Wednesday, March 27, 2013

காத்திருப்பு!


ண்பன் ஒருவனைச் சந்திப்பதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்தேன். எதிரில் வரும் ஒவ்வொரு பேரூந்திலும் அவன் வந்து இறங்குகிறானா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தரித்துச் செல்லும் ஒவ்வொரு பேரூந்தின் நடத்துனரும் நான் ஏறப் போகிறேனா எனப் பார்க்க, நான் வேறு பேரூந்தை எதிர்பார்த்திருக்கிறேன் என்கிற பாவனையில் நான் பார்வையைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன். நேரம் கடந்து கொண்டிருந்தது, கூடவே என் பொறுமையும். இப்படியொரு சூழ்நிலையைச் சந்திக்காதவர்கள் யாராவது கொழும்பில் இருக்கிறார்களா என்ன!

ஒரு மனிதனின் முதல் செயல் காத்திருத்தல். வெளியுலகைக் காண்பதற்காக தாயின் கருவறையில் ஆரம்பிக்கும் காத்திருப்பு இறுதி மூச்சுவரை வரை தொடர்கிறது. வாழ்வெனும் நெடும் பயணத்தில் கலந்து விட்ட தவிர்க்க முடியாத மிக முக்கியமான அம்சம், எப்போதும் யார் பொருட்டேனும், எதன பொருட்டேனும் காத்திருப்பது!

ஓர் நண்பனின் வருகைக்காக அவன் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் எதிரே, சன நடமாட்டம் குறைந்த ஒரு வீதியில் காத்திருப்பது என்பது ஒரு அவஸ்தையான விஷயம்! "காக்கைக்கூட உன்னை கவனிக்காது ஆனால், இந்த உலகமே உன்னையே கவனிப்பதாய் உணர்வாய் - காதலித்துப்பார் " - கவிஞர் வைரமுத்து காதல் பற்றிச் சொன்னது. அது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் சமயங்களில் இது காத்திருத்தலுக்குப் பொருந்தும். 'காரணமின்றிக் காத்திருப்பவர்கள் காட்டிக் கொடுப்பவராகவும்  இருக்கலாம்' தொண்ணூற்றைந்தாம் ஆண்டு வரையிலும் யாழ்ப்பாணத்தின் வீதியோரங்களிலுள்ள சில மரங்களில் மாட்டியிருக்கும் ஒருவரின் படம் வரையப்பட்ட வட்ட வடிவமாக சிறு அறிவுறுத்தல் விளம்பரத்தைத் காணமுடியும்.

சொன்ன நேரத்துக்கு வராத நண்பனின் மீதான சிறு கோபம், யாராவது கவனிக்கிறார்களா என்ற ஒரு உணர்வும், சலிப்பும் ஒவ்வொரு நொடியினையும் யுகமாகத் தோன்றச் செய்யும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எதையாவது செய்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கவே இருக்கிறது செல்பேசி. திறந்தே பார்க்கப்படாத உப்புச்சப்பற்ற குறுஞ்செய்திகளை வாசிப்பதில் கொஞ்சம், பண்டிகை நாட்களில் நடுச் சாமத்தில் வந்து எரிச்சலுற வைக்கும் வாழ்த்துச் செய்திகள் பார்ப்பதில் கொஞ்சம், அலைபேசிச் சேவை வழங்குனரின் சலுகைகள் பற்றிய தூண்டில் அறிவித்தல்களை வாசிப்பதில் கொஞ்சம் எனக்கடந்து செல்கிறது. நீண்ட நாட்களாக தொடர்பின்றியே இருந்த ஒரு நண்பனுடன் தொடர்பு கொண்டு பேசவும் வைத்துவிடுகின்றது.

சில சமயங்களில் சுகமாக, சில சுமையாக, சில கொடுமையானதாக, மேலும் சில வலி மிகுந்ததாக காத்திருத்தலின்  குணம் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த உலகில் வாழும் மனிதர்கள் யாருமே, எல்லா உயிரினங்களுமே யாருக்கோ, எதற்காகவோ காத்துக் கொண்டிருப்பாதாகத் தோன்றுகிறது. சில சமயங்களில் எதற்காகக் காத்திருக்கிறோம் எனப் புரிவதேயில்லை. ஏதோ ஒன்றை அடைந்தபின்னர்தான் 'ஒ இதற்காகத்தான் இவ்வளவு நாட்களாகக் காத்திருந்தோமா!' என ஆச்சரியப்பட வைக்கிறது! காதலின்போதும்,  திருமண வாழ்க்கையிலும் இப்படிச் சொல்பவர்களை, உணர்ந்தவர்களைப் பார்த்திருக்கிறோம்!

காதலியின் வருகைக்கான காதலனின் காத்திருப்பு ஓர் சுகம். ஒரு கவிஞனின் காத்திருப்பு நல்ல கவி வரிகளைக் கொடுக்கிறது. கவிஞனுக்கு காத்திருப்பு கவிதையின் ஊற்று. ஒரு புகைப்படக் கலைஞன் ஒரு நல்ல தருணத்திற்காக விழியில் உயிர் குவித்து காத்திருக்கிறான். அவனுக்கு அது தவம். ஒரு காத்திருத்தலின் முடிவில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்பட்சத்தில் அது ஒரு வரம். இல்லையேல் அது ஓர் கொடுங்கனவு. 

நண்பன் மயூரன் மோட்டார் சைக்கிளில், தன் செல்பேசிக்கு ரீலோட் கார்ட் வாங்கப் போயிருந்தான். அவன் அழைப்புக்காக வெளிநாடொன்றில் காத்திருந்தாள் அவன் வருங்கால மனைவி. திரும்பி வந்தவன் அவன் வீட்டு வாசலிலேயே மெதுவான வேகத்தில் தட்டுப்பட்டு விழுந்திருந்தான். உடலில் எந்தக்காயமும் இல்லாமல் கோமா நிலைக்குப் போயிருந்தான். அவன் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவான் என்ற எதிர்பார்ப்புடன், நம்பிக்கையுடன் காத்திருந்தோம். எங்களை அவன் அதிகம் காக்க வைக்கவில்லை. சில நாட்களிலேயே எங்கள் காத்திருப்பு கொடுங்கனவானது!

ம் வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களில் பெரும்பகுதி காத்திருத்தல்களாலேயே நிரப்பப்பட்டிருக்கின்றன. இதோ இந்த நிமிடத்தில் எங்கோ, ஒரு புது உயிரின் வருகைக்காக மருத்துவமனையில் ஒரு குடும்பம் காத்திருகிறது. வெளிநாடு சென்ற மகனின், கணவனின் வருகையை எதிர்பாத்து வயதான பெற்றோர், மனைவி காத்திருக்கிறார்கள். பிறந்ததிலிருந்து தந்தையின் முகம் தெரியாத குழந்தை ஒன்று அப்பாவைக்காண விமான நிலையத்தில் காத்திருகிறது. நாட்டுக்காகப் போரிடச் சென்ற மகனின் வருகைக்காக ஓர் இராணுவ வீரனின் வயதான தாய் காத்திருக்கிறாள். 

ஒரு பெருமழைக்காக விவசாயி காத்திருக்கிறான். வானம்பார்த்து பூமியும் காத்திருக்கிறது. அதுவே பின்னர் வெயிலுக்காகவும் காத்திருக்கிறது. ஒரு சாதனையை நிகழ்த்துவதற்காக, திறமையை நிரூபிப்பதற்காக ஒரு  விளையாட்டு வீரன் காத்திருக்கிறான். சரியான அங்கீகாரத்துக்காக  ஒரு கலைஞன் காத்திருகிறான். தான் இன்னும் சரியான முறையில் கவனிக்கப் படவில்லையே என்ற ஆதங்கத்துடன் ஒரு படைப்பாளி காத்திருக்கிறான்.

காத்திருத்தல்கள் கற்றுக் கொடுக்கின்றன. ஒவ்வொரு காத்திருப்பும் இரண்டு எதிரெதிரான முடிவுகளைக் கொண்டிருக்கின்றன. பொறுமையைக் கற்றுக் கொடுக்கலாம். அதுவே பொறுமையின்மையையும் ஏற்படுத்தலாம். பக்குவத்தைக் கொடுக்கலாம். வாழ்வின் சாரத்தைப் புரிய வைக்கலாம். ஒரு தத்துவத்தைக் கொடுக்கலாம். நினைத்தது நடக்கும்போது திருப்தியைக் கொடுக்கிறது. எது நிகழும் எனத் தெரியாத காத்திருப்பு ஒரு புதிர். எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றாத காத்திருப்பு ஏமாற்றம், துயர். சில சமயங்களில் முடிவே தெரியாமல் தொடரும் காத்திருப்பு, வலி. தவம், வலி, போராட்டம், சுவாரஷ்யம், வரம், கானல்நீர், கொடுங்கனவு, ஏமாற்றம், அதிருப்தி, சுகம்

வீட்டிலும், அலுவலகத்திலும், வீதியிலும் இன்றைய எம் காத்திருப்புகள் இன்றே மறந்து போய்விடுகின்றன. அதுவே வழமையாகிப் போனதில் எளிதாகக் கடந்து சென்றுவிடுகின்றன. நாளை மறுபடியும் புதிதாக காத்திருக்க ஆரம்பிக்கிறோம். எந்த எதிர்பார்ப்பும், சுவாரஷ்யங்களுமற்ற காத்திருத்தல்கள் எம் நினைவில் தங்குவதில்லை.

காத்திருத்தல்கள் சமயங்களில் மிகுந்த வலி நிறைந்ததாக இருகின்றன. ஆனாலும் எதற்காக காத்திருந்தார்களோ அந்த லட்சியம் ஈடேறும்போது, அந்த ஒரு கணத்தில சுமந்த வலி அனைத்தும் பறந்து போய் விடுகிறது. அந்த ஒரு கணத்துக்காகவே அவர்கள் காத்திருக்கிறார்கள். என்றுமே வரமுடியாத சிலருக்காக எப்போதுமே சிலர் காத்துக் கொண்டிருப்பதும் தொடர்கிறது.

சினிமா பரடைசோ  படத்தில், இளம்வயதில் ஊரைவிட்டுச் சென்ற சல்வதோர் ரோமின் புகழ்பெற்ற இயக்குனராக விளங்குகிறார். சல்வதோரின் தாய், மகன் என்றாவது ஊருக்கு வருவான் எனப் பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருக்கிறாள். அவள் எதிர்பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவன் வருவதில்லை. சிறுவயதில் சல்வதோர் மீது மிகுந்த அன்பு செலுத்திய நலன்விரும்பியாக, சல்வதோர் தந்தை ஸ்தானத்தில் மதிக்கும் அல்ஃபிரடோ இறந்ததும் அவனுக்குத் தகவல் அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறாள் அந்த வயதான் தாய். மனம் நிறைய எதிர்பார்ப்புடன், முகத்தில் எந்த சலனமின்றி எப்போதும்போல ஒரு ஸ்வெட்டரைப் பின்னிக் கொண்டு. மகள் சிரித்துக் கொண்டே "அவன் இந்தமுறையும் வரப்போவதில்லை" எனச்சொல்கிறாள். அம்மா அமைதியாக இருக்கிறாள். அழைப்புமணி ஒலிக்க "அவன்தான்" என்று சொல்லிவிட்டு, எழுந்து செல்கிறாள் அம்மா. அவள் கையிலிருந்த நூல்கண்டு கீழே விழுந்து உருள்கிறது. ஒரு கட்டத்தில் அது உருள்வது நின்று விடுகிறது தாயும், மகனும் சந்தித்துவிட்ட, நீண்ட நாள் காத்திருப்பின் பின்னர் ஒரு தாயின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியான தருணம் அது.

யுத்தம் காரணமாக தாய்மண்ணை விட்டு புலம்பெயர்ந்து வந்தவர்கள் பலர் என்றாவது ஒருநாள் சொந்த மண்ணில் சென்று வாழலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். அதற்கென்றே காத்திருந்து தம் நிறைவேறாத கனவுகளை விட்டுச் சென்றவர்கள் பலர். காணாமல் போனவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் பலர்! புலம்பெயர்ந்து சென்றவர்கள் பலர் முற்று முழுதாகத் தாயகம் திரும்பி, தாம் சிறுவயதில் புரண்டு விளையாடிய சொந்த மண்ணில், வீட்டு முற்றத்தில் வேப்பமரத்தடி  நிழலில் வெற்றுத்தரையில் கண்ணயர்ந்து தூங்க வேண்டும் என்ற கனவுடன் உலகின் எங்கோ ஒரு மூலையில் காத்திருக்கிறார்கள் - அது நடைமுறையில் சாத்தியமாவதில்லை எனத் தெரிந்தபோதும். சாத்தியங்கள் பார்த்துக் கனவுகள் வருவதில்லையே!

நாம் அனைவருமே யாருக்கோ, எதற்காகவோ காத்துக்கொண்டிருக்கிறோம். நாம் காத்திருக்கும் அந்த யாரோ ஒருவர் எப்போதும் வருவதேயில்லை. அந்த ஏதோ ஒன்று எப்போதும் கிடைப்பதேயில்லை. ஆனாலும் நம்பிக்கை என்ற ஆதாரத்தின் அடிப்படையில் நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். அதுவே வாழ்க்கையையும் சுவாரஷ்யமாக்குகிறது. செய்வதற்கு ஏதுமில்லை என்றபோதிலும் ஏதாவது அதிசயம் நிகழ்ந்துவிடாதா என்று எண்ணி காத்திருக்க வைக்கிறது.

கனவுகளைச் சுமந்து கொண்டே காத்திருக்கிறோம். ஒவ்வோருவருக்கும் ஒரு வாழ்நாள் கனவு இருக்கிறது. அது மட்டும் நிகழ்ந்துவிட்டால்? என்ற கற்பனை இருக்கிறது. கனவுகளையும், கற்பனைகளையும் சுமந்து கொண்டே ஒவ்வொரு நாளும் பயணிக்கிறது. அதே போல ஏராளமானோர் ஒரே கனவினைச் சுமந்துகொண்டு காத்திருப்பதும் நிகழ்கிறது. கனவுகள் எல்லாமுமே அவ்வளவு சுலபமாக பலித்துவிடுவதில்லை. காலங்கள் செல்லலாம். ஆனாலும் என்றோ ஒருநாள் நிகழ்ந்துவிடும் என்ற நம்பிக்கை தலைமுறைகள் தாண்டியும் காத்திருக்க வைக்கிறது! 

கனவுகள் என்றாவது நிஜமாகலாம். அதுவரை காத்திருப்போம்.


சிறகுகள் விரியும்...!

( 'வானம் தாண்டிய சிறகுகள்' என்ற தொடருக்காக வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதியது. )
Share This:   FacebookTwitterGoogle+

Friday, March 8, 2013

Life of Pi - கடவுளைத் தேடி!ல்லா ஜீவராசிகளுக்குள்ளும் உணர்ச்சிகள் நிறைந்த ஓர் ஆன்மா உண்டு. அதனை அன்பினால் ஆட்கொள்ள முடியும் என நம்புகிறான் பை. அம்மா சொன்ன கதைகளும், அவள் மூலம் ஏற்பட்ட கடவுள் நம்பிக்கையும் அந்த நம்பிக்கையை உறுதியாக விதைத்துவிடுகிறது.

தனது ஆன்மீக அனுபவத்தைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பும் பை ரிச்சர்ட் பாக்கரிடம் வருகிறான். ரிச்சர்ட் பாக்கர், பையின் தந்தை வைத்திருக்கும் மிருகக் காட்சிச் சாலைக்கு வந்திருக்கும் வங்கப் புலி. அண்ணன் தடுத்தும், கம்பிக் கதவுக்குப் பின்னாலிருந்து நீட்டிய கையில் இறைச்சித் துண்டுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். புலி மெல்ல மெல்ல நெருங்கி வருகிறது. அதன் கண்களையே பார்க்கிறான் பை. அருகில் வந்த புலியும் அவன் கண்களைப் பார்த்துவிட்டு மெதுவாக கையை நோக்கி சற்றே குனிய, அப்பா கத்திக் கொண்டு ஓடி வருகிறார். புலி ஓடிவிட, கோபமும் பதற்றமுமாகப் பேசும் அப்பாவிடம் அதன் கண்ணில் ஆன்மாவைப் பார்த்ததாகச் சொல்கிறான் பை.

"இல்லை! உன்னிடமுள்ள எண்ணத்தையே அதன் கண்ணில் பிரதிபலிக்கக் கண்டிருக்கிறாய். அது மிருகம், ஒருபோதும் உன் நண்பனாக இருக்காது". ஓர் ஆட்டுக் குட்டியை வைத்து பையின் நம்பிக்கையைத் தகர்த்துவிடுகிறார். எதையும் பகுத்தறிந்து நடைமுறையோடு அணுகவேண்டும் எனக் கற்றுக் கொடுக்கிறார்.

- கனடாவில் குடிபெயர்ந்து வாழும் பை(Pi) தன்கதையை ஓர் எழுத்தாளருக்குச் சொல்வதாகப் படம் பயணிக்கிறது.

Pi யின் தந்தை பாண்டிச்சேரியில் மிருகக் காட்சிச்சாலை வைத்திருப்பவர். தொடர்ந்தும் அங்கே இயங்கமுடியாது என்ற சூழலில், அமெரிக்காவில் விலங்குகளை பெரும் தொகைக்கு விற்றுவிட்டு,கனடாவில் குடியேறிவிடலாம் என முடிவுசெய்கிறார் தந்தை. அம்மா, அப்பா, அண்ணனுடன் ஏராளமான விலங்குகளுடன், மனம் நிறைந்த துயரத்துடன் நாட்டைவிட்டுப் பயணிக்கிறான் பை. கடும்புயல் காரணமாக பசுபிக் கடலில் கப்பல் மூழ்க, குடும்பத்தினரை இழந்து ஓர் உயிர்காக்கும் படகில் பை. கூடவே ஓர் காயமடைந்த வரிக்குதிரை, ஓரங்குடான் குரங்கு, கழுதைப்புலி, மற்றும் ரிச்சர்ட் பாக்கர்.

பை -யின் பயணம் முழுவதும் அம்மாவிடம் பெற்றுக் கொண்ட ஆன்மீக சிந்தனையும், அப்பா கற்றுக் கொடுத்த நடைமுறை சார்ந்து யோசிக்கும் பகுத்தறிவும் அவனை கூடவே இருந்து வழிநடத்திச் செல்கிறது.

படகில், கழுதைப்புலி முதலில் வரிக்குதிரையையும், ஒரங்குடானையும் கொல்கிறது. அடுத்தது பை எனும்போது, பை பயத்துடன் அதனை எதிர்க்கத் தயாராகிறான். ஆனால் அதுவரை அங்கே இருந்ததே தெரியாமல் அமைதியாக இருக்கும் ரிச்சர்ட் பாக்கர் ஒரேயடியாகப் பாய்ந்து கழுதைப்புலியைக் கொல்ல, பையும் ரிச்சர்ட் பாக்கரும் மட்டுமே எஞ்சுகிறார்கள்.

யிர் பிழைத்திருத்தல் கேள்விக்குறியாகும்போது எவையெல்லாம் தம்மைத் தக்கவைத்துக்கொள்ளும்? நோய்வாய்ப்பட்ட, உடல்வலிமையை இழந்துவிட்ட  வரிக்குதிரை முதலில் பலியாகிறது. பயத்துடன் புத்திசாலித்தனமும் நிறைந்திருந்தும், மனதில் குட்டியைப் பறிகொடுத்த கவலையுடன் இருக்கும் ஒரங்குடானால் பிழைத்திருக்க முடியவில்லை. வலிமை, நயவஞ்சகத்தனம் நிறைந்த கழுதைப்புலி வரக்கூடிய ஆபத்துக் குறித்தான் விழிப்புணர்வோ, பயமோ இல்லாததால் எதிர்பாராத கணத்தில் அவகாசமே இன்றிப் பலியாகிறது.

மிகுந்த வலிமை, விழிப்புணர்வு, புத்திசாலித்தனம், யதார்த்தம் புரிந்த  பயம் (தாமதித்தால் தன்கதி அவ்வளவுதான் எனப் புரிந்து) கொண்ட புலி பிழைத்துக் கொள்கிறது. இவை எல்லாவற்றையும் விட ஒருபடி மேலான மனிதனால், தானும் பிழைத்து, முடிந்தவரை பிறவற்றையும் காப்பாற்ற முடிகிறது. இந்த மிருகங்கள் ஓர் உருவகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மனத்தின் இயல்பாக, குணங்களாக. அந்தப்படகுகூட அப்படியே! டைட்டானிக் கப்பலில் கூட அவ்வளவு அழகான, முன்னேற்பாடுகளுடன் கூடிய உயிர்காக்கும் படகை நான் (படத்தில்) காணவில்லை. அந்தப்படகு வாழ்க்கைக்கான உருவகமாக இருக்கக் கூடும். வாழ்க்கை அழகானதே!

சிறுவயதில் அம்மாவிடம் கேட்ட கிருஷ்ணன் கதைகளிலிருந்து பையின் ஆன்மீகத் தேடல் தொடங்குகிறது. கடவுளைத் தேடும் ஆவல் பதின்மூன்று வயதில் இயல்பாகவே எல்லோருக்கும் தோன்றுகிறது. அதுவே பையையும் தேடத் தூண்டுகிறது. அவன் விரும்பும் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. தான் வாழ்ந்த சூழலிலிருந்த எல்லா மதங்களையும் புரிந்து கொள்ள முயல்கிறான்.

ஒரு முறை மசூதிக்குச் சென்று பின்னர் வீட்டுக்கு வந்து தொழுது கொண்டிருக்கும்போது, அப்பா பார்க்கிறார். அவன் அப்பாவுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. சாப்பிடும்போது அப்பா சொல்கிறார். "ஒருவன் மூன்று மதங்களைப் பின்பற்ற முடியாது. அப்படிச் செய்ய முயல்கிறான் எனில், அதன் அர்த்தம், அவனுக்கு எதிலுமே முழுமையான நம்பிக்கை இல்லை என்பதே!". அவன் தனக்கான் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அது உதவும் என்கிறார் அம்மா.

தேவாலயத்துக்கு சென்று பாதிரியாரிடம் ஏன் கடவுள் தன குழந்தையை அவ்வளவு கஷ்டப்படுத்துகிறார்? என்று கேட்கிறான். இயேசுவைக் கஷ்டப்படுத்திய கடவுள்மேல் அவனுக்குக் கோபம் வருகிறது. அன்றிரவு மீண்டும் கிருஷ்ணனிடம் வருகிறான். கஷ்டப்படுத்தி அனுபவத்தைக் கொடுக்கும் கடவுளைவிட, கஷ்டத்திலிருந்து காக்கும் கடவுளை விரும்புகிறது அவனது எளிய குழந்தை மனம்.

நீ எதை நினைத்துக் கொண்டு, எப்படி நம்பிக்கொண்டு பார்க்கிறாயோ அதுவாகவே தெரிகிறது. நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய். பை கடவுளாக நினைக்கிறான். அவன் கேட்ட கிருஷ்ணன் கதைகள்கூட அவனை அப்படி நினைக்கத் தூண்டியிருக்கலாம். வலிமை மிக்கவன் அடுத்தவர்களைக் காக்க முன்வரும்போது அவன் கடவுளாகிறான். தன் சக நண்பர்கள் ஒருவரையேனும் இழக்க அவன் விரும்பவில்லை. ஆனாலும் அது சாத்தியமாகவில்லை. நடைமுறை அனுபவத்தைப் புரிந்துகொள்பவன் தன்னையும் காத்துக் கொண்டு புலியையும் காப்பாற்ற விழைகிறான்.

புலியிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஒரு மிதவையைத் தயார் செய்து, படகுடன் இணைத்துக் கட்டி, அதில் தங்கிக் கொள்கிறான். ஒரு முறை மீன்களை வேட்டையாடும் நோக்குடன் கடலில் பாய்ந்த புலி, எதுவும் கிடைக்காமல் அவனை நோக்கி வருகிறது. பை அவசரமாகப் படகில் ஏறிக் கொள்கிறான். புலி படகில் ஏற முயற்சிக்கிறது. முடியவில்லை. எப்போதாவது அது தன்னைக் கொன்றுவிடும் என்று உணரும் பை தான் முந்திக்கொள்ள முடிவு செய்து அதன் தலையை நோக்கி சிறு கோடரியை ஓங்குகிறான். அப்போது மீண்டும் உயிர்ப்பிச்சை கேட்டு இறைஞ்சுவதுபோலிருக்கும் அதன் கண்களைச் சந்திக்கிறான். அதனைக் காப்பாற்றுகிறான்.

பை ஒன்றைப் புரிந்துகொள்கிறான். எப்போதும் இந்தப் புலிக்கு உணவு கிடைத்துக் கொண்டேயிருக்கவேண்டும் இல்லாதுபோனால் தன்னைக் கொன்றுவிடும். புலிக்கும் உணவு கொடுத்துக்கொண்டே தன்னையும் காப்பாற்றியாக வேண்டும் என்ற உந்துதலே அவனை உயிர்ப்புடன் இயங்கவைக்கிறது. அடிக்கடி உயிரைப்பணயம் வைத்து, படகுக்கும், மிதவைக்கும் இடையில் அல்லாடுவதை விடுத்து, ரிச்சர்ட் பாக்கருடன் ஒரே படகில் தங்கிவிடலாம் என யோசிக்கிறான். அதனைப் பழக்கப்படுத்திக் கொள்ள விழைகிறான். ஆத்மரீதியான புரிதலுடனோ அல்லது பலவீனப்பட்ட நிலையில், தனித்திருத்தல் சாத்தியமற்ற சூழலை உணர்ந்தோ என்னவோ, முதலில் முரண்டுபண்ணி, பயந்து, அடங்கி ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்துவிடுகிறது ரிச்சர்ட் பாக்கர்.


டல் எல்லையற்றுப் பரந்து விரிந்திருக்கிறது. ஏராளமான கற்பனைகளுக்கு ஊற்றாக இருக்கிறது. நம் மனம் போன்றது. ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் மனம், ஆழம் செல்ல அமைதியில் ஆழ்ந்து விடுகிறது. சலனமின்றி, ஆழ்மனதைக் கவனிப்பதைத் தியானம் சாத்தியமாக்குகிறது. மனதை ஒருமுகப்படுத்தி, ஒன்றிப்போய் ஈடுபடும் எந்த ஒரு செயலும் தியானமாகிறது.
ரிச்சர்ட் பாக்கர் என்ற புலியின் மனதில் காடு வியாபித்திருக்கிறது. அதன் தேவைகள் அதிகம் இல்லை. இந்த வேளைக்கான உணவு கிடைக்கிறதா? என்பது மட்டுமே அதன் இந்தக்கணத்துக்கான தேவை. அதைப் பெற்றுக் கொள்வதற்கான வேட்டை மட்டுமே அதன் வேலை, இலட்சியம், தேடல் எல்லாமே. அதுவே அது மனம் ஒருமித்து செய்யும் தியானம்.

ரிச்சர்ட் பாக்கர் குனிந்து கடலைப்பார்க்கிறது. கடல்தான் தற்போதைய அதன் உணவுக்கான மூலம். அதன் தற்போதைய காடு. காட்டு விலங்குகள் எல்லாம் கடலுக்குள் நீந்தி வருவதாக அதற்குத் தோன்றுகிறது. அதன் மனதில் நிறைந்துள்ள காடு கடலில் பிரதிபலிக்கிறது.

பை கடலைப் பார்க்கும்போது, அவன் சிறுவயதில் புத்தகத்தில் பார்த்த கிருஷ்ணனின் வாய்க்குள் தெரிந்த பிரபஞ்சத்தையொத்த காட்சிகள் தோன்றி, அம்மா போட்ட கோலங்கள் தோன்றிக் கலைந்து, அம்மாவின் முகம் தெரிகிறது. அம்மா அவன் மனதில் பதிந்து சென்ற ஆன்மிகக் கதைகள், கருத்துகளே அவன் மனதில் வியாபித்துள்ளன. அவனைக் கடவுளாக மாறத் தூண்டியதும் அதுதான். அதுவே அவன் கண்களுக்குத் தெரிகிறது.

முன்பு பையின் தந்தை கூறியது போலவே நிகழ்கிறது. எதை நினைக்கிறார்களோ, எதை உணர்கிறார்களோ இன்னொரு வகையில் மனதில் எந்த தியானத்தில் இருக்கிறார்களோ அதையே கடலில் பிரதிபலிக்கக் காண்கிறார்கள், பையும் புலியும்.

யார் கடவுள்? தனக்கான தேவைகளை தன்னால் நிறைவேற்ற, பெற்றுக்கொள்ள இயலுகின்ற வரையில், முடியும் என்ற நம்பிக்கை உள்ளவரையில் கடவுளுக்கான தேவையில்லை. கடவுளின் இருப்பைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை.

ரிச்சர்ட் பாக்கருக்கான உணவு கடலில் நிறைந்திருந்தும், அருகிலிருந்தும் அதனால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. எதுவும் இயலாத நிலையில் அதற்கு ஒரு கடவுள் அவசியம் தேவை. ஆக, பை அதற்குக் கடவுளாகத் தோன்றியிருக்கக் கூடுமோ? கடலைப் பார்த்துக் கொண்டிருந்த ரிச்சர்ட் பாக்கர் எதையோ உணர்ந்ததுபோல, திகைத்துப் போனது போல பையைக் கூர்ந்து பார்க்கிறது.

ஒருவர் எப்போது மாறுகிறார்? யாருக்கு கடவுளாக தோன்ற முடியும்? எந்த நேரத்தில் யாருக்கு கடவுளின் தேவை இருக்கிறதோ, யாரால் உணர்ந்துகொள்ள முடிகிறதோ அவர்களுக்கு மட்டுமே. சந்தர்ப்பங்கள் சிலரைக் கடவுளாகத் தோன்றச் செய்கின்றன. அந்தக் கடவுள்களே அதனை அறிந்திருப்பதில்லை.

பை தன்னையும் ரிச்சர்ட் பாக்கரையும் காத்துப் பத்திரமாகக் கரையேற்றுகிறான். ரிச்சர்ட் பாக்கர் தன் இனிய நண்பனை, சக பிராணியை ஆத்மரீதியாக புரிந்துகொண்டுள்ளதாயின் அது ஒரு முறை தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதே பையின் எதிர்பார்ப்பு. அது, அவனைப் பொருட்படுத்தாது, தன்பாட்டுக்குச் சென்றுவிடுகிறது. அதுவே , இறுதிவரை அவனுக்கு மிகத்துயரம் தரக் கூடியதாக அமைந்துவிடுகிறது.

கடவுள் எதனையும் எதிர்பார்ப்பதில்லை. உயிர் பிழைத்தலுக்கான போராட்டமும், இன்னோர் உயிரைக் காப்பாற்றுவதற்கான உத்வேகமுமாக, கடலில் கடவுகளாக மாறியிருந்த பை உண்மையில் தன் மனதளவில் சராசரி மனிதனாகவே இருக்கிறான் போலும். தேவை தீர்ந்ததும் யாரும் கடவுளைப் பற்றிக் கவலை கொள்வதில்லை அல்லது அவன் தந்தை சொல்லியது போல அது என்றுமே அவன் நண்பன் கிடையாது. வேறு வழியின்றி அவனுடன் ஓர் இணக்கப்பாட்டுடன் வாழ்ந்திருந்தது என்றே கொள்ளலாம். அது தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக, எளிமையானதாக இருக்கிறது.

வாழ்க்கையில் நிகழும் பல சம்பவங்களைத் தர்க்க ரீதியாக நிறுவ முடிவதில்லை. ஆயினும் அதுவே எதிர்பார்க்கப்படுகிறது. உண்மை நம்புவதற்கு எளிமையாக இருப்பது இன்னும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

பை காப்பாற்றப்பட்டபின், கடலில் நிகழ்ந்ததாகச் சொல்கிற கதையை விசாரணைக்கு வந்த கப்பல்துறை அதிகாரிகளால் நம்ப முடியவில்லை. அவர்களுக்காக இன்னோர் கதையைச் சொல்கிறான். அதில் காலுடைந்த ஜப்பானிய மாலுமி (வரிக்குதிரை), பையின் அம்மா(ஒரங்குடான்), முன்பு கப்பலில் வம்பிழுத்த சமையல்காரன் (கழுதைப்புலி), புலி(பை) நால்வரும் படகில். பசி காரணமாக ஜப்பானிய மாலுமையைக் கொன்று உண்கிறான் சமையல்காரன். அம்மா பையைத் தப்ப வைக்கிறாள். சமையல்காரன் அம்மாவையும் கொல்ல, பை அவனைக் கொன்றுவிடுகிறான். இப்போது, எந்தக் கதையை நம்ப விரும்புகிறீர்கள் என்கிறான். முதலாவதையே தெரிவு செய்கின்றனர் அதிகாரிகள். எழுத்தாளரும் அதையே தெரிவு செய்கிறார்.

உண்மை பல சந்தர்ப்பங்களில் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. புரிந்து கொள்பவரின் அடிப்படையிலேயே அது உணர்ந்துகொள்ளப்படுகிறது. பை புரிந்த கொண்ட உண்மை, ரிச்சர்ட் பாக்கர் தனக்கான வழியைக் கண்டுகொண்டதும் பையை மறந்துவிட்டது. ஆனால் உண்மை?

ரிச்சர்ட் பாக்கர் படகிலிருந்து தாவியிறங்குகிறது. எதிரில் பரந்து விரிந்த கானகம் அதன் கண்களுக்கு பை போலவே தோன்றுகிறது. ரிச்சர்ட் பாக்கர் ஓர் யோகிபோல வாழ்கிறது. அது என்றும் தன் தியானத்தை விட்டு விலகுவதில்லை. கடவுளைத் தேடிப்போவதுமில்லை. தனது தேவையைப் பெற்றுக் கொள்ளும் இடத்திலேயே தன் கடவுளைக் கண்டுகொள்கிறது.அதன் கடவுளான பை காடு முழுவதும் வியாபித்திருக்கக் காண்கிறது. தன் கடவுளை எதிரில் கண்டபிறகு, அது திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

இது பையிடம் கதை கேட்டுக் கொண்டிருந்த எழுத்தாளனின் மனதில் தோன்றிய அழகான கற்பனையாகவும் இருக்கலாம். அது அவ்வளவு அற்புதமானதாக, எளிமையானதாக, மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருக்கிறது எனும்போது, தர்க்க ரீதியாக ஆராயாமல் அதனை உண்மை என ஏற்றுக் கொள்ளவே மனம் என்றும் விரும்புகிறது.

Share This:   FacebookTwitterGoogle+

Followers

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |