Saturday, July 30, 2011

காதல் வலி!

ஷன்னுக்கு காதல் வந்திருந்தது! எத்தனையாவது என்பது நமக்கு அவசியமாகப் படவில்லை!  கூடவே காதலின் வலியும்! காதல்வலி என்றதுமே சட்டென ஒரு முடிவுக்கு வந்து விடலாம் அது ஆண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று. ஏன் அது பெண்களுக்கு வருவதில்லை? இல்லை வெளிக்காட்டிக் கொள்வதில்லையா? இல்லை எதையும் 'லைட்'டாகத்தான் செய்வார்களா? இது டீப்பா ஆராய வேண்டிய விஷயம் என்றாலும் இப்ப அது நமக்கு வேணாம்.


இந்தக் காதல் வலியைப் பற்றித்தான் எத்தனை கவிதைகள், கதைகள். எத்தனை பேர் அனுபவிச்சு, உருகி,உருகி எழுதியிருக்கிறார்கள். ஆனா நான் சொல்ல வந்தது அதுவல்ல. ஒருவன் காதலிக்கத் தொடங்கியதுமே அவனது நண்பர்களுக்கு ஏற்படும் வலி இருக்கிறதே, அதைப் பற்றி யாராவது எழுதியிருக்கிறார்களாஅந்தக் கொடுமைய அனுபவிச்சுப் பார்த்தா தான் தெரியும். ஒரு பய நிம்மதியா இருக்க முடியுமா? 

எனது முதல் காதல்வலி...! டீன் ஏஜின் நடுப் பகுதி, அப்பல்லாம் ஜக்கு ஒழுங்காகக் கோவிலுக்குச் செல்வான். அவனின் கடவுள் பக்தி பற்றி எனக்கு எந்தவித  சந்தேகமுமில்லாததால் என்னால் உறுதியாகக் கூறமுடியும், சைட் அடிக்கத்தான் போறான் என்று! 

திரும்பி வந்ததுமே ஆரம்பிச்சுடுவான்.
'மச்சான் கோயில்ல ஒரு பொண்ண பாத்தேண்டா'
'நீ போனதே அதுக்குத் தானேடா'
'சூப்பரா இருந்திச்சுடா' , 'அப்பிடியா?' (உனக்கு காமாலைக் கண்தானே)
'நான் பாத்திட்டே இருந்தேண்டா' (இத சொல்ல வேற வேணுமா?)
'அவளும் பாத்தாள்டா' , '' (பார்ரா)
' நான் சிரிச்சேண்டா', 'ம்ம்' (நீ இழிச்சவாய் தானேடா)
'அவளும் சிரிச்சாள்டா', '' (அவளும் லூசா)
'நீ என்ன நினைக்கிறே?' , 'என்னது?' (எல்லா இழவையும் நீ பண்ணிட்டு என்னைக் கேட்டா?)

இனி அவள் தான் ஜக்குவின் கதை நாயகி, அதாவது இன்னொரு நாள் வேறு ஒருத்தியைச் சந்திக்கும்வரையில்.முதல் ஒன்றிரண்டு கதைகளில் நானும் ஆர்வம் காட்டினேன். ஆனா இதே வேலையா ஒருத்தன் இருந்தா என்ன பண்ண முடியும்அதுக்குப் பிறகு எப்பவுமே நண்பர்களுக்கு எனது 'அட்வைஸ்' முடிவு பண்ணிட்டா உடனேயே அந்தப் பெண்ணிடம் காதலைச் சொல்லி விடுங்கள் என்பதாகத்தான் இருக்கும்! இல்லாட்டி நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டாங்களே!

நாங்களும் கதை கேட்டுட்டே. ஒரு கட்டத்தில வெறுத்துப் போய் நானே லவ் பண்ணலாமான்னு கூட யோசிச்சிருக்கேன்னா பார்த்துக் கொள்ளுங்க எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பேன்னு.

காலங்காலமாக யாராவது ஒருத்தன் காதலை வாழ வைத்தே தீருவேன் ன்னு கங்கணம் கட்டிட்டுத்தான் இருந்தாங்க. இப்பக்கூட நம்ம ஜேப்பி இருக்கானே, அவனுக்கு ஒரு ராசி அவன் ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளி, லவ் பண்ணப் போறேன்னு எங்ககிட்ட சொன்னான்னு வையுங்க, இவன் இங்க முடிவு பண்ணேக்க, அது யாரையாவது லவ் பண்ண ஆரம்பிச்சிடும்! இவன் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னா, அதுக்கு வெளிநாட்டுல மாப்பிள்ளை கிடைச்சிடும்! இல்லேன்னா யாரோடாவது ஓடிப்போயிடும்! அவனால எத்தனை பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கிடைச்சிருக்கு! எவ்வளவு பெரிய சமூக சேவைய சத்தமில்லாம செய்திட்டு இருக்கிறான்! ஆனா கொடுமையைப் பாருங்கஇந்த விஷயம் எதுவுமே அந்தப் பொண்ணுங்களுக்கு தெரியாது! 


இரண்டு வகையான காதல் இருந்திச்சு! இரண்டுமே ஒருதலைதான்!

ஒரு பெண்ணைப் பார்த்து, பிடித்துப் போய் காதலிப்பது. இது முதல் வகை. சாதாரணமானது.

சிலபேருக்கு, காதல் முதல்லயே வந்திடும். பிறகுதான் காதலிக்க ஆள் தேடுவானுகள்.


ஷன்னின் காதல்கள் இரண்டாம் வகை. அவன் தனது அனுபவங்களை, சாகசங்களை ஒவ்வொரு முறையும் 'புதுசா' சொல்றமாதிரியே.. விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க, நாங்களெல்லாம் பிரமித்துப் போய் ( நாங்களெல்லாம் எப்பதான் இதெல்லாம் தெரிஞ்சு கொள்ளப் போறமோ?) கேட்டிட்டு இருப்போம்.


இந்த முறை ஷன் மிகத் தீவிரமாக இருந்தான் அல்லது எங்களுக்கு அப்படித் தோன்றியது. இந்த மாதிரி சமயங்களில எல்லாப் பசங்க 'குறூப்' புக்குமே ஒரு அட்வைசர் இருப்பார்.எங்களுக்கும். அநேகமாக தொடர் தோல்வியை சந்தித்து, விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று 'கோச்' ஆன மாதிரி. அண்ணன் பல களங்கள், விழுப்புண்கள் கண்ட அனுபவத்திலிருந்து, (அநேகமாக நான்கைந்து வயது பெரியவராக வேறு இருப்பார்)  ஆழ்ந்த சிந்தனையுடன், நிதானமாக 'இப்பிடித்தான் நானும் ஒரு நாள்...' என்று ஆரம்பிக்கும்போது, நாங்களெல்லாம் அமைதியாகி....


எங்களில் பலர்  நாம லவ் பண்ணலையே தவிர அடுத்தவன் காதல பீல் பண்ற நல்ல மனசு வாய்க்கப் பெற்றிருந்தோம். அண்ணனின் சந்தோஷ தருணங்களில், சந்தோஷித்து, துக்கத்தில் பீலாகி, 'டச்' ஆன சமயங்களில் ஒருவரை ஒருவர் பார்த்து, (அண்ணன் நிஜமாவே பெரிய ஆளுதாண்டா! நாங்களும் இருக்கிறம்?!..ம்ம்ம்ம்) சில நேரங்களில் அண்ணன் ரொம்ப பீலாகி, குரல் தடுமாற கதை சொல்லும்போது, எல்லாரும் அழுவாரைப் போல உட்கார்ந்திருப்போம். ஆனா அப்போ, லவ் பண்ணிடிருக்கிறவன் மட்டும் லூசுத்தனமா எதையோ நினச்சு சிரிச்சுட்டே கேட்டிட்டு இருப்பான்.கொஞ்ச நாள்ல தனியா அழப் போறது தெரியாமல்!

அதில எங்க எல்லோருக்கும் ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தது - அதாவது இப்ப இல்லாட்டியும் என்றைக்காவது ஒருநாள் நாங்களும் லவ் பண்ணுவோம்! அப்ப எங்களுக்கும் இதெல்லாம் 'யூஸ்' ஆகும்னு!


அப்புறமென்ன 'அண்ணனின்' நேரடி வழிநடத்தலில், எங்காளு ஷன் போய் காதலை கடிதத்தில வடிச்சுக் கொடுக்க, பொண்ணு கலவரமாகிக் கடாசி எறிய, எங்களின் பிரகடனப் படுத்தப்படாத அந்தத் துக்கதினம். ஏன் ? நல்லா தானே போயிட்டிருந்திச்சு? அவளும்தானே பாத்திட்டிருந்தாள்?(உன்னத்தானா?) என்னப் பாக்கேக்க எல்லாம் சிரிப்பாளே (எதுக்கு சிரிச்சாளோ?) அப்போ இதுக்கு என்ன அர்த்தம்? அதுக்கு என்ன அர்த்தம்? ஏராளமான கேள்விகள் ஷன்னாலும் மற்றவர்களாலும் மாறி மாறிக் கேட்கப்பட்டது.


விடை தெரியாத பல கேள்விகளின் முடிவில் அண்ணன், 'இதுக்குத் தாண்டா முதல்லயே சொன்னேன்...' ( என்ன ஒரு தீர்க்க தரிசனம்! இதுதான் அண்ணன்! ) ஆரம்பிச்சு, தனது சொந்த அனுபவங்கள், சில பல சம்பவங்கள், உதாரணங்களின் மூலம் அந்த மாபெரும் உண்மையை(?!) முன்வைத்தார். 'பொண்ணுங்களே இப்பிடித்தான்'. 

அமைதி.
அண்ணன் 'இந்தப் பொண்ணுங்களையே நம்பக் கூடாதுடா' அந்த நிசப்த இரவில், 'ஆமாமா' எங்களின் கோரஸுடன், தூரத்தில் குறைக்கும் நாய்களின் பின்னணியுடன், பெண்களுக்கெதிரான அந்தத் தீர்மானம் மீண்டுமொருமுறை நிறைவேற்றப் பட்டதுஎந்தப்பெண்ணுமே அறியாமல்!


ஷன்னும் இந்தமுறை ரொம்பப் பாதிக்கப்பட்டதால் மிகத்தெளிவாக தன் முடிவை அறிவித்துக் கொண்டான் 'இனி வாழ்கையில லவ் பண்ணக் கூடாது!' சில நாட்கள் அவனைக் காண முடியவில்லை! திடீரென்று ஒருநாள் , 'மச்சான் அவசரமா போறேண்டா பிறகு சந்திக்கிறேன்' சைக்கிளில் பேய் மாதிரி ஓடிட்டிருந்தான்!


சற்றுத் தொலைவில் சென்றுகொண்டிருந்தது ஒரு பெண்கள் கூட்டம்!
      

Thursday, July 28, 2011

விஜய் துரோகியா? - ஒரு ரசிகனின் குமுறல்!
விஜய் ராஜபக்ஷேவுக்கு எதிராக கையெழுத்திட மறுத்ததால் அவர் துரோகியா என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்! 

இது பற்றி நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் தனது உள்ளக் குமுறலை என்னிடம் கொட்டியிருந்தார்! அதில் ஒரு பகுதியை அப்படியே.. 

கடந்த காலத்தில் அதாவது காவலன் வந்த காலத்தில் அண்ணன் டாக்டர் விஜய் ஈழத்தமிழருக்கு ஆதரவா கொந்தளித்து குரல் கொடுத்தது உண்மைதான்! அப்போது கூட சிலர், விஜய் தனது சுயநலத்திற்காக அப்படிச்செய்கிறார் என அறிவுகெட்டதனமாக அண்ணனின் இதயசுத்தியை, நேர்மையைச் சந்தேகித்தார்கள்!  

அவர்கள் இப்போது வேலாயுதம் படம் ரிலீசாவதால் இந்த நேரத்தில் எதையாவது பண்ணினால் படம் இலங்கையில் தடை செய்யப்பட்டு விடுமென்பதால் அண்ணன் பம்முவதாகவும் கூறுகிறார்கள். சிரிப்புத்தான் வருகிறது இவர்களைப் பார்த்தால்! என்ன ஒரு அறியாமை!

அவர்களுக்காக நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்!

அண்ணன் தனது இடைவிடாத நற்பணிகளுக்கு மத்தியிலும் இலங்கையை உலக வரைபடத்திலிருந்து தூக்கி விடுவதாக அண்ணன் விட்ட சவால் உங்களுக்கு நினைவிருக்கா?அண்ணனே மறந்திருந்தாலும் நாங்க மறக்கமாட்டோம்! அண்ணனின் அந்தப் பேச்சால் அண்ணனின் எத்தனை ரசிகர்கள் இலங்கையைவிட்டே அவசரமா வெளிநாடுகளுக்கு ஓடினார்கள், எத்தனை பேர் இன்னும் பீதியுடன் இங்கே வாழ்கிறார்கள் என்று தெரியுமா?

இந்த சம்பவத்திற்குப் பிறகு சர்வதேசமே அண்ணனின் நடவடிக்கைகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இந்தக்கையெழுத்து எவ்வளவு தீவிரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஏன் இவர்கள் புரிந்த கொள்ள மறுக்கிறார்கள்? 

அவரது பேச்சில் பாதி புரியாததால் அதில் நியாயமிருப்பதாகவே தோன்றியது!

இந்த விஷயத்தில், 'சரியாகப் புரிந்துகொள்ள முடியாத கருத்துக்கள் பெரும்பாலும் நியாயமானவையாகவே இருக்கின்றன' என்ற ஜியோக்கியூட்ரசின் (கி.மு.781 - 827) வார்த்தைகளை நான் நம்புகிறேன்!

நான் சில பதிவுகளில் டாக்டர் விஜயை கலாய்த்ததாக வருத்தப்பட்டார்கள் சில நண்பர்கள்! இனி அப்படி நடந்து கொள்வதாக இல்லை - அதனால்தான் எனது கருத்தைச் சொல்லாமல் ஒரு ரசிகனின் குமுறலை பதிவு செய்திருக்கிறேன்! 

தமிழகத்தின் ஒரு பிரபல 'நடுநிலை' நாளிதழ்தான் இந்த விஷயத்தில் இப்படி விஜய்யைக் கோர்த்து விட்டதாகவும் சொல்கிறார்கள்! இதுவும் உண்மையாகவே இருக்கலாம்!

அதே நாளிதழ்தான் மூன்று வருஷத்துக்கு முதல் அஜித்தைக் கோர்த்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்!அந்த நேரத்தில் நம்ம நண்பர்களான புலம்பெயர் நாடுகளில் வாழும் விஜய் ரசிகர்கள் சிலர் உற்சாகமாக ஏகனைப் புறக்கணிப்போம்னு Facebook ல ஒரு Page கிறியேட் பண்ணி இருந்தார்கள்!  

புலம்பெயர் தமிழர் எல்லாரும் வெற்றிகரமாக புறக்கணித்ததால்,'எஸ்' ஆகிட்டாய்ங்க! நாமதான் தெரியாம போயி.. சோகன் ஆகிட்டோம். 

அந்தப் புறக்கணிப்பாலதான் அந்த அருமையான படம் ஊத்திக்கிச்சுன்னு இன்னும் சிலபேர் சீரியஸா நம்பிட்டிருக்காய்ங்க - இயக்குனர் ராஜூசுந்தரம் உட்பட!


அதே நேரம் இந்த சர்ச்சைக்கு தகுந்த பதில் சொல்வதற்காக எஸ்.ஏ. சந்திரசேகர் உட்கார்ந்து கடுமையாக யோசித்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் நல்லதொரு பதில் தருவார் என்றும் அவர் சொன்னார்! 

மேன்மை தங்கிய திரு.எஸ்.ஏ.சியின் அறிக்கைகள், கருத்துகள் என்றுமே பொருள் பொதிந்தவை! ஆழமாக சிந்திக்கத் தூண்டுபவை!

திமுக வின் படுதோல்விக்கு என்ன காரணம்? இதற்கான பதில் தேடி பத்திரிகையாளர்கள், பதிவர்கள், உடன்பிறப்புகள், ஏன் ஜெயலலிதா கூட தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது எஸ்.ஏ.சி. அதற்கான காரணத்தை மிக எளிமையாக விளக்கினார். அதாகப்பட்டது,

'கடந்த தேர்தலில் புதிய வாக்காளர்களில் ஐம்பது வீதமானோர் விஜய் ரசிகர்கள்!'

மீதி ஐம்பது வீதம்? 

அவர்கள் எஸ்.ஏ.சி.யின் ரசிகர்கள் என்பதை அவர் சொல்லி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை!     

Monday, July 25, 2011

தாய்மண் நோக்கி ஓர் பயணம்!


சொந்த மண்ணில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு நாடோடிகளாக வாழும் அனுபவத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்ததுண்டா?

சின்னசிறு வயதில் மட்டுமே பார்த்த ஊரின் எந்தக் காட்சிகளையும் கற்பனை பண்ண முயன்று, முடியாமல் நினைவுகளால் மட்டும் உணர்ந்திருக்கிறார்களா?

ஏதொ சில வாசனைகள், சிறுவயதில் கேட்ட பாடல்கள் அடிமனதில் இருக்கும் சிறுவயது ஞாபகங்களை எப்போதாவது கிளறிவிட, தூக்கம் தொலைந்ததுண்டா?

மீண்டும் பல வருடங்களின் பின் தாய்மண் திரும்பும்போது, அது தன் பழைய அடையாளங்களைத் முற்றிலும் துறந்து, அந்நியமாய் தெரியும்போது, என்ன தோன்றும்?

முதன் முதலாக சிறுவயதில் நீங்கள் நடைபயின்ற வீதியில் மீண்டும் நடந்து செல்கையில், பள்ளிக்கூடம், சின்னவயது நண்பர்களுடன் விளையாடி, உருண்டு, புரண்ட கோயில் மணல் வீதி எல்லாம் பார்க்கும்போது, பழைய நினைவுகள் மெதுவாக மீட்டப்படுவதை உணர்ந்ததுண்டா?

ஒருவேளை நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும்! நண்பர்களின், உறவுகளின் அனுபவங்களைச் சொல்லக் கேட்டிருக்கக்கூடும்! நானும் கூட கேட்டிருக்கிறேன்! ஆனால் அந்த அனுபவங்களை வார்த்தைகளால் விபரிப்பதென்பது சாத்தியமானதல்ல என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும்!

எனக்கும் இப்போது புரிகிறது.....இருபது வருடங்களின் பின் என் சொந்த மண்ணை காண யாழ்ப்பாணம் சென்றபோது...

யாழ்ப்பாணம் 1996 இல் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தபின்னரும் உயர் பாதுகாப்பு வலயம் என்று அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்று நமது ஊர்! கடந்த மாதம் முதன்முறையாக அனுமதிக்கப்பட்டது! இன்னும் அனுமதிக்கப்படாத பிரதேசங்களும் உண்டு!

சிலர் ஆச்சரியமாகக் கேட்டார்கள், 'அப்ப நீ சின்னப்பிள்ளையெல்லே! உனக்கு ஞாபகமிருக்கா?' என.
எனக்கும் ஆச்சரியம்! 'எப்படி என்னால் மறந்துவிட முடியுமென்று நினைக்கிறார்கள்?'

நண்பன் எபியும் என்னுடன் வந்தான். காங்கேசன்துறை வீதியால் பேரூந்தில் செல்கையில் இனம்புரியாத ஒரு உணர்வு! தெல்லிப்பழைச் சந்தியை அடைந்ததும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது! தொடர்ந் சில நிமிடங்களில் எனது ஊர்...!

மாவிட்டபுரம்!


பேரைச் சொன்னதுமே ஊரின் மையமாக இருக்கும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமே நினைவில் வரும் யாழ்ப்பாத்தவருக்கெல்லாம்! கம்பீரமான இராஜ கோபுரத்துடன் அந்தப் பிரதேசத்துக்கே அழகு சேர்ப்பதாக! 


கோயில் பிரகாரத்தில் நடக்கும்போது நான் கற்ற பாலர் பாடசாலை, ஆரம்ப பாடசாலை எல்லாவற்றையும் நண்பனுக்கு சொல்லிக்கொண்டே வந்தேன்!

என்றைக்குமில்லாமல் கோயிலுக்குப் போகும் நல்லபுத்தியுடன் நான் இருந்தேன், 
ஆனால் கொடுமையைப் பாருங்க  கோயில் பூட்டி இருந்திச்சு! 'என்ன கொடுமை முருகா?' 

நம்ம  ராசி  அப்பிடி  என்பதால்,  அலட்டிக்  கொள்ளாமல்  கீரிமலை  வீதியூடாக நடந்து சென்றோம்!


எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு அங்கமாக திகழ்ந்த, ஒரு சாட்சியாகவே கூட இருந்து பார்த்துக் கொண்டிருந்த, நான் முதன்முதலில் நடந்த வீதி ஜீவனை இழந்து..!


பொன்விளையும் பூமியாகத்தான் இருந்தது...இப்போ, வறண்டு, கட்டாந்தரையாகி, புழுதிக்காடாக..! இங்கே எல்லாம் வீடுகள் இருந்திருக்க வேண்டுமே?


ஒரு பிரபல அலுமினிய தொழிற்சாலை சிதைந்த நிலையில்..!கூரைகள் அகற்றப்பட்டு, கதவு - யன்னல்கள் உடைத்தெடுக்கப்பட்டும், மரங்கள், பற்றைகளால் மூடிய சிதைந்த நிலையிலும் வீடுகள்!

ஏற்கனவே பற்றைகள் வெட்டித் துப்பரவு செய்யப்பட்டிருந்தாலும் மிதிவெடிகள் பற்றிய எந்த உத்தரவாதமும் இல்லையென்பதாலும், நம்ம ராசி பற்றி நன்றாகவே தெரிஞ்சதாலும் நண்பனிடம், 'மச்சான் நான் முன்னால போறேன் என்னோட ஸ்டெப்ஸை கவனமா Follow பண்ணி வா!' காணிக்காரனுக்கு கால் போனாலும் அதில ஒரு நியாயமிருக்கு ஆனா கூட போறவனுக்கு?
ஊரின் சுடலையின் அருகே.... காவல் தெய்வமான வைரவர் கோயில்! அருகிலுள்ள பெரும் ஆலமரம்!


சின்னஞ்சிறு வயதில் பாய்ந்து, தொங்கி ஊஞ்சலாடி மகிழ்ந்த அந்த பெரிய ஆலமரத்தின் விழுதுகள், வேர்களாகிப் பரந்து பருத்து...!


மீளக் குடியமரும் நோக்கில் வீடுகளைப் பலர் திருத்தவும், புதிதாகக்கட்டவும் தயராகுவதைக் காண முடிந்தது! இதுதான் நம்மவரின் தனித்தன்மை, எவ்வளவு துயர் வந்தபோதும் துடைத்தெறிந்து, தளராது மீண்டும் மீண்டும் எழுவோம்! இதில் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதைச் சொல்லியே ஆகணும்!

இதுல இன்னொரு விஷயம், 'எரிகிற வீட்டில பிடுங்கிறது லாபம்'ன்னு, எஞ்சியிருக்கிற வீடுகளில் எது கிடைத்தாலும் திருடுவது, காணிகளிலுள்ள மரங்களை வெட்டி விற்பது என்று, திருட்டு அன்பர்கள் பலரும் வியாபார நோக்கத்துடன் அடிக்கடி விஜயம் (எங்கள் வீட்டிலும் நடந்தது!) செய்கிறார்கள்! - இதுவும் தமிழன்தான்!

எது எப்படியோ, என்னவானாலும், இன்னும் ஓரிரு வருடங்களில் மீண்டும் புது(பழைய)பொலிவுடன் என் தாய்மண்ணைப் பார்க்கமுடியுமென்ற நம்பிக்கையுடன் ஜீ...!    
   

டிஸ்கி : இது பற்றிப் பதிவிடுமாறு கூறிய பதிவர் மதிசுதாவிற்கு நன்றி! ஆரம்பத்தில் எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை! அதனால் ஒழுங்காகப் படமெடுக்கவில்லை!


Friday, July 15, 2011

I am Sam

மனதளவில் ஏழு வயது குழந்தையின் வளர்ச்சியை மட்டுமேயுடைய ஒரு ரெஸ்டாரெண்டில் வேலை செய்யும் சாம் (Sam), அவசரமாக மருத்துவமனைக்கு ஓடுகிறான். அங்கே அவன் மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது! லூசி எனப் பெயரிடுகிறான்! திடீரென நடு வீதியில் சாமையும், அந்தக் குழந்தையையும் அநாதரவாக விட்டுப் பிரிந்து விடுகிறாள் அவன் மனைவி! ஒரு கணம் தவித்துப் போகிறான் சாம்!


ஒரு ஆண் யாருடைய உதவியுமின்றித் தனியாக பிறந்து ஓரிரு நாட்களேயான சிசுவை வைத்துப் பராமரிப்பதென்பது எவ்வளவு சிரமமான காரியம்! அதுவும் அவன் மனதளவில் அந்த வயதுக்குரிய சரியான வளர்ச்சியை அடைந்திராத பட்சத்தில்? அவனுடைய அயல் வீட்டுக்காரியான ஆனி அவனுக்கு இவ்விஷயத்தில் உதவி செய்கிறாள்! சாமைப் போலவே இருக்கும் குழந்தைத் தனமான அவன் நண்பர்கள் சிலர் எப்போதுமே அவனுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்! அவர்களும் குழந்தை லூசி மீது மிகுந்த அன்பாக இருக்கிறார்கள்!  

அழகான சிறுமியாக வளர்ந்துவிட்ட லூசி, தன தந்தை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டிருப்பதை உணர்ந்து கொள்கிறாள். லூசியின் பாடப்புத்தகங்களை வாசிக்கிறான் சாம். அவனால் முடியாத கஷ்டமான சொற்களை படிக்க  உதவுகிறாள் லூசி. Different என்ற சொல்லையே லூசி உச்சரிக்க விரும்புவதில்லை!லூசியின் நண்பர்கள் அவளின் தந்தை குறித்து கேலி செய்கிறார்கள். தந்தை மீதி மிகுந்த அன்பு வைத்திருக்கும் ஆரம்பத்தில் தந்தைக்கு பரிந்து பேசும் லூசி ஒரு கட்டத்தில், அவர் என் உண்மையான தந்தை அல்ல என்று கூறிவிடுகிறது அந்தப் பிஞ்சு!

சாமை தவறுதலாக ஒரு இசகு பிசகான கேசில் அழைத்துச் செல்லும் போலீஸ் அவனைப்பற்றிப் புரிந்து கொள்ள, சமூக நல தொண்டர் ஒருவரின் பார்வை சாம் - லூசி மேல் விழுகிறது - விளைவு? லூசி சாமிடமிருந்து பிரிக்கப்படுகிறாள்! லூசி மீண்டும் கிடைக்க வேண்டுமானால் சாம் தன்னை நிரூபிக்க வேண்டும் - ஒரு குழந்தையை சரியான முறையில் வளர்க்க முடியுமென்று! தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் குழம்பும் சாமுக்கு அவனின் நண்பர்கள் பிரபல வக்கீல் ரிட்டா பற்றிச் சொல்ல, ரிட்டாவின் உதவியுடன் மகளை மீட்க முயற்சிக்கிறான்! பின்பு என்னவாகிறது?சாமின் நிலையை அவனுடைய விரல்களால் மட்டுமே விளக்கிச் சொல்லும் படத்தின் ஆரம்பக் காட்சியே அசத்தலானது!
மிக உருக்கமான கதையை, படம் முழுவதும் நகைச்சுவை இழையோட சொல்லியிருப்பார்கள்! 
லூசியைப் பார்க்க ஓடிவந்து தடுக்கி விழும் சாம், எழுந்திருக்காமல் அந்த நிலையிலேயே லூசியை முத்தமிட்டுப் பேசிக் கொண்டிருக்கும் காட்சி!
சிறுமி லூசியின் நடிப்பு குறிப்பாக தந்தையிடம் மிகுந்த தயக்கத்துடன் கேட்கும் 'இது எப்படி...ஆக்சிடென்டா? காட்சி!
லூசிக்கு 'ஷூ' வாங்குவதற்கு, ஒரு கடையில் சாமும் அவன் நண்பர்களும்! சாமிடம் பணம் போதவில்லை! உடனே நண்பர்கள் எல்லாரும் தங்களிடமுள்ள பணத்தையும் கொடுத்து ஷூவை வாங்குகிறார்கள்! மீதிப்பணத்தில் சாம் பலூன் வாங்கப்போக, நண்பர்களில் ஒருவர், 'அவளுக்கு மட்டுமா...இல்ல எங்களுக்குமா? எனக்கேட்பார்! அடுத்த காட்சியில் எல்லோரும் கையில் பலூனுடன் வரிசையில் நடந்து செல்வது, அழகான கவிதை! 
கோர்ட்டில், தனக்கு பாதகமான வாதங்கள் வரும்போதும் அதை உணராமல் கைதட்டி மகிழும் சாம், ஒரு கட்டத்தில் இனி எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்து குமுறும் காட்சிகள்,  குறிப்பாக ரிட்டாவிடம் எனது நிலையை உங்களால் புரிந்து கொள்ள முடியாது ஏனெனில் You are perfect! - அழுது கொண்டே கூறும் காட்சி!


சாமுக்கு ஆதரவாக வரும் அவனுடைய நண்பர்கள் நடிப்பு - அதுவும் கோர்ட்டில் விசாரணையின்போது அவர்கள் பண்ணும் அமைதியான கலாட்டாக்கள் அட்டகாசம்!
படம் முழுவதும் வரும் எளிமையான, அருமையான உரையாடல்கள்!
ட்ரையல் நடைபெறும்போது கண்காணிப்புடன் லூசியும் சாமும் பேசும்போது லூசி சாமிடம். 'I want no other daddy but You ! உடனேயே  கண்ணாடி பக்கம் (கண்காணிப்பவர்களை) திரும்பி சத்தமாகச் சொல்கிறாள், 'Did You hear that? I said I didn't want any other daddy but him! Why don't you write that down?'   

2001 இல் Seen Penn நடிப்பில், Jessie Nelson இயக்கத்தில் வெளியான இந்த ஹாலிவுட் படம் ஏராளமான விருதுகளை வென்றது. சிறந்த நடிகருக்கான Academy Award க்கு Seen Penn பரிந்துரைக்கப்பட்டார்!

Trailer


**********
ந்தப் படத்தை எப்படித் தமிழில் தழுவலாம்?
குழந்தையை முக்கியமாக ஹீரோவை விட்டுப் பிரியும் பெண்  - நிஜத்தில்  எவ்வளவு மோசமான பெண்கள் இருந்தாலும், தமிழ் சினிமாவுக்கு சேராது என்பதால் அந்தத் தாயை சாகடித்து விடலாம்!
ஹீரோவுக்கு உதவும் பெண் வக்கீல் - இவருக்கு காதலனோ, கணவனோ இருக்கக்கூடாது! அப்புறம் டூயட் பாடுவது எப்படி? அதுவும் தவிர படத்தில் ஹீரோவுக்கு உதவும் பெண் எப்படியும் (படம் முடிந்த பின்பும்!) அவரைக் காதலிப்பார் என்பது நமது ஆழ்ந்த நம்பிக்கை!
குழந்தை,தந்தை பிரிவு - குழந்தையின் தாத்தா தன் மகள் நினைவாக, தந்தையிடமிருந்து பிரிக்க நினைக்கிறார்! (மகள் தன் தந்தையை எதிர்த்தே ஹீரோவை திருமணம் செய்திருப்பார்)
ஒரிஜினல் படம் நெடுக நகைச்சுவை இழையோடி இருந்தாலும், தமிழில் அழுகுணித்தனமாக எடுப்பது விருது குறித்த நம்பிக்கையைக் கொடுக்கும்!
குழந்தையை அடிக்கடி அழ விடுவது, தாய்க்குலங்கள் மத்தியில் செண்டிமெண்டலாக நல்ல பலனைக் கொடுக்கும்! (அப்பாவுடன் இருக்கும்போது அம்மா பாசத்துக்கு ஏங்குவதாகவும், பிரிந்த பின் அப்பாவை நினைத்து!)
Seen Penn ஐப்பாருங்கள் அவரை மாதிரி ஒரு ஹீரோ! அதே ஹெயார் ஸ்டைலைப் பயன்படுத்தலாம்! புதுசா இருக்கும்!
எந்த விவரமான தமிழ்ப் பெண்ணாவது இப்படி ஒரு ஹீரோவைக் காதலித்து திருமணம் செய்வாளா? - என்ற கேள்வி எழக்கூடும்! - அதனால் ஒரு பெரிய ஹீரோ படத்துக்கு தேவை! (ஆனால் இதுக்காகவே  வில்லங்க பதிவர்கள் சிலர் கேட்கக்கூடும்!)

குழந்தையை இயல்பாக மனுஷக் குழந்தையாகவே நடிக்க வைக்கலாம்!   
அந்தக் காலத்திலிருந்து (ஷாலினி, ஷாமிலி) தமிழ் சினிமாவில் குழந்தைகள் அதிகப் பிரசங்கிகளாகவும், பெரிவர்களுக்கு அட்வைஸ், தத்துவம் சொல்லும் தெய்வத் திருமக்களாகவே மிரட்டுகிறார்கள்!
ஒருவர் மனவளர்ச்சி குன்றியிருந்தால் அந்தக் குடும்பத்தில் பெரியவரோ, சிறுவரோ எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை மற்றவர்களைச் சமாளிப்பதுதான்! - இந்த யதார்த்தத்தை சரியாக வெளிப்படுத்தலாம்!
இதையெல்லாம் விட கொஞ்சமாவது நேர்மை இருந்தால் இன்ஸ்பிரேசன்னு, I am Sam படத்தைக் குறிப்பிடலாம்!

Saturday, July 9, 2011

யாழ்ப்பாணம் - ஒரு பயணம்!இருக்கைகள் அனைத்தும் பயணிகளால் நிறைக்கப்பட்டு, எந்த மேலதிக வசதிகளும் இல்லாத ஒரேயொரு பேரூந்துதான் அந்த நேரத்திற்கு! திருகோண மலையிலிருந்து யாழ்ப்பாணம்! வழக்கம் போல இல்லாமல் ஒருபக்கத்தில் மட்டும் மூன்று பேர் அமரும்படியான இருக்கை அமைப்பு வேறு!

எனக்குப் பக்கத்தில் ஒரு அங்கிள் சிநேகமாகப் புன்னகைத்து, தன்னைப்பற்றி, என்னைப்பற்றி அளவளாவிக் கொண்டார்! பக்கத்தில் அவர் மனைவி. ஆன்டி கொஞ்சம் சந்தேகப் பார்வையுடன் (எங்கே தன் மகளைப் பொண்ணு கேட்டு வந்துடுவானோ என்பது போல) ஒரு அரைச்சிரிப்பு!

முன்பக்கத்தில் சலசலப்பு! ஒரு அங்கிள் தனது சூட்கேசை மேலே வைக்க, கண்டக்டர் ' பெட்டியை கீழே வைக்குமாறும், கீழே இருப்பவரின் தலையை பதம்பார்த்து மண்டை 'பணால்' ஆனா, கம்பெனி பொறுப்பல்ல என்று கூற, அங்கிள் 'போன கிழமையும் தான் இப்படியே வைத்துச் சென்றதாகவும் அப்படி எதுவும் நடக்காததால் அதற்கான சாத்தியம் இல்லையென்று வாதிட, 'விழுமா-விழாதா' ஒரு குட்டிப் பட்டிமன்றம்!

அந்தப் 'பதம்' பார்க்கும் பரிசோதனையின் 'எலி'யான அந்தப் பயபுள்ளையும் ஆர்வமாக இருதரப்பு வாதங்களையும் அமைதியாக கவனித்தது வேடிக்கையாக இருந்தது - நான் அந்த இருக்கையில் இல்லாததால்!

A-9 பாதையூடாக வரும்போது, வழிநெடுகிலும் இருமருங்கிலும்...ஏன் எல்லாப்பக்கங்களிலும் எதுவுமே தெரியாமல்! இரவு நேரத்தில் இருட்டாக இருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்பதால் இதுபற்றி மேற்கொண்டு விவரிக்கவில்லை!

அப்புறம் அங்கிள் தூங்க ஆரம்பித்ததும் நமக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகிட்டுது! அதுவும் அவர் ஆன்டி இருக்கிற பக்கம் சாயாமல் சரியா நம்ம பக்கமே தூங்கி விழுந்தார். ஆனாலும் ரொம்ப நல்லவரா, நேர்மையானவரா இருந்தார். தனது செயலுக்கு அடிக்கடி மன்னிப்புக் கேட்டார். அட! இவ்வளவு அவஸ்தையிலும் சமாளித்து லேசாகத் தூங்க ஆரம்பித்த என்னை தட்டி எழுப்பி ஸாரி சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்க!

***********

எப்பிடி யாழ்ப்பாணம்? நல்லா டெவலப் ஆகிட்டுது பார்த்தியா? - கேட்டார் ஒரு ஆன்டி! ஒரு கதையுமில்லாமல் அவசரமாக ஆமோதித்துக் கொண்டேன்! 

நிறைய புதிய வங்கிகள் ,கடைகள், தனியார் நிறுவனங்கள் காலூன்றிக் கொள்வதை வைத்து அப்படிச் சொல்வதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், அது அந்தந்த நிறுவனங்களின் வளர்ச்சி என்றுதானே...ஒரு நகரத்தின் வளர்ச்சி என்பது முதலில் அதன் தரமான சாலைகளிலும், வீதி ஒழுங்குகளிலும் பிரதிபலிக்கவேண்டும் என்பதை நான் அப்படியே நம்புகிறேன்! - யாழ் குடா நாடெங்கும் சாலைகளை அகலப்படுத்தி தரமான கார்ப்பெட் வீதிகள் போடும் பணி நடைபெறுவது மகிழ்ச்சியாக இருந்தது! 

எல்லா வங்கிகள், நிறுவனங்களும் குறிப்பிட்ட சில பகுதிக்குள்ளேயே முண்டியடிப்பதால், ஏற்கெனவே நெருக்கடி மிகுந்த பகுதிகள் மேலும் நெருக்கடியாக! கொஞ்சம் ஒதுக்குப் புறமான இடங்களில் அமையும் பட்சத்தில் நகரம் விஸ்தரிக்கப்படுவதுடன், நெருக்கமும் குறையும் என்று தோன்றுகிறது! குறிப்பாக பிரதான வீதி, முதலாம், இரண்டாம் குறுக்குத் தெருக்கள் இன்னும் யாராலும் கவனிக்கப் படாமலேயே! ஏனைய நகரங்களில் இந்த வீதிகளே அதிக புழக்கத்துடன்!

**********

என்ன இருந்தாலும், சில விஷயங்களில் 'கன்னா பின்னா'ன்னு 'டெவலப்' ஆகியிருப்பதை நல்லாவே உணர முடிந்தது!

**********

காதில் விழுந்த தொலைபேசி உரையாடல் ஒன்று!

ஹலோ! ஆ...என்னமாதிரி ### தானே நிக்கிறீங்க?
"---"
அங்க இல்லையே? மாறிட்டீங்களே...நான் நீங்க அங்கதான் எண்டு நினைச்சன்.. பிரண்டு ஒருத்தன் ரூம் எடுக்கலாமோன்னு கேட்டான் அதான்...எவ்வளவு போகுது ரெண்ட் இப்ப?
"---"
அதெல்லாம் என்னமாதிரி...எல்லாம் கொண்டு போகலாம்தானே?
"---"
பிரச்சனை இல்லையே?
"---"
ஓக்கே...ஓக்கே!

ஒண்ணுமே புரியல! நாம இன்னும் வளரணுமோ?

**********

ஹெல்மெட், பொது இடங்களில் சிகரெட் பிடித்தல் தொடர்பாக நான் நினைக்கிறேன் நான் பார்த்த அளவில் நாட்டின் ஏனைய இடங்களைவிட மிகக் கடுமையான கெடுபிடிகள் போலீசாரால்! - நல்ல விஷயம்! 

**********

பதிவர் ஜனா, பாலவாசகன் சந்தித்தார்கள்! யாழ் சென்று வந்த பின் பிரபல பதிவர் மதிசுதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். நிறையப் பேசினோம். பிலாக் பற்றி நிறைய புதிய விஷயங்கள் சொன்னார்.அடுத்தமுறை வரும்போது சந்திப்பதாக முடிவு!

**********

எல்லாவற்றுக்கும் மேலாக இருபது வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமென்று கூறி, பார்க்கக் கூட அனுமதிக்கப்படாத எங்கள் சொந்த ஊரை, தாய்மண்ணை சென்று பார்த்தேன்! மிகச் சமீபத்திலேயே செல்ல அனுமதிக்கப்பட்டது! இதுபற்றி பதிவிடுமாறு பதிவர் மதிசுதா கூறினார். அதுவரை அப்படியொரு யோசனை இருக்கவில்லை! பார்க்கலாம்!