பிள்ளையக்காவா அது? மனம் சற்றே துணுக்குற்றது. அவர் இறந்துவிட்டதைப் புத்தி ஞாபகத்துக்கு கொண்டுவந்தது. முற்றாக நரைத்த தலை. கருப்பு பிரேம் போட்ட தடித்த மூக்குக் கண்ணாடி. கையில் குடை. அச்சு அசல் அவரைப் போலவே இருந்தார் ஒரு மூதாட்டி. ஆனால் பிள்ளையக்காவை மூதாட்டி எனச் சொல்ல முடியாது. அது அவரை அவமானப்படுத்துவதைப் போன்றது. வயது முதிர்ந்த இளைஞி என்று வேண்டுமானால் சொல்லலாம்.
பிள்ளையக்காவுக்கு ஏன் அப்படியொரு பெயர் வந்தது எனத் தெரியவில்லை. சின்ன வயதில் என் அம்மா, அம்மம்மா, நான், இன்னும் சிறிய வாண்டுகளுக்கெல்லாம் அவர் பிள்ளையக்காதான்! சிங்கப்பூரில் பிறந்தவராம். சிறுவயதில் பர்மாவிலும் இருந்ததாகச் சொன்னார்கள். இளம் வயதிலேயே போரில் கணவனை இழந்துவிட்டார். பிள்ளைகள் கிடையாது. ஆனாலும் அவரைத் தாய் போல மதித்து, அன்புசெலுத்த ஏராளமானோர் யாழ்ப்பாணத்தில், கொழும்பில் ஏன் இந்தியாவில்கூட, சரியாகச் சொன்னால் உலகின் பலபாகங்களிலும் இருந்தார்கள், இருக்கிறார்கள்.
அவர் ஒரு தேசாந்திரி. கோயில்கள், உறவுகள் என்று மாறிமாறி பயணப்பட்டுக் கொண்டே இருப்பார். பெரும்பாலும் நடைதான். ஒரு நாளைக்கு பதினைந்து மைல் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பாரோ என்று எண்ணுமளவிற்கு நடந்து கொண்டிருப்பார். எரிக்கும் வெய்யிலில் கையில் குடையுடன், தன தடித்த மூக்குக் கண்ணாடியுடன் சற்றே மேல்நோக்கிய, கண்களைச்சுருக்கிய பார்வையுடன் சென்று கொண்டிருப்பார். கையினால் கண்களுக்கு நிழல் கொடுத்து, அடையாளம் தெரிந்து, சிறு சிரிப்புடன் பேசுவார். நடை, களைப்பு எந்த எரிச்சலையும் அவர் வெளிப்படுத்தியதில்லை. யாருடனும் சுடுசொல் பேசியதில்லை. எப்போதும் அவர் அடுத்த பயணத்துக்கான திட்டமிடல்களுடனேயே வருவார். அவரை எந்த, நேரத்தில் எங்கே சந்திக்கலாம் என்பது யாருக்கும் தெரியாது. "விடியக் காலம பிளையக்கா வந்திட்டு எங்கயோ போச்சுது இன்னும் காணேல்ல"- என்று உற்றவர்கள் பேசுவது சாதாரணம்.
யாழ்ப்பாணத்தில் இந்திய ராணுவம் இருந்த காலப்பகுதி. இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் இருந்தது. அப்பா கொழும்பிலிருந்தார். பக்கத்துவீட்டு அக்காக்கள் எல்லோரும் எங்கள் வீட்டில்தான் தூங்குவது வழக்கம். எங்கோ தூரத்தில், எப்போதாவது கேட்கும் நாய்களின் குரைப்புச் சத்தம் தவிர்ந்த ஆழ்ந்த அமைதி கொண்ட அந்த இரவுகளில், மண்ணெண்ணெய் லாம்பில் மிக மெல்லிய சுடரை ஏற்றி வைத்துவிட்டு, கூடியிருந்து மெல்லிய குரலில் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பது வழமை. அவ்வப்போது பிள்ளையக்கா வரும்போதெல்லாம் களை கட்டும். எல்லோருக்கும் நடுநாயகமாக வீற்றிருந்து கதை சொல்லிக் கொண்டிருப்பார்.
ஏராளமான ஊர்கள் பற்றிய அனுபவங்கள், கதைகள் அவரிடம் இருந்தன. அடிக்கடி இந்தியா சென்று வருபவர் என்பதால் கோயில்கள் பற்றி, வித்தியாசமான கலாச்சாரப் பின்னணி கொண்ட புதிய மனிதர்கள், அவ்வப்போது பாஷை புரியாமல் அவஸ்தைப்பட்டு, பின்னர் நகைச்சுவையாகிவிட்ட சம்பவங்கள் எனப்பல.
பிள்ளையக்கா கடிதம் எழுதுவது ஒரு தனி சுவாரஷ்யம். எழுதுபவரை விட பார்ப்பவர்களுக்கு இன்னும் அதிகம். அவரே எழுதுவதை விட அழகான எழுத்தில் யாராவது எழுத வேண்டுமென விரும்புவார். அதுவும் தவிர ஒரு புளோ மிஸ் பண்ணிவிடக் கூடாது என்பதும் காரணமாயிருக்கலாம். கடிதம் பெறுநர் செய்த சிறு குற்றங்கள், குறைகள் பற்றி சுட்டிக் காட்டப்படுவதாக இருக்கும். சற்றே உணர்ச்சி பூர்வமாக, 'அவர் அப்படிச் சொன்னது', 'நீ இப்பிடிச் செய்துட்டே' என நீண்ட விளக்கங்களுடன் செல்லும். எல்லாப் பிரச்சினைகளையும் விலாவாரியாகத் தெரிந்துகொள்ளலாம்.
வேகமாக நிறைய வசனங்களைச் சொல்லும்போது எழுதுநர் எல்லாக் கதையும் கேட்டுக் கொண்டே 'எடிட்' பண்ணி சுருக்கி ஒரு விதமா எழுதுவார். இறுதியில் ‘அதையெல்லாம் நான் மன்னிச்சுட்டேன்’ என்றவாறு கடிதத்தை முடிக்கும்போது, 'அடச்சே! இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டோம்' என நொந்துபோய் இருப்பார். ஆக, அவர் யாருடனும் பகைமை பாராட்டியதில்லை.
அப்போது நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பிள்ளையக்கா வாக்களித்தது அக்காக்கள் மத்தியில் கொஞ்சநாள் வெகு பிரபலமாக இருந்தது. அப்போதைய ஜனாதிபதியாக இருந்தவர் பிரேமதாசா. இரண்டாம் முறையும் அவர் வருவதற்கான வாய்ப்பு இருந்தது. வழக்கம்போல இதை எப்படியாவது தமிழர்கள் மொத்தமாக வாக்களித்து தடுத்துவிட வேண்டுமென ஊரிலிருந்த அறிவுஜீவிகள் பலரும் பேசிக்கொண்டார்கள். எல்லோரையும்போல பிள்ளையக்காவும் தன் ஜனநாயகக் கடமையைச் சரிவரச் செய்தே ஆகவேண்டும் என உறுதியாகப் பேசிக்கொண்டிருந்தார்.
தேர்தல் நாளுக்கேயான ஒரு வெறிச்சோடிய தினமாக அன்றைய பொழுது விடிந்தது. விசேஷ ஊரடங்கு, வாகன வசதிகளும் இல்லை. இருந்தாலும் எல்லோரும் போய் வாக்கிட்டு வந்தார்கள்.பிள்ளையக்காவுக்கு சற்றுத் தொலைவிலிருந்த பாடசாலைக்குப் போய் வாக்களிக்க வேண்டும். போய்விட்டு வந்து சம்பவத்தை விபரித்தார்.
"ரோட்டில சனமே இல்லை. எங்க பாத்தாலும் ஆமிக்காரங்கள். ஒரே பதட்டமாப் போச்சு!வந்திட்டம் இனி எப்பிடிஎண்டாலும் வோட்பண்ணிட்டுத்தான் திரும்பிறதெண்டு..கும்பிளாவளைப் பிள்ளையாரை நினைச்சுக்கொண்டே போனன்.”
“ஒரு மாதிரிக் கொல்லங்கலட்டிப் பிள்ளையார் கோயில்ல போய் கும்பிட்டு வீபூதி சந்தனம் வச்சுக்கொண்டு பள்ளிக் கூடத்துக்குள்ள போனாப்பிறகுதான் சீவன் வந்துச்சு. வோட் போடமுதல் அப்பிடியே கண்ணை மூடி, பத்திரமாக் கொண்டுவந்து சேர்த்துட்ட எண்டு பிள்ளையாரைக் கும்பிட்டுக் கொண்டு, கண்ணைத் திறந்து பாத்தா யானை! அப்பிடியே கடவுளே என்ர பிள்ளையாரப்பா எண்டு..”
அவர் முடிக்க முதலே சிரிப்பு அதிர்ந்தது. யானை பிரேமதாசாவின் சின்னம் என்பது பிள்ளையக்காவுக்குத் தெரியாததல்ல. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது. பிள்ளையார்தான் குழப்பிவிட்டார். யானையைப் பார்த்ததும் பிள்ளையாரும் ஞாபகம் வந்திருக்கலாம்.பிரேமதாசவும் ஞாபகம் வந்திருக்கலாம். பிள்ளையாரா, பிரேமதாசவா என்றொரு கேள்வி வந்தபோது பிள்ளையாருக்கு 'டிக்' அடித்துவிட்டார்.
பிள்ளையக்காவுக்கு புற்றுநோய் வந்திருந்ததை தொண்ணூற்று நான்காம் ஆண்டு யாழ் மருத்துவமனையில் உறுதி செய்திருந்தார்கள். தகவல் கேட்டபோது அதிர்ச்சியடைந்த சிலரின் முகங்கள் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. ஆறுமாதமோ, ஒருவருடமோ தவணை ஏதும் கொடுத்தார்களோ என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை. இல்லாமல், அடுத்த வருஷ பிறந்தநாளைக்கு எப்படியும் இருக்க மாட்டார் என்பதை அவர் எப்படி உறுதி செய்திருக்க முடியும்? ஒரு வேளை அவருக்கே உள்ளுணர்வு சொல்லியிருக்கலாம்.
அந்த வருஷம் வெகு விமர்சையாகத் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். கேக் வெட்டி, வகை வகையான தின்பண்டங்கள் பரிமாறி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். சிலர் தமிழர்களின் வழக்கப்படி அங்கே வந்து புற்று நோயால் செத்துப்போன ஒன்றுவிட்ட பெரியப்பா, தூரத்து அம்மம்மா போன்றோரின் கதைகளைப் பேசி தமிழன் பெருமையை நிலைநாட்டினார்கள்.
முன்னைய காலங்களில் எல்லோரும் முன்னறிவிப்பின்றித் திடீரென்று செத்துபோய்விடுவதாகவும், இப்போதைய விஞ்ஞான வளர்ச்சி இறுதிப் பிறந்தநாள் கொண்டாடுவதைச் சாத்தியமாக்கியிருக்கிறது எனப் பொருள்பட, தன்னைச் சூழ இருந்த நாலைந்து பேருக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார் ஒரு கனவான். அவர் பேசுவதை அவர்கள் மிகுந்த சிந்தனையுடன் ஆமோதித்துக்கொண்டிருந்தார்கள். சிந்தனை,‘இவர் பேசிக்கொண்டிருக்கும்போது வாய்க்குள் இருப்பதை விழுங்கலாமா?’, ‘அடுத்த கடி கடிக்கலாமா?’ என்பதாக இருந்தது.
ஏராளமானோர் வந்து வாழ்த்தி கண்ணீர் மல்க பிரியாவிடை அல்லது பிரியும் விடை பெற்றுக் கொண்டார்கள். பிள்ளையக்கா மட்டும் எந்தக் கவலையுமின்றி, மகிழ்ச்சி பொங்க சிரிப்புடன் எல்லோரயும் உச்சிமுகர்ந்து விடைகொடுத்தார். மறுநாளே அலட்டிக் கொள்ளாமல் எங்கோ கிளம்பிவிட்டார்.
