Monday, July 25, 2011

தாய்மண் நோக்கி ஓர் பயணம்!


சொந்த மண்ணில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு நாடோடிகளாக வாழும் அனுபவத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்ததுண்டா?

சின்னசிறு வயதில் மட்டுமே பார்த்த ஊரின் எந்தக் காட்சிகளையும் கற்பனை பண்ண முயன்று, முடியாமல் நினைவுகளால் மட்டும் உணர்ந்திருக்கிறார்களா?

ஏதொ சில வாசனைகள், சிறுவயதில் கேட்ட பாடல்கள் அடிமனதில் இருக்கும் சிறுவயது ஞாபகங்களை எப்போதாவது கிளறிவிட, தூக்கம் தொலைந்ததுண்டா?

மீண்டும் பல வருடங்களின் பின் தாய்மண் திரும்பும்போது, அது தன் பழைய அடையாளங்களைத் முற்றிலும் துறந்து, அந்நியமாய் தெரியும்போது, என்ன தோன்றும்?

முதன் முதலாக சிறுவயதில் நீங்கள் நடைபயின்ற வீதியில் மீண்டும் நடந்து செல்கையில், பள்ளிக்கூடம், சின்னவயது நண்பர்களுடன் விளையாடி, உருண்டு, புரண்ட கோயில் மணல் வீதி எல்லாம் பார்க்கும்போது, பழைய நினைவுகள் மெதுவாக மீட்டப்படுவதை உணர்ந்ததுண்டா?

ஒருவேளை நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும்! நண்பர்களின், உறவுகளின் அனுபவங்களைச் சொல்லக் கேட்டிருக்கக்கூடும்! நானும் கூட கேட்டிருக்கிறேன்! ஆனால் அந்த அனுபவங்களை வார்த்தைகளால் விபரிப்பதென்பது சாத்தியமானதல்ல என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும்!

எனக்கும் இப்போது புரிகிறது.....இருபது வருடங்களின் பின் என் சொந்த மண்ணை காண யாழ்ப்பாணம் சென்றபோது...

யாழ்ப்பாணம் 1996 இல் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தபின்னரும் உயர் பாதுகாப்பு வலயம் என்று அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்று நமது ஊர்! கடந்த மாதம் முதன்முறையாக அனுமதிக்கப்பட்டது! இன்னும் அனுமதிக்கப்படாத பிரதேசங்களும் உண்டு!

சிலர் ஆச்சரியமாகக் கேட்டார்கள், 'அப்ப நீ சின்னப்பிள்ளையெல்லே! உனக்கு ஞாபகமிருக்கா?' என.
எனக்கும் ஆச்சரியம்! 'எப்படி என்னால் மறந்துவிட முடியுமென்று நினைக்கிறார்கள்?'

நண்பன் எபியும் என்னுடன் வந்தான். காங்கேசன்துறை வீதியால் பேரூந்தில் செல்கையில் இனம்புரியாத ஒரு உணர்வு! தெல்லிப்பழைச் சந்தியை அடைந்ததும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது! தொடர்ந் சில நிமிடங்களில் எனது ஊர்...!

மாவிட்டபுரம்!


பேரைச் சொன்னதுமே ஊரின் மையமாக இருக்கும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமே நினைவில் வரும் யாழ்ப்பாத்தவருக்கெல்லாம்! கம்பீரமான இராஜ கோபுரத்துடன் அந்தப் பிரதேசத்துக்கே அழகு சேர்ப்பதாக! 


கோயில் பிரகாரத்தில் நடக்கும்போது நான் கற்ற பாலர் பாடசாலை, ஆரம்ப பாடசாலை எல்லாவற்றையும் நண்பனுக்கு சொல்லிக்கொண்டே வந்தேன்!

என்றைக்குமில்லாமல் கோயிலுக்குப் போகும் நல்லபுத்தியுடன் நான் இருந்தேன், 
ஆனால் கொடுமையைப் பாருங்க  கோயில் பூட்டி இருந்திச்சு! 'என்ன கொடுமை முருகா?' 

நம்ம  ராசி  அப்பிடி  என்பதால்,  அலட்டிக்  கொள்ளாமல்  கீரிமலை  வீதியூடாக நடந்து சென்றோம்!


எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு அங்கமாக திகழ்ந்த, ஒரு சாட்சியாகவே கூட இருந்து பார்த்துக் கொண்டிருந்த, நான் முதன்முதலில் நடந்த வீதி ஜீவனை இழந்து..!


பொன்விளையும் பூமியாகத்தான் இருந்தது...இப்போ, வறண்டு, கட்டாந்தரையாகி, புழுதிக்காடாக..! இங்கே எல்லாம் வீடுகள் இருந்திருக்க வேண்டுமே?


ஒரு பிரபல அலுமினிய தொழிற்சாலை சிதைந்த நிலையில்..!







கூரைகள் அகற்றப்பட்டு, கதவு - யன்னல்கள் உடைத்தெடுக்கப்பட்டும், மரங்கள், பற்றைகளால் மூடிய சிதைந்த நிலையிலும் வீடுகள்!

ஏற்கனவே பற்றைகள் வெட்டித் துப்பரவு செய்யப்பட்டிருந்தாலும் மிதிவெடிகள் பற்றிய எந்த உத்தரவாதமும் இல்லையென்பதாலும், நம்ம ராசி பற்றி நன்றாகவே தெரிஞ்சதாலும் நண்பனிடம், 'மச்சான் நான் முன்னால போறேன் என்னோட ஸ்டெப்ஸை கவனமா Follow பண்ணி வா!' காணிக்காரனுக்கு கால் போனாலும் அதில ஒரு நியாயமிருக்கு ஆனா கூட போறவனுக்கு?








ஊரின் சுடலையின் அருகே.... காவல் தெய்வமான வைரவர் கோயில்! அருகிலுள்ள பெரும் ஆலமரம்!


சின்னஞ்சிறு வயதில் பாய்ந்து, தொங்கி ஊஞ்சலாடி மகிழ்ந்த அந்த பெரிய ஆலமரத்தின் விழுதுகள், வேர்களாகிப் பரந்து பருத்து...!


மீளக் குடியமரும் நோக்கில் வீடுகளைப் பலர் திருத்தவும், புதிதாகக்கட்டவும் தயராகுவதைக் காண முடிந்தது! இதுதான் நம்மவரின் தனித்தன்மை, எவ்வளவு துயர் வந்தபோதும் துடைத்தெறிந்து, தளராது மீண்டும் மீண்டும் எழுவோம்! இதில் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதைச் சொல்லியே ஆகணும்!

இதுல இன்னொரு விஷயம், 'எரிகிற வீட்டில பிடுங்கிறது லாபம்'ன்னு, எஞ்சியிருக்கிற வீடுகளில் எது கிடைத்தாலும் திருடுவது, காணிகளிலுள்ள மரங்களை வெட்டி விற்பது என்று, திருட்டு அன்பர்கள் பலரும் வியாபார நோக்கத்துடன் அடிக்கடி விஜயம் (எங்கள் வீட்டிலும் நடந்தது!) செய்கிறார்கள்! - இதுவும் தமிழன்தான்!

எது எப்படியோ, என்னவானாலும், இன்னும் ஓரிரு வருடங்களில் மீண்டும் புது(பழைய)பொலிவுடன் என் தாய்மண்ணைப் பார்க்கமுடியுமென்ற நம்பிக்கையுடன் ஜீ...!    
   

டிஸ்கி : இது பற்றிப் பதிவிடுமாறு கூறிய பதிவர் மதிசுதாவிற்கு நன்றி! ஆரம்பத்தில் எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை! அதனால் ஒழுங்காகப் படமெடுக்கவில்லை!


45 comments:

  1. மனதைக் கனக்கச் செய்யும் பதிவு. எம் வாழ் நிலங்களை விட்டுத் துரத்தப் பட்ட பின்னர்- மீண்டும் ஊர் திரும்புவோமா எனும் ஏக்கத்துடன் வாழ்வது கொடுமையிலும் கொடுமை.

    ReplyDelete
  2. தாயைப் பிரிந்த துயரும் தாய்மண்ணைப் பிரிந்த துயரும்
    சொல்லித் தீராது.அந்த சுகத்தை அந்த அழகிய நினைவுகளை
    சிந்தித்துப் பார்த்தாலே என் சீவன் துடிக்கிறது .அழகிய முற்ற
    வெளியும்,பசுமையான பயன்தரும் மரமும்,வயல்களும் நாம்
    ஒன்றுகூடி வாழ்ந்த இல்லங்களும்,கல்விகற்ற பாடசாலைகளும் ,
    இவை எல்லாத்துக்கும் மேலாக எம் நெஞ்சில் குடிகொண்டிருக்கும்,
    நண்பர்களும் ,உறவினர்களும் ,நாம் எம் உறவென நினைத்து வாழ்ந்த
    எம் ஊர் மக்களும் நினைவில் வரும்போது அந்த மறைந்துபோன
    சிதைந்துபோன அழகிய காலங்களை என்னவென்று சொல்ல!.....
    இந்தத் துன்பம் என்றும் மறையாது,மறையாது ,மறையாது சகோ .
    பகிர்வுக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  3. யுத்தத்தின் கொடூரம் புகைப்படங்களிலும், சொந்த ஊரை விட்டு வந்த தவிப்புகள் உங்கள் வார்த்தைகளிலும் தெரிகிறது ஜீ..

    ReplyDelete
  4. தாய் மண்ணை அடைந்த மகிழ்ச்சியை நகைசுவையாக சொல்லி இருந்தாலும் - தொக்கி நிற்கிறது ஒரு சோகம். உங்களோடு நானும் வந்தேன் உங்கள் ஊருக்கு.

    ReplyDelete
  5. பால்ய பருவ நண்பர்களும் அனைவருடனும் உருண்டுபுரண்ட தெருக்களையும் மறக்கமுடியுமா? தங்களின் பழைய நினைவுகளை சுமந்த பதிவு எங்களுக்கும் எங்கள் குழந்தைப்பருவத்தை நினைவு படுத்தியது. நன்றி.

    ReplyDelete
  6. ஆமா ..எங்க ஊர்லயும் உங்க ஊர்லயும் மரம், செடி, கொடி, மண், கட்டிடம் எல்லாம் ஒரே மாதிரி இருக்கே...
    ஆனா இந்த மனுஷனுக மட்டும் ஏன் எங்கே போனாலும் வேற வேற பேருல வேற வேற இனமுனு சொல்லிக்கிட்டு அடிச்சி கிட்டு சாகுறாணுக ???

    ReplyDelete
  7. ///சொந்த மண்ணில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு நாடோடிகளாக வாழும் அனுபவத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்ததுண்டா// அனுபவித்துக்கொண்டு இருக்கேன் :-(

    ReplyDelete
  8. யுத்தம் விட்டுச்சென்ற எச்சங்களாக அந்த கட்டிடங்கள்..

    நானும் இரண்டு மூன்று தடவைகள் மாவிட்டபுரம் கந்தசாமியிடம் வந்திருக்கேன். அந்த உயர்ந்த கோபுரத்தின் உச்சியில் கூட ஏறி நின்ற நினைவுகள் நெஞ்சிலே நிற்கிறது. நான் நினைக்கிறேன் இலங்கையின் உயர்ந்த கோவில் கோபுரம் இது தான் என்று !!

    ReplyDelete
  9. நல்ல நினைவுகள். எனக்கும் நான் 96 இல் இடம் பெயர்ந்து இருந்த பருத்தித்துறை கட்டடங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை, காலம் வழி விட்டால்.... !!

    ReplyDelete
  10. தாய் மண்ணே வணக்கம்!
    இடிந்த கட்டிடங்களைப் பார்க்கும் போது மனம் வலிக்கிறது.

    ReplyDelete
  11. பயணத்தில் எங்களுக்கும் சோகம் தொற்றிக்கொண்டது... ரணமான கனம் இந்த பயணம்..... தவிப்புகள் உறங்காமல் கண்களில் காட்சி கலக்கமாய்

    ReplyDelete
  12. படிக்க மனசு மிகவும் வேதனைப் படுகிறது.

    ReplyDelete
  13. ஜீ நானும் எனது சொந்த இடத்தை விட்டு வந்து ஆறு வருடங்கள் ஆகிறது..... உங்களது பயணம் நல்லா இருந்தது....
    மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

    ReplyDelete
  14. ஜீ வாசிக்கும் போது தங்களுடன் கைகோர்த்து வந்த ஒரு அனுபம் ஏற்படுகிறது....

    உண்மையில் இந்தப் பதிவு ஊரைப் பிரிந்த எத்தனை பேருக்கான அவலாக இருக்கும் பாருங்கள்... எப்படியெல்லாம் வாழ்ந்திருந்தோம் இன்று இப்படியாக..

    ReplyDelete
  15. இல்லை ஜீ.. நான் தங்களின் உணர்வைத் தானே பதியச் சொன்னேன்..
    இப்போ இந்தப் பதிவை பாருங்கள் ஊரைப் பிரிந்த உணர்வு எள்ளளவும் இருக்காதே....

    ReplyDelete
  16. "...எவ்வளவு துயர் வந்தபோதும் துடைத்தெறிந்து, தளராது மீண்டும் மீண்டும் எழுவோம்! இதில் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதைச் சொல்லியே ஆகணும்!.." மிகச் சரியாகச் சொல்லி முடித்தீர்கள்.

    பதிவின் இடையில் அழிந்த கோலங்களைப் பார்க்கும் போது வேகுகிறது மனது.

    ReplyDelete
  17. மனதை கனக்க செய்த பதிவு மற்றும் புகைபடங்கள்!!!

    ReplyDelete
  18. தாய் மண்ணை விட்டுப் பிரிதல் என்பது வேதனையான விஷயம் தான். மனதை கனக்கச் செய்யும் பதிவு.

    ReplyDelete
  19. //மீளக் குடியமரும் நோக்கில் வீடுகளைப் பலர் திருத்தவும், புதிதாகக்கட்டவும் தயராகுவதைக் காண முடிந்தது! இதுதான் நம்மவரின் தனித்தன்மை, எவ்வளவு துயர் வந்தபோதும் துடைத்தெறிந்து, தளராது மீண்டும் மீண்டும் எழுவோம்!// கேட்கவே சந்தோசமாக உள்ளது ஜீ. சீக்கிரம் இயல்பு வாழ்க்கை திரும்பட்டும்.

    ReplyDelete
  20. சாதாரணமாக மாறிப் போன ஊரைப் பார்த்தாலே அடிவயிறு கலங்கும். நீங்கள் அழிந்துபோன ஊரையும் வீட்டையும் பார்த்து வந்திருக்கிறீர்கள். எழுத்தில் கொண்டு வர முடியாத வேதனை அது.
    காலம் தான் வழிகளை ஆற்றும். வேறென்ன சொல்வது?

    ReplyDelete
  21. சொந்த ஊரை பற்றிய உங்கள் தவிப்பு உங்கள் பதிவில் தெரிகிறது

    இன்னும் ஓரிரு வருடங்களில் மீண்டும் புது(பழைய)பொலிவுடன் என் தாய்மண்ணைப் பார்க்கமுடியுமென்ற நம்பிக்கையுடன் ஜீ...!

    உங்கள் நம்பிக்கை வெற்றியடைய வாழ்த்துக்கள் ஜி

    ReplyDelete
  22. தாய் மடியே உன்னை வணங்குகிறேன். படங்கள் அருமை

    ReplyDelete
  23. நண்பரே இந்த போட்டோ வெல்லாம் கலக்கல் ..

    ReplyDelete
  24. படிக்கும் போதே உங்களுடன் வரும் ஞாபகமே இருக்கிறது..

    ReplyDelete
  25. உண்மையில் மனம் வலிக்கும் பதிவுகள்.

    ReplyDelete
  26. சொந்த மண்... தாயின் மடி...
    நண்பா உன் வலி என்னை பற்றிக்கொண்டது.
    சிதிலமடைந்த கட்டிடங்கள்...
    சிதைந்து போன கனவுகள்.
    மனசு கனத்துப்போனது...
    மரத்துப்போகவில்லை.

    ReplyDelete
  27. AnonymousJuly 26, 2011

    படங்கள் என்னவோ செய்கின்றன...
    அதையும் தாண்டி...
    ==ஒரு காலத்தில ஜீ தவழ்ந்தது, நடைபயின்றது இங்கேதானென்று தெரிகிறது...

    இந்த பதிவின் தாக்கத்தலிருந்து மீள கொஞ்ச காலமெடுக்கும...

    My heart goes out to you and all my brothers and sisters out there..

    ReplyDelete
  28. பதிவை படிச்சிட்டு, படங்களை பார்த்துட்டு மனசு கனத்து கண்ணீர் சிந்துது கண்கள்......

    ReplyDelete
  29. தமிழ்மணம் ஏழாவது ஓட்டும் போட்டாச்சி இந்த பதிவு எல்லாரையும் போயி சேரட்டும்....

    ReplyDelete
  30. வாழ்க தமிழ் ! வளர்க தமிழினம் ! விரைவில் ஒரு நல்ல திருப்பம் ஏற்படும். தேர்தல் வெற்றி அதனை உறுதிபடுத்துகிறது. பொறுத்திரு மகனே ! நீ ஆளப்பிறந்தவன் ! அழப்பிறந்தவன் அல்லன் !

    ReplyDelete
  31. மனம் கனத்துவிட்டது, இருந்தாலும் ”இன்னும் ஓரிரு வருடங்களில் மீண்டும் புது(பழைய)பொலிவுடன் என் தாய்மண்ணைப் பார்க்கமுடியுமென்ற நம்பிக்கையுடன் ஜீ...! ”

    உங்கள் நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது, விரைவில் நிறைவேறட்டும்......

    ReplyDelete
  32. மனம் வலிக்க செய்த நிகழ்வுகள்

    ReplyDelete
  33. ஜி உண்மைலே மிகவும் நெகிழ வைத்த பதிவு

    ReplyDelete
  34. ஊரைப்பிரிந்து வந்து மீண்டும் போகும் போது மனதில் எழும் வன்மத்தை வார்த்தையில் வடிக்க முடியாது ஈழத்தவனுக்கு இது ஒரு நினைவைச் சுமந்து செல்லும் சாபம் அதுவும் உயர் பாதுகாப்பு வலயம் என்று ஆக்கிரமித்தவை எல்லாமே வரலாற்றுப்பகுதிகள் . பதிவைப் படிக்கும் போது என் தொலைந்த கிராமம்தான் ஞாபகம் வருகிறது இழப்பின் வலி கொடியது நண்பா!

    ReplyDelete
  35. கீரிமலைப் பாதைஊடாக 2003 ஆடி அமவாசைக்கு தீர்த்தம் ஆட பாதுகாப்புபடையினர் வழிகாட்ட போய்வந்த போது இருந்த அழகு உங்கள் புகைப்படம் பார்க்கும் போது புரிகின்றது சிலருக்கு புதிய வியாபாரத்திற்கு வழிகிடைத்திருக்கிறது என்று வெட்டுவதும் தறிப்பதும் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வோரின் இயல்பு என்ன சொல்லுவது !!

    ReplyDelete
  36. அட நம்ம ஊரா நீங்க? எங்க வீடும் கீரிமலை ரோட்ல தான் இருக்கு. கோயில் திருவிழாவுக்கு போறீங்களா?
    ஹ்ம் இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ பழைய நிலைமைக்கு வர.
    நன்றி.

    ReplyDelete
  37. நான் முதன் முதல் கோண்டாவில் போனபோது குழறி அழுதேவிட்டேன் !

    ReplyDelete
  38. மனதைக் கனக்கச் செய்யும் பதிவு.

    ReplyDelete
  39. ப்டத்தில் பார்க்கும் பொழுதே மனம் கலங்குதே.அனுபவித்த தங்கள் துயரம்? இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்

    ReplyDelete
  40. all those photos are really stunning. They describe the whole story what U came to say in 100 words.

    ReplyDelete
  41. Hi Friend This Is Mohan Vellore
    We buyd one script (cannot copy) your content anyone Copying ?
    This problem Was Solved
    Plz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)
    You Need This Just Rs 500 Lets buy
    Contact Mohanwalaja@gmail.com

    ReplyDelete
  42. சகோ/எங்கள் ஊரை விட்டுவந்த வலி அதிகம்.அதைவிட இப்போ அதுகிடக்கும் நிலையை திரும்பி பார்ப்பதென்றால் அதைவிட வலி அதிகம்.நானும் உங்களைப்போல் 1996ல் பிரிந்த ஊரை இன்னும் பார்க்க முடியல.இதுவரைக்கும் விடுவதாய் இல்லை...
    பகிர்விற்கு நன்றி...


    sempakam.blogspot.com

    ReplyDelete
  43. தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

    வாழ்த்துக்கள்

    ReplyDelete