Monday, September 8, 2014

A Gun and a Ring : புதிய ஆரம்பம்!



ஆரம்பத்தில் அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கவில்லை. காரணம் நாம்தான். 'எம்மவர் படைப்பு' என்ற அடையாளம், மிகைப்படுத்தப்பட்ட பெருமைகளுடன் வெளியாகும் வஸ்துகள்- ஈழத்து முயற்சி என்று ஆரம்பித்தாலே தெறித்தோடும் நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. நேர்மையாகச் சொன்னால், சில நண்பர்களின் முயற்சிகள் தவிர, 'ஈழம்', 'இலங்கை' என்றாலே படமோ, பாட்டோ எதுவானாலும் நான் மறந்தும் 'கிளிக்' செய்வதில்லை.

A Gun and a Ring படம் குறித்துப் பேசப்பட்டபோதும் வழமை போலவே முதலில் நினைத்தேன். பின்பு வழமையான முயற்சிகளை விட நல்லதாக இருக்கலாம் என நம்பினேன். பார்த்தபோதுதான் தெரிந்தது நிச்சயமாக எம்மவரின் பெரியதொரு பாய்ச்சல். கொழும்பிலிருந்து கொண்டு படம் பார்க்க வராதவர்கள், ஒரு நல்ல அனுபவத்தைத் தவற விட்டுள்ளார்கள். நிச்சயமாக அவர்கள் மீது மட்டும் தவறல்ல. மேற்சொன்ன 'ஈழத்து, அனுபவம்தான் முக்கிய காரணம்!

எமது ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளை, புலம்பெயர் நாடொன்றில் பிறந்து வளரும் இளம் சமுதாயத்தின் உணர்வுகளை, அவர்களுக்கும் பாரம்பரிய சமூகக் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பெற்றோருக்குமிடையான முரண்பாடுகளை, பாதுகாப்பான நாடு என நாம் நம்பிக் கொண்டிருக்கும் வெளிநாடுகளில் துரதிருஷ்டவசமாக எதிர்கொள்ள நேரிடும் பிரச்சனைகளை, முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, எப்போதும் உடனிருந்து கொல்லும் உளவியல் பிரச்சனைகளை மிகை நடிப்போ, திணிக்கப்பட்ட வசனங்களோ இல்லாது மிக இயல்பாகப் பேசுகிறது படம்.

சமூக சேவகியான மனைவியைப் புரிந்து, இலங்கையில் விட்டுவிட்டு குழந்தையின் நலனுக்காக வெளிநாட்டுக்கு வந்த, பிறருக்கு உதவும் உறுதியான மனம் படைத்த நல்லவரான சொர்ணம் - ஆரம்பகால இந்திய பயிற்சி முகாமிலிருந்து வெளியேறி கனடா வந்த, எளிதில் பதற்றமடையும், பழைய நினைவுகளால் அலைக்கழிப்பால் எதையும் உருப்படியாகச் செய்ய முடியாத குழப்பவாதியான ஞானம் - போரினால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தில் தான் மட்டுமே எஞ்சிய, பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்யும் இலட்சியத்தில் ஒருவனால் வரவழைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்ட திடமான இளம்பெண் அபி - எப்போதும் நிதானமாக, உணர்ச்சி வசப்படாத, குற்ற உணர்ச்சியில்லாமல் பழைய வாழ்க்கையை வன்முறையை மறந்து விட்டு அல்லது உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்க அமைதியாக வாழும் அரியம் - தனது இரையைத் தேர்ந்தெடுத்துவிட்ட ஒரு சைக்கோ சீரியல் கொலைகாரனைக் கண்காணிக்க வரும் பொலிஸ் புலனாய்வாளன் ஜோன் - அப்பாவின் அறிவுரையைக் கேட்டு விலகிய தன்னால்தான் நண்பன் தற்கொலை செய்துகொண்டான் என நம்பும் ஓரினச் சேர்க்கையாளன் ஆதி - இவர்களைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு நகர்கிறது கதை.

இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேடிக்கொள்ளும் முடிவுகள் தனித்தனியான தலைப்புகளுடன் (அத்தியாயங்கள்?), அவை ஒன்றுடனொன்று எப்படிச் சம்பந்தப்படுகின்றன என்பதையும் தெளிவான திரைக்கதையூடாக இணைக்கப்பட்டிருக்கின்றது. (இந்த தலைப்புகள் போடுவதை பார்த்ததுமே மிகுந்த உற்சாகமானேன். படத்தின் இயக்குனர், டெரண்டினொவின் தீவிர ரசிகராக இருப்பாரோ என்று தோன்றியது)

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலும், இடையிலும் தொடர்ந்து சில கேள்விகள் எழ வைத்து, பின்னர் படிப்படியாக முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே செல்கிறது படம். ஒரு அத்தியாயத்தின் காட்சியில் பார்வையாளனுக்குத் தோன்றும் கேள்விக்கு, இன்னொரு அத்தியாயத்தின் முடிவில் பதில் கிடைக்கிறது. ஒரு சில காட்சிகள் நம்மை ஒன்று நினைக்க வைத்து அதற்கு மாறாக, சில சமயங்களில் அது ஒரு விஷயமாகவே இல்லாமல் ஆக்கிவிடுவது ரசிக்க வைக்கும் உத்தி.

கத்தியைக் கண்டு பதற்றமடைகிறது ஒரு பாத்திரம். அதற்குக் காரணம் கத்தி சார்ந்து ஒரு அதிர்ச்சிகரமான பழைய சம்பவம் இருக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால் அப்பிடியிருக்க எந்த அவசியமும் இல்லை. வாழ்க்கையில் சிலவிஷயங்களிற்குப் பதில் 'அது அப்படித்தான்' மட்டுமே!

இருள் சூழ்ந்த அறையில் கையில், பச்சை குத்திய காதலியின் பெயரை அழிக்கமுயலும், கைத்துப்பாக்கியால் தற்கொலைக்கு முயற்சிக்கும் ஒரு பாத்திரம் போதைப்பொருள் கடத்துபவனாகவோ, சமூக விரோதியாகவோ, கோழையாகவோ இருக்க வேண்டிய அவசியமுமில்லை. நேர்மையான, மனச்சாட்சியுள்ள பொலிஸ் புலனாய்வாளனாகக் கூட இருக்கலாம்.

என்னை மிகக்கவர்ந்தது அரியம்- ஞானம் காட்சிகள்தான். "…ஏனண்ணே கொல்லுறதெண்டு முடிவெடுத்தா எத்தின வழி இருக்கு. கத்தி இருக்கு... ஏன் அடிச்சு..?" என்று கேட்கும்போது ஞானத்தின் முகத்தில் இயலாமை, விரக்தி, மன்றாட்டம் போன்ற உணர்ச்சிகள்! அப்படிக்கேட்கும்போது இலேசாக சிரிக்கக்கூடத் தோன்றியது எனக்கு மட்டும்தானா தெரியவில்லை. அதுபோல அரியம் திடீரென மாறும் பழைய இரும்பனாக திகைக்க வைக்கிறார்.

ஆரம்பத்தில் குழப்பவாதியாக அறிமுகமாகும் ஞானம், எப்போதும் அப்படியே இருக்கிறார். எதிலும் தெளிவில்லாதவர்கள் எளிதில் பதற்றமடைபவர்கள் தமக்கு மட்டுமன்றிக் கூட இருப்பவர்களுக்கும், சமயத்தில் எந்த சம்பந்தமில்லாதவர்களுக்கும் சேர்த்தே பிரச்சினையை ஏற்படுத்திவிடுகிறார்கள். எளிதில் பதற்றமடையாத சாதுவாக அறிமுகமாகும் அரியம், பின்பு காட்டும் சடுதியான மாற்றம் அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர் எப்போதும் அப்படியே இருக்கிறார். பதற்றமடையாமல் நிதானமாக நடந்துகொள்ளும் அவர் பெயர் வேறு இரும்பன். அட்டகாசமான சேஞ்ச் ஓவர்.

பக்கத்திலிருந்த நண்பன், 'இரும்பன்' தனது ஊர் என்றார். இன்னொரு நண்பன் இரும்பன் கதாபாத்திரம் யாரென்று இன்னொருவரைச் சொன்னார். இரும்பனின் தோற்றம் பார்த்தவுடனேயே ஒருவரை ஞாபகப்படுத்துகிறது. ஆக, ஒருகாலத்தில் நிறைய இரும்பன்கள் இருந்தது, இப்போதுமிருப்பது தெரிகிறது. படத்தில் யார் எந்த இயக்கம் என்று சொல்லாமலே அவரவர் ஊகத்திற்கு விட்டுவிடுவது மிகக் கவர்கிறது. அது மிகச்சரியான வழிமுறை. உண்மையில் எல்லா இயக்கத்துக்கும் சில பக்கங்கள் ஒரே மாதிரியானவைதான்!

முதலில் மிகக்கவர்ந்தது தமிழ். யாழ்ப்பாணத்துத் தமிழ் மிகச் சரியாகவே பயன்படுத்தபட்டிருப்பதாக நினைக்கிறேன். (நினைக்கும் அளவுக்குத்தான் எனக்குத் தெரியும்). படம் தொடங்கும்வரை நம்பிக்கையில்லாமல் இருந்தது படத்தின் பேச்சு மொழி குறித்துத்தான்! 'தெனாலி' உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் யாழ்ப்பாணத் தமிழ் பற்றிக் கவலைப்படும் நாங்கள் இலங்கை - புலம்பெயர் படைப்புகளின்(?!) கொடூரங்கள் பற்றிக் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக கதநாயகி எப்படிப் பேசுகிறார் என்பதைப் பார்க்கும் ஆவலிருந்தது. அவர்களுக்கென்றே தனிமொழி இங்கே இருப்பதாகத் தெரிகிறது. சந்தேகமிருந்தால் நம்மவரின் காணொளிகளைப் பார்க்கவும். பேச்சுமொழியைச் சிறப்பாகக் கொண்டுவந்ததற்கே இயக்குனர், நடிகர்களுக்கு விருது கொடுக்கலாம். உண்மையில் வெளிநாடுகளில்தான் எண்பதுகளில் வெளியேறிய நம்மவரிடம்தான் உண்மையான, முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் கேட்ட பேச்சு மொழி இன்னும் வழக்கில் இருப்பதாகத் தோன்றுகிறது.

எம்மவர்களின் படைப்புகளை ஊக்குவிக்கும் இணையத்தளங்கள் மிகக் கேவலமான குப்பைகளை மன்னிக்கவும் 'படைப்புகளை' எல்லாம் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுகின்றன. இதனால் உண்மையிலேயே நல்ல படங்கள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடும் அபாயம் எதிர்காலத்திலும் நிகழலாம். மிகக் குறைந்தபட்ச பொறுப்புடனாவது நடந்துகொள்வது அவசியம். ஏனெனில், படம் பார்க்க வந்தவர்களில் தமிழர்களை விட சிங்களவர்களே அதிகம் என்று தோன்றுகிறது. இலங்கையில் திரையிடச் சாத்தியமில்லாத, சென்சாரில் தப்ப முடியாத இந்தப்படத்தை சிங்களவர்களுடன் இணைந்து திரையரங்கில் பார்த்தது கூட ஒரு வித்தியாசமான அனுபவமே.

நம் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் கட்டாயமாகப் பார்க்க வழிசெய்வது நம் சமுதாயத்துக்கு மிகுந்த நன்மை பயக்கும். 'எங்கட பெடியள் ஏதோ செய்ய வெளிக்கிடுறாங்கள். எங்களால முடிஞ்சத செய்யவேணும்' - என்ற நல்ல மனதுடன் என்ன ஏது என்றே கேட்காமல் பணத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய அதிகார்வலர்கள், யாரோ ஒரு 'மங்களம் சாரி'ன் பணத்தில் எதுவுமே இல்லாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் கமெராவைத் தூக்கிக்கொண்டு படம் எடுக்கக் கிளம்புபவர்கள், கொலை வெறியுடன் சுற்றிக் கொண்டிருக்கும் கலையார்வலர்கள் 'படம் பார்க்கக்' கற்றுக்கொள்ளவும், பலர் இதையெல்லாம் கைவிட்டு, மனந்திருந்தி வாழவும் வாய்ப்பிருக்கிறது.

நடிகர்களின் தேர்வும் நடிப்பும் இயல்பாக, கவர்கிறது. பேச்சு மொழி அவ்வளவு அருமையாக உள்ளது முக்கியமாகக் கதாநாயகியைத் தனியாகவே பாராட்டலாம் - ஏனெனில் அவர்கள்தான் வழமையாக அதிகம் அச்சமூட்டுபவர்கள். இரும்பன், ஞானம் கதாபாத்திரங்களின் பாதிப்பு இரண்டு நாட்களுக்கு இருக்குமென நம்புகிறேன். காட்சிகளின் நீளம், சில தெளிவின்மை, ஒளிப்பதிவு என்பன பற்றி தேர்ந்த விமர்சகர்களுக்கு புகார்கள் இருக்கலாம். உலக சினிமா, ஹொலிவூட், தமிழ் சினிமா என்று ஒப்பிட்டு நம் திறமை சார்ந்து பேசிக் கொள்ளலாம். ஆனால், ஒரு சாதாரண பார்வையாளனான என்னை அப்படியே ஈர்த்துக் கொண்டது. எனக்கு படம் பார்க்கும் அந்த நேரத்தில் கிடைத்த அனுபவம், நான் எதிர்பார்த்ததற்கு மிக மிக அதிகமானது.

இது முழுக்க முழுக்க எம்மவர் அடையாளத்துடன் வந்திருக்கும் படம். இந்தத் திரைக்கதையமைப்பு தமிழ்ப்படங்களில் இதுவரை வந்ததாகத் தெரியவில்லை. தவிர, எடுத்தாளப்பட்டிருக்கும் பிரச்சினைகள், களம் முழுக்க எங்களின் வாழ்வும், ஒரு முழு நீளத்திரைப்படமாக முற்றிலும் புதிதானது என்றே நம்புகிறேன். நிச்சயமாக, மனப்பூர்வமாகவே எம்மவரின் சினிமா என்று பெருமை கொள்ளலாம்!

இயக்குனர் - லெனின் M. சிவம்
மொழி - தமிழ்
நாடு - கனடா

(4தமிழ்மீடியாவில் வெளியான என் கட்டுரை இது)

1 comment:

  1. வணக்கம்,ஜீ!நலமா?///நான் கூட உங்களைப் போல் தான் அனுமானித்திருந்தேன்.பத்தோடு பதினொன்று என்று.இங்கேயும்(பிரான்சில்)திரையிட்டார்கள்.இப்போது இந்தப் படத்தின் தாக்கம் வலியது என்று உங்கள் விமர்சனம் மூலம் தெரிந்து கொண்டேன்,நன்றி!பார்த்து விடுவோம்.,அடுத்த சந்தர்ப்பத்தில்.///ம.தி.சுதா போன்றோரின் சில குறும்படங்கள் என்னைக் கவர்ந்திருந்தன.

    ReplyDelete