Friday, May 3, 2013

பியானோ!


‘தையல் மெஷினை எதுக்கு ஹோல்ல வச்சிருக்காங்க?'

அதில் தவறேதும் சொல்லமுடியாது. ஆனால், ஏற்கனவே அங்கே இட நெருக்கடியாக இருந்தது. அதனால்தான் எதுக்கு இப்படி என்று சற்றே குழப்பமாக இருந்தது.

கொஞ்சம் கூர்ந்து கவனித்ததில் அது ஒரு பியானோ என்பது தெரிந்தது. நொந்து போனேன். இவ்வளவு ஞான சூனியமாகவா இருக்கிறோம்? தையல் மெஷின் ஒன்றை உபயோகிக்காத வேளைகளில் தலைகீழாக திருப்பி விட்டால் ஒரு மேசையைப் போல இருக்குமே, அதேபோலவே அளவில், உருவத்தில் இருந்ததால் சற்றுக் குழம்பிவிட்டேன் என என்னை நானே சாமாதானப் படுத்திக் கொண்டேன். இருந்தாலும் ஏன் அப்படித் தோன்றியது? எனக்கு மட்டும்தான் அப்படியா? பக்கத்தில் நண்பனைப் பார்த்தேன். இந்த விஷயம் தெரிந்தால், அவமானமாகிப் போகுமே? இசை குறித்த என் ரசனை கேள்விக்குள்ளாகிவிடலாம்.

எதற்கும் பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாம்.

“மச்சான் ‘அதை’ எதுக்கு இங்க வச்சிருக்காங்க?”

“டேய்! போய்ப் பார்ரா எல்லா வீட்லயும் தையல் மெஷினை ஹோல்லத்தான் வச்சிருக்காங்க!”

“அப்பிடியா? அப்ப சரி! ஆனா ஒரு முக்கியமான விஷயம். அது தையல் மெஷின் இல்ல. பியானோ!”

“அய்யய்யோ என்னடா? பியானோவா அது? ச்சே!”

“சரி சரி விடு மச்சி. நானும் முதல் அப்பிடித்தான் நினைச்சேன்”

நண்பன் வெளிநாடு செல்லும் விஷயம் தொடர்பான ஆலோசனைக்காக ஒரு பெரிய மனிதரைச் சந்திக்க வேண்டியிருந்தது, கூடவே நானும்! நண்பனின் சொந்தக்காரராக இருந்ததால், போனகாரியம் முடிந்து, பொதுவான பேச்சு ஆரம்பமாகியிருந்தது. வேடிக்கை பார்த்தபடியிருந்தேன். நாட்டு நலன் சார்ந்த பொது விஷயங்களை அவர் ஒரு வித அக்கறை, கவலை கலந்து தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்.

அப்போதிருந்த யாழ்ப்பாணத்திற்கான கப்பல் சேவையிலிருந்து, கொழும்பு நகரத்தின் போக்குவரத்து நெருக்கடி பற்றிய மிக முக்கியமான பிரச்சினைக்கு அவர் வந்தபோது, நான் அதைவிட முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி மிகத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன். 'நாம் அமர்ந்திருக்கும் இந்த சோஃபாவில இருந்து அந்த டைனிங் டேபிளுக்கு எப்பிடிப் போறது?' - நாங்கள் அங்கு உணவருந்தப்போவதில்லை என்றாலும், எனக்கு அப்போதைய அதி முக்கிய பிரச்சினையாகத் தெரிந்தது.

எந்த வழியும் தெரியவில்லை. சோஃபாவுக்கு மேலால் தாவிக் குதித்துப் போகலாம். அல்லது இந்தப்பக்கமாக மெதுவாக ஏறிக் கடந்து, அப்படியே சரிந்து டைனிங் டேபிள் மீது உருளலாம். அநேகமாக இரண்டாயிரமாம் ஆண்டுக்கு முதல் கட்டப்பட்ட தொடர்மாடிக் குடியிருப்பாக இருக்கவேண்டும். வரவேற்பறை மிகவும் சிறியதாக அமைந்திருந்தது. அதனை மேலும் அழகு சேர்க்கும் விதமாக ஏராளமான பொருட்கள் இட்டு நிரப்பியிருந்தார்கள். கூடவே பியானோ என்றே கண்டுபிடிக்க முடியாதவாறு அந்தப் பியானோவும் இருந்தது.

அதைப் பார்க்கும்போது அந்தப் பியானோவை இசைக்கும் அழகிய பெண்ணைக் காண வேண்டும் என்ற அவாவும் இயல்பாகவே தோன்றியது. 'எங்கள் எதிரே இருக்கும் அந்தக் கதவுத் திரைச்சீலை எந்த நேரத்திலும், பியானோவில் நடமாடும் நீண்ட அழகான விரல்களால் மெதுவாக விலக்கப்படலாம். கூடவே அந்த விரல்களுக்குச் சொந்தமான அழகிய பெண்ணையும் காணலாம். இதை நான் தவறவிட்டுவிடக்கூடாது'என நினைத்துக் கொண்டேன்.அதேநேரத்தில் ஒரு சந்தேகமும் வந்து தொலைத்தது. அந்த ஆன்டியையும், அங்கிளையும்யும் பார்த்தபோது ஒரு பியானோவை… அல்ல அல்ல, ஏன் ஒரு தையல் மெஷினைக்கூட வாசிக்க....மன்னிக்கவும், உபயோகிக்கத் தெரிந்தவர்கள் போலத் தோன்றவில்லையே!

எப்படியும் எனது இராசியின் பிரகாரம், அந்தப் பியானோவை வாசிக்கும் ஒரு பாட்டி தள்ளாமையுடன் வரலாம் என அனுபவம் எதிர்பார்த்தது. அப்படி எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. அங்கிருந்து புறப்பட்ட  பின்னர்  நண்பனிடம் கேட்டேன். அவன், "அவங்களுக்கு ஒரு மகள், இப்ப வெளிநாட்டில. ஆனா, நிச்சயமா பியானோ வாசிக்கத் தெரிஞ்சிருக்காது" - உறுதி கூறினான். எனது தீர்க்க தரிசனத்தை வியந்துகொண்டேன். தொடர்ந்து, 'யாராவது வெளில இருந்து வந்தவங்க வாங்கிக் கொடுத்திருக்கலாம்! அல்லது இந்த வீட்டை வாங்கும்போது இருந்திருக்கலாம். யாரும் வாங்குவதற்கு முன்வராததால் அப்படியே வைத்திருக்கூடும் என்றான். ஒருவேளை பந்தாவுக்கு இவர்களே வாங்கி வைத்திருக்கலாம்'என்பதை மட்டும் கூறிவிட்டு அவனே ஏற்கவில்லை. பந்தாவுக்கு இப்படி வைப்பதில்லையே!


ரு பெரிய கூடத்தின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் கிராண்ட் பியானோ (Grand Piano) அந்தஸ்தினை, ஆடம்பரத்தினை பறை சாற்றுவதாக இருக்கிறது. ஒரு பாரம்பரியத்தின், பழமையின் அடையாளமாக இருக்கிறது. நானும் சின்ன வயதில் முதன்முதல் பியானோ பார்த்தது வழக்கம்போல தமிழ் சினிமாவில்தான். பெரும்பாலும் அந்தஸ்தில் உயர்ந்த தொழிலதிபரின் மகளான கதாநாயகி வீட்டில் அல்லது பெரும்பணக்காரனான வில்லன் வீட்டில் அல்லது பெரும்பணக்காரனாக இருப்பதாலேயே கெட்டவனாக இருக்கப்போகும் யாரோ ஒருவர் வீட்டில் இருக்கும். 

பணக்கார நாயகி வீட்டிலிருப்பது காட்சிப்பொருளாக, ஆடம்பரத்துக்காக மட்டுமல்ல. படத்தின் நாயகன், நாயகியான  காதலர்கள் காதலித்து பிரிந்துபோனபின் அல்லது பிரிக்கப்பட்டபின், நிகழும் காதலியின் நிச்சயதார்த்தத்தில் இந்த பியானோவின் பங்கு மிக முக்கியமானது. அது எப்படியோ தெரியவில்லை தேடிக் கண்டுபிடித்து, மிகச் சரியாகப் பிரிந்து போய்விட்ட முன்னாள் காதலனையே நிச்சயதார்த்தத்துக்குப் பாட்டுபாட அழைத்து வருவார்கள்.

காதலன் பரம ஏழையாக இருந்தாலும், அதற்குமுன்னர் ஒரு பியானோவை நேர்ல பார்க்காமலோ அல்லது பார்த்தும், தொட்டுப் பார்க்காமலோ  இருந்தாலும் கூட, மிகுந்த உணர்ச்சி பொங்க, ஃபீல் பண்ணி மோட்டு வளையை அண்ணார்ந்து பாத்துக்கொண்டே முன்னாள் காதலியை வாழ்த்திப்பாடி, பியானோ கட்டைகளை விரல்களால் குத்துமதிப்பாக வாசிப்பார். அதிலிருந்தும் நல்ல இசை வருவது ஒரு ஆச்சரியம்தான்! நாயகியும் ஃபீலாகி விடுவார். நாயகன், நாயகி பாவமாகப் பார்த்துக் கொண்டிருக்கிற மக்கள் தவிர, படத்தில் வேறு எந்த ஆத்துமாக்களுக்கும் அந்தப்பட்டின் மொழியோ, பொருளோ புரிவதில்லை என்பதுதான் சோகம். ஒரிரு முறை தொலைக்காட்சிகளில் பார்த்த, சிவாஜிகணேசன் ‘ஆக்ரோசமாக’ பியானோ வாசித்துகொண்டே பாடும் 'எல்லோரும் நலம் வாழ' பாடல் பல நாட்களாக எனக்குப் பிடித்த நகைச்சுவைப் பாடலாக இருந்தது. சிவாஜி காலம் அல்லது அதற்கு முன்னைய காலத்திலிருந்து தொடர்ந்த இந்தப் பாரம்பரியம், சமீபகாலமாக இல்லையென்பது ஒரு ஆறுதல்.


The Pianist படத்தில் நாஜிக்களிடமிருந்து உயிரைக்காத்துக் கொள்ள ஓடிக்கொண்டிருக்கிறான் ஷ்பில்மேன். போலந்தின் தலைநகரான Warsaw வானொலி நிலையத்தில் பியானோ வாசித்துக் கொண்டிருந்த ஒரு யூத பியானோ கலைஞன். பசியோடு, இடிந்த கட்டடங்களில் உணவு தேடி, மீந்த தானியங்களை உண்டு, பாசித் தண்ணீரைக் குடித்து, மரணம் பின்னாலேயே தொடர்ந்து துரத்திவர ஓடுகிறான். யாருமில்லாத ஒரு வீட்டில் நுழையும் அவன் பியானோ ஒன்றைக் காண்கிறான். ஏற்கனவே அவன் தனது பியானோவை சூழ்நிலை காரணமாக விற்றுவிட்டிருந்தான்.

எப்போதும் இசையுடனே வாழ்ந்த ஒரு கலைஞன். பசி, குளிர், எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்ற சூழ்நிலையில் அந்தப் பியானோவைப் பார்க்கிறான். ஆர்வமாக அருகில் வருகிறான். சிறு சத்தம் கேட்டாலும் நாஜிக்கள் வந்து அவனைக் கொன்றுவிடக்கூடும். அவன் மிக நேசிக்கும் ஒருவிஷயத்தை அருகிலிருந்தும் அடைய முடியாத ஏக்கத்துடன், சோகத்துடன், காற்றிலே கைகளை அசைத்து இசைக்கிறான். அப்போது அவன் வாசிப்பிற்கு ஏற்ப பின்னணியில் பியானோ இசை ஒலிக்கும். காட்சியும், இசையும்  மிக நெகிழ்ச்சியானது.

அங்கேயே சமையலறையில் தகரத்தில் அடைக்கப்பட்ட உணவைக் கண்டு திறக்க முயல்கிறான். அப்போது பியானோ வாசிக்கும் சத்தம் கேட்கிறது. பயத்தில் மேலே ஏறி, ஒளிந்து கொள்கிறான். மறுநாள் அதே தகர கொள்கலனைத் திறந்து விட்டு நிமிர, எதிரே ஜெர்மன் இராணுவ அதிகாரி ஒருவர்! ஷ்பில்மென் அதிர்ச்சியில் உறைகிறான். “யார் நீ?” எனக் கேட்கிறார் அந்த அதிகாரி. தான் ஒரு பியானோ கலைஞன் என்று ஷ்பில்மென் சொன்னதும் அதிகாரி ஆச்சரியப்பட்டு அவனை அங்கிருக்கும் பியானோவை வாசிக்கச் சொல்கிறார். பசி, களைப்பு, மரண பீதியுடன் இருக்கும் ஷ்பில்மென் நடுங்கும் விரல்களால் மிக மெதுவாக, வாசிக்கத் தொடங்கி, தன்னை மறந்து அதனோடு ஒன்றிப் போய் வாசிக்க, அவன் திறமை கண்டு பிரமிக்கிறார் அந்த அதிகாரி. 

இன்னும் சில தினங்களில் நேசநாட்டுப்படையினர் இங்கே வந்துவிடுவார்கள் எனக்கூறி, அவனுக்கு உணவும், குளிருக்கு இதமாகத் தன் கோர்ட்டையும் கொடுத்துவிட்டு செல்கிறார் அந்த அதிகாரி. விடைபெறும்போது அவனிடம் கேட்கிறார். 

"யுத்தம் நிறைவடைந்த பிறகு என்ன செய்யப் போகிறாய்?"

"வானொலி நிலையத்தில் பியானோ வாசிப்பேன்"

"நான் அதைக் கேட்கிறேன்" 

மிக அற்புதமான இசை கொண்ட அந்தப்படம் எனக்கு மிகப்பிடித்த சினிமாவில் ஒன்று.


ண்டியில் தாத்தா வீட்டிற்குச் சென்றபோது அங்கே முதன்முதலாக ஒரு கிராண்ட் பியானோவை நேரில் பார்த்தேன். பாட்டி பியானோ இசைப்பதில் திறமையானவராம். ஒரு கிறிஸ்தவராக இருந்ததும், சிறுவயதில் தேவாலயத்தோடு வளர்ந்ததும் அதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கலாம். அவரின் உடல்நலக்குறைவு காரணமாக அப்போது அவர் இசைப்பதைப் பார்க்க முடியவில்லை. பின்னர் அவர் உயிருடன் இருந்தவரை சந்திக்கவில்லை. 

இன்றும் எங்காவது கிராண்ட் பியானோவைப் பார்க்கும்போது ஒரு தனி ஆர்வம் வருகிறது. கொழும்பு மெஜஸ்டிக் சிட்டியில் ஒரு பெரிய கிராண்ட் பியானோ வைக்கப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போதெல்லாம யாராவது வாசிப்பார்களா? யாரும் இசைத்ததை இதுவரை நேரில் பார்த்ததில்லை. ஒரு பியானோவைப் பார்க்கும்போதே நெளிநெளியான கூந்தல் கற்றையாக காற்றில் அலைய, வெள்ளை ஆடையணிந்த பெண்ணொருத்தி வாசிப்பதைப் போன்ற காட்சியும் மனத்திரையில் விரியும். ஒருமுறை நண்பன் ஒருவன் கேட்டான் 'ஒரு பெண் பியானோ வாசித்ததைப் பார்த்திருக்கிறீர்களா?' நாங்கள் யாரும் பார்த்ததில்லை! 

பெண்கள் தொடர்பில் எப்போதுமே தீராத பல கேள்விகள் இருக்கின்றன. நல்ல ரசனையுள்ள, நல்ல வாசிப்புப்பழக்கமுள்ள, ஓவியம் வரையக்கூடிய… இப்படிக் கேள்விகள் நீண்டுகொண்டே போகின்றன. அப்படியொரு அழகான பெண்ணை நாங்கள் யாரும் சந்தித்திருக்கவில்லை. இங்கே அழகான பெண்கள் என்பதில் எந்த நெருடலும் இல்லை. நல்ல ரசனை, திறமை, கலைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இயல்பாகவே ஓர் அழகு வாய்த்துவிடுகிறது. மனதின் அழகியல் உணர்வுகளால் உண்டாகும் உண்மையான அழகு. நீங்கள் அதுபோன்ற ஓர் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா? நான் இதுவரை சந்திக்கவில்லை. 

7 comments:

 1. ஹாய் ஜீ...... ஆப்டர் வெரி லோங் ரைம் நோ....ஜெஸ் ஐம் பக்..... வாறன் வாசிச்சிட்டு வாறன்

  ReplyDelete
 2. ம்ம்ம்........இன்னும் சந்திக்கவில்லை

  ReplyDelete
 3. வணக்கம்,ஜீ!!!!///அபாரம்.பியானோ..............பெண் வாசித்து நாமும் பார்த்ததில்லை.

  ReplyDelete
 4. ஹேய் அண்ணனும் பியானோ வாசிப்ப்பேன்ய்யா...!

  ReplyDelete
 5. பியானோவின் இசையைப் போன்று அதன் கம்பீரமான தோற்றமும் அழகுதான். The Last Song படத்தில் Miley Cyrus பியானோ வாசித்துக்கொண்டு பாடும்போது அழகாக இருக்கும். நானும் இதுவரை ஒரு பெண் பியானோ வாசித்து நேரில் கண்டதில்லை. பியானோ வாசிக்கக்கூடிய ரசனை மிகுந்த பெண்களிற்கு அதை வாங்கக்கூடிய வசதிகள் இருக்காது. பியானோவைக் காட்சிப் பொருளாய் வைத்திருப்பர்களிற்கு அதனை வாசிக்கக்கூடிய ஒருவரிடம் கொடுக்க மனம் இருக்காது.

  நீங்கள் கூறிய ரசனையுள்ள, வாசிப்புப் பழக்கம் உள்ள, நன்றாய் எழுதக்கூடிய, இசையில் திறமையுள்ள வாழ்க்கையை இயல்பாய் ரசித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருந்த நண்பி ஒருத்தி இருந்தாள், இப்போது ஒரு ஐரோப்பிய நாட்டில் மேற்குறித்த எல்லாமும் இல்லாமல் ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாய் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அந்த வாழ்க்கையையும் ரசனையுடன்தான் வாழ்கிறாள். காலம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.

  ஜீ பியானோ தொடர்பான அருமையான கட்டுரை இது. இரண்டுமுறைகள் வாசித்தேன். உங்கள் ரசனை அழகானது. அது உங்கள் பதிவிலும் அழகாய் வெளிப்படுகிறது.

  The Pianist படத்தைப் பற்றிய விமர்சனம் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை வழமை போன்று கலக்கலாய் இருந்தது.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. பியானோ மிகவும் அருமையான பகிர்வு ஜீ. நானும் பெண் பியானோ வாசித்துப் பார்த்ததில்லை காதல் ரோஜா படத்திலும் கமலின் ஹேராம் படத்திலும் பியானோக் காட்சி வருகின்றதே !ம்ம்ம்

  ReplyDelete
 7. நல்ல ரசனை, திறமை, கலைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இயல்பாகவே ஓர் அழகு வாய்த்துவிடுகிறது. மனதின் அழகியல் உணர்வுகளால் உண்டாகும் உண்மையான அழகு//

  மிகவும் சிந்திக்க வைத்த ரசனையான வரிகள்.. நிதானமான எழுத்து நடை!

  ReplyDelete