ஒரு மாதம் கழித்து யாரோ பேசிக் கொண்டார்கள் அவர் நன்றாக மெலிந்துபோய் விட்டதாக! பின்னர், யாராவது அவ்வப்போது அவர் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள், 'ஏலாமல் போயிட்டுதாம்' 'கொழும்பில இருக்கிறாராம்' என்றும், ‘இந்தியாக்கு போயிட்டாராம்’ என்றும் பலவாறாக! வெகுவிரைவில் வரப்போகும் அவர் இறந்துபோய்விட்ட செய்திகேட்டு அதிர்ச்சியடையாமல் இருக்க, எல்லாரும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
எல்லோரும் எதிர்பார்த்ததைப் போலவே பிள்ளையக்கா இறந்த செய்தி வந்தது - பதினெட்டு வருடங்கள் கழித்து போன வாரம்!
பிள்ளையக்கா பிறந்த நாள் கொண்டாடி மனதில் தங்கி இருக்கிறார்..
ReplyDeleteவணக்கம்,ஜீ!யதார்த்தமான கதை அமைப்பு.யாழ்ப்பாணத்து நடைமுறை வழக்கில்,அபாரம்!
ReplyDeleteபிள்ளையக்கா எம் மனங்களிலும் ஆழமாகப் பதிந்துவிட்டா ஜீ!
ReplyDeleteபிள்ளையக்கா மனதில் பதிந்தார் எப்படியும் ஊரில் இப்படியான ஒரு கதாப்பாத்திரம் இருக்கும் ஆனால் அப்படியான கதாப்பாத்திரத்துடன் உறவாடும் வாய்ப்பு எல்லோருகும் வாய்ப்பதில்லை..
ReplyDeleteயாழ்ப்பாணத்தில் இந்திய ராணுவம் இருந்த காலப்பகுதி. இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் இருந்தது. அப்பா கொழும்பிலிருந்தார். பக்கத்துவீட்டு அக்காக்கள் எல்லோரும் எங்கள் வீட்டில்தான் தூங்குவது வழக்கம். எங்கோ தூரத்தில், எப்போதாவது கேட்கும் நாய்களின் குரைப்புச் சத்தம் தவிர்ந்த ஆழ்ந்த அமைதி கொண்ட அந்த இரவுகளில், மண்ணெண்ணெய் லாம்பில் மிக மெல்லிய சுடரை ஏற்றி வைத்துவிட்டு, கூடியிருந்து மெல்லிய குரலில் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பது வழமை.
அந்த நினைவுகளை நினைவுபடுத்திவிட்டீர்கள்....கறண்ட் இல்லாமல் லாம்பு வெளிச்சத்தில் வீடு மெல்லிருளில் ஜொலிக்க...வீட்டு முற்றத்தில் நிலா ஓளியில் தம்புயுடன் ஓடிவிளையாடிய நாட்கள்.... அழகானவைதான்
உங்கள் மனதில் வாழும் ஒரு கேரக்டரை எங்கள் மனதிலும் இந்தப் பதிவு மூலம் ஏற்றிவிட்டீர்கள்...அதுவும் அந்த பிள்ளையார் செலக்சன் அருமை. எளிமையான மனங்கள் எப்போதும் பாசிடிவ்வாகவே சிந்திக்கின்றன.
ReplyDeleteமனதில் வாழ்கின்றா பிள்ளையக்கா மரணம் நிகழ்ந்தாலும்!
ReplyDeleteமொத்தத்தில் அருமை. என்றாலும் கீழேயுள்ளது இன்னும்..
ReplyDelete>பக்கத்துவீட்டு அக்காக்கள் எல்லோரும் எங்கள் வீட்டில்தான் தூங்குவது வழக்கம். எங்கோ தூரத்தில், எப்போதாவது கேட்கும் நாய்களின் குரைப்புச் சத்தம் தவிர்ந்த ஆழ்ந்த அமைதி கொண்ட அந்த இரவுகளில், மண்ணெண்ணெய் லாம்பில் மிக மெல்லிய சுடரை ஏற்றி வைத்துவிட்டு, கூடியிருந்து மெல்லிய குரலில் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பது வழமை.
இதன் பாதிப்பு இல்லாமல் (என் எதிர்காலப் பதிவுகளில்) எழுதவேண்டும் என்று யோசித்துக் கொண்டேன்.
யதார்த்தமான கதை ஜி...
ReplyDeleteகடைசி வரி முழுப் பதிவையும் ரசிக்கவைக்கிறது.
ReplyDelete