Friday, September 26, 2014

சந்தியாராகம்!


பாலுமகேந்திரா இறந்து போனபின்புதான் அவர் படங்களைப் பார்க்கவேண்டும் எனத் தோன்றுகிறது. என் வழக்கப்படி, நீண்டநாட்களாக கணினியில் சேமித்து வைத்திருந்த 'சந்தியாராகம்' படத்தைப் பார்த்தேன்.

கிராமத்தில் எந்தக் கவலைகளுமின்றி வாழ்வை அதன்போக்கில் ரசித்து வாழ்ந்துகொண்டிருந்த ஒரு முதியவர், சந்தர்ப்பவசத்தால் நகரத்தின் நெருக்கடி மிகுந்த, கீழ்நடுத்தரவர்க்கத்து பொருளாதாரச் சிக்கல் நிறைந்த வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள நேரிடுகிறது. அதன் பின்னர் சந்திக்கும் அனுபவங்ககள் என்னென்ன? எப்படி அவற்றை எதிர்கொள்கிறார் என்பது பற்றிப் பேசுகிறது படம்.

பெரியவர் சொக்கலிங்கம், மனைவி விசாலாட்சியுடன் கிராமத்தில் வாழ்கிறார். பிள்ளைகள் இல்லை. உறவென்று தம்பியின் மகன் மட்டுமே சென்னையில் இருக்கிறான். எந்தக் கவலைகளும் அவருக்கு இல்லை. மனைவி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். அப்பளம் போட்டு கடைகளுக்கு கொடுக்கிறார். அவரது தேவைகள் அதிகமில்லையாதலால் அவரளவில் சொகுசான வாழ்க்கை. இதெல்லாம் ஒரே நாளில் பெரியவருக்கு அர்த்தமற்றுப் போய் விடுகிறது. மனைவி இறந்துவிடுகிறார். தன் ஒரேயொரு உறவான தம்பி மகனிடம், சென்னைக்கு வருகிறார்.

பத்திரிகை அலுவலகத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்கிறார்கள் தம்பி மகனும், மனைவியும். பள்ளி செல்லும் சிறு பெண்குழந்தை, இரண்டாவது குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். திடீரென வந்து சேரும் பெரியவரை அன்பாகக் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனாலும் அவர் தொடர்ந்து அங்கேயே தங்கிவிடுவாரோ என்ன செய்வது என ஆரம்பத்தில் பயப்படுகிறாள் மருமகள். அன்று அவள் கவலைகொண்டபோதும் பின்னர் அவரைத் தம் குடும்பத்தில் ஒருவராகவே மகிழ்ச்சியுடன் கவனித்துக்கொள்ளும் மருமகள் ஒரு சிறு சம்பவத்தின் விளைவாக கோபத்தில் கடிந்துகொண்டு பாராமுகமாக இருப்பது பெரியவரைக் காயப்படுத்திவிடுகிறது. அங்கிருந்து சொல்லாமல் வெளியேறிவிடுகிறார். பின்னர் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல வரும் மருமகளிடம் பேசித் தன்முடிவை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் பெரியவர். எளிமையான இந்தக்கதைக்குள் மனிதர்களின் மெலிய உணர்வுகள், உளச்சிக்கல்கள், புரிந்துணர்வு என எந்தக் காலத்துக்கும் பொருந்தும், ஏராளமான விஷயங்களைச் சொல்லப்படுகிறது.

முதியவர்கள் என்றதுமே, பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாரிதாபத்துக்குரியவர்கள், அதனாலேற்பட்ட சுய கழிவிரக்கத்தில் வாழ்பவர்கள் அல்லது முரட்டுத்தனமான வரட்டுப் பிடிவாதக்காரர்கள் என்பதைத்தவிர்த்து, வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகும் முதியவர்களைப் பற்றிய படங்கள் தமிழில் பார்த்ததாக ஞாபகம் இல்லை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகும், முதுமையையும் அவ்வளவு உற்சாகமாக எதிர்கொள்ளும் மனிதர்களும் நம் நகர வாழ்வில் மிக அரிதாகவே இருப்பர்கள் போலும். கிராமங்களில், நம் ஊர்ப்புறங்களில் அட்டகாசம் பண்ணு 'பெருசுகளை' நாம் பார்த்திருப்போம். 'பரதேசி' படத்தில் கவிஞர் விக்கிரமாதித்யன் வருவாரே, படத்திலேயே அதுதான் எனக்கு மிகப்பிடித்தது. சிறிது நேரமே வந்தாலும், அதகளம் செய்திருப்பார்.

பெரியவர் சொக்கலிங்கத்தின் கிராமத்து வாழ்க்கை மிக அழகானது. ஆர்ப்பாட்டமில்லாமல் ரசனையோடு எதையும் பார்க்கும் குழந்தைத்தனமும், குறும்பும் கொண்ட மனிதர். காலையில் மனைவி விசாலாட்சி சுடச்சுட பெரிய டம்ளரில் கொடுக்கும் தேநீரை ரசித்துக் குடித்துவிட்டு, குளத்துப் பக்கம் செல்கிறார். சிறுவர்களைப் போல நீர்ப்பரப்பில் கல்லெறிந்து அது நீர்மேற்பரப்பில் தத்திச் செல்வதை ரசிக்கிறார். வரும் வழியில் யாரோ சிறுவர்கள் பொட்டுவைத்த கட்டத்தில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒற்றைக்காலில் தத்தி பாண்டி விளையாடுகிறார். ஆசைதீர ஆற்றுக்குளியல், வெள்ளிக்கிழமைகளில் பிள்ளையார் கோவிலில் ஒரு கும்பிடு, திரும்பும் வழியில் சிறுவர்களுடன் சேர்ந்து பம்பரம் விளையாடுகிறார். கொண்டாட்டமான ஓர் வாழ்க்கை அவருடையது.

