Thursday, May 10, 2012

Chungking Express (1994)ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத, சோகத்திலும் மெல்லிய நகைச்சுவை இழையோட இரண்டு கதைகள். இரண்டு கதைகளிலும் கதாநாயகன் போலீஸ் இளைஞர்கள் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. இருவருக்கும் காதல் தோல்வி!

கதை நிகழும் இடம், காலம், சில கதை மாந்தர்கள் மட்டும் இரண்டு கதைகளிலும் வருகிறார்கள். Midnight Express என்ற Fast food கடை, இரு இளைஞர்களின் மனநிலையையும் தெரிந்து கொண்டு பேசும் அதன் மானேஜர்,  அங்கு வேலை பார்க்கும் Faye என்ற, சத்தமாகப் பாட்டுக் கேட்கும் பெண். ஒரு காட்சியில் முதலாமவன் அவசரமாக ஓடும்போது இரண்டாமவன் பார்த்துக் கொண்டு நிற்கிறான். அதுதவிர படத்தில் இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

முதலாவது கதையில் Cop 223 மே முதலாம் திகதி பிறந்தவன். ஏப்ரல் ஒன்று அன்று அவனது காதலி அவனை முட்டாளாக்கி பிரிந்து சென்றுவிடுகிறாள். எப்படியும் மே ஒன்றில் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி மீண்டும் தன்னுடன் சேர்ந்துவிடுவாள் என நம்பிக் கொண்டிருக்கிறான்.

ஏப்ரல்  ஒன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அவளுக்கு மிகவும் பிடித்த அன்னாசிப் பழ டின் ஒன்று வாங்குகிறான் - மே  ஒன்று அன்று முடிவுத்திகதி கொண்டதாகத் தேடி! அப்படியே முப்பது டின்கள் சேர்ந்திருக்கும்போது அவள் தொடர்பு கொள்ளவில்லை என்றால் தனது காதலும் Expire ஆகிவிடும் என்று தானாகவே நிர்ணயித்துக் கொள்கிறான்
.  

ஏப்ரல் முப்பது - இரவு முப்பது டின் பைன் ஆப்பிளையும் சாப்பிடுகிறான். ஆழ்ந்த நம்பிக்கை நினைப்பதை நிகழ்த்திவிடும் எனச் சொல்லப்படுகிறது - சிலவேளைகளில் நினைக்காததையும்!அவளது அழைப்பு வருமென நம்பிக்கையுடன் காத்திருக்கிறான். வருகிறது.....வயிற்றுவலியும் வாந்தியும்! அவள் தொடர்பு கொள்கிறாளா?

இரண்டாவது கதையில் போலீஸ் இளைஞன் Cop 663 விமானப் பணிப்பெண் ஒருத்தியுடனான காதலுடன் கடைக்கு வருகிறான். Faye, அவன்பால் மெதுவாக ஈர்க்கப்படுகிறாள். ஒருநாள் அந்த விமானப் பணிப்பெண் அவனிடம்  கொடுக்குமாறு கூறி ஒரு கவரைக் கொடுத்துச் செல்கிறாள். கடையிலுள்ள எல்லோரும் திருட்டுத்தனமாக பிரித்துப் பார்த்து, கடைசியாக பார்க்கிறாள். அதில் Change of Flight. Your plane cancelled. Here's your key.Bye! 

அவன் விஷயத்தைப் புரிந்துகொண்டதால், பெற்றுக் கொள்ள ஆர்வமின்றி தட்டிக் கழிக்கிறான். கடிதத்தை அனுப்பி வைப்பதாகக் கூறி அவனது முகவரியை வாங்கிக் கொள்ளும்  Cop 663 க்குத் தெரியாமல் அவன் வீட்டில் நுழைந்து, வீட்டின் சூழலை மாற்றுகிறாள். சிறிய மாற்றங்களை உணர்ந்தாலும், காதல் தோல்வியில் ஒரு குழப்ப நிலையில் இருக்கும் அவன் அவளது காதலை உணர்ந்து அவளைச் சந்திக்க வரும்போது, அவள் பிரிந்து சென்றுவிடுகிறாள். அவர்கள் மீண்டும் சந்தித்தார்களா?

வித்தியாசமான குண இயல்புகள், ரசனைகள், விருப்பங்கள் கொண்ட மனிதர்கள் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்கிறது படம். காதல் தோல்வியில் தன்னையே வருத்திக் கொள்ளும் முதலாமவன் தான் சந்திக்கும் பெண்களிடமும் அன்னாசி பிடிக்குமா?எனக்கேட்டு அவர்களிடம் தன் காதலியைத் தேட முயற்சிக்கிறான்.

இரண்டாமவன் தன் தனிமையை போக்க வீட்டிலுள்ள பொம்மைகள், தனது சட்டை, சோப் எல்லாவற்றுடனும் பேசுகிறான். ஒவ்வொருமுறையும் "முடிந்துவிட்டதா? இன்னொருத்தியை ட்ரை பண்ணு" என கூலாகப் பேசும் கடை மானேஜர், எதற்குமே பெரிதாக அலட்டிக் கொள்ளாத Faye.


இவர்களின் உணர்வுகள், வலிகள் பார்வையாளர்களுக்கு வலிக்காமல் நகைச்சுவை இழையோட சொல்லப்படுகிறது. சுவாரஷ்யமான ஏராளமான காட்சிகள் உதாரணமா, புதுக்காதலன் வெளில இருக்க, பழைய காதலனை சூப்பர் மார்க்கெட்ல பார்த்துப் பேசி, பில்லை அவன் தலைலயே கட்டிட்டுப் போகும் காட்சி செம்ம!

அதுபோலவே அருமையான உரையாடல்கள் - இது பற்றி தெளிவாக, சுருக்கமாக சொல்வதெனில்,இந்தப் படத்தை அமெரிக்காவில் வாங்கி வெளியிட்டவர் இயக்குனர் Quentin Tarantino.

நாய் காலாவதியான அன்னாசிப் பழ ஜூஸை சாப்பிட மறுக்க, "நாய் மட்டும் எப்போதுமே நம் கூட நமக்கு விசுவாசமாக இருக்கும் என சொல்வார்கள். எவ்வளவு பொய்"

"நாங்கள் எல்லோருமே சமயங்களில் காதலில் துரதிருஷ்டசாலிகள்தான். காதல் தோல்வி வாட்டும் போதெல்லாம் நான் ஜாக்கிங் செல்வேன். நீங்கள் ஓடும்போது உடல் நீரை இழக்கும். எனவே அழுவதற்கு எதுவும் இருக்காது!"

"உண்மையிலேயே யாரையும் புரிந்து கொள்வது அர்த்தமற்றது! மனிதர்கள் மாறிவிடுவார்கள். இன்று அன்னாசி பிடித்திருக்கும் ஒருவருக்கு நாளை வேறொன்று!"

"எல்லாமே ஒரு முடிவு காலத்துடன்தான் வருகின்றன. இந்த உலகத்தில் ஏதாவது முடிவின்றி?"

"அன்புக்கு expiry date ஏதாவது உண்டா என்ன?""உனக்கு சத்தமாகப் பாட்டுக் கேட்பது பிடிக்குமா?"
"அது நான் யோசிப்பதைத் தடுக்கிறது!"

"உனக்கு யோசிப்பது பிடிக்காதா...உனக்கு என்ன பிடிக்கும்?"
"அதுபற்றி ஒருபோதும் யோசித்ததில்லை!"

"நீ எங்கு செல்ல விரும்புகிறாய்?"
"நீ எங்கு அழைத்துச் செல்ல விரும்புகிறாயோ அங்கு"

In the mood for love (2000) என்ற அருமையான படத்தைத் தந்த Wong Kar-wai இயக்கத்தில் 1994 இல் வெளியான Hong Kong படம்.

8 comments:

 1. அழகான விமர்சனம்..கண்டிப்பாக இப்படத்தை பார்க்க முயற்சி செய்கிறேன்..பகிர்வு அருமை சகோ..மிக்க நன்றி.

  ReplyDelete
 2. விமர்சனத்தை பார்த்தால் உடனே படம் பார்க்க தூண்டுகிறது...!!!

  ReplyDelete
 3. ஜீ....இப்படி விபரமா விமர்சனம் தந்திட்டு லிங்க் தராட்டி எப்பிடி !

  ReplyDelete
 4. //ஹேமா said...
  ஜீ....இப்படி விபரமா விமர்சனம் தந்திட்டு லிங்க் தராட்டி எப்பிடி !//

  ரொம்பநாள் முன்னாடி டவுன்லோட் பண்ணினது..இப்போ Torrent link கிடைக்கல! :-(

  ReplyDelete
 5. அழகான விமர்சனம்....
  படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிடுகிறது.

  ReplyDelete
 6. AnonymousMay 28, 2012

  Can I clone your article to my blog? Thank you.

  ReplyDelete
 7. இது எப்படி விடுபட்டது?

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |