Friday, September 26, 2014

சந்தியாராகம்!


பாலுமகேந்திரா இறந்து போனபின்புதான் அவர் படங்களைப் பார்க்கவேண்டும் எனத் தோன்றுகிறது. என் வழக்கப்படி, நீண்டநாட்களாக கணினியில் சேமித்து வைத்திருந்த 'சந்தியாராகம்' படத்தைப் பார்த்தேன்.

கிராமத்தில் எந்தக் கவலைகளுமின்றி வாழ்வை அதன்போக்கில் ரசித்து வாழ்ந்துகொண்டிருந்த ஒரு முதியவர், சந்தர்ப்பவசத்தால் நகரத்தின் நெருக்கடி மிகுந்த, கீழ்நடுத்தரவர்க்கத்து பொருளாதாரச் சிக்கல் நிறைந்த வாழ்வில் தன்னை இணைத்துக்கொள்ள நேரிடுகிறது. அதன் பின்னர் சந்திக்கும் அனுபவங்ககள் என்னென்ன? எப்படி அவற்றை எதிர்கொள்கிறார் என்பது பற்றிப் பேசுகிறது படம்.

பெரியவர் சொக்கலிங்கம், மனைவி விசாலாட்சியுடன் கிராமத்தில் வாழ்கிறார். பிள்ளைகள் இல்லை. உறவென்று தம்பியின் மகன் மட்டுமே சென்னையில் இருக்கிறான். எந்தக் கவலைகளும் அவருக்கு இல்லை. மனைவி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். அப்பளம் போட்டு கடைகளுக்கு கொடுக்கிறார். அவரது தேவைகள் அதிகமில்லையாதலால் அவரளவில் சொகுசான வாழ்க்கை. இதெல்லாம் ஒரே நாளில் பெரியவருக்கு அர்த்தமற்றுப் போய் விடுகிறது. மனைவி இறந்துவிடுகிறார். தன் ஒரேயொரு உறவான தம்பி மகனிடம், சென்னைக்கு வருகிறார்.

பத்திரிகை அலுவலகத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்கிறார்கள் தம்பி மகனும், மனைவியும். பள்ளி செல்லும் சிறு பெண்குழந்தை, இரண்டாவது குழந்தையின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். திடீரென வந்து சேரும் பெரியவரை அன்பாகக் கவனித்துக் கொள்கிறார்கள். ஆனாலும் அவர் தொடர்ந்து அங்கேயே தங்கிவிடுவாரோ என்ன செய்வது என ஆரம்பத்தில் பயப்படுகிறாள் மருமகள். அன்று அவள் கவலைகொண்டபோதும் பின்னர் அவரைத் தம் குடும்பத்தில் ஒருவராகவே மகிழ்ச்சியுடன் கவனித்துக்கொள்ளும் மருமகள் ஒரு சிறு சம்பவத்தின் விளைவாக கோபத்தில் கடிந்துகொண்டு பாராமுகமாக இருப்பது பெரியவரைக் காயப்படுத்திவிடுகிறது. அங்கிருந்து சொல்லாமல் வெளியேறிவிடுகிறார். பின்னர் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல வரும் மருமகளிடம் பேசித் தன்முடிவை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் பெரியவர். எளிமையான இந்தக்கதைக்குள் மனிதர்களின் மெலிய உணர்வுகள், உளச்சிக்கல்கள், புரிந்துணர்வு என எந்தக் காலத்துக்கும் பொருந்தும், ஏராளமான விஷயங்களைச் சொல்லப்படுகிறது.

முதியவர்கள் என்றதுமே, பிள்ளைகளால் கைவிடப்பட்ட பாரிதாபத்துக்குரியவர்கள், அதனாலேற்பட்ட சுய கழிவிரக்கத்தில் வாழ்பவர்கள் அல்லது முரட்டுத்தனமான வரட்டுப் பிடிவாதக்காரர்கள் என்பதைத்தவிர்த்து, வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகும் முதியவர்களைப் பற்றிய படங்கள் தமிழில் பார்த்ததாக ஞாபகம் இல்லை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகும், முதுமையையும் அவ்வளவு உற்சாகமாக எதிர்கொள்ளும் மனிதர்களும் நம் நகர வாழ்வில் மிக அரிதாகவே இருப்பர்கள் போலும். கிராமங்களில், நம் ஊர்ப்புறங்களில் அட்டகாசம் பண்ணு 'பெருசுகளை' நாம் பார்த்திருப்போம். 'பரதேசி' படத்தில் கவிஞர் விக்கிரமாதித்யன் வருவாரே, படத்திலேயே அதுதான் எனக்கு மிகப்பிடித்தது. சிறிது நேரமே வந்தாலும், அதகளம் செய்திருப்பார்.

பெரியவர் சொக்கலிங்கத்தின் கிராமத்து வாழ்க்கை மிக அழகானது. ஆர்ப்பாட்டமில்லாமல் ரசனையோடு எதையும் பார்க்கும் குழந்தைத்தனமும், குறும்பும் கொண்ட மனிதர். காலையில் மனைவி விசாலாட்சி சுடச்சுட பெரிய டம்ளரில் கொடுக்கும் தேநீரை ரசித்துக் குடித்துவிட்டு, குளத்துப் பக்கம் செல்கிறார். சிறுவர்களைப் போல நீர்ப்பரப்பில் கல்லெறிந்து அது நீர்மேற்பரப்பில் தத்திச் செல்வதை ரசிக்கிறார். வரும் வழியில் யாரோ சிறுவர்கள் பொட்டுவைத்த கட்டத்தில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒற்றைக்காலில் தத்தி பாண்டி விளையாடுகிறார். ஆசைதீர ஆற்றுக்குளியல், வெள்ளிக்கிழமைகளில் பிள்ளையார் கோவிலில் ஒரு கும்பிடு, திரும்பும் வழியில் சிறுவர்களுடன் சேர்ந்து பம்பரம் விளையாடுகிறார். கொண்டாட்டமான ஓர் வாழ்க்கை அவருடையது.

பெரியவரின் கிராமத்து வாழ்க்கை, அங்குள்ள மனிதர்களின் அன்னியோன்யம், அக்கறை, அவரின் கௌரவத்தை, சின்னச் சின்ன ஆசைகளை,விளையாட்டுத்தனங்களை ஆரம்பக் காட்சிகள் சொல்கின்றன. இவற்றிற்கு முற்றும் மாறான நகரத்தை காலையில் வந்துசேரும்போதே எதிர்கொள்கிறார் சொக்கலிங்கம். புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களைக் கண்டு பதற்றமடைந்து விலகி நடக்கிறார். அதுவரை எல்லோராலும் 'பெரியய்யா' என அன்போடு அழைக்கப்பட்டவரை 'சாவுக் கிராக்கி' என திட்டுகிறான் அவர்மீது மோதிவிடுவதுபோல் வந்து நிற்கும் ஆட்டோ டிரைவர்.

அடுத்த அதிர்ச்சி வீட்டில். குளிப்பதற்கு வெந்நீர் போட்டு வைக்கிறாள் மருமகள். ஆற்று நீரில் நீராடிய பெரியவர் சில கணங்கள் அந்தச் சிறிய வாளியை அந்த யோசனையுடன் பார்த்துவிட்டு பக்கத்திலிருக்கும் நீர்க்குழாயைத் திறக்கிறார். அங்கே குடியிருக்கும் ஒருவன் சொல்கிறான் இன்று நீர் வராது, நாளைதான். அதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றிலும் மாறான புதிய அனுபவம் ஒரே நாளில் ஏற்படுகிறது. ஆனாலும் உடனடியாகவே அவற்றோடு இயைந்து வாழத் தயாராகி விடுகிறார் சொக்கலிங்கம்.

குழந்தையும் பெரியவரோடு சேர்ந்துவிடுகிறது. பெரியவரும் மருமகளுக்கு ஒத்தாசையாக கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொடுக்கிறார். குழந்தையும் அவருடன் இலகுவாக ஒட்டிக் கொள்கிறது. சாப்பாடு வேண்டாம் என அம்மாவிடம் மறுக்கும் குழந்தை தாத்தா ஊட்டிவிடுவதாகக் கேட்டதும் சம்மதிக்கிறது. குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். 'பெரியவர் இங்கேயே தங்கி விடுவாரோ?' - மருமகளுக்கு அன்றைய இரவில் தோன்றும் சந்தேகம். ஏற்கனவே இடநெருக்கடி, போதாத வருமானம், இதில் புதிதாக ஒருவர் குடும்பத்தில் இணைந்துகொள்வது மருமகளுக்குக் கலவரத்தை ஏற்படுத்துகிறது. கணவனிடம் கேட்கிறாள். என்னைவிட்டா அவருக்கு வேற யார் இருக்காங்க? எங்க போவார்? சமாளிக்க வேண்டியதுதான் எனபதாக அமைகிற அவனது பதில் பொறுப்பற்றதாக, கோபம் கொள்ள வைப்பதாக இருக்கிறது. தவிர்க்க முடியாத இந்தப்பேச்சு, உச்சகட்டத்தை எய்தி, பொறுமையிழந்து உரக்கப் பேசிவிடுகிறான் கணவன். தன பெரியப்பா வந்தது மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பதாகவே தொடர்ந்து அவன் நம்புகிறான். பின்னரும் அடிக்கடி சொல்லிக் காட்டுகிறான். கணவன், மனைவிக்கிடையான பேச்சு சொக்கலிங்கம் காதில் விழ, யோசனையில் ஆழ்கிறார். ஆனாலும் உடனடியாக உணர்ச்சிவசப்படவில்லை. அவர்களின் நிலையையும் தன் நிலையையும் புரிந்துகொள்கிறார் பெரியவர். முடிந்தவரை அவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என நினைக்கிறார். இதுதான் யதார்த்தம்.

ஒரு கீழ் நடுத்தரவர்க்க குடும்பத்தின் தன் குடும்பம் தவிர்த்து உறவுகள் மீது என்னதான் அன்பு, பாசம் இருந்தாலும், அதையெல்லாம் புறந்தள்ளி பொருளாதார நிலை சார்ந்த சிக்கல்கள் இயல்பாகவே முன்னிலைப் படுத்தபடுகிறது. நகர வாழ்வின் நெருக்கடிகளில், பொருளாதாரச் சிக்கல்களில் முதியவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றார்கள் சிலவேளைகளில் தவிர்க்கமுடியாமல் என்பதையும் ஓரிரு காட்சிகளில், அயல் வீட்டில் குடியிருக்கும் பெரியவரின் பேச்சு வாயிலாக சொல்லிவிடுகிறது.

எண்பதுகளில் நடைபெறுகின்ற கதை எனினும், இன்றைய காலகட்டத்திலும், எதிர்காலத்திலும் பலரும் எதிர்கொள்ளும், கொள்ளப்போகும் வாழ்க்கைதான். சொந்த ஊரில், அயலவர்களோடு அளவளாவிக் கொண்டு தம் போக்கில் வாழ்ந்துகொண்டிருந்த நம் தாத்தாக்கள், பாட்டிகள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எல்லா வசதிகளும் இருந்தும், நடைமுறையை ஏற்றுக் கொண்ட போதும், ஏதோ ஒரு தருணத்தில் இழந்துவிட்ட தம் இயல்பான வாழ்க்கையைக் குறித்த ஏக்கத்துடன் வாழ்வதைப் பார்க்கிறோம். வயதானவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் தனிமையுணர்வு, தாம் சரியாக மதிக்கப்படவில்லை எனும்போது அல்லது அப்படித் தோன்றும்போது ஏற்படும் அயர்ச்சி, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் இடமாற்றம், அந்த மாற்றங்கள் ஏற்படுத்தும் நெருக்கடிக்கள், நகர்புற மத்தியத்தர வாழ்க்கை தரும் பொருளாதார அழுத்தங்கள், அதனாலேற்படும் ஏற்படும் உறவு சிக்கல்கள் இவை பற்றி பேசுவதற்கான தேவை எப்போதுமே இருக்கிறது.

சொக்கலிங்க பாகவதர். என்ன ஒரு நடிகன்! தமிழ்சினிமாவில் இப்படி ஒரு நடிகரைப் பார்ப்பதே எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது. மிகை நடிப்பு, தேவையே இல்லாமல் உரத்த குரலில் பேசுவது, நாடக பாணியில், குறிப்பாகத் தெருக்கூத்து வகையான நடிப்பையே சினிமாவிற்கும் வழங்கி அதையே நடிப்பு எனக் கொண்டாடி வரும் நமது பாரம்பரியத்தில் சொக்கலிங்க பாகவதர் போன்ற ஒருவர் தமிழ் திரையுலகத்தால் கண்டுகொள்ளப்படாததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இயக்குனர் பாலுமகேந்திராவைத் தவிர வேறு எவரும் அவரை இந்த அளவுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறார்களா?

பம்பரம் விடும்போது அவர் முகத்திலிருக்கும் குழந்தைத்தனமான ஆர்வம், ஒரு குறும்புச் சிரிப்பு, தன் மனைவியை அழைக்கும்போது குரலில் இருக்கும் காதல், (ஆம் அப்படித்தான் தோன்றுகிறது. அது பாலுமகேந்திராவின் எப்போதும் தீராத காதலின் தாக்கமாகவும் இருக்கக் கூடும்) குளித்துவிட்டு வரும் பாட்டியைப் பார்த்ததும், "ஏண்டி ஜுரமும் அதுவுமா குளத்துல குளிச்சிட்டு வர? வெந்நீர் போட்டிருக்கலாம்ல?" எனும்போது தெரியும் பரிவு, பாட்டி கொடுக்கும் தேநீரை ஒரு மிடறு குடித்துவிட்டு கொடுக்கும் எதிர்வினை ஒன்றே போதும். தன்மேல் கோபமுற்றிருக்கும் மருமகள் மருத்துவமனை வாசலில் சைக்கிள் ரிக்ஷாவில் வீடு திரும்பப் போகிறாள். தன்னையும் அழைப்பாளா எனத் தயங்கி நிற்கிறார். மருமகள் கூப்பிட்டதும் சிறு சிரிப்புடன் சின்ன குழந்தை போல் ஓடி வருவது, குழந்தை வள்ளியின் கால்களை தன் மடியில் போட்டு கொள்வது, அவ்வப்போது சிரித்துக் கொள்ளும் குழந்தைச் சிரிப்பு என சொக்கலிங்க பாகவதர் அசத்துகிறார். 

முதியோர் இல்லத்தில் சேரும்போது அவர் பார்த்த தொழில் என்ன என்கிறார்கள். நாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தேன் என்கிறார். வேற என்ன தொழில்? எனக்கேட்க ஒரு பண்ணையாரிடம் கணக்கெழுதிக் கொண்டிருந்ததாகச் சொல்கிறார். ஆயினும் தனது தொழிலை 'நடிகன்னே போட்டுக்க' எனச்சொல்லும்போது முகத்தில் அப்படியொரு பெருமை, சிரிப்பு! தொடர்ந்து தான் நடித்த நாடகத்தின் காட்சியொன்றை பாடி, நடித்துக் காட்டுகிறார். அதுவரை இருந்த சொக்கலிங்க பாகவதர் ஆளே மாறிப்போய் இளைஞனாகியதுபோல மிடுக்குடன் நிற்கும் காட்சி, பின்னர் தன்னை பார்க்க வரும் மருமகளை தன் சகாக்களிடம் அறிமுகப்படுத்தும்போது, ஒரு பாட்டிக்கு ரொம்பவே மறதி எனும்போது தனது வாயையும் பொக்கையாகச் செய்து காட்டுவது என அதகளம் செய்கிறார்.

அந்த முதியோர் இல்ல வாழ்க்கை அவருக்கு ஏராளமான நண்பர்களைப் பெற்றுக் கொடுக்கிறது. இழந்துவிட்ட பழைய கொண்டாட்டமான வாழ்க்கையை மீட்டுக் கொடுப்பதாக இருக்கிறது. சொக்கலிங்க பாகவதர் தன் மருமகளுக்கு முதியோர் இல்லத்தைச் சுற்றிக் காட்டும் காட்சியைக் கவனித்துப் பார்த்தால் புரியும். தன் சொந்த வீட்டைச் சுற்றிக் காட்டுவதுபோல ஒரு பெருமை, பூரிப்பு அவர் முகத்தில். சூழ்நிலை காரணமாக தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட அழகான வாழ்க்கை மீளக் கிடைத்துவிட்டதைப் போன்ற உற்சாகம்.

இப்போது சினிமா ஆர்வலர்களால் முக்கியமானதாகக் கவனிக்கப்படுகிற ஈரானிய சினிமா எப்போது உருவானது அல்லது எப்போது முதல் உலகின் பரவலான கவனத்தைப் பெறத் தொடங்கியது எனத் தெரியவில்லை. எனது நண்பன் யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது Baran படத்தைப் பார்த்துவிட்டு அதுபற்றிச் சொல்லியிருந்தான். நான் முதன்முதலில் பார்த்தது 2007ல் Children of Heaven திரைப்படம். வெளியாகிப் பத்து வருடங்களின் பின்னரே. இங்கே ஈரானிய சினிமா பற்றிப் பேசியது ஏனெனில், சந்தியாராகம் பார்க்கும்போது எனக்கு ஈரானியப் படங்கள் பார்ப்பது போன்ற ஒரு உணர்வே ஏற்பட்டது.

ஈரானியப் படங்கள் போல என்று சொன்னதற்கு இன்னுமோர் காரணம், படத்தில் எல்லோருமே நல்லவர்கள். அன்பு நிறைந்தவர்கள். அதை, வெளிப்படுத்தும் விதம் வேறுபடுகிறது. தவிர, சூழ்நிலை, இயலாமை காரணமாக அவ்வப்போது தமக்குள் முரண்பட்டுக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். இயக்குனர் பாலுமகேந்திராவுடன் பழகியவர்கள் கூறும் சம்பவங்கள் நினைவுகள் ஒவ்வொன்றும் அழகானவை. முழுக்க முழுக்க அன்பாலும், ரசனையாலும் நிரம்பிய வாழ்வைக் கொண்டாடிய கலைஞன். அவர் படைப்புகளிலும் அதையே பிரதிபலிக்கக் காண்கிறோம். அவற்றில் அன்பும், மெல்லிய உணர்வுகளும், உளச்சிக்கல்களும், தீராத காதலும் நிறைந்த அழகியல் விரவிக் கிடக்கின்றது.

தமிழ்சினிமாவில் பாலுமகேந்திரா சரியானபடி பேசப்படவில்லையோ, கொண்டாடப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. தமிழர்களின் வழமைபோல இறந்த பின்னர், சமீப காலமாகத்தான் அதிகம் பேசப்படுகிறார். ஒரு நல்ல படைப்பாளியின் உண்மையான வெற்றி என்பது அவர் உருவாக்கிச் சென்ற, தன் நீட்சியாக விட்டுச் சென்றிருக்கும் படைப்புகள் மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கான தன் வாரிசுகளும்தான். அவரின் சிஷ்யர்களே போதும் - அவர்கள்மீது எவ்வாறான விமர்சனங்கள் வைக்கப்ப்படும்போதிலு! பாலா, ராம், வெற்றிமாறன் போன்றோர் அவர்பற்றிக் கூறும்போதெல்லாம் பிரமிக்க வைக்கிறது, அன்பினால் கட்டமைக்கப்பட்ட அவர் சாம்ராஜ்யம்!

அதிகாலையில் கிராமத்தில், பெண்கள் நடந்து செல்லும் படத்தின் ஆரம்பக் காட்சி, குளத்தில் ஆரவாரமாக செல்லும் எருமைகள், சென்னையில் நடுத் தெருவில் மரங்களின் ஊடே விழும் சூரிய ஒளி போன்ற கட்சிகளைப் பார்த்தபோது வண்ணத்திரைப்படமாக எடுத்திருந்தால் இன்னும் நன்றாயிருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனாலும் கருப்பு - வெள்ளை காட்சிகளின் ஆழத்தை, தாக்கத்தை அதிகமாக்கும் என்பதால் அதுவே பாலுமகேந்திராவின் விருப்பமாகவும் இருந்ததாகச் சொல்கிறார்கள். நண்பர்கள் சிலர் அப்படியும் சொல்கிறார்கள் வண்ணத் திரைப்படமாகப் பார்த்ததாக. நான் யூ-டியூபில் தரவிறக்கியே பார்த்தேன். பாலுமகேந்திராவின் படங்களை அப்படித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது என்பது மிகுந்த கவலைக்குரியது. 

சந்தியாராகத்தை வண்ணத்திரைப்படமாகப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படக் இன்னுமோர் காரணம், 'அழியாத கோலங்கள்' படம்தான். ஆணுறையில் பலூன் செய்து விளையாடியபடி long shot இல் சிறுவர்கள் நடந்து வரும் காட்சி ஒன்றே போதும் ஒளிப்பதிவு பற்றிச் சொல்லிவிட. அவ்வளவு அழகானது. பாலுமகேந்திராவின் இளமைக்காலத்தின் பாதிப்பெனில், என்னமாதிரியான கொண்டாட்டமான வாழ்க்கை அது! என்னை மிகக்கவர்ந்த படம். அதையும் இந்த வருடம்தான் பார்த்தேன். விடலைப் பருவப் பையன்களின் உணர்வுகளை, வாழ்க்கையை தமிழில், வேறெந்தப் படமும் பதிவு செய்ததில்லையெனச் சொல்லப்படுகிற அற்புதமான, ரகளையான படைப்பு. மிக முக்கியமாக ஒளிப்பதிவு. அந்த வயதினருக்கே உரிய குறும்பும், விளையாட்டுத்தனங்களும், புதிதாக அறியும் எதையும் முயன்று பார்க்கும் ஆர்வமும் அப்படியே பதிவுசெய்யப்பட்டிருக்கும். சிகரெட் பிடிக்கும் காட்சியும் அப்படியே. ஓர் இளைஞன் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதைப் பார்த்துவிட்டு அதனால் கவரப்பட்டு, ஒருமுறையேனும் முயன்று பார்த்தவர்கள், ஊதுபத்திக் குச்சியைப் பேப்பரால் சுத்தி புகைத்தவர்கள், குறைந்தபட்சம் நினைக்காதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன!

அதேபோல, 'வீடு' - மத்தியதர வர்க்கத்தினரின் மிக முக்கியமான கனவு பற்றிய படம். இன்றும், எந்தக்காலத்திற்கும் பொருத்தமான படம். காலத்தால் அழியாத படைப்பு என்றுமட்டும் பாலுமகேந்திரா படங்களைச் சொல்ல முடியாது. ஏனெனில் அவரின் அநேகமான படங்களுக்கான பிரதிகள் அவரிடமே இல்லையென, அழிந்துபோய்விட்டதென வருத்தப்பட்டிருந்தார். எந்தக் கலைஞனுக்கும் நேரக்கூடாத சோகம் அது. உலக சினிமா விரும்பிகள் அனைவரும் தவறாமல் பார்க்கவேண்டிய படங்கள் 'சந்தியாராகம்', 'அழியாத கோலங்கள்', 'வீடு'. தமிழிலும் பல வருடங்களுக்கு முன்பே உலக சினிமா எடுத்த படைப்பாளி இருக்கிறான் எனக் கொண்டாடலாம்.

பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதிய கட்டுரை இது!

4 comments:

  1. ஒளி ஓவியர் பாலுமகேந்திரா அவர்களின் காவியங்கள்
    இப்போதும் சுவைக்கின்றன...
    அருமையான விமர்சனத்தோடு அவரின் படங்களை
    அசைபோட்டது மிகவும் சுவாரஸ்யம் ஜீ...

    ReplyDelete
  2. தமிழ் சினிமாவுக்கு கிடைத்த முத்துக்கள் மூன்றில் ஒளி ஓவியர் பாலு மகேந்திராவின் படங்கள் காலத்தால் அழியாதவை...

    மிகச் சிறப்பான விமர்சனப்பகிர்வு ஜீ...

    ReplyDelete
  3. அண்ணா.. அண்மையில் The Godfather பார்த்தேன். எல்லாரும் மிகச் சிறந்த படம் என்று சொல்கிறார்கள். IMDb டாப் 2 வாக இருக்கிறது. ஆனால், என்னைப் படம் கவரவில்லை. சுவாரஸ்யமான திரைக்கதை இல்லை, கடைசியில் லாஜிக் இடித்தது. எனது புரிதலில் கோளாறு என்று நினைக்கிறேன். காட்பாதர் பற்றி எழுத முடியுமா?

    பாலுமகேந்திரா படங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பழைய தமிழ்ப்படங்கள் டாரண்ட்டாக இணையத்தில் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது (அண்மைய கதை திரைக்கதை வசனம் இயக்கம், கூட நல்ல பிரின்ட் கிடைக்கவில்லை). டவுன்லோட் முடிந்ததும் seed செய்யாமல் எஸ்கேப்பாகும் தமிழர்களின் சுயநலம்தான் காரணம் போலும் (நானும் அப்படியே). யூடுபில் நல்ல பிரின்ட் கிடைக்கின்றனவா? எந்த யுடுப் டவுன்லோடர் பயன்படுத்துகிறீர்கள்?

    ReplyDelete
  4. வணக்கம்,ஜீ!நலமா?///விமர்சனம் நன்று.அதே போல்,பாலு மகேந்திரா நினைவுகளும்.............

    ReplyDelete