இந்த வருடம் 'நய்யாண்டி' சம்பவத்துக்குப் பிறகு, திரையரங்கில் பார்த்த ஒரே படம். முதலில் ஆர்வம் இருக்கவில்லை. திடீரென நண்பர் அழைத்ததில் சென்று பார்த்தேன்.
விஜய் - இந்தவருடம் இன்னும் நான்கு வயது குறைந்திருக்கிறது. அறிமுகப் பாடல் காட்சியில் பார்க்கும்போது இன்னும் இருபது வருடங்களுக்கு தமிழ்சினிமாவின் யுத் ஹீரோ விஜய்தான் எனத் தோன்றுகிறது. உறுதிப்படுத்தினார்கள் அந்நாளைய இளைஞர்களான பின்வரிசைச் சிறுவர்கள். நான் பார்த்த இன்றைய காட்சியில் ஐந்தாறு வயது வாண்டுகள் மட்டுமே பெரிதாகச் சத்தமிட்டார்கள், ரசித்துச் சிரித்தார்கள். என்வரையில் விஜய் பஞ்ச் டயலாக் பேசாமல் நடித்தாலே வித்தியாசமான நடிப்புத்தான். வெட்டி சவடால் பேச்சு, எரிச்சலூட்டும் தொனியில் இழுத்து இழுத்துப் பேசாமல் இயல்பாக இருக்கும் விஜயை யாருக்குத்தான் பிடிக்காது? இதில் கதிரேசன் வழக்கமான அதேசமயம் அலட்டலில்லாத கலகலப்பான விஜய். ஜீவானந்தம் நரைத் தாடி மின்ன அநியாயத்துக்கு அமைதியாக இருக்கிறார். நடிக்க வேண்டிய ஒரிருகாட்சிகளிலும் அப்படியே இருக்கிறார். ஏனென்று தெரியவில்லை. நிச்சயமாக விஜய் இதைவிட நன்றாக நடித்திருக்கக் கூடியவர்.
படத்திற்குச் சமந்தா தேவைப்படவில்லை.துரதிருஷ்டவசமாக அனிருத் இரைச்சலுடன் கூடிய சில பாடல்கள் போட்டிருந்ததால் சமந்தா கதைக்கு அவசியப்பட்டுவிட்டார். அறிமுகமாகும் காட்சியில் பக்கென்று அதிர்ச்சியளித்தார். பின்னர் பழகிவிட்டது.
'துப்பாக்கி' எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. 'கஜினி' படத்துப்பிறகு முருகதாஸ் படங்களில் ஏனோ ஒரு டீவி சீரியல் சாயல் இருப்பதாகத் தோன்றியது. துப்பாக்கியைவிடக் கத்தி நல்ல படமாகத் தெரிகிறது. கிராமத்து காட்சிகளை ஆவணப் படம்போல இல்லாமல் அதை இன்னும் ஆழமாகப் பதிய வைத்திருக்கலாம். ஏனெனில் அங்கேதான் கதை ஆரம்பிக்கிறது. பிரச்சினை சொல்லப்படுகிறது. அதன்பிறகுதான் படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. மொக்கைப் பாடல்கள் இல்லாமலே இருந்திருக்கலாம்.
படத்தில் சொல்லப்பட்டது மிக முக்கியமான சமூகப் பிரச்சினை. ஏற்கனவே சிட்டிசன், சாமுராய், ரமணா, தூள் போன்ற படங்கள் வந்திருக்கின்றன. சீரியஸாக சொல்ல முயற்சித்து இடையிடையே சிரிப்புக் காட்டி, சொதப்பலாகவே முடிந்தது சிட்டிசன். சாமுராய் சீரியசாகவே சொன்னாலும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை.
ஒரு பக்கா எண்டர்டெயினரில் சீரியசான பிரச்சினையைச் சொல்லியிருக்கிறார்கள். சொல்லப்பட்ட விஷயம் எவ்வளவு சீரியசானது என்பதுதான் முக்கியம். உண்மையைச் சொன்னால் எவ்வளவு திருத்தமாக,சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்கள் என்பதுதான் கமர்ஷியல் சினிமாவுக்கும், பார்வையாளரான நமக்கும் தேவை. மற்றபடி நாங்கள் எந்தப் படம் பார்த்தும் இதுவரை திருந்தியதில்லையே. இனியும் திருந்துவதாகவும் இல்லையே. விஜய் 'கோக்' விளம்பரத்தில் நடித்துவிட்டு கோக் பற்றிய உணமையைப் பேசுவது எப்படி நியாயம்? என்று பலரும் பொங்குவது வேடிக்கையானது. நம்மில் பலரும் படத்தில் 'கோக்' செய்த அநியாயத்தைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட மனதை இடைவேளையின்போது 'கோக்' குடித்துத்தான் ஆசுவாசப்படுத்தியிருப்போம் என்பதுதானே உண்மை.
வெற்றிகரமான ஒரு கமர்ஷியல் படம், பார்வையாளனை படம் பார்த்துக் கொண்டிருக்கும்வரையில் தர்க்க ரீதியான கேள்விகளை யோசிக்கவிடாது உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது சிந்திப்பதற்கான அவகாசத்தைக் கொடுக்கக்கூடாது. அல்லது பெரிதாகக் கண்டுகொள்ள விடக்கூடாது. கத்தியும் அப்படியே!
படத்தின் ஆரம்பத்தில் 'லைக்கா' லோகோ தோன்றும்போது ஏனோ விசிலடிக்க வேண்டும்போல அவ்வளவு உற்சாகமாக இருந்தது ஏனெனத் தெரியவில்லை. இந்த 'லோகோ' பிடிக்காமல்தான் பலரும் உணர்வுடன் போராடினார்கள் என்று கேள்வி.
படத்தின் ஆரம்பத்தில் 'லைக்கா' லோகோ தோன்றும்போது ஏனோ விசிலடிக்க வேண்டும்போல அவ்வளவு உற்சாகமாக இருந்தது ஏனெனத் தெரியவில்லை. இந்த 'லோகோ' பிடிக்காமல்தான் பலரும் உணர்வுடன் போராடினார்கள் என்று கேள்வி.
'நண்பன்' படத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த விஜய் படம் 'கத்தி'.
//
ReplyDelete'துப்பாக்கி' எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. 'கஜினி' படத்துப்பிறகு முருகதாஸ் படங்களில் ஏனோ ஒரு டீவி சீரியல் சாயல் இருப்பதாகத் தோன்றியது.
//
யோசித்துபார்த்தால் சரி போலத்தான் இருக்குது
ஆனாலும் இப்படியான விமர்சனத்தை கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை.. சரி பரவாயில்லை, உங்களை நம்பி பார்க்கலாம் போல இருக்குது
வணக்கம்,ஜீ!நலமா?///அருமையான நடுநிலை வழுவா விமர்சனம்.///எனக்கும் விஜய் படங்கள் பிடிப்பதில்லை,'சும்மா' பார்ப்பேன்.துப்பாக்கி,அடுத்து கத்தி............விஜய் பெயரைக் காப்பாற்றின!நன்றி,விமர்சனத்துக்கு.
ReplyDelete