Saturday, May 14, 2011

Children of Heaven

சிறுவர்களின் உலகம் எப்போதுமே அலாதியானதுதான்! கள்ளங் கபடமற்ற, நாளையைப் பற்றிய கவலைகளற்ற அந்தச்சிறுபிராயம் பற்றிய ஏக்கங்கள் என்றும் மனதில்! விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களின் உற்சாகக் குரல்களோ, அல்லது நாம் சிறுவயதில் ரசித்த ஒரு பாடலோ நம்மை சடுதியாக அந்தப் பருவத்துக்கே கூட்டிச் சென்று விடுவதை நாம் உணர்கிறோமல்லவா!


சிறுவர்கள் அலியும், சாராவும் ஒரு ஏழைக்குடும்பத்தின் அண்ணன் தங்கைகள்.ஒருசிறிய வீட்டில் கைக்குழந்தையுடன் நோயுற்ற அம்மா. தந்தை வேலைக்குச் சென்றிருக்க, வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கச் செல்லும் அலியிடம், தனது பிய்ந்த 'shoe' வைத் தைத்து வருமாறு கூறுகிறாள். அலி அந்த ஷூ வைத் தொலைத்து விடுகிறான்.

தேடிப் பார்க்கிறான். கிடைக்கவில்லை. சோகமாக வீடு திரும்பும் அலி சாரா விடம் சொல்ல, அவள் அழுகிறாள். தந்தையிடம் சொல்லப் போவதாகக் கூற, 'இருவருக்கும் தான் அடி விழும்' என்கிறான் அலி. என்ன செய்வது? தற்போது குடும்பம் உள்ள சூழ்நிலையில் புது 'ஷூ' வாங்குவதை நினைக்க முடியாது.

இரவு இருவரும் பேசிக் கொள்கிறார்கள். மிகச் சிறிய வீட்டில், பெற்றோருக்குத் தெரியாமல் எப்படிப் பேசமுடியும்? இருவரும் தங்கள் புத்தகத்தில் எழுதிப் பேசிக்கொள்கிறார்கள். அலிக்கு மாலை நேரப் பாடசாலை. சாரா அலியின் 'ஷூ' வைப் போட்டுக் கொண்டு செல்வது, சாரா வுக்குப் பாடசாலை முடிந்ததும் குறிப்பிட்ட இடத்தில் வைத்து, மாற்றிக் கொண்டு அலி தனது பள்ளிக்குச் செல்வது என முடிவு செய்கிறார்கள்.


பள்ளி முடிந்ததும் சாரா அவசரமாகத் திரும்பி வர, அவளுக்காகக் காத்திருந்து, அவசர அவசரமாக 'ஷூ' வைப் போட்டுக் கொண்டு ஓடிச் செல்லும் அலி, ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு தாமதமாகச் செல்ல, தலைமை ஆசிரியர் அவனைக் கண்டிக்கிறார்.

ஒரு பரீட்சையில் அலி அதிக மதிப்பெண் பெற, ஆசிரியர் அவனுக்கு ஒரு அழகிய பேனாவைப் பரிசளிக்கிறார். அதை அவன் சாராவுக்குக் கொடுக்கிறான்.

ஒருநாள் பள்ளியில் தனது 'ஷூ' வை இன்னொரு மாணவி அணிந்திருக்கக் காண்கிறாள் சாரா, விஷயத்தை அலிக்கும் சொல்ல, இருவரும் அவளைப் பின்தொடர்ந்து அவளது வீட்டை அடைகின்றனர். அங்கு தம்மை விட வறிய அந்தச் சிறுமியின் குடும்பம்,  பார்வையற்ற தந்தை எல்லாவற்றையும் பார்த்து எதுவும் பேசாமல், சோகமாக வீடு திரும்புகின்றனர்.

ஒரு நாள் சாரா தன அண்ணன் கொடுத்த பேனாவை தவற விடுகிறாள். அதைக் கண்டெடுத்துக் கொடுக்கிறாள் சாராவின் ஷூவை அணிந்திருக்கும் சிறுமி! நேர்மையான அந்தச் சிறுமியுடன் நட்பாகும் சாரா, பழைய பொருட்கள் விற்பவனிடம் அந்த 'ஷூ' வை அப்பெண்ணின் தந்தை வாங்கியதைப் பின்னர் தெரிந்து கொள்கிறாள்.


இந்நிலையில் அலியின் பள்ளியில் ஒட்டப்பட்டிருக்கும் ஓட்டப் பந்தயம் ஒன்றிற்கான அறிவித்தலைக் காண்கிறான் அலி. அதில் மூன்றாம் பரிசாக 'ஷூ' வழங்கப்படும் என்றிருப்பதைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியுடன் வந்து சாராவிடம், தான் போட்டியில் பங்குபற்றி, மூன்றாமிடத்தைப் பெற்று 'ஷூ' வை வென்று வருவேன் எனக் கூறுகிறான். சாராவும் மகிழ்ச்சியடைகிறாள்.

அலி போட்டியில் கலந்து கொண்டானா? 'ஷூ' வை வென்றானா?


ஷூவைத் தொலைத்த அலி, தங்கையிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு மீண்டும் தான் சென்ற கடைகளுக்கு தேடிப்போகிறான். வெறுங்கையுடன் திரும்பிகிறான் அலி. வீட்டிற்குள் அண்ணனை எதிர்பார்த்து காத்திருக்கும் சாரா, எதுவும் பேசாமலே அவனது முகத்தில் தெரியும் சோகத்தை வைத்தே விஷயத்தை தெரிந்து கொண்டு விம்முவது!

ஒரு விடுமுறை தினத்தில் தோட்ட வேலை செய்யும் தந்தையுடன் சென்று நிறைய பணத்துடன் திரும்பும்போது, வீட்டுக்கு வாங்க வேண்டிய பொருட்களை தந்தை சொல்ல, அலி இதுதான் சான்ஸ்சென்று தங்கைக்கு ஒரு 'ஷூ' என்று கூறுகிறான்! உடனே தந்தை 'உனக்கும் ஒன்று' எனச் சொல்லும் காட்சி!

கால்களுக்கு பொருந்தாத அண்ணனின் ஷூவில் ஓன்று சாக்கடையில் தவறி விழுந்து நீந்திச் செல்கிறது. அதை எடுப்பதற்காக சாரா துரத்திச் செல்லும் காட்சி பல விறுவிறுப்பான சேசிங் காட்சிகளைப் பார்த்த எங்களுக்கு, நிச்சயம் வித்தியாசமான, மனம் பதைக்கச் செய்யும் காட்சியாக இருக்கும்!

குழந்தைகளின் மனித நேயம், நேர்மை,



போட்டியில் வென்றுவிட்டு, 'மூன்றாம் இடம் தானே?' என்று அலி ஆர்வமாகக் கேட்கிறான். அவனது ஆசிரியர்  'முதலாவது' என்று மகிழ்ச்சியுடன் கட்டிக் கொள்ள, கலக்கம் அடையும் அலி, புகைப்படம் எடுக்கும்போதும் அழுதவாறு நிற்கும் காட்சி!

ஒவ்வொரு சிறிய காட்சிகளும் கவிதைகளாக மனத்தைக் கொள்ளை கொள்கின்றன.

சிறுவர்களுக்கான படங்களை எடுப்பதில் தனி முத்திரை பதித்த இயக்குனர் 'மஜீத் மஜிடி' யின், Oscar (1997) க்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது. ஆனால் இன்னொரு காவியமான life is beautiful விருதைப் பெற்றுக் கொண்டது!

இயக்குனர் - Majid Majidi
மொழி - பெர்சியன்
நாடு - ஈரான்

15 comments:

  1. முதல் குத்து....செல்ல குத்துதான்...

    ReplyDelete
  2. இரண்டு,மூன்று நல்ல படங்கள் ஒரே வருடத்தில் வருவதால் ஆஸ்கர்கள்களை வெல்ல முடியாமல் போய்விடுகிறது.இதற்கு இன்னொரு உதாரணம்Shawshank Redemption.
    Furrest Gumpஅவ்வருடம் விருதை தட்டி சென்றது.இவ்வாண்டு விருதை வென்ற The Kings Speechஅவ்வளவு சிறப்பானதாக எனக்கு தெரியவில்லை...
    உங்க விமர்சனம் சூப்பர்.

    ReplyDelete
  3. //0போட்டியில் வென்றுவிட்டு, 'மூன்றாம் இடம் தானே?' என்று அலி ஆர்வமாகக் கேட்கிறான். அவனது ஆசிரியர் 'முதலாவது' என்று மகிழ்ச்சியுடன் கட்டிக் கொள்ள, கலக்கம் அடையும் அலி, புகைப்படம் எடுக்கும்போதும் அழுதவாறு நிற்கும் காட்சி!//

    படிக்கும் போதே அந்த பையனின் உள் உணர்வு புரிகிறது

    ReplyDelete
  4. எப்படி இப்படி கலக்கல் படங்களாப் பிடிக்கிறீங்க?

    ReplyDelete
  5. Good review! Looks like a nice movie. I heard about it. But haven't seen it yet.

    ReplyDelete
  6. வழமை போல சுப்பேர்ப்!!

    ReplyDelete
  7. படங்கள் கூகிளாரின் உதவியா ஜி??
    எல்லாத்துக்கும் கிடைக்குதா??
    உட்கார்ந்து வடிவா எழுதுவீங்களோ??
    நாம விமர்சனம் எழுத வெளிக்கிட்டா வெறும் மொக்கை தான் வருது ஹிஹிஹி

    ReplyDelete
  8. மாப்ள பின்னிட்ட போ!

    ReplyDelete
  9. தங்களின் ரகளையான ரசனைக்கு
    என் மகிழ் வந்தனம்
    அற்புதமான வழிநடை

    ReplyDelete
  10. குழந்தை பருவத்தை படம் பிடித்து இருக்கிறார்கள். அதை அப்படியே பதிவாக்கி இருக்கிறீர்கள். நன்று..

    ReplyDelete
  11. என்னாச்சு ஜீ ஒரே விமர்சனத்துல இறங்கிட்டீங்க போல

    ReplyDelete
  12. நல்லா இருக்குய்யா உன் விமர்சன நடை!

    ReplyDelete
  13. ஒரு நாள் டி.வி. யில் பார்த்தேன்; எந்தச் சேனல் என்று நினைவில்லை (மக்கள்?)அருமையான படம்.நினவூட்டியதற்கு நன்றி!

    ReplyDelete
  14. ஃஃஃஃ அங்கு தம்மை விட வறிய அந்தச் சிறுமியின் குடும்பம், பார்வையற்ற தந்தை எல்லாவற்றையும் பார்த்து எதுவும் பேசாமல், சோகமாக வீடு திரும்புகின்றனர்.ஃஃஃஃ

    ஜீ இன்னைக்கும் வெளிப்படையாகவே சொல்லிப்புட்டு போறன்.. எனக்கு இந்தப்படம் பார்க்கும் சந்தர்ப்பமே கிடைக்கல ஒரு கதைப்புத்தகத்தில் கதை வாசிச்சத போல ரசிச்சு வாசிச்சிட்டு போறன்.. மேல குறிப்பிட்ட இடம் தான் எனக்கு நெருடலாயிருந்தது....

    ReplyDelete