Saturday, February 16, 2013

விஸ்வரூபம்
இன்றுதான் விஸ்வரூபம் பார்த்தேன். ஆரம்பத்தில் படம் பற்றி வந்த ஸ்டில்ஸ், செய்திகள் பார்த்தபோது ஏனோ ஆளவந்தான் ஞாபகம் வந்திருந்தது. ஷங்கர் - எசான்- லாய் இசை என்பதும் வலுச்சேர்த்திருக்கலாம். இன்று விஸ்வரூபம் பார்த்ததைவிட அன்று ஆளவந்தானை ரசித்துப் பார்த்திருந்தேன் எனத் தோன்றியது. ரசனை மாறுபட்டிருக்கலாம். அல்லது எல்லாமே அப்படியே மாறாமலும் இருக்கலாம்.


ஆப்கானிஸ்தான் காட்சிகள் அந்த மஞ்சள் கலந்த கலர்டோன், லாண்ட்ஸ்கேப் தமிழுக்குப் புதிது. ஈரானியப் படங்களில் பார்த்தது. Hurt locker படத்தில் இன்னும் அழகாகக் காட்டியிருப்பார்கள். 

கமல் பெண்தன்மையுடையவராக நடித்திருந்ததை பலர் சிலாகித்த போது, ஆரம்பத்தில் சற்றே பயமாக இருந்தது. நடிப்பு என்பதே எனக்கு சினிமாவிலும், நிஜத்திலும் அவ்வளவாக ஒத்துவராததே காரணம். யாராவது நன்றாக 'நடி'த்திருக்கிறார் என்றாலே அந்தப்பக்கம் போகாமல் தவிர்த்துவிடுவதை அனுபவம் கற்றுக் கொடுத்திருக்கிறது. 

ஆனால் கமலைப் பார்த்தபோது பயந்த அளவிற்கு இருக்கவில்லை. ஏற்கனவே ஒருமுறை சிவசங்கர் மாஸ்டரின் பேட்டியைப் பார்த்திருந்தேன். அதை வைத்துப் பார்க்கும்போது கமலை விட அஜித் நன்றாக 'நடி'த்திருந்தார் என்றே தோன்றுகிறது. (இந்த பாராவும் தமிழில்தான் இருக்கிறது யாராவது கமெண்ட் போட முதல் தெளிவாக வாசிக்கவும்)

ஹாலிவுட் தரம். நிச்சயமாக இந்த மாதிரியான தரமுள்ள படங்கள் ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன அல்லது வருகின்றன என உறுதிகூறமுடியும். புரூஸ் வில்லிஸ் போன்ற நடிகர்கள் நடித்த பல படங்கள் உதாரணமாகக் கொள்ளலாம். (சிக்த்ஸ்சென்ஸ், பல்ப்பிக்சன் போன்றவை தவிர்த்து) முன்னர் யாழ்ப்பாணத்தில் என் கூடப் படித்த இங்க்லீஷ்(?!) படம் பார்க்கும் ஆர்வலர்கள் பந்தாவாகப் பேசிக்கொள்வார்கள். அவர்களின் மனங்கவர்ந்த ஹீரோக்கள் புரூஸ் வில்லிஸ் மற்றும் வன்டேம்.

கமல், ஆன்ட்ரியா குழுவினர் பங்குபெறும் அந்தப்பாடல் கொள்ளை கொள்கிறது. அவ்வளவு அழகு. ஆன்ட்ரியா தவிர்த்து மற்றைய பெண்களை காமெரா சரியாக கட்டவில்லை என்பது சோகம். இதனை ஒளிப்பதிவு சரியில்லை எனக் கூறலாமா? யாராவது சினிமா விமர்சகர்கள் தெளிவு படுத்தவேண்டும்.

கமல் பற்றித் தெரிந்தபின், கமல் தலைமுடி வெட்டி வித்தியாசமாக படியிலிருந்து கீழிறங்கி வருகையில், விழிகளில் ஆச்சரியம் கலந்து, பின்னர் சிரிக்கும்போது பூஜா ஆன்டி அழகாக இருக்கிறார். மற்றபடி அவர் பெரிதாக ஆச்சரியப்பட வாய்ப்புகள் அமையவில்லை. சிரித்ததாகவும் நினைவில்லை. 'வாத்து' மாதிரி நடத்தையை வெளிப்படுத்துகிறார். வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த பலர் 'வாத்து' மாதிரி இருப்பதை நாங்கள் பார்த்திருப்பதால் ஆச்சரியமேதுமில்லை. பூஜா ஆன்டியும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவராம். படத்தில் வாழ்ந்திருக்கிறார்.

படம் நிறைவடையும்போது சில காட்சிகள் வரும். அப்போது இருமுறை வரும் படுக்கையறைக் காட்சி சில நொடிகளேயானாலும் உண்மையிலேயே ஹாலிவுட் தரம்! தமிழுக்கு முற்று முழுதாகப் புதிதானது. லைட்டிங், கலர்டோன் (எத்தனைபேர் சரியாகக் கவனித்தார்களோ?) எல்லாம் அப்படியே இருந்தது.

இந்தக்காட்சியை கமலின் வயதொத்த பெருசுகளின் மனநிலையிலிருந்து பார்த்தேன். மிகவும் வெறுப்பேற்றுவதாக அமைந்தது. இது அவர்களைப் புண்படுத்துவதாக அமையாதா? எப்படி அனுமதித்து தணிக்கைக் குழு? சரி போனாப்போகுதென்று என் சொந்த மனநிலையிலிருந்தே இன்னொருமுறை பார்த்தேன். அப்போதும் கடுப்பாகவே இருந்தது. ச்சே! என்னமாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?

ஆனால் ஒன்று தன் 'மீட்கப்பட்ட வீட்டிலிருக்கும்போதெல்லாம் கமல் அந்த இருபத்து மூன்று அமைப்புகளுக்கும் நிச்சயம் மனதில் நன்றி கூறிக் கொள்வார் என நம்புகிறேன். அவர்கள் மட்டும் உரிய நேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்? நினைக்கவே சற்றுப் பயமாக இருக்கிறது! தவிர்க்க முடியாமல் தாணுவின் ஞாபகமும் வருகிறது!

8 comments:

 1. விஸ்வரூபம் குறித்தான உங்கள் பார்வை நன்று..

  ReplyDelete
 2. எத்தனைபேர் சரியாகக் கவனித்தார்களோ//ஹி ஹி விடுவோமா நாம..திருப்பி ஓடிவந்திருந்து பாத்தோம்ல....

  ReplyDelete
 3. ஆளவந்தான் அளவிற்கா இருக்கிறது? கேட்கவே பயமா இருக்கே!

  ReplyDelete
  Replies
  1. அப்பிடி சொல்லல அண்ணே! அப்போ அது நல்லா இருந்த அளவுக்கு இப்போது இது இல்ல! அவ்வ்வ்வ்! :-)

   Delete
 4. விஸ்வரூபம் படத்தை எடுத்து முடித்ததும் அதை பிரிவியு போட்டு பார்த்த கமலஹாசன் தனது படம் நிச்சயமாக எந்த ஊரிலும் ஒரு வாரத்தை தாண்டி ஓடுவதே கடினம் என்பதை தெரிந்து கொண்டு.. இந்தபடத்திற்கு தான் போட்ட முதலீட்டை மீட்ட என்ன வழி என்று யோசிக்க… அந்த நேரத்தில் இஸ்லாமிய அமைப்புகள் எங்களுக்கு படத்தை போட்டு காட்ட வேண்டும் என்று சொல்ல… கிடைத்ததடா வழி என்று முகமெங்கும் மகிழ்ச்சியோடு மத அமைப்புக்களை அழைத்து படத்தை போட்டு காண்பிக்க… அவர்கள் எதிர்க்க… அந்த எதிர்ப்பை தான் எதிர்பார்க்காதது போல் பிரஸ்மீட்டில் ஊரை விட்டே ஓடி விடுவேன் என்று கூறி அழுவது போல் நடிக்க… அப்பாவி மக்கள் அந்த நடிப்பை பார்த்து கண் கலங்க.. ஆக மொத்தத்தில் ”தெளிவாக மிகத் தெளிவாக திட்டமிட்டு” கமலஹாசன் தனது குப்பையை மக்களிடம் நல்ல விலைக்கு விற்று விட்டார், பாவம் மக்கள் நூற்றுக்கணக்கில் பணத்தை கொடுத்து படம் பார்த்துவிட்டு தலையை பிய்த்தபடி தியேட்டரில் இருந்து வெளி வருகின்றனர்.

  ReplyDelete
 5. ஜீ, உங்கள் பார்வையில் - விஸ்வரூப அலசல் நன்று!

  ReplyDelete
 6. ஹாஹா இதுக்கு தான் இம்புட்டு ஆர்ப்பாட்டமா...அரே ஓ சம்போ!

  ReplyDelete
 7. சூப்பர் ஜீ!

  ReplyDelete

Followers

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |