Showing posts with label யாழ். Show all posts
Showing posts with label யாழ். Show all posts

Tuesday, June 17, 2014

யாழ்ப்பாணமும் மாற்றமும்!


"எப்பிடி? யாழ்ப்பாணம் டெவலப் ஆகிட்டுது பாத்தீங்களா?"
ஒவ்வொரு முறை யாழ் செல்லும்போதும் யாராவது ஒருவரேனும் இப்படிக் கேட்பது வழமை.

ஒரு நகரத்தின் அபிவிருத்தி முதலில் வீதிகளில் தெரியவேண்டும் என்கிற நம்பிக்கையின்படி அகலப்படுத்தப்பட்ட சீரான வீதிகள், தற்போது ஓரிடத்தில் மட்டுமே உள்ள ரோட் சிக்னல், வீதிக் குறியீடுகள், பாதசாரிகள் கடவை என இம்முறை உண்மையான வளர்ச்சி சற்றே தெரிந்தது.

அவசரமான ஒரு யாழ் பிரயாணம். நான்குநாட்கள் தங்கிநின்ற முழுநேரமும் வேலையாக இருந்ததால் பார்க்க வேண்டுமென்று நினைத்த நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை. இடையிடையே அயலவர்களுடன் மட்டும் பேச முடிந்தது. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் பார்த்ததை விட நகரப்பகுதி மாறியிருந்தது. சில இடங்கள் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தது. எங்கள் ஏரியா நிறையவே மாறியிருந்தது.

* * * * * * * * * * * * 

"அண்ணே மதில் கலர் செம்மையா இருக்கு!"
பக்கத்தில் மூர்த்தி அண்ணன் வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது.
"நீங்க சொல்றது விளங்குது ஜீ நன்றி நன்றி"
"எப்பிடிண்ணே? ஓட்டுக்கு மச் பண்றமாதிரி செலக்ட் பண்ணீங்களா? ஓ! அந்த வீட்ல அடிச்சிருக்கிறதப் பாத்து ஆசைப்பட்டு..."
சற்றுத் தள்ளியிருந்த வீட்டு மதிலும் அப்படியே இருந்தது.
"இது ரோட் பெருப்பிக்க இடிச்சுட்டு அவங்கள் கட்டித்தந்த மதில். அவங்களே அடிச்ச பெயிண்ட்!"

வீதியின் ஏராளமான வீட்டு மதில்களும் அதே நிறத்தில். செம்மஞ்சள், ரோஸ், பிரவுன் எல்லாம் கலந்து என்னவென்றே அனுமானிக்க முடியாத கண்ணைப் பறிக்கும் நிறத்தில் அட்டகாசமாக ஒளிர்கின்றன.
"ஸாரிண்ணே உங்க டேஸ்ட்டுன்னு நினச்சு அவசரப்பட்டு பாராட்டிட்டேன்"
"அது கண்ட்ராக்டர் டேஸ்ட் போல! ஏற்கனவே மதில் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும்னு தெரியல... இதில பெயிண்டா முக்கியம்? யாருமே வாங்காத, கடைல விக்காம கிடந்த கலராப்பாத்து மலிவா வாங்கி அடிச்சுவிட்டுட்டாங்க போல"

"ஆனா ஸ்ட்ரீட் லைட் உண்மைல நல்லா இருக்கு. ஆனா இவ்ளோ கிட்டகிட்ட தேவையில்லையே இடைல ஒன்றைத் தூக்கிடலாம்"
"அது எரியிறதில்லைத்தானே"
"அப்பிடியா ஏன்"
"ஆர் டி ஏ தங்களைக் கேக்காமப் போட்டுட்டுது எண்டு பிரதேச சபை சொல்லுது. அவங்கதான் பில் கட்டுறதாம்"

* * * * * * * * * * * *

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது மிக அரிதாகவே பேரூந்தில் பயணித்திருக்கிறேன். இந்தமுறை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பயணம் செய்ததில் யாழில் 'Rosa' பஸ்களைத் தடை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. அவ்வளவு கொடுமையான பயண அனுபவங்கள்.

வலிகாமம் வடக்கில், மீளக் குடியேற தடைவிலக்கப்பட்ட பகுதிகளிலுள்ள திருத்தப்படாத வீடுகள், பராமரிக்கப்படாத காணிகள் பற்றி, உரிமையாளர்கள் பற்றிஅடிக்கடி இராணுவம் வந்து விசாரித்துச் செல்கிறார்கள். பார்த்தீனியம் போன்ற களைகளை அகற்றுவது தொடர்பாகப் பேசியபோது போலீஸ் தெரிவித்த ஒரு 'யோசனை' முக்கியமானது. 'இதுவரை ஆட்கள் வராத, புலம்பெயர்ந்தவர்களின் காணிகளைத் நாம் பொறுப்பேற்றுத் திருத்தி வைத்திருக்கிறோம். உரிமையாளர்கள் வந்ததும், மீளப் பெறலாம்' என்பதே அது. அரச படைகள் இன்றுவரை 'பொறுப்பேற்று' வைத்திருக்கும் காணிகள் பற்றிய அனுபவமே நமக்குப் போதுமானது. ஆக, இருபது வருடங்களுக்கும் மேலாக பிடித்து வைத்திருந்த காணிகளை மீண்டும் அரசபடை எடுத்துக் கொள்ளப்பார்க்கிறது, அல்லது அரசு தாம் வீடற்றவர்களாக்கிய வேறு பிரதேச மக்களுக்கு இந்த வீடுகளை, காணிகளைக் கொடுக்கப் போகிறது - என்கிறவாறாகப் பேசிக் கொள்கிறார்கள்.

இன்னும் தம் சொந்த மண்ணை ஒருமுறை பார்க்கக்கூட அனுமதிக்கப்படாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் அரசபடைகள் வசம் இருக்கின்றன. அங்கு செல்ல வேண்டுமென்று இருபத்துநான்கு ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். எல்லாம் பயிர்ச்செய்கை நிலங்கள். பலாலி விமான நிலைய விரிவாக்கம், படையினருக்கான குடியிருப்புகள் என ஒருபகுதி மீளக் கிடைக்கப்போவதில்லை என்பது தெரிந்ததுதான். மீதமிருக்கும் பகுதியையும் வழங்கும் உத்தேசம் இருப்பதாகப் தெரியவில்லை. படையினர் வேறு, 'நாங்கள் அனுமதித்த இடங்களிலேயே மக்கள் குடியிருக்கவோ, பராமரிக்கவோ செய்யவில்லையே?' என்று நியாயமாக(?!) கேள்வி கேட்கிறார்களாம்.

கீரிமலை வீதியில் ஒரு அலுமினியம் தொழிற்சாலை இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தபோது 'யாரோ' இரும்பு கழற்றிக் கொண்டிருந்தார்கள். உரிமையாளர் வந்து இரும்பு கழற்ற படையினர் அனுமதிக்கவில்லையாம். இம்முறை சென்றபோது அது இருந்ததா? இல்லையா என்று இப்போது என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை. நான் கவனிக்கவில்லையா? என் கண்ணில் படவில்லையா? குழப்பமாக இருக்கிறது. காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலை 2000 ஆம் ஆண்டில் பார்த்ததிலிருந்து ஒவ்வொருமுறையும் அளவில் சிறியதாகிக் கொண்டே வருகிறது. இரும்பு விற்கப்படுகிறதாம். இந்நிலையில் சிலர் சீமெந்துத் தொழிற்சாலை விரைவில் இயங்கப் போவதாகத் தீவிரமாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். மேலும் குழப்பமாக இருக்கிறது.

திருத்தப்படாத வீடுகள், காணிகள் பற்றி அடிக்கடி அக்கறையாக விசாரித்துச் செல்லும் இராணுவத்தினர் சொல்வது என்னவெனில், வெளிநாட்டுக் காரர்கள், சுற்றுலாப் பிரயாணிகள் வீதியால் செல்லும்போது இந்தமாதிரி இருப்பது நன்றாக இல்லையாம். தவிர, ஓரிரு மாதத்திற்கு முன்னர் வீதியிலிருந்த சிதிலமான கட்டடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த அடையாளங்களைச் செப்பனிட்டிருக்கிறார்கள். கூரையில்லாத சிதிலமான கட்டங்களின் துப்பாக்கிச் சன்னத்துளைகளுக்கு மட்டும் செப்பனிட்டுவிட்டால், இங்கே போரினால் எந்தப் பாதிப்பும் இடம்பெறவில்லை என நம்பும் யாரோ இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

ஒருவகையில் உண்மையும் அதுதான். இங்கே எந்தச் சண்டைகளும் நடைபெறவில்லை. தொண்ணூறாம் ஆண்டில் பலாலியிலிருந்து முன்னேறிய இராணுவம், பாரிய எதிர்ப்பின்றி புலிகள் பின்வாங்க, ஓரிரு நாட்களில் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. வீட்டுக் கூரைகளை மரங்கள் ஒன்றுவிடாமல் அகற்றியது, கதவுகள், யன்னல்கள், நிலைகளோடு உடைத்தெடுத்தது, தேவையேயில்லாமல் இருந்த கிணறுகளை எல்லாம் புல்டாசர் கொண்டு மூடியது, பல வீடுகளை மதிற்சுவர்களை எல்லைகளை அடையாளமே காணமுடியாதவாறு இல்லாமல் இடித்துத் தள்ளியது எல்லாமே பின்னர் இராணுவம் பொழுது போகாமல் செய்த 'மக்கள் சேவை'. எங்கள் வீட்டில் ஓரிடத்தில் யன்னலைக் கழற்றுவதற்காக, சுவரை இடித்துப் புதிய கதவு வழியே வைத்திருந்தார்கள். ஒரு எலக்ரிக்கல் ஸ்விட்ச்சையோ, சிறு வயர்த்துண்டையோ கூட விட்டுவைக்காமல் மிகக் கவனமாகப் பெயர்த்தெடுத்ததில், ஓர் 'இராணுவ ஒழுங்கு' தெரிகிறது. கூடவே சும்மாவே இருப்பதன் கொடுமையும்!

இப்போது எல்லாப்பகுதிகளும் மீளக்கட்டமைக்கப்பட்டமை(!?)சுற்றுலாப் பிரயாணிகள் செல்லும் பகுதிகளிலாவது தெரியவேண்டும். வீதிகள் சரியாக இருகின்றன. வீடுகள்தான் இப்போது பிரச்சினை. எங்கள் வீட்டிலிருந்து பார்க்கையில், சற்றே தூரத்தில் ஒருவர் தனியாளாக காட்டு மரங்கள் கொண்டு ஒரு தற்காலிக வீடமைக்கும் முயற்சியில் இருந்தார். ஏறகனவே அவர் அமைத்த குடிசை, மழைக்கு தாக்குப் பிடிக்கவில்லையாம். மழை நாளொன்றில் இராணுவம் பார்த்துவிட்டு மரங்களையும், கூரைத் தகரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். தனிமனிதனாகத் துரித கதியில் மரங்களை நட்டு, குறுக்கு மரம், கூரை என பார்த்துக் கொண்டிருக்கையில் வீடொன்று உருவாகிக் கொண்டிருந்தது. சைக்கிள்களில் ரோந்து வந்த ஏழெட்டு இராணுவத்தினர் பார்த்துவிட்டு, இறங்கிவந்து கைலாகு கொடுத்து மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் தோளில் தட்டினார்கள். பாராட்டுகிறார்கள் போலும். யாரேனும் ஃபேஸ்புக் போராளிகள் அந்த இடத்தில் நின்றிருந்தால் ஒரு தமிழனத் துரோகியை இந்த இணைய உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கக்கூடும்.

மாலை. மாவிட்டபுரத்தில், யாழ்நகர் செல்லும் பஸ் ஏறுகையில் இராணுவத்தினர் அல்லது போலீசார் சிலரும் வந்து ஏறி அமர்ந்து கொண்டார்கள். காங்கேசன்துறையில் பணியோ பயிற்சியோ தெரியவில்லை. இறுகிப்போன முகங்களோடு யாரையும் கண்டுகொள்ளவில்லை. கைக்குழந்தையோடு ஏறும் தாய்மார்களைப் பார்த்ததும் கண்டக்டர் வழக்கம்போல "குழந்தையோட நிக்கிற அக்காக்கு இடங்குடுங்கோ" என்றபோதெல்லாம் அவர்கள் மட்டும் சலனமில்லாமல் இருந்தார்கள். விநோதமாக இருந்தது. நான் பார்த்தவரையில் - போர்க்களமல்லாத பகுதிகளில் இராணுவம்/போலீஸ் மக்களோடு இவ்வளவு முறைப்பாக, விறைப்பாக இருந்ததில்லை. பேரூந்தில் வயது முதிர்ந்தவர்கள் நிற்கும்போத்து இப்படிப் பாராமுகமாக இருந்து பார்த்ததில்லை. ஒருவேளை புதிதாகப் பயிற்சி பெறுவதால் அப்படியோ என நினைத்துக் கொண்டேன். சற்று நேரத்தில் விடை தெரிந்தது. அவர்களில் ஓரிருவருக்கு தொலைபேசி அழைப்புவர எடுத்து, "மச்சான் நான் இப்பதாண்டா வந்திட்டிருக்கேன்.. ஆறுமணிக்கு வந்திடுவேன்" - ஆக, தேச சேவையில் இணைந்துகொண்ட தமிழர்கள் அவர்கள். பெருமையாக இருந்தது.

* * * * * * * * * * * *

பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் வீதியின் குறுக்காக வரிவரியாக வீதியில் மஞ்சள் நிறத்தில் கோடாக கோடாக பெயிண்ட் பூசப்பட்டிருந்தது. வந்த நாளிலிருந்து அவ்வப்போது சில நிமிடங்கள் தொடர்ச்சியாக அவதானித்துப் பார்த்திருந்தேன். ஆனாலும், அதன் காரணத்தையோ, பயன்பாட்டையோ சற்றும் அனுமானிக்க முடியவில்லை.

"என்னன்னே இது? ஏதும் டிசைனா? - மீண்டும் மூர்த்தி அண்ணனுடன் பேசும்போது.
"உங்களுக்குப் பார்த்தா எப்பிடி தெரியுது?"
"பார்த்த உடனே படஸ்ட்ரியன் க்ரொசிங் மாதிரியே.. இருக்கு ஆனா அப்பிடித் தெரியேல்ல"
"அப்பிடின்னு சொல்லித்தான் போட்டவங்கள்... நானும் வாசல்லயே க்ராஸ் பண்ணி பிள்ளையாரிட்ட போகலாம்னுதான் நினச்சேன்"
"யாரும் கண்டுக்கிறதாவே தெரியலயே"

அப்போது இரண்டு பெண்மணிகள் அந்தப் பாதசாரிகள் கடவையை மிகுந்த பிரயத்தனத்துடன், கடும் அவதானத்துடன் மிக மிக மெதுவாக தயங்கித் தயங்கிக் கடக்க முனைந்தார்கள்.
"படஸ்ட்ரியன் க்ரொசிங்க இவ்வளவு பயபக்தியா யாரும் கடந்து நான் பார்த்ததே இல்லண்ணே"
"அதில வச்சு அடிச்சு அக்சிடென்ட் ஆகியிருக்கு... அதான் சனம் பயப்பிடுது"

நடுவீதில் அந்தப் பெண்கள் மெதுவாக கடக்கையில், அவர்களுக்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் மோட்டார் சைக்கிள்கள் தம் பாட்டுக்கு கடந்து சென்றன. தொடர்ந்து அதில் வைத்து மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றையொன்று ஓவர் டேக் செய்தார்கள்.

பகலிலோ, இரவிலோ குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போக்குவரத்து போலீசார் கடமையில் இருப்பார்கள் எனவும், முன்பு போல திடீர் திடீரென கண்ட இடங்களில் நின்று மறிப்பது, மது அருந்தியோரை பிடிப்பது போன்ற தொல்லைகள் இல்லையாம். குறிப்பாக 'டிமிக்கி' கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் செல்பவர்களைத் துரத்திப் பிடிப்பது போன்ற தொந்தரவுகள் இல்லை என்கிறார்கள்.

* * * * * * * * * * * *

எட்டு வருடங்களுக்குப் பின் நண்பன் கௌதமனுடன் எங்கள் பழைய நண்பரான Book lab புத்தகக்கடைக்கு சென்றோம். நண்பர் கௌதமனைப் பார்த்து "என்ன பாத்து நாளாச்சு?" என்றார். என்னைப் பார்த்தும் "இவரப் பாத்து நிறைய நாளாச்சே" என்றார். புத்தகங்களுக்காகத் தேடியலைந்து 2005 நல்லூர்த்திருவிழாவில் கண்டடைந்த அட்டகாசமான புத்தகக்கடை அது. இம்முறை தேடும்போது நண்பன் கேட்டான்

"என்ன முந்தி மாதிரி ஒண்டையும் காணேல்ல..."
"கௌதமன், நீங்க ஒரு லட்சியத்தோட இருக்கீங்க..உங்களுக்கு காசு தேவையில்ல, சொந்தமா ஒரு பில்டிங் இருக்கு, பொதுச்சேவை செய்ய மேலதிகமா பணம் இருக்குன்னு வைங்க... நீங்க முந்தி இருந்த புக்லாப் மாதிரி ஒண்ணைத் திறக்கலாம். எங்கள மாதிரி ஆக்களுக்கு சேவை செய்யலாம்"

ஒரு லட்சியத்தோடு தொடங்கப்பட்ட புக்லாப் யாழ்ப்பாணத்தின் புத்தகக் கடைகளுக்கான 'ஸ்டாண்டர்ட்'டுக்கு மாறியிருந்தது. கடையின் பெரும்பகுதியை பாடசாலை மாணவர்களுக்கான பாடப் பயிற்சிப் புத்தகங்கள் நிறைத்திருந்தன.

* * * * * * * * * * * *

"ஜீ எப்பிடி மாறிட்டுது யாழ்ப்பாணம்...? நீங்க இங்க வரமாட்டீங்களா? கொழும்பில்தான் வேலை செய்வீங்களா?" சிறீ அண்ணன் கேட்டார்.
புன்னகையில் ஒரு 'அருமை' கமெண்ட் போட்டேன்.
"இங்க வந்தா ஒரு நல்ல பொம்பிளை பாக்கலாம்ன்னு.... ஓ நீங்க கொழும்பில வீட்டோட பாத்துச் செய்வீங்க இல்ல? பிறகு கதைக்கிறன் உங்களோட"
யாழ்ப்பாணம் மாறியிருக்கா? குழப்பமாக இருந்தது.

இரண்டாண்டுகளுக்கு முன் பார்த்ததை விட நகரப்பகுதி மாறியிருந்தது. உண்மையில் கொஞ்சம் டெவலப் ஆகியிருந்தது. எப்படி தெரியும்? உதாரணமாக யாழ் நகரத்தினையே எடுத்துக் கொண்டால் மேலோட்டமாக இரண்டு விதமாக வகைப்படுத்தலாம்.

நெரிசலான கடைத்தொகுதிகளைத் தவிர்த்து, சற்றுத் தள்ளியுள்ள பயன்படுத்தப்படாத பகுதிகளில் புதிய கட்டடங்களை நிர்மாணித்து விரிவு படுத்துதல். கழிவுநீர் வடிகாலமைப்பு. விசாலமான வீதிகள், போக்குவரத்து ஒழுங்குமுறை. இது நான் நம்பும் முதலாவது முறை.

இரண்டாவது - நெரிசலான இடத்தில் மேலும் பல கட்டடங்களைக் கட்டி, மேலும் சிக்கலாக்குவது. அங்கே நிறையப் புதிய கடைகளைத் திறந்து, கலர் கலராக மின்விளக்குகளை எரியவிடுதல். இருக்கும் மூத்திரச் சந்துகளிலேல்லாம் நாலைந்து வங்கிகளைத் திறந்துவிடுதல்.

இரண்டாவது முறைதான் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானோரின் நம்பிக்கை என்பதைக் கடந்த காலங்களில் உணர்ந்திருக்கிறேன். யாரும் இதை மறுக்க முடியாது. வேண்டுமெனில் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

மூன்றாவதாக இன்னொரு முறை இருப்பதாகத் தெரிகிறது.
"ஜீ..யாழ்ப்பாணம் எப்பிடி டெவலப்ப்பாகி இருக்கு பாத்தீங்களா?"
"ம்ம் இப்ப உண்மைல நல்லா இருக்கு ரோட் எல்லாம்..."
"ரோட்ட விடுங்க ஜீ அது எப்பவும்தானே இருக்கு? கே.எஃப். சி வந்துட்டுது நீங்க போகலையா?"

* * * * * * * * * * * *

நாட்டில் அமைதி திரும்பிவிட்டது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சுமூகமாக வாழ்கிறார்கள் என வெளிநாடுகளுக்கு காட்ட அரசாங்கம் பெரும்பிரயத்தனம் எடுத்துக் கொண்டாலும், ஒருமுறை அவர்களில் யாரேனும் ரயிலில் பயணிக்கும் பட்சத்தில் உணர்ந்துகொள்ள முடியும், இங்கே எதுவும் மாறவில்லை. வன்முறை ஓயவில்லை. அதன் வடிவம் மட்டுமே மாறி இருக்கிறது என்பதை.

ரயிலில் சிங்களப் பாடல்களைப் போட்டுத் தொலைக்கிறார்கள்!

Monday, May 26, 2014

மரணத்தின் நொடிகள்!


மரணம் நிச்சயமானபின், அதற்காகக் காத்திருக்கும் அந்த ஒரு சில வினாடிகள் மிகக் கொடுமையானது. அதுதான் அதியுச்சபட்சத் தண்டனை என்றுகூடத் தோன்றுகிறது. கொலையாளி மரணத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்பாராத தடங்கல் ஏற்படும்போது, அந்தச் சிறு தாமதம் கொடுக்கும் உணர்வு பற்றிப் பேச வேண்டியதில்லை. அதுவே உண்மையான மரண அவஸ்தை. அது, ஏதாவது அதிசயம் நிகழ்ந்துவிடாதா என ஒரு சிறு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி விடலாம். சிறு நம்பிக்கையின் கீற்றையும் கொடுத்துவிடலாம்.

'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' படத்தில் ஷிண்ட்லரின் தொழிற்சாலைக்கும் வரும் ஜேர்மனிய ராணுவ அதிகாரி அமான்கோத் அங்கு பணிபுரியும் சுகவீனமுற்றிருக்கும் வயதான யூதன் ஒருவனை 'அவன் இனித் தேவையில்லை' எனக் கொல்ல முடிவு செய்கிறான். மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அவன் தலையில் தன் கைத்துப்பாக்கியை வைத்து ட்ரிக்கரை அழுத்துகிறான். துப்பாக்கி வேலை செய்யவில்லை. ஒரு முறை சோதித்துவிட்டு திரும்பவும் சுட முயல்கிறான். பயனில்லை. பக்கத்தில் நிற்கும் தனது படை வீரனின் துப்பாக்கியைப் பிடுங்கி சுட முயல, அதுவும் வேலை செய்யாது. மிகுந்த எரிச்சலுடன் துப்பாக்கியின் பின்புறத்தால் ஓங்கி தாக்கிவிட்டு அங்கிருந்து செல்வான். இதற்கென்றே காத்திருக்கும் ஷிண்ட்லர் ஓடிவந்து அந்த யூதனை அழைத்துச் செல்வார். அந்தச் சில நிமிடங்களில் அந்தக் கைதியின் வியர்த்து வழியும் மரணபயம் நிறைந்த முகமும், ஷிண்ட்லரின் தவிப்பும் அவ்வளவு பாதித்து, முடிவில் அவன் பிழைத்துக் கொண்டதும் பார்வையாளனை நிம்மதிப் பெருமூச்சு விடவைக்கும்.

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் ஒரு காட்சி. கொலையாளி ஒருவன் மோட்டார் சைக்கிளில் வந்து இரு போலீஸ் அதிகாரிகளைச் சுட்டுக் கொல்கிறான். அவர்களுடன் கூடவே இருந்த வயதான போலீஸ்காரன் 'அய்யா' என்றழைத்து கொலையாளிக்கு சல்யூட் அடித்தபடியே முகத்தில் கலவரம் படிய காத்திருக்கிறான். எப்படியும் இவனைக் கொன்றுவிடுவான் எனத் தெரிகிறது. மற்றைய கொலையாளியின் மோட்டார் சைக்கிள் கிளம்பத் தாமதமாகிறது. இதற்குள் யாரும் வந்துவிடமாட்டார்களா? வயதான போலீஸ்காரன் பிழைத்துக் கொள்ளமாட்டானா? எனச் சற்று பார்வையாளனை எதிர்பார்க்க வைக்கிறது. ஆனால் அதுவே மேலும் தாமதமாகி நம் பொறுமையைச் சோதிக்கும்போது, ' யோவ் சீக்கிரமா சுட்டுட்டுப் போய்யா' என்கிற மனநிலை வந்துவிடுகிறது. எந்தத் தவிப்பும் ஏற்படவில்லை. இது இயக்குனர் திட்டமிட்டு செய்ததாக இருக்கலாம். இறுதியில் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

சமயங்களில் சாவை எதிர்நோக்கியிருப்பவனைவிட அந்தச் சூழ்நிலையில் அருகில் இருப்பவனுக்கே தாமதிக்கும் வினாடிகள் அதீத நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன. 2006ல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய்ச் சிக்கிக் கொண்ட நாட்கள் மறக்கமுடியாதவை. ஒவ்வொருநாளும் ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் புலிகளுக்கு ஆதரவானவர்களும், எதிரானவர்களும் மாறி மாறி 'போடுவது' என்பது சர்வசாதாரணமான நிகழ்வு. 

ஒரு மதிய நேரம் வீட்டிற்கு அருகாமையில் ஒரு துப்பாக்கி வேட்டு. சிறிய இடைவேளில்யில் இரண்டாவது வேட்டும் தீர்க்கப்பட்டதில், ஒரு நம்பிக்கை 'தப்பி விட்டாரா?' சற்று நேரத்தில் இன்னொரு வேட்டுச்சத்தம், முதலில் கேட்டதைவிட தொலைவாக வேறு பகுதியில். இப்போது சிறு உற்சாகம். கேற்றடியில் ஓடி வந்து பார்த்தேன். இன்னும் இரண்டு மூன்று வேட்டுக்களின் சத்தம் கேட்க, 'சிங்கன் எஸ்சாகிட்டாண்டா!' மனம் கூவியது.

சற்று நேரம் அமைதி. எதிரில் வந்த ஏரியா நண்பன் "ஆரெண்டு தெரியும்தானே?"
"தெரியும், ஆள் தப்பீட்டுதா?"
வருத்தமாக உதடு பிதுக்கிச் சென்றான்.

சொல்லமுடியாத மனவுளைச்சல் அன்று என்போலவே பலருக்கும். சங்கக் கடையில் லைனில் நின்றுகொண்டிருந்த அனைவருமே அவர் ஓடியதும், தப்பிவிட வேண்டுமென மனதார அந்த நொடியில் நினைத்திருப்பர்கள். கடவுளை வேண்டியிருப்பார்கள். மறுநாள் அந்த ஒழுங்கைக்குள் அவர் சுடப்பட்டு வீழ்ந்த இடத்தைக் கடந்து செல்லும்போது நண்பன் சொன்னான்,

"ச்சா இவ்வளவு தூரம் தப்பியோடி வந்து... பேசாம பக்கத்தில ஆமியிற்ற ஓடியிருக்கலாம்" - அந்த யோசனை அபத்தமாக இருந்தாலும் அந்த நேரத்தில் உயிர்பிழைத்திருப்பார் என்பதுதான் உண்மை.

கடைசி நொடிவரை உயிர் பிழைத்துவிடுவேன் என்ற அவருக்கு நம்பிக்கை இருந்திருக்கும். அவர் முதல் வேட்டில் அதே இடந்தில் இறந்திருந்தால் அவ்வளவு வருத்தமாயிருந்திருக்காது. முதல் இரு வெடிகளுக்குத் தப்பியது எல்லோருக்குமே அந்தக் கணத்தில் அளப்பரிய நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. பலநாட்கள் பாதித்தது அந்நிகழ்வு - இப்போது நினைத்தாலும் கூட!

கடைசி நொடிகளில், கண்கள் கட்டப்பட்ட நிலையில், மிக அருகே சிலருக்கான் இறுதி வேட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்க, நடத்திச் செல்லப்படும் ஒருவனுக்கு நம்பிக்கையின் கீற்று சிறிதேனும் தென்பட்டிருக்குமா?

Monday, February 24, 2014

என்னப் பாத்து அந்தக் கேள்விய..?