பெரியவரின் கிராமத்து வாழ்க்கை, அங்குள்ள மனிதர்களின் அன்னியோன்யம், அக்கறை, அவரின் கௌரவத்தை, சின்னச் சின்ன ஆசைகளை,விளையாட்டுத்தனங்களை ஆரம்பக் காட்சிகள் சொல்கின்றன. இவற்றிற்கு முற்றும் மாறான நகரத்தை காலையில் வந்துசேரும்போதே எதிர்கொள்கிறார் சொக்கலிங்கம். புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களைக் கண்டு பதற்றமடைந்து விலகி நடக்கிறார். அதுவரை எல்லோராலும் 'பெரியய்யா' என அன்போடு அழைக்கப்பட்டவரை 'சாவுக் கிராக்கி' என திட்டுகிறான் அவர்மீது மோதிவிடுவதுபோல் வந்து நிற்கும் ஆட்டோ டிரைவர்.

அடுத்த அதிர்ச்சி வீட்டில். குளிப்பதற்கு வெந்நீர் போட்டு வைக்கிறாள் மருமகள். ஆற்று நீரில் நீராடிய பெரியவர் சில கணங்கள் அந்தச் சிறிய வாளியை அந்த யோசனையுடன் பார்த்துவிட்டு பக்கத்திலிருக்கும் நீர்க்குழாயைத் திறக்கிறார். அங்கே குடியிருக்கும் ஒருவன் சொல்கிறான் இன்று நீர் வராது, நாளைதான். அதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றிலும் மாறான புதிய அனுபவம் ஒரே நாளில் ஏற்படுகிறது. ஆனாலும் உடனடியாகவே அவற்றோடு இயைந்து வாழத் தயாராகி விடுகிறார் சொக்கலிங்கம்.

குழந்தையும் பெரியவரோடு சேர்ந்துவிடுகிறது. பெரியவரும் மருமகளுக்கு ஒத்தாசையாக கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொடுக்கிறார். குழந்தையும் அவருடன் இலகுவாக ஒட்டிக் கொள்கிறது. சாப்பாடு வேண்டாம் என அம்மாவிடம் மறுக்கும் குழந்தை தாத்தா ஊட்டிவிடுவதாகக் கேட்டதும் சம்மதிக்கிறது. குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். 'பெரியவர் இங்கேயே தங்கி விடுவாரோ?' - மருமகளுக்கு அன்றைய இரவில் தோன்றும் சந்தேகம். ஏற்கனவே இடநெருக்கடி, போதாத வருமானம், இதில் புதிதாக ஒருவர் குடும்பத்தில் இணைந்துகொள்வது மருமகளுக்குக் கலவரத்தை ஏற்படுத்துகிறது. கணவனிடம் கேட்கிறாள். என்னைவிட்டா அவருக்கு வேற யார் இருக்காங்க? எங்க போவார்? சமாளிக்க வேண்டியதுதான் எனபதாக அமைகிற அவனது பதில் பொறுப்பற்றதாக, கோபம் கொள்ள வைப்பதாக இருக்கிறது. தவிர்க்க முடியாத இந்தப்பேச்சு, உச்சகட்டத்தை எய்தி, பொறுமையிழந்து உரக்கப் பேசிவிடுகிறான் கணவன். தன பெரியப்பா வந்தது மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பதாகவே தொடர்ந்து அவன் நம்புகிறான். பின்னரும் அடிக்கடி சொல்லிக் காட்டுகிறான். கணவன், மனைவிக்கிடையான பேச்சு சொக்கலிங்கம் காதில் விழ, யோசனையில் ஆழ்கிறார். ஆனாலும் உடனடியாக உணர்ச்சிவசப்படவில்லை. அவர்களின் நிலையையும் தன் நிலையையும் புரிந்துகொள்கிறார் பெரியவர். முடிந்தவரை அவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என நினைக்கிறார். இதுதான் யதார்த்தம்.

ஒரு கீழ் நடுத்தரவர்க்க குடும்பத்தின் தன் குடும்பம் தவிர்த்து உறவுகள் மீது என்னதான் அன்பு, பாசம் இருந்தாலும், அதையெல்லாம் புறந்தள்ளி பொருளாதார நிலை சார்ந்த சிக்கல்கள் இயல்பாகவே முன்னிலைப் படுத்தபடுகிறது. நகர வாழ்வின் நெருக்கடிகளில், பொருளாதாரச் சிக்கல்களில் முதியவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றார்கள் சிலவேளைகளில் தவிர்க்கமுடியாமல் என்பதையும் ஓரிரு காட்சிகளில், அயல் வீட்டில் குடியிருக்கும் பெரியவரின் பேச்சு வாயிலாக சொல்லிவிடுகிறது.

எண்பதுகளில் நடைபெறுகின்ற கதை எனினும், இன்றைய காலகட்டத்திலும், எதிர்காலத்திலும் பலரும் எதிர்கொள்ளும், கொள்ளப்போகும் வாழ்க்கைதான். சொந்த ஊரில், அயலவர்களோடு அளவளாவிக் கொண்டு தம் போக்கில் வாழ்ந்துகொண்டிருந்த நம் தாத்தாக்கள், பாட்டிகள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எல்லா வசதிகளும் இருந்தும், நடைமுறையை ஏற்றுக் கொண்ட போதும், ஏதோ ஒரு தருணத்தில் இழந்துவிட்ட தம் இயல்பான வாழ்க்கையைக் குறித்த ஏக்கத்துடன் வாழ்வதைப் பார்க்கிறோம். வயதானவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் தனிமையுணர்வு, தாம் சரியாக மதிக்கப்படவில்லை எனும்போது அல்லது அப்படித் தோன்றும்போது ஏற்படும் அயர்ச்சி, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இடமாற்றம், அந்த மாற்றங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிக்கள், நகர்புற மத்தியத்தர வாழ்க்கை தரும் பொருளாதார அழுத்தங்கள், அதனாலேற்படும் ஏற்படும் உறவு சிக்கல்கள் இவை பற்றி பேசுவதற்கான தேவை எப்போதுமே இருக்கிறது.

சொக்கலிங்க பாகவதர். என்ன ஒரு நடிகன்! தமிழ்சினிமாவில் இப்படி ஒரு நடிகரைப் பார்ப்பதே எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது. மிகை நடிப்பு, தேவையே இல்லாமல் உரத்த குரலில் பேசுவது, நாடக பாணியில், குறிப்பாகத் தெருக்கூத்து வகையான நடிப்பையே சினிமாவிற்கும் வழங்கி அதையே நடிப்பு எனக் கொண்டாடி வரும் நமது பாரம்பரியத்தில் சொக்கலிங்க பாகவதர் போன்ற ஒருவர் தமிழ் திரையுலகத்தால் கண்டுகொள்ளப்படாததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இயக்குனர் பாலுமகேந்திராவைத் தவிர வேறு எவரும் அவரை இந்த அளவுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறார்களா?

பம்பரம் விடும்போது அவர் முகத்திலிருக்கும் குழந்தைத்தனமான ஆர்வம், ஒரு குறும்புச் சிரிப்பு, தன் மனைவியை அழைக்கும்போது குரலில் இருக்கும் காதல், (ஆம் அப்படித்தான் தோன்றுகிறது. அது பாலுமகேந்திராவின் எப்போதும் தீராத காதலின் தாக்கமாகவும் இருக்கக் கூடும்) குளித்துவிட்டு வரும் பாட்டியைப் பார்த்ததும், "ஏண்டி ஜுரமும் அதுவுமா குளத்துல குளிச்சிட்டு வர? வெந்நீர் போட்டிருக்கலாம்ல?" எனும்போது தெரியும் பரிவு, பாட்டி கொடுக்கும் தேநீரை ஒரு மிடறு குடித்துவிட்டு கொடுக்கும் எதிர்வினை ஒன்றே போதும். தன்மேல் கோபமுற்றிருக்கும் மருமகள் மருத்துவமனை வாசலில் சைக்கிள் ரிக்ஷாவில் வீடு திரும்பப் போகிறாள். தன்னையும் அழைப்பாளா எனத் தயங்கி நிற்கிறார். மருமகள் கூப்பிட்டதும் சிறு சிரிப்புடன் சின்ன குழந்தை போல் ஓடி வருவது, குழந்தை வள்ளியின் கால்களை தன் மடியில் போட்டு கொள்வது, அவ்வப்போது சிரித்துக் கொள்ளும் குழந்தைச் சிரிப்பு என சொக்கலிங்க பாகவதர் அசத்துகிறார். 

முதியோர் இல்லத்தில் சேரும்போது அவர் பார்த்த தொழில் என்ன என்கிறார்கள். நாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தேன் என்கிறார். வேற என்ன தொழில்? எனக்கேட்க ஒரு பண்ணையாரிடம் கணக்கெழுதிக் கொண்டிருந்ததாகச் சொல்கிறார். ஆயினும் தனது தொழிலை 'நடிகன்னே போட்டுக்க' எனச்சொல்லும்போது முகத்தில் அப்படியொரு பெருமை, சிரிப்பு! தொடர்ந்து தான் நடித்த நாடகத்தின் காட்சியொன்றை பாடி, நடித்துக் காட்டுகிறார். அதுவரை இருந்த சொக்கலிங்க பாகவதர் ஆளே மாறிப்போய் இளைஞனாகியதுபோல மிடுக்குடன் நிற்கும் காட்சி, பின்னர் தன்னை பார்க்க வரும் மருமகளை தன் சகாக்களிடம் அறிமுகப்படுத்தும்போது, ஒரு பாட்டிக்கு ரொம்பவே மறதி எனும்போது தனது வாயையும் பொக்கையாகச் செய்து காட்டுவது என அதகளம் செய்கிறார்.

அந்த முதியோர் இல்ல வாழ்க்கை அவருக்கு ஏராளமான நண்பர்களைப் பெற்றுக் கொடுக்கிறது. இழந்துவிட்ட பழைய கொண்டாட்டமான வாழ்க்கையை மீட்டுக் கொடுப்பதாக இருக்கிறது. சொக்கலிங்க பாகவதர் தன் மருமகளுக்கு முதியோர் இல்லத்தைச் சுற்றிக் காட்டும் காட்சியைக் கவனித்துப் பார்த்தால் புரியும். தன் சொந்த வீட்டைச் சுற்றிக் காட்டுவதுபோல ஒரு பெருமை, பூரிப்பு அவர் முகத்தில். சூழ்நிலை காரணமாக தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட அழகான வாழ்க்கை மீளக் கிடைத்துவிட்டதைப் போன்ற உற்சாகம்.

இப்போது சினிமா ஆர்வலர்களால் முக்கியமானதாகக் கவனிக்கப்படுகிற ஈரானிய சினிமா எப்போது உருவானது அல்லது எப்போது முதல் உலகின் பரவலான கவனத்தைப் பெறத் தொடங்கியது எனத் தெரியவில்லை. எனது நண்பன் யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது Baran படத்தைப் பார்த்துவிட்டு அதுபற்றிச் சொல்லியிருந்தான். நான் முதன்முதலில் பார்த்தது 2007ல் Children of Heaven திரைப்படம். வெளியாகிப் பத்து வருடங்களின் பின்னரே. இங்கே ஈரானிய சினிமா பற்றிப் பேசியது ஏனெனில், சந்தியாராகம் பார்க்கும்போது எனக்கு ஈரானியப் படங்கள் பார்ப்பது போன்ற ஒரு உணர்வே ஏற்பட்டது.

ஈரானியப் படங்கள் போல என்று சொன்னதற்கு இன்னுமோர் காரணம், படத்தில் எல்லோருமே நல்லவர்கள். அன்பு நிறைந்தவர்கள். அதை, வெளிப்படுத்தும் விதம் வேறுபடுகிறது. தவிர, சூழ்நிலை, இயலாமை காரணமாக அவ்வப்போது தமக்குள் முரண்பட்டுக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். இயக்குனர் பாலுமகேந்திராவுடன் பழகியவர்கள் கூறும் சம்பவங்கள் நினைவுகள் ஒவ்வொன்றும் அழகானவை. முழுக்க முழுக்க அன்பாலும், ரசனையாலும் நிரம்பிய வாழ்வைக் கொண்டாடிய கலைஞன். அவர் படைப்புகளிலும் அதையே பிரதிபலிக்கக் காண்கிறோம். அவற்றில் அன்பும், மெல்லிய உணர்வுகளும், உளச்சிக்கல்களும், தீராத காதலும் நிறைந்த அழகியல் விரவிக் கிடக்கின்றது.

தமிழ்சினிமாவில் பாலுமகேந்திரா சரியானபடி பேசப்படவில்லையோ, கொண்டாடப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. தமிழர்களின் வழமைபோல இறந்த பின்னர், சமீப காலமாகத்தான் அதிகம் பேசப்படுகிறார். ஒரு நல்ல படைப்பாளியின் உண்மையான வெற்றி என்பது அவர் உருவாக்கிச் சென்ற, தன் நீட்சியாக விட்டுச் சென்றிருக்கும் படைப்புகள் மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கான தன் வாரிசுகளும்தான். அவரின் சிஷ்யர்களே போதும் - அவர்கள்மீது எவ்வாறான விமர்சனங்கள் வைக்கப்ப்படும்போதிலு! பாலா, ராம், வெற்றிமாறன் போன்றோர் அவர்பற்றிக் கூறும்போதெல்லாம் பிரமிக்க வைக்கிறது, அன்பினால் கட்டமைக்கப்பட்ட அவர் சாம்ராஜ்யம்!

அதிகாலையில் கிராமத்தில், பெண்கள் நடந்து செல்லும் படத்தின் ஆரம்பக் காட்சி, குளத்தில் ஆரவாரமாக செல்லும் எருமைகள், சென்னையில் நடுத் தெருவில் மரங்களின் ஊடே விழும் சூரிய ஒளி போன்ற கட்சிகளைப் பார்த்தபோது வண்ணத்திரைப்படமாக எடுத்திருந்தால் இன்னும் நன்றாயிருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனாலும் கருப்பு - வெள்ளை காட்சிகளின் ஆழத்தை, தாக்கத்தை அதிகமாக்கும் என்பதால் அதுவே பாலுமகேந்திராவின் விருப்பமாகவும் இருந்ததாகச் சொல்கிறார்கள். நண்பர்கள் சிலர் அப்படியும் சொல்கிறார்கள் வண்ணத் திரைப்படமாகப் பார்த்ததாக. நான் யூ-டியூபில் தரவிறக்கியே பார்த்தேன். பாலுமகேந்திராவின் படங்களை அப்படித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது என்பது மிகுந்த கவலைக்குரியது. 

சந்தியாராகத்தை வண்ணத்திரைப்படமாகப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படக் இன்னுமோர் காரணம், 'அழியாத கோலங்கள்' படம்தான். ஆணுறையில் பலூன் செய்து விளையாடியபடி long shot இல் சிறுவர்கள் நடந்து வரும் காட்சி ஒன்றே போதும் ஒளிப்பதிவு பற்றிச் சொல்லிவிட. அவ்வளவு அழகானது. பாலுமகேந்திராவின் இளமைக்காலத்தின் பாதிப்பெனில், என்னமாதிரியான கொண்டாட்டமான வாழ்க்கை அது! என்னை மிகக்கவர்ந்த படம். அதையும் இந்த வருடம்தான் பார்த்தேன். விடலைப் பருவப் பையன்களின் உணர்வுகளை, வாழ்க்கையை தமிழில், வேறெந்தப் படமும் பதிவு செய்ததில்லையெனச் சொல்லப்படுகிற அற்புதமான, ரகளையான படைப்பு. மிக முக்கியமாக ஒளிப்பதிவு. அந்த வயதினருக்கே உரிய குறும்பும், விளையாட்டுத்தனங்களும், புதிதாக அறியும் எதையும் முயன்று பார்க்கும் ஆர்வமும் அப்படியே பதிவுசெய்யப்பட்டிருக்கும். சிகரெட் பிடிக்கும் காட்சியும் அப்படியே. ஓர் இளைஞன் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதைப் பார்த்துவிட்டு அதனால் கவரப்பட்டு, ஒருமுறையேனும் முயன்று பார்த்தவர்கள், ஊதுபத்திக் குச்சியைப் பேப்பரால் சுத்தி புகைத்தவர்கள், குறைந்தபட்சம் நினைக்காதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன!

அதேபோல, 'வீடு' - மத்தியதர வர்க்கத்தினரின் மிக முக்கியமான கனவு பற்றிய படம். இன்றும், எந்தக்காலத்திற்கும் பொருத்தமான படம். காலத்தால் அழியாத படைப்பு என்றுமட்டும் பாலுமகேந்திரா படங்களைச் சொல்ல முடியாது. ஏனெனில் அவரின் அநேகமான படங்களுக்கான பிரதிகள் அவரிடமே இல்லையென, அழிந்துபோய்விட்டதென வருத்தப்பட்டிருந்தார். எந்தக் கலைஞனுக்கும் நேரக்கூடாத சோகம் அது. உலக சினிமா விரும்பிகள் அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டிய படங்கள் 'சந்தியாராகம்', 'அழியாத கோலங்கள்', 'வீடு'. தமிழிலும் பல வருடங்களுக்கு முன்பே உலக சினிமா எடுத்த படைப்பாளி இருக்கிறான் எனக் கொண்டாடலாம்.

பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதிய கட்டுரை இது!
Share This:   FacebookTwitterGoogle+

Monday, September 8, 2014

A Gun and a Ring : புதிய ஆரம்பம்!ஆரம்பத்தில் அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கவில்லை. காரணம் நாம்தான். 'எம்மவர் படைப்பு' என்ற அடையாளம், மிகைப்படுத்தப்பட்ட பெருமைகளுடன் வெளியாகும் வஸ்துகள்- ஈழத்து முயற்சி என்று ஆரம்பித்தாலே தெறித்தோடும் நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. நேர்மையாகச் சொன்னால், சில நண்பர்களின் முயற்சிகள் தவிர, 'ஈழம்', 'இலங்கை' என்றாலே படமோ, பாட்டோ எதுவானாலும் நான் மறந்தும் 'கிளிக்' செய்வதில்லை.

A Gun and a Ring படம் குறித்துப் பேசப்பட்டபோதும் வழமை போலவே முதலில் நினைத்தேன். பின்பு வழமையான முயற்சிகளை விட நல்லதாக இருக்கலாம் என நம்பினேன். பார்த்தபோதுதான் தெரிந்தது நிச்சயமாக எம்மவரின் பெரியதொரு பாய்ச்சல். கொழும்பிலிருந்து கொண்டு படம் பார்க்க வராதவர்கள், ஒரு நல்ல அனுபவத்தைத் தவற விட்டுள்ளார்கள். நிச்சயமாக அவர்கள் மீது மட்டும் தவறல்ல. மேற்சொன்ன 'ஈழத்து, அனுபவம்தான் முக்கிய காரணம்!

எமது ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளை, புலம்பெயர் நாடொன்றில் பிறந்து வளரும் இளம் சமுதாயத்தின் உணர்வுகளை, அவர்களுக்கும் பாரம்பரிய சமூகக் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பெற்றோருக்குமிடையான முரண்பாடுகளை, பாதுகாப்பான நாடு என நாம் நம்பிக் கொண்டிருக்கும் வெளிநாடுகளில் துரதிருஷ்டவசமாக எதிர்கொள்ள நேரிடும் பிரச்சனைகளை, முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, எப்போதும் உடனிருந்து கொல்லும் உளவியல் பிரச்சனைகளை மிகை நடிப்போ, திணிக்கப்பட்ட வசனங்களோ இல்லாது மிக இயல்பாகப் பேசுகிறது படம்.

சமூக சேவகியான மனைவியைப் புரிந்து, இலங்கையில் விட்டுவிட்டு குழந்தையின் நலனுக்காக வெளிநாட்டுக்கு வந்த, பிறருக்கு உதவும் உறுதியான மனம் படைத்த நல்லவரான சொர்ணம் - ஆரம்பகால இந்திய பயிற்சி முகாமிலிருந்து வெளியேறி கனடா வந்த, எளிதில் பதற்றமடையும், பழைய நினைவுகளால் அலைக்கழிப்பால் எதையும் உருப்படியாகச் செய்ய முடியாத குழப்பவாதியான ஞானம் - போரினால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தில் தான் மட்டுமே எஞ்சிய, பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்யும் இலட்சியத்தில் ஒருவனால் வரவழைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்ட திடமான இளம்பெண் அபி - எப்போதும் நிதானமாக, உணர்ச்சி வசப்படாத, குற்ற உணர்ச்சியில்லாமல் பழைய வாழ்க்கையை வன்முறையை மறந்து விட்டு அல்லது உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்க அமைதியாக வாழும் அரியம் - தனது இரையைத் தேர்ந்தெடுத்துவிட்ட ஒரு சைக்கோ சீரியல் கொலைகாரனைக் கண்காணிக்க வரும் பொலிஸ் புலனாய்வாளன் ஜோன் - அப்பாவின் அறிவுரையைக் கேட்டு விலகிய தன்னால்தான் நண்பன் தற்கொலை செய்துகொண்டான் என நம்பும் ஓரினச் சேர்க்கையாளன் ஆதி - இவர்களைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு நகர்கிறது கதை.

இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேடிக்கொள்ளும் முடிவுகள் தனித்தனியான தலைப்புகளுடன் (அத்தியாயங்கள்?), அவை ஒன்றுடனொன்று எப்படிச் சம்பந்தப்படுகின்றன என்பதையும் தெளிவான திரைக்கதையூடாக இணைக்கப்பட்டிருக்கின்றது. (இந்த தலைப்புகள் போடுவதை பார்த்ததுமே மிகுந்த உற்சாகமானேன். படத்தின் இயக்குனர், டெரண்டினொவின் தீவிர ரசிகராக இருப்பாரோ என்று தோன்றியது)

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலும், இடையிலும் தொடர்ந்து சில கேள்விகள் எழ வைத்து, பின்னர் படிப்படியாக முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே செல்கிறது படம். ஒரு அத்தியாயத்தின் காட்சியில் பார்வையாளனுக்குத் தோன்றும் கேள்விக்கு, இன்னொரு அத்தியாயத்தின் முடிவில் பதில் கிடைக்கிறது. ஒரு சில காட்சிகள் நம்மை ஒன்று நினைக்க வைத்து அதற்கு மாறாக, சில சமயங்களில் அது ஒரு விஷயமாகவே இல்லாமல் ஆக்கிவிடுவது ரசிக்க வைக்கும் உத்தி.

கத்தியைக் கண்டு பதற்றமடைகிறது ஒரு பாத்திரம். அதற்குக் காரணம் கத்தி சார்ந்து ஒரு அதிர்ச்சிகரமான பழைய சம்பவம் இருக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால் அப்பிடியிருக்க எந்த அவசியமும் இல்லை. வாழ்க்கையில் சிலவிஷயங்களிற்குப் பதில் 'அது அப்படித்தான்' மட்டுமே!

இருள் சூழ்ந்த அறையில் கையில், பச்சை குத்திய காதலியின் பெயரை அழிக்கமுயலும், கைத்துப்பாக்கியால் தற்கொலைக்கு முயற்சிக்கும் ஒரு பாத்திரம் போதைப்பொருள் கடத்துபவனாகவோ, சமூக விரோதியாகவோ, கோழையாகவோ இருக்க வேண்டிய அவசியமுமில்லை. நேர்மையான, மனச்சாட்சியுள்ள பொலிஸ் புலனாய்வாளனாகக் கூட இருக்கலாம்.

என்னை மிகக்கவர்ந்தது அரியம்- ஞானம் காட்சிகள்தான். "…ஏனண்ணே கொல்லுறதெண்டு முடிவெடுத்தா எத்தின வழி இருக்கு. கத்தி இருக்கு... ஏன் அடிச்சு..?" என்று கேட்கும்போது ஞானத்தின் முகத்தில் இயலாமை, விரக்தி, மன்றாட்டம் போன்ற உணர்ச்சிகள்! அப்படிக்கேட்கும்போது இலேசாக சிரிக்கக்கூடத் தோன்றியது எனக்கு மட்டும்தானா தெரியவில்லை. அதுபோல அரியம் திடீரென மாறும் பழைய இரும்பனாக திகைக்க வைக்கிறார்.

ஆரம்பத்தில் குழப்பவாதியாக அறிமுகமாகும் ஞானம், எப்போதும் அப்படியே இருக்கிறார். எதிலும் தெளிவில்லாதவர்கள் எளிதில் பதற்றமடைபவர்கள் தமக்கு மட்டுமன்றிக் கூட இருப்பவர்களுக்கும், சமயத்தில் எந்த சம்பந்தமில்லாதவர்களுக்கும் சேர்த்தே பிரச்சினையை ஏற்படுத்திவிடுகிறார்கள். எளிதில் பதற்றமடையாத சாதுவாக அறிமுகமாகும் அரியம், பின்பு காட்டும் சடுதியான மாற்றம் அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர் எப்போதும் அப்படியே இருக்கிறார். பதற்றமடையாமல் நிதானமாக நடந்துகொள்ளும் அவர் பெயர் வேறு இரும்பன். அட்டகாசமான சேஞ்ச் ஓவர்.

பக்கத்திலிருந்த நண்பன், 'இரும்பன்' தனது ஊர் என்றார். இன்னொரு நண்பன் இரும்பன் கதாபாத்திரம் யாரென்று இன்னொருவரைச் சொன்னார். இரும்பனின் தோற்றம் பார்த்தவுடனேயே ஒருவரை ஞாபகப்படுத்துகிறது. ஆக, ஒருகாலத்தில் நிறைய இரும்பன்கள் இருந்தது, இப்போதுமிருப்பது தெரிகிறது. படத்தில் யார் எந்த இயக்கம் என்று சொல்லாமலே அவரவர் ஊகத்திற்கு விட்டுவிடுவது மிகக் கவர்கிறது. அது மிகச்சரியான வழிமுறை. உண்மையில் எல்லா இயக்கத்துக்கும் சில பக்கங்கள் ஒரே மாதிரியானவைதான்!

முதலில் மிகக்கவர்ந்தது தமிழ். யாழ்ப்பாணத்துத் தமிழ் மிகச் சரியாகவே பயன்படுத்தபட்டிருப்பதாக நினைக்கிறேன். (நினைக்கும் அளவுக்குத்தான் எனக்குத் தெரியும்). படம் தொடங்கும்வரை நம்பிக்கையில்லாமல் இருந்தது படத்தின் பேச்சு மொழி குறித்துத்தான்! 'தெனாலி' உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் யாழ்ப்பாணத் தமிழ் பற்றிக் கவலைப்படும் நாங்கள் இலங்கை - புலம்பெயர் படைப்புகளின்(?!) கொடூரங்கள் பற்றிக் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக கதநாயகி எப்படிப் பேசுகிறார் என்பதைப் பார்க்கும் ஆவலிருந்தது. அவர்களுக்கென்றே தனிமொழி இங்கே இருப்பதாகத் தெரிகிறது. சந்தேகமிருந்தால் நம்மவரின் காணொளிகளைப் பார்க்கவும். பேச்சுமொழியைச் சிறப்பாகக் கொண்டுவந்ததற்கே இயக்குனர், நடிகர்களுக்கு விருது கொடுக்கலாம். உண்மையில் வெளிநாடுகளில்தான் எண்பதுகளில் வெளியேறிய நம்மவரிடம்தான் உண்மையான, முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் கேட்ட பேச்சு மொழி இன்னும் வழக்கில் இருப்பதாகத் தோன்றுகிறது.

எம்மவர்களின் படைப்புகளை ஊக்குவிக்கும் இணையத்தளங்கள் மிகக் கேவலமான குப்பைகளை மன்னிக்கவும் 'படைப்புகளை' எல்லாம் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுகின்றன. இதனால் உண்மையிலேயே நல்ல படங்கள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடும் அபாயம் எதிர்காலத்திலும் நிகழலாம். மிகக் குறைந்தபட்ச பொறுப்புடனாவது நடந்துகொள்வது அவசியம். ஏனெனில், படம் பார்க்க வந்தவர்களில் தமிழர்களை விட சிங்களவர்களே அதிகம் என்று தோன்றுகிறது. இலங்கையில் திரையிடச் சாத்தியமில்லாத, சென்சாரில் தப்ப முடியாத இந்தப்படத்தை சிங்களவர்களுடன் இணைந்து திரையரங்கில் பார்த்தது கூட ஒரு வித்தியாசமான அனுபவமே.

நம் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் கட்டாயமாகப் பார்க்க வழிசெய்வது நம் சமுதாயத்துக்கு மிகுந்த நன்மை பயக்கும். 'எங்கட பெடியள் ஏதோ செய்ய வெளிக்கிடுறாங்கள். எங்களால முடிஞ்சத செய்யவேணும்' - என்ற நல்ல மனதுடன் என்ன ஏது என்றே கேட்காமல் பணத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய அதிகார்வலர்கள், யாரோ ஒரு 'மங்களம் சாரி'ன் பணத்தில் எதுவுமே இல்லாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் கமெராவைத் தூக்கிக்கொண்டு படம் எடுக்கக் கிளம்புபவர்கள், கொலை வெறியுடன் சுற்றிக் கொண்டிருக்கும் கலையார்வலர்கள் 'படம் பார்க்கக்' கற்றுக்கொள்ளவும், பலர் இதையெல்லாம் கைவிட்டு, மனந்திருந்தி வாழவும் வாய்ப்பிருக்கிறது.

நடிகர்களின் தேர்வும் நடிப்பும் இயல்பாக, கவர்கிறது. பேச்சு மொழி அவ்வளவு அருமையாக உள்ளது முக்கியமாகக் கதாநாயகியைத் தனியாகவே பாராட்டலாம் - ஏனெனில் அவர்கள்தான் வழமையாக அதிகம் அச்சமூட்டுபவர்கள். இரும்பன், ஞானம் கதாபாத்திரங்களின் பாதிப்பு இரண்டு நாட்களுக்கு இருக்குமென நம்புகிறேன். காட்சிகளின் நீளம், சில தெளிவின்மை, ஒளிப்பதிவு என்பன பற்றி தேர்ந்த விமர்சகர்களுக்கு புகார்கள் இருக்கலாம். உலக சினிமா, ஹொலிவூட், தமிழ் சினிமா என்று ஒப்பிட்டு நம் திறமை சார்ந்து பேசிக் கொள்ளலாம். ஆனால், ஒரு சாதாரண பார்வையாளனான என்னை அப்படியே ஈர்த்துக் கொண்டது. எனக்கு படம் பார்க்கும் அந்த நேரத்தில் கிடைத்த அனுபவம், நான் எதிர்பார்த்ததற்கு மிக மிக அதிகமானது.

இது முழுக்க முழுக்க எம்மவர் அடையாளத்துடன் வந்திருக்கும் படம். இந்தத் திரைக்கதையமைப்பு தமிழ்ப்படங்களில் இதுவரை வந்ததாகத் தெரியவில்லை. தவிர, எடுத்தாளப்பட்டிருக்கும் பிரச்சினைகள், களம் முழுக்க எங்களின் வாழ்வும், ஒரு முழு நீளத்திரைப்படமாக முற்றிலும் புதிதானது என்றே நம்புகிறேன். நிச்சயமாக, மனப்பூர்வமாகவே எம்மவரின் சினிமா என்று பெருமை கொள்ளலாம்!

இயக்குனர் - லெனின் M. சிவம்
மொழி - தமிழ்
நாடு - கனடா

(4தமிழ்மீடியாவில் வெளியான என் கட்டுரை இது)
Share This:   FacebookTwitterGoogle+

Friday, September 5, 2014

என்னைத்தவிர யாருக்கு?

'எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?' துயரம் துரத்தும்போது கேட்டுக் கொள்ளும் டெம்ப்ளேட் கேள்வி. நீங்கள் ஒருமுறையேனும் கேட்டிருக்கிறீகளா? நான் பலமுறை கேட்டுவிட்டுக் கேள்வியை மாற்றி விட்டேன். 'என்னைத்தவிர யாருக்கு இப்பிடியெல்லாம் நடக்கும்?' - அது,மிகுந்த தன்னம்பிக்கையையும், ஒருவித மமதையையும் கொடுத்துவிடுகிறது.

கடந்த என் பிறந்தநாள். காலை நன்றாக விடிந்திருந்தது. முதல்நாள் மாலை கணணி வேலை செய்வதை நிறுத்தியிருந்தது.டிஸ்ப்ளே வரவில்லை.அன்றைக்கு என்று பார்த்து எனக்கு கணனியில் வேலையிருந்தது.திட்டமிட்டு விரைவாகச் செய்துமுடிக்க நினைத்திருந்தேன்.இனி கொண்டுபோய் திருத்துவது சாத்தியமில்லை, காலையில் பார்த்துக் கொள்ளலாம் என மனதைத் தேற்றிக் கொண்டேன். அன்றைய இரவைக் கடப்பது பெரும் பிரயத்தனமாக இருந்தது. இணையத்துக்கு முழுமையாக அடிமையாகிப் போயிருந்ததை உணர்ந்தேன்.

பிறந்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளலாம் என்கிற நற்சிந்தனையுடன், அதிகாலையிலேயே எழுந்து, ஒன்பது மணிவரை காத்திருந்து, இப்படியான நேரத்தில் த்ரீவீலரே வராது என்கிற அனுபவம் கற்றுத்தந்த பாடத்தில் காத்திருக்காமல், தெருமுனைவரை சிஸ்டத்தைத் தூக்கிச் சென்று, த்ரீவீலரில் கடையை அடைந்து, பிரச்சினையைச் சொல்லி, இன்றைக்கே தேவையென்று கூறி, இருக்கையில் அமர்ந்துகொண்டேன். உஸ்ஸ்!

சோதனைகளின் முடிவில்  RAM தான் பழுதென்று மாற்றியாகிவிட்டது. 'அப்பாடா நல்லபடியா முடிஞ்சுதே... சாதிச்சுட்டம்ல!' என்கிற மமதையோடு கார்ட்டை நீட்டினேன்.
"ஸாரி பாஸ் எங்க மெஷின் அப்செட். காஷ் தாங்க இங்க ஆர்பிகோ பக்கத்தில ATM இருக்கில்ல"
ஒருகணம் மனம் துணுக்குற்றது 'நம்ம ராசி வேலை செய்ய ஆரம்பிச்சுட்டுதோ... சேச்சே இருக்காது' தைரியம் சொல்லிக்கொண்டே நடந்தேன்.

இந்தமாதிரியான என் வழமையான சூழ்நிலைக்கு மாறாக ATM இல் ஆட்களில்லை. ஆச்சரியத்துடன் நெருங்கினால், Out Of Service என்றிருந்தது. ஏறக்குறைய ஏழரை ஆரம்பமாகியிருந்தது உறுதியானது.

பேரூந்திலேறி இரண்டு நிறுத்தங்கள் கடந்து மூன்றாவதில் இறங்கி சற்று நேரம் நடந்து ATM. இரண்டு வரிசைகள் ஒன்றில் இளம்பெண்கள் பெண்கள், ஓரிரு வயோதிபர்கள். இன்னொன்றில் இளைஞர்கள்.இரண்டாவதில் நின்றுகொண்டேன். மற்றைய வரிசை நகர நேரமெடுக்கும். அதிலும் இளைஞிகள் அம்மாவிடமிருந்து காதலனின் குறுந்தகவல்களை செல்பேசியில் காப்பாற்ற பூட்டிக் கொண்ட இலக்கப் பாஸ்வேர்டைத்தான் பழக்க தோஷத்தில் முதலில் தட்டுகிறார்களாம் என்றோர் வதந்தி உலாவுகிறது. ஆக அந்த வரிசை நகர நேரமெடுக்கும் என்பது என் கணிப்பு.

என் கணிப்பு என்றும் என்னை ஏமாற்றுவதில்லை. விளைவு எப்போதும் எதிர்மாறாகவே இருக்கும்.எங்கள் வரிசை நின்றுகொண்டிருக்க மற்றைய வரிசை நகர்ந்தது. அதற்காக எல்லாம் கணிப்பதை நிறுத்திவிடப்போவதில்லை. 'விடாத கணிப்பு விட்டு விட்டு ஆப்பு ' என்பதுதானே நம் வாழ்வை எப்போதும் சுவாரசியமாக்குகிறது! எங்கள் வரிசையில் ஒவ்வொருவனும் திடீர் விஞ்ஞானியாக மாறி, இந்த உலகத்துக்கு ஏதோ ஒரு உண்மையைக் கண்டறிந்து சொல்லிவிடும் பாவனையில் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். 'அடப்பாவிங்களா! ஏடிஎம்-ல காசு எடுக்கிறக்கு ஏண்டா ஃபோர்ப்ளே செய்கிறீர்கள்?' - மனக்குரல் அலறியது. 

ஒருவாறாக பணத்தை எடுத்துகொண்டு, திட்டமிட்டேன். அந்தப்பக்கம் கடந்து, பேரூந்துக்கு நடந்து ஏறி, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, பிறகு நடந்து.. அதைவிட நடந்தே செல்வது உசிதமானது. உச்சி வெயில். நடுத்தரவயது ஆன்டிகள் எல்லாம் அசமந்தமாக 'எங்கே செல்லும் இந்தப்பாதை ' இலக்கில்லாதது போல நடந்துகொண்டிருந்தார்கள்.

எங்கோ கடைக்குள்ளிருந்து குடையுடன் வந்த ஓர் ஆன்டி மிக இயல்பாக, உரிமையாக என் காதுக்குள் குடைக்கம்பியை சொருகினார். பிறகு எதுவும் நடக்காததுபோல அவராகவே விலகிச் சென்றார். அந்த அன்பில் ஒருகணம் நெகிழ்ந்துபோனேன். யாரவர்? என்காதைக் குடைந்துவிட வேண்டும் என்று அவரைச் செலுத்தியது எது? என்னமாதிரியான எதிர்பார்ப்பில்லாத அன்பு அது!

நடு வெய்யிலில் வீதியில் சென்றுகொண்டிருக்கும் யாரென்றே தெரியாத ஒருவனின் காதுக்குள் கம்பியைவிட்டுக் குடையத் தோன்றும் அன்பு இருக்கிறதே..அந்த அன்புதானே கடவுள்! இல்லையா?-இப்படித் தத்துவார்த்தமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, இன்னோர் ஆன்டி குடையுடன் என் மூக்கைக் குறிபார்த்து வருவது கண்டு, அவசரமாக விலகி வீதியில் இறங்கி  நடந்தேன்.

ஒரு மணிக்கு வீடு திரும்பி, மிகவும் களைத்த நிலையில்,எல்லா சோதனைகளையும் கடந்து சாதித்த திருப்தியுடன்  கணணியை பொருத்தி உயிர்ப்பித்தேன்.

கணிணி அப்படியே இருந்தது,நேற்றுப் பார்த்த மாதிரியே! 

டிஸ்ப்ளே யூனிட் போயிட்டுதா? மாத்தலாமா? மொத்தமா தூக்கி எறியலாமா? மொத்தமாக சோதித்து ஒருவழி பண்ணலாம். மறுபடியும் சிஸ்டம், மொனிட்டர் இரண்டையும் அள்ளிக் கொண்டு மீண்டும்....

"மொனிட்டரும் போயிட்டுது" , "இருக்கா?"
"யூஸ்ட் இருக்கு.. போடுவமா இல்ல புதுசா" , "புதுசா போடலாம்"
"செவண்டீன் போதுமா பெருசா இல்ல.." , "பெருசா"
"அந்தா ரோட்ல போறாரே அவர.." , "போட்டுறலாம்"
எதற்கும் தயாராக இருந்தேன்.

புதிதாக ஒன்றைத் தெரிந்து, முக்கியமாக பரிசோதித்து, மறந்து பணம்கொடுக்க கார்ட்டை எடுத்துவிட்டு...சோகமாக திரும்பினேன் மறுபடியும் ஏ.டி.எம் செல்லத் த்ரீவீலர் பிடிக்க!

திரும்பி வீடு வரும்போது பாதி வழியில் த்ரீவீலர் நின்றுவிட்டதையோ, நான் மீதித்தூரத்தை நடந்தே வந்ததையோ இவ்வளவு ஏன், என் அறைக்குள் நுழைந்து கணினியை உயிர்ப்பிக்க முனைகையில் பவர் கட் ஆகியிருந்ததையோ நான் இங்கே எழுதுவதாக இல்லை. ஏனெனில் இது தன்னம்பிக்கையூட்டும் பதிவு.சமூக அக்கறையில் எழுதப்பட்ட என் சொ(நொ)ந்த அனுபவம்!

'எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?' என்று கேட்காதீர்கள். 'என்னைத்தவிர யாருக்கு இப்பிடியெல்லாம் நடக்கும்?' தன்னம்பிக்கையுடன் கேளுங்கள்!
Share This:   FacebookTwitterGoogle+

Followers

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |