Thursday, February 14, 2013

காதல்; ஓர் அற்புத வழிகாட்டி!காதல் ஒருவனின் பாதையை மாற்றும் அற்புதமான சக்தி கொண்டது! 

காதல் வாழ்க்கைப் பாதையை மாற்றிய அனுபவம் பலருக்கும் வாய்த்திருக்கும். எனக்கும் கூட அந்த அனுபவம் இருக்கிறது!

'காதலர் தினம்' என்ற ஒன்றை முதன்முதல் கேள்விப்பட்ட காலம். என்னென்ன நிறங்களில் ஆடை அணிந்தால் எதைக் குறிக்கும் என்றெல்லாம் பத்திரிகையில் வாசித்துத் தெரிந்துகொண்டோம். எப்படியாவது அடுத்த காதலர் தினத்தைக் கொண்டாடுவது என உறுதியெடுத்துக் கொண்டோம். சில வருடங்கள் சலிக்காமல் தொடர்ந்து உறுதியெடுத்தோம், புத்தாண்டுத் தீர்மானம்போல!

நண்பர்களில் சிலர் காதலர் தினம் பற்றித் தெரியாமலேயே, அதற்கு முன்னராகவே காதல் தோல்வியைச் சந்தித்திருந்தார்கள். ஒருத்தன் காதலைச் சொல்லி 'பல்ப்' வாங்கியிருந்தான். இன்னொருத்தன் பாவம் காதலைச் சொல்லாமலே, அவளுக்குத் தெரியாமலே ஏன் அவனுக்கே கூடத் தெரியாமல் அவள் யாருடனோ ஓடியபிறகுதான் காதலைக் கண்டு பிடித்துத் தீவிர காதல் தோல்வியில் இருந்தான்.

காதல் தோல்வி என்பது அடிக்கடி வரும் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் இந்த மீசை, தாடி எல்லாம் எப்போது வளரும் என்பதுதான் விடைதெரியாக் கேள்வியாக பலருக்கும் இருந்தது. சிலபேருக்கு அரும்புவது போலத் தெரிந்தது. சிலருக்கு பூனை முடியாக! எல்லோரும் அடிக்கடி தடவிப் பார்த்துக்கொள்வது வழமை. காதலுக்கு மீசையும், காதல் தோல்விக்கு தாடியும் அவசியம் என்று மூத்தோர் சொல்லியிருக்கிறார்களே!

தீர்மானத்தோடு மட்டும் நாங்கள் ஒதுங்கியிருக்க, அடுத்த காதலர் தினத்தைக் கொண்டாடும் முயற்சியில் பலர் முனைப்பாக இருந்தார்கள். எங்களுடன் படித்த 'எலி' சந்து பொந்துகளிலெல்லாம் நேரங்காலம் இல்லாமல் சைக்கிளில் பேயாய் திரிந்தான். அவனது லட்சியம் 'அவசரமாக ஒரு லவ்வராக' மாறுவது என்று பலரும் பேசிக்கொண்டார்கள். அப்போது வெளியான 'கொலம்பஸ்' பாட்டு அவனுக்கு அந்த உத்வேகத்தைக் கொடுத்திருந்தது - 'இன்றே நீ அவசரமாய் ஓர் லவ்வராக மாறு!'

னி!

நான் தினமும் போய்வரும் பாதையில் அவள் வீடு இருந்தது. அப்போதெல்லாம் தினமும் ஒருமுறையாவது சந்திக்க நேர்ந்தது. "காலையும் மாலையும் கனியைத் தரிசிப்பது கண்களுக்கு நன்மை பயக்கும்" என்ற மருத்துவக் குறிப்பை நண்பன் ஒருவன் சொன்னான். "காலையில் கனியைப் பார்த்தால் அந்த நாள் கனியநாள் அதாவது இனியநாளாகும்" என்றான் இன்னொருவன். 

கனியின் கன்னங்கள் மாம்பழம் போல இருக்கின்றதென்றும் லைட்டாக கடிக்கவேண்டும் என்று தோன்றுவதாக  ஒருவன் சொன்னான். 'அது எப்பிடிறா எல்லாரும் ஒரேமாதிரியே யோசிக்கிறீங்க' என்று தோன்றியது. அதே ஐடியா என் தீவிர பரிசீலனையில் இருந்ததை நான் வெளியில் சொல்லவில்லை.

தவிர, ஓரிருமுறை அதிகாலைக் கனவுகளில் வந்தது கனியாக இருக்குமோ? என்ற பலத்த சந்தேகமும் எனக்கு இருந்தது. எவ்வளவு  யோசித்தும் வழக்கம்போல கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பது சோகம். 

[முக்கிய குறிப்பு : அந்த அதிகாலைக் கனவு பற்றி நான் இங்கே எழுதுவேன் என யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். அதை இலவசமாக படிக்க அனுமதிக்க மாட்டேன். பின்னாளில் தமிழின் பெஸ்ட் செல்லர் ஆக விளங்கப் போகும் என் இலக்கியப் புத்தகத்தில் வரும்]

நானும் நண்பனும் பார்க்கில், பாரின் மீது தாவி ஏறி சற்றே உயரத்தில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டே அமர்ந்திருந்தோம். நல்ல காற்று, குழு குழுவென நிழல். அருமையான சிச்சுவேசன். யாரது எதிரே? கனி?! அடடே! நான் காண்பது நிஜம்தானா?

சைக்கிளை விட்டிறங்கி வீதியைக் கடக்க முற்பட்டாள். அருகில் தோழி. நம்ப முடியவில்லை. 'நான் இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லையே? அதற்குள் எப்படி அவளுக்குத் தெரிந்திருக்கும்? உண்மையில் காதல் வலிமையானதுதான்!' வியந்துகொண்டே நண்பனைப் பார்த்தேன். கலவரமாகியிருந்தான். 

'சம்பந்தப்பட்ட நானே சைலண்டா இருக்கேன் இவன் எதுக்கு இப்பிடியிருக்கான்?' திரும்பவும் கனியைப் பார்த்தபோது என்னிடமும் கலவரம் தொற்றிக்கொண்டது. அப்போதுதான் சொன்னான். அந்த நாய் கனியிடம் தோழி மூலமாக ப்ரப்போஸ் பண்ணியிருந்ததை! 'அடப்பாவி! முதல்லயே சொல்லமாட்டீங்களாடா?' குதித்திறங்கி ஓடிவிடலாமென நினைத்தேன். அவகாசம் இருக்கவில்லை.

னி சொற்பொழிவை ஆரம்பித்தாள்!

கொடுமையைப் பாருங்கள். சமதளத்தில் நின்றால் ஒருவர் 'பாராட்டுரை' நிகழ்த்தும்போது தலையைக் குனிந்து கொள்ளலாம். உயரத்தில் இருந்ததால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மேலே அண்ணாந்து பார்க்கலாமா? ஆனால் அது வழக்கமில்லையே! தலையை எப்படி வைத்துக் கொள்வது என்பதே அப்போது தலையாய பிரச்சினையாக இருந்தது.

அன்றிலிருந்து என்பாதை மாறியது. கனி வீடிருக்கும் வீதியால் செல்வதை நிறுத்திவிட்டேன். சமீபத்தில் என் பழைய புகைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது. "பச்சப் புள்ள! இப்பிடியா இருந்தோம்? 'சம்பவ'த்துக்குப் பிறகு கனி என்னை அந்த வீதியில் கண்டிருந்தால் நிச்சயம் வழிமறித்துத் தலையில் குட்டியிருப்பாளே! நல்ல முடிவா எடுத்திருக்கேடா!"

காதல் பாதையை மாற்றும். காதலிப்பவனுக்கு மாற்றுதோ இல்லையோ, கூடவே இருக்கிறவனுக்கு சமயத்தில் கன்னாபின்னாவென மாற்றிவிடுகிறது!

* * * * * * * * 

சொல்ல மறந்துவிட்டேன்.

கனிக்கு தமிழ் மொழி ஆளுமை நன்கு கைவரப் பெற்றிருந்தது. அவள் பேசிய சில வசனங்கள், சில வருடங்கள் வரை எனக்குப் புரியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அவளது 'தமிழ்ப் புலமை' மட்டும் காரணமில்லை. அவள் பேசிய முதல் வசனத்திற்குப் பிறகு வேறெதையும் சரியாக உள்வாங்க முடிந்திருக்கவில்லை. அவ்வளவு ஆச்சரியத்தைக் கொடுத்தது அது,

"ஏண்டா உங்களுக்கெல்லாம் அக்காமார்தான் தேவைப்படுதோ?"

9 comments:

 1. /சமதளத்தில் நின்றால் ஒருவர் 'பாராட்டுரை' நிகழ்த்தும்போது தலையைக் குனிந்து கொள்ளலாம். உயரத்தில் இருந்ததால் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
  தலையை எப்படி வைத்துக் கொள்வது என்பதே அப்போது தலையாய பிரச்சினையாக இருந்தது./

  /அவள் பேசிய முதல் வசனத்திற்குப் பிறகு வேறெதையும் சரியாக உள்வாங்க முடிந்திருக்கவில்லை. /

  :)

  ReplyDelete
 2. செம அனுபவம். அப்புறம் அந்த இலக்கிய புத்தகம் எப்போ வெளிவரும்? இப்போவே முன்பதிவு செய்து வைத்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 3. >[முக்கிய குறிப்பு : அந்த அதிகாலைக் கனவு பற்றி நான் இங்கே எழுதுவேன் என யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். அதை இலவசமாக படிக்க அனுமதிக்க மாட்டேன். பின்னாளில் தமிழின் பெஸ்ட் செல்லர் ஆக விளங்கப் போகும் என் இலக்கியப் புத்தகத்தில் வரும். காசு கொடுத்து வாங்கிப் படியுங்கள். தவறவிடாதீர்கள்!]

  தலைப்பு: லைடன் பெனியனும் அதிகாலைப் பனியும்?
  (லைடன் பனியன் உங்கள் காலத்தில் இருந்ததா?)

  ReplyDelete
  Replies
  1. லைடன் பனியனா? தெரியலையே பாஸ்! ஒருவேளை உங்க காலமா இருக்குமோ!!!

   Delete
 4. ஓம் Leydan Garments என்று ஒரு பாக்டரி யாழ்ப்பாணற் ரவுணிலை இருந்தது. அதிலே முக்கியமாக 'பனியன்' செய்வார்கள். யாழ்ப்பாணாப் பெடி, பெட்டைகள் எல்லாம் லைடன் பனியனில்தாண் தொடங்குவினம். பெட்டையள் பிறகு 'கட்சிமாறினாலும்' (100 % உண்மையில்லை) பெடியள் லைடன் பெனியன்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஓ! அப்படியா? இது நடந்த காலப்பகுதி 'கொலம்பஸ்' - ஜீன்ஸ் பாட்டு வந்த 98 ஆம் ஆண்டு. வவுனியாவில் இருந்தேன் அப்போது!

   Delete
 5. காதல் பாதையை மாற்றும். காதலிப்பவனுக்கு மாற்றுதோ இல்லையோ, கூடவே இருக்கிறவனுக்கு சமயத்தில் கன்னாபின்னாவென மாற்றிவிடுகிறது! ha ha ha!!nice.....quote...

  ReplyDelete
 6. இது எப்படி அப்போது(2013) என் பார்வையில் இருந்து,தப்பியது?

  ReplyDelete