முதல் நாளிரவு Christmas பார்ட்டி முடிந்து 'திடீர் சுகயீனம்' காரணமாக அலுவலகத்திற்கு லீவ் போட்டு ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தேன்.

திடீரென்று அஃபீஸ் மானேஜர் அங்கிள் தொலைபேசினார். "உன் சம்பளம் கொண்டுவந்திருக்கிறேன். கீழே இறங்கி வர முடியுமா?"

'ச்சே நாட்டில இந்த மாதிரி நாலு நல்ல மனுஷங்கள் இருக்கிறதாலதான் காலைல அந்தக் குளிர் குளிருது போல' நினைத்துக் கொண்டே போய் வாங்கிக் கொண்டேன். அங்கிள் கேட்டார். "ரெண்டுநாள் லீவ் என்ன பண்ணினே? கேர்ள் ஃபிரண்டை மீட் பண்ணினியா?"

ஏன்? எதுக்கு? இப்பதானய்யா நல்ல மனுஷன்னு நினைச்சேன் அப்பிடின்னு ஒரு நொந்துபோன பார்வை பார்க்க, அங்கிள் ஹி ஹின்னு சிரிச்சுட்டு போயிட்டார். அங்கிளுக்கு நம்ம வரலாறு தெரியும். முதன்முதல் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து தாத்தாக்கள், மாமாக்களுடன் மட்டுமே பேரதிருஷ்டம் வாய்க்கப்பெற்ற என்னைப் பார்த்து அந்தக் கேள்விய?... வெறுப்பேத்துறாராம்!

* * * * * * * * * *

"டேய்! ஆறுமணியாகுது. அஞ்சுமணிக்கே போகாம இன்னும் இங்கயிருந்து என்ன செய்யிற? உனக்கு கேர்ள் ஃபிரண்ட் இல்லையா?" - பாலா. வெளிநாட்டிலிருந்து வந்த கன்சல்டண்ட்.

அப்பதான் ஒரு விஷயம் புரிஞ்சுது. ஆறுமணிக்கெல்லாம் உலகம் எங்கயோ போயிட்டிருக்கு. நாமதான் நாவலர் ரோட்லயே நிக்கிறம். அலுவலகம் நாவலர் ரோட்டில இருந்தது. என் முதல் வேலை. நான்தான் அங்கே சின்னப்பையன்.

இந்த 'கேர்ள் ஃபிரண்ட்' கேள்வியை முதன்முறை என்னைப் பார்த்துக் கேட்டவர் பாலாதான். அவர் ஆரம்பிச்சது...என்மேல இவ்வளவு நம்பிக்கை வச்சு, இவனுக்கும் ஒரு கேர்ள் ஃபிரண்ட் இருக்கும்னு நம்புறாங்க பாருங்க. அந்த நம்பிக்கை பெரிய விஷயம். லைட்டா பெருமையா வேற இருக்கும். ஆனா அந்த நம்பிக்கைய நாமளே பொசுக்கிறோம்னு நினைக்கும்போதுதான் வருத்தமா இருக்கும்.

உடன் வேலை பார்க்கும் சிங்கள அங்கிள்கள் அறிமுகமானவுடன் கேட்கும் மிக முக்கியமான கேள்வி "உனக்கு கேர்ள் ஃபிரண்ட் இருக்கா?" எங்கு சென்றாலும் இந்தக் கேள்வியில் மட்டும் மாற்றமில்லை. கவனித்துப் பார்த்ததில் அவர்கள் அதனை வாழ்வின் அத்தியாவசியப் பொருளாக நினைப்பவர்கள். நம்மவர்கள் பலர் அதை ஆடம்பரப் பொருளாக நினைத்துக் கொண்டிருந்தார்கள் - அதாவது எது கிடைக்கவில்லையோ அது ஆடம்பரம் என்ற நம்பிக்கையில்!

கேர்ள் ஃபிரண்ட் இல்லாததெல்லாம் ஒரு பிரச்சினையா? என நொந்துபோகும் அளவுக்கு அவுட்சோர்சிங் வேலை பார்க்கையில் இந்த விஷயம் ஆப்பு வைத்தது. சிங்கள நண்பர்கள் ஐந்து மணிக்கே காதலியைச் சந்திக்க 'டாண்' என்று கிளம்பிவிட நம்மாளுங்க 'நீ போய் என்ன பண்ணபோறே சும்மாதானே சுத்திட்டிருக்கே?' என்றொரு பார்வை பார்ப்பார்கள். என்போன்ற வேலைக்கு வாழ்க்கைப்பட்ட விளங்காத பயல்கள் எல்லாம் சமயத்தில், ஒன்பது, பத்து மணிவரை இருந்து எவனுக்கோ உழைத்துக் கொடுத்தோம்.

* * * * * * * * * *

ஞ்சு வருஷத்துக்கு முதல், அலுவகலகத்தில் வேலை செய்த பெண் தன் மாஸ்டர்ஸ் கம்ப்ளீட் பண்ணி விட்டதாகக் கூறி, தன்னுடன் அவளது இன்ஸ்டிடியூட் வருமாறு அழைத்தாள். அது அலுவலகத்திற்கு சற்று அருகிலேயே இருந்தது. முதலில் மறுத்தாலும் ரொம்பவே கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் (மக் டோனால்ட்ஸ்ஸில் ட்ரீட்!) அந்த அன்புக்குக் கட்டுப்பட்டு போனாப் போகுதுன்னு சம்மதித்தேன்.

பக்கத்தில் நடந்து கொண்டிருந்தவள் திடீரென்று கேட்டாள், "உடம்பு சரியில்லையா?"
"அப்பிடியில்லயே!"
"நல்லாத்தானே இருந்ததே? ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு?"
"அப்பிடியா?"
"என்னமோ பேயறைஞ்ச மாதிரி!"
"ஓ!  அ..அ.. ஆக்சுவலி மை ஃபேஸ்.... ஓல்வேய்ஸ் லைக் எ பேயறைஞ்ச ஃபேஸ்யா யூ நோ...."
"ஹேய் ஃபர்ஸ்ட் டைம் ஒரு பொண்ணுகூட நடந்து போறே.. அதானே?"

ச்சே! என்ன ஒரு அவமானம்! எனக்கு வந்திச்சு பாருங்க கோபம். அப்பிடியே பாதிவழில திரும்பியிருப்பேன். ஆனா மக் டோனால்ட்ஸ் என்ற ஒரே வார்த்தைக்காக அந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டேன். அப்பல்லாம் இதுமாதிரி இடங்கள்ள எல்லாம் ஓசிலதான் சாப்பிடுவதென்பது என் கொள்கை. மனுஷனுக்கு மானமா, கொள்கையான்னு வரும்போது கொள்கைதானே முக்கியம்?

கேர்ள் ஃபிரண்ட் இல்லாம இருக்கிறது அவ்வளவு பெரிய குற்றமாய்யா? ஏழு வருஷத்துக்கு முன்னாடி பாஸ்போர்ட் அஃபீஸ்ல கூட இதுமாதிரி ஒரு சம்பவம் நடந்திச்சு. ஆனா அது இந்தளவுக்கு இல்ல.. அதுக்கும் மேல! ரொம்ப மோசமா அவமானப்படுத்திட்டான்.

இத்தாலில இருந்து வந்த ஒரு சிங்கள பயபுள்ள. மிக உருக்கமா ஒரு பார்வை பார்த்து "ஏன்? உனக்கு ஏதாவது பிரச்சினையா?"
ஒரு நிமிஷம் நானே என்னை நினைச்சு பயந்து போயிட்டேன்.

* * * * * * * * * *

திருகோணமலையிலிருந்த ஓரிரவில் ரெசிடெண்டில் ஒரு பார்ட்டி. உற்சாகமாக நானும்,  என்னைவிட பத்து வயது அதிகமான என் சிங்கள தோஸ்துவும், ஒரு தமிழ் அண்ணனும் தனியாகப் பேசிக்கொண்டிருக்கையில்..

"உமா கொழும்புல போய் வீக்கெண்ட் என்ன பண்ணுவே? கேர்ள் ஃப்ரெண்டை  மீட் பண்ணுவியா?"
கொஞ்சநேரம் எதுவுமே புரியாமல் முழித்துவிட்டு, ஒரு மாதிரியாக பொத்தாம் பொதுவாகத் தலையசைத்தேன்.

"என்னது, கேர்ள் ஃப்ரெண்ட் இல்லையா? பொய் சொல்லாதே!"
"இதில பொய் சொல்ல என்ன இருக்கு? இல்ல!"
இல்லையா? நீங்க உடனே யாரையாவது லவ் பண்ணுங்க. லைஃப்ல ஒரு இண்டரெஸ்ட் வரும்" - இது தமிழ் அண்ணன்.
"என்னது உடனயா? என்ன பாஸ் பக்கத்து கடைல போய் பரோட்டா சாப்பிட்டு வர்ற மாதிரி அவ்ளோ ஈசியா சொல்லிட்டீங்க?"
"சரி இப்ப உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இல்ல! இதுவரைக்கும் எத்தனை பேர்?" - தோஸ்து.
டேய் ஜீ... புயபுள்ள உன்னை உசுப்பேத்தி அழவைக்கலாம்னு ட்ரை பண்ணுது சூதானமா இருடா.. யாருகிட்ட?
"எப்பவுமே இருந்ததில்ல!"
"எப்பிடி? ஏன்?"

சற்று நேரம் ஆழ யோசிப்பதுபோல பாவனையிலிருந்து மிக சீரியசான முகபாவனையுடன் ஆரம்பித்தேன்.
"சார் சின்ன வயசில இருந்தே ரொம்ப டீசண்டு! சாருக்கு இதெல்லாம் பிடிக்காது! சார் ரொம்ப ஸ்ரிக்டு! சார் பொண்ணுங்கள எல்லாம் சகோதரிகளா.."

எந்த நேரத்திலும் தோஸ்து குபீரென்று சிரித்துவிடலாம் எனத் தோன்றியதால் ரூட்டை மாத்தி உருக்கமாகப் பேச ஆரம்பித்தேன்.
"நாங்கெல்லாம் இந்த சமுதாயத்தைப் பற்றியே எப்பவும் சிந்தித்துக் கொண்டு வாழுறதால.."
பேரரசு கமலுக்குக் கதை சொல்லப் போன மாதிரியே ஒரு ரியாக்சன் வந்திச்சு அங்கயிருந்து. சரி விலாவாரியா சொல்லிடுவோம்.

"நாங்க எல்லாம் உங்கள மாதிரி சூழ்நிலைல வளரேல்ல. யாழ்ப்பாணத்தில சின்ன வயசிலருந்து பள்ளிக்கூடத்தில தனியாவே வளர்க்கப்படவங்க. பாஸ் லவ் உங்களுக்கு பரோட்டா சாப்பிடுற மாதிரி இருக்கலாம். நானெல்லாம் ஒண்ணாப்பு படிக்கேக்க கூடப்படிச்ச பொண்ணுங்க கிட்டப் பேசினதுக்குப் பிறகு, இன்னொரு பொண்ணுகிட்ட ஹாய், ஹலோ சொல்லும்போது 24 வயசாயிட்டுது. முடியுமாய்யா? நான் மட்டுமில்ல எங்க ஃபிரண்ட்ஸ் எல்லாப் பயலுகளும் இப்பிடித்தான். அதிலயும் நாங்க மாத்ஸ்(Maths) படிச்சவங்க. மாத்ஸ் படிச்சவங்க எப்பிடியிருப்பாங்க தெரியுமா?

அது ஒரு தனி கூட்டம். சேவல் பண்ணை. காய்ஞ்சு... காய்ஞ்சு போய் இருப்பாங்க. பொண்ணுங்க கூட எல்லாம் யாருமே பேச மாட்டாங்க. மற்றவனைப் பேசவும் விடமாட்டோம். அப்பிடியே போய்ப் பேசினாலும் மாத்ஸ் பொண்ணுங்க பதில் பேசுவாங்களான்னு எவனுக்கும் தெரியாது. அவளவள் தன்னை ஔவையார், காரைக்கால் அம்மையார் ரேஞ்சில நினச்சுட்டு இருப்பாளுங்க. அற்ப மானிடர்களேன்னுதான் எங்களைப் பாப்பாளுங்க. எப்பவாவது ஒரு ஆர்ட்ஸ், கொமர்ஸ் பொண்ணு வந்து அபூர்வமா யாராவது ஒருத்தன மனுசனா மதிச்சு ஒரு வார்த்தை பேசினா போதும். அட் எ டைம்ல ஒம்பது பேர் பாய்ஞ்சு விழுந்து பதில்சொல்லப் போய், கடைசில ஒருத்தனும் பேசமுடியாது. மொத்தமாக் காரியத்தையே கெடுத்துடுவானுங்க.

ஒரு பொண்ணை லைட்டா சைட் அடிச்சாலே, கடைக் கண்ணாலயே கவனிச்சு, கண்ணகி கசின் மாதிரியே ஒரு லுக் விடுவாளுங்க. யாருமே கேக்குறதுக்கு இல்லைன்னு வேற வழியே இல்லாம ஒரு அட்ரஸ்... வெறும் அட்ரஸ் கேக்க போயிருப்போம் என்னமோ அட்டெம்ப்ட் டு ரேப்புக்கு அப்ளிகேஷன் போட வந்த மாதிரியே அப்பிடி ஒரு டெரர் ஃபேஸ் காட்டுவாளுங்க. ஆணியப் புடுங்கவே வேணாம் ஆளவிடுன்னு ஓடிவந்திருவோம்.

எப்பவாவது, ஏதாவது ஒரு பொண்ணைப் பார்த்தா, பிடிச்சிருந்தா, நல்லாருக்கே லவ் பண்ணினா எப்பிடியிருக்கும்? அப்பிடீன்னு லைட்டா, ரொம்ப மைல்டா ஒரு யோசனை வரும். அப்பிடியே மைண்ட் வொய்ஸ்ஸ கரெக்டா காட்ச் பண்ணி, காறித் துப்பிட்டுப் போயிடுவாளுங்க!

நீங்க வேற! நாங்க வேற! நீங்க எல்லாம் ஹிந்திப் படம் பார்த்து அதையே ஃபெலோ பண்றவங்க. லைஃப வாழுறவங்க. பதினஞ்சு வயசுலயே கேர்ள் ஃபிரண்ட்! லவ்சு! நாங்கெல்லாம் தமிழ்ப்படம் பார்த்து வளர்ந்தவங்க. எங்களுக்கு சமுதாயம்தான் முக்கியம். நாப்பது வயசில சமுதாயத்துக்காக போராடுற ஹீரோவ இருபது வயசு பொண்ணு துரத்தி துரத்தி லவ் பண்ணுவாங்க. அத நம்பியே முப்பத்தஞ்சு வயசு வரைக்கும் சும்மாவே சுத்திட்டு திரியுற எத்தின பேரு இருக்காங்க தெரியுமா?

நாங்களும் ஒரு காலத்தில, எப்பிடியும் அடுத்த முறையாவது வலண்டைன்ஸ் டேயக் கொண்டாடுறம்னு சைலண்டா சபதம் போட்டுட்டுத் திரிஞ்சவங்கதான். ஒண்ணும் நடக்கல! எவளும் சிக்கல! ஊரில எல்லாப் பொண்ணுங்களும் விவரமா இருந்தா பாவம் பசங்க என்னதான்யா பண்ணுறது? என்னமோ பொண்ணுங்க எல்லாம் லைன்ல வந்து நிக்கிறமாதிரியும், நாங்க என்னமோ வேணாம்னு சொல்லிட்டுத் திரியிறமாதிரியும் பேசுறீங்க? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு?"

- தொடர்ந்து ஆக்ரோசமாக உரையாற்றினேன். ஊடக அனுசரணை - டீச்சர்ஸ்!

* * * * * * * * *

தையெலாம் மறந்திருந்தேன். நேற்று அதிகாலை எட்டுமணிக்கே தூங்கிக் கொடிருந்த என்னை ஃபோன் செய்து எழுப்பிய சிங்கள கன்சல்ட்டண்ட் மாமா ஒருவர் கேட்டார், "எப்பிடியிருக்கே? வைரல் ஃபீவர்ன்னு கேள்விப்பட்டேன். இப்ப எப்பிடி?"
"பரவால்ல"
"அப்புறம் வலண்டைன்ஸ் டே எப்பிடிப் போச்சு? கேர்ள் ஃபிரண்டை மீட் பண்ணினியா?"

யோவ் நீங்கெல்லாம் லீவ் நாள்ல ஃபோன் பண்ணி சம்பந்தமில்லாம ரொம்ப அக்கறையா விசாரிச்சாலே தெரியும்யா அஃபீசுக்கு வரச்சொல்லப் போறீங்கன்னு.. அதையெல்லாம்  பொறுத்துக் கொள்ளலாம்.

அதுக்கேன்யா என்னைப் பாத்து அந்தக் கேள்விய..?

Wednesday, April 24, 2013

காக்கா கொத்தின காயம்!




“என்ன இது?”

“அது காக்கா கொத்தினது”

“ஏன் கொத்திச்சு?”

“உங்கள மாதிரி சின்னப்பிள்ளையா இருக்கேக்க, அம்மாவ விட்டுட்டு தனியா மொட்டை மாடிக்கு போனப்போ...”

என் இடது புருவத்தில் மறைந்திருந்த சிறு வெட்டுக் காயத்தைக் காட்டி கேட்ட என் அக்கா மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் மறந்தே போய்விட்டிருந்த என் பால்ய வயது அடையாளம். புருவத்தின் குறுக்காக சிறிய ஆழமான ஒரு வெட்டு. காக்கா கொத்தியது என்றால் நம்பும்படியாக இருந்தது. அது எப்படி சற்றும் யோசிக்காமல் காக்கா கொத்தியது என்று சொல்ல முடிந்தது?

என் சின்னஞ்சிறு பராயத்தில் என் பெரியப்பாவிடம் அதே கேள்வியைக் கேட்ட ஞாபகம் இருக்கிறது. என் புருவத்தில் இருக்கும் அதே போன்ற வெட்டுக் காயம் அவருக்குமிருந்தது. அவர் சொன்ன பதிலும் அதே காக்கா கொத்தியதுதான்.

குழந்தைகள் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். கவனிப்பதும், கதை கேட்பதுமாக முதல் தேடல் குழந்தைப்பருவத்தில் ஆரம்பிக்கிறது. வளர்ந்து வருகையில் கவனித்தல் குறையலாம். ஆனால் கதை கேட்கும் ஆர்வம் வாழ்வின் இறுதிவரை குறைவதில்லை. முக்கியமாக குழந்தைப் பருவத்தில் பேச்சு ஆரம்பித்து சில நாட்களிலேயே  'கதை விடுதல்' என்பதும் ஆரம்பித்து விடுகிறது. அதை மட்டும் நாம் எப்போதும் தவறாமல் செய்து வருகிறோம்.

குழந்தைகளிடம் கதை விடுவதற்குத்தான் காக்காய்கள் எவ்வளவு உறுதுணையாக இருக்கின்றன. "காக்கா கொண்டு போயிட்டுது! " - குழந்தைகளிடம் ஒரு பொருளை மறைத்து வைப்பதற்கு நாம் உபயோகப்படுத்தும் உத்தி. அதன்மூலம் நாங்களே முதன்முறையாக குழந்தைகளுக்கு ‘கதைவிடுவது’ பற்றி அறிமுகம் செய்கிறோம். பின்னர் அவர்கள் எங்களிடம் வெகு தீவிரமான முகபாவத்தோடு ‘காக்கா கொண்டு போச்சு” என அதே ‘டெக்னிக்’கை பிரயோகிக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும்போல பெரியவர்களிடமிருந்தே கதைவிடுவதையும் கற்றுக் கொள்கிறார்கள்.

நாம் முதன்முதலாகக் கேட்ட 'கதைநாயகன்' காக்காதான் இல்லையா? திருட்டுத்தனமான பாத்திரமாகவே காக்கா அறிமுகப்படுத்தப்படுகிறது. பின் நமது திருட்டுத் தனங்களுக்கும் காக்கா மீதே பழிபோட்டு, திருட்டுத்தனத்தின் உருவகமாகவே அவைகளை மாற்றிவிட்டோம். சிறுவயதில் இடையிடையே ஓரக்கண்ணால் சற்றே சாய்ந்து பார்க்கும் பழக்கம் இருந்தது. “என்னடா காக்காப் பார்வை பார்க்கிறே?” என அக்காக்கள் சிலர் சிரித்தபடியே கேட்பார்கள். அவசரமாக, அரைகுரையாகக் குளிப்பதை ‘காக்காக் குளியல்’ , ‘காக்காக் கடி’ என காக்கைகள் நமக்கு கலைச் சொற்கள் சிலவற்றை வழங்கி நம் மொழிக்கும் சேவை செய்திருக்கின்றன.

பாவம் காக்கைகள் அவற்றுக்கு காலம் காலமாக தம் இனத்தின் மீது நாம் மேற்கொள்ளும் தவறான கற்பிதங்கள் பற்றித் தெரியாமல் இருக்கலாம். அல்லது தங்கள் மீதான அவதூறுகளைக் களைய வேண்டுமென்ற பிரக்ஞை இல்லாமலோ தங்கள் பாட்டுக்கு வாழ்ந்து வருகின்றன. ஆனாலும் அவ்வப்போது திருட்டுத்தனங்களும் செய்வதாகத் தெரிகிறது.



ன் காயத்தைக் கண்ணாடியில் பார்த்தேன். புருவத்தின் குறுக்காக சற்றே ஆழமான ஒரு பிளவு. இவ்வளவு நாட்களாக நான் கவனிக்கவே இல்லையே? நேராகப் பார்த்தால் தெரியாததால், இப்படியொரு அடையாளத்தையே மறந்து போயிருந்தேன். அந்தக்காயம் ஏற்பட்டபோது, ஓரிரு மணிநேர பயத்தையும், சில நாட்கள் வலியையும் எனக்குக் கொடுத்திருந்தது.

பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, என் விளையாட்டுத் தோழர்களைச் சந்திக்க ஓடினேன். அப்பா கொழும்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் வீட்டில் அம்மாவின் கடுமையான சட்டதிட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதி. பொதுவாக நான் வெளியில் சென்று விளையாடுவதை அம்மா விரும்புவதில்லை என்பதால், பலத்த கெடுபிடியுடனேயே எப்போதாவது அதற்கான அனுமதியை பெற வேண்டியிருந்தது. அதுவும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில்.

சரியாக மாலை ஆறுமணிக்கு அம்மாவின் ஊரடங்கு அமல்படுத்தப்படும். அப்போது நான் வீட்டில் நிற்க வேண்டும், விளையாட்டில் தோழர்களுடன் ஏற்படும் பிரச்சினை எதுவானாலும் நான் அவற்றை வீட்டிற்கு கொண்டுவரக்கூடாது என்பவை அவற்றில் முக்கியமானவை. ஆனால் என்மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், சந்தேகத்திற்கு அடிப்படையான தகவல்கள் போன்றவற்றுக்கு காலதாமதமற்ற கடுமையான நடவடிக்கையும், காலவரையற்ற தடைச்சட்டமும் உண்டு. அப்போதெல்லாம் மோதலின் ஆரம்ப கட்டத்திலேயே ‘ஒ..’ வென்று அபாயச்சங்கை முழங்கி, பக்கத்து வீட்டுஅக்காக்களிடம் ஆதரவு கோருவதை என் ராஜதந்திர ரீதியான நடவடிக்கையாக வைத்திருந்தேன். அது எப்போதும் நல்ல பயனைக் கொடுப்பதாக இருந்தது. 'ஒப்பரேசன் லிபரேசன்' நடவடிக்கையின்போது திடீரென ஒருநாள் 'மிராஜ்' வந்ததே, அதேபோல பறந்து வருவார்கள்.

அன்று ஐஸ்போல் விளையாடிக் கொண்டிருந்தோம். பெயரைத் தவிர விளையாட்டில் ஐசுக்கும், பந்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஒருவர் கண்களைப் பொத்திக் கொண்டு ஒன்றிலிருந்து, ஐம்பதுவரை எண்ணிக கொண்டிருக்க மற்றவர்கள் ஒளிந்துகொள்வது. ஒளிந்திருப்பவர்களை ஒவ்வொருவராகக் கண்டுபிடித்தபின் மீண்டும் தொடங்கும். இப்போது முதலில் கண்டுபிடிக்கப்பட்டவர், கண்களை மூடிக் கொள்ள மற்றவர்கள் ஒளிந்துகொள்ள - இப்படியே தொடரும். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. தோழி ஒருத்தி கண்களை மூடிக் கொண்டு வழக்கத்தைவிட வேகமாக எண்ணத் தொடங்கினாள். நாங்கள் தலைதெறிக்க ஓடினோம். பாருங்கள், தோழிகள் எப்போதுமே இப்படித்தான் இருக்கிறார்கள்.

என்முன்னால் ஓடிக்கொண்டிருந்த நண்பன் திடீரெனத் தடுக்கி விழ, அவன்மீது நான் தடுக்கி, தடுமாறி எதிரிலிருந்த சதுரத் தூணின் விளிம்பில் மோதி, சற்று நேரம் எதுவும் புரியவில்லை, வலிக்கவுமில்லை. கண்கள் மின்னியது. லேசாக இரத்தம்கசிய, ‘வீட்டுக்கு எப்படிப் போவது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனது நல்ல நேரம். அன்று அப்பா கொழும்பிலிருந்து விடுமுறையில் வரும் நாளாக இருந்தது. தெருமுனையில் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தேன்.

தூரத்தில் அப்பா வருவது தெரிந்ததும் ஓடிச்சென்று அப்பாவிடமிருந்து சிறு பையொன்றை வாங்கி தொழில் மாட்டிக் கொண்டே கூட நடந்தேன். ‘குழந்தைகள் ஓடி விளையாட வேணும், விழுந்து காயம் பட வேணும்’ என்பது அப்பாவின் கொள்கை. கொள்கையின்படி வாழ்ந்ததில், அவரிடமும் சில விளையாட்டுக்காயங்கள். அதைவிட தன் இளம்வயதில் கிரிக்கட் விளையாடும்போது, பற்றைக்குள் பந்தை எடுக்கப் போய் கையில் பாம்பிடம் கடிவாங்கியிருந்தார். ‘பாம்பு கடித்த காயம்’ தெரியவில்லை. சிகிச்சையளிக்கும்போது வைத்தியர் கத்தி கொண்டு சுரண்டியதில் ஒரு பாம்புக் குட்டி அளவிற்கு கையில் அடையாளம். மேலதிக விபரமாகச் சொல்லியிருந்தார், பாம்பு கடித்தது அவ்வளவாக வலிக்கவில்லையாம். சிகிச்சைதான் பயங்கரமாக வலித்ததாம்.



வ்வொரு காயங்கள், தழும்புகளுக்குப் பின்னாலும் அழகான எமது பால்யகால நினைவுகள், சுவாரஷ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. அது அன்றைய பொழுதில் பெருந்துன்பமாக இருந்து, பின்னர் அவை பற்றிய நினைவே இல்லாது போயிருக்கும். உண்மையில் அப்படி ஒரு காயம் இருப்பதையே மறந்து போயிருப்போம். யாரோ நெருங்கிய ஒருவர் கேட்கும்போது, அநேகமாக ஒரு குழந்தை கேட்கும்போது, மனம் பின்னோக்கிப் பயணிக்கும்.

ஒருமுறை பள்ளி விடுமுறையின்போது நண்பர்கள் எல்லோரும் விளையாடிவிட்டு வந்து, எங்கள் வீட்டு முற்றத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். சமீபத்தில் நடந்துமுடிந்த கிரிக்கெட் போட்டி பற்றிச் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த கமலன், பண்டா அடித்த சிக்ஸ் பற்றி ஆக்சன் காட்டினான். அவன் காற்றில் மட்டைடைச் சுழற்ற 'டொக்' சத்தம் எப்படி வந்ததென்று அதிர்ந்து திரும்பினோம். டினேஷ் கண்ணைப் பொத்திக் கொண்டிருந்தான். புருவத்தில் அடிபட்டு சதை பிய்ந்து தொங்கியது. மூன்று தையல் போடப்பட்டது. இப்போது அவன் சகோதரியின் குழந்தையோ, அல்லது ஓர் மருத்துவனான அவனிடம் வரும் ஓர் குழந்தையோ  அவனிடமும் கேட்கலாம். ஒருவேளை சற்றே பெரிய காக்கா கொத்தியதாகக் கூட அவன் சொல்லல்லாம்.

என் பெரியப்பாவின் காயத்துக்குப் பின்னால் என்ன கதையிருக்கும்? ஒரு மாங்காய் திருடிய கதை இருக்கலாம். ஒரு கிட்டிப்புள் விளையாடிய கதை இருக்கலாம். நம் எல்லோரிடமும் நாம் மறந்துபோய்விட்ட ஒரு சிறுவயதுக் காயத்தின் அடையாளம், தழும்பு இருக்கும். என்போலவே பலருக்கும் புருவத்தில் ஒரு காக்கா கொத்திய காயம் இருக்கலாம். அதன்பின்னே ஒரு கதை இருக்கும். சுவாரஷ்யமான காரணம் இருக்கும், காக்காவைத் தவிர!

சிறு வயதில் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் மட்டும் அப்படியே தழும்புகளாக, நிரந்தர அடையாளங்களாக மாறிவிடுவது ஆச்சரியம்தான். ஒருவேளை வளர வளர அவதானமாக இருக்கப் பழகிவிடுவதால் காயங்கள் மனதில் மட்டுமே அதிகமாக ஏற்படுகின்றன போலும். 

யாருக்கும் தெரியாத,  யாருமே கவனிக்காத, எந்தக் கேள்வியும் கேட்காத மனதின் காயங்களை நாமே கேள்வி கேட்டு, ஆறவிடாது அப்படியே புதிதாகப் பேணிக் கொள்கிறோம். ஏதோவொரு சமயத்தில் அந்த வலியையும், அதன் வீரியத்தையும் முதன்முறையாக ஏற்படுவது போன்றே உணர்ந்து கொள்கிறோம். மனதின் காயங்களையும் சிறு வயதின் விளையாட்டுத் தழும்புகள் போலவே சிறு புன்னகையுடன் கடந்து செல்ல முடிந்தால், முயன்றால் நன்றாயிருக்குமல்லவா?


Friday, April 12, 2013

பயணம்...



ர் நீண்ட பேருந்துப் பயணத்தின்போது, ஆரம்பத்திலேயே தூங்கிப் போய்விடுபவர்களைப் பார்க்கும்போது, சற்றே பொறாமையாக இருக்கும். அது ஒரு திறமைதான். அதிலும் எந்தத் தயக்கமோ, தயவு தாட்சண்யமோ இன்றிப் பக்கத்திலிருப்பவர் தோள்மீது சாய்ந்து தூங்குவதென்பது ஒரு வரம். வரம் அபூர்வமாகவே கிடைக்குமாயினும், நம்மிடையே ஏராளமான அபூர்வப் பிறவிகள் இருக்கிறார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்துகொள்ள முடிகிறது.

திருகோண மலையிலிருந்து யாழ் செல்ல வேண்டியிருந்தது. அதற்குச் சொகுசுப் பேரூந்து ஏதுமில்லாததால் சோகத்துடன் அமர்ந்துகொண்டேன். இரவு பத்து மணி. இருக்கைகள் அனைத்தும் பயணிகளால் நிறைக்கப்பட்டு புறப்பட்டது. எந்த மேலதிக வசதிகளும் இல்லாத ஒரேயொரு பேரூந்துதான் அந்த நேரத்திற்கு! சரிந்து அமரவும் முடியாத இருக்கைகள்.  அதுவும் வழமைபோல இல்லாமல் ஒருபக்கத்தில் இரண்டு, மற்றையதில் மூன்று பேர் அமரும்படியான இருக்கை அமைப்பு வேறு!  எனக்கருகில் ஓர் நடுத்தரவயது மனிதர், அடுத்து அவர் மனைவி. அங்கிள் சிநேகமாகப் புன்னகைத்து, தன்னைப்பற்றி, என்னைப்பற்றி அளவளாவிக் கொண்டார்.

அரைமணி நேரத்தில் ஆரம்பித்தது அவஸ்தை. அவர் தூங்க ஆரம்பித்தார். அதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை. என்ன, என் தோள்மீது சாய்ந்து தூங்க அரம்பித்திருந்தார். நொந்துபோய் அமர்ந்திருந்தேன். ஆனாலும் அவர் மிகவும் நல்லவராக, நாகரீகமானவராக இருந்தார். அது கூடச் சில சமயங்களில் மற்றவர்களுக்குத் தொல்லையாக அமைந்துவிடுகிறது. தனது செயலுக்கு அவ்வப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அட! இவ்வளவு அவஸ்தையையும் சமாளித்து லேசாகத் தூங்க ஆரம்பித்த என்னை தட்டி எழுப்பி ஒருமுறை சொறி தம்பி சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!


வ்வொரு பயணங்களும் விதவிதமான அனுபவங்களைக் கொடுக்கின்றன. ஒரு நெடுந்தூரப் பயணம் கொடுக்கும் கலவையான அனுபவங்கள் அலாதியானவை. 

இடைவிடாது பேசிக்கொண்டே வரும் சக பிரயாணி, அபூர்வமாக வாய்க்கும் ஒத்த ரசனை கொண்ட தற்காலிக நண்பர், தவறுதலாக இருக்கை மாறி அமர்ந்து அதுபற்றி உணராமலே 'நியாயம்' பேசுபவர்கள், தூக்கம் வரும்வரை நாட்டு நிலைமை பற்றித் தீவிரமாகக் கவலைப்படுவோர், உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டல் பற்றிக் கவலைப்பட்டுவிட்டு, சத்தமாகக் குறட்டைவிட்டுத் தூங்கி அடுத்தவர் தூக்கத்தைச் சுரண்டுபவர்கள், பக்கத்திலிருப்பவர் தோள்மீது சாய்ந்து உறங்கும் 'தனிமனித சுதந்திர ஆர்வலர்கள்' , எப்போதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே, எப்போது வாந்தி எடுப்பாரோ எனக்கிலியை ஏற்படுத்தும் பயங்கரவாதிகள் எனப்பல சுவாரஷ்யமான மனிதர்களை சந்திக்க வைக்கின்றன. இனிமையான தருணங்கள். இமசையான அனுபவங்கள் எனக் கொட்டிக் கிடக்கின்றன. ஓர் தேர்ந்த எழுத்தாளனுக்கு ஒவ்வொரு பயணமும் ஒரு சிறுகதைக்கான  கருவினைக் கொண்டிருக்கின்றன.

ஒரு நெடுந்தூரப் பேருந்துப் பயணத்தின் போது மனம் தனது பயணத்தைத் தனியாக ஆரம்பித்து விடுகிறது. மிக வேகமாக வருஷங்கள் கடந்து பின்னோக்கிச் சென்று விடுகிறது. அநேகமாகப் பால்யகாலத்துக்கு அழைத்துச் சென்று விடுகிறது. சின்னவயது முதல் வாழ்க்கையில் கடந்து சென்ற மனிதர்கள் பலரை நினைவு படுத்துகிறது. முதன்முதல் பயணித்த ஒரு நீண்ட பேரூந்துப் பயணத்தை, ரயில் பயணத்தை ஞாபகப் படுத்துகிறது. இழந்துவிட்ட உறவுகள், தவறவிட்ட சில தருணங்கள் என மனத்தைக் கனக்க வைத்துவிடுகின்றது. ஒரு நீண்ட பயணத்தினால் ஏற்படும் மிதமிஞ்சிய களைப்பு என்பது உண்மையில் மனத்தின் பாய்ச்சலால் ஏற்படுவதுதானோ?


சில பயணங்கள் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை மாற்றி விடலாம். அதுவே ஒரு வரலாற்று நாயகனை உருவாக்கலாம். ஏதோ ஒரு திட்டமிடலுடன் ஆரம்பித்த ஒரு பயணம், பிற்காலத்தில் சற்றும் எதிர்பார்க்காத ஒரு பெரிய மாற்றத்தை அவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கே ஏற்படுத்தலாம். அப்படித்தான் 'எர்னஸ்ட்டோ குவேரா' என்ற இருபத்துமூன்று வயது இளைஞனும், அவரது நண்பரும் ஓர் உல்லாசப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் ஐந்தாயிரம் மைல் தூரத்தை நாலரை மாதத்தில் கடப்பதாக திட்டமிடுகிறார்கள். உல்லாசம்,பொழுதுப்போக்கு மற்றும் முடிந்த வரை தம் இளமைக்குத் 'தீனி' போடுதல் என்பவற்றை மட்டும் நோக்கமாகக் கொண்ட அந்தப் பயணம் ஆரம்பிக்கப்படுகிறது. பயணம் படிப்படியாக அவர்கள் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. பெருவின் மச்சு பிச்சு (Machu Picchu) என்ற அழிக்கப்பட்ட Incan இனத்தின் வரலாற்றுப் பெருநகரம், வாழ்ந்து மறைந்துபோன அவ்வினம் அவர்கள் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த உலகத்துக்கு ஓர் 'சே குவேரா!' கிடைத்தார். The Motorcycle diaries (2004) என்கிற Argentina திரைப்படம் இதுபற்றி விரிவாகப் பேசுகிறது.


திடீரென வாய்க்கும் திட்டமிடப்படாத பயணங்கள் வாழ்வு முழுமைக்கும் மறக்க முடியாதவையாக அமைந்துவிடுகின்றன.அது எம்போன்றவர்களுக்கு புதிதல்லவே! அப்படியான என் முதல்பயணம் ஏதுமறியாத சின்னஞ்சிறு வயதில் ஏற்பட்டது. தூக்கத்திலிருந்து திடீரென கலைக்கப்பட்ட அந்த அதிகாலைப் பொழுதில், அம்மாவின் பதற்றம் நிறைந்த முகம் கலங்கலாகத் தெரிந்தது. என்னைத் தோளில் அள்ளிப்  போட்டுக் கொண்டு வேகமாக நடந்ததும், அயலவர், சொந்தங்களையும் அதே போல கண்டேன். எங்க போறம்?”,  “இண்டைக்கு ஸ்கூல் இல்லையா?” போன்ற என் கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லவில்லை. என் பள்ளித் தோழர்கள், தோழிகள் சிலரையும் பார்த்தபோது உண்டான உறசாகமும், மகிழ்ச்சியும் மெல்ல மெல்ல வடிந்து போனது. வழமைக்கு மாறான சத்தங்களுடன் ஆரம்பித்த அந்த விடிகாலைப் பொழுது, வழமைக்கு மாறான விபரீதமான நாளொன்றின் ஆரம்பமாக இருந்தது. பின்பு அதுவே வழமையாகிப் போன ஒரு நெடிய பயணத்தின் ஆரம்ப நாளாக இருந்தது பின்நாட்களில் புரிந்துபோனது.


டம்பெயர்வு என்பது ஒரு விரும்பாத பயணம். அது கொடுக்கும் அனுபவங்கள் நம்மில் பலருக்கும் வாய்த்திருக்கிறது. அந்த அனுபவங்களை, அதன் தாக்கங்களை அன்றாட வாழ்வில் கண்டு கொள்ள முடிகிறது. பொதுவாக யாழ்ப்பாணத்தில் இருந்த காலப்பகுதியில் ஒரு தொலைக்காட்சியோ அல்லது வேறு எந்த உபகரணங்களோ வாங்கினால் அது அடைக்கப்பட்டு வந்த பெட்டியை யாரும் எறிந்துவிட  விரும்புவதில்லை. "எப்பவாவது தேவைப்பட்டிச்செண்டா..." என்று இழுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அந்தத் தேவை என்னவென்பதை சிலர் வெளிப்படையாகவே "தச்சமயம் ஓட வேண்டி வந்தாலும்..." நேரடியாகவே கூறுவார்கள். யாழ்ப்பாணத்திலாவது பரவாயில்லை. கொழும்பு வந்த பிறகும் அதுவே தொடர்கிறது. வாடகை வீட்டிலிருந்து இன்னோர் வாடகை வீட்டுக்கான பயணத்தின்போது உதவினாலும் அடிப்படையில் "எப்பவாவது ஓட வேண்டி வரும்" என்பது மனதில் ஆழப்பதிந்துவிட்டது. அது மாறுவதாகவும் தெரியவில்லை.

சில பயணங்கள் வாழ்வு முழுமைக்கும் மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுத்துவிடுகிறன. சில அதுவரை சந்தித்திராத, அறிமுகமில்லாத மனிதர்களின் அன்பினை உணர வைத்துவிடுகின்றன. சில நம் கூடவே இருக்கும் மனிதர்களின் அதுவரை பார்க்காத வேறுபட்ட முகங்களை இனங்காட்டிச் செல்கிறன. ஒரே இன மக்களின், ஒரே பிரதேச மனிதர்களின் மக்களின் மாறுபட்ட குணவியல்புகளைச் சொல்கின்றன. ஒரு குறுந்தூரத்திற்கான நெடிய பயணம் அது. ஐந்து கிலோமீட்டருக்கும்  குறைவான தூரத்தைக் கடக்க பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நகர்ந்து சென்ற அந்த ஒரே ஒரு பயணமே பலருக்கு வாழ்வை உணர்ந்துகொள்ளப் போதுமானதாக இருக்கிறது. எவ்வளவு பேரானாலும் இன்முகம் காட்டி வரவேற்று, ஆதரவளித்த சக மனிதர்கள் பலரையும், தாகத்துக்கு நீர் கொடுக்க மறுத்த சில 'நல்ல' மனிதர்களையும் அறிமுகம் செய்து வைத்தது.


வாழ்க்கை ஓர் பெரும்பயணம். அது சிலசமயம் தெளிந்த நீரோடையில் அமைதியாக பயணிக்கும் அழகிய படகு போல செல்கிறது. சிலவேளைகளில் காட்டாற்று வெள்ளம்போல் அலைக்களித்துச் செல்கிறது. மேலும் சில புயலில் அகப்பட்டுக் கொண்ட படகுபோல் இடம்தெரியாமல் தொலைந்துபோகிறது!  ஏதோ ஓர் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி எப்போதும் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம். சிலர் இலக்கை அடைகிறார்கள். சிலர் திசை மாறி விடுகிறார்கள். சிலர் பாதியிலேயே தொலைந்து போகிறார்கள். இனி எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலையில் வாழ்வை அதன் போக்கிலேயே வாழ்ந்து வருபவர்கள் பலர்.

வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு கனவோடு பயணிப்பவர்கள் இருக்கிறார்கள். ஏராளமானோர் ஒரே கனவை இலக்காகக் கொண்டு வெவேறு பாதைகளில் பயணித்திருக்கிறார்கள். கனவுகளுடனேயே வாழ்ந்து, அதற்காகவே வாழ்ந்து, எதுவும் நிறைவேறாமல் அந்தக் கனவுகளோடும் , ஏக்கங்களோடுமே தொலைந்தும் போயிருக்கிறார்கள். சக பயணிகளாலும் தொலைந்து போயிருக்கிறார்கள். ஒரு தலைமுறையின் நிறைவு பெறாத பயணத்தை அடுத்த தலைமுறையும் தொடரலாம்.


கனவுகளைச் சுமந்துகொண்டு, நிஜங்களை சகித்துக் கொண்டு, நிம்மதியைத் தேடி, வெற்றியைத் தேடி, அங்கீகாரத்தைத் தேடி, அடையாளங்களை நிறுவிக் கொள்வதற்கு வாய்ப்புகளைத் தேடி, அமைதியைத் தேடி, பாதுகாப்பைத் தேடி வாழ்வின் இறுதிவரை பயணம் தொடர்கிறது. திசை மாறலாம், குறிக்கோளை அடையமுடியாது போகலாம், பாதியில் தொலைந்து போகலாம். எனினும் நம்பிக்கையுடன் பயணிப்போம்!

( 'வானம் தாண்டிய சிறகுகள்' என்ற தொடருக்காக பத்திரிகை ஒன்றில் எழுதியது. )

Friday, April 5, 2013

தாய்நிலம்!


"தம்பி என்னைத் தெரியுமா?" மெல்லிய உடல்வாகுடன் இருந்த அந்த அக்கா சிரித்துக் கொண்டே கேட்டார். பக்கத்தில் இன்னொரு வயது முதிர்ந்த பெண்மணி.

யோசித்துக் கொண்டே பார்த்தேன்.

"நீங்க அப்ப சின்னப்பிள்ளை. ஞாபகமிருக்காது. உங்கட வீட்டுக்குக் கிட்டதான்" மீண்டும் அவரே சொன்னார்.

"அப்பிடியா?"

"ஓம் உங்கட வீட்ல டீ.வி எல்லாம் பாக்க வருவம். இப்ப கொஞ்சம் முதல் அப்பா அம்மாவைக் கண்டு கதைச்சனான்"

அப்படி யாரையும் நினைவில் இல்லை. யாராயிருக்கும்? யோசித்துக் கொண்டே, "உங்க பேர் என்ன?" - கேட்டேன்.

"உங்களுக்கு ஞாபகமிருக்காது தம்பி"

"சொல்லுங்க"

அவர் நம்பிக்கையில்லாமல் சிரித்துக் கொண்டே, "ரதீஸ்வரி"

"ஓ..! நீங்களா? எனக்குத் தெரியும். மகேஸ் அக்கா எங்க?" அவருடைய அக்கா பற்றியும் விசாரித்தேன்.

கொஞ்சம் பேசிக் கொண்டிருந்துவிட்டு போகும்போது மகிழ்ச்சியுடன் சொன்னார். "தம்பிக்கு எல்லாரையும் ஞாபகம் இருக்கு".

அதிர்ச்சியாக இருந்தது. ரதீஸ்வரி அக்காவா இது? ஆளே அடையாளமே தெரியாமல் மெலிந்து போய்.. சற்று நேரம் அவர் போவதையே  திரும்பி, பார்த்துக் கொண்டிருந்தேன்.

ல்லாமே மாறிப்போய் விட்டிருந்தது. சரியாக இருபத்திரண்டு வருடங்கள். நான் பிறந்து வளர்ந்த, சின்னஞ்சிறு வயதில் விட்டு விலக்கப்பட்ட என்தாய்நிலம் அவ்வளவு அந்நியமாக தெரிந்தது. பழக்கப்படுத்திக் கொள்ள நினைவுகளின் அடுக்குகளிளிருந்து தேடிக் கொண்டே மெதுவாக நடந்துகொண்டிருந்தேன்.

சொந்த மண்ணில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு நாடோடிகளாக வாழும் அனுபவத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்ததுண்டா? சின்னசிறு வயதில் மட்டுமே பார்த்த ஊரின் எந்தக் காட்சிகளையும் கற்பனை செய்து பார்க்க முயன்று, முடியாமல் நினைவுகளால் மட்டும் உணர்ந்திருக்கிறார்களா? சிறுவயதில் கேட்ட பாடல்கள் அடிமனதில் இருக்கும் சிறுவயது ஞாபகங்களை எப்போதாவது கிளறிவிட, தூக்கம் தொலைந்ததுண்டா? 

மீண்டும் பல வருடங்களின் பின் தாய்மண் திரும்பும்போது, அது தன் பழைய அடையாளங்களைத் முற்றிலும் துறந்து, அந்நியமாய் தெரியும்போது, என்ன தோன்றும்? முதன் முதலாக சிறுவயதில் நீங்கள் நடைபயின்ற வீதியில் மீண்டும் நடந்து செல்கையில், பள்ளிக்கூடம், சின்னவயது நண்பர்களுடன் விளையாடி, உருண்டு, புரண்ட கோயில் மணல் வீதி எல்லாம் பார்க்கும்போது, பழைய நினைவுகள் மெதுவாக மீட்டப்படுவதை உணர்ந்ததுண்டா?


தோ நான் சென்றுகொண்டிருக்கும் இந்த ஒழுங்கை எனக்கு முற்றிலும் புதிதானதுதான். சின்ன வயதில் ஒரு முறை கூட தனியாக இங்கே நடந்ததில்லை. ஆங்காங்கே ஒரிரு புதிய வீடுகள் கட்டிக் கொண்டும், காணிகளைத் துப்புரவு செய்துகொண்டும் இருந்தவர்கள் ஒரு கணம் நிறுத்தி, அந்நியனான என்னை அடையாளம் கண்டுகொளும் முயற்சியில் கவனிக்கிறார்கள்.

அவர்களுக்கு என் அப்பாவைத் தெரிந்திருக்கும். சிறுவயதில் என்னைக் கூடத் தெரிந்திருக்கலாம். இதோ கேற்றிலிருந்து நீண்ட சிமெண்ட் மேடை நடைபாதை போடப்பட்ட அடையாளம் மட்டும் தெரிகிறதே, ஒரு பெரிய வீடு இருந்ததற்கான எந்த அடையாளமுமின்றி சிறு கற்குவியல் மட்டுமே எஞ்சியிருக்கிறதே இது? இது ராசமணி அன்ரி வீடல்லவா? பலாலி இராணுவத் தளத்திலிருந்து முதலாவது ஷெல் வந்து விழுந்ததும், அந்தச் சுற்றாடலிலுள்ளவர்களின் முதற்கட்ட 'பாதுகாப்புடன் கூடிய பின்னகர்வு நடவடிக்கை' அந்த வீட்டிற்குச் செல்வதாகவே ஒரு காலத்தில் அமைந்திருக்கும். அந்த வீடு கற்குவியலாகக் காட்சியளித்தது.

மோட்டார்சைக்கிளில் மீன் விற்றுக் கொண்டிருந்தவரிடம், "அண்டைக்குத் தந்த மீன் சரியில்ல! பச்சத்தண்ணி மாதிரி இருந்திச்சு" 'கஸ்டமர் கொம்ப்ளெயிண்ட்' குரல் ஒன்று நடந்து வந்து கொண்டிருந்தது  கேட்டது.. படலையைத் திறந்துகொண்டு வந்த குரலின் சொந்தக்காரர் நடுத்தர வயதானவராக இருந்தார். ஆங்காங்கே தலை நரைத்திருந்தாலும், என்றும் மாறாத அதே புன்னகையில் அடையாளம் காட்டினார் பஞ்சண்ணை!

"தம்பி உங்களைத் தெரியும் எனக்கு ஞாபகமிருக்கு! ம்ம்ம்...யாரோட மகன்?"
"கிருபாகரன்"
"ஒமோம் ! எப்பிடித் தம்பி... இப்பதான் இங்கால வாறீங்கள் போல"


ரு சிறிய வைரவர் கோவிலைக் கடந்தபோது, வழக்கம்போல எந்த மதத்துக் கோவிலைக் கண்டாலும் செய்வதுபோல கை அனிச்சையாக ஒரு சல்யூட் வைத்தது. ஏதோ தோன்றியதும் இரண்டடி பின்னகர்ந்தேன். அந்தச் சிறிய வைரவர் சிலை அப்படியே ஞாபகத்தில் இருந்தது. ஒரு குழந்தை நிற்பதுபோல! கண்கள் புருவங்கள், அழகான புன்னகை. ஒரு குழந்தையை மனதில் கொண்டே அதனை உருவாக்கியிருக்கலாம்.

சற்றே தூரத்தில் ஒருவரிடம் அப்பா பேசிக்கொண்டிருந்தார். கறுத்து, தாடி வளர்த்திருந்த அவரைக் காட்டி தெரியுமா எனக் கேட்டார். அருகில் சென்று "ஆனந்து?" என்றேன். ஆனந்துக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. தன் மனைவி, குழந்தையை அறிமுகப்படுத்தி வைத்தார். என்னை விட ஒரு வயது மூத்தவர். அவர் அண்ணன், தம்பி பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் அங்கு வந்த ஒரு பெரியவர். என்னைப் பற்றிக் கேட்டார். அப்பா பெயர் சொன்னதும் "உங்களுக்கு என்னைத் தெரியாது. அப்பாட்ட கேளுங்கோ தம்பி" என ஆரம்பித்து நிறையப் பேசிக் கொண்டிருந்தார். என்னுடன் ஆரம்பப் பாடசாலையில் படித்த சிவாகரனின் தந்தை அவர் எனத் தெரிந்துகொண்டேன். 

"அவன் இப்ப பிரான்சில தம்பி! வீடு உடைஞ்சவங்களுக்கு கட்ட காசு  தாறேண்டு கூப்பிட்டுப் பதிஞ்சவங்கள் தம்பி. பிறகு சொன்னாங்கள் உங்களுக்கு எதுக்கு? ஐரோப்பாவில இருந்து காசு வருது எண்டுறாங்கள். நாஞ்சொன்னன் தம்பியவ..இல்லையெண்டா முதல்லயே சொல்லி, எங்களை மீட்டிங் ஒண்டுக்கும் கூப்பிடாதேங்கோ. சும்மா நேரத்த மினக் கெடுத்தி.." அவரே தொடர்ந்தார்.

"தம்பி இதையெல்லாம் நம்பி இல்ல. நாங்கள் யாரையும் நம்பியே வீடு கட்டினனாங்கள்? எங்கட பிள்ளையள வளர்த்தனாங்கள்? படிப்பிச்சுப் பட்டதாரி ஆக்கினனாங்கள்? எல்லாம் இந்த மண்ணில பாடுபட்டு உழைச்சதுதானே? இந்த மண்தான் எல்லாமே. இதுமட்டும் போதும்!"


கூரை அகற்றபட்டு, உடைந்து, சிதைந்து போயிருந்த எங்கள் வீட்டில் தொலைந்துபோன எதையோ தேடுவதுபோல சுற்றிக் கொண்டிருந்தேன் -வெளிப்புறமாக. கூரை திறக்கப்பட்டு பாதி உடைந்த சுவர்த் தடுப்புக்கு எது வெளிப்புறம், உட்புறம்? வீட்டின் முற்றம் இருந்த இடத்தில், சுற்றிவர என எங்கும் செடிகள் முளைத்திருந்தன. இடையிடையே மண் திட்டுக்களில் நான் அந்த வீட்டில் பிறந்து வளர்ந்ததற்கான ஏதாவது ஒரு சின்ன அடையாளம் இருக்குமா எனத் தேடத் தோன்றியது.  ஒரு சிறு விளையாட்டுக் கார்ச்சில்லு, ஒரு ‘ரெனோல்ட்‘ பேனா மூடி, ஒரு பிய்ந்துபோன ரப்பர் செருப்பின் பாகமோ, உடைந்த சிறு விளையாட்டுப் பொருளோ, பெருமளவில் சேகரித்த 'எட்னா சொக்கலேட்' ஸ்டிக்கர் ஒன்று, கோயில் திருவிழாவில் வாங்கி விளையாடிய பறக்கும்தட்டு இப்படி எதுவாகினும் கிடைக்குமா?

நான் இருந்ததற்கான எந்த ஒரு சிறு அடையாளமாவது என் சிறுவயது நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு நினைவுச் சின்னத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு வெடித்து நெளிந்த மண் நிரம்பியிருந்த சில்வர் டம்ளர் ஒன்று கிடந்தது. ஓரிரு அந்தக்காலத்தைய 'லக்ஸ்பிறே' பால்மாவின் மஞ்சள் நிற பைக்கற் துண்டுகள் கிடந்தன. எனக்கான பிரத்தியேக அடையாளங்கள் ஏதுமில்லை. ஒருவேளை கொஞ்சம் மண்ணைக் கொத்திப் போட்டால் ஏதும் கிடைக்குமோ எனத் தோன்றியது. எப்போதோ நீங்கிச் சென்ற சொந்த மண்ணில், வீட்டில் தான் வாழ்ந்ததற்கான ஏதாவது ஓர் அடையாளத்தைத் தேடுவது மனிதர்கள் ஒவ்வொருவருக்குமான இயல்புதானே!

சிறுவயதில் விளையாடும்போது பத்திரமாக வைப்பதாக நினைத்து மறைத்து வைப்போம், பின்னர் நாங்களே அதை மறந்து போய்விடுவோம். இன்னோர் சந்தர்ப்பத்தில் வேறொரு பொருளைத் தேடும்போது எதிர்பாராமல் கிடைத்துவிடும். இது எல்லோருக்கும் வாய்த்த அனுபவமல்லவா? நானும்கூட எதிர்பாராமல், ஏதாவது கிடைக்குமா எனத் தேடினேன்.

ன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி நடைமுறையிலிருக்கும் சீனா. Puyi, அருங்காட்சியகத்தின் வாயிலில் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்கிறார். கண்முன் மிகப்பிரமாண்டமான அரண்மனை. படை வீரர்கள் அணிவகுத்து நிற்கும் மிகப்பெரிய மைதானம் வெறுமையாக இருக்கிறது. பிரதான அரசவைக்குச் செல்லும் நீண்ட படிக்கட்டுகளில் ஏறிச்செல்கிறார். ஒரு முறை திரும்பிப் பார்க்கிறார்.

தனிமையும், இருளும் சூழ்ந்த மண்டபத்தில் இருக்கிறது தங்கத்தாலான சிம்மாசனம். அவர் முகத்தில் சிறு புன்னகை. கயிற்றுத் தடுப்பைத் தாண்டி, சிம்மாசனத்தின் படிகளில் ஏறுகிறார்.

"நில்லுங்கள், அங்கே போக அனுமதியில்லை" ஓர் சிறுவன் வருகிறான்.
"யார் நீ?"
"நான் இங்கேதான் இருக்கிறேன். காவலாளியின் மகன்"
"நானும் இங்கேதான் இருந்தேன். இதில்தான் அமர்ந்திருந்தேன்"
"யார் நீங்கள்?"
"நான் சீனாவின் பேரரசனாக இருந்தேன்"
"நிரூபியுங்கள்" என்கிறான் சிறுவன்.

ஒரு குழந்தைபோல் உற்சாகமாகி, புன்னகையுடன் சென்று சிம்மாசனத்தில் அமர்கிறார். முகத்தில் மகிழ்ச்சி பொங்க, அப்படியே எட்டி, கீழ்ப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏதோ ஒரு பொருளை எடுத்துத் தன் சட்டையில் துடைத்து அவனிடம் கொடுக்கிறார். அது வெட்டுக்கிளி வளர்க்கும் ஒரு சிறிய மரக்கூடு. குழந்தைப்பருவத்தில் பேரரசனாக வாழ்ந்தபோது ஓர் படைவீரன் கொடுத்தது. அவர் விளையாடும்போது மறைத்து வைத்தது. The last Emperor படத்தில் இடம்பெற்ற காட்சி இது.

ன் சொந்த நாட்டை இழந்து, பிற தேசங்களில் அடையாளங்களைத் துறந்து, அலைந்து கொண்டிருக்கும் நாடோடி இளவரசன் போலவே  சுற்றித் திரிகிறோம். சொந்த மண் ஒவ்வொருவரையும் மனதளவில் மண்ணின் மைந்தனாக மட்டுமல்ல தன் தாய்நிலத்தின் மன்னனாகவே உணர வைக்கிறது.

எங்கு சுற்றித் திரிந்தாலும், தேசங்கள் கடந்து வாழ்ந்தாலும் எம்மையறியாமலே சொந்த மண் பற்றிய நினைவுகளைச் சுமந்து கொண்டே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு பண்டிகைக்கால நாளின் காலைப் பொழுதோ, ஒரு பால்யகால புகைப்படமோ, ஏதோ ஒரு சோப் வாசனையோ திடீரென தாய்நிலம் பற்றிய நினைவுகளில் சடுதியாக மூழ்கடித்து மனதைக் கனக்கச் செய்துவிடுகிறது.

ஊரும் நம்மைப் போலவே தன் இயல்பான எந்த அடையாளமுமின்றி கனத்த மௌனத்தைப் போர்வையாக்கி, உறங்கிக் கொண்டிருக்கிறது.

( 'வானம் தாண்டிய சிறகுகள்' என்ற தொடருக்காக வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதியது. )

Monday, February 25, 2013

பிள்ளையக்கா!



பிள்ளையக்காவா அது? மனம் சற்றே துணுக்குற்றது. அவர் இறந்துவிட்டதைப் புத்தி ஞாபகத்துக்கு கொண்டுவந்தது. முற்றாக நரைத்த தலை. கருப்பு பிரேம் போட்ட தடித்த மூக்குக் கண்ணாடி. கையில் குடை. அச்சு அசல் அவரைப் போலவே இருந்தார் ஒரு மூதாட்டி. ஆனால் பிள்ளையக்காவை மூதாட்டி எனச் சொல்ல முடியாது. அது அவரை அவமானப்படுத்துவதைப் போன்றது. வயது முதிர்ந்த இளைஞி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

பிள்ளையக்காவுக்கு ஏன் அப்படியொரு பெயர் வந்தது எனத் தெரியவில்லை. சின்ன வயதில் என் அம்மா, அம்மம்மா, நான், இன்னும் சிறிய வாண்டுகளுக்கெல்லாம் அவர் பிள்ளையக்காதான்! சிங்கப்பூரில் பிறந்தவராம். சிறுவயதில் பர்மாவிலும் இருந்ததாகச் சொன்னார்கள். இளம் வயதிலேயே போரில் கணவனை இழந்துவிட்டார். பிள்ளைகள் கிடையாது. ஆனாலும் அவரைத் தாய் போல மதித்து, அன்புசெலுத்த ஏராளமானோர் யாழ்ப்பாணத்தில், கொழும்பில் ஏன் இந்தியாவில்கூட, சரியாகச் சொன்னால் உலகின் பலபாகங்களிலும் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

அவர் ஒரு தேசாந்திரி. கோயில்கள், உறவுகள் என்று மாறிமாறி பயணப்பட்டுக் கொண்டே இருப்பார். பெரும்பாலும் நடைதான். ஒரு நாளைக்கு பதினைந்து மைல் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பாரோ என்று எண்ணுமளவிற்கு நடந்து கொண்டிருப்பார். எரிக்கும் வெய்யிலில் கையில் குடையுடன், தன தடித்த மூக்குக் கண்ணாடியுடன் சற்றே மேல்நோக்கிய, கண்களைச்சுருக்கிய பார்வையுடன் சென்று கொண்டிருப்பார். கையினால் கண்களுக்கு நிழல் கொடுத்து, அடையாளம் தெரிந்து, சிறு சிரிப்புடன் பேசுவார். நடை, களைப்பு எந்த எரிச்சலையும் அவர் வெளிப்படுத்தியதில்லை. யாருடனும் சுடுசொல் பேசியதில்லை. எப்போதும் அவர் அடுத்த பயணத்துக்கான திட்டமிடல்களுடனேயே  வருவார். அவரை எந்த, நேரத்தில் எங்கே சந்திக்கலாம் என்பது யாருக்கும் தெரியாது. "விடியக் காலம பிளையக்கா வந்திட்டு எங்கயோ போச்சுது இன்னும் காணேல்ல"- என்று உற்றவர்கள் பேசுவது சாதாரணம். 

யாழ்ப்பாணத்தில் இந்திய ராணுவம் இருந்த காலப்பகுதி. இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் இருந்தது. அப்பா கொழும்பிலிருந்தார். பக்கத்துவீட்டு அக்காக்கள் எல்லோரும் எங்கள் வீட்டில்தான் தூங்குவது வழக்கம். எங்கோ தூரத்தில், எப்போதாவது கேட்கும் நாய்களின் குரைப்புச் சத்தம் தவிர்ந்த ஆழ்ந்த அமைதி கொண்ட அந்த இரவுகளில்,  மண்ணெண்ணெய் லாம்பில் மிக மெல்லிய சுடரை ஏற்றி வைத்துவிட்டு, கூடியிருந்து மெல்லிய குரலில் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பது வழமை. அவ்வப்போது பிள்ளையக்கா வரும்போதெல்லாம் களை கட்டும். எல்லோருக்கும் நடுநாயகமாக வீற்றிருந்து கதை சொல்லிக் கொண்டிருப்பார்.

ஏராளமான ஊர்கள் பற்றிய அனுபவங்கள், கதைகள் அவரிடம் இருந்தன. அடிக்கடி இந்தியா சென்று வருபவர் என்பதால் கோயில்கள் பற்றி, வித்தியாசமான கலாச்சாரப் பின்னணி கொண்ட புதிய மனிதர்கள், அவ்வப்போது பாஷை புரியாமல் அவஸ்தைப்பட்டு, பின்னர் நகைச்சுவையாகிவிட்ட சம்பவங்கள் எனப்பல.

பிள்ளையக்கா கடிதம் எழுதுவது ஒரு தனி சுவாரஷ்யம். எழுதுபவரை விட பார்ப்பவர்களுக்கு இன்னும் அதிகம். அவரே எழுதுவதை விட அழகான எழுத்தில் யாராவது எழுத வேண்டுமென விரும்புவார். அதுவும் தவிர ஒரு புளோ மிஸ் பண்ணிவிடக் கூடாது என்பதும் காரணமாயிருக்கலாம். கடிதம் பெறுநர்  செய்த சிறு குற்றங்கள், குறைகள் பற்றி சுட்டிக் காட்டப்படுவதாக இருக்கும். சற்றே உணர்ச்சி பூர்வமாக, 'அவர் அப்படிச் சொன்னது', 'நீ இப்பிடிச் செய்துட்டே' என நீண்ட விளக்கங்களுடன் செல்லும். எல்லாப் பிரச்சினைகளையும் விலாவாரியாகத் தெரிந்துகொள்ளலாம். 

வேகமாக நிறைய வசனங்களைச் சொல்லும்போது எழுதுநர் எல்லாக் கதையும் கேட்டுக் கொண்டே 'எடிட்' பண்ணி சுருக்கி ஒரு விதமா எழுதுவார். இறுதியில் ‘அதையெல்லாம் நான் மன்னிச்சுட்டேன்’ என்றவாறு கடிதத்தை முடிக்கும்போது, 'அடச்சே! இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டோம்' என நொந்துபோய் இருப்பார். ஆக, அவர் யாருடனும் பகைமை பாராட்டியதில்லை.

அப்போது நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பிள்ளையக்கா வாக்களித்தது அக்காக்கள் மத்தியில் கொஞ்சநாள் வெகு பிரபலமாக இருந்தது. அப்போதைய ஜனாதிபதியாக இருந்தவர் பிரேமதாசா. இரண்டாம் முறையும் அவர் வருவதற்கான வாய்ப்பு இருந்தது. வழக்கம்போல இதை எப்படியாவது தமிழர்கள் மொத்தமாக வாக்களித்து தடுத்துவிட வேண்டுமென ஊரிலிருந்த அறிவுஜீவிகள் பலரும் பேசிக்கொண்டார்கள். எல்லோரையும்போல பிள்ளையக்காவும் தன் ஜனநாயகக் கடமையைச் சரிவரச் செய்தே ஆகவேண்டும் என உறுதியாகப் பேசிக்கொண்டிருந்தார். 

தேர்தல் நாளுக்கேயான ஒரு வெறிச்சோடிய தினமாக அன்றைய பொழுது விடிந்தது. விசேஷ ஊரடங்கு, வாகன வசதிகளும் இல்லை. இருந்தாலும் எல்லோரும் போய் வாக்கிட்டு வந்தார்கள்.பிள்ளையக்காவுக்கு சற்றுத் தொலைவிலிருந்த பாடசாலைக்குப் போய் வாக்களிக்க வேண்டும். போய்விட்டு வந்து சம்பவத்தை விபரித்தார்.

"ரோட்டில சனமே இல்லை. எங்க பாத்தாலும் ஆமிக்காரங்கள். ஒரே பதட்டமாப் போச்சு!வந்திட்டம் இனி எப்பிடிஎண்டாலும் வோட்பண்ணிட்டுத்தான் திரும்பிறதெண்டு..கும்பிளாவளைப் பிள்ளையாரை நினைச்சுக்கொண்டே போனன்.”

“ஒரு மாதிரிக் கொல்லங்கலட்டிப் பிள்ளையார் கோயில்ல போய் கும்பிட்டு வீபூதி சந்தனம் வச்சுக்கொண்டு பள்ளிக் கூடத்துக்குள்ள போனாப்பிறகுதான் சீவன் வந்துச்சு. வோட் போடமுதல் அப்பிடியே கண்ணை மூடி, பத்திரமாக் கொண்டுவந்து சேர்த்துட்ட எண்டு பிள்ளையாரைக் கும்பிட்டுக் கொண்டு, கண்ணைத் திறந்து பாத்தா யானை! அப்பிடியே கடவுளே என்ர பிள்ளையாரப்பா எண்டு..”

அவர் முடிக்க முதலே சிரிப்பு அதிர்ந்தது. யானை பிரேமதாசாவின் சின்னம் என்பது பிள்ளையக்காவுக்குத் தெரியாததல்ல. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது. பிள்ளையார்தான் குழப்பிவிட்டார். யானையைப் பார்த்ததும் பிள்ளையாரும் ஞாபகம் வந்திருக்கலாம்.பிரேமதாசவும் ஞாபகம் வந்திருக்கலாம். பிள்ளையாரா, பிரேமதாசவா என்றொரு கேள்வி வந்தபோது பிள்ளையாருக்கு 'டிக்' அடித்துவிட்டார்.

பிள்ளையக்காவுக்கு புற்றுநோய் வந்திருந்ததை தொண்ணூற்று நான்காம் ஆண்டு யாழ் மருத்துவமனையில் உறுதி செய்திருந்தார்கள். தகவல் கேட்டபோது அதிர்ச்சியடைந்த சிலரின் முகங்கள் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. ஆறுமாதமோ, ஒருவருடமோ தவணை ஏதும் கொடுத்தார்களோ என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. இல்லாமல், அடுத்த வருஷ பிறந்தநாளைக்கு எப்படியும் இருக்க மாட்டார் என்பதை அவர் எப்படி உறுதி செய்திருக்க முடியும்? ஒரு வேளை அவருக்கே உள்ளுணர்வு சொல்லியிருக்கலாம். 

அந்த வருஷம் வெகு விமர்சையாகத் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். கேக் வெட்டி, வகை வகையான தின்பண்டங்கள் பரிமாறி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். சிலர் தமிழர்களின் வழக்கப்படி அங்கே வந்து புற்று நோயால் செத்துப்போன ஒன்றுவிட்ட பெரியப்பா, தூரத்து அம்மம்மா போன்றோரின் கதைகளைப் பேசி தமிழன் பெருமையை நிலைநாட்டினார்கள். 

முன்னைய காலங்களில் எல்லோரும் முன்னறிவிப்பின்றித் திடீரென்று செத்துபோய்விடுவதாகவும், இப்போதைய விஞ்ஞான வளர்ச்சி இறுதிப் பிறந்தநாள் கொண்டாடுவதைச் சாத்தியமாக்கியிருக்கிறது எனப் பொருள்பட, தன்னைச் சூழ இருந்த நாலைந்து பேருக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார் ஒரு கனவான். அவர் பேசுவதை அவர்கள் மிகுந்த சிந்தனையுடன் ஆமோதித்துக்கொண்டிருந்தார்கள். சிந்தனை,‘இவர் பேசிக்கொண்டிருக்கும்போது வாய்க்குள் இருப்பதை விழுங்கலாமா?’, ‘அடுத்த கடி கடிக்கலாமா?’ என்பதாக இருந்தது.

ஏராளமானோர் வந்து வாழ்த்தி கண்ணீர் மல்க பிரியாவிடை அல்லது பிரியும் விடை பெற்றுக் கொண்டார்கள். பிள்ளையக்கா மட்டும் எந்தக் கவலையுமின்றி, மகிழ்ச்சி பொங்க சிரிப்புடன் எல்லோரயும் உச்சிமுகர்ந்து விடைகொடுத்தார். மறுநாளே அலட்டிக் கொள்ளாமல் எங்கோ கிளம்பிவிட்டார்.

ஒரு மாதம் கழித்து யாரோ பேசிக் கொண்டார்கள் அவர் நன்றாக மெலிந்துபோய் விட்டதாக! பின்னர், யாராவது அவ்வப்போது அவர் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள், 'ஏலாமல் போயிட்டுதாம்'   'கொழும்பில இருக்கிறாராம்' என்றும், ‘இந்தியாக்கு போயிட்டாராம்’ என்றும் பலவாறாக! வெகுவிரைவில் வரப்போகும் அவர் இறந்துபோய்விட்ட செய்திகேட்டு அதிர்ச்சியடையாமல் இருக்க, எல்லாரும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

எல்லோரும் எதிர்பார்த்ததைப் போலவே பிள்ளையக்கா இறந்த செய்தி வந்தது - பதினெட்டு வருடங்கள் கழித்து போன வாரம்!



Wednesday, February 6, 2013

தெய்வீக இசை!

யாழ்ப்பாணத்தில் தொலைகாட்சி என்றால் தூர்தர்ஷன் மட்டுமாகவே இருந்த 98 -98 காலப்பகுதி. வெள்ளிக் கிழமைக்குக் காத்திருப்போம். எட்டு மணி ஒளியும் ஒளியும்'  நிகழ்ச்சிக்கு ஆறு மணியிலிருந்தே ஹிந்தி நியூஸ் எல்லாம் பார்த்துக் காத்திருக்க, முத்து முத்தாக நான்கு பாடல்கள் போடுவார்கள்! அநேகமா விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, சரத்குமார் பாடலாக இருக்கும்.

அதே வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஒரு படம் போடுவார்கள் அதப் பாக்கிறதுக்கு எத்தனை போராட்டங்கள், சோதனைகள்! மின்வெட்டு காரணமாக பத்து மணிக்கு வரும் மின்சாரம் சரியான நேரத்துக்கு வராது. வெறுத்துப் போய் இருப்போம்! மின்சாரம் சரியான நேரத்தில வந்துட்டா...ஒளிபரப்பு நிலையத்தினர் ஹிந்தில இருந்து, தமிழுக்கு மாற்றி இருக்க மாட்டார்கள்! ஹிந்திப் படத்தை இருபது நிமிடம் பார்த்துக் கொண்டிருக்க திடீர்னு தமிழுக்கு மாற்றுவார்கள். என்ன படம்னே தெரியாது! அநேகமா அப்படியான படம் தான் போடுவாங்க. எப்போதாவது எல்லாமே சரியாக இருந்தால், வாழ்க்கையில் கேள்விப்படாத படமா இருக்கும், 'வா ராஜா வா!'


இவ்வளவு கொடுமைகளிலும் அவ்வப்போது நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கியது தூர்தர்ஷன். 

மொக்கைப் படம், பார்க்கவேண்டாம் என்று முடிவு செய்த பின்னரும் ஒரேயொரு விளம்பரத்துக்காக மட்டும் காத்திருந்து பார்த்திருக்கிறேன். அப்படியொரு இசை. ஹிந்தி வரிகள் என்ன விளம்பரமென்றும் அப்போது தெரியாது. கவிதா கிருஷ்ணமூர்த்தியின் குரல், மயக்கும் அந்தப் புல்லாங்குழல். கண்களை மூடிக் கேட்கும்போது, அப்படியே அலேக்காகத் தூக்கி ஒரு மலையுச்சியில் நிற்க வைக்கும் உணர்வைக் கொடுத்தது. 

இசை தெய்வீகமானது என உணர்ந்துகொள்ள இதுபோன்ற இசைத்துணுக்கு ஒன்றே போதுமானது!





நீண்ட நாட்கள் மறந்து போயிருந்த இந்த இசை, சில வருடங்களுக்கு முன்னர் இன்னொரு தெய்வீக இசையைக் கேட்டபோது (Water படம் பார்க்கும்போது) மீள நினைவுக்கு வந்தது. ஆனாலும் இன்றுதான் மேற்கண்ட விளம்பரத்தை you tube ல் தேடிக் கண்டுகொண்டேன்.

அந்த Water  படப் பாடல். Naina Neer - Water

Wednesday, July 11, 2012

இணையப் போராளி ஜீ..



ணையப் போராளி ஜீ தீவிர சிந்தனையிலிருந்தான்!

இப்போதெல்லாம் எதற்கு எழுதவேண்டும் என்றொரு கேள்வி அவன் மனதில் அடிக்கடி எழுகிறது! இதே கேள்வி மற்றவர்களிடம் எப்போதோ எழுந்தது வேறு விஷயம் 'இவனெல்லாம் எதுக்கு எழுதுறான்?'

எந்த ஒரு சீரியசான விஷயத்தையும் எள்ளலாக, நக்கலாக கூறிச் செல்லலாம் என முட்டாள்தனமாக நம்பியதால் ஒரு மொக்கைப் போராளியாக பெயர் வாங்கியிருந்தான்! அதெல்லாம் செல்லாது சமூக அக்கறை என்பது ஏ சமூகமே எனக் கேள்வி கேட்பது, உணர்ச்சியுடன் பொங்குவது, விழிப்புணர்ச்சி வழங்குவது மட்டுமே என்கிறார்கள் சமூக போராளிகள்! 

Wednesday, June 27, 2012

இந்திய அமைதிப்படையும் கேணல் ஜெயமோகனும்!



எழுத்து எவ்வளவு வலிமையானது என்பதை நான் உணர்ந்துகொண்ட தருணம் அது! வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு. என்போலவே பலரும் அன்று முழுவதும் மன உளைச்சலுடன்,தூக்கம் தொலைந்து அவதிப்பட்டிருக்கலாம். இந்திய அமைதிப்படை குறித்த ஜெயமோகனின் கட்டுரை அது!

Tuesday, June 12, 2012

ஆன்டி & பூச்சாண்டி!


'எப்பவுமே முகப் பூச்சு ஓவரா பூசிட்டு திரியிற ஆன்டிங்களைப் பூச்சாண்டிகள் என கூறலாமா?'

Tuesday, May 29, 2012

யானை பார்த்த கதை!



னுஷனுக்கு அவ்வளவு சந்தோஷம்!

முகமெல்லாம் சிரிப்புப் பரவ, டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில இடம்பிடிச்சுக் கொண்டான், ஊர் வழக்கப்படி முதலில் முருகனைக் கும்பிட்டுவிட்டு எல்லோரும் ஏறிக்கொண்டார்கள்.

Wednesday, May 23, 2012

தட்டி வான்(Van)!

'என்ன பிளைட் அது!யன்னலெல்லாம் லொட லொடன்னு சத்தம் போட்டுக்கொண்டு...  தட்டிவான் மாதிரி!'

ஏ -9 திறக்கப்படாத போர்க்காலத்தில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தனது விமானப்பயண அனுபவத்தைத்தான் ஒருவர் இப்படிக் கூறினார்.



Monday, July 25, 2011

தாய்மண் நோக்கி ஓர் பயணம்!


சொந்த மண்ணில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு நாடோடிகளாக வாழும் அனுபவத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்ததுண்டா?

சின்னசிறு வயதில் மட்டுமே பார்த்த ஊரின் எந்தக் காட்சிகளையும் கற்பனை பண்ண முயன்று, முடியாமல் நினைவுகளால் மட்டும் உணர்ந்திருக்கிறார்களா?

ஏதொ சில வாசனைகள், சிறுவயதில் கேட்ட பாடல்கள் அடிமனதில் இருக்கும் சிறுவயது ஞாபகங்களை எப்போதாவது கிளறிவிட, தூக்கம் தொலைந்ததுண்டா?

மீண்டும் பல வருடங்களின் பின் தாய்மண் திரும்பும்போது, அது தன் பழைய அடையாளங்களைத் முற்றிலும் துறந்து, அந்நியமாய் தெரியும்போது, என்ன தோன்றும்?

முதன் முதலாக சிறுவயதில் நீங்கள் நடைபயின்ற வீதியில் மீண்டும் நடந்து செல்கையில், பள்ளிக்கூடம், சின்னவயது நண்பர்களுடன் விளையாடி, உருண்டு, புரண்ட கோயில் மணல் வீதி எல்லாம் பார்க்கும்போது, பழைய நினைவுகள் மெதுவாக மீட்டப்படுவதை உணர்ந்ததுண்டா?

ஒருவேளை நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும்! நண்பர்களின், உறவுகளின் அனுபவங்களைச் சொல்லக் கேட்டிருக்கக்கூடும்! நானும் கூட கேட்டிருக்கிறேன்! ஆனால் அந்த அனுபவங்களை வார்த்தைகளால் விபரிப்பதென்பது சாத்தியமானதல்ல என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும்!

எனக்கும் இப்போது புரிகிறது.....இருபது வருடங்களின் பின் என் சொந்த மண்ணை காண யாழ்ப்பாணம் சென்றபோது...

யாழ்ப்பாணம் 1996 இல் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தபின்னரும் உயர் பாதுகாப்பு வலயம் என்று அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்று நமது ஊர்! கடந்த மாதம் முதன்முறையாக அனுமதிக்கப்பட்டது! இன்னும் அனுமதிக்கப்படாத பிரதேசங்களும் உண்டு!

சிலர் ஆச்சரியமாகக் கேட்டார்கள், 'அப்ப நீ சின்னப்பிள்ளையெல்லே! உனக்கு ஞாபகமிருக்கா?' என.
எனக்கும் ஆச்சரியம்! 'எப்படி என்னால் மறந்துவிட முடியுமென்று நினைக்கிறார்கள்?'

நண்பன் எபியும் என்னுடன் வந்தான். காங்கேசன்துறை வீதியால் பேரூந்தில் செல்கையில் இனம்புரியாத ஒரு உணர்வு! தெல்லிப்பழைச் சந்தியை அடைந்ததும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது! தொடர்ந் சில நிமிடங்களில் எனது ஊர்...!

மாவிட்டபுரம்!


பேரைச் சொன்னதுமே ஊரின் மையமாக இருக்கும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமே நினைவில் வரும் யாழ்ப்பாத்தவருக்கெல்லாம்! கம்பீரமான இராஜ கோபுரத்துடன் அந்தப் பிரதேசத்துக்கே அழகு சேர்ப்பதாக! 


கோயில் பிரகாரத்தில் நடக்கும்போது நான் கற்ற பாலர் பாடசாலை, ஆரம்ப பாடசாலை எல்லாவற்றையும் நண்பனுக்கு சொல்லிக்கொண்டே வந்தேன்!

என்றைக்குமில்லாமல் கோயிலுக்குப் போகும் நல்லபுத்தியுடன் நான் இருந்தேன், 
ஆனால் கொடுமையைப் பாருங்க  கோயில் பூட்டி இருந்திச்சு! 'என்ன கொடுமை முருகா?' 

நம்ம  ராசி  அப்பிடி  என்பதால்,  அலட்டிக்  கொள்ளாமல்  கீரிமலை  வீதியூடாக நடந்து சென்றோம்!


எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு அங்கமாக திகழ்ந்த, ஒரு சாட்சியாகவே கூட இருந்து பார்த்துக் கொண்டிருந்த, நான் முதன்முதலில் நடந்த வீதி ஜீவனை இழந்து..!


பொன்விளையும் பூமியாகத்தான் இருந்தது...இப்போ, வறண்டு, கட்டாந்தரையாகி, புழுதிக்காடாக..! இங்கே எல்லாம் வீடுகள் இருந்திருக்க வேண்டுமே?


ஒரு பிரபல அலுமினிய தொழிற்சாலை சிதைந்த நிலையில்..!







கூரைகள் அகற்றப்பட்டு, கதவு - யன்னல்கள் உடைத்தெடுக்கப்பட்டும், மரங்கள், பற்றைகளால் மூடிய சிதைந்த நிலையிலும் வீடுகள்!

ஏற்கனவே பற்றைகள் வெட்டித் துப்பரவு செய்யப்பட்டிருந்தாலும் மிதிவெடிகள் பற்றிய எந்த உத்தரவாதமும் இல்லையென்பதாலும், நம்ம ராசி பற்றி நன்றாகவே தெரிஞ்சதாலும் நண்பனிடம், 'மச்சான் நான் முன்னால போறேன் என்னோட ஸ்டெப்ஸை கவனமா Follow பண்ணி வா!' காணிக்காரனுக்கு கால் போனாலும் அதில ஒரு நியாயமிருக்கு ஆனா கூட போறவனுக்கு?








ஊரின் சுடலையின் அருகே.... காவல் தெய்வமான வைரவர் கோயில்! அருகிலுள்ள பெரும் ஆலமரம்!


சின்னஞ்சிறு வயதில் பாய்ந்து, தொங்கி ஊஞ்சலாடி மகிழ்ந்த அந்த பெரிய ஆலமரத்தின் விழுதுகள், வேர்களாகிப் பரந்து பருத்து...!


மீளக் குடியமரும் நோக்கில் வீடுகளைப் பலர் திருத்தவும், புதிதாகக்கட்டவும் தயராகுவதைக் காண முடிந்தது! இதுதான் நம்மவரின் தனித்தன்மை, எவ்வளவு துயர் வந்தபோதும் துடைத்தெறிந்து, தளராது மீண்டும் மீண்டும் எழுவோம்! இதில் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதைச் சொல்லியே ஆகணும்!

இதுல இன்னொரு விஷயம், 'எரிகிற வீட்டில பிடுங்கிறது லாபம்'ன்னு, எஞ்சியிருக்கிற வீடுகளில் எது கிடைத்தாலும் திருடுவது, காணிகளிலுள்ள மரங்களை வெட்டி விற்பது என்று, திருட்டு அன்பர்கள் பலரும் வியாபார நோக்கத்துடன் அடிக்கடி விஜயம் (எங்கள் வீட்டிலும் நடந்தது!) செய்கிறார்கள்! - இதுவும் தமிழன்தான்!

எது எப்படியோ, என்னவானாலும், இன்னும் ஓரிரு வருடங்களில் மீண்டும் புது(பழைய)பொலிவுடன் என் தாய்மண்ணைப் பார்க்கமுடியுமென்ற நம்பிக்கையுடன் ஜீ...!    
   

டிஸ்கி : இது பற்றிப் பதிவிடுமாறு கூறிய பதிவர் மதிசுதாவிற்கு நன்றி! ஆரம்பத்தில் எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை! அதனால் ஒழுங்காகப் படமெடுக்கவில்லை!