நண்பன் ஒருவனைச் சந்திப்பதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்தேன். எதிரில் வரும் ஒவ்வொரு பேரூந்திலும் அவன் வந்து இறங்குகிறானா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தரித்துச் செல்லும் ஒவ்வொரு பேரூந்தின் நடத்துனரும் நான் ஏறப் போகிறேனா எனப் பார்க்க, நான் வேறு பேரூந்தை எதிர்பார்த்திருக்கிறேன் என்கிற பாவனையில் நான் பார்வையைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன். நேரம் கடந்து கொண்டிருந்தது, கூடவே என் பொறுமையும். இப்படியொரு சூழ்நிலையைச் சந்திக்காதவர்கள் யாராவது கொழும்பில் இருக்கிறார்களா என்ன!
ஒரு மனிதனின் முதல் செயல் காத்திருத்தல். வெளியுலகைக் காண்பதற்காக தாயின் கருவறையில் ஆரம்பிக்கும் காத்திருப்பு இறுதி மூச்சுவரை வரை தொடர்கிறது. வாழ்வெனும் நெடும் பயணத்தில் கலந்து விட்ட தவிர்க்க முடியாத மிக முக்கியமான அம்சம், எப்போதும் யார் பொருட்டேனும், எதன பொருட்டேனும் காத்திருப்பது!
ஓர் நண்பனின் வருகைக்காக அவன் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் எதிரே, சன நடமாட்டம் குறைந்த ஒரு வீதியில் காத்திருப்பது என்பது ஒரு அவஸ்தையான விஷயம்! "காக்கைக்கூட உன்னை கவனிக்காது ஆனால், இந்த உலகமே உன்னையே கவனிப்பதாய் உணர்வாய் - காதலித்துப்பார் " - கவிஞர் வைரமுத்து காதல் பற்றிச் சொன்னது. அது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் சமயங்களில் இது காத்திருத்தலுக்குப் பொருந்தும். 'காரணமின்றிக் காத்திருப்பவர்கள் காட்டிக் கொடுப்பவராகவும் இருக்கலாம்' தொண்ணூற்றைந்தாம் ஆண்டு வரையிலும் யாழ்ப்பாணத்தின் வீதியோரங்களிலுள்ள சில மரங்களில் மாட்டியிருக்கும் ஒருவரின் படம் வரையப்பட்ட வட்ட வடிவமாக சிறு அறிவுறுத்தல் விளம்பரத்தைத் காணமுடியும்.
சொன்ன நேரத்துக்கு வராத நண்பனின் மீதான சிறு கோபம், யாராவது கவனிக்கிறார்களா என்ற ஒரு உணர்வும், சலிப்பும் ஒவ்வொரு நொடியினையும் யுகமாகத் தோன்றச் செய்யும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எதையாவது செய்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கவே இருக்கிறது செல்பேசி. திறந்தே பார்க்கப்படாத உப்புச்சப்பற்ற குறுஞ்செய்திகளை வாசிப்பதில் கொஞ்சம், பண்டிகை நாட்களில் நடுச் சாமத்தில் வந்து எரிச்சலுற வைக்கும் வாழ்த்துச் செய்திகள் பார்ப்பதில் கொஞ்சம், அலைபேசிச் சேவை வழங்குனரின் சலுகைகள் பற்றிய தூண்டில் அறிவித்தல்களை வாசிப்பதில் கொஞ்சம் எனக்கடந்து செல்கிறது. நீண்ட நாட்களாக தொடர்பின்றியே இருந்த ஒரு நண்பனுடன் தொடர்பு கொண்டு பேசவும் வைத்துவிடுகின்றது.
சில சமயங்களில் சுகமாக, சில சுமையாக, சில கொடுமையானதாக, மேலும் சில வலி மிகுந்ததாக காத்திருத்தலின் குணம் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த உலகில் வாழும் மனிதர்கள் யாருமே, எல்லா உயிரினங்களுமே யாருக்கோ, எதற்காகவோ காத்துக் கொண்டிருப்பாதாகத் தோன்றுகிறது. சில சமயங்களில் எதற்காகக் காத்திருக்கிறோம் எனப் புரிவதேயில்லை. ஏதோ ஒன்றை அடைந்தபின்னர்தான் 'ஒ இதற்காகத்தான் இவ்வளவு நாட்களாகக் காத்திருந்தோமா!' என ஆச்சரியப்பட வைக்கிறது! காதலின்போதும், திருமண வாழ்க்கையிலும் இப்படிச் சொல்பவர்களை, உணர்ந்தவர்களைப் பார்த்திருக்கிறோம்!
காதலியின் வருகைக்கான காதலனின் காத்திருப்பு ஓர் சுகம். ஒரு கவிஞனின் காத்திருப்பு நல்ல கவி வரிகளைக் கொடுக்கிறது. கவிஞனுக்கு காத்திருப்பு கவிதையின் ஊற்று. ஒரு புகைப்படக் கலைஞன் ஒரு நல்ல தருணத்திற்காக விழியில் உயிர் குவித்து காத்திருக்கிறான். அவனுக்கு அது தவம். ஒரு காத்திருத்தலின் முடிவில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்பட்சத்தில் அது ஒரு வரம். இல்லையேல் அது ஓர் கொடுங்கனவு.
நண்பன் மயூரன் மோட்டார் சைக்கிளில், தன் செல்பேசிக்கு ரீலோட் கார்ட் வாங்கப் போயிருந்தான். அவன் அழைப்புக்காக வெளிநாடொன்றில் காத்திருந்தாள் அவன் வருங்கால மனைவி. திரும்பி வந்தவன் அவன் வீட்டு வாசலிலேயே மெதுவான வேகத்தில் தட்டுப்பட்டு விழுந்திருந்தான். உடலில் எந்தக்காயமும் இல்லாமல் கோமா நிலைக்குப் போயிருந்தான். அவன் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவான் என்ற எதிர்பார்ப்புடன், நம்பிக்கையுடன் காத்திருந்தோம். எங்களை அவன் அதிகம் காக்க வைக்கவில்லை. சில நாட்களிலேயே எங்கள் காத்திருப்பு கொடுங்கனவானது!
நம் வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களில் பெரும்பகுதி காத்திருத்தல்களாலேயே நிரப்பப்பட்டிருக்கின்றன. இதோ இந்த நிமிடத்தில் எங்கோ, ஒரு புது உயிரின் வருகைக்காக மருத்துவமனையில் ஒரு குடும்பம் காத்திருகிறது. வெளிநாடு சென்ற மகனின், கணவனின் வருகையை எதிர்பாத்து வயதான பெற்றோர், மனைவி காத்திருக்கிறார்கள். பிறந்ததிலிருந்து தந்தையின் முகம் தெரியாத குழந்தை ஒன்று அப்பாவைக்காண விமான நிலையத்தில் காத்திருகிறது. நாட்டுக்காகப் போரிடச் சென்ற மகனின் வருகைக்காக ஓர் இராணுவ வீரனின் வயதான தாய் காத்திருக்கிறாள்.
ஒரு பெருமழைக்காக விவசாயி காத்திருக்கிறான். வானம்பார்த்து பூமியும் காத்திருக்கிறது. அதுவே பின்னர் வெயிலுக்காகவும் காத்திருக்கிறது. ஒரு சாதனையை நிகழ்த்துவதற்காக, திறமையை நிரூபிப்பதற்காக ஒரு விளையாட்டு வீரன் காத்திருக்கிறான். சரியான அங்கீகாரத்துக்காக ஒரு கலைஞன் காத்திருகிறான். தான் இன்னும் சரியான முறையில் கவனிக்கப் படவில்லையே என்ற ஆதங்கத்துடன் ஒரு படைப்பாளி காத்திருக்கிறான்.
காத்திருத்தல்கள் கற்றுக் கொடுக்கின்றன. ஒவ்வொரு காத்திருப்பும் இரண்டு எதிரெதிரான முடிவுகளைக் கொண்டிருக்கின்றன. பொறுமையைக் கற்றுக் கொடுக்கலாம். அதுவே பொறுமையின்மையையும் ஏற்படுத்தலாம். பக்குவத்தைக் கொடுக்கலாம். வாழ்வின் சாரத்தைப் புரிய வைக்கலாம். ஒரு தத்துவத்தைக் கொடுக்கலாம். நினைத்தது நடக்கும்போது திருப்தியைக் கொடுக்கிறது. எது நிகழும் எனத் தெரியாத காத்திருப்பு ஒரு புதிர். எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றாத காத்திருப்பு ஏமாற்றம், துயர். சில சமயங்களில் முடிவே தெரியாமல் தொடரும் காத்திருப்பு, வலி. தவம், வலி, போராட்டம், சுவாரஷ்யம், வரம், கானல்நீர், கொடுங்கனவு, ஏமாற்றம், அதிருப்தி, சுகம்
வீட்டிலும், அலுவலகத்திலும், வீதியிலும் இன்றைய எம் காத்திருப்புகள் இன்றே மறந்து போய்விடுகின்றன. அதுவே வழமையாகிப் போனதில் எளிதாகக் கடந்து சென்றுவிடுகின்றன. நாளை மறுபடியும் புதிதாக காத்திருக்க ஆரம்பிக்கிறோம். எந்த எதிர்பார்ப்பும், சுவாரஷ்யங்களுமற்ற காத்திருத்தல்கள் எம் நினைவில் தங்குவதில்லை.
காத்திருத்தல்கள் சமயங்களில் மிகுந்த வலி நிறைந்ததாக இருகின்றன. ஆனாலும் எதற்காக காத்திருந்தார்களோ அந்த லட்சியம் ஈடேறும்போது, அந்த ஒரு கணத்தில சுமந்த வலி அனைத்தும் பறந்து போய் விடுகிறது. அந்த ஒரு கணத்துக்காகவே அவர்கள் காத்திருக்கிறார்கள். என்றுமே வரமுடியாத சிலருக்காக எப்போதுமே சிலர் காத்துக் கொண்டிருப்பதும் தொடர்கிறது.
சினிமா பரடைசோ படத்தில், இளம்வயதில் ஊரைவிட்டுச் சென்ற சல்வதோர் ரோமின் புகழ்பெற்ற இயக்குனராக விளங்குகிறார். சல்வதோரின் தாய், மகன் என்றாவது ஊருக்கு வருவான் எனப் பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருக்கிறாள். அவள் எதிர்பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவன் வருவதில்லை. சிறுவயதில் சல்வதோர் மீது மிகுந்த அன்பு செலுத்திய நலன்விரும்பியாக, சல்வதோர் தந்தை ஸ்தானத்தில் மதிக்கும் அல்ஃபிரடோ இறந்ததும் அவனுக்குத் தகவல் அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறாள் அந்த வயதான் தாய். மனம் நிறைய எதிர்பார்ப்புடன், முகத்தில் எந்த சலனமின்றி எப்போதும்போல ஒரு ஸ்வெட்டரைப் பின்னிக் கொண்டு. மகள் சிரித்துக் கொண்டே "அவன் இந்தமுறையும் வரப்போவதில்லை" எனச்சொல்கிறாள். அம்மா அமைதியாக இருக்கிறாள். அழைப்புமணி ஒலிக்க "அவன்தான்" என்று சொல்லிவிட்டு, எழுந்து செல்கிறாள் அம்மா. அவள் கையிலிருந்த நூல்கண்டு கீழே விழுந்து உருள்கிறது. ஒரு கட்டத்தில் அது உருள்வது நின்று விடுகிறது தாயும், மகனும் சந்தித்துவிட்ட, நீண்ட நாள் காத்திருப்பின் பின்னர் ஒரு தாயின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியான தருணம் அது.
யுத்தம் காரணமாக தாய்மண்ணை விட்டு புலம்பெயர்ந்து வந்தவர்கள் பலர் என்றாவது ஒருநாள் சொந்த மண்ணில் சென்று வாழலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். அதற்கென்றே காத்திருந்து தம் நிறைவேறாத கனவுகளை விட்டுச் சென்றவர்கள் பலர். காணாமல் போனவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் பலர்! புலம்பெயர்ந்து சென்றவர்கள் பலர் முற்று முழுதாகத் தாயகம் திரும்பி, தாம் சிறுவயதில் புரண்டு விளையாடிய சொந்த மண்ணில், வீட்டு முற்றத்தில் வேப்பமரத்தடி நிழலில் வெற்றுத்தரையில் கண்ணயர்ந்து தூங்க வேண்டும் என்ற கனவுடன் உலகின் எங்கோ ஒரு மூலையில் காத்திருக்கிறார்கள் - அது நடைமுறையில் சாத்தியமாவதில்லை எனத் தெரிந்தபோதும். சாத்தியங்கள் பார்த்துக் கனவுகள் வருவதில்லையே!
நாம் அனைவருமே யாருக்கோ, எதற்காகவோ காத்துக்கொண்டிருக்கிறோம். நாம் காத்திருக்கும் அந்த யாரோ ஒருவர் எப்போதும் வருவதேயில்லை. அந்த ஏதோ ஒன்று எப்போதும் கிடைப்பதேயில்லை. ஆனாலும் நம்பிக்கை என்ற ஆதாரத்தின் அடிப்படையில் நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். அதுவே வாழ்க்கையையும் சுவாரஷ்யமாக்குகிறது. செய்வதற்கு ஏதுமில்லை என்றபோதிலும் ஏதாவது அதிசயம் நிகழ்ந்துவிடாதா என்று எண்ணி காத்திருக்க வைக்கிறது.
கனவுகளைச் சுமந்து கொண்டே காத்திருக்கிறோம். ஒவ்வோருவருக்கும் ஒரு வாழ்நாள் கனவு இருக்கிறது. அது மட்டும் நிகழ்ந்துவிட்டால்? என்ற கற்பனை இருக்கிறது. கனவுகளையும், கற்பனைகளையும் சுமந்து கொண்டே ஒவ்வொரு நாளும் பயணிக்கிறது. அதே போல ஏராளமானோர் ஒரே கனவினைச் சுமந்துகொண்டு காத்திருப்பதும் நிகழ்கிறது. கனவுகள் எல்லாமுமே அவ்வளவு சுலபமாக பலித்துவிடுவதில்லை. காலங்கள் செல்லலாம். ஆனாலும் என்றோ ஒருநாள் நிகழ்ந்துவிடும் என்ற நம்பிக்கை தலைமுறைகள் தாண்டியும் காத்திருக்க வைக்கிறது!
கனவுகள் என்றாவது நிஜமாகலாம். அதுவரை காத்திருப்போம்.
சிறகுகள் விரியும்...!
( 'வானம் தாண்டிய சிறகுகள்' என்ற தொடருக்காக வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதியது. )
இதை நீங்கள் குறும்படமாக எடுக்கலாம் அருமை நண்பரே !!
ReplyDeletetrue and touching....
ReplyDeleteவணக்கம்,ஜீ!அருமையான காத்திருப்பு.///நானும் காத்திருக்கிறேன்,நான் பிறந்த வளர்ந்த வீட்டை இன்று விடுவார்கள் நாளை விடுவார்கள் என்று..................
ReplyDeleteயுத்தம் காரணமாக தாய்மண்ணை விட்டு புலம்பெயர்ந்து வந்தவர்கள் பலர் என்றாவது ஒருநாள் சொந்த மண்ணில் சென்று வாழலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். அதற்கென்றே காத்திருந்து தம் நிறைவேறாத கனவுகளை விட்டுச் சென்றவர்கள் பலர். காணாமல் போனவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் பலர்! புலம்பெயர்ந்து சென்றவர்கள் பலர் முற்று முழுதாகத் தாயகம் திரும்பி, தாம் சிறுவயதில் புரண்டு விளையாடிய சொந்த மண்ணில், வீட்டு முற்றத்தில் வேப்பமரத்தடி நிழலில் வெற்றுத்தரையில் கண்ணயர்ந்து தூங்க வேண்டும் என்ற கனவுடன் உலகின் எங்கோ ஒரு மூலையில் காத்திருக்கிறார்கள்//
ReplyDeleteகண்ணில் கண்ணீர் துளிகள் தானாகவே பொங்கிவிட்டது இந்த வரிகளைப் படித்ததும்....
அருமையான பதிவு
ReplyDeleteமுதல் தடவையாக உங்கள் பதிவை வாசித்து விட்டு கண்கலங்கினேன். நாம் யாருக்கோ எதற்கோ வாழ்நாளில் காத்திருக்கத்தான் செய்கிறோம். "நாம் காத்திருக்கும் அந்த யாரோ ஒருவர் எப்போதும் வருவதேயில்லை. அந்த ஏதோ ஒன்று எப்போதும் கிடைப்பதேயில்லை. ஆனாலும் நம்பிக்கை என்ற ஆதாரத்தின் அடிப்படையில் நாம் காத்துக்கொண்டிருக்கிறோம்." இந்த வரிகள் எவ்வளவு உண்மை.. காத்திருப்பு ரொம்பக் கொடுமையானது. அதுவும் எல்லாம் முடிந்து போனது தெரிந்தும் இனிமேல் வரவே மாட்டார் எனத்தெரிந்தும் கடைசி வரை காத்திருப்பது ரொம்பக்கொடுமை... என்றாவது நாம் எதிர் பார்ப்பது நிஜமாக வேண்டும்.. நம்பிக்கை தான் வாழ்க்கை..
ReplyDelete