Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Friday, June 7, 2013

தொலைந்துபோதல்!


உங்களுக்குத் தொலைந்து போய்விட வேண்டும் எனத் தோன்றியதுண்டா? வாழ்வில் ஒருமுறையாவது தொலைந்து போய்விட வேண்டுமென்று நினைக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா?

எதுவும் பிடிக்காத வெறுமையான சில பொழுதுகளில் தொலைந்து போய்விட வேண்டும் எனத் தோன்றுவதுண்டு. திடீரெனத் தனிமை ஒரு கனத்த போர்வையாக மூடிக் கொள்ளும். ஒரு மழைக்காலத்தின் வெளிச்சத்துக்கான ஒரு சிறு கீற்றும் தென்படாத இருளடர்ந்த மேகம் போல கவிந்திருக்கும். நான் யார்?  யாருக்காக, எதற்காக நான் இருக்கிறேன்? எனக்காக யாராவது இருக்கிறார்களா? என்ன செய்துகொண்டிருக்கிறேன்? என்பதுபோன்ற கேள்விகள் எழும்போதெல்லாம் தொலைந்து போய்விடுவதைப் பற்றியும் தோன்றும். யாருக்கும் தெரியாமல், எந்த வித தடயங்களுமின்றி, காற்றில் கரைந்து போய்விடவேண்டும் எனத் தோன்றும். சில சமயங்களில் வாழ்க்கையில் எதையும் சாதிக்காமல் காலத்தோடு தொலைந்து போவிடுவோமோ என்ற பயம் கலந்த கேள்வியே தன்னம்பிக்கையைத் தொலைந்துபோகச் செய்துவிடுகிறது.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் ஒரே தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவுப்புகள் வரும். சிறுவர்கள், சிறுமிகள் புகைப்படங்களைக் காட்டும்போது, மனதை என்னவோ செய்யும். சின்ன வயதில் ஊரில் ஒரு திருவிழாக் கூட்டத்தில் அம்மா அப்பாவிடமிருந்து பிரிந்து, தொலைந்து போன அனுபவத்தைப் பெறாதவர்கள் மிகக் குறைவாகவே இருக்க முடியும். அந்தச் சில நிமிடங்களில் வாழ்க்கையே அவ்வளவுதான் என்று தோன்றியிருக்கிறது. ஒவ்வொரு கணமும் நீண்டு செல்லும். வீடு செல்லும் வழி தெரிந்திருந்தும், சொற்ப தூரத்திலேயே இருந்தாலும் அந்தப் பொழுதில் எல்லாமே சூனியமாகி விட்டதைப் போன்ற உணர்வு நெஞ்சை அழுத்தும். நான் அவ்வளவுதான்! தொலைந்து போய்விட்டேன் என்ற உணர்வே வேறெதையும் சிந்திக்க விடாது. பெரும் தவிப்புடன் தேடிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் சரியாக, தொலைந்து போன ஒரு சகாவின் அறிமுகப் படலம் ஒலிபெருக்கியில் ஆரம்பமாகும். பச்சைப் பாவாடை சட்டை அணிந்த சிறுமியோ அல்லது நீல நிறத்தில் சேர்ட் அணிந்த சிறுவனின் பெயரையோ அறிவிப்பார்கள். கூடவே அப்பா, அம்மா பெயர் விபரங்கள். ‘பெயர் சொல்ல ஒரு பிள்ளை’ கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோர் அரக்கப் பரக்க ஓடுவார்கள். பெயர் சொல்ல முடியாத பாலகர்களை ஒலிபெருக்கியில் சற்று அழவிட்டு ‘சிறப்பு’ நிகழ்ச்சியும் ஒலிபரப்பாகும்.

அது ஒரு மிகப்பாரிய இடம்பெயர்வு. லட்சம் மக்கள் ஒரே இரவில் நாட்டைக் காலி செய்ய முயன்றால்? பதினைந்து கிலோமீற்றர் தூரம் கடப்பதற்கு ஒரு நாள் பிடித்தது. யாழ்ப்பாணத்திலிருந்து, நாவற்குழி வரை செல்வதற்கு! எனக்கான ஒரு பயணப்பையை என் சைக்கிளில் மாட்டிக் கொண்டு, என் குடும்பத்தினரிடமிருந்து ஒரு மதிய வேளையில் தொலைந்து போயிருந்தேன். வெட்ட வெளியில் இரவில் கடும் குளிர், மதியம் பெய்த பெருமழையில் தெப்பலாக நனைந்து, தொடர்ந்து சுட்டெரித்த வெய்யிலில் காய்ந்து, பசி, தாகம் மறந்து, மரத்துப்போன நிலையில் நகர்ந்து கொண்டிருந்தேன். வழியில் தெரிந்தவர்களிடம் கூறிவிட்டு இரவு முழுவதும் பூட்டிய ஒரு கடை வாசலில் உட்கார்ந்திருந்தேன். அசதியில் சற்றுத் தூங்கி காலையில் சாரி சரியாகச் செல்பவர்களை அசுவாரசியமாகப் பார்த்தவாறு இருந்தேன். கவலைப்படவும் தோன்றவில்லை. தூரத்தில் என்னைக கண்டுகொண்ட அப்பா மகிழ்ச்சியாகக் கையசைத்ததைக்கூட யாரோ யாரையோ பார்த்துக் கையசைப்பதைப் போலவே சலனமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


தொலைத்தலும், தொலைந்து போதலும் எமக்கு ஒன்றும் புதிதல்லவே. ஆனாலும் சிலரை மறக்க முடிவதில்லை. ஒரு காலைப் பொழுதில் கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்கு அருகில் அவனைப் பார்த்தேன். அவன் நிலா - என் நண்பனின் தம்பி. மிக இலகுவாக, இனிமையாக எல்லோருடனும் பழகக் கூடிய அவன் வீடு எப்போதும் நண்பர்களால் நிறைந்து, கலகலப்பாக இருக்கும்.  அவனும் நண்பர்கள் சிலரும் ஒரு பயணத்திற்கான தயாரிப்பில் இருந்தார்கள் கொழும்பிலிருந்து திரிகோணமலை, பின்னர் திரிகோணமலையிலிருந்து கப்பலில் யாழ்ப்பாணம். கையசைத்துச் சிரித்தான். பேசுவதற்கு இருவருக்கும் அப்போது அவகாசம் இருக்கவில்லை.

இரண்டு நாட்களின் பின்னர் நண்பன் தொலைபேசியில் அழைத்தான். அதுவரை நான் கேட்டிராத ஒரு இறுகிப் போன குரலில், தம்பியைத் தொலைத்து விட்டதாகச் சொன்னான். எப்படி, என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவனுக்கும் தெரியவில்லை. சற்று நேரம் மௌனமாகக் கழிந்தது. “எப்ப எடுக்கிறது?”, “பொடி ஹொஸ்பிட்டல்ல” இருவரும் அபத்தமாக ஏதேதோ பேசிக்கொண்ட ஞாபகம். எங்கள் இருவருக்கும் முற்றிலும் புதிதான, சற்றும் எதிர்பார்க்காத சூழ்நிலையும், உரையாடலும் அது. அவனைப் பார்த்தேயிராத என் பெற்றோர் உட்பட பலரின் நிம்மதி அன்று தொலைந்துபோனது. ஏன், எதற்கு என்ற கேள்விகள் மனதைக் குடைந்து கொண்டிருந்தன.

ஓரிரு மாதங்களில் நண்பனின் குடும்பம் கொழும்பு வந்தபோது சந்திக்கச் சென்றபோதிருந்த மனநிலையைச் சொல்லிவிட முடியாது. எப்படி எதிர்கொள்வது, என்ன  பேசுவது மிகுந்த தயக்கத்துடன் சென்றபோது, இயல்பாகவே அவர்கள் எதிர்கொண்டது மன நிம்மதியளித்தது. மிகக் கவனமாக, மறந்து போய்க்கூட அவன் பற்றிய எந்தப் பேச்சையும் எடுக்கவில்லை, அவர்களும் கூட! பேசிப் பேசியே களைத்திருந்தார்கள், பேசி என்ன ஆகப்போகிறது? இடையிடையே சிறு மௌனம். அது அவன் நினைவுகளால் நிரம்பியிருந்தது.  அவன் மாலையிட்டிருந்த புகைப்படத்தில் சலனமின்றி சிரித்துக் கொண்டிருந்தான்.நண்பனிடமும் அதுபற்றிப் பேசவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சில நாட்களில் சொல்லி முடித்தான்.

ஊரடங்கு அமலிலிருந்த அதிகாலை நான்கு மணிக்கே யாரோ கதவைத் தட்டியிருக்கிறார்கள். சத்தம் கேட்டு எழுந்து வந்தபோதுதான், அவர்கள் ஏற்கனவே கதவை உடைத்து உள்ளே வந்துவிட்டது தெரிந்திருக்கிறது. கையில் துப்பாக்கி. அப்போதைய வழக்கப்படி, அதிகார மையத்தின் அங்கீகாரம் பெற்ற திருடர்களாகக்கூட இருக்கலாம். முதலில் அப்படியே நம்பியிருக்கிறார்கள். தனியாகப் பேசவேண்டும் என, நிலா மட்டும் வெளியே  அழைக்கப்பட்டு, மற்றவர்களை உள்ளே போகுமாறு சொல்லியிருக்கிறார்கள்.

தொடர்ந்த ஒரு மணி நேரத்தில் குழப்பமும், பயமும் ஒருவாறு நீங்கி சற்றே நிம்மதியடைந்தபோது, ஓர் துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்கிறது! 

அவனுக்கும், யாருக்குமே எதுவும் புரியவில்லை. காரணங்கள் ஏதும் இருக்கவில்லை. எதற்காக இப்படி? யாரிடம் கேட்பது? கேள்விகள் மட்டுமே எல்லோரிடமும் எஞ்சியிருந்தன. அதன் பின்னர் பலமாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறும்போதேல்லாம் அவன் வீடு தொலைக்காட்சியில் காட்டப்படுவது வழமையாகிப் போனது. நண்பனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் முன் வராந்தாவிலிருந்து படிக்கட்டு ஈறாக நிலம் வரை ஒரு குடம் சரிந்து நீர் ஓடியதுபோல் இரத்தம் ஓடி உறைந்து கிடக்கும்காட்சி அடிக்கடி ஒளிபரப்பாகி மனம் கனக்க வைக்கும்.


யாழ்ப்பாணம் சென்றிருந்த ஒரு காலைப்பொழுது. இரவு முழுவதும் பயணித்த அசதியில் இருந்த என்னைத் திடுக்கிடச் செய்தது ஒற்றைத் தொலைபேசியழைப்பு. அவனா? எதுக்கு? அவனா இப்பிடி? ஏராளமான கேள்விகளுடன் சென்றேன். சாரங்கன்! ஒருகாலத்தில் அவனும் நானும் நண்பர்களாயிருந்தோம். பின்னர் பெரிய இடைவெளி - வேறு வேறு பிரதேசத்தில் வளர்ந்ததாலும், சந்திப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லாததாலும். எப்போதாவது நேரில் சந்திக்கும்போது ஓரிரு வார்த்தைகள் பேசுவதுடன் கடந்து விடுவது வழக்கம். பின்னர் அதற்கும் வாய்ப்புகளிருக்கவில்லை. அப்போது அவன் மருத்துவ கல்லூரி மாணவனாயிருந்தான். அவனைப் பற்றி எதுவும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. நல்ல ரசிகன், பாடகன் என்று தெரியும். நன்றாகக் கவிதைகள் எழுதுவானாம், அதிகமாக ஆங்கிலத்தில். இவையெல்லாம் நண்பர்கள் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுவரை அவன் ஒரு மருத்துவனாகியிருக்க வேண்டும் என்றே நினைத்திருந்தேன்.

தெரிந்த முகங்கள், நண்பர்கள் சிலர் குழப்பமும், துயரமும், கேள்விகளுமாக நின்றிருந்தார்கள். ஓரளவிற்குமேல் நெருங்க முடியாமல் நெடி முகத்திலறைந்தது. நாண்பர்கள் யாருக்குமே அருகில் சென்று பார்க்க துணிவிருக்கவில்லை. ரெண்டு நாளைக்கு முதலே நடந்திருக்க வேண்டுமென்றார்கள். பாரம் தாங்காமல் நைலான் கயிறு ஈய்ந்து, கால்கள் தரையில் துவண்டிருந்தன. தன்னைத் தொலைத்திருந்தான். யாருக்குமே காரணம் தெரியவில்லை. ஏராளமான ஊகங்களை ஒவ்வொருவரும் வெளியிட்டார்கள். ஏற்கனவே அவன் ஓரிரு முறை இது பற்றிக் கூறியதை நண்பர்கள் பலரும் பேசிக் கொண்டார்கள். தனது துறையில் நாட்டமின்றி மருத்துவப்படிப்பைக் கைவிட்டிருந்ததாகவும், மிகுந்த விரக்தியில் இருந்ததாகவும், மிகுந்த மனவலிமை கொண்ட அவன் ஏன் இப்படிச் செய்தானென்றும் புலம்பியவாறு நண்பர்கள். அந்த நாளை அவன் திட்டமிட்டிருந்ததாகப் பின்னர் தெரிந்தது. ஆனால் எதற்காக? யாருக்கும் விடை தெரியவில்லை. ஏன் அவன் அப்படிச் செய்தான்? அவனைத் தூண்டியது எது? இறுதி நேரத்தில் என்ன நினைத்திருப்பான்?

தொலைந்து போனவர்கள் நிறைந்த பூமி இது. விரும்பித் தொலைவதும், தொலைக்கப்படுவதும் இங்கே புதிதல்ல. புதிது புதிதாகத் தொலைகிறார்கள். தொலைபவர்களைத் தேடுபவர்களும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். முடிவில்லாத தொடர்கதையிது. தொலைந்து போகிறவர்கள் பற்றிய செய்திகளெல்லாம் சாதாரண நிகழ்வாகப் பழகிவிட்டன. அதுபற்றியெல்லாம் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதாகவும் தெரியவில்லை, நமக்குத் தெரிந்தவர்களாக இருக்கும் வரையில். ஒரே கனவோடு வெவ்வேறு பாதைகளில் ஏராளமானோர் ஆரம்பித்த பயணத்தில் பலர் தொலைந்திருக்கிறார்கள், சிலர் வழிதவறிப் போயிருக்கிறார்கள், பாதியில் கனவைத் துறந்தவர்கள் சிலர், சக பயணிகளாலேயே தொலைக்கப்பட்டவர்கள் சிலர்.


விரும்பித் தொலைந்து போதல் சில சமயங்களில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இக்கட்டான பலதருணங்களில் மன ஆறுதலையும், அமைதியையும் கொடுக்கிறது. மனதை அழுத்தும்  பிரச்சினைகளிலிருந்து பெயர்ந்து, மனதை இலேசாக்கி, மிதந்து, சிறகடித்துப் பறந்து தொலைந்துபோய்விட முடிகிறது.இனியதொரு நினைவு இந்தக் கணத்திலிருந்து தொலைந்து பால்ய காலத்துக்கு அழைத்துச் சென்று விடலாம். நல்லதொரு புத்தகம் , எழுத்து சிலநொடிகள், சில நிமிடங்கள், சமயங்களில் ஓரிரு மணித்துளிகள் கூட எங்கெங்கோ நினைவுகளின் ஆழத்தில் மூழ்கித் தொலைந்து போய்விடச் செய்துவிடலாம். உண்மையான, நேர்மையானதொரு காதலின் நினைவுகளில் தொலைந்து போகலாம். பிடித்த கவிதைகளில், பிடித்ததொரு பாடலில், பிடித்த சினிமாவில், இலக்கியத்தில் அது கொடுக்கும் உணர்வுகளில் தொலைந்து போய்விட முடிகிறது. உறவுகளின் அன்பில், இயற்கையின் அழகில் தொலைந்து போகலாம்.

நல்லதோர் இசையில் அப்படியே லயித்துக் கரைந்து தொலைந்து போய்விடலாம். சிலருக்கு இளையராஜா. சிலருக்கு ஏ.ஆர். ரஹ்மான். "இளையராஜா மட்டும் இல்லையெண்டா பைத்தியம் பிடிச்சிருக்கும்" - பதினைந்து வருடத்துக்கு முன் பிள்ளையார் கோவிலடியில் ஒரு முன்னிரவு நிலவு வேளையில், சசியண்ணன் சொன்னதை அவ்வளவு சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியவில்லை.

விரும்பித் தொலைவதற்கு ஏராளமான சாத்தியங்கள் இருக்கின்றன. அவையே பல சமயங்களில் தோலைந்து போகாமல் மீள்வதற்கும் வழி செய்கின்றன. வாழ்க்கையை நிரந்தரமாகத் தொலைத்துவிடாமல், காணாமல் போய்விடாமல் காப்பாற்றி விடுகின்றன. அடிக்கடி விரும்பித் தொலைவதும் மீள்வதுமே வாழ்வைச் சுவாரஷ்யமாக்குகின்றன. தொலைந்து தொலைந்து மீளலாம்..! 

Friday, May 3, 2013

பியானோ!


‘தையல் மெஷினை எதுக்கு ஹோல்ல வச்சிருக்காங்க?'

அதில் தவறேதும் சொல்லமுடியாது. ஆனால், ஏற்கனவே அங்கே இட நெருக்கடியாக இருந்தது. அதனால்தான் எதுக்கு இப்படி என்று சற்றே குழப்பமாக இருந்தது.

கொஞ்சம் கூர்ந்து கவனித்ததில் அது ஒரு பியானோ என்பது தெரிந்தது. நொந்து போனேன். இவ்வளவு ஞான சூனியமாகவா இருக்கிறோம்? தையல் மெஷின் ஒன்றை உபயோகிக்காத வேளைகளில் தலைகீழாக திருப்பி விட்டால் ஒரு மேசையைப் போல இருக்குமே, அதேபோலவே அளவில், உருவத்தில் இருந்ததால் சற்றுக் குழம்பிவிட்டேன் என என்னை நானே சாமாதானப் படுத்திக் கொண்டேன். இருந்தாலும் ஏன் அப்படித் தோன்றியது? எனக்கு மட்டும்தான் அப்படியா? பக்கத்தில் நண்பனைப் பார்த்தேன். இந்த விஷயம் தெரிந்தால், அவமானமாகிப் போகுமே? இசை குறித்த என் ரசனை கேள்விக்குள்ளாகிவிடலாம்.

எதற்கும் பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாம்.

“மச்சான் ‘அதை’ எதுக்கு இங்க வச்சிருக்காங்க?”

“டேய்! போய்ப் பார்ரா எல்லா வீட்லயும் தையல் மெஷினை ஹோல்லத்தான் வச்சிருக்காங்க!”

“அப்பிடியா? அப்ப சரி! ஆனா ஒரு முக்கியமான விஷயம். அது தையல் மெஷின் இல்ல. பியானோ!”

“அய்யய்யோ என்னடா? பியானோவா அது? ச்சே!”

“சரி சரி விடு மச்சி. நானும் முதல் அப்பிடித்தான் நினைச்சேன்”

நண்பன் வெளிநாடு செல்லும் விஷயம் தொடர்பான ஆலோசனைக்காக ஒரு பெரிய மனிதரைச் சந்திக்க வேண்டியிருந்தது, கூடவே நானும்! நண்பனின் சொந்தக்காரராக இருந்ததால், போனகாரியம் முடிந்து, பொதுவான பேச்சு ஆரம்பமாகியிருந்தது. வேடிக்கை பார்த்தபடியிருந்தேன். நாட்டு நலன் சார்ந்த பொது விஷயங்களை அவர் ஒரு வித அக்கறை, கவலை கலந்து தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்.

அப்போதிருந்த யாழ்ப்பாணத்திற்கான கப்பல் சேவையிலிருந்து, கொழும்பு நகரத்தின் போக்குவரத்து நெருக்கடி பற்றிய மிக முக்கியமான பிரச்சினைக்கு அவர் வந்தபோது, நான் அதைவிட முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி மிகத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன். 'நாம் அமர்ந்திருக்கும் இந்த சோஃபாவில இருந்து அந்த டைனிங் டேபிளுக்கு எப்பிடிப் போறது?' - நாங்கள் அங்கு உணவருந்தப்போவதில்லை என்றாலும், எனக்கு அப்போதைய அதி முக்கிய பிரச்சினையாகத் தெரிந்தது.

எந்த வழியும் தெரியவில்லை. சோஃபாவுக்கு மேலால் தாவிக் குதித்துப் போகலாம். அல்லது இந்தப்பக்கமாக மெதுவாக ஏறிக் கடந்து, அப்படியே சரிந்து டைனிங் டேபிள் மீது உருளலாம். அநேகமாக இரண்டாயிரமாம் ஆண்டுக்கு முதல் கட்டப்பட்ட தொடர்மாடிக் குடியிருப்பாக இருக்கவேண்டும். வரவேற்பறை மிகவும் சிறியதாக அமைந்திருந்தது. அதனை மேலும் அழகு சேர்க்கும் விதமாக ஏராளமான பொருட்கள் இட்டு நிரப்பியிருந்தார்கள். கூடவே பியானோ என்றே கண்டுபிடிக்க முடியாதவாறு அந்தப் பியானோவும் இருந்தது.

அதைப் பார்க்கும்போது அந்தப் பியானோவை இசைக்கும் அழகிய பெண்ணைக் காண வேண்டும் என்ற அவாவும் இயல்பாகவே தோன்றியது. 'எங்கள் எதிரே இருக்கும் அந்தக் கதவுத் திரைச்சீலை எந்த நேரத்திலும், பியானோவில் நடமாடும் நீண்ட அழகான விரல்களால் மெதுவாக விலக்கப்படலாம். கூடவே அந்த விரல்களுக்குச் சொந்தமான அழகிய பெண்ணையும் காணலாம். இதை நான் தவறவிட்டுவிடக்கூடாது'என நினைத்துக் கொண்டேன்.அதேநேரத்தில் ஒரு சந்தேகமும் வந்து தொலைத்தது. அந்த ஆன்டியையும், அங்கிளையும்யும் பார்த்தபோது ஒரு பியானோவை… அல்ல அல்ல, ஏன் ஒரு தையல் மெஷினைக்கூட வாசிக்க....மன்னிக்கவும், உபயோகிக்கத் தெரிந்தவர்கள் போலத் தோன்றவில்லையே!

எப்படியும் எனது இராசியின் பிரகாரம், அந்தப் பியானோவை வாசிக்கும் ஒரு பாட்டி தள்ளாமையுடன் வரலாம் என அனுபவம் எதிர்பார்த்தது. அப்படி எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. அங்கிருந்து புறப்பட்ட  பின்னர்  நண்பனிடம் கேட்டேன். அவன், "அவங்களுக்கு ஒரு மகள், இப்ப வெளிநாட்டில. ஆனா, நிச்சயமா பியானோ வாசிக்கத் தெரிஞ்சிருக்காது" - உறுதி கூறினான். எனது தீர்க்க தரிசனத்தை வியந்துகொண்டேன். தொடர்ந்து, 'யாராவது வெளில இருந்து வந்தவங்க வாங்கிக் கொடுத்திருக்கலாம்! அல்லது இந்த வீட்டை வாங்கும்போது இருந்திருக்கலாம். யாரும் வாங்குவதற்கு முன்வராததால் அப்படியே வைத்திருக்கூடும் என்றான். ஒருவேளை பந்தாவுக்கு இவர்களே வாங்கி வைத்திருக்கலாம்'என்பதை மட்டும் கூறிவிட்டு அவனே ஏற்கவில்லை. பந்தாவுக்கு இப்படி வைப்பதில்லையே!


ஒரு பெரிய கூடத்தின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் கிராண்ட் பியானோ (Grand Piano) அந்தஸ்தினை, ஆடம்பரத்தினை பறை சாற்றுவதாக இருக்கிறது. ஒரு பாரம்பரியத்தின், பழமையின் அடையாளமாக இருக்கிறது. நானும் சின்ன வயதில் முதன்முதல் பியானோ பார்த்தது வழக்கம்போல தமிழ் சினிமாவில்தான். பெரும்பாலும் அந்தஸ்தில் உயர்ந்த தொழிலதிபரின் மகளான கதாநாயகி வீட்டில் அல்லது பெரும்பணக்காரனான வில்லன் வீட்டில் அல்லது பெரும்பணக்காரனாக இருப்பதாலேயே கெட்டவனாக இருக்கப்போகும் யாரோ ஒருவர் வீட்டில் இருக்கும். 

பணக்கார நாயகி வீட்டிலிருப்பது காட்சிப்பொருளாக, ஆடம்பரத்துக்காக மட்டுமல்ல. படத்தின் நாயகன், நாயகியான  காதலர்கள் காதலித்து பிரிந்துபோனபின் அல்லது பிரிக்கப்பட்டபின், நிகழும் காதலியின் நிச்சயதார்த்தத்தில் இந்த பியானோவின் பங்கு மிக முக்கியமானது. அது எப்படியோ தெரியவில்லை தேடிக் கண்டுபிடித்து, மிகச் சரியாகப் பிரிந்து போய்விட்ட முன்னாள் காதலனையே நிச்சயதார்த்தத்துக்குப் பாட்டுபாட அழைத்து வருவார்கள்.

காதலன் பரம ஏழையாக இருந்தாலும், அதற்குமுன்னர் ஒரு பியானோவை நேர்ல பார்க்காமலோ அல்லது பார்த்தும், தொட்டுப் பார்க்காமலோ  இருந்தாலும் கூட, மிகுந்த உணர்ச்சி பொங்க, ஃபீல் பண்ணி மோட்டு வளையை அண்ணார்ந்து பாத்துக்கொண்டே முன்னாள் காதலியை வாழ்த்திப்பாடி, பியானோ கட்டைகளை விரல்களால் குத்துமதிப்பாக வாசிப்பார். அதிலிருந்தும் நல்ல இசை வருவது ஒரு ஆச்சரியம்தான்! நாயகியும் ஃபீலாகி விடுவார். நாயகன், நாயகி பாவமாகப் பார்த்துக் கொண்டிருக்கிற மக்கள் தவிர, படத்தில் வேறு எந்த ஆத்துமாக்களுக்கும் அந்தப்பட்டின் மொழியோ, பொருளோ புரிவதில்லை என்பதுதான் சோகம். ஒரிரு முறை தொலைக்காட்சிகளில் பார்த்த, சிவாஜிகணேசன் ‘ஆக்ரோசமாக’ பியானோ வாசித்துகொண்டே பாடும் 'எல்லோரும் நலம் வாழ' பாடல் பல நாட்களாக எனக்குப் பிடித்த நகைச்சுவைப் பாடலாக இருந்தது. சிவாஜி காலம் அல்லது அதற்கு முன்னைய காலத்திலிருந்து தொடர்ந்த இந்தப் பாரம்பரியம், சமீபகாலமாக இல்லையென்பது ஒரு ஆறுதல்.


The Pianist படத்தில் நாஜிக்களிடமிருந்து உயிரைக்காத்துக் கொள்ள ஓடிக்கொண்டிருக்கிறான் ஷ்பில்மேன். போலந்தின் தலைநகரான Warsaw வானொலி நிலையத்தில் பியானோ வாசித்துக் கொண்டிருந்த ஒரு யூத பியானோ கலைஞன். பசியோடு, இடிந்த கட்டடங்களில் உணவு தேடி, மீந்த தானியங்களை உண்டு, பாசித் தண்ணீரைக் குடித்து, மரணம் பின்னாலேயே தொடர்ந்து துரத்திவர ஓடுகிறான். யாருமில்லாத ஒரு வீட்டில் நுழையும் அவன் பியானோ ஒன்றைக் காண்கிறான். ஏற்கனவே அவன் தனது பியானோவை சூழ்நிலை காரணமாக விற்றுவிட்டிருந்தான்.

எப்போதும் இசையுடனே வாழ்ந்த ஒரு கலைஞன். பசி, குளிர், எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்ற சூழ்நிலையில் அந்தப் பியானோவைப் பார்க்கிறான். ஆர்வமாக அருகில் வருகிறான். சிறு சத்தம் கேட்டாலும் நாஜிக்கள் வந்து அவனைக் கொன்றுவிடக்கூடும். அவன் மிக நேசிக்கும் ஒருவிஷயத்தை அருகிலிருந்தும் அடைய முடியாத ஏக்கத்துடன், சோகத்துடன், காற்றிலே கைகளை அசைத்து இசைக்கிறான். அப்போது அவன் வாசிப்பிற்கு ஏற்ப பின்னணியில் பியானோ இசை ஒலிக்கும். காட்சியும், இசையும்  மிக நெகிழ்ச்சியானது.

அங்கேயே சமையலறையில் தகரத்தில் அடைக்கப்பட்ட உணவைக் கண்டு திறக்க முயல்கிறான். அப்போது பியானோ வாசிக்கும் சத்தம் கேட்கிறது. பயத்தில் மேலே ஏறி, ஒளிந்து கொள்கிறான். மறுநாள் அதே தகர கொள்கலனைத் திறந்து விட்டு நிமிர, எதிரே ஜெர்மன் இராணுவ அதிகாரி ஒருவர்! ஷ்பில்மென் அதிர்ச்சியில் உறைகிறான். “யார் நீ?” எனக் கேட்கிறார் அந்த அதிகாரி. தான் ஒரு பியானோ கலைஞன் என்று ஷ்பில்மென் சொன்னதும் அதிகாரி ஆச்சரியப்பட்டு அவனை அங்கிருக்கும் பியானோவை வாசிக்கச் சொல்கிறார். பசி, களைப்பு, மரண பீதியுடன் இருக்கும் ஷ்பில்மென் நடுங்கும் விரல்களால் மிக மெதுவாக, வாசிக்கத் தொடங்கி, தன்னை மறந்து அதனோடு ஒன்றிப் போய் வாசிக்க, அவன் திறமை கண்டு பிரமிக்கிறார் அந்த அதிகாரி. 

இன்னும் சில தினங்களில் நேசநாட்டுப்படையினர் இங்கே வந்துவிடுவார்கள் எனக்கூறி, அவனுக்கு உணவும், குளிருக்கு இதமாகத் தன் கோர்ட்டையும் கொடுத்துவிட்டு செல்கிறார் அந்த அதிகாரி. விடைபெறும்போது அவனிடம் கேட்கிறார். 

"யுத்தம் நிறைவடைந்த பிறகு என்ன செய்யப் போகிறாய்?"

"வானொலி நிலையத்தில் பியானோ வாசிப்பேன்"

"நான் அதைக் கேட்கிறேன்" 

மிக அற்புதமான இசை கொண்ட அந்தப்படம் எனக்கு மிகப்பிடித்த சினிமாவில் ஒன்று.


கண்டியில் தாத்தா வீட்டிற்குச் சென்றபோது அங்கே முதன்முதலாக ஒரு கிராண்ட் பியானோவை நேரில் பார்த்தேன். பாட்டி பியானோ இசைப்பதில் திறமையானவராம். ஒரு கிறிஸ்தவராக இருந்ததும், சிறுவயதில் தேவாலயத்தோடு வளர்ந்ததும் அதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கலாம். அவரின் உடல்நலக்குறைவு காரணமாக அப்போது அவர் இசைப்பதைப் பார்க்க முடியவில்லை. பின்னர் அவர் உயிருடன் இருந்தவரை சந்திக்கவில்லை. 

இன்றும் எங்காவது கிராண்ட் பியானோவைப் பார்க்கும்போது ஒரு தனி ஆர்வம் வருகிறது. கொழும்பு மெஜஸ்டிக் சிட்டியில் ஒரு பெரிய கிராண்ட் பியானோ வைக்கப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போதெல்லாம யாராவது வாசிப்பார்களா? யாரும் இசைத்ததை இதுவரை நேரில் பார்த்ததில்லை. ஒரு பியானோவைப் பார்க்கும்போதே நெளிநெளியான கூந்தல் கற்றையாக காற்றில் அலைய, வெள்ளை ஆடையணிந்த பெண்ணொருத்தி வாசிப்பதைப் போன்ற காட்சியும் மனத்திரையில் விரியும். ஒருமுறை நண்பன் ஒருவன் கேட்டான் 'ஒரு பெண் பியானோ வாசித்ததைப் பார்த்திருக்கிறீர்களா?' நாங்கள் யாரும் பார்த்ததில்லை! 

பெண்கள் தொடர்பில் எப்போதுமே தீராத பல கேள்விகள் இருக்கின்றன. நல்ல ரசனையுள்ள, நல்ல வாசிப்புப்பழக்கமுள்ள, ஓவியம் வரையக்கூடிய… இப்படிக் கேள்விகள் நீண்டுகொண்டே போகின்றன. அப்படியொரு அழகான பெண்ணை நாங்கள் யாரும் சந்தித்திருக்கவில்லை. இங்கே அழகான பெண்கள் என்பதில் எந்த நெருடலும் இல்லை. நல்ல ரசனை, திறமை, கலைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இயல்பாகவே ஓர் அழகு வாய்த்துவிடுகிறது. மனதின் அழகியல் உணர்வுகளால் உண்டாகும் உண்மையான அழகு. நீங்கள் அதுபோன்ற ஓர் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா? நான் இதுவரை சந்திக்கவில்லை. 

Wednesday, April 24, 2013

காக்கா கொத்தின காயம்!




“என்ன இது?”

“அது காக்கா கொத்தினது”

“ஏன் கொத்திச்சு?”

“உங்கள மாதிரி சின்னப்பிள்ளையா இருக்கேக்க, அம்மாவ விட்டுட்டு தனியா மொட்டை மாடிக்கு போனப்போ...”

என் இடது புருவத்தில் மறைந்திருந்த சிறு வெட்டுக் காயத்தைக் காட்டி கேட்ட என் அக்கா மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் மறந்தே போய்விட்டிருந்த என் பால்ய வயது அடையாளம். புருவத்தின் குறுக்காக சிறிய ஆழமான ஒரு வெட்டு. காக்கா கொத்தியது என்றால் நம்பும்படியாக இருந்தது. அது எப்படி சற்றும் யோசிக்காமல் காக்கா கொத்தியது என்று சொல்ல முடிந்தது?

என் சின்னஞ்சிறு பராயத்தில் என் பெரியப்பாவிடம் அதே கேள்வியைக் கேட்ட ஞாபகம் இருக்கிறது. என் புருவத்தில் இருக்கும் அதே போன்ற வெட்டுக் காயம் அவருக்குமிருந்தது. அவர் சொன்ன பதிலும் அதே காக்கா கொத்தியதுதான்.

குழந்தைகள் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். கவனிப்பதும், கதை கேட்பதுமாக முதல் தேடல் குழந்தைப்பருவத்தில் ஆரம்பிக்கிறது. வளர்ந்து வருகையில் கவனித்தல் குறையலாம். ஆனால் கதை கேட்கும் ஆர்வம் வாழ்வின் இறுதிவரை குறைவதில்லை. முக்கியமாக குழந்தைப் பருவத்தில் பேச்சு ஆரம்பித்து சில நாட்களிலேயே  'கதை விடுதல்' என்பதும் ஆரம்பித்து விடுகிறது. அதை மட்டும் நாம் எப்போதும் தவறாமல் செய்து வருகிறோம்.

குழந்தைகளிடம் கதை விடுவதற்குத்தான் காக்காய்கள் எவ்வளவு உறுதுணையாக இருக்கின்றன. "காக்கா கொண்டு போயிட்டுது! " - குழந்தைகளிடம் ஒரு பொருளை மறைத்து வைப்பதற்கு நாம் உபயோகப்படுத்தும் உத்தி. அதன்மூலம் நாங்களே முதன்முறையாக குழந்தைகளுக்கு ‘கதைவிடுவது’ பற்றி அறிமுகம் செய்கிறோம். பின்னர் அவர்கள் எங்களிடம் வெகு தீவிரமான முகபாவத்தோடு ‘காக்கா கொண்டு போச்சு” என அதே ‘டெக்னிக்’கை பிரயோகிக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும்போல பெரியவர்களிடமிருந்தே கதைவிடுவதையும் கற்றுக் கொள்கிறார்கள்.

நாம் முதன்முதலாகக் கேட்ட 'கதைநாயகன்' காக்காதான் இல்லையா? திருட்டுத்தனமான பாத்திரமாகவே காக்கா அறிமுகப்படுத்தப்படுகிறது. பின் நமது திருட்டுத் தனங்களுக்கும் காக்கா மீதே பழிபோட்டு, திருட்டுத்தனத்தின் உருவகமாகவே அவைகளை மாற்றிவிட்டோம். சிறுவயதில் இடையிடையே ஓரக்கண்ணால் சற்றே சாய்ந்து பார்க்கும் பழக்கம் இருந்தது. “என்னடா காக்காப் பார்வை பார்க்கிறே?” என அக்காக்கள் சிலர் சிரித்தபடியே கேட்பார்கள். அவசரமாக, அரைகுரையாகக் குளிப்பதை ‘காக்காக் குளியல்’ , ‘காக்காக் கடி’ என காக்கைகள் நமக்கு கலைச் சொற்கள் சிலவற்றை வழங்கி நம் மொழிக்கும் சேவை செய்திருக்கின்றன.

பாவம் காக்கைகள் அவற்றுக்கு காலம் காலமாக தம் இனத்தின் மீது நாம் மேற்கொள்ளும் தவறான கற்பிதங்கள் பற்றித் தெரியாமல் இருக்கலாம். அல்லது தங்கள் மீதான அவதூறுகளைக் களைய வேண்டுமென்ற பிரக்ஞை இல்லாமலோ தங்கள் பாட்டுக்கு வாழ்ந்து வருகின்றன. ஆனாலும் அவ்வப்போது திருட்டுத்தனங்களும் செய்வதாகத் தெரிகிறது.



என் காயத்தைக் கண்ணாடியில் பார்த்தேன். புருவத்தின் குறுக்காக சற்றே ஆழமான ஒரு பிளவு. இவ்வளவு நாட்களாக நான் கவனிக்கவே இல்லையே? நேராகப் பார்த்தால் தெரியாததால், இப்படியொரு அடையாளத்தையே மறந்து போயிருந்தேன். அந்தக்காயம் ஏற்பட்டபோது, ஓரிரு மணிநேர பயத்தையும், சில நாட்கள் வலியையும் எனக்குக் கொடுத்திருந்தது.

பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, என் விளையாட்டுத் தோழர்களைச் சந்திக்க ஓடினேன். அப்பா கொழும்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் வீட்டில் அம்மாவின் கடுமையான சட்டதிட்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதி. பொதுவாக நான் வெளியில் சென்று விளையாடுவதை அம்மா விரும்புவதில்லை என்பதால், பலத்த கெடுபிடியுடனேயே எப்போதாவது அதற்கான அனுமதியை பெற வேண்டியிருந்தது. அதுவும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில்.

சரியாக மாலை ஆறுமணிக்கு அம்மாவின் ஊரடங்கு அமல்படுத்தப்படும். அப்போது நான் வீட்டில் நிற்க வேண்டும், விளையாட்டில் தோழர்களுடன் ஏற்படும் பிரச்சினை எதுவானாலும் நான் அவற்றை வீட்டிற்கு கொண்டுவரக்கூடாது என்பவை அவற்றில் முக்கியமானவை. ஆனால் என்மீது சுமத்தப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், சந்தேகத்திற்கு அடிப்படையான தகவல்கள் போன்றவற்றுக்கு காலதாமதமற்ற கடுமையான நடவடிக்கையும், காலவரையற்ற தடைச்சட்டமும் உண்டு. அப்போதெல்லாம் மோதலின் ஆரம்ப கட்டத்திலேயே ‘ஒ..’ வென்று அபாயச்சங்கை முழங்கி, பக்கத்து வீட்டுஅக்காக்களிடம் ஆதரவு கோருவதை என் ராஜதந்திர ரீதியான நடவடிக்கையாக வைத்திருந்தேன். அது எப்போதும் நல்ல பயனைக் கொடுப்பதாக இருந்தது. 'ஒப்பரேசன் லிபரேசன்' நடவடிக்கையின்போது திடீரென ஒருநாள் 'மிராஜ்' வந்ததே, அதேபோல பறந்து வருவார்கள்.

அன்று ஐஸ்போல் விளையாடிக் கொண்டிருந்தோம். பெயரைத் தவிர விளையாட்டில் ஐசுக்கும், பந்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஒருவர் கண்களைப் பொத்திக் கொண்டு ஒன்றிலிருந்து, ஐம்பதுவரை எண்ணிக கொண்டிருக்க மற்றவர்கள் ஒளிந்துகொள்வது. ஒளிந்திருப்பவர்களை ஒவ்வொருவராகக் கண்டுபிடித்தபின் மீண்டும் தொடங்கும். இப்போது முதலில் கண்டுபிடிக்கப்பட்டவர், கண்களை மூடிக் கொள்ள மற்றவர்கள் ஒளிந்துகொள்ள - இப்படியே தொடரும். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. தோழி ஒருத்தி கண்களை மூடிக் கொண்டு வழக்கத்தைவிட வேகமாக எண்ணத் தொடங்கினாள். நாங்கள் தலைதெறிக்க ஓடினோம். பாருங்கள், தோழிகள் எப்போதுமே இப்படித்தான் இருக்கிறார்கள்.

என்முன்னால் ஓடிக்கொண்டிருந்த நண்பன் திடீரெனத் தடுக்கி விழ, அவன்மீது நான் தடுக்கி, தடுமாறி எதிரிலிருந்த சதுரத் தூணின் விளிம்பில் மோதி, சற்று நேரம் எதுவும் புரியவில்லை, வலிக்கவுமில்லை. கண்கள் மின்னியது. லேசாக இரத்தம்கசிய, ‘வீட்டுக்கு எப்படிப் போவது?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனது நல்ல நேரம். அன்று அப்பா கொழும்பிலிருந்து விடுமுறையில் வரும் நாளாக இருந்தது. தெருமுனையில் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தேன்.

தூரத்தில் அப்பா வருவது தெரிந்ததும் ஓடிச்சென்று அப்பாவிடமிருந்து சிறு பையொன்றை வாங்கி தொழில் மாட்டிக் கொண்டே கூட நடந்தேன். ‘குழந்தைகள் ஓடி விளையாட வேணும், விழுந்து காயம் பட வேணும்’ என்பது அப்பாவின் கொள்கை. கொள்கையின்படி வாழ்ந்ததில், அவரிடமும் சில விளையாட்டுக்காயங்கள். அதைவிட தன் இளம்வயதில் கிரிக்கட் விளையாடும்போது, பற்றைக்குள் பந்தை எடுக்கப் போய் கையில் பாம்பிடம் கடிவாங்கியிருந்தார். ‘பாம்பு கடித்த காயம்’ தெரியவில்லை. சிகிச்சையளிக்கும்போது வைத்தியர் கத்தி கொண்டு சுரண்டியதில் ஒரு பாம்புக் குட்டி அளவிற்கு கையில் அடையாளம். மேலதிக விபரமாகச் சொல்லியிருந்தார், பாம்பு கடித்தது அவ்வளவாக வலிக்கவில்லையாம். சிகிச்சைதான் பயங்கரமாக வலித்ததாம்.



ஒவ்வொரு காயங்கள், தழும்புகளுக்குப் பின்னாலும் அழகான எமது பால்யகால நினைவுகள், சுவாரஷ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. அது அன்றைய பொழுதில் பெருந்துன்பமாக இருந்து, பின்னர் அவை பற்றிய நினைவே இல்லாது போயிருக்கும். உண்மையில் அப்படி ஒரு காயம் இருப்பதையே மறந்து போயிருப்போம். யாரோ நெருங்கிய ஒருவர் கேட்கும்போது, அநேகமாக ஒரு குழந்தை கேட்கும்போது, மனம் பின்னோக்கிப் பயணிக்கும்.

ஒருமுறை பள்ளி விடுமுறையின்போது நண்பர்கள் எல்லோரும் விளையாடிவிட்டு வந்து, எங்கள் வீட்டு முற்றத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். சமீபத்தில் நடந்துமுடிந்த கிரிக்கெட் போட்டி பற்றிச் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த கமலன், பண்டா அடித்த சிக்ஸ் பற்றி ஆக்சன் காட்டினான். அவன் காற்றில் மட்டைடைச் சுழற்ற 'டொக்' சத்தம் எப்படி வந்ததென்று அதிர்ந்து திரும்பினோம். டினேஷ் கண்ணைப் பொத்திக் கொண்டிருந்தான். புருவத்தில் அடிபட்டு சதை பிய்ந்து தொங்கியது. மூன்று தையல் போடப்பட்டது. இப்போது அவன் சகோதரியின் குழந்தையோ, அல்லது ஓர் மருத்துவனான அவனிடம் வரும் ஓர் குழந்தையோ  அவனிடமும் கேட்கலாம். ஒருவேளை சற்றே பெரிய காக்கா கொத்தியதாகக் கூட அவன் சொல்லல்லாம்.

என் பெரியப்பாவின் காயத்துக்குப் பின்னால் என்ன கதையிருக்கும்? ஒரு மாங்காய் திருடிய கதை இருக்கலாம். ஒரு கிட்டிப்புள் விளையாடிய கதை இருக்கலாம். நம் எல்லோரிடமும் நாம் மறந்துபோய்விட்ட ஒரு சிறுவயதுக் காயத்தின் அடையாளம், தழும்பு இருக்கும். என்போலவே பலருக்கும் புருவத்தில் ஒரு காக்கா கொத்திய காயம் இருக்கலாம். அதன்பின்னே ஒரு கதை இருக்கும். சுவாரஷ்யமான காரணம் இருக்கும், காக்காவைத் தவிர!

சிறு வயதில் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் மட்டும் அப்படியே தழும்புகளாக, நிரந்தர அடையாளங்களாக மாறிவிடுவது ஆச்சரியம்தான். ஒருவேளை வளர வளர அவதானமாக இருக்கப் பழகிவிடுவதால் காயங்கள் மனதில் மட்டுமே அதிகமாக ஏற்படுகின்றன போலும். 

யாருக்கும் தெரியாத,  யாருமே கவனிக்காத, எந்தக் கேள்வியும் கேட்காத மனதின் காயங்களை நாமே கேள்வி கேட்டு, ஆறவிடாது அப்படியே புதிதாகப் பேணிக் கொள்கிறோம். ஏதோவொரு சமயத்தில் அந்த வலியையும், அதன் வீரியத்தையும் முதன்முறையாக ஏற்படுவது போன்றே உணர்ந்து கொள்கிறோம். மனதின் காயங்களையும் சிறு வயதின் விளையாட்டுத் தழும்புகள் போலவே சிறு புன்னகையுடன் கடந்து செல்ல முடிந்தால், முயன்றால் நன்றாயிருக்குமல்லவா?


Friday, April 12, 2013

பயணம்...



ஒர் நீண்ட பேருந்துப் பயணத்தின்போது, ஆரம்பத்திலேயே தூங்கிப் போய்விடுபவர்களைப் பார்க்கும்போது, சற்றே பொறாமையாக இருக்கும். அது ஒரு திறமைதான். அதிலும் எந்தத் தயக்கமோ, தயவு தாட்சண்யமோ இன்றிப் பக்கத்திலிருப்பவர் தோள்மீது சாய்ந்து தூங்குவதென்பது ஒரு வரம். வரம் அபூர்வமாகவே கிடைக்குமாயினும், நம்மிடையே ஏராளமான அபூர்வப் பிறவிகள் இருக்கிறார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்துகொள்ள முடிகிறது.

திருகோண மலையிலிருந்து யாழ் செல்ல வேண்டியிருந்தது. அதற்குச் சொகுசுப் பேரூந்து ஏதுமில்லாததால் சோகத்துடன் அமர்ந்துகொண்டேன். இரவு பத்து மணி. இருக்கைகள் அனைத்தும் பயணிகளால் நிறைக்கப்பட்டு புறப்பட்டது. எந்த மேலதிக வசதிகளும் இல்லாத ஒரேயொரு பேரூந்துதான் அந்த நேரத்திற்கு! சரிந்து அமரவும் முடியாத இருக்கைகள்.  அதுவும் வழமைபோல இல்லாமல் ஒருபக்கத்தில் இரண்டு, மற்றையதில் மூன்று பேர் அமரும்படியான இருக்கை அமைப்பு வேறு!  எனக்கருகில் ஓர் நடுத்தரவயது மனிதர், அடுத்து அவர் மனைவி. அங்கிள் சிநேகமாகப் புன்னகைத்து, தன்னைப்பற்றி, என்னைப்பற்றி அளவளாவிக் கொண்டார்.

அரைமணி நேரத்தில் ஆரம்பித்தது அவஸ்தை. அவர் தூங்க ஆரம்பித்தார். அதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை. என்ன, என் தோள்மீது சாய்ந்து தூங்க அரம்பித்திருந்தார். நொந்துபோய் அமர்ந்திருந்தேன். ஆனாலும் அவர் மிகவும் நல்லவராக, நாகரீகமானவராக இருந்தார். அது கூடச் சில சமயங்களில் மற்றவர்களுக்குத் தொல்லையாக அமைந்துவிடுகிறது. தனது செயலுக்கு அவ்வப்போது மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அட! இவ்வளவு அவஸ்தையையும் சமாளித்து லேசாகத் தூங்க ஆரம்பித்த என்னை தட்டி எழுப்பி ஒருமுறை “சொறி தம்பி ” சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!


ஒவ்வொரு பயணங்களும் விதவிதமான அனுபவங்களைக் கொடுக்கின்றன. ஒரு நெடுந்தூரப் பயணம் கொடுக்கும் கலவையான அனுபவங்கள் அலாதியானவை. 

இடைவிடாது பேசிக்கொண்டே வரும் சக பிரயாணி, அபூர்வமாக வாய்க்கும் ஒத்த ரசனை கொண்ட தற்காலிக நண்பர், தவறுதலாக இருக்கை மாறி அமர்ந்து அதுபற்றி உணராமலே 'நியாயம்' பேசுபவர்கள், தூக்கம் வரும்வரை நாட்டு நிலைமை பற்றித் தீவிரமாகக் கவலைப்படுவோர், உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டல் பற்றிக் கவலைப்பட்டுவிட்டு, சத்தமாகக் குறட்டைவிட்டுத் தூங்கி அடுத்தவர் தூக்கத்தைச் சுரண்டுபவர்கள், பக்கத்திலிருப்பவர் தோள்மீது சாய்ந்து உறங்கும் 'தனிமனித சுதந்திர ஆர்வலர்கள்' , எப்போதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே, எப்போது வாந்தி எடுப்பாரோ எனக்கிலியை ஏற்படுத்தும் பயங்கரவாதிகள் எனப்பல சுவாரஷ்யமான மனிதர்களை சந்திக்க வைக்கின்றன. இனிமையான தருணங்கள். இமசையான அனுபவங்கள் எனக் கொட்டிக் கிடக்கின்றன. ஓர் தேர்ந்த எழுத்தாளனுக்கு ஒவ்வொரு பயணமும் ஒரு சிறுகதைக்கான  கருவினைக் கொண்டிருக்கின்றன.

ஒரு நெடுந்தூரப் பேருந்துப் பயணத்தின் போது மனம் தனது பயணத்தைத் தனியாக ஆரம்பித்து விடுகிறது. மிக வேகமாக வருஷங்கள் கடந்து பின்னோக்கிச் சென்று விடுகிறது. அநேகமாகப் பால்யகாலத்துக்கு அழைத்துச் சென்று விடுகிறது. சின்னவயது முதல் வாழ்க்கையில் கடந்து சென்ற மனிதர்கள் பலரை நினைவு படுத்துகிறது. முதன்முதல் பயணித்த ஒரு நீண்ட பேரூந்துப் பயணத்தை, ரயில் பயணத்தை ஞாபகப் படுத்துகிறது. இழந்துவிட்ட உறவுகள், தவறவிட்ட சில தருணங்கள் என மனத்தைக் கனக்க வைத்துவிடுகின்றது. ஒரு நீண்ட பயணத்தினால் ஏற்படும் மிதமிஞ்சிய களைப்பு என்பது உண்மையில் மனத்தின் பாய்ச்சலால் ஏற்படுவதுதானோ?


சில பயணங்கள் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை மாற்றி விடலாம். அதுவே ஒரு வரலாற்று நாயகனை உருவாக்கலாம். ஏதோ ஒரு திட்டமிடலுடன் ஆரம்பித்த ஒரு பயணம், பிற்காலத்தில் சற்றும் எதிர்பார்க்காத ஒரு பெரிய மாற்றத்தை அவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கே ஏற்படுத்தலாம். அப்படித்தான் 'எர்னஸ்ட்டோ குவேரா' என்ற இருபத்துமூன்று வயது இளைஞனும், அவரது நண்பரும் ஓர் உல்லாசப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் ஐந்தாயிரம் மைல் தூரத்தை நாலரை மாதத்தில் கடப்பதாக திட்டமிடுகிறார்கள். உல்லாசம்,பொழுதுப்போக்கு மற்றும் முடிந்த வரை தம் இளமைக்குத் 'தீனி' போடுதல் என்பவற்றை மட்டும் நோக்கமாகக் கொண்ட அந்தப் பயணம் ஆரம்பிக்கப்படுகிறது. பயணம் படிப்படியாக அவர்கள் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. பெருவின் மச்சு பிச்சு (Machu Picchu) என்ற அழிக்கப்பட்ட Incan இனத்தின் வரலாற்றுப் பெருநகரம், வாழ்ந்து மறைந்துபோன அவ்வினம் அவர்கள் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த உலகத்துக்கு ஓர் 'சே குவேரா!' கிடைத்தார். The Motorcycle diaries (2004) என்கிற Argentina திரைப்படம் இதுபற்றி விரிவாகப் பேசுகிறது.


திடீரென வாய்க்கும் திட்டமிடப்படாத பயணங்கள் வாழ்வு முழுமைக்கும் மறக்க முடியாதவையாக அமைந்துவிடுகின்றன.அது எம்போன்றவர்களுக்கு புதிதல்லவே! அப்படியான என் முதல்பயணம் ஏதுமறியாத சின்னஞ்சிறு வயதில் ஏற்பட்டது. தூக்கத்திலிருந்து திடீரென கலைக்கப்பட்ட அந்த அதிகாலைப் பொழுதில், அம்மாவின் பதற்றம் நிறைந்த முகம் கலங்கலாகத் தெரிந்தது. என்னைத் தோளில் அள்ளிப்  போட்டுக் கொண்டு வேகமாக நடந்ததும், அயலவர், சொந்தங்களையும் அதே போல கண்டேன். “எங்க போறம்?”,  “இண்டைக்கு ஸ்கூல் இல்லையா?” போன்ற என் கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லவில்லை. என் பள்ளித் தோழர்கள், தோழிகள் சிலரையும் பார்த்தபோது உண்டான உறசாகமும், மகிழ்ச்சியும் மெல்ல மெல்ல வடிந்து போனது. வழமைக்கு மாறான சத்தங்களுடன் ஆரம்பித்த அந்த விடிகாலைப் பொழுது, வழமைக்கு மாறான விபரீதமான நாளொன்றின் ஆரம்பமாக இருந்தது. பின்பு அதுவே வழமையாகிப் போன ஒரு நெடிய பயணத்தின் ஆரம்ப நாளாக இருந்தது பின்நாட்களில் புரிந்துபோனது.


இடம்பெயர்வு என்பது ஒரு விரும்பாத பயணம். அது கொடுக்கும் அனுபவங்கள் நம்மில் பலருக்கும் வாய்த்திருக்கிறது. அந்த அனுபவங்களை, அதன் தாக்கங்களை அன்றாட வாழ்வில் கண்டு கொள்ள முடிகிறது. பொதுவாக யாழ்ப்பாணத்தில் இருந்த காலப்பகுதியில் ஒரு தொலைக்காட்சியோ அல்லது வேறு எந்த உபகரணங்களோ வாங்கினால் அது அடைக்கப்பட்டு வந்த பெட்டியை யாரும் எறிந்துவிட  விரும்புவதில்லை. "எப்பவாவது தேவைப்பட்டிச்செண்டா..." என்று இழுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அந்தத் தேவை என்னவென்பதை சிலர் வெளிப்படையாகவே "தச்சமயம் ஓட வேண்டி வந்தாலும்..." நேரடியாகவே கூறுவார்கள். யாழ்ப்பாணத்திலாவது பரவாயில்லை. கொழும்பு வந்த பிறகும் அதுவே தொடர்கிறது. வாடகை வீட்டிலிருந்து இன்னோர் வாடகை வீட்டுக்கான பயணத்தின்போது உதவினாலும் அடிப்படையில் "எப்பவாவது ஓட வேண்டி வரும்" என்பது மனதில் ஆழப்பதிந்துவிட்டது. அது மாறுவதாகவும் தெரியவில்லை.

சில பயணங்கள் வாழ்வு முழுமைக்கும் மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுத்துவிடுகிறன. சில அதுவரை சந்தித்திராத, அறிமுகமில்லாத மனிதர்களின் அன்பினை உணர வைத்துவிடுகின்றன. சில நம் கூடவே இருக்கும் மனிதர்களின் அதுவரை பார்க்காத வேறுபட்ட முகங்களை இனங்காட்டிச் செல்கிறன. ஒரே இன மக்களின், ஒரே பிரதேச மனிதர்களின் மக்களின் மாறுபட்ட குணவியல்புகளைச் சொல்கின்றன. ஒரு குறுந்தூரத்திற்கான நெடிய பயணம் அது. ஐந்து கிலோமீட்டருக்கும்  குறைவான தூரத்தைக் கடக்க பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நகர்ந்து சென்ற அந்த ஒரே ஒரு பயணமே பலருக்கு வாழ்வை உணர்ந்துகொள்ளப் போதுமானதாக இருக்கிறது. எவ்வளவு பேரானாலும் இன்முகம் காட்டி வரவேற்று, ஆதரவளித்த சக மனிதர்கள் பலரையும், தாகத்துக்கு நீர் கொடுக்க மறுத்த சில 'நல்ல' மனிதர்களையும் அறிமுகம் செய்து வைத்தது.


வாழ்க்கை ஓர் பெரும்பயணம். அது சிலசமயம் தெளிந்த நீரோடையில் அமைதியாக பயணிக்கும் அழகிய படகு போல செல்கிறது. சிலவேளைகளில் காட்டாற்று வெள்ளம்போல் அலைக்களித்துச் செல்கிறது. மேலும் சில புயலில் அகப்பட்டுக் கொண்ட படகுபோல் இடம்தெரியாமல் தொலைந்துபோகிறது!  ஏதோ ஓர் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி எப்போதும் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கிறோம். சிலர் இலக்கை அடைகிறார்கள். சிலர் திசை மாறி விடுகிறார்கள். சிலர் பாதியிலேயே தொலைந்து போகிறார்கள். இனி எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலையில் வாழ்வை அதன் போக்கிலேயே வாழ்ந்து வருபவர்கள் பலர்.

வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு கனவோடு பயணிப்பவர்கள் இருக்கிறார்கள். ஏராளமானோர் ஒரே கனவை இலக்காகக் கொண்டு வெவேறு பாதைகளில் பயணித்திருக்கிறார்கள். கனவுகளுடனேயே வாழ்ந்து, அதற்காகவே வாழ்ந்து, எதுவும் நிறைவேறாமல் அந்தக் கனவுகளோடும் , ஏக்கங்களோடுமே தொலைந்தும் போயிருக்கிறார்கள். சக பயணிகளாலும் தொலைந்து போயிருக்கிறார்கள். ஒரு தலைமுறையின் நிறைவு பெறாத பயணத்தை அடுத்த தலைமுறையும் தொடரலாம்.


கனவுகளைச் சுமந்துகொண்டு, நிஜங்களை சகித்துக் கொண்டு, நிம்மதியைத் தேடி, வெற்றியைத் தேடி, அங்கீகாரத்தைத் தேடி, அடையாளங்களை நிறுவிக் கொள்வதற்கு வாய்ப்புகளைத் தேடி, அமைதியைத் தேடி, பாதுகாப்பைத் தேடி வாழ்வின் இறுதிவரை பயணம் தொடர்கிறது. திசை மாறலாம், குறிக்கோளை அடையமுடியாது போகலாம், பாதியில் தொலைந்து போகலாம். எனினும் நம்பிக்கையுடன் பயணிப்போம்!

( 'வானம் தாண்டிய சிறகுகள்' என்ற தொடருக்காக பத்திரிகை ஒன்றில் எழுதியது. )

Monday, October 1, 2012

துப்பாக்கி!



வாழ்க்கையில் அனுபவத்தைப் போல எதுவும் பாடம் கற்றுக் கொடுப்பதில்லை. ஆனாலும் கற்ற பாடத்தை மீண்டும் பிரயோகிக்க, இரண்டாவது சந்தர்ப்பம் ஒன்றை வாழ்க்கை வழங்குவது மிகக் குறைவு.