எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் உணர்ச்சிகள் நிறைந்த ஓர் ஆன்மா உண்டு. அதனை அன்பினால் ஆட்கொள்ள முடியும் என நம்புகிறான் பை. அம்மா சொன்ன கதைகளும், அவள் மூலம் ஏற்பட்ட கடவுள் நம்பிக்கையும் அந்த நம்பிக்கையை உறுதியாக விதைத்துவிடுகிறது.
தனது ஆன்மீக அனுபவத்தைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பும் பை ரிச்சர்ட் பாக்கரிடம் வருகிறான். ரிச்சர்ட் பாக்கர், பையின் தந்தை வைத்திருக்கும் மிருகக் காட்சிச் சாலைக்கு வந்திருக்கும் வங்கப் புலி. அண்ணன் தடுத்தும், கம்பிக் கதவுக்குப் பின்னாலிருந்து நீட்டிய கையில் இறைச்சித் துண்டுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். புலி மெல்ல மெல்ல நெருங்கி வருகிறது. அதன் கண்களையே பார்க்கிறான் பை. அருகில் வந்த புலியும் அவன் கண்களைப் பார்த்துவிட்டு மெதுவாக கையை நோக்கி சற்றே குனிய, அப்பா கத்திக் கொண்டு ஓடி வருகிறார். புலி ஓடிவிட, கோபமும் பதற்றமுமாகப் பேசும் அப்பாவிடம் அதன் கண்ணில் ஆன்மாவைப் பார்த்ததாகச் சொல்கிறான் பை.
"இல்லை! உன்னிடமுள்ள எண்ணத்தையே அதன் கண்ணில் பிரதிபலிக்கக் கண்டிருக்கிறாய். அது மிருகம், ஒருபோதும் உன் நண்பனாக இருக்காது". ஓர் ஆட்டுக் குட்டியை வைத்து பையின் நம்பிக்கையைத் தகர்த்துவிடுகிறார். எதையும் பகுத்தறிந்து நடைமுறையோடு அணுகவேண்டும் எனக் கற்றுக் கொடுக்கிறார்.
- கனடாவில் குடிபெயர்ந்து வாழும் பை(Pi) தன்கதையை ஓர் எழுத்தாளருக்குச் சொல்வதாகப் படம் பயணிக்கிறது.
Pi யின் தந்தை பாண்டிச்சேரியில் மிருகக் காட்சிச்சாலை வைத்திருப்பவர். தொடர்ந்தும் அங்கே இயங்கமுடியாது என்ற சூழலில், அமெரிக்காவில் விலங்குகளை பெரும் தொகைக்கு விற்றுவிட்டு,கனடாவில் குடியேறிவிடலாம் என முடிவுசெய்கிறார் தந்தை. அம்மா, அப்பா, அண்ணனுடன் ஏராளமான விலங்குகளுடன், மனம் நிறைந்த துயரத்துடன் நாட்டைவிட்டுப் பயணிக்கிறான் பை. கடும்புயல் காரணமாக பசுபிக் கடலில் கப்பல் மூழ்க, குடும்பத்தினரை இழந்து ஓர் உயிர்காக்கும் படகில் பை. கூடவே ஓர் காயமடைந்த வரிக்குதிரை, ஓரங்குடான் குரங்கு, கழுதைப்புலி, மற்றும் ரிச்சர்ட் பாக்கர்.
பை -யின் பயணம் முழுவதும் அம்மாவிடம் பெற்றுக் கொண்ட ஆன்மீக சிந்தனையும், அப்பா கற்றுக் கொடுத்த நடைமுறை சார்ந்து யோசிக்கும் பகுத்தறிவும் அவனை கூடவே இருந்து வழிநடத்திச் செல்கிறது.
படகில், கழுதைப்புலி முதலில் வரிக்குதிரையையும், ஒரங்குடானையும் கொல்கிறது. அடுத்தது பை எனும்போது, பை பயத்துடன் அதனை எதிர்க்கத் தயாராகிறான். ஆனால் அதுவரை அங்கே இருந்ததே தெரியாமல் அமைதியாக இருக்கும் ரிச்சர்ட் பாக்கர் ஒரேயடியாகப் பாய்ந்து கழுதைப்புலியைக் கொல்ல, பையும் ரிச்சர்ட் பாக்கரும் மட்டுமே எஞ்சுகிறார்கள்.
உயிர் பிழைத்திருத்தல் கேள்விக்குறியாகும்போது எவையெல்லாம் தம்மைத் தக்கவைத்துக்கொள்ளும்? நோய்வாய்ப்பட்ட, உடல்வலிமையை இழந்துவிட்ட வரிக்குதிரை முதலில் பலியாகிறது. பயத்துடன் புத்திசாலித்தனமும் நிறைந்திருந்தும், மனதில் குட்டியைப் பறிகொடுத்த கவலையுடன் இருக்கும் ஒரங்குடானால் பிழைத்திருக்க முடியவில்லை. வலிமை, நயவஞ்சகத்தனம் நிறைந்த கழுதைப்புலி வரக்கூடிய ஆபத்துக் குறித்தான் விழிப்புணர்வோ, பயமோ இல்லாததால் எதிர்பாராத கணத்தில் அவகாசமே இன்றிப் பலியாகிறது.
மிகுந்த வலிமை, விழிப்புணர்வு, புத்திசாலித்தனம், யதார்த்தம் புரிந்த பயம் (தாமதித்தால் தன்கதி அவ்வளவுதான் எனப் புரிந்து) கொண்ட புலி பிழைத்துக் கொள்கிறது. இவை எல்லாவற்றையும் விட ஒருபடி மேலான மனிதனால், தானும் பிழைத்து, முடிந்தவரை பிறவற்றையும் காப்பாற்ற முடிகிறது. இந்த மிருகங்கள் ஓர் உருவகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மனத்தின் இயல்பாக, குணங்களாக. அந்தப்படகுகூட அப்படியே! டைட்டானிக் கப்பலில் கூட அவ்வளவு அழகான, முன்னேற்பாடுகளுடன் கூடிய உயிர்காக்கும் படகை நான் (படத்தில்) காணவில்லை. அந்தப்படகு வாழ்க்கைக்கான உருவகமாக இருக்கக் கூடும். வாழ்க்கை அழகானதே!
சிறுவயதில் அம்மாவிடம் கேட்ட கிருஷ்ணன் கதைகளிலிருந்து பையின் ஆன்மீகத் தேடல் தொடங்குகிறது. கடவுளைத் தேடும் ஆவல் பதின்மூன்று வயதில் இயல்பாகவே எல்லோருக்கும் தோன்றுகிறது. அதுவே பையையும் தேடத் தூண்டுகிறது. அவன் விரும்பும் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. தான் வாழ்ந்த சூழலிலிருந்த எல்லா மதங்களையும் புரிந்து கொள்ள முயல்கிறான்.
ஒரு முறை மசூதிக்குச் சென்று பின்னர் வீட்டுக்கு வந்து தொழுது கொண்டிருக்கும்போது, அப்பா பார்க்கிறார். அவன் அப்பாவுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. சாப்பிடும்போது அப்பா சொல்கிறார். "ஒருவன் மூன்று மதங்களைப் பின்பற்ற முடியாது. அப்படிச் செய்ய முயல்கிறான் எனில், அதன் அர்த்தம், அவனுக்கு எதிலுமே முழுமையான நம்பிக்கை இல்லை என்பதே!". அவன் தனக்கான் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அது உதவும் என்கிறார் அம்மா.
தேவாலயத்துக்கு சென்று பாதிரியாரிடம் ஏன் கடவுள் தன குழந்தையை அவ்வளவு கஷ்டப்படுத்துகிறார்? என்று கேட்கிறான். இயேசுவைக் கஷ்டப்படுத்திய கடவுள்மேல் அவனுக்குக் கோபம் வருகிறது. அன்றிரவு மீண்டும் கிருஷ்ணனிடம் வருகிறான். கஷ்டப்படுத்தி அனுபவத்தைக் கொடுக்கும் கடவுளைவிட, கஷ்டத்திலிருந்து காக்கும் கடவுளை விரும்புகிறது அவனது எளிய குழந்தை மனம்.
நீ எதை நினைத்துக் கொண்டு, எப்படி நம்பிக்கொண்டு பார்க்கிறாயோ அதுவாகவே தெரிகிறது. நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய். பை கடவுளாக நினைக்கிறான். அவன் கேட்ட கிருஷ்ணன் கதைகள்கூட அவனை அப்படி நினைக்கத் தூண்டியிருக்கலாம். வலிமை மிக்கவன் அடுத்தவர்களைக் காக்க முன்வரும்போது அவன் கடவுளாகிறான். தன் சக நண்பர்கள் ஒருவரையேனும் இழக்க அவன் விரும்பவில்லை. ஆனாலும் அது சாத்தியமாகவில்லை. நடைமுறை அனுபவத்தைப் புரிந்துகொள்பவன் தன்னையும் காத்துக் கொண்டு புலியையும் காப்பாற்ற விழைகிறான்.
புலியிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஒரு மிதவையைத் தயார் செய்து, படகுடன் இணைத்துக் கட்டி, அதில் தங்கிக் கொள்கிறான். ஒரு முறை மீன்களை வேட்டையாடும் நோக்குடன் கடலில் பாய்ந்த புலி, எதுவும் கிடைக்காமல் அவனை நோக்கி வருகிறது. பை அவசரமாகப் படகில் ஏறிக் கொள்கிறான். புலி படகில் ஏற முயற்சிக்கிறது. முடியவில்லை. எப்போதாவது அது தன்னைக் கொன்றுவிடும் என்று உணரும் பை தான் முந்திக்கொள்ள முடிவு செய்து அதன் தலையை நோக்கி சிறு கோடரியை ஓங்குகிறான். அப்போது மீண்டும் உயிர்ப்பிச்சை கேட்டு இறைஞ்சுவதுபோலிருக்கும் அதன் கண்களைச் சந்திக்கிறான். அதனைக் காப்பாற்றுகிறான்.
பை ஒன்றைப் புரிந்துகொள்கிறான். எப்போதும் இந்தப் புலிக்கு உணவு கிடைத்துக் கொண்டேயிருக்கவேண்டும் இல்லாதுபோனால் தன்னைக் கொன்றுவிடும். புலிக்கும் உணவு கொடுத்துக்கொண்டே தன்னையும் காப்பாற்றியாக வேண்டும் என்ற உந்துதலே அவனை உயிர்ப்புடன் இயங்கவைக்கிறது. அடிக்கடி உயிரைப்பணயம் வைத்து, படகுக்கும், மிதவைக்கும் இடையில் அல்லாடுவதை விடுத்து, ரிச்சர்ட் பாக்கருடன் ஒரே படகில் தங்கிவிடலாம் என யோசிக்கிறான். அதனைப் பழக்கப்படுத்திக் கொள்ள விழைகிறான். ஆத்மரீதியான புரிதலுடனோ அல்லது பலவீனப்பட்ட நிலையில், தனித்திருத்தல் சாத்தியமற்ற சூழலை உணர்ந்தோ என்னவோ, முதலில் முரண்டுபண்ணி, பயந்து, அடங்கி ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்துவிடுகிறது ரிச்சர்ட் பாக்கர்.
கடல் எல்லையற்றுப் பரந்து விரிந்திருக்கிறது. ஏராளமான கற்பனைகளுக்கு ஊற்றாக இருக்கிறது. நம் மனம் போன்றது. ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் மனம், ஆழம் செல்ல அமைதியில் ஆழ்ந்து விடுகிறது. சலனமின்றி, ஆழ்மனதைக் கவனிப்பதைத் தியானம் சாத்தியமாக்குகிறது. மனதை ஒருமுகப்படுத்தி, ஒன்றிப்போய் ஈடுபடும் எந்த ஒரு செயலும் தியானமாகிறது.
ரிச்சர்ட் பாக்கர் என்ற புலியின் மனதில் காடு வியாபித்திருக்கிறது. அதன் தேவைகள் அதிகம் இல்லை. இந்த வேளைக்கான உணவு கிடைக்கிறதா? என்பது மட்டுமே அதன் இந்தக்கணத்துக்கான தேவை. அதைப் பெற்றுக் கொள்வதற்கான வேட்டை மட்டுமே அதன் வேலை, இலட்சியம், தேடல் எல்லாமே. அதுவே அது மனம் ஒருமித்து செய்யும் தியானம்.
ரிச்சர்ட் பாக்கர் குனிந்து கடலைப்பார்க்கிறது. கடல்தான் தற்போதைய அதன் உணவுக்கான மூலம். அதன் தற்போதைய காடு. காட்டு விலங்குகள் எல்லாம் கடலுக்குள் நீந்தி வருவதாக அதற்குத் தோன்றுகிறது. அதன் மனதில் நிறைந்துள்ள காடு கடலில் பிரதிபலிக்கிறது.
பை கடலைப் பார்க்கும்போது, அவன் சிறுவயதில் புத்தகத்தில் பார்த்த கிருஷ்ணனின் வாய்க்குள் தெரிந்த பிரபஞ்சத்தையொத்த காட்சிகள் தோன்றி, அம்மா போட்ட கோலங்கள் தோன்றிக் கலைந்து, அம்மாவின் முகம் தெரிகிறது. அம்மா அவன் மனதில் பதிந்து சென்ற ஆன்மிகக் கதைகள், கருத்துகளே அவன் மனதில் வியாபித்துள்ளன. அவனைக் கடவுளாக மாறத் தூண்டியதும் அதுதான். அதுவே அவன் கண்களுக்குத் தெரிகிறது.
முன்பு பையின் தந்தை கூறியது போலவே நிகழ்கிறது. எதை நினைக்கிறார்களோ, எதை உணர்கிறார்களோ இன்னொரு வகையில் மனதில் எந்த தியானத்தில் இருக்கிறார்களோ அதையே கடலில் பிரதிபலிக்கக் காண்கிறார்கள், பையும் புலியும்.
யார் கடவுள்? தனக்கான தேவைகளை தன்னால் நிறைவேற்ற, பெற்றுக்கொள்ள இயலுகின்ற வரையில், முடியும் என்ற நம்பிக்கை உள்ளவரையில் கடவுளுக்கான தேவையில்லை. கடவுளின் இருப்பைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை.
ரிச்சர்ட் பாக்கருக்கான உணவு கடலில் நிறைந்திருந்தும், அருகிலிருந்தும் அதனால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. எதுவும் இயலாத நிலையில் அதற்கு ஒரு கடவுள் அவசியம் தேவை. ஆக, பை அதற்குக் கடவுளாகத் தோன்றியிருக்கக் கூடுமோ? கடலைப் பார்த்துக் கொண்டிருந்த ரிச்சர்ட் பாக்கர் எதையோ உணர்ந்ததுபோல, திகைத்துப் போனது போல பையைக் கூர்ந்து பார்க்கிறது.
ஒருவர் எப்போது மாறுகிறார்? யாருக்கு கடவுளாக தோன்ற முடியும்? எந்த நேரத்தில் யாருக்கு கடவுளின் தேவை இருக்கிறதோ, யாரால் உணர்ந்துகொள்ள முடிகிறதோ அவர்களுக்கு மட்டுமே. சந்தர்ப்பங்கள் சிலரைக் கடவுளாகத் தோன்றச் செய்கின்றன. அந்தக் கடவுள்களே அதனை அறிந்திருப்பதில்லை.
பை தன்னையும் ரிச்சர்ட் பாக்கரையும் காத்துப் பத்திரமாகக் கரையேற்றுகிறான். ரிச்சர்ட் பாக்கர் தன் இனிய நண்பனை, சக பிராணியை ஆத்மரீதியாக புரிந்துகொண்டுள்ளதாயின் அது ஒரு முறை தன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதே பையின் எதிர்பார்ப்பு. அது, அவனைப் பொருட்படுத்தாது, தன்பாட்டுக்குச் சென்றுவிடுகிறது. அதுவே , இறுதிவரை அவனுக்கு மிகத்துயரம் தரக் கூடியதாக அமைந்துவிடுகிறது.
கடவுள் எதனையும் எதிர்பார்ப்பதில்லை. உயிர் பிழைத்தலுக்கான போராட்டமும், இன்னோர் உயிரைக் காப்பாற்றுவதற்கான உத்வேகமுமாக, கடலில் கடவுகளாக மாறியிருந்த பை உண்மையில் தன் மனதளவில் சராசரி மனிதனாகவே இருக்கிறான் போலும். தேவை தீர்ந்ததும் யாரும் கடவுளைப் பற்றிக் கவலை கொள்வதில்லை அல்லது அவன் தந்தை சொல்லியது போல அது என்றுமே அவன் நண்பன் கிடையாது. வேறு வழியின்றி அவனுடன் ஓர் இணக்கப்பாட்டுடன் வாழ்ந்திருந்தது என்றே கொள்ளலாம். அது தர்க்க ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக, எளிமையானதாக இருக்கிறது.
வாழ்க்கையில் நிகழும் பல சம்பவங்களைத் தர்க்க ரீதியாக நிறுவ முடிவதில்லை. ஆயினும் அதுவே எதிர்பார்க்கப்படுகிறது. உண்மை நம்புவதற்கு எளிமையாக இருப்பது இன்னும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
பை காப்பாற்றப்பட்டபின், கடலில் நிகழ்ந்ததாகச் சொல்கிற கதையை விசாரணைக்கு வந்த கப்பல்துறை அதிகாரிகளால் நம்ப முடியவில்லை. அவர்களுக்காக இன்னோர் கதையைச் சொல்கிறான். அதில் காலுடைந்த ஜப்பானிய மாலுமி (வரிக்குதிரை), பையின் அம்மா(ஒரங்குடான்), முன்பு கப்பலில் வம்பிழுத்த சமையல்காரன் (கழுதைப்புலி), புலி(பை) நால்வரும் படகில். பசி காரணமாக ஜப்பானிய மாலுமையைக் கொன்று உண்கிறான் சமையல்காரன். அம்மா பையைத் தப்ப வைக்கிறாள். சமையல்காரன் அம்மாவையும் கொல்ல, பை அவனைக் கொன்றுவிடுகிறான். இப்போது, எந்தக் கதையை நம்ப விரும்புகிறீர்கள் என்கிறான். முதலாவதையே தெரிவு செய்கின்றனர் அதிகாரிகள். எழுத்தாளரும் அதையே தெரிவு செய்கிறார்.
உண்மை பல சந்தர்ப்பங்களில் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. புரிந்து கொள்பவரின் அடிப்படையிலேயே அது உணர்ந்துகொள்ளப்படுகிறது. பை புரிந்த கொண்ட உண்மை, ரிச்சர்ட் பாக்கர் தனக்கான வழியைக் கண்டுகொண்டதும் பையை மறந்துவிட்டது. ஆனால் உண்மை?
ரிச்சர்ட் பாக்கர் படகிலிருந்து தாவியிறங்குகிறது. எதிரில் பரந்து விரிந்த கானகம் அதன் கண்களுக்கு பை போலவே தோன்றுகிறது. ரிச்சர்ட் பாக்கர் ஓர் யோகிபோல வாழ்கிறது. அது என்றும் தன் தியானத்தை விட்டு விலகுவதில்லை. கடவுளைத் தேடிப்போவதுமில்லை. தனது தேவையைப் பெற்றுக் கொள்ளும் இடத்திலேயே தன் கடவுளைக் கண்டுகொள்கிறது.அதன் கடவுளான பை காடு முழுவதும் வியாபித்திருக்கக் காண்கிறது. தன் கடவுளை எதிரில் கண்டபிறகு, அது திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
இது பையிடம் கதை கேட்டுக் கொண்டிருந்த எழுத்தாளனின் மனதில் தோன்றிய அழகான கற்பனையாகவும் இருக்கலாம். அது அவ்வளவு அற்புதமானதாக, எளிமையானதாக, மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருக்கிறது எனும்போது, தர்க்க ரீதியாக ஆராயாமல் அதனை உண்மை என ஏற்றுக் கொள்ளவே மனம் என்றும் விரும்புகிறது.
>இது பையிடம் கதை கேட்டுக் கொண்டிருந்த எழுத்தாளனின் மனதில் தோன்றிய அழகான கற்பனையாகவும் இருக்கலாம்
ReplyDeleteஅல்லது பை'யின் கற்பனையாகவும் இருக்கலாம்.
பை கதை சொல்லி முடித்தபின்னர் வருவதால் அப்படிப் புரிந்துகொண்டேன். இருக்கலாம்!
DeleteVery Nice Review, Keep your work up ** Sheik Maideen
ReplyDeleteநன்றி!
Deleteவணக்கம்,ஜீ!நீஈஈஈஈஈஈண்ட கதையாயினும் விளக்கம் அருமை!
ReplyDeleteநன்றி பாஸ்!
DeleteCould you get anything/ any ideas from that island??
ReplyDeleteStill not! :-(
DeleteTo me, it looked like an statue of Lord Vishnu or Lord Buddha in sleeping position. Wanted to know anybody else felt the same.
Delete
ReplyDeleteமிகவும் அருமையான விமர்சனம்
உண்மை நம்புவதற்கு எளிமையாக இருப்பது இன்னும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
முக்கியமாக கடவுள் பற்றி குழப்பாது தெளிவாக குறிப்பிட்டவிதம் பாராட்டத்தக்கது
மிகப்பிடித்தவசனம்
ஒருவர் எப்போது மாறுகிறார்? யாருக்கு கடவுளாக தோன்ற முடியும்? எந்த நேரத்தில் யாருக்கு கடவுளின் தேவை இருக்கிறதோ, யாரால் உணர்ந்துகொள்ள முடிகிறதோ அவர்களுக்கு மட்டுமே. சந்தர்ப்பங்கள் சிலரைக் கடவுளாகத் தோன்றச் செய்கின்றன. அந்தக் கடவுள்களே அதனை அறிந்திருப்பதில்லை.
ஆரம்பத்தில் ரெயிலரைப்பார்த்ததுமே படம் பிடித்துவிட்டது ஆனால் நடுக்கடலில் அகப்படும் புலி ஒரு பையனை யார்தான் பொறுமையுடன் பார்பபர்கள் எப்படி ஒஸ்கார் எதிர்பார்க்கின்றார் என்று புளியைக்கரைத்துவிட்டார்கள்... ஆனால் வென்றுவிட்டது
நான் படம் பார்க்கவில்லை.உங்கள் விளக்கம்,பார்த்திருக்கலாமோ என ஏங்க வைக்கிறது!
ReplyDeleteசிறப்பான பகிர்வு...பலர் இந்த படத்தை ஒரு சாகச படமாக நினைத்தும் தொழில் நுட்ப நேர்த்திக்காவுமே ரசித்தனர்... உங்கள் பார்வை அருமை
ReplyDeleteஇதுவரைப் பார்க்கவில்லை ஒரு முறை பார்க்க ஆவலை
ReplyDeleteஉண்டுபண்ணியுள்ளது இன்றைய ஆக்கம் !
///யார் கடவுள்? தனக்கான தேவைகளை தன்னால் நிறைவேற்ற, பெற்றுக்கொள்ள இயலுகின்ற வரையில், முடியும் என்ற நம்பிக்கை உள்ளவரையில் கடவுளுக்கான தேவையில்லை. கடவுளின் இருப்பைப் பற்றி யாரும் கவலை கொள்வதில்லை.///
ReplyDelete///ஒருவர் எப்போது மாறுகிறார்? யாருக்கு கடவுளாக தோன்ற முடியும்? எந்த நேரத்தில் யாருக்கு கடவுளின் தேவை இருக்கிறதோ, யாரால் உணர்ந்துகொள்ள முடிகிறதோ அவர்களுக்கு மட்டுமே. சந்தர்ப்பங்கள் சிலரைக் கடவுளாகத் தோன்றச் செய்கின்றன. அந்தக் கடவுள்களே அதனை அறிந்திருப்பதில்லை.///
அருமையாக விபரித்திருக்கிறீர்கள்.. மிக நீண்ட பயணமாக இருந்தாலும், சலிக்காமல் பயணிக்கும் படியான வசன அமிப்புகளால் நடத்திச் சென்றிருக்கிறீர்கள்.
உங்கள் விவரணத்தைப் பார்க்கும்போது படத்தைப் பார்க்க வேண்டும் என்று தூண்டுகிறது.. அருமை... பாராட்டுக்கள்
இந்த படத்தின் சிறப்பு வித்தியாசமான பலவித கோணங்களை கொண்டிருப்பது. அதால் படத்த பார்த்த ஒவ்வொருத்தருக்கும் தனியான பிரத்தியேகமான அனுபவங்களை இந்த படம் குடுத்திருக்கு. உங்கட பார்வை அதில ஒரு வகை. அழகு தலைவரே.
ReplyDeleteஒரு அழகியலான பார்வை!
ReplyDeleteநான் பார்த்தவரையில். இந்தப் படம் வெளியான சமயத்தில் வந்த விமர்சனங்கள் எதுவும் இந்த அளவிற்கு நிதானத்துடன் தெளிவுடன் இல்லை.
ReplyDeleteஅதனாலேயே எனக்கு இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவும் இல்லை. ஆனல் இப்போது பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று தோன்றுகிறது.
நீங்கள் எழுதிய முக்கியமான பதிவுகளில் இதுவும் ஒன்று.
அழகான... ஆழமான விமர்சனம்....
ReplyDeleteஅருமை ஜி...