடம் ஏதும் பெற்றுக் கொண்டாரா?'
'ஆம்..! அவரின் மனைவியை!'
'ஹா ஹா ஹா! நான் அதைக் கேட்கலை..!'

உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபின்பு திடீரென்று ஒரு பெரும்பான்மையின (சிங்கள) மாமா அலுவலகத்தில் இப்படிக் கேட்டதும் எனக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, கோபம் எல்லாம் கலந்து கட்டிய ஒரு உணர்வு! 
பயங்கரக் கடுப்பாகித்தான் அப்படிச் சொன்னேன்!

இலங்கை அணிக்காகத் தன்னை அர்ப்பணித்து ஒரு தமிழனாக வெளிப்படுத்திக் கொள்ளாமல் வாழ்ந்து வந்த ஒருவரை அவரின் நேர்மையைச் சந்தேகிப்பது சகிக்கமுடியாமல் இருந்தது.

சில வருடங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியை நடாத்தி வந்தார் (தூர்தர்ஷன்?)! ஒருமுறை அதில் கலந்து கொண்ட முரளி ஆங்கிலத்திலேயே உரையாட, தமிழில் பேசுமாறு ஸ்ரீகாந்த் கேட்க, தனக்கு தமிழ் பேசி பழக்கமில்லை, பேச வராது அப்பிடி இப்பிடின்னு என்னென்னமோ கூறி....கடைசியில் கெஞ்சிக் கேட்டு தமிழில் ஓரிரு வசனம் பேச வைத்தார் ஸ்ரீகாந்த்! (பார்க்கப் பயங்கரக் கடுப்பாயிருந்தது!) 

உள்ளே கொந்தளித்துப் போய் இறுகிய குரலில் சொன்னேன் 'அப்படி ஒரு அவசியம் முரளிக்கு இல்லை. ஒரு தமிழனா இருப்பதால் தான் சந்தேகப் படுகிறீர்களா?' அதுக்கு அப்புறம்தான் எல்லா இலங்கை அணி வீரர்கள் மீதும் சந்தேகம் இருப்பதைச் சொன்னார். இருந்தாலும் முதலில் தமிழன்தானா? எத்தனை பேர் இப்பிடி யோசிக்கிறான்களோ?

************

Hats off வெற்றிமாறன்!




ஒரு அருமையான படத்திற்கு நான் மிகவும் ரசித்துப் பார்த்து உருப்படியா எழுதிய ஒரே தமிழ்ப்படம்! என்ன ஒன்று படத்தில் காதல் என்ற ஒன்று இல்லாவிட்டால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்!  ஆனா அப்படியிருந்தா பாடல்கள் இருந்திருக்காதே நடன இயக்குனருக்கும் விருது! மறக்க முடியுமா தனுஷின் ஆட்டம்! தனுஷுக்கு மிகவும் பொருத்தமான விருதுதான்! சிறந்த இயகுனர், சிறந்த திரைக்கதை - hats off வெற்றிமாறன்!

************


பிரகதீஸ்வரர்தான் காப்பாற்றணும்!

பொன்னியின் செல்வன் படம் நிறுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்! இப்போதைக்கு எனக்கு மிக்க மகிழ்ச்சியான செய்தி இதுதான். பொன்னியின் செல்வன் வாசித்தவர்களுக்குப் புரியும்! யாரையும் அந்தப் பாத்திரங்களில் பொருத்திப்பார்க்க முடியாது!

மணிரத்னம் பொன்னியின் செல்வனில் 'கை' வைக்கிறார் என்றதுமே பெரும் மன உழைச்சலாயிருந்தது! என்னென்ன கொடுமையெல்லாம் பார்க்கணுமோன்னு! ஏற்கெனவே செல்வராகவன் சோழப்பேரரசைச் சின்னா பின்னமாக்கியிருந்தார். அதைவிடக் கொடுமை ஆயிரத்தில் ஒருவனைப் பார்த்துவிட்டு அதை நம்பி தமிழன் வரலாறு பேசும் பயபுள்ளக இம்சை!

மணி படமா எடுக்கிறார்ங்கிறதைவிட வெந்த சோழர் புண்ணில பாண்டிய வேலைப் பாய்ச்சின மாதிரி இருந்தது நம்ம டாக்டர் விஜய்தான் வந்தியத்தேவன் என்பது! மணிக்குக் கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லையா? ஏன் இந்தக் கொடூரமான காமெடி? 

நிறுத்தப்பட்டதாகச் சொன்னாலும் திரும்பவும் ஆரம்பிச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு - பிரகதீஸ்வரர்தான் காப்பாற்றணும்!

***************

The Hangover II (2011)




The Hangover (2009) படத்தின் இரண்டாம் பாகம் மே 26 ரிலீசாம்! முதல் பாகம் செம்ம அட்டகாசம்! என் நண்பனுக்கு சொன்னேன். அவனுக்குப் பிடிக்கல. காமெடி என்பது வாய்விட்டுச் சிரிப்பது மட்டுமல்லவே  சிறு புன்முறுவலை வரவைப்பதும் கூட! தெனாலியா பஞ்சதந்திரமா சிறந்த நகைச்சுவை என்று கேட்டால் நான் பஞ்சதந்திரத்தைத்தான் சொல்வேன்! - ரசனைகள் பலவிதம்!

லாஸ் வேகாசில் இரவு ரூம் போட்டு தண்ணி அடிக்கிறார்கள்  நாலு நண்பர்கள்! விடிந்தால் ஒருவனைக்காணவில்லை.அவனுக்கு நாளை திருமணம் வேறு! நேற்றிரவு நடந்தது சுத்தமா யாருக்கும் நினைவில்லை - பிறகு என்னவாகிறது? - இதுதான் கதை! காமெடில பின்னியிருப்பார்கள்! 

சாம்பிளுக்கு ஒன்று - ஆலனின் தந்தை டோகிடம் தனது காரைத் தந்துவிட்டு சொல்கிறார்.
Don't let Alan to drive the car. because something wrong with him nowadays!  
இதைச் சொல்லும்போது ஆலன் சீரியஸாக தனது நாய்க்கு லிப் டு லிப் கிஸ் பண்ணிட்டிருப்பான்!

இரண்டாம் பாகம் எப்படியோ பார்க்க வேண்டும்!
  

Wednesday, May 18, 2011

Dancer in the Dark

சல்மாவின் முகத்தில் கறுப்புத் துணியைப் போர்த்தி, கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டுகிறார்கள். "என்னால் மூச்சுவிட முடியவில்லை நான் மூச்சு விடவேண்டும்" அலறுகிறாள் சல்மா. அருகில் நிற்கும் பெண் அதிகாரி முகத்துணியை அகற்ற, அது விதிமுறைகளுக்கு எதிரானது கத்துகிறான் இன்னோர் அதிகாரி. "அதற்கு அவசியமில்லை. அவள் பார்வையிழந்தவள்" என்கிறாள் அந்தப்பெண் அதிகாரி.

"ஜீன்...!" மகன் பெயரைக் கூப்பிட்டு சத்தமாக அழுகிறாள் சல்மா. கீழே அமர்ந்திருக்கும் தோழி ஓடிவந்து கட்டி அணைத்து "ஜீன் வெளியில் இருக்கிறான், இதை உன்னிடம் கொடுக்கச் சொன்னான்" அது அவனது மூக்குக் கண்ணாடி! "ஒப்பரேஷன் முடிந்துவிட்டதா? அவனால் இப்போது நன்றாகப் பார்க்க முடிகிறதா?"என மகிழ்ச்சியோடு கேட்கிறாள் சல்மா! கண்ணாடியைப் பற்றிக் கொண்டதும் அழுகை நின்று, அமைதியாகி, இப்போது அவள் சன்னமான குரலில் பாடத் தொடங்குகிறாள் சல்மா.

பாடல் திடீரென்று தடைபட்டு, பலகை உடையும் ஓசை....தரையில் விழுகிறது மூக்குக் கண்ணாடி.... ஆழ்ந்த அமைதி!


சல்மா - செக்கோஸ்லாவாக்கியாவிலிருந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து வாழ்பவள். ஈயத்தகடுகளை பாத்திரமாக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலை. பார்வைக்குறைவு காரணமாக அவள் செய்யும் தவறுகளால் அடிக்கடி இயந்திரங்கள் செயலிழக்கின்றன. அதனால் மருத்துவ சான்றிதழ் உதவியுடன் வேலையை உறுதி செய்துகொள்கிறாள்.

பார்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் சல்மா, தொழிற்சாலையில் இயங்கும் இயந்திரங்களின் ஒலிக்கேற்ப, அந்த ரிதத்தில் ஸ்டெப்ஸ் போட்டு ஆடுவதும், கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டும்  தனது மனதின் வெறுமையைப் போக்க முயற்சிக்கிறாள். சல்மாவின் மகன் ஜீன். அவனுக்கும் அதே பரம்பரை நோயான கண் பார்வைக் குறைவு இருக்கிறது! அவனுக்கு சத்திரசிகிச்சை செய்தால் குணமாகிவிடும். அதற்காக, தான் உழைக்கும் பணத்தையெல்லாம் ஒரு சாக்லேட் டப்பாவில் இட்டு, ரகசியமாக பீரோவில் வைத்து சேமித்து வருகிறாள்!

அவளிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரான போலீஸ்காரர் பில், அவரின் மனைவி இருவரும் சல்மாவிடம் அன்பாக நடந்து கொள்பவர்கள்! ஒருநாள் அவளது வீட்டிற்கு வரும் பில் தனது கவலைகளைக் கூறுகிறார். கடன் காரணமாக தனது வீட்டை வங்கியிடம் இழக்கப் போவதாய்க்கூறிக் கலங்க, அவருக்கு தைரியம் சொல்லும் சல்மா, அதுவரை மறைத்து வைத்திருக்கும் தனது ரகசியத்தைச் சொல்கிறாள். சிறிது நாளில் முற்றாகப் பார்வையை இழக்கப் போகும் தான், மகனின் சிகிச்சைக்காகவே அமெரிக்கா வந்து தங்கிருப்பதாய்க் கூற, ஆச்சரியப்படும் பில், அவளது மன உறுதியைப் பாராட்டுகிறார்.


ஒருநாள் காரில் அவளை அழைத்துவரும் பில் தனக்கு கடனாகப் பணம் தேவை எனவும், ஒருமாதத்தில் திருப்பித் தருவதாகவும் கூறுகிறான்.சல்மா தன்னிடமுள்ள பணம் ஜீனுக்கானது, அதைத்தர முடியாதென்று மறுக்கிறாள். தான் அதைக் கேட்கவில்லை எனக்கூறும் பில், தனக்கு சுட்டுக் கொண்டு தற்கொலை செய்யலாம் போலுள்ளது என்று கூற, அவருக்கு ஆறுதல் சொல்கிறாள் சல்மா.

ஒருநாள் சல்மா வீட்டிற்குவரும் பில், விடை பெற்றுச் செல்வது போல சென்று, வீட்டிற்குள் மறைந்து நின்று, அவள் பணம் மறைத்து வைப்பதைப் பார்த்து விடுகிறார். மறுநாள் சல்மா, அவளது தொடர் கவனயீனத்தைக் காரணம் காட்டி அவள் பணிபுரியும் தொழிற்சாலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்படுகிறாள். வீட்டிற்கு வரும் சல்மா, தனது சேமிப்புப் பணம் எதுவும் இல்லாத காலி டப்பாவைப் பார்த்து அதிர்ந்து, நேராக பில் வீட்டிற்கு வருகிறாள். அங்கே அவளது பணத்துடன் பில்!

சல்மா பணத்தை எடுக்க, கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் பில், தன்னைக் கொன்று விட்டு பணத்தை எடுத்துச் செல்லுமாறு கூறி சல்மா கையில் துப்பாக்கியைத் திணித்து, பணத்தைப் பறிக்கிறான்.இந்த இழுபறியில் தவறுதலாக துப்பாக்கி வெடிக்கிறது. படுகாயமடைந்த நிலையிலும் பில், பணத்தை விடாமல் பற்றிக் கொண்டு,தன்னைக் கொன்றுவிடுமாறு கெஞ்சுகிறார். மகனின் கண்பார்வை தவிர வேறு எதையுமே எப்போதும் சிந்திக்காத சல்மா, அருகிலிருந்த ஒரு மரப்பெட்டியை எடுத்து தலையில் அடிக்கிறாள்.

அங்கிருந்து நேராக நண்பர் ஒருவரின் உதவியுடன் கண் மருத்துவரிடம் தன் மகனின் சிகிச்சைக்காகப் பணம் கட்டுகிறாள். போலீசார் அவளைக் கைது செய்கிறார்கள். கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது.  



மிகவிரைவில் விதிக்கப்படும் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள். பார்வையையும் முற்றாக இழந்து, மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், ஆரம்பத்தில் சத்தமிட்டு அழும் சல்மா, மெல்ல மெல்ல அந்த சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டு, அங்கு கேட்கும் ஒலிகளை இசையாக்கி, மெல்லிய குரலில் பாடிக்கொண்டும், சிறிய ஸ்டெப்புகள் போட்டுக்கொண்டும் அதிலேயே லயித்திருக்கிறாள்.

சல்மாவின் தோழி அவளைத் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்ற, ஒரு வக்கீலை ஏற்பாடு செய்கிறாள். அதற்குச் சம்பளமாக தன் மகன் கண் சிகிச்சைக்காகச் சிறுகச் சிறுகச் சேமித்த பணம்தான் பயன்படப்போகிறது என்றதுமே சல்மா கோபமாகப் பேசுகிறாள். மறுத்து விடுகிறாள். அவள் தோழி கேட்கிறாள் "ஜீன்க்கு அவன் அம்மா உயிரோடிருப்பது முக்கியம் இல்லையா?" "எனக்கு அவன் கண்பார்வையுடன் இருப்பதுதான் முக்கியம்" என்கிறாள் சல்மா!  
சிறைக்கு தன்மகன் வந்து பார்ப்பதையும் அவள் விரும்பவில்லை. "அவன் இந்த நிலையில் என்னைப் பார்க்க வேண்டாம்"



சல்மாவின் இந்த 'கொடூரமான கொலைக்குற்றத்திற்கான'மரண தண்டனைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில்  சல்மாவுக்கெதிராக வழக்கறிஞர் முன்வைக்கும் வாதங்களில் ஒன்று, "இவள் மனிதகுலத்திற்கு சிறந்தது கம்யூனிசமே என்று கூறியிருக்கிறாள். நமது (அமெரிக்க) நாட்டின் கொள்கைகளை வெறுக்கிறாள்!"

தூக்குத் தண்டனையை நிறைவேற்றப் போகிறார்கள். மேடை இருக்கும் தளத்துக்குக் கீழே, சல்மாவின் தோழி உட்படப் பலர் அமர்ந்திருகிறார்கள். தூக்குக் கயிறை மாட்டும்முன் கறுப்புத் துணியால் முகத்தை மூட, பயத்தில் சல்மா அழுகிறாள். நிற்க முடியாமல் துவண்டு விழுந்து விடுகிறாள். ஒரு பலகையில் அவளைக் கிடத்தி நடுங்கும் கைகளைப் பிடித்து, கால்களையும் பலகையோடு பிணைத்துக்கட்டி, பின்னர் பலகையை நிமிர்த்தி அபப்டியே அவளை நிற்க வைத்து.... பின்னர் ஆரம்பத்தில் சொன்ன அந்தக்காட்சி!

- பார்த்து ஒருவாரத்திற்கு காட்சிகளின் பாதிப்பு தொடர்ந்து, பெரும் மன உளைச்சலைக் கொடுத்தது. ஏண்டா பார்த்தோம் என்று தோன்றியது!

2000 ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் இரண்டு Cannes Film Festival 2000 விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுக் கொண்டது.

இயக்கம் - Lars Von Trier
மொழி - English
நாடு - Denmark

தூக்குத்தண்டனை அவசியமா இல்லையா என்ற கேள்விகள், குற்றங்கள் குறைய கடுமையான தண்டனைகள் அவசியம் என்ற வாதங்கள் இவற்றைத் தாண்டி, குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையிலேயே நீதியான முறையில் தீர விசாரிக்கப் படுகின்றனவா? சட்டம் எந்த நாடாகிலும், எல்லாத்தரப்பு மக்களுக்கும் நியாயமாக இருக்கிறதா?

திட்டமிட்டு இன அழிப்பையோ, கொலைகளையோ செய்யும் பலர் சட்டத்தின் ஓட்டைகள், அதிகார பலங்கள் காரணமாக தப்பித்து வாழும்போது, சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாக ஆக்கப்பட்ட சல்மா போன்ற அப்பாவிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதை எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்? இதுவரை முறையான விசாரணை இன்றி செய்யாத குற்றத்திற்கு மரணதண்டனை பெற்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். பலவருட சிறைத்தண்டனையில் எத்தனைபேர்! நான் இதை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட உலகின் எங்கோ,ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் தான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை விதிக்கப்படலாம்!

டிஸ்கி: மூன்று வருஷத்துக்கு முதல் பார்த்தது! இப்போ எழுதுவற்காக 'லைட்'டா பார்க்கக்கூட முடியல! மன தைரியமுள்ளவர்கள் பார்க்கலாம். முக்கியமாக மரண தண்டைனையை ஆதரிப்பவர்கள் அவசியம் ஒருமுறை பாருங்கள்!

Sunday, May 15, 2011

இனி சரவெடி ஆரம்பம்!

தமிழினத் தலைவர்?
உண்மையில் தமிழினத்தின் தலைவராவதற்கு கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பத்தை தனது சொந்த அரசியல் காரணங்களுக்காக் கோட்டை விட்டு இப்போது கோட்டையையும் விட்டு விட்டார்!


ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யாமல் விட்டிருந்தால் கூட ஒரு சின்ன வருத்தத்தோடு கடந்து போயிருக்கும்! அனால், ஒரு இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது தனது குடும்ப அரசியலுக்காக மிகக்கேவலமான முறையில் விளையாட்டுத்தனமாக மூன்று மணிநேர உண்ணா விரதமிருந்தது கூட போனாப் போகுதுன்னு விடலாம்...அதெப்படி கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் தனது போராட்டத்தால் இலங்கை தாக்குதலை இடைநிறுத்திவிட்டது என்று கூறி...? (உண்மையில் அந்த மூன்று மணி நேரத்தில் படு கோரமான தாக்குதல் நடத்தப்பட்டது!) அந்த அதிர்ச்சிதான் தாங்க முடியல! அது...

ஜெயிலுக்குப் போகும் கனிமொழி சிரித்தவாறே கையசைத்துக்கொண்டு போஸ் கொடுக்கும்போது கலைஞருக்கு ஏற்படப்போகும் அதிர்ச்சி இருக்கே அதைவிட அதிகமான அதிர்ச்சி!

உண்மையாகவே அந்த நேரத்தில் மட்டுமாவது சற்று நேர்மையுடன் நடந்திருந்தால், கனி மொழி உள்ளிட்டவர்கள் உண்மையாகவே ராஜினாமாச் செய்ய வைத்து, காங்கிரசுடனான கூட்டணியை ரத்துச் செய்திருந்தால், உண்மையாகவே உலகத் தமிழர்களின் தலைவராக என்றைக்குமே கொண்டாப்பட்டிருப்பார்!

இனி...?
எந்தக் குடும்பத்துக்காக பாடுபட்டாரோ, அவர்கள் ஒருவருக் கொருவர் குழிபறித்துக் கொள்வதை, காலை வாருவதைப் பார்த்துக்கொண்டு..

ஆனா ஒண்ணு! குடும்பத்தில ஒரு பயபுள்ள ராத்திரி நிம்மதியா தூங்க முடியாது! எந்தச் சாமத்தில யாரோ..?

கலைஞரின் கதை, வசனத்தில் பல படங்கள் வெளிவரக்கூடிய அபாயமான சூழ்நிலை இருந்தாலும், இனி அவரின் படங்களை கலைஞர் குடும்ப வாரிசுகளே தயாரிக்க வேண்டிய நிலை இருப்பதால் சூழ்நிலையின் தாக்கம் சற்றுக் குறைவாகவே!

விடுகதையா இந்த வாழ்க்கை..?


வழக்கை எதிர்கொள்ள வடக்கே நீ போனால் நாங்கள் போவதெங்கே...நாங்கள் போவதெங்கே! - கலைஞர்.

*******************

இனி சரவெடி ஆரம்பம்!


சண்டைன்னா மக்கள் சாகத்தான் செய்வார்கள்! - மிகத் தெளிவாக தனது ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாட்டை தெரிவித்துக் கொண்டவர். 
பட், அம்மாவின் இந்த நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது! தான் கொண்ட நிலைப்பாடு சரியோ, தவறோ அதை மழுப்பாமல் நேரடியாகத் தெரிவிக்கும் துணிச்சல் தான் அது!

ஆட்சிக்கட்டில் சார்ந்து ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் கலைஞரைவிட எப்போதுமே எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, அதைத் தெளிவாகச் சொல்வது அம்மாவின் நேர்மை! 

ஆனாலும் கடைசிநேர பதட்டத்திலோ என்னவோ தமிழீழம் அமைக்க உதவி செய்வேன் என்று ஒரு 'பிட்'டைப் போட்டார். ஆனா அது வெறும் 'பிட்'டுத தான் என்பது உணர்ந்தோ என்னவோ யாருமே அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை! அதேபோல் இந்தமுறை வென்றதுமே ராஜபக்சேவை போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவேன் எனக் கூறியதாகச் செய்திகள்! - இதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது! ஏதோ வென்ற மகிழ்ச்சியில் ஒரு உற்சாகத்தில் கூறிய வார்த்தையாக எடுத்துக் கடந்து செல்ல வேண்டும். ஏனெனில் இப்போதே அவர் அதை மறந்திருக்கக்கூடும்!

அப்படியே அவர் உண்மையாகவே (ஒரு பேச்சுக்கு) நினைத்தாலும், ராஜபக்சவைக் காப்பாற்ற இறுதிவரை இந்தியா துணை நிற்கும்போது (நிற்கும்) எப்படி சாத்தியம்?

கொஞ்சமாவது யோசிக்கத் தெரிந்த ஈழத்தமிழர்கள் பலருக்கும் இங்கே தெரிந்திருந்த உண்மை இந்தியா எப்போதுமே ஈழத்தமிழருக்கு எதிராகவே இருக்குமென்பது!

கொஞ்சமாவது யோசிக்கக் கூடிய இந்திய மத்திய அரசியல்வாதிகள் தெரிந்திருக்கும் உண்மை, இலங்கை எப்போதுமே இந்தியாவிற்கு நன்றியுடனோ, விசுவாசத்துடனோ இருக்கப்போவதில்லை! 

சரி அதெல்லாம் இருக்கட்டும்...

ஆமா, அந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் இப்பல்லாம் சரியா வேலை செய்யுதா?

அந்தக் கண்ணகி சிலை பத்திரமா இருக்கா?

இனி சீமான், வைகோ போன்றவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து பேச முடியுமா? இல்லை பேசினால் ரிவிட் அடிக்கப்படுவார்களா?

****************

கனிமொழி சார்பில் வக்கீல் வண்டு முருகன்....

ராங்கா பேசினா என்ன ராடியா கூட பேசினா என்ன அதெப்பிடி ஒட்டுக் கேக்கலாம்? ரெண்டு பேர் பேசிக்கிட்டிருந்தா நாகரீகமா நழுவிப் போயிடனும்கிற அடிப்படை நாகரீகம் கூடவா தெரியாது? அதானேய்யா உலக வழக்கம்? கடுப்பேத்துகிறார்கள் யுவர் ஆனர்!

தபத....ப..உங்களுக்குத் தெரியாத சட்டமில்லை...! நீங்களே பாத்து ஏதாவது பிரிவுல .....வரட்டுங்களா!

கலைஞர் ஐயா உள்ள வச்சு வாளமீன் குடுப்பேங்கிறாங்க....வஞ்சிரமீன் குடுப்பேங்கிறாங்க....அயிரமீன் குடுப்பேங்கிறாங்க...சுறாகூட குடுப்பேங்கிறாங்க...

ஆனா ஜாமீன் மட்டும் குடுக்க மாட்டேனுட்டாங்கையா...அவ்வ்வ்வ்!

*****************

கொஞ்சம் ஓவராய்த்தான் போயிட்டமோ?


Saturday, May 14, 2011

Children of Heaven

சிறுவர்களின் உலகம் எப்போதுமே அலாதியானதுதான்! கள்ளங் கபடமற்ற, நாளையைப் பற்றிய கவலைகளற்ற அந்தச்சிறுபிராயம் பற்றிய ஏக்கங்கள் என்றும் மனதில்! விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களின் உற்சாகக் குரல்களோ, அல்லது நாம் சிறுவயதில் ரசித்த ஒரு பாடலோ நம்மை சடுதியாக அந்தப் பருவத்துக்கே கூட்டிச் சென்று விடுவதை நாம் உணர்கிறோமல்லவா!


சிறுவர்கள் அலியும், சாராவும் ஒரு ஏழைக்குடும்பத்தின் அண்ணன் தங்கைகள்.ஒருசிறிய வீட்டில் கைக்குழந்தையுடன் நோயுற்ற அம்மா. தந்தை வேலைக்குச் சென்றிருக்க, வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கச் செல்லும் அலியிடம், தனது பிய்ந்த 'shoe' வைத் தைத்து வருமாறு கூறுகிறாள். அலி அந்த ஷூ வைத் தொலைத்து விடுகிறான்.

தேடிப் பார்க்கிறான். கிடைக்கவில்லை. சோகமாக வீடு திரும்பும் அலி சாரா விடம் சொல்ல, அவள் அழுகிறாள். தந்தையிடம் சொல்லப் போவதாகக் கூற, 'இருவருக்கும் தான் அடி விழும்' என்கிறான் அலி. என்ன செய்வது? தற்போது குடும்பம் உள்ள சூழ்நிலையில் புது 'ஷூ' வாங்குவதை நினைக்க முடியாது.

இரவு இருவரும் பேசிக் கொள்கிறார்கள். மிகச் சிறிய வீட்டில், பெற்றோருக்குத் தெரியாமல் எப்படிப் பேசமுடியும்? இருவரும் தங்கள் புத்தகத்தில் எழுதிப் பேசிக்கொள்கிறார்கள். அலிக்கு மாலை நேரப் பாடசாலை. சாரா அலியின் 'ஷூ' வைப் போட்டுக் கொண்டு செல்வது, சாரா வுக்குப் பாடசாலை முடிந்ததும் குறிப்பிட்ட இடத்தில் வைத்து, மாற்றிக் கொண்டு அலி தனது பள்ளிக்குச் செல்வது என முடிவு செய்கிறார்கள்.


பள்ளி முடிந்ததும் சாரா அவசரமாகத் திரும்பி வர, அவளுக்காகக் காத்திருந்து, அவசர அவசரமாக 'ஷூ' வைப் போட்டுக் கொண்டு ஓடிச் செல்லும் அலி, ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு தாமதமாகச் செல்ல, தலைமை ஆசிரியர் அவனைக் கண்டிக்கிறார்.

ஒரு பரீட்சையில் அலி அதிக மதிப்பெண் பெற, ஆசிரியர் அவனுக்கு ஒரு அழகிய பேனாவைப் பரிசளிக்கிறார். அதை அவன் சாராவுக்குக் கொடுக்கிறான்.

ஒருநாள் பள்ளியில் தனது 'ஷூ' வை இன்னொரு மாணவி அணிந்திருக்கக் காண்கிறாள் சாரா, விஷயத்தை அலிக்கும் சொல்ல, இருவரும் அவளைப் பின்தொடர்ந்து அவளது வீட்டை அடைகின்றனர். அங்கு தம்மை விட வறிய அந்தச் சிறுமியின் குடும்பம்,  பார்வையற்ற தந்தை எல்லாவற்றையும் பார்த்து எதுவும் பேசாமல், சோகமாக வீடு திரும்புகின்றனர்.

ஒரு நாள் சாரா தன அண்ணன் கொடுத்த பேனாவை தவற விடுகிறாள். அதைக் கண்டெடுத்துக் கொடுக்கிறாள் சாராவின் ஷூவை அணிந்திருக்கும் சிறுமி! நேர்மையான அந்தச் சிறுமியுடன் நட்பாகும் சாரா, பழைய பொருட்கள் விற்பவனிடம் அந்த 'ஷூ' வை அப்பெண்ணின் தந்தை வாங்கியதைப் பின்னர் தெரிந்து கொள்கிறாள்.


இந்நிலையில் அலியின் பள்ளியில் ஒட்டப்பட்டிருக்கும் ஓட்டப் பந்தயம் ஒன்றிற்கான அறிவித்தலைக் காண்கிறான் அலி. அதில் மூன்றாம் பரிசாக 'ஷூ' வழங்கப்படும் என்றிருப்பதைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் வந்து சாராவிடம், தான் போட்டியில் பங்குபற்றி, மூன்றாமிடத்தைப் பெற்று 'ஷூ' வை வென்று வருவேன் எனக் கூறுகிறான். சாராவும் மகிழ்ச்சியடைகிறாள்.

அலி போட்டியில் கலந்து கொண்டானா? 'ஷூ' வை வென்றானா?


ஷூவைத் தொலைத்த அலி, தங்கையிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு மீண்டும் தான் சென்ற கடைகளுக்கு தேடிப்போகிறான். வெறுங்கையுடன் திரும்பிகிறான் அலி. வீட்டிற்குள் அண்ணனை எதிர்பார்த்து காத்திருக்கும் சாரா, எதுவும் பேசாமலே அவனது முகத்தில் தெரியும் சோகத்தை வைத்தே விஷயத்தை தெரிந்து கொண்டு விம்முவது!

ஒரு விடுமுறை தினத்தில் தோட்ட வேலை செய்யும் தந்தையுடன் சென்று நிறைய பணத்துடன் திரும்பும்போது, வீட்டுக்கு வாங்க வேண்டிய பொருட்களை தந்தை சொல்ல, அலி இதுதான் சான்ஸ்சென்று தங்கைக்கு ஒரு 'ஷூ' என்று கூறுகிறான்! உடனே தந்தை 'உனக்கும் ஒன்று' எனச் சொல்லும் காட்சி!

கால்களுக்கு பொருந்தாத அண்ணனின் ஷூவில் ஓன்று சாக்கடையில் தவறி விழுந்து நீந்திச் செல்கிறது. அதை எடுப்பதற்காக சாரா துரத்திச் செல்லும் காட்சி பல விறுவிறுப்பான சேசிங் காட்சிகளைப் பார்த்த எங்களுக்கு, நிச்சயம் வித்தியாசமான, மனம் பதைக்கச் செய்யும் காட்சியாக இருக்கும்!

குழந்தைகளின் மனித நேயம், நேர்மை,



போட்டியில் வென்றுவிட்டு, 'மூன்றாம் இடம் தானே?' என்று அலி ஆர்வமாகக் கேட்கிறான். அவனது ஆசிரியர்  'முதலாவது' என்று மகிழ்ச்சியுடன் கட்டிக் கொள்ள, கலக்கம் அடையும் அலி, புகைப்படம் எடுக்கும்போதும் அழுதவாறு நிற்கும் காட்சி!

ஒவ்வொரு சிறிய காட்சிகளும் கவிதைகளாக மனத்தைக் கொள்ளை கொள்கின்றன.

சிறுவர்களுக்கான படங்களை எடுப்பதில் தனி முத்திரை பதித்த இயக்குனர் 'மஜீத் மஜிடி' யின், Oscar (1997) க்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது. ஆனால் இன்னொரு காவியமான life is beautiful விருதைப் பெற்றுக் கொண்டது!

இயக்குனர் - Majid Majidi
மொழி - பெர்சியன்
நாடு - ஈரான்