Tuesday, May 29, 2012

யானை பார்த்த கதை!னுஷனுக்கு அவ்வளவு சந்தோஷம்!

முகமெல்லாம் சிரிப்புப் பரவ, டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில இடம்பிடிச்சுக் கொண்டான், ஊர் வழக்கப்படி முதலில் முருகனைக் கும்பிட்டுவிட்டு எல்லோரும் ஏறிக்கொண்டார்கள்.


டிரைவிங் செய்துகொண்டிருந்த குமார்மாமா ஏதோ நினைவு வந்தவராக - 'மதி இங்கதான் நிக்கிறான் போல! நேற்று வைரவர் கோயிலடில கண்டன்'.

கொஞ்சநேரம் யாரும் பேசிக்கொள்ளவில்லை.

'இவன் எதுக்கு இந்த பிரச்சனையான நேரத்தில'

'இவ்வளவு நாளா இங்கதான் இருக்கிறானா?'

'அது தெரியேல்ல! இன்னும் நாலைஞ்சு பேர் நிண்டாங்கள்!'

'என்னமோ! முருகா... நீதான் பாத்துக் கொள்ளவேணும்!'

                                                                    *************

சந்தி ஆன்டிக்கு மாப்பிள்ளை பார்க்கப் போவதில் தனுஷனுக்கு சந்தோஷப்பட பிரத்தியேக காரணங்கள் ஏதும் இல்லையாயினும் மயூரியைப் பார்க்கலாம் என்பதே அதற்குக் காரணம்! கடந்த இரண்டு நாட்களாக அவன் சிந்தனை முழுவதும் மயூரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது!

மயூரி ஒன்றும் அவன் காதலி எல்லாம் கிடையாது! ஏழு வயதில காதலைப்பற்றி தெரிய என்ன இருக்கு? ஆனாலும் சினிமாப் படங்களில பார்ப்பது தவிர காதல் என்றது, அதைப்பற்றிக் கதைச்சா நிச்சயமா அம்மாவிடம் அடிவாங்கித் தரக்கூடிய வஸ்து என்றளவில் தெரிந்துவைத்திருந்தான். மயூரி - வீரமாகாளி அம்மன் கோவிலில் இருக்கிற பெண்யானை. இதுவரை யானையை நேரில் பார்த்ததில்லை. புத்தகத்தில் மட்டுமே. அவ்வப்போது டீ.வி.யிலும்!

வசந்தி ஆன்டிக்கு திருமணம் பேசி போன கிழமைதான் மாப்பிள்ளை வீட்டுக்காரர் வந்து பெண் பார்த்துவிட்டுப் போனார்கள். இது பெண்வீட்டார் முறை! தனுஷன் யாழ்பாணத்துக்கு அடிக்கடி போறதில்லை. தீபாவளி, வருஷம், வீட்டு விஷேசங்களுக்கு புது உடுப்பு வாங்க மட்டும்தான் போறது.

*************
நேற்று அம்மாவிடம் கேட்டான் 'ஏனம்மா பொம்பிளை பாக்கிறதுக்கு மாப்பிள்ளை வரேல்ல?'
'அப்பிடி வாறதில்ல!'

'அப்ப மைதிலி ஆன்டி மாப்பிள்ளை பாக்க வருவாவா?'
'வரமாட்டா'

'ஏனப்பிடி?'
'அது அப்பிடித்தான். நீ சின்னப்பிள்ள! உனக்கு விளங்காது! போய்ப் புத்தகத்தை எடுத்துப் படி!'

அவனுடைய அநேகமான கேள்விகளுக்கு பதில் 'புத்தகத்தை எடுத்துப்படி' என்பதாகவே அமைந்து விடுகின்றன. அம்மாவுக்காவது விளங்கியிருக்குமா என்றெல்லாம் அவன் கேட்கவில்லை. மாப்பிள்ளை பார்க்கிறதா இப்போ முக்கியம்? யானை பார்க்கிறதுதானே!

யாழ்ப்பாணத்தில வேற எந்த இடத்திலையும் யானை இல்லையாம். குமார் மாமா சொன்னார். அவர் மினிபஸ் வச்சிருக்கிறபடியா எல்லா இடமும் தெரியும். எல்லா இடமும் தெரிஞ்சிருக்கிறதால எல்லா விஷயமும் தெரியும் என்ற நம்பிக்கை அவருக்கு. அதை யாரும் கெடுக்க விரும்புவதில்லை!

இரவு நித்திரையின்றி யோசித்துக் கொண்டிருந்தான்.அவன் பார்த்த எல்லாப் படத்திலயும். கதாநாயகியும், நாயகனும் காட்டுக்குள்ள போகேக்க யானை துரத்திக் கொண்டு வர, மரத்தில ஏறி தப்பிறதை அடிக்கடி பார்த்ததில பயமாவும் இருந்தது! 

எப்பிடியும் கட்டித்தானே வைச்சிருப்பாங்கள்? அம்மாவை எழுப்பிக் கேட்கலாமா? ஏற்கனவே ஒரு முறை தூங்கிக்கொண்டிருந்த அம்மாவை எழுப்பிக்கேள்வி கேட்ட அனுபவம் தடுத்தது - 'என்னோட படிக்கிற கார்த்திகாவ உங்களுக்குத் தெரியுமா?'

*************

ள்ளிக்கூடத்தில் பெருமையாய் சொல்லிக்கொண்டான். அவன் வயதொத்தவர்கள் யாரும் ஒரு யானையை நேரில் பார்த்திருக்கவில்லை. அவனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பள்ளி முடிந்து கூட்டமாக நடந்து, கோயிலைக் கடக்கும்போது தோன்றியது 'வாகன சாலைக்குப்போய் யானையைப் பார்க்கலாமா?'

'ஹாய் பாப்பா!'

குரல் கேட்டு அண்ணாந்து மேலே பார்த்தான். அவனுடன் வழக்கமாகக் கதைக்கும் ஆமிக்காரன். கடையின் மொட்டை மாடியில் மண் மூட்டை அடுக்கி, ரேடியோ கேட்டுட்டிருந்தான். 'மயூரி இந்தளவு உயரம் வருமா? கூட இருக்கும்!'

சிரித்துக் கொண்டே கையசைத்தான்!

அவனைப் பாப்பா என அழைக்கும்போது சிரிப்பாக இருக்கும். அவனை யாரும் அப்படிக் கூப்பிடுவதில்லை. அவனையல்ல யாரையுமே அப்படிக்கூப்பிடும் வழக்கமே இருந்ததில்லை! இந்தியன் ஆமி மட்டும்தான் கூப்பிடுவதாக பேசிக் கொள்வார்கள். சிலோன் ஆமியை அவன் பார்த்ததில்லை!

சில அடிதூரம் சென்றபின் திடீரென்று ஞாபகம் வந்தவன்போல் திரும்பிக் கத்தினான், 'நான் யாழ்ப்பாணம் போறேன் யானை பாக்க!'

*************

ருப்புக் கொள்ளவில்லை. எப்ப வெளிக்கிடுவினம் இங்க இருந்து? மாப்பிள்ளை எல்லோரையும் போலவே இருந்தார், எல்லாரையும் போலவே , பேரென்ன? எத்தனையாம் வகுப்புப் படிக்கிறீங்கள்? - அசிரத்தையாகச் சொன்னான். 

வழக்கம்போல பலகாரம், கூல் ட்ரிங்க்ஸ்! எதிலும் கவனமிருக்கவில்லை. எதுவும் புதிதாக இல்லை. யாருக்கும் புறப்படும் எண்ணமே இல்லாமல் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. யானையை மறந்திடுவாங்களோ என்ற பயமும் இருந்தது!

ஆனாலும் அங்கே இருந்த ஒரு ஆன்டி அவனைப் பெரிதும் கவர்ந்தார். மனதிற்குள் ஆண்டிக்குத் தும்பிக்கை வரைந்து பார்த்ததில் கோயிலில் இருக்கும் யானைவாகனத்தை அப்படியே ஞாபகப் படுத்தினார். அதன்பின் அவரின் ஒவ்வொரு அசைவுகளும் சிரிப்பையூட்டின. கூடவே ஒரு சந்தேகமும், 'யானை ரெண்டு கால்ல நிக்குமா?' 

*************

குமார் மாமா பின்னால் திரும்பிப் பார்த்தார்.

'எங்கயோ பக்கத்தில போல கிடக்கு'

'ஓ! உதிலதான் எங்கயோ நல்ல கிட்ட'

'எதுக்கும் நிப்பாட்டுங்கோ' - கலவரக் குரல்கள்!

வழக்கமான பழகிப்போன சத்தம்தான்!

'திரும்புங்கோ! கந்தர்மடத்தில போலயிருக்கு!' எதிரில் வந்த பஸ்காரர் நிறுத்திச் சொன்னார். 

'பிறவுன் ரோட்டால திருப்புங்கோ!'

'அதாலயா போறம் கோயிலுக்கு?' - தனுசன்.

'இல்லடா வீட்ட போவம். பிரச்சனையாம். பிறகு இன்னொரு நாளக்கி வருவம்!' தனுஷனுக்கு அழுகை வந்திடும் போல இருந்திச்சு!

*************
'யாரைச் சுட்டாங்களோ?'

'நல்ல வேளை கொஞ்சம் முந்தி வந்திருந்தா மாட்டியிருப்பம்! எங்கட முருகன்தான் காப்பாத்தினான்'
'ஓமோம்!'

என்னதான் தேடித் தேடிக் கோயில் கோயிலாப் போனாலும் இக்கட்டான நிலைமைல காப்பாத்திறது என்னமோ எங்கட முருகன்தான் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டிருந்தார்கள்.

'கடவுளேயெண்டு எங்கட ஊரில ஒரு பிரச்சனையும் இல்ல! அளவெட்டி, கொக்குவில்ல எல்லாம் பயங்கர மோசமாம்!' - யாரோ சொல்லிக் கொண்டார்கள்.

'மாப்பிள்ளை நல்லாத்தான் இருக்கிறார். வீட்டுகாரரும் பழக நல்ல மனுசராய்த்தான் இருக்கினம்!' மீண்டும் சகஜ நிலைக்கு வந்து பேச்சு உற்சாகமாக தொடர்ந்தது. துப்பாக்கிச் சூடு, ஷெல் இதெல்லாம் ஒன்றும் புதுசில்லையே அதைப்பற்றிக் கதைப்பதற்கு?

மாப்பிள்ளையை எல்லாருக்கும் பிடிச்சிருந்தது! தனுசனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை! எல்லார்மீதும் வெறுப்பாயிருந்தது. 'இனி அந்த ஆமிக்காரனோட கதைக்கக் கூடாது!' 

*************

தியைச் சுட்டுட்டாங்களாம்! - விளையாடிக் கொண்டிருந்த தனுஷன் கவனித்தான்.

'எப்பவாம்?'

'நேற்று பின்நேரமாம்! நாங்க போகேக்க சத்தம் கேட்டுதே இவங்கள் எதிர்பாக்காம நடந்த சண்டையாம் எண்டு சொல்லுறாங்கள்!' 

'அநியாயமா போய் மாட்டீட்டான்!'

'யானையும் பாக்கேலாமல் போச்சுது!' தனுஷனும் கவலைப் பட்டான்!


(* யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் 1988 /1989ல் நடந்த மோதலில் கொல்லப்பட்டார் மதி!)

13 comments:

 1. வணக்கம்,ஜீ !நல்ல சிறு கதை.அப்படியே இந்திய இராணுவ காலத்தை(எனக்குத் தெரியாது)கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.கடைசியில் அந்தப் பையனின் ஆசை நிராசையாகி.....................ஹும்!

  ReplyDelete
 2. வடக்கு- கிழக்கில் 1988/89களில் வாழ்ந்த யாராவது இப்படியான சம்பவங்களை கடந்து வந்திருக்கலாம்;

  மெலிதான சலனங்களை ஏற்படுத்தவேனும் ஆவணப்படுத்தல்கள் தேவைப்படுகின்றன. 'யானை பார்த்த கதை' அப்படியொரு கதை- ஆவணம்!

  'ஜீ' ரசிக்க வைக்கிறார்!!

  ReplyDelete
 3. நல்லதொரு ஆக்கம் ஜீ

  இடையே ஆண்டியை ஆணையாக்கிய உங்களின் நகைச்சுவை உணர்ச்சியை பிடித்திருந்தது.

  ReplyDelete
 4. வணக்கம் நண்பா,
  அருமையான தொகுப்பினைத் தந்திருக்கிறீங்க.

  முதல் இரு பாகங்களையும் படிக்கும் போது குறுங் கதை போலிருக்கும் என நினைத்தேன். ஆனால் ஒவ்வோர் தொகுப்பிலும் வெவ்வேறு காட்சிப்படுத்தலூடாக ஓர் புதுவித ரசனையூட்டும் படைப்பினை வழங்கியிருக்கிறீங்க.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. ஒரு சிறுவனின் இயல்பைச் சிறப்பாகச் சொன்னீர்கள்.நல்ல கதை/

  ReplyDelete
 6. நல்லதொரு பதிவு...என்னுடைய ஆசைகள் பலவும் என்னுடைய இளவயதில் இப்படியே விடுபட்டுப்போயின..

  இந்த பதிவை படிக்கும் போது என்னுடைய சிறு வயதுக்குப்போன மாதிரி ஒரு உணர்வு..மிக அருமையான பதிவு தொடருங்கள்

  ReplyDelete
 7. ஜி கிளாஸ்

  ReplyDelete
 8. அருமையான சிறுகதை...
  கதையில் வரும் மதி போராட்டத்தில் உயிர் நீத்தவர் என்று கடைசியில் நீங்கள் அடைப்புக்குள் இட்டிருப்பது கண்டு அவருக்கு வீர வணக்கம்.

  பாவம் பையன் அவனுக்கு யானை காட்டியிருக்கலாம்.

  ReplyDelete
 9. பசு மரத்தாணி போல கதை!

  ReplyDelete
 10. கலக்கீட்டீங்க ஜீ...இயல்பான நடையில் நச்சென்று ஒரு கதை. மருதமூரான் சொன்னது போல் இத்தகைய ஆவணப்படுத்தலும் பாராட்டுக்குரியது. நன்றி.

  ReplyDelete
 11. தலைவரே ..

  வீரமாகாளி அம்மன் யானை ... மறந்தே போய்விட்டேன் .. மயூரியையும் தான் :) ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி முதலில்.

  //'கடவுளேயெண்டு எங்கட ஊரில ஒரு பிரச்சனையும் இல்ல! அளவெட்டி, கொக்குவில்ல எல்லாம் பயங்கர மோசமாம்!' - யாரோ சொல்லிக் கொண்டார்கள்.//
  யாழ்ப்பானத்துக்கேயுரிய நிஜம்!

  அவனுக்கு யானை தான் அப்போது முக்கியம் ... இந்திய ராணுவ நேரம் எனக்கு ஒன்பது வயது. சண்டை என்றால் பள்ளிக்கூடம் கிடையாது. சந்தோஷமோ சந்தோஷம்.

  இந்த கதையில் சொல்லாத ஒரு கதை இருப்பதாக தெரிகிறது. எது அந்த யானை என்று கொஞ்சம் ஆராயவேண்டும் என்றால் ஆராயலாம். 89இல் தான் பிரேமதாசா புலிகள் இரகசிய ஒப்பந்தம் நடைபெற்றது. இந்திய இராணுவத்தை துரத்துவதற்கான மாஸ்டர் திட்டம் ... அந்த அரசியலையும் கொண்டு வந்து செருகுகிறீர்களா(யானை!) என்று ஒரு டவுட்.. விளக்கவேண்டும் தலைவரே!

  ReplyDelete
 12. //இந்த கதையில் சொல்லாத ஒரு கதை இருப்பதாக தெரிகிறது. எது அந்த யானை என்று கொஞ்சம் ஆராயவேண்டும் என்றால் ஆராயலாம். 89இல் தான் பிரேமதாசா புலிகள் இரகசிய ஒப்பந்தம் நடைபெற்றது. இந்திய இராணுவத்தை துரத்துவதற்கான மாஸ்டர் திட்டம் ... அந்த அரசியலையும் கொண்டு வந்து செருகுகிறீர்களா(யானை!) என்று ஒரு டவுட்.. விளக்கவேண்டும் தலைவரே!//

  அப்படி எதுவும் யோசிக்கவில்லை..அது எதேச்சையானது! நன்றி பாஸ்!

  ReplyDelete
 13. ஷோபா ஷக்தியின்
  கொரில்லா

